என்னை கவனிப்பவர்கள்

kumudam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kumudam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜூன், 2022

பிரியா கல்யாணராமன்


 


      நேற்று மாலை முகநூலுக்குள் நுழைந்த எனக்கு  எழுத்தாளர் இந்துமதி அவர்களின்  பதிவு கண்டு அதிர்ச்சி அடைந்தேன். குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாண ராமன் மறைந்து விட்டார் என்ற செய்தியை  உருக்கமாகப் பகிர்ந்து இருந்தார். உண்மையில் நம்ப முடியவில்லை. தொடர்ந்து பிரபலங்கள் அஞ்சலிப் பதிவுகள் எழுத ஆர்மபித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்களுக்கு அவருடனான தொடர்பு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் என்னைப் போன்ற அறிமுகமில்லாத ஆட்களின் அன்பைப் பெற்று எளிதானவராகத்தான் இருந்தார்.
 எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு பத்திரிகைகளில் எழுத வாய்ப்பு கிடைக்காத நிலையில் வலைப்பூக்கள் வரப்பிரசாதமாக அமைந்தது, கதை கவிதை என அனைத்துக்கும் களம் அமைத்துக்கொடுத்து ஒரு  வட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது.  மனம் போன போக்கில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் தொலைபேசி அழைப்பிசை ஒலிக்க  ஏதோ அலுவலக அழைப்பாக இருக்கும் என்று நினைக்க நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன். என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

    நான்  வலைப்பூவில்  அப்போதுதான் சற்று வித்தியாசமாக(?)  ”என்ன செய்யப் போகிறாய்” என்று ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அதைப் படித்துவிட்டுத்தான் எனக்கு கால் செய்திருந்தார்.  அந்தக் சிறுகதையை வலைப்பூவில் இருந்தி நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்புமாறு கூறினார். நானும்  சரி என்றேன்.

 அனுப்பி 3 வாரத்தில் எனது புகைப்படத்துடன் சிறுகதை  பிரசுரித்தார்..750 ரூபாய் சன்மானமும் எனது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்தது
      . மேலும் என் வலைப்பக்கத்தை எப்போதாவது படிப்பது உண்டு என்று கூறி மேலும்  ஆச்சர்யத்தை கொடுத்தார். நான் அவ்வப்போது  வடிவேலுவை பாத்திரமாக வைத்து புதிர்களை இணைத்து நகைச்சுவைக் கதைகளை எழுதி வந்தேன். அதனை அவரும் அப்போது குமுதத்தில் பணியாற்றிய கோசல்ராமும் ரசித்துப் படித்துவருவதாகக் கூறினார். சினிமாவுக்கு முயற்சி செய்கிறீர்களா என்றும் கேட்டார்.  அப்போதைய பிரபலம் சந்தானத்தை பாத்திரமாக  வைத்து எழுதுங்கள். 4 அத்தியாயங்கள் எழுதி அனுப்புங்கள் ஒரு எண்ணைக் கொடுத்து டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார். பின்னர் ஏதோ காரணங்களால் அது தடைபட்டுவிட்டது. 
  அதன் பின்னர் சில ஒரு பக்கக்கதைகளை குமுதத்தில் வெளியிட்டார். முதலில் அவரது தனி மின்னஞ்சலுக்குத்தான் கதைகளை அனுப்பி வந்தேன். ஆனாலும் அதனை தொந்தரவாகக் கருதாமல் பிரசுரித்தார். அதன் பின்னர் நானே குமுதம் மின்னஞ்சலுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். .
  நான் டிபிஐ வளாகத்தில் பணியாற்றிய போது தனது மகளுக்கு +2 பாடப்புத்தகங்கள்  சில வாங்கித்தருமாறு கூறினார். நானும் வாங்கி வைத்திருந்தேன். டிபிஐ வந்தவர் நான் பார்க்கும் முன்பே கதைக்கு அனுப்பிய ஃபோட்டோவை நினைவில் வைத்து என்னைக் கண்டுபிடித்து விட்டார்.. புத்தகங்கள் பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தைக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் பணத்தை திணித்துவிட்டுத்தான் போனார்.  
     என்னைப் போல எத்தனையோ வாசகர்களை எழுத்தாளர்களாக ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு. யாராக இருந்தாலும் திறமையை அடையாளம் கண்டு வாய்ப்பளித்தவர் அவர்.
       பல்வேறு கதைகளை எழுதி இருந்தாலும் ஆன்மீகம் அவரை உள்ளிழுத்துக் கொண்டது. அதனையும் அவர் சுவாரசியத்தோடும் வித்தியாசமாகவும் எழுதி வந்தார்.  
       எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள், மட்டுமல்லாது வாசகர்களின்  அன்பைப் பெற்ற பிரியா கல்யாணராமன் மறைந்தது பேரிழப்பாகும். வார இதழ்கள் செல்வாக்கிழந்த நிலையில் குமுதத்தின் சர்குலேஷன் மட்டும் குறையாமல் இருப்பதற்குக் காரணம் இவரது கடின உழைப்பே.
    என்னைப் போன்ற எளிய வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 
அவரது குடும்பத்தார்க்கு இதனை தாங்கிக் கொள்ளும் வல்லமையை இறைவன் அருளட்டும்

செவ்வாய், 10 மே, 2022

குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன்

  


வாத்தியாரை அடித்தவன்

(ஒரு பக்கக் கதை)

                                                                ……டி.என்.முரளிதரன்….

              பள்ளியின்  எச்.எம் ரூமில்   ஆசிரியர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம்சார்நம்ம முத்துசாமி சாரை, அந்தப் பையன் அடிக்க வந்திருக்கான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு இந்த வீடியோதான் வைரலா போயிக்கிட்டிருக்கு.. அவனை சஸ்பெண்ட் பண்ணனும் சார். ரெகார்ட் நோட் ஏன் எழுதலன்னு கேட்ட து தப்பாரிசல்ட் குறைஞ்சா மட்டும் நம்மளைக் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க இல்ல. எவனோ ஒரு வாத்தியார் தப்பு செஞ்சா எல்லாருமே அப்படித்தான்னு பரப்பறாங்க இல்ல. இப்படியே விட்டா  சொல்லிக்கொடுக்கற  டீச்சருக்கு என்ன பாதுகாப்பு?” என்று கோபாவேசமாகப் பேச மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

    அப்போது  முத்துசாமி சாரும் உள்ளே வர,

    “நீங்க சொல்றதும் சரிதான். முத்துசாமி சார்! நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க, சி.. கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். சிவியர் பனிஷ்மெண்ட் கொடுத்தாத்தான் ரவுடிப் பசங்க திருந்துவாங்கஎன்றார் எச்.எம்.
       “
வேணாம்  சார்! என்றார் முத்துசாமி

    ”ஏன்? சாதிப் பிரச்சனையாகிடும்னு பயப்படறீங்களா?”

    “இல்ல சார். நான் சின்ன வயசுல  வீட்டுப்பாடம் எழுதலன்னு வாத்தியார் என்ன நல்லா திட்டிட்டார். அதனால நான் அவர் மேல கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டேன். இருந்தாலும் அவர் என்னை மன்னிச்சி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார்.. ஒரளவுக்கு படிச்சு இன்னைக்கு  நல்ல நிலைமையில இருக்கேன். அவர் மன்னிக்கலன்னா ஸ்கூல விட்டு நின்னுருப்பேன். அந்த நிலை அந்தப் பையனுக்கு வராம இருக்கணும்னு  விரும்பறேன். இதோட விட்டுடலாம் சார்.”

என்ற முத்துசாமி சாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2020

குமுதத்தில் என் கதை -நியாயம்

 


   நீண்ட  நாட்களுக்குப் பிறகு குமுதம்  25.11.2020 தேதியிட்டு இதழில் என்  ஒரு  பக்கக்  கதை "நியாயங்கள்    பிரசுரமாகி உள்ளது.  அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகி இருப்பது ஆச்சர்யம்தான். இதுவரை வெளியான எனது கதைகள் அதிகபட்சம் 3 வாரங்களுக்குள் வெளியிடபட்டுள்ளது. 4 வாரங்கள் ஆகிவிட்டால் வராது என்று  தெரிந்து கொள்ளலாம்.  குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி  இதற்கு முன்பு குமுதத்தில்  ஒரு சிறுகதையும்  சில ஒரு பக்க கதைகளும் வெளியானது . மிக விரைவாக பரிசீலிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் குமுதத்திற்கு  நன்றி 

இதோ கதை 

நியாயங்கள்

                                                                                        டி.என்.முரளிதரன்

          அந்தப் பேருந்து நிறுத்தத்தில் நிறையப்பேர் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்ததே தவிர பேருந்துகள் நிற்காமல் சென்றன. காத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் பொறுமை இழந்து  கத்த ஆரம்பித்து விட்டார்.

       என்ன இது எந்த பஸ்ஸும் நிறுத்தாம போறான். இந்த ஸ்டாப்ல நிக்கறவன் எவனும் மனுஷனா தெரியலயா? அநியாயமா இருக்கேசும்மாவா ஏத்திக்கிட்டுப் போகப்போறான். காசு குடுத்துத்தானே போகப் போறோம்?”

    இங்க ஒயிட் போர்டு பஸ்தான் நிக்கும், மஞ்ச போர்டெல்லாம் நிக்காதுஎன்றார் இன்னொருவர்

பஸ் காலியாத்தான போகுது. நிறுத்தி ஏத்திக்கிட்டா என்ன குறைஞ்சா போயிடும்?. நாமளும் ஆஃபீஸ் போக  வேண்டாமா?. ஆஃபீஸ் நேரத்தில எல்லா பஸ்ஸும் இப்படியே வந்தா எப்படி?......”  கோபத்துடன் தொடர்ந்தார்.

        மஞ்சள் போர்டு பஸ்தான் வந்தது. ஆனாலும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார் டிரைவர். அவர் ரொம்ப நல்லவர்  போலிருக்கிறது. அடுத்தடுத்த எல்லா நிறுத்தத்திலும் பஸ்ஸை நிறுத்தி மக்களை ஏற்றிக் கொண்டார்.
        இது என்ன அநியாயமா இருக்கே. மஞ்ச போர்டு போட்டுட்டு எல்லா ஸ்டாப்லயும் நிறுத்தினா என்ன அர்த்தம்?. நாம நேரத்திற்கு ஆஃபீஸ் போக வேண்டாமா? காசு மட்டும் அதிகமா வாங்கறாங்க இல்ல?” என்று யாரோ சத்தம் போடும் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.   சத்தம் போட்டவர், வேறு யாருமில்லை. பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்கவில்லை என்று முன்பு பொங்கினாரே  அவரேதான்.

   -------------------
 
முந்தைய பதிவுகள்