என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2014

கந்தா என்கிற கந்தசாமி


என் தேன் கூட்டின் சில தேனீக்கள்  
- 1 கந்தா என்கிற கந்தசாமி


   என் பிள்ளைப் பிராயத்தின் சில பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டவன் கந்தா என்கிற கந்தசாமி. அவன் எனது நன்பன்(எழுத்துப் பிழை அல்ல).  என்னைவிட இரண்டு வயது பெரியவன்.அவனுடன் சுற்றிக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது. அவன் நண்பன் மட்டுமல்ல. எனக்கு அவன்தான் ஹீரோ. அவன் ஒரு சகலகலா வல்லவன். விளையாட்டுகளில் அவனை யாரும் மிஞ்ச முடியாது. அவன் ஒவ்வொரு செயலும் எனக்கு பிரமிப்பாக இருக்கும். பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் அவன் வீட்டில்தான் தவமாய்க் கிடப்பேன். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது செய்து என்னை அசத்திக் கொண்டிருப்பான்.

    நாங்கள்  இருவரும் அரை டிராயர் போட்ட ராமலக்ஷ்மணர்கள் போல் இணை பிரியாது கிராமத்து வீதிகளை வலம், இடம் என்று சுற்றி வந்து கொண்டிருப்போம். இருவரும் சேர்ந்து ஓசியில் அம்புலிமாமா படிப்போம். அதில் ராமாயணம் தொடராக வந்து  கொண்டிருந்தது. அதன் பாதிப்பில் வில் செய்து அதை வைத்து பூவரசு இலையை துளைக்கும்படி அம்பு விடுவோம். அணுவை துளைத்து ஏழு கடலை அம்பு தாண்டி சென்றது போன்ற மகிழ்ச்சி கொள்வோம். வில்லை தோளில் மாட்டிகொண்டும் கூர்மையாக சீவப்பட்ட அம்புகளை முதுகில் கட்டி வைத்துக் கொண்டு விளையாடுவது எங்களுக்கு பிடித்தமான ஒன்று.. அவன் வில்லும் அம்பும் அழகாக இருக்கும். பச்சை சவுக்கு குச்சியில் கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு மேல்தோலை உரித்துவிடுவான்.தோலின் நிறமும் வெள்ளை நிறமும் கலந்து வண்ணமிட்டது போல் அழகாக காட்சி அளிக்கும். அதை வளைத்து வில்செய்வான். அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்.

    கந்தா அப்படி ஒன்றும் வசதியானவன் அல்ல. அவனுக்குஅம்மா மட்டுமே. அண்ணன் அக்கா உண்டு என்றாலும். அவன் கட்டற்ற சுதந்திரம் உடைய கன்றுக் குட்டியாய் திரிந்தான். உலகிலேயே அவன்தான் திறமைசாலி என்று எண்ணுவேன். அவன் ஒவ்வொரு செயலும் என்னை அப்போது ஆச்சர்யப் படவைத்தது 

   பேட்டரியில் குட்டி பல்பை எரிய வைத்து வித்தை கட்டுவான். ஒயரை பல்பு பேட்டரியுடன்  இணைக்க தாரை பயன்படுத்துவான். ஏற முடியாத எல்லா மரங்களிலும் ஏறிக் காட்டுவான். சைக்கிளை கைகளை விட்டு விட்டு ஒட்டுவான்.சைக்கிள் பஞ்சர் அவனே ஒட்டுவான். பாம்புகளை கொன்று வாலைப் பிடித்து சுற்றி எங்கள் மேல் வீசுவதுபோல் பயமுறுத்துவான். ஒத்தையா இரட்டையா, பல்லாங்குழி,கல்லாங்காய் போன்ற விளையாட்டுக்களிலும் பெண்களையும் போண்டி ஆக்கிவிடுவான். 

    விதம் விதமான தீப்பெட்டி அட்டைகள் சிகரட் பெட்டி அட்டைகளை கந்தா சேகரித்து வைத்திருப்பான். அவையெல்லாம் அவன் விளையாட்டில் ஜெயித்தவை. நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்தவைகளை அவனிடம் இழந்து விடுவோம். 

   மண் தரையில் வட்டம் போட்டு  அதனுள் தன்னிடம் உள்ள அட்டைகளை வைக்க வேண்டும். மண்போட்டு மூடிவிட்டு . கொஞ்சம் தொலைவில் இருந்து தட்டையான கல்லை வட்டத்தை நோக்கி எறிய வேண்டும். யாருடைய கல் வட்டத்துக்கு மிக ஆருகில் இருக்கிறதோ அவர்கள் முதலில் கல்லை எடுத்து வேகமாக அட்டைகள் மூடப்பட்ட மண்மீது வேகமாக வீச வேண்டும். மண் கலைந்து வட்டத்திற்கு வெளியே வரும் அட்டைகளை வீசியவர் எடுத்துக் கொள்ளலாம். மிஞ்சி வட்டத்திற்குள் இருப்பவையே மற்றவர்களுக்கு கிடைக்கும். பெரும்பாலும் முதல் வீச்சிலேயே அத்தனையும் அடித்துக் கொண்டு சென்றுவிடுவான் கந்தா.

  கோலி விளையாட்டிலும் அப்படித்தான். குழி ஆட்டமாக இருந்தால் நம் முட்டியை தேய வைத்து விடுவான். கோலி விளையாட்டில் இன்னொரு வகையான  பேந்தா விலும் அவன் அணியே வெற்றி பெறும். ஒருவேளை தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்தில் அவன் காண்பிக்கும் ஆக்ரோஷம்  பலருடைய கோலிகளை உடைத்துவிடும். அப்போதுதான் அவனுக்கு திருப்தி.

   பம்பரம் விடுவது ஒரு கலை அதில் கை தேர்ந்தவன் கந்தா. .பம்பரம் விடுதலில் மூன்று வகை உண்டு. சாதாராண மாக விடுதல் , சொடுக்குவதுபோல் விடுதல், தேங்காய் உடைப்பது போல் ஓங்கி எறிதல். கடைசி முறையில் பம்பரம் மிகவேகமாக சுழலும் மண்ணில் பள்ளத்தை உண்டாக்கும். ஆனால் இவ்வாறு பம்பரம் விடுவது மிகக் கடினம். நிறையப் பேருக்கு பம்பரம் சுற்றாமல் உருண்டு ஓடிவிடும். ஆனால் கந்தாவுக்கு இது மிகவும் எளிது. சாட்டையை லாவகமாக  சுற்றி ஆணியை லேசாக முத்தமிட்டு பலம் கொண்ட மட்டும் ஓங்கி வீச பம்பரம் பூமியைவிட வேகமாக சுற்றுவது போல் இருக்கும். அதை அப்படியே லாவகமாக கையில் ஏந்தி சுற்றவைப்பான் . இந்த பம்பர விளையாட்டில்தான் அப்பீட் என்று ஒன்று உண்டு. அவற்றை எல்லாம் விளக்க ஒரு பதிவு போதாது.
   கில்லி விளையாட்டிலும் அவன் கில்லிதான். மற்றவர்கள் முழு பலமும் பிரயோகித்து நீண்ட தூரம் அடித்து பெரும் புள்ளிகளை  டபுள்ஸ் டிரிபில்ஸ் என்று அடித்து கஷ்டமில்லாமல் ஜெயித்து விடுவான்.எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் அவனிடம்தான் விளையாட ஆர்வம் கொள்வேன்.
    பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கட்டபொம்மன் நாடகம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். கந்தாதான் கட்ட பொம்மன். மற்ற பாத்திரங்களுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். அன்று நான் ஏதோ காரணத்திற்காக பள்ளி செல்லாததால் அந்த நாடகத்தில் இல்லை. நமக்கு நடிக்க வாய்ப்பிலையே என்று ஒத்திகையை ஏக்கத்தோடு  பார்ப்பேன். என்னுடைய தந்தைதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றாலும் நாடகத்தில் சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் நான் கேட்கவில்லை. சேவகன் பத்திரத்தில் ஒரு பையன் சரியாக வசனம் பேசாததால் கந்தா அவனை எடுத்து விட்டு என்னை சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தான்.எனக்கான வசனம் மிகக் குறைவு என்ற போதிலும் கட்டபொம்மன் உட்பட அனைத்து பாத்திரங்களின் வசனங்களும் எனக்கு மனப்பாடம். ஆனால் ஏதோ காரணத்துக்காக ஆண்டுவிழாவே நடக்காமல் போனதால் ஏமாற்றம் அடைந்தோம்.

அடுத்த ஆண்டுஅவன் ஒன்பதாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் உயர் நிலைப் பள்ளிக்கு சென்றுவிட நாங்களும்  எனது அண்ணணின் மேற்படிப்புக்காக  சென்னைக்கு இடம் பெயர வேண்டி இருந்தது.என் தந்தையின் வேலை மட்டும் அங்கேதான். விடுமுறை நாட்களில் சென்னைக்கு வருவார் .அப்போது கந்தாவைப் பற்றி கேட்பேன். ஓராண்டு சென்னை வாசம் நிறைவடைய கோடை விடுமுறையில்  ஊருக்கு சென்றேன். சாப்பிடக் கூட இல்லை கந்தா வீட்டுக்கு ஓடினேன்.

    கந்தா இன்னும் அரசனாகத்தான் இருந்தான். ஆனால் இப்போது அவன் ராஜாங்கம் மாறி இருந்தது.  அவனது அவையில் நான் புதியவனாய் உணர்ந்தேன். அவனுக்கு அப்படித் தோன்றியதா தெரியவில்லை.  இப்போதும் பல விளையாட்டுக்கள் விளையாடினோம். பலவற்றில் கந்தா என்னிடம் தோற்றுப் போனான். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை . எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனது ஹீரோ என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை. பல ஆட்டங்களை பாதியில் நானே கலைத்துவிட்டேன்.

    உயர்நிலைப் பள்ளையின் பாதிப்பு அவன் பேச்சில் தெரிந்தது. அவனது ஆசிரியர் வகுப்பில் பேசியதை எல்லாம் சொல்லிக் காட்டினான். அதில் சமகால அரசியலும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
  ஒரு சில நாட்களே அங்கிருக்க முடிந்தது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஊருக்குப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

   இப்போது கந்தா அரை டிராயரில் இருந்து லுங்கிக்கு மாறி இருந்தான். இளமை அவன் முகத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது. குரலின் மென்மை மாறி இருந்தது. நான் பார்த்த பத்து நிமிடத்தில் 10 தடவைக்குமேல் கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டே இருந்தான். முகத்தில் இருந்த பவுடரின் வாசனை  புதிதாக இருப்பதாக என் மூக்கு உணர்த்தியது. 
   என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு நான் அவசர வேலையா வெளிய போறேன் . அப்புறம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். "சரி போய்ட்டுவா நான் இங்கயே இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே மூலையில் இருந்த மர பீரோவின் மேல் லேசாகத் தெரிந்த ஒரு புத்தகத்தை எடுக்க முனைந்தேன். நான் எடுக்கு முன் தாவி வந்து அதை எடுத்த கந்தா "இதையும் எடுத்துப் போகவேண்டும்" என்று கூறிக்கொண்டே பான்ட் பாக்கெட்டில் புத்தகத்தை சொருகிக் கொண்டு  பறந்தான். 
அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று அப்போது புரியவில்லை.

அவன் அம்மாவும் அக்காவும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவன் இப்போதெல்லாம் ஒரு புதிய நண்பனுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும். இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்புவதாகவும் வருத்தப் பட்டனர் .கந்தாவின் அம்மா என்னை சாப்பிடச் சொலி வற்புறுத்தியபோதும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு ஏமாற்றத்துடன் புறப்பட்டேன் .
    அதற்குப் பின் இன்றுவரை கந்தாவை பார்க்கவில்லை. ஏதாவது கல்யாணம் அல்லது விசேஷங்களில் கூட அவனை பார்க்க முடியவில்லை. அதன் பின் படிப்பு வேலை என்று நாட்கள் ராக்கெட் வேகத்தில் நகர்ந்தாலும்  கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது  ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான்

    விசாரித்ததில் கந்தா யாரோ ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வேறு ஊரில்  இருப்பதாக தெரியவந்தது. முகநூல், ட்விட்டரில் கந்தசாமி என்ற பெயர் கண்ணில் பட்டால் அவனாக இருக்குமோ என்று ப்ரோபைல் படங்களை அசட்டுத்தனமாக உற்றுப் பார்ப்பதுண்டு. கொஞ்சம் முயற்சி  செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும்.  அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே நிலைக்கட்டும் .
    கந்தா எனும் தேனீ  எனது தேன்கூட்டில் சேகரித்து வைத்த தேனின் சுவை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது அவ்வப்போது ருசித்துப் பார்க்க..
( இன்னும் மொய்க்கும் சில தேனீக்கள்)
********************************************************************************


  

57 கருத்துகள்:

  1. முரளீ.... உங்களுக்குள் இப்படி ஒரு எழுத்தாளரா? அசந்து போய்விட்டேன்.
    அற்புதமான நஸ்தால்ஜியா எழுத்து. அன்பு கூர்நது தொடருங்கள்.. ”அவன் வல்வில் கந்தசாமியாக என் கண்ணுக்கு தெரிவான்” எனக்கு என் நண்பன் பர்மா பாஸ்கர் இப்படித்தான் தோன்றினான் அவன், நான் அதிராம்பட்டினத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது திடீரென்று -நாடுமாறி வந்து- என்னை ஆக்கிரமித்துக்கொண்டான். அவனும் இப்போது எங்கிருக்கிறான் என்று தெரியாது. அடுத்தாண்டு நான் பள்ளிமாறி திருவோணம் வந்துவிட்டேன்... உங்கள் கந்தா என் பாஸ்கரை நினைவுபடுத்தினான். நீங்கள் ”கந்தா என் நினைவின் ஒரு மூலையில் சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டுதான் இருந்தான். எப்போதாவது தெருக்களில் பம்பரம்.பட்டம் விடும் சிறுவர்கள் கண்ணில் படும்போது ஒளிந்திருக்கும் கந்தா வெளியே வந்து போவான” என்று சொன்னது கூட என் பாஸ்கரை ஞாபகமூட்டியது. ஒவ்வொருவருக்கும் ஒரு “கந்தா” நிச்சயமாக இருப்பார்கள்... உங்கள் கந்தா கொடுத்து வைத்தவன்... பாடல் பெற்ற ஸ்தலம் போல வலைபெற்ற வரலாறாகிவிட்டான். அருமை, நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! தங்களைப் போன்றவர்களின் பாராட்டும் ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது

      நீக்கு
  2. அற்புதமான எழுத்து...
    இந்தத் தேனியின் கூட்டில் இருந்து இன்னும் சில தேன் துளிகளை ருசிக்க ஆசை...

    பதிலளிநீக்கு
  3. சில நட்பு சிந்தனையை தீட்டிய தூரிகைபோல ! அருமையான நினைவுகள் தொடரட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் நினைவுகளை அழகாக எடுத்து சொன்னவிதம் மிக அருமை மற்றவர்கள் சொல்வது போல மிக அழகான எழுத்து நடை,, உங்கள் நினைவுகளை சொல்லி எங்களின் பள்ளிக்கால நிகழ்வுகளை மலரும் நினைவுகள் போல நினைக்க செய்துவிட்டீர்கள் பாராட்டுகள் முரளீ

    பதிலளிநீக்கு
  5. அப்பாடா, தப்பிச்சேன். என்னைப்பத்திதான் ஏதோ எழுதறீங்கன்னு தப்பா எண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. கடந்த கால நினைவலைகள் அற்புதம் ஐயா.
    தங்களின் எழுத்துக்கள், தங்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன ஐயா.
    //கொஞ்சம் முயற்சி செய்தால் கந்தாவின் தொலைபேசி எண், முகவரியை கண்டுபிடித்து விடலாம். ஆனால் நான் முயற்சிக்க வில்லை. இனி சந்திக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்த சந்திப்பு யதேச்சையாக நிகழட்டும். அதுவரை என் மனத்திரையில் விழுந்த கந்தாவின் மாயபிம்பம் அப்படியே இருக்கட்டும் .//
    தங்களின் முடிவு சரியான முடிவென்றே தோன்றுகின்றது ஐயா.
    சில நினைவுகளை, நினைவுகளாக மட்டுமே இறுதிவரை பாதுகாப்பதில் தனி சுகம் உண்டு.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கந்தா என்கிற கந்தசாமி. நீங்கள் விளையாடிய அத்தனை விளையாட்டுக்களையும் நானும் எனது சிறுவயதில் விளையாடி இருக்கிறேன். இன்று பேந்தா என்றால் பேந்த பேந்த முழிப்பவர்கள்தான் அதிகம்.

    உங்கள் பதிவைப் படிக்கப் படிக்க , எனது சிறுவயது நண்பர்கள் தெருப்புழுதி மணல் வாசனையோடு. வந்து போயினர். அந்தநாள் .... ... இனி வராது! பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளி வயது வாழ்க்கை இனிமையானது. இது போன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  8. பதிவும் பிடித்திருந்தது. பழனி.கந்தசாமி ஸார் பின்னூட்டமும் பிடித்திருந்தது. உங்களுக்கு ஸ்ரீராம் என்று யாரும் நண்பன் சின்ன வயதில் இல்லையா முரளி? எனக்கும் முரளி என்று நண்பர் யாரும் சின்ன வயதில் இல்லை! :))))

    எல்லார் வாழ்விலும் கந்தசாமிக்கள் உண்டு. சில சமயம் நாமே ஒரு கந்தசாமியாய் வேறு சிலர் கண்ணுக்கும் தெரிவதுண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.அப்படி யாரேனும் நம்மை பற்றி எழுதினால் மகிழ்ச்சிதான்

      நீக்கு
  9. வணக்கம்
    முரளி (அண்ணா)

    தங்களின் கடந்த கால வாழ்க்கையில் மறக்க முடியாத உயிர்நட்பு பற்றி எழுதிய எழுத்து என்மனதில் ஆழமாக பந்திந்துள்ளது.. அதிலும் சின்ன வயதில் அம்பு செய்து விளையாடும் போது அதன் நுனியில் அவன் நாமம் உள்ளது போல ஒரு உணர்.... ஸ்ரீராம பிரன் அம்பில் ஸ்ரீராமா என்று இருப்பது போல.தான்....சின்ன வயதில் செய்த குறும்புகள் அத்தனையும் மிக அழகாக விவரணச் சித்திரம் போல படம் பிடித்து காட்டியுள்ளிர்கள்
    நிச்சயம் உங்களின் அன்புக்குரிய கந்தா என்கிற கந்த சாமியின் நட்பு கிடைக்க.... எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    த.ம 6வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. //இளமை அவன் முகைத்தில் மீசை வரைய ஆரம்பித்திருந்தது.//
    என்னா ஒரு எலக்கிய நயம்... சொம்மா பொயந்து கட்டிட்ட வாத்யாரே...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
  12. எனது பள்ளிக்கூட நண்பன் கண்ணன் ஞாபகம் வந்தது... ஆனால் இதுவரை சந்திக்க முடியவில்லை... அந்தக் கால இனிய நினைவுகளை மறுபடியும் நினைத்து மகிழ்ந்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையப் பேருடைய நினைவுகளை கிளறி விட்டிருக்கிறேன் போலிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி DD சார்

      நீக்கு
  13. சூப்பர்... நினைவுகளை அழகா சிறுகதையா சொல்லியிருக்கீங்க...! தேனீக்கள் இனிமை! . இவ்வளவு சுவாரஸ்யமா சொல்லும்போது நிச்சயம் உங்களால் நிறைய சிறுகதைகளை படைக்க முடியும்... ! தொடருங்க.
    என்ன ஒரு ஆச்சரியம்... நானும் கூட தொலைத்து விட்ட ஒரு நட்பின் பெயரை வைத்து பேஸ்புக்கில் தேடி இருக்கிறேன்... யார் மூலமாவது விசாரிக்க நினைத்தும் சந்தர்ப்பம் அமையவில்லை... நேரமும் அமையவில்லை..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையே கொஞ்சம் மாற்றி பத்திரிகைக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறேன்.

      நீக்கு
  14. அந்தநாள் இனிமை!!
    Nanru-
    Eniya vaalththu.
    Vetha.langathilakam

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கு ஒரு கந்தா என்றால் ,எனக்கு ஒரு சொக்கு ...அந்த நண்பரை ஒருநாள் சந்திப்பேன் என இருந்த எனக்கு, அவர் எப்போதோ காலமாகிவிட்டார் என்ற தகவலை இன்றுவரை என்னால் நம்ப முடிய வில்லை !
    த.ம 1 ௦
    உங்களுக்கு என் நன்றி >>http://jokkaali.blogspot.com/2014/01/blog-post_22.html நன்றி சொல்லும் நேரமிது !

    பதிலளிநீக்கு
  16. இந்த வருடம் உங்கள் நட்பை புதுபிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான பதிவு
    சொல்லிச் சென்றவிதம் படிப்பவர்கள்
    அனைவரின் மனத்திலும் இதுபோல
    காணத் துடிக்கும் கந்தாக்களை நிச்சயம்
    நினைவுறுத்துப் போகும்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  18. உங்களின் நண்பர் பற்றிய நினைவுகள் அவரவர் பள்ளிக்கூட நினைவுகளை கிளறிவிட்டது! அருமையான நடையில் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! இன்னும் சில தேன் துளிகளை சுவைக்க ஆவலுடன் உள்ளேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான நினைவலைகள்..... தொடரட்டும் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  20. கந்தா பற்றி இப்போது கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமில்லாததன் காரணம் ஒருவேளை சந்தித்தால் அல்லது தெரிந்துகொண்டால் அந்த ஹீரோ பிம்பம் உடைந்துவிடுமோ என்ற அச்சமாயிருக்கலாம். சில நேரங்களில் உண்மையைச் சந்திக்கத் தயக்கம் ஏற்படுவதுண்டு. நினைவுகள் சுகமானவை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  22. ஜோரான மொழிநடை
    வாழ்த்துக்கள்
    தேனின் சுவை இன்னும் திதிக்கட்டும்
    அண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! ஏற்கனவே ஓரிருமுறை என் வலைப பக்கம் வந்திருக்கிரீறல் ஐயா

      நீக்கு
  23. கதை எழுதும் நம் திறமைகள் அனைத்தும் வெளியே வந்தே தீரும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. அருமை முரளி.... உங்கள் எழுத்து நடை மேலும் மெருகேறியிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  25. உங்கள் பதிவைப் படித்து எனக்குத் தோன்றியதை எழுத எண்ணி பின்னூட்டப் பெட்டியில் க்ளிக் செய்தால் கண்ணெதிரே ஜோதிஜியின் பின்னூட்டம்.. முந்திக் கொண்டார்.

    நினைவுகளை நினைவுகள் போல் எழுதுவது ஒரு கலை. நினைவுகளைப் புனைவுகள் போல் எழுதுவது பெருங்கலை. கலையிலிருந்து பெருங்கலைக்குப் பயணிக்கிறீர்கள் போல.

    பதிலளிநீக்கு
  26. அன்புடையீர்..
    இன்று - தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_29.html
    அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  27. உங்களது கந்தா என்னும் கந்தசாமி எங்கள் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுவிட்டான். //என் ஹீரோ கந்தா என்னிடம் தோற்பதை நானே விரும்பவில்லை // என்ற உங்கள் வரிகளில் வலி தெரிகிறது. பள்ளி நாட்களில் எத்தனையோ பேர்களுடன் பழகினாலும், சில பேருடன் தான் நெருக்கம் அதிகரிக்கிறது. மனதளவில் நாம் சிலரால் ரொம்பவும் ஈர்க்கப்படுகிறோம். காலப்போக்கில் நாம் அப்படியே இருக்க, அவர்கள் மாறுவதை நம்மால் ஏற்கமுடியவில்லை. உங்கள் உணர்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி வியக்க வைக்கிறது.

    நிச்சயம் உங்கள் கந்தாவை நீங்கள் சந்திப்பீர்கள்!

    பதிலளிநீக்கு
  28. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895