என்னை கவனிப்பவர்கள்

சனி, 14 டிசம்பர், 2013

பாவம் மாணவர்கள்-தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம்


    தினமலர் ஒவ்வோர் ஆண்டும் 10ம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக ஜெயித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதிக்காலை 4.00 மணிமுதலே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாணவர்கள் காத்திருந்தார்களாம். என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த  நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்பெற ஆலோசனை வழங்குவது மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது.
அப்படி என்னதான் நடக்கிறது இந்த நிகழ்ச்சியில?.ஏன் மாணவர்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.?

     தன் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெற வைக்க பெற்றோர்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரையாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தர சிறிதும் தயங்காதவர்கள் பெற்றோர்.

இதில் ஏதேனும் பயன் உள்ளதா?
    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ப்ளூ பிரிண்ட் எனப்படும் கேள்வித்தாள் அமைப்பு இலவசமாக கொடுக்கப் படுகிறது. ஏதேனும் கைடுகள், புத்தகங்கள் இலவசமாக கொடுப்பார்கள்.விளம்பரதார்களின் இலவசங்களும் உண்டு. ப்ளூ பிரிண்ட் என்பது ஒவ்வொரு பாடத்திலிருந்தும் எப்படி கேள்விகள் கேட்கப்படும் அதற்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற விவரங்கள் அடங்கியது.
 முன்பு வினாத்தாள் ப்ளூ  பிரிண்ட் என்ற வார்த்தையை பி.எட் படித்தவர்களும் ஆசிரியர்களும்தான்  தான் அறிவார்கள்.முன்பெல்லாம் ப்ளூ பிரிண்ட் பற்றி ஆசிரியர்கள் ஏதுவும் சொல்ல மாட்டார்கள். இப்போதோ மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது.(உண்மையில் அப்படி தெரிய வேண்டிய அவசியம் இல்லை) 
  இதற்கு மேலாக ஆலோசனைகள் என்ற பெயரில் சில பிரபலங்கள் அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். பாவம் மாணவர்கள் ஒரு நாள் முழுக்க கேட்டுத் தான் ஆகவேண்டும். ஆசிரியர்கள் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுதும் முறையை விளக்குவார்கள். எப்படி எழுதினால் மதிப்பெண் கிடைக்கும் என்பதை விவரிப்பார்கள். இதெல்லாம் பயனுள்ளதுதான் என்றாலும் இவை எல்லாம்  தினந்தோறும் பள்ளிகளில் சொல்லப் படுவதுதான் .

  இந்த  நிகழ்ச்சில் ரமேஷ் பிரபா கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா? கேட்டால் மெய் சிலிர்த்துப் போவீர்கள்."தேர்வு அறையில் வேடிக்கை பார்த்து நேரத்தை செலவிட வேண்டாம்." என்று சொன்னது வேடிக்கையாக இருந்தது
தேர்வின்போது வேடிக்கை பார்த்து நேரத்தை வீணடிக்க எந்த மாணவன் விரும்புவான்?
எந்தக் கேள்விக்கும் விடை தெரியாதவர்கள் ஒரு வேளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்.தெரியாதவர்கள் என்னதான் செய்வது? வெளியே விடமாட்டார்களே!

பொதுவாக அனைவராலும் வழங்கப்படும் அறிவுரைகள்
 1. . டி.வி.பார்க்காதீர்கள் (பெற்றோர்களுக்கு வழங்கும் அறிவுரை டிவியை மூட்டை கட்டி எடுத்து வைத்து விடுங்கள்)
 2. விளையாட்டை  நினைத்துக் கூட பார்க்காதீர்கள். இரண்டு ஆண்டுகள் கஷ்டப் பட்டால் வாழ்க்கை முழுதும் கஷ்டப் படவேண்டாம் 
 3. உங்கள்  வாழ்க்கையே இதில்தான் அடங்கி இருக்கிறது.
 4.  படித்ததை திரும்பத் திரும்பத் எழுதிப் பாருங்கள் 
 5. முந்தைய ஆண்டு  வினத்தாள்களை எழுதிப் பழகுங்கள்
  இப்படி பல அறிவுரைகள். உண்மையில் இந்த அறிவுரைகள் ஏற்கனவே ஆசிரியர்கள் பெற்றோர்கள் நண்பர்களால் நாள்தோறும் பத்தாம் வகுப்பு , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுவதுதான். இதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தி மாணவர்களை வதைப்பது சரிதானா என்பதை சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பள்ளியிலேயே 8 மணிநேரம் உட்கார வைத்து கதற கதற பாடம் நடத்திவிட்டு பள்ளி  நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளிலும் கொடுமைப்படுத்துவதோடு .நைட் ஸ்டடியும் செய்ய வைக்கும் கொடுமைகளுக்கு இடையில் ஞாயிறு ஒரு நாளிலும் இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பிள்ளைகளை அழைத்து சென்று  காலையில் இருந்து காத்துக் கிடக்கும் பெற்றோர்களை என்ன செய்வது?

    9 ம் வகுப்பு வந்து விட்டால் போதும், நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்குக்கூட குழந்தைகளை அழைத்துச்  செல்வதை தவிர்த்துவிடுவார்கள் . ஏன் குழந்தைகளை அழைத்து வருவதில்லை என்று உறவினர் கேட்டால் ."அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் ஆச்சே படிக்கிறான்." உறவினரும் "அப்படியா? நல்லது படிக்கட்டும்." என்பார்கள் (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பான்) இதை சாக்காக வைத்துக் கொண்டுபெற்றோரும் உடனே கிளம்பி விடுவார்கள். வாழ்க்கை இந்த இரண்டு ஆண்டுகளில்தான் முடிவுசெய்யப்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்வதை என்னவென்று சொல்வது?
  பள்ளியிலோ அதைவிட மோசம். ஒரு நாள் விடுமுறை எடுத்தாலும் படித்தது எல்லாம் வீணாய்ப்போனது போல பெற்றோரை காக்க வைத்து நிற்க வைத்து மிரட்டுவார்கள் 

பெற்றோர் ஆசிரியர் கழகம் என்று ஒன்று இருக்கிறது.
இந்தப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பணி வினாவங்கி வெளியிடுவதுதான்.(வேறு பணிகள் இதற்கு உண்டு) அதற்கான விடைகளுடன் வெளியிடப்படும் இதை வாங்கிப் படித்து பயிற்சி செய்தால் போதுமானது. இதில் இருந்துதான் கேள்விகள் கேட்கப் படுகின்றன.ஒவ்வொரு மாணவனும் இந்த புத்தங்கங்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இது மட்டுமின்றிCOME BOOK என்று அழைக்கப்படும் புத்தகமும் அனைவராலும் வாங்கப் படுகிறது. COME என்பது Classsification of questions, Objective type questions, Model question papers, Evaluation Scheme என்பவற்றின் முதல் எழுத்துக்களை கொண்டு உருவக்கப் பட்டது. எந்த ஸ்டெப்புக்கு எவ்வளவு மதிப்பெண் என்று இதில் விவரிக்கப் பட்டிருக்கும். இதைத் தாண்டி கேள்வித்தாளில் வேறு கேள்விகள் இடம் பெறுவதில்லை. எழுத்துக்கள் எண்கள் கூட மாறுவதில்லை ஒரு கேள்விக்கு முழுதும் பதில் தெரியாவிட்டால் கூட இரண்டு மூன்று படிகளை எழுதி பாதிக்கு மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று விடமுடியும். . பல பள்ளிகளில் இரண்டு ஆண்டு பயிற்சிகள் மூலம் இவற்றை திணித்து விடுகிறார்கள். அரசு பள்ளிகளும் இப்போது இதே நடைமுறைகளை  பின்பற்றத் தொடங்கி விட்டன.
    மாணவர்களை  சிந்திக்க விடாமல் செய்வதில் இந்த வினா வங்கிகளுக்கு முக்கிய இடம். உண்டு. முன்பெல்லாம் கணிதத்தில் ஒரு கணக்கை போட்டுக் காட்டிவிட்டு மற்ற கணக்குகளை வீட்டுப் பாடமாக போடச் சொல்வார்கள். இப்போது ஆசிரியர்கள் அனைத்து கணக்குகளையும் போட்டுக் காட்டிவிட்டு அடுத்த நாள் அதில் டெஸ்ட் வைத்து விடுகிறார்கள். மாணவன் மனப்பாடம் செய்து எழுதி விடுகிறார்கள். கணக்கு பாடம்கூட மனப்பாடம் செய்து எழுதி 100 மதிப்பெண் பெற்றுவிடுவதை காண முடிகிறது. எந்தக் கணக்குக்கு என்ன விடை வரும் என்பதை மாணவர்கள் மனப்பாடமாக சொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
   பிழைப்பே பெரும்பாடாக  அன்றாடங்காய்ச்சிகளாக அவதிப்படும் மக்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பை கவனிக்கவோ அக்கறை செலுத்தவோ முடிவதில்லை. மேல்தட்டு மக்களுக்கோ பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட  நடுத்தர மக்களோ தன் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் இல்லையென்றால் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று மூளை சலவை செய்து குழந்தைகளை வளர்க்கிறார்கள். 

  9ம் வகுப்பு வந்து விட்டால் போதும், அந்த மாணவன் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பள்ளிக்கும் வீட்டுக்கும் மட்டுமே சென்று வர  அனுமதிக்கப் பட்ட  கைதிதான் . கூடவே பெற்றோரும் சேர்ந்து கஷ்டப் பட தயாராக இருகிறார்கள். உறவினரின் நல்லது கெட்டது அனைத்தையும் ஒதுக்கிவிடுவார்கள். இப்படி எல்லாம் செய்து மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரி என்று தான் விரும்பும் கல்லூரியில் சேர்த்து விட்டால் பரவாயில்லை. மதிப்பெண் சற்று குறைந்து விட்டாலும் பெற்றோர் அளவிட முடியாக் கவலை அடைகிறார்கள். 
60 சதவீத மதிப்பெண் பெற்றால் கூட  பர்ஸ்ட் கிளாஸ் என்று பெருமைப்பட்டுக் கொண்ட நிலை மாறி இன்று 60 சதம் பெரும் மாணவன் சராசரிக்கும் குறைவானவனாக கருதப்படுகிறான்.

    பள்ளியில் படிப்பது போதாது என்று   கோச்சிங் சென்டருக்கு வேறு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள்.அதுவும் ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் தனித்தனியாக வேறு வேறு இடங்களுக்கும் அனுப்புவதும் உண்டு. பல கோச்சிங் சென்டர்கள் இதனால் ஏராளமாக பணம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன.
   பெற்றோரின் மதிப்பெண் மனநிலையை பத்திரிக்கைகள் வியாபாராமாக்கி விடுவதில் முனைப்பு காட்டுகின்றன. தினந்தோறும் மாதிரி வினா விடைகளை வெளியிடுகின்றன. தொலைக் காட்சிகளும் தங்கள் பங்குக்கு ஆசிரியரை வைத்து கேள்விகளை விளக்கிக் கொண்டிருக்கும்
  இந்த வினாவிடை விளக்கங்கள் சிடிக்களாகவும் டிவிடிக்களாகவும் மாற்றப்பட்டு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது 

    மதிப்பெண் பெறுவது மட்டும்தான் தான் ஜெயித்துக் காட்டுவதாக நினைப்பதா? அதிக மதிப்பெண் பெறாதவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்களா? இதனால் சராசரி மதிப்பெண் பெறுபவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறோம் என்பதை உணர்கிறோம? இந்த மனநிலையை ஏற்படுத்துவது சரிதானா? இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. விடைதான் இன்னும் கிடைக்கவில்லை.


******************************************************************************************************
கொசுறு : இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு படித்து மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களின் பேட்டி பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் இடம் பெறும். எதிர் காலத்தில் என்னவாக ஆவீர்கள் என்று கேட்டால் மருத்துவராகி சேவை செய்வேன். கலக்டராகி தொண்டுசெய்வேன் என்று ஒவ்வொரு வருடமும் யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும் 

**********************************************************************************
இதையும்  படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! l

56 கருத்துகள்:

 1. நீங்கள் கொசுறாக சொன்னீர்களே அந்த விஷயத்தை நானும் நினைத்து பார்ப்பதுண்டு.. ஆமாம்...அவங்க எல்லாம் என்னதான் ஆனாங்க.... பேட்டி கண்டவங்களே திரும்பவும் கண்டுபிடிச்சி பேட்டி போட்டால் நாலு பேருக்கு எடுத்துக்காட்டாகவாவது இருக்கும்....
  நன்றி!

  பதிலளிநீக்கு
 2. எது கல்வி என்பதே விளங்கவில்லை. மதிப்பெண்தான் ஒருவனின் தரத்தைநிச்சயப் படுத்துகிறதென்று அநேகமாக எல்லோரும் நினைக்கிற அளவுக்கு மதிப்பெண்மாயை வந்து விட்டது. இது எல்லாம் நன்றாகத் தெரிந்தவர்களே அந்த மாயையில் அடித்துச் செல்லப் படுவதுதான் விந்தை.நாங்கள் படிக்கும் போது கணிதம் தவிர எந்த பாடத்திலும் நூற்றுக்கு நூறு மார்க் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. இப்போது சர்வ சாதாரணமாக அந்த மதிப்பெண் வழங்கப் படுகிறது. பிள்ளைகளை வெறும் புத்தகப் புழுக்களாக்கி அவர்கள் சுய சிந்தனையை மழுங்கடித்து விடுவதைப் பார்க்கும்போது எனக்கும் ஆதங்கம் பெருகுகிறது. சிந்திக்க வேண்டிய விஷயங்கள் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. முதலில் உங்களுக்குப் பாராட்டு முரளி! இன்றைய மாணவர்களின் அவல நிலையை விரிவாக உள்ளதை உள்ளபடி(குறிப்பாக நடுத்தர குடும்பங்கள்) எழுதியுள்ளீர்கள்! இதைக் கண்டாவது பெற்றோர்களில் சிலராவது தெளிவு பெறுவார்களா!

  + 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா! நீங்கள் ஆசிரியர் என்பதால் அனைத்தையும் நன்கு அறிவீர்கள்.

   நீக்கு
 4. மதிப்பெண்ணை வைத்துத்தான் வாழ்க்கையே என்பது எண் வாஸ்து போலத்தான் போலியானது !
  +1

  பதிலளிநீக்கு
 5. தேர்வில் வெற்றி பெற்றவன் இனிப்பு வாங்கவும்
  தேர்வில் தோல்வி அடைந்தவன் விஷம் வாங்கவும் ஓடுகிறானே,
  இந்நிலை எப்போது மாறுமோ? மாற்றுவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது
  தங்கள் மகன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் யாரும் எண்ணுவதில்லை,
  தேர்வில் மட்டும் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்து,
  யந்திரமாய் மகனையோ, மகளையோ மாற்றுகிறார்கள்.
  எனக்கு அவ்வப்பொழுது ஒரு சிந்தனை வருகிறது ஐயா,
  இந்தப் பெற்றோர்கள், தாங்கள் படிக்கும் காலங்களில்
  இப்படித்தான் படித்திருப்பார்களா,
  தங்கள் பிள்ளைகளை மட்டும் ஏன் இவ்விதம் வளர்க்க நினைக்கின்றார்கள்.
  பள்ளியின் என்னுடன் பணியாற்றும் சகஆசிரிய நண்பரை, அவரது நண்பர் ஒருவர் பார்க்க வந்திருந்தார்.அவரது மகள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாராம். காலை கணக்கு ட்யூசனுக்குச் செல்கிறார், மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வேதியியல் ட்யூசனுக்ககுச் செல்கிறார், பள்ளி விட்டு வந்த பிறகு, ஏழு மணி வரை நேரம் இருக்கிறது, இயற்பியல் ட்யூசனுக்கு அனுப்பலாமா என்று கேட்டார்?
  ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட வேண்டும் போலிருந்தது. மகளை வளர்க்கிறாரா,இயந்திரத்தை வளர்க்கிராரா என்று தெரியவில்லை.இது போல் படித்தவர்கள்தான், அனுசரித்து போதல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற குணங்கள் ஏதுமின்றி பிற்காலத்தில், விவாகரத்துக் கேட்டு, நீதி மன்றங்களை நாடுகிறார்கள். இம்முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் ஐயா
  நன்றி ஐயா அருமையா கருத்துக்கள்
  பெற்றோர்கள் உணர வேண்டுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெற்றிதான் குறிக்கோள் ,சாதனை என்று கருதும் மனப்போக்கு வேதனைக்குரியது வெற்றியைப் போற்றுவதை விட முயற்சியைப் போற்றுவதே சிறந்தது. கருத்துக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 6. மிகவும் அருமை முரளி. மதிப்பெண் வேட்டையில் மறந்து போவது அறிவு! எனவேதான் சாதாரண மதிப்பெண் எடுப்பவர்கள் பின்னால் உலகைக் கலக்குவதும், முதல்மதிப்பெண் எடுப்பவர்கள் “சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டு தெருவார்க்கும் பயனற்று” தனக்குத் தானே முடங்கிப் போவதும் நடக்கிறது. இதுபற்றிய எனது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” என்னும் கட்டுரைக் கருவும் தங்கள் சிந்தனையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பதிவைப் படித்திருக்கிறேன். மிக சிறப்பான பதிவு அது. நன்றி ஐயா!

   நீக்கு
 7. முரளி,

  இந்த கொடுமைக்குலாம் அடிப்படைக்காரணமே பெற்றோர்கள் தான்,ஆனால் அவங்க குறை சொல்வதெல்லாம் நம்ம கல்வி முறையை.

  நான் பிற மாநில கல்வி நிலவரங்களை எல்லாம் கொஞ்சம் பார்த்திருக்கிறேன், அதை ஒப்பிட தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை என்பேன்.

  உ.பி,பிகார், எம்.பி மாநிலங்களில் எல்லாம் காசு கொடுத்தாலும் படிக்க "கல்வி நிலையங்கள்" பரவலாக இல்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி இரண்டுக்குமே தான்.

  # நம்ம மக்கள் இருக்க கொஞ்சம் அரசு பொறியியல்& மருத்துவ கல்வி இடங்களை எப்படியாவது கைப்பற்றிடனும்னே ஆரம்பத்துல இருந்தே திட்டம் போட ஆரம்பிக்குறாங்க. ஒன்று இரண்டு மார்க்கில் இடம் போச்சுனாலும் பையன் 90%க்கு மேல வாங்கி இருக்கானேனு சந்தோசமே படமா குடி மூழ்கிட்டதாக நினைக்கிறாங்க.

  ஆனால் பிகார்ல இருந்து +2 ல்ல 60% எடுத்தவன் தமிழ் நாட்டில வந்து சந்தோசமா பொறியியல் படிக்கிறான்.. நல்ல வேலைக்கும் தான் போறான்.

  மேலும் மற்ற மாநில மக்கள் +2 ல நிறைய மதிப்பெண் வாங்க கஷ்டப்படுறதுக்கு பதிலா, ஐ.ஐடி ஐ.ஐ.எம் போன்ற நுழைவு தேர்வுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் குடுக்கிறாங்க, +2 ஜஸ்ட் 60% எடுத்து பாஸ் செய்தால் போதும் என நினைக்கிறாங்க.

  நுழைவுத்தேர்வுல இடம் கிடைக்கலனா இருக்கவே இருக்கு தமிழ்நாட்டு பொறியல் கல்லூரிகள் காசுக்கொடுத்து படிச்சிப்போம்னு ஈசியாக எடுத்துக்கிறாங்க :-))

  தமிழ்நாட்டு மக்கள் தான் எப்படி எளிதாக வாழ்வை அனுகுவதுனு புரியாமல் காம்ப்ளிகேட் ஆக்கிடுறாங்க அவ்வ்.

  நம்ம ஆட்கள் எல்கேஜில இருந்து பிரபல பள்ளியில் படிக்க செலவழிக்கிற காசை சேர்த்து வச்சு ,பின்னாளில் உயர் படிப்புக்கு செலவழிக்கலாம். இதனால் மனச்சுமையாவது குறையும்.

  பதிலளிநீக்கு
 8. முரளி,

  இதை விட இன்னொரு மட்டமான குணமும் தமிழக பெற்றோரிடம் நிலவுது, அரசுப்பள்ளி என்றாலே வறுமையானவர்கள் வீட்டுக்கு குழந்தைகள் படிக்கும் இடம், அரசு பள்ளியில் படிப்பது உயிருக்கு ஆபத்தான ஒன்று, பள்ளிகள் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடுமாம் அவ்வ்!

  இந்தக்கொடுமைய எங்கே போய் சொல்வது? அவ்வ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுமைதான். சென்னையில் பல நர்சரி பள்ளிகள் தகுதியற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் நடத்தப் படுகின்றன. இந்தப் பள்ளிகளை எளிதில் மூடிவிட முடிவதில்லை. பல்வேறு சிக்கல்கள்,நடைமுறைகள் முன் நிற்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் மக்களோ அந்த டஞ்சன் பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். அந்த குழந்தைகள் ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பினனர் மாநகராட்சி பள்ளிகளுக்கே வந்து சேர்வதும் நடந்து கொண்டிருகிறது.

   நீக்கு
 9. மருத்துவராகவும் கலெக்டராகவும் ஆகித் தொண்டு செய்யாவிட்டால் போகிறது. இம்மாதிரிக் கனவுகள் எத்தனை பேருக்கு நனவாகிறது என்பது தெரியவில்லை.

  நம் நாட்டில் இதற்கெல்லாம் யாரும் புள்ளிவிவரங்கள் திரட்டுவதில்லை.

  மிக அருமையான பதிவு முரளி.

  பதிலளிநீக்கு
 10. கல்வித் துறை சம்பத்தப்பட்டிருப்பதாலும்
  மனம் முழுவதும் சமூக அக்கறை நிறைந்திருப்பதால்தான்
  உங்களால் இத்தனைச் சரியான விரிவான ஆழமான
  அலசல் பதிவைத் தர முடிந்திருக்கிறது

  மதிப்பெண்ணை வைத்துதான் அனைத்தும் என
  இருக்கிற சூழலில் பெற்றோரின் குணம்
  இப்படி இருக்கத்தானே சாத்தியம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல கோணங்களில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இதில் உள்ளன. நன்றி ஐயா!

   நீக்கு
 11. வணக்கம்
  முரளி(அண்ணா)
  கல்வித் துறையில் அடித்தட்டு மக்களையும் மேல்த்தட்டு மக்களையும் வைத்து அதிலும் அடித்தட்டு வாழ்க்கை வாழும் பிள்ளைகள். தங்கள் மூளையை சலவைசெய்ய வேண்டி கட்டாய நிலையில் உள்ளார்கள். என்பதையும் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்.
  ---------------------------------------------------------------------------------------------------------
  எதிர் காலத்தில் என்னவாக ஆவீர்கள் என்று கேட்டால் மருத்துவராகி சேவை செய்வேன். கலக்டராகி தொண்டுசெய்வேன் என்று ஒவ்வொரு வருடமும் யாராவது சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை.
  -----------------------------------------------------------------------------------------------------------
  இன்றைய கல்வி சொல்லளவுதான் உள்ளது செயலளவு இல்லை என்பதையும் மிக அருமையாக தேடல் வினாவுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  முரளி(அண்ணா)
  த.ம.9வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. சிரமம்... சிரமம்... இன்றைக்கு எல்லாமே சிரமம்...!

  பதிலளிநீக்கு
 14. எல்லோரும் இந்த மாதிரி தங்கள் குழந்தைகளை தயார் செய்வதால், எங்கே தான் செய்யாவிட்டால் தன் குழந்தை மார்க் எடுக்க முடியாமல் போய் விடுமோ.. எனவே நாமும் அதே போல செய்வோம் என்பது தான் பெரும்பாலான பெற்றோர்களை இது போல செய்ய வைக்கிறது. நல்ல கல்லூரியில் சீட் கிடைக்க 195% கட் ஆப் தேவை என்றபோது என்ன தான் செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 195 % ஆயிரக்கணக்கானவர்கள் வாங்குகிறார்கள். அப்புறம் அதற்கு மதிப்பு எப்படிக் கிடைக்கும்.

   நீக்கு
 15. முடிவில் கொசுரும் தேறாது .சரியான கணிப்பீடு

  பதிலளிநீக்கு
 16. சகோதரருக்கு வணக்கம்
  மாணவர்களை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாகப் பார்க்கும் கல்வி முறையை என்னவென்று சொல்வது. கல்வி அவனது அறிவு வளர்க்காது குருட்டு மனப்பாடம் செய்யும் நிலையைத் தான் ஊக்கவிக்கிறது. பெற்றோர்கள் தங்களின் மனநிலையை உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியமானது. பொதுவாக ஊடகங்கள் அனைத்துமே மக்களின் ஈர்ப்பு எதில் அதிகமாக உள்ளதோ அதை முன்னிலை படுத்தி பணம் பார்க்கும் தொழிலைத் தான் செய்து வருகின்றன. வகுப்பறை செயல்பாடுகள் நன்றாக அமைந்து விட்டால் சிறப்பு வகுப்புகள் என்று எதுவும் தேவையில்லை எனும் தங்கள் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்தித்து விடையை கண்டுபிடித்தால் நேரம் செலவாகி விடும் என்று மனப்பாடம் செய்து விடுகிறார்கள்.

   நீக்கு
 17. இந்த கொடுமைக்கு முக்கிய அடிப்படைக் காரணம் பெற்றோர்கள் தான், ஆனால் அவங்க குறை சொல்வதெல்லாம் நம்ம கல்வி முறையை. அதுமட்டுமல்ல அமெரிக்காவில் கல்வி முறை சிறந்ததாக இருந்தாலும் இங்கு வந்த இந்திய பெற்றோர்களும் இந்திய முறையை இங்கு கடைபிடித்து தன் பிள்ளைகளை கொடுமை படுத்துவதும் பரவலாக நடை பெற்று வருகின்றது என்பது உண்மையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பெண் பெற வைப்பதுதான் பெற்றோர் கடமை என்ற எண்ணமே இதற்குக் காரணம். இதற்கு பெற்றோர் முக்கியக் காரணம் என்றாலும் மேலும் பல காரணங்களும் உள்ளன

   நீக்கு
 18. வித்தியாச வித்தியாசமாக பல நல்ல பதிவுகள் உங்களால் வெளியிடப்படுகின்றன அவை அனைத்து மிக அருமை பாராட்டுக்கள் & பாராட்டுகள் முரளி..... உங்கள் பதிவில் உள்ள ஒரே குறை நீங்கள் இடும் படங்களுக்கு பிங்க் கலர் பார்டர் தருவது மட்டுமே
  அதை தவிர எல்லாம் மிக அருமை...

  பதிலளிநீக்கு
 19. பத்தாப்பு = ஊசியின் காதுல ஒட்டகத்த நுழைக்கிற முயற்சி...
  பண்ணண்டாப்பு = அந்த ஒட்டகத்தின் காதுல ஒலகத்தையே நுழைக்கிற முயற்சி...
  ஊசியும் ஒடஞ்சு போச்சு... ஒட்டகமும் செத்துப் போச்சு...

  பதிலளிநீக்கு
 20. கல்வி மட்டுமே வாழ்வாகாது
  பின்னர் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பது போல் ஆகிவிடும்
  கல்வியை காட்டி வெளி உலகம் காணாது, ரசிக்க விடாது விட்டால்.
  அனுபவ அறிவும் வராது வரும் பிரச்சனைகள் சமாளிக்கவும் முடியாமல் பின்னர் கஷ்டம் தான். இளம் வயது ஏக்கங்கள் பின்னர் உள்ளத்தில் கிடந்து வக்கிர புத்தியையும் ஏற்படுத்தலாம் அல்லவா.

  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள். நாம் நினைத்துப் பார்ப்பதற்கு சந்தோஷமான சிறு தருணங்கள் வேண்டாமா? நன்றி

   நீக்கு
 21. நன்றாகச் சொன்னீகள். ஒரு தினசரி ஆரம்பித்தால் மற்ற தினசரிகளும் இதே நடைமுறையைத் தொடர்கின்றன. எங்கள் தினசரி நடத்திய நிகழ்ச்சிக்குத்தான் அதிகக் கூட்டம் என்று பெருமை அடித்துக் கொள்ள படம் போட்டுப் படம் காட்டுகிறார்கள். மாணவர்கள் பாவம்தான். ஆனால் வேறு வழியில்லை, கூட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நின்று யோசித்தால் ஓரம் கட்டப் பட்டு விடுவோம் என்ற பயத்தில்.


  பதிலளிநீக்கு
 22. மருத்துவராகி, கலெக்டராகி எல்லாம் இப்போது இல்லை! நேரே பொறியியல் படிப்பு. எடுத்தவுடனே 16 முதல் 20 ஆயிரங்களில் சம்பளம், பின் ஆன்சைட், அப்புறம் கார், சொந்த வீடு(கள்), கல்யாணம்... அப்புறம் குழந்தை... அப்புறம்? அவர்களும் இதே மாதிரி ஒரு குருட்டு ரேஸில்...

  பதிலளிநீக்கு
 23. படிப்பு படிப்பு என்று , சின்ன வயது சந்தோஷங்கள் பலவற்றை அனுபவிக்க விடுவதில்லை. மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் படுத்தும்பாட்டை நன்றாகச் சொன்னீர்கள்.

  காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
  கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
  மாலை முழுதும் விளையாட்டு - என்று
  வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

  என்ற பாரதி, இப்போது இருந்தால் என்ன பாடுவார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த வயதுக்கே உரித்தான சிறு வயது சந்தோஷங்களை இழந்து விடுவது எவ்வளவு கொடுமை!

   நீக்கு
 24. வழக்கம் போலவே பிரமாதமான பதிவு. நானும் ஒரு காலத்தில் இதற்குப் போய் வந்தவன்தான். இன்னுமா ஊர் இவங்கள நம்புது ?

  பதிலளிநீக்கு
 25. இது போலத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். மணிமகுட பதிவு.

  பதிலளிநீக்கு
 26. ஒரு நல்ல பார்வையை கொண்ட பதிவு அய்யா
  வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 27. கல்வித் துறை மற்றும் இன்றைய மாணவர்கள் பற்றி நல்ல அலசல்......

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. //எந்த இலவசத்தையும் விட்டுவிடக் கூடாது அது அறிவுரையாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தர சிறிதும் தயங்காதவர்கள் // :)
  //இதுவரை யாரவது சேவை செய்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தேன். இது வரை கிடைக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்// ஆமாம் சார் ! :)
  நான் கூட பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு படித்த காலக் கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்வில் பங்கேற்றிருக்கிறேன் !:) மதிப்பெண் நோக்கி விரட்டப்படும் குதிரைகளாகத் தான் மாணவர்களை பள்ளிகளும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் நினைக்கிறார்கள் ! மாணவர்களும் கூட மதிப்பெண்ணே தன் வாழ்வை தீரமாணிக்கும் காரணி என்று திட்டவட்டமாக நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்,மதிப்பெண் குறைவு ,தேர்வில் தோல்வி என்ற காரணங்களுக்காக உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவு மாறிப்போயிருக்கிறார்கள் என் மனம் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவி வரிகளை நினைவு கொள்கிறது இப்போது.... புத்தகங்களை நோக்கி கூறுகிறார் கவிஞர் "புத்தகங்களே !குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்"

  பதிலளிநீக்கு
 29. மதிப்பெண்ணை வைத்துத்தான் வாழ்க்கை என்பது முட்டாள்தனமானது.

  பதிலளிநீக்கு
 30. (பையனோ பெற்றோர் இல்லாததால் சந்தோஷமா கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பான்)//

  கரெக்டா சொல்லிட்டீங்க. முதல் மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்க்கையில் சாதித்தது என்ன என்பதையும் கண்டுப்பிடித்து சொன்னால் நல்லது.

  பதிலளிநீக்கு
 31. மதிப்பெண்களால் மாணவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.படித்த பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் மனதை புரிந்து கொள்ளாமல் விடுதியில் சேர்த்து மனித எந்திரகளை உருவாக்குகின்றனர்.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. அருமையான பதிவு.. நான் 12-வகுப்பு படிக்கும் போதிலிருந்தே இந்த
  கூத்து நடந்து வருகிறது.. நானும் என்னுடைய பதிவில் இந்த கொடுமைகளை பற்றி எழுதியுள்ளேன்...
  http://pazhaiyapaper.blogspot.in/2013/05/blog-post.html

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895