என்னை கவனிப்பவர்கள்

புதன், 20 ஜூன், 2012

குதிரைகள் சொல்லும் நான்காம் வேதம்.


  பாலகுமாரனின் இரும்புக் குதிரையில் இடம்பெற்றுள்ள கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ள வாசகர்களுக்கு நன்றி.பலமுறை படித்திருந்தாலும் மீண்டும்  மீண்டும் படிக்கத் தூண்டும் அவரது இந்த நாவலின் இடம் பெற்றுள்ள இன்னொரு செய்தி.

பழைய வாகன உதிரி பொருட்களை வாங்கி விற்கும் தொழில் முதன் முதலில் காயல் பட்டினத்தில்தான் நடை பெற்றது.பின்னர் அது பல இடங்களுக்கும் பரவியது. அதனால்தான் பழைய பொருள் விற்கும் வாங்கும் கடைகளை காயலான் கடை என்று அழைக்கிறார்கள்.

      குதிரைகள் இந்த அளவுக்கு ஒரு கவிஞனை பாதித்தது ஆச்சர்யம் அளிக்கிறது. கவிதைகளை படிக்கும்போது அந்த பாதிப்பு நமக்கும் ஏற்படுவதை தவிர்க்க இயலாது 

இதோ இன்றைய குதிரை வேதம்

நான்காம் வேதம் 

              குதிரைகள் தூங்குவதில்லை 
              ஏனைய உயிர்கள் போலே 
              நிலம்பரவி கால்கள் நீட்டி 
              கன்னத்துப் பக்கம் அழுத்த
              குதிரைகள் தூங்குவதில்லை 
              ஏனைய உயிர்கள் போலே
              நிற்கையில் கண்கள் மூடி 
              களைப்பினப் போக்கும் குதிரை
              தொட்டதும் சிலிர்த்துக் கொள்ளும்
              தொடுதலைப் புரிந்துகொள்ளும்
              தூங்குதல் பெரிய பாவம்
              தூங்கவா பிறந்தீர் இங்கு?
              வாழ்வதோ  சிறிது நாட்கள்
              அதில் சாவினை நிகர்த்த தூக்கம் 
              புரிபவர் பெரியோர் அல்லர் 
              வாழ்பவர் தூங்கமாட்டார்.
              குதிரைகள் கண்கள் மூடி 
              குறிவிரைத்து நிற்கும் காட்சி
              யோகத்தின் உச்சக் கட்டம்
              நெற்றிக்குள்  சந்திர பிம்பம் -இது
              குதிரைகள் எனக்குச் சொன்ன 
              வேதத்தின் நான்காம் பாடம்.
************************************************************************

இதைப்  படித்துவிட்டீர்களா

தங்கள்  மேலான கருத்துக்களை தெரிவிப்பீர்!

ஞாயிறு, 17 ஜூன், 2012

புஷ்பா மாமியின் புலம்பல்கள்

  எங்கள் தெருவில் புஷ்பா மாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.புஷ்பா மாமிக்கும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைக் கண்டாலே அஞ்சி ஓடுவார்கள்.காரணம் அவரது புலம்பல்கள். மாட்டிகொண்டால் குறைந்தது அரை மணி நேரத்திற்கு தப்பிக்க முடியாது. மாமியின் புலம்பல்களில் இடம்பெறாத சப்ஜெக்டே இல்லை.குடும்ப பிரச்சனை, (தன்னுடையது மட்டுமல்ல பிறருடையதும்) சமூகப் பிரச்சனை,சினிமா பொருளாதாரம், இலக்கியம்,தொலைகாட்சி, என்றுபட்டியல் நீளமானது.அந்தப் புலம்பல்கள் சில சமயங்களில் நியாயமாக இருப்பதாக தோன்றும். கௌரவம் கருதி நாம் வெளிப்படையாக புலம்புவதில்லை. மாமியின் புலம்பல்களை பெரும்பாலானவர்களின் மன வெளிப்பாடாகக் கருதலாம். 

    நான் கேட்ட புஷ்பா மாமியின் புலம்பல்களை நீங்களும் கேட்டு இன்புற/துன்புற ஒரு சதித் திட்டம் தீட்டி அவ்வப்போது புலம்பல் பதிவுகளை வெளியிட இருக்கிறேன்.

இன்று ஆரம்பித்து விடுகிறேன். 

ஞாயிற்றுக் கிழமை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். 
  "முரளி!முரளி!" என்று கூப்பிட்டுக் கொண்டே வேகமாக புஷ்பா மாமி நுழைந்தார்.
அவர் கையில்  மின் கட்டண அட்டை
  "கரண்ட் பில் 3000 ரூபாய்க்கு மேல வந்திருக்கு சரியா பாருடா?. இதுக்கு முன்னாடி இவ்வளோ வந்ததில்லை. அநியாயமா இருக்கு.தப்பா  போட்டிருக்கான்னு நினைக்கிறேன்."

  "தப்பா எல்லாம் இருக்காது மாமி.அவன் ரெடியா டேபிள் வச்சிருக்கான்.அதை வச்சித்தான் குறிச்சிருப்பான்" என்றேன் நான்

  "எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு.உங்களுக்கு எவ்வளோ வந்திருக்கு."

   "எங்களுக்கு 3105 ரூபாய் வந்திருக்கு."
மாமியின் முகத்தில் சிறிது மகிழ்ச்சி,"அப்படியா அவ்வளவா வந்திருக்கு?. எதுக்கும் நெட்ல சரிபார்த்து சொல்லேன். எங்காத்தில நான்,மாமா ரெண்டு பேர்தான இருக்கோம்?"

 "சரி மாமி கொஞ்சம் இருங்க பாத்து சொல்றேன்". 
  மாமியின் மின் அட்டையில் 710 யூனிட் பயன்படுத்தி இருந்ததாக குறிப்பிடப் பட்டிருந்தது..
   நான் மின் வாரியத்தின் இணைய தளத்தில் நுழைந்து பயன்பாட்டு யூனிட்டை உள்ளீடு செய்து கணக்கீடு சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன்.   எங்கள் வீட்டின் கட்டணத்தையும் சரிபார்க்க எல்லாம் மிகச் சரியாகவே இருந்தது.
  "மாமி! எல்லாம் சரியாத்தான் இருக்கு. 500 யூனிட்டுக்குள்ள யூஸ் பண்ணாதத்தான் பில் கம்மியா வரும்."
  "எப்பவும் கம்மியாத்தான் ஆகும். லீவுக்கு என் பையனும் பொண்ணும் ஊர்ல இருந்து வந்திருந்தாங்களே.அதனால அதிகமாயிருக்கும்னு நினக்கிறேன். அதுவும் என்மருக வந்தப்ப 24 மணி நேரமும் ஏசி யும் டிவியும் ஓடிட்டிருந்தது. அப்ப பில் கரெக்டுன்னு சொல்லறியா. தப்பா இருந்தா ஈபி காரனை ஒரு புடி புடிக்கலாம்ம்னு நினைச்சேன். கொஞ்சம் தனித் தனியா கணக்கு போட்டு சொல்லேன்."


"மாமி! அப்புறமா எழுதி தரட்டுமா?"

"அப்புறம் உன்ன புடிக்க முடியாதேடா!"
வேறு வழியின்றி ஒரு பேப்பரில்


மொத்தம் 710 Unit
500 யூனிட்டுக்கு மேல போனா முதல்
                200 unit  200 x 3.00  =   600.00
             201-500     300 x  4.00 =   1200.00
             501-710     210 x  5.75 =   1207.50
          Fixed Charges                   40.00
      Total                              3047.50
                   Rounded Amount      3048 .00


என்று எழுதி கொடுத்தேன்.

  "ரொம்ப தேங்க்ஸ்டா. கரண்டே பாதி நேரம்தான் இருக்கு.முழு நேரமும் இருந்தா இன்னும் எவ்வளோ கட்டனமோ தெரியல.மாமா பென்ஷன்ல பாதி கரண்ட் பில்லே ஆகிடும் போல இருக்கே" என்று புலம்பிக்கொண்டே போனார் புஷ்பா மாமி. மாமியின் புலம்பல் எத்தனையோ பேரின் எதிரொலியாகத் தெரிந்தது.


  நீங்களும் உங்கள் மின்கட்டணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து அதில் வரும் பெட்டியில் பயன்படுத்திய யூனிட்டுகளின் எண்ணிக்கையை உள்ளீடு செய்தால் செலுத்த வேண்டிய கட்டண விவரம் கிடைக்கும்
உங்கள் மின்கட்டணம் அறிந்துகொள்ள/ சரிபார்க்க


***************

வெள்ளி, 15 ஜூன், 2012

பால குமாரன் கவிதைகள் -பகுதி 2

  
  பாலகுமாரனின் கவிதைகள் பற்றிய பதிவைப் போட்டதும் பதிவுலகம் முழுவதும் பாலகுமாரனின் தீவிரமான ரசிகர்கள் பரவிக்கிடக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் அணு அணு வாக பால குமாரனின் எழுத்தை ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் இட்ட கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.  நான் பள்ளிப் பருவத்தில் முதல் முறையாக இந்த நாவலைப் படித்தேன். நாவலைவிட இந்தக் கவிதைகளே என்னை மிகவும் ஈர்த்தது. குதிரைக் கவிதைகள் திடீரென நினைவுக்கு வர நூலகத்தில் இந்த நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

    இந்த நாவலில் பல்வேறு மோட்டார் துறை  தகவல்கள்   இயல்பாக திணிக்கப்படாமல்  விரவிக் கிடப்பது இந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும்.

 அவற்றில் ஒன்று லாரி ஓட்டுனர் ஆக்சிடென்ட் செய்துவிட்டு சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை எழுந்தால் லாரி கிளீனர் வண்டியை தான் ஒட்டியபோதுதான் விபத்து நடந்தது என்று சொல்லி ஒப்புக்கொண்டு சிறை  செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி.அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறதாம்.பின்னாளில் கிளீனர்கள் ஒட்டுனராக மாற இது தகுதியாகக் கருதப்படுகிறது. இதை கிளீனர்கள் தவறாது கடை பிடித்து வருகிறார்கள். ஒட்டுனர்களை காட்டிக் கொடுப்பதில்லை. இது போலீசுக்கும் தெரியும்.
 
 ****************** 
இரண்டாம்  வேதம் 

                      குளம்படி  ஓசைக் கவிதை 
                      குதிரையின் கனைப்பு கீதம்
                      வீசிடும்  வாலே கொடிகள்
                      பொங்கிடும் நுரையே கடல்கள் 
                      பிடரியின் வரைவே வயல்கள் 
                      உருண்டிடும் விழியே சக்தி 
                      குதிரையின்  உடம்பே பூமி 
                      சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு-இது 
                      குதிரைகள் எனக்கு சொன்ன 
                      வேதத்தின் இரண்டாம் பாடம்


மூன்றாம்  வேதம் 

                      குதிரைகள்  பயணம் செய்யா 
                      கூட்டமாய் பறவை போலே
                      இலக்குகள் குதிரைகளிலில்லை
                      முன்பின்னாய் அசைதல் தவிர
                      குதிரையை மடக்கிக் கேளு
                      போவது எங்கே என்று
                      புறம் திரும்பி முதுகு காட்டும்
                      கேள்வியே அபத்தம் என்று 
                      இலக்கிலா மனிதர் பெரியோர் 
                      உள்ளோர்  அடைய மாட்டார் -இது 
                      குதிரைகள் எனக்குச் சொன்ன
                      வேதத்தின் மூன்றாம் பாடம்.

                      (குதிரைக் கவிதைகள் தொடரும்)

திங்கள், 11 ஜூன், 2012

பாலகுமாரனின் கவிதைகள்!

   எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்கள் எல்லோரையும் போலவே எனக்கும்  பிடிக்கும். அவருடைய எழுத்து நடை காந்தம்போல ஈர்க்கும் தன்மை படைத்தது. அவரது கதாபாத்திரங்களின் உரையாடல்கள்  நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின்-நாம் அன்றாடம் பார்ப்பவர்களிடம் பேசுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும். குடும்ப உறவுகளுக்கிடையில் ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்தியிருப்பார். அவரது புகழ்பெற்ற நாவலான இரும்புக் குதிரைகளை பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன். தற்போது மீண்டும் அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   மிக அற்புதமான நாவல் அது. லாரி தொழிலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. அத் தொழிலின் சிறு சிறு நுணுக்கங்கள் நாவலெங்கும் விரவிக் கிடக்கும், ஆட்டோமொபைல் பொறியாளருக்குக் கூட தெரியாத பல தொழில் நுட்ப விஷயங்களை பாலகுமாரன் கூறியிருப்பது ஆச்சர்யத்தை  ஏற்படுத்தும் 
   இக்கதையின் முக்கிய பாத்திரமான விஸ்வநாதன் இலக்கியம்,கவிதைகள் ,சினிமா என்று ஆர்வம உடையவன். இயக்குனராகவேண்டும் என்ற எண்ணம உடையவன்.ஆனாலும் தனக்கு விருப்பமில்லாதா மோட்டார் துறையில் அலுவலராகப் பணி செய்து கொண்டிருப்பது வாழ்க்கைத் தேவைக்காக. சராசரி மனிதனாய் வாழ முடியாமல் அவன் படும் அவஸ்தைகளை நாமே படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பார் பாலகுமாரன்.  

    அவனுக்கு  குதிரைகள் மிகவும் பிடிக்கும்.அவனை பிரமிக்க வைத்த விலங்கு குதிரை.அவனது கனவுகளில் குதிரைகள் மட்டுமே வரும்  குதிரை அவனுக்கு ஆசான். அது வாழ்க்கை தத்துவங்களை அவனுக்கு உரைக்கும். குதிரைகள் சொல்வது அவனுக்கு வேதம்.அதை கவிதைகளாக வடித்தெடுப்பான்.
     விஸ்வநாதன் வாயிலாக அருமையான குதிரைக் கவிதைகளை படைத்திருப்பார் பாலகுமாரன். அவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதை நிருபிக்கின்றன அந்தக் கவிதைகள். அந்தக் கவிதைகளுக்கு தலைப்பு இரும்புக் குதிரைகள் .இந்நாவலில் உள்ள பல குதிரைக் கவிதைகளை   உங்களோடு பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன். 
இன்று முதல் கவிதை

                குதிரைகள் கடவுள் ஜாதி -அதைக் 
                கும்பிடுதல் மனித நீதி
                புணர்ந்தபின்  குதிரைகள் 
                ஒருநாளும் தூங்கியதில்லை 
                பிடரியைச்  சிலிர்க்க ஓடும்
                பின்னங்கால்  வயிற்றில் மோத
                மனிதரில் உயர்ந்தவர்கள்
                மறுபடி குதிரையாவார் 
                மறுபடி குதிரையாகி
                மனிதரைக் காண வருவார் 
                குதிரைகள் பசுக்கள் போல 
                வாய்விட்டுக் கதறுவதில்லை 
                வலியில்லை என்பதல்ல 
                வலிமையே  குதிரை ரூபம்
                தொட்டதும் சிலிர்க்கும் குதிரை 
                சவுக்குக்குப் பணிந்து போகும் 
                குதிரைகள் எனக்குச் சொன்ன 
                வேதத்தின் முதலாம் பாடம் 

இரும்புக்  குதிரைகள் சொல்லும் அடுத்த வேதம் என்ன?
இனிவரும் பதிவுகளில்

   ***************************************************************************************
எனது ஒரு வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு ஆதரவு வழங்கிய பதிவர்களுக்கு நன்றி.

திங்கள், 4 ஜூன், 2012

நம் வாழ்நாளில் காண முடியாத அரிய நிகழ்வைக் காண ..


    சூரிய கிரகணம் நமக்குத் தெரியும். நிலா பூமிக்கும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம். இந்நிகழ்ச்சிஅடிக்கடி நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். சந்திர கிரகணமும் நாம் அறிந்ததே. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இன்னொரு கோளான வெள்ளி சூரியனின் பரப்பை மறைக்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிக் கடவு.(Venus Transit) என்று பெயர்.இது மிகவும் அரிய நிகழ்வாகும். இந்நிகழ்வை  ஜூன்6, 2012 அன்று காலையில் சூரியன் உதித்ததில்   இருந்தே இதனைக் காணலாம். 
    இதுபோல் அடுத்த நிகழ்வு 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2117 டிசம்பரில்தான் நடக்கும். ஒரு நூற்றாண்டில் இரண்டு முறை மட்டுமே வெள்ளிக் கடவு நடக்கும்.
    சூரிய கிரகணம் போல் இது சூரியனை முழுவதுமாக மறைக்காது. சூரியனின் பரப்பை சிறு கருப்புப் பந்து கடப்பது போல் சூரியனை இடமிருந்து வலமாகக் கடக்கும் இதனை வெறும் கண்களால் காண இயலாது. இந்த நிகழ்வின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று வடிகட்டி(filter) பொருத்தப்பட்ட கண்ணாடிகளையே  பயன்படுத்தவேண்டும்.புகை படியவைக்கப்பட்ட கண்ணாடிகள் வழியாகவோ கூலிங் க்ளாஸ் வழியாகவோ பார்க்கக் கூடாது.
   இதைப் பார்க்க எளிய வழி சிறிய முகம்பார்க்கும்  கண்ணாடி  சூரிய ஒளியை அறைக்குள் ஊசி முனை ஒரு அட்டையில் அளவுள்ள  துளையின் வழியே செலுத்தி  பிரதிபலித்து  அந்த பிம்பம் சுவற்றில் விழும்படி செய்ய வேண்டும். அந்த பிம்பம் வட்ட வடிவமாக இருக்கும். அதில் வெள்ளி கோள் சிறு புள்ளியாக  கடந்து செல்வதை பார்க்கமுடியும்.
     சுவற்றில் விழும் பிம்பத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கண்ணாடியிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது.
    
 படத்தில்  உள்ளதுபோல் ஒரு பந்தில் சிறுமுகம் பார்க்கும்  கண்ணாடித் துண்டை  ஒட்டி சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யலாம். சூரிய ஒளியின் திசையை எளிதில் மாற்றி அமைத்து சுவற்றில் பிம்பம் விழச் செய்யவே பந்தின்மீது கண்ணாடி ஒட்டப்பட்டு ஒரு டம்பளர்  மேல் வைக்கப்பட்டுள்ளது.



 மேற்கண்ட படத்தில்உள்ளதுபோலவும்  பார்க்கலாம்.

(தினந்தோறும் கிழக்கு வானில் நட்சத்திரம் ஒன்று  ஜொலிப்பது தெரியும்.உண்மையில்  அது நட்சத்திரம் அல்ல. வெள்ளிக் கோளாகும். மாலையில் இதனை மேற்கிலும் காணலாம்.)

   உங்கள் வீட்டில் இருந்தே இந்த  நிகழ்ச்சியை June 6ஆம்தேதி காலை 5.50 முதல் 10.30 வரை காணலாம்.
   உங்கள் பிள்ளைகள் ,தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்புடன் இந்நிகழ்வை காட்டி மகிழுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர் சிரறுமியரில் ஒரு கலீலியோ , கெப்ளரோ மறைந்திருக்கலாம்.
சென்னை  கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கிலும் இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
**********************************************************************************

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012-10th Result 2012


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2012 10th Result

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(04.06.2012) வெளியாகின்றன. சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத் தேர்வை எழுதியுள்ளனர்.
பிற்பகல்  1.30 மணிக்கு தேர்வுமுடிவுகள் வெளியாகின்றன.பாதாம் வகுப்பிற்கும் புகைப்படம் உள்ள மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். 
21  ந்தேதி அந்தந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முடிவு வெளியாகும் இணைய தளங்கள் 
http://tnresults.nic.in/
http://www.dinamalar.com/
http://tnresults.puthiyathalaimurai.tv/ 
http://dinakaran.com/ 
http://result.dinakaran.com  
http://www.tamilmurasu.org/10/
 தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள உங்கள்  நண்பர்களுக்கும் 
உறவினர்களுக்கும் உதவுங்கள். 
தேர்வில் வெற்றிபெற  அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.