என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 20 ஜூன், 2016

முத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி?

விளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை  பார்த்துவிட்டு பார்க்கலாம் என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நினைத்த படம் முத்தின கத்திரிக்கா.. இது வரை சுந்தர் சி. நடித்த படமோ இயக்கிய படமோ அரங்கில் சென்று பார்த்தது இல்லை. நங்கநல்லூர் வெற்றிவேல்  தியேட்டரில் படம் வெளியிப்பட்டிருந்தது . . விடுமுறை நாள் என்பதால் முந்தைய  தினமே புக் செய்து விடலாம் என்று பார்த்தால் புக்கிங் அனுமதிக்கவில்லை. அன்றன்றுதான் முன்பதிவு செய்ய வேண்டும் போல இருக்கிறது. பால்கனி டிக்கட் மட்டுமே ஆன் லைனில் . அதுவும் நிறைய சீட்டுகள் காலியாகவே இருந்தன. பெரிய அளவில் கூட்டமில்லை  என்றாலும் அரங்கில் பாதி நிரம்பி இருக்கலாம்.

      நான் படிக்கும்  காலத்தில் வெற்றிவேல்  தியேட்டர்  ரங்கா என்ற பெயரில் இருந்தது. மடிபாக்கத்தில் இருந்து நங்கநல்லூரில் உள்ள பள்ளிக்கு செல்லும்போது (நடந்து ) வழியில் சினிமா போஸ்டர்களை பார்த்து ரசித்துக் கொண்டு செல்வதுண்டு.வெள்ளிக் கிழமை அன்று படம் மாற்றுவார்கள் என்ன படம் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.பெரும்பாலும் பழைய படங்கள் அல்லது வெளியாகி பல நாட்களான படங்களே வரும். டிக்கட் விலை இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்.. எப்போதாவதுதான் படம் பார்க்க அனுமதி கிடைக்கும். எந்தப் படமாக இருந்தாலும் கூட்டம் இருக்கும். அப்போதெல்லாம் புதுப் படங்களை பார்த்ததே இல்லை. இப்போதோ பார்க்க நினைப்பதற்குள் படம் தியேட்டரை விட்டு பறந்து விடுகிறது.
படத்தின் விமர்சனத்தை எதிர்பார்த்தால் என்னென்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள். கடுகளவு கதையுள்ள படத்தை வைத்து எப்படி விமர்சனம் எழுத்வது ? இருந்தாலும்  கடுகை வைத்துத்தானே தாளித்து விடுகிறேன்.
இந்தப் படமும் ஏதோ ஒரு மலையாளப் படத்தின் ரீ மேக்காம் . இது சுந்தர் .சி இயக்கிய படம் அல்ல அவர் நடித்த படம்.
முத்தின கத்திரிக்கா . முதிர் கண்ணனின் கதை . வடிவேலு ஒரு படத்தில் வயதாகியும்  கல்யாணமாகாமல் அவதிப்படுவார். யார் யாருக்கோ கல்யாணம் ஆகும். உனக்கெல்லாம்  எப்படிடா கல்யாணம் என்பார் வடிவேலு, நான் என்ன சந்தையில விலை போகாம இருக்கறதுக்கு முத்தின கத்திரிக்காயா என்பார். அதன்  நீட்சியாகத்தான் இப்படத்தை பார்க்க முடிந்தது ஏற்கனவே  ரசித்தது விட்டதால் இதில் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

  தொடக்கத்தில்  நீண்ட நேரம் பின்னணயில் முத்து பாண்டியின் (சுந்தர் சி ) இளமைப் பருவத்தை பாலசந்தர், விசு காலத்து பாணியில் விவரித்தது ஆவி வரவைத்து விட்டது. (கொட்டாவிய சொன்னேன் பாஸ்) அரசியலில் இருந்து ஒன்றும் சாதிக்காமல் வீணாய்ப் போனவர்கள் முத்துப் பாண்டியின் தந்தையும் தாத்தாவும். அதனால் முத்துப் பாண்டியும் அப்படி ஆகி விடக் கூடாதே என்று கவலைப்படுகிறார் அவரது தாய் சுமித்ரா .  ஆனாலும் எதிர்பாராவிதமாக ஒரு சூழல்அரசியலில் ஆர்வத்தை உண்டாக்கி விடுகிறது.  40 வயது கடந்தும் கல்யாணம் ஆகாமல் இருப்பது ஒரு பக்கம். ஊர் பேர் தெரியாத கட்சி ஒன்றை ஆரம்பித்து தகிடு தத்தங்கள் செய்து எம்.எல்ஏ ஆவதோடு சைடில் இன்னொரு தில்லு முல்லு செய்து  பூனம் பஜ்வாவை கை பிடிப்பது கதை. முத்தின  கத்திரிக்காயாய் சுந்தர் சி நடிப்பில் குறை இல்லை. 
   திருமணம் ஆகாத ஒருவனின் நிலையை  முழுவதுமாக எடுத்துக் கொண்டு கதையை நகர்த்தி இருக்கலாம், அதிலும்நகைச்சுவைக்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அரசியலை வைத்தே முழு  நகைச்சுவைக் கதையையும் கொண்டு சென்றிருக்கலாம். இரண்டும் இல்லாமல் ரெண்டும் கெட்டான் ஆகி விட்டது கதை. ஏன் இவ்வளவு நாள்திருமணம்  ஆகவில்லை என்பதற்கு  சரியான காரணம் இல்லை .
   அண்ணன் தம்பியாக இருந்தாலும்  இரண்டு வெவ்வேறு கட்சிகளில் உள்ள சிங்கம் புலி , விடி,வி கணேஷ் இருவரும்  படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார்கள்.இவர்கள் செய்யும் அரசியல் கல்லாட்டாகள் செம. எதிர் கட்சியாக இருந்தாலும் அவனுக்கும் கமிஷன் தர சொல்வதும் ஒருவருக்கொருவர் கவிழ்த்துக் கொள்வதும் கூட்டு சேர்வதும்  நிகழ்  அரசியலை நினைவு படுத்துகிறது. இவர்கள் இருவருக்கும் இது பெயர் சொல்லும் படம் என்பதில் ஐயமில்லை
    தேர்தல் பிரச்சாரம்,வாக்கு எண்ணிக்கை ஒரே மாதிரி காட்சிகள்  போரடிக்க வைக்கின்றன. சீக்கிரம் படம் முடிந்து விட்டாலும் நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வும் சோர்வும் ஏற்பட்டது உண்மை
   தான்விரும்பும்  பூனம்வுபஜவாவை பெண்கேட்க செல்லும் சுந்தர் சிக்கு அவர் தன்னுடம் படித்த நண்பனின் பெண் என்று தெரிய வருவது நகைச்சுவை கலாட்டா என்றாலும் , பெண்ணும் அம்மாவும்  தான் பள்ளியில் படித்தபோது சைட் அடித்த பெண்தான் என்று கதை அமைத்தது என்னாதான் ரசனையோ? பெண்ணின் தாயாக வரும் நடிகை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று நினைக்கும்போது சொன்னார்கள் ஜெமினி படத்தில் நடித்த கிரண் என்று.  என்னதான் நகைச்சுவை என்றாலும் தன் வயதை ஒத்த நண்பனின் பெண்ணை மனம் முடிக்க துடிப்பது  ரசிக்கும்படி இல்லை.. உங்க ஆளை விட்டு கொடுக்க மாட்டியே என்று அம்மாவிடம் பூனம் சொல்வதும்  கிரண் சுந்தர் சி  சம்பந்தப் பட்ட  ஒரு காட்சியும் மட்டமான  ரசனையின் வெளிப்பாடாகத்தான். உள்ளது   
 நண்பனாக  வரும் சதீஷ் அடிக்கும் சின்ன சின்ன கம்மெண்டுகள் ரசிக்க வைக்கின்றன.. இருந்தாலும் வடிவேலு விவேக் சந்தானம் போல் இன்னமும் திறமையை  மேம்படுத்துக் கொள்ளவேண்டும். சுந்தர் சி. வடிவேல் , சுந்தர் சி.-விவேக் போல  சுந்தர்ச சி யுடன்  சந்தானம் சூரி, சதீஷ் இவர்கள் பொருந்தவில்லை.
    தன் மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்வதை தானாகவே தவிர்த்திருந்தால் ஒரு பரிதாபத்தை பெற்றிருக்க முடியும். இது போன்ற படங்களில் நகைச்சுவையுடன் மெல்லிய சோகத்தை வைப்பது ரசிகர்களைக் கவரும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் திரைக் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பாடல்கள் குறிப்பிடும்படி இல்லை. ஒளிப்பதிவு டல்லாகவே இருந்தது. ஒரு வேளை தியேட்டர் அமைப்பு காரணமாக இருக்கலாம்.நகைச்சுவைப் படம் என்றாலும்  தியேட்டரில் கலகலப்பு இருந்ததாகத் தெரியவில்லை.
பூனம் பஜ்வா தனக்கு தரப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளார்  இப்படி ஒரு பாத்திரத்தை சிந்தர் சி ஏற்றது அதிசயம்தான் . காமெடி படம் என்று சொன்னாலும் தியேட்டரில் விசில் சத்தமோ கை தட்டலோ கேட்கவில்லை.
ஒரு வேளை அன்று திரைப்படம் பார்க்க வந்திருந்தோர் என்னைப் போல நரசிம்மராவ் மன்மோகன் சிங் வகையறாக்களோ என்னவோ?

*******************************************************************


திங்கள், 6 ஜூன், 2016

மைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி?


 பதிவெழுதத் தொடங்கியபோது  சில கணிதப் புதிர்களை வடிவேலு காமெடி வடிவத்தில சொல்லி இருந்தேன். அவ்வப்போது எனது பெட்டிக்கடையிலும், தனியாகவும் புதிர் கணக்குகள்கொடுத்து  வந்தேன்   அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 
  உங்க கஷ்ட காலம் இன்னைக்கு சீரியசா ஒரு கணக்கு பதிவு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  கணக்கு எனக்கு ரொம்ப புடிக்கும்,
( நல்லா கவனிக்கணும் புடிக்கும்னு சொன்னேனே தவிர கணக்குல நான் ஒண்ணும் பெரிய அப்பா டக்கர் இல்ல. லட்டு எனக்கு புடிக்கும்னு சொல்றவங்க  எல்லாம் லட்டு நல்லா செய்ய முடியுமா?) நான் ஸ்கூல்ல படிக்கும்போது

1) (+)  x (+)  = + 

2) (+)  x  (-)  = -

3) (-)  x  (+)  = -

4) (-)  x  (-)  =  +     

என்று சொல்லிக் கொடுத்து மனப்பாடம் பண்ணிக்கோ இது ரொம்ப முக்கியம்னு சொல்லிட்டாரு எங்க கணக்கு வாத்தியார்.           
              (+) x (+) = +  ஓ.கே.
(-) x (-) = +  எப்படி சரி? ஏன் (-) வரக்கூடாதுன்னு  வாத்தியார் கிட்ட கேக்க பயந்துகிட்டு பக்கத்தில இருந்த முதல் ரேங்க் பையன் கிட்ட சொன்னேன் (நான் அப்ப ரெண்டாவது ரேங்க்) அவன் போய் வாத்தியார் கிட்ட சொல்லிவிட அவர் தலையில் நறுக்குன்னு ஒர் குட்டு குட்டி, "என்ன பெரிய மேதாவின்னு நினைப்பா?,நீ யார் கிட்ட டியூஷன் படிக்கறேன்னு எனக்கு தெரியும்.(அப்ப இன்னொரு செக்ஷன் கணக்கு வாத்தியார் ட்யூஷன்ல பிரபலம். வகுப்பு மாணவர்களை விட டியூஷன்மாணவர்கள் அதிகமாம்)  சொல்றதை ஒழுங்கா படி அப்புறம் தன்னால தெரியும்னு போய்ட்டார்.  
உடனே கோவம் வந்து சிங்கத்தை  சீண்டி பாத்துட்டீங்க!  தங்கத்த உரசிப்பாத்துட்டீங்க! எறும்பு புத்தை தோண்டிப் பாத்துட்டீங்க. கரும்புத் துண்டை கசக்கி பாத்துட்டீங்க. நானும் ஒரு நாள் வாத்தியார் ஆகி  இந்த சமுதாயத்த பழிக்கு பழி வாங்காம விட மாட்டேன்னு  வசனமா பேச முடியும்.?
  அதுக்கப்புறம்   டவுட்டு கேக்கறதையே விட்டுட்டேன்.
 (-) x (-) = + எப்படின்னு  கொஞ்சம் லாஜிக் பயன்படுத்தி நிருபிக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன் 
   சரி! அது போகட்டும் என் மரமண்டைக்கு புரிஞ்சத உங்களுக்கு சொல்றேன். இதுவரை இதைப் பத்தி தெரியாத யாராது ஒருத்தருக்கு புரிஞ்சாலும் நான் பாஸ் ஆயிட்டேன்னு அர்த்தம்.
    மிகை எண்( + Numbers) குறை எண்(Negative numbers) பெருக்கல்  விதிகளுக்கு நேரடி நிரூபணம் எனக்கு தெரியாது. இருந்தாலும் சுத்தி வளைச்சி அமைப்புச் சீர் முறையில நிரூபிக்க முயற்சி செய்யலாம்.

   எதுவாக  இருந்தாலும் தெரிஞ்சதுல இருந்துதான் தெரியாததுக்கு போகணும் 
  பூச்சியத்தவிட பெரிய எண்களை மிகை எண்கள்னு(ப்ளஸ்) சொல்வாங்க, பூச்சியத்தைவிட சிறிய எண்களை குறை எண்கள்னு (மைனஸ்) சொல்வாங்க.இதெல்லாம் எல்லாருக்கு தெரியும்.
பூச்சியம்  குறை எண்ணும் இல்ல. மிகை எண்ணும் இல்ல.எண்கள்ல பெரியது எது சிறியது எதுன்னு சொல்ல முடியாது. பூச்சியத்தை மைய எண்ணாக வைத்து எண்வரிசை அமைக்கலாம். கீழ் உள்ள எண்கதிரை பாத்தா  ஈசியா புரியம்.

   <----I-------I--------I-----I------I--------I-------I---------I---------I---------I----------I--------I----------->
        -6   -5   -4   -3  -2     -1    0     +1    +2    +3    +4    +5 
0வுக்கு வலது புறம் உள்ள எண்கள் ப்ளஸ் எண்கள்.வலப்புறம் செல்லச் செல்ல எண்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும்.இதுக்கு முடிவும் இல்ல. 0வுக்கு இடப்புறம் உள்ள எண்கள் குறை எண்கள் (மைனஸ் எண்கள்) இடப்புறம் செல்லச் செல்ல எண்மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதுக்கும் முடிவு இல்ல

ஒரு எண்வரிசையில அடுத்து வர்ற எண்கள் என்னவாக இருக்கும்னு உங்களுக்கு கண்டு பிடிக்க தெரியும்.
உதாரணத்திற்கு  
-6,-4,-2............
இதனோட அடுத்தடுத்த எண்கள் 0, +2, +4,+6 ...... ன்னு டக்குன்னு சொல்லிடிவீங்க. இது ஏறு வரிசை 
இதே மாதிரி +7,+4,+1 ........ இந்த வரிசையில அடுத்த எண்கள்-2,-5, -8 ன்னு எண் கதிர்ல  மூணு மூணா இடப்புறமா தாவி எண்ணினால் கண்டுபிடிச்சிடலாம்.  

 இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா,இதை வச்சுதான மேல சொன்ன மைனஸ் ,ப்ளஸ் விதிகளை சரி பாக்கப் போறோம்

  நமக்கு ஏற்கனவே தெரிஞ்சுது இரண்டு ப்ளஸ்  நம்பரை பெருக்கினால் ப்ளஸ் நம்பர்தான் கிடைக்கும்  . நாலாம் வாய்ப்பாட்டை இப்படி எழதி இருக்கேன்.
(+4)  X  (+3)=  +12 
(+4)  X  (+2)=  +8
(+4)  X  (+1)=  +4
(+4)  X  (0)  =    0
(  )     X  ( )  =    ( )
 மேலே உள்ளது ஒரு வாய்ப்பாடு மாதிரி இருக்கா? . இதனோட  அடுத்த வரிசை நிரப்பனும் . வாய்ப்பாடு சொல்லி நிரப்பாம எண்களோட அமைப்பை, வரிசைத் தொடரப்  பாத்து நிரப்பனும்  முன்னாடி இருக்க அமைப்பை பாத்தா முதல் என் +4 எல்லா வரிசயிலும் முதல் எண்ணா  இருக்கு, அதனால அடுத்த முதல் எண்ணும்  +4 இது ஒரு மிகை எண்.
அடுத்த   நடு எண்களை பாருங்க +3,+2,+1,0 அடுத்த எண் -1ஆகத்தான் இருக்கணும்.இது ஒருகுறை எண் . 
கடைசி எண்களோட வரிசை  +12 , +8, +4, 0 இந்த வரிசைல அடுத்த எண் -4. இது ஒரு மைனஸ் எண். இப்போ காலியா இருக்க வரிசய இப்படி நிரப்பலாம்  
(+4) x (-1) = (-4) மிகை எண்ணை குறை எண்ணால் பெருக்கினா ஒரு குறை எண் கிடைக்குது, அதாவது (+) x (-) = - ரெண்டாவது விதி ஓகே. வா?

இப்ப  இதையே  எடுத்துக்கிட்டு வாய்ப்பாட்டை கொஞ்சம் மாத்தி தொடர்ந்து எழுதுவோம் 

(+4) x (-1) = (-4) 
(+3) x (-1)= (-3
(+2) x (-1) = (-2
(+1) x (-1) =( -1)
(0) x (-1= (0
(  ) X  ( ) = ( )

இதுவரை ரெண்டாவது விதியை வச்சு பெருக்கி எழுதினோம் அடுத்த வரிசைய தொடர் வரிசை  முறைப்படி எழுதலாம். முதல் எண் ஒவ்வொண்ணா குறைஞ்சிகிட்டே வருது. அதாவது +4,+3,+2,+1,0 ,....... அடுத்தது -1 எனவே அடுத்த வரிசையோட முதல் எண் -1,(மைனஸ் எண்)
எல்லா வரிசையிலும் இரண்டாவது எண் -1 எனவே இதிலும் ரெண்டாவது எண் -1(மைனஸ் எண்). 

ஒவ்வொரு வரிசையிலும் மூன்றாவது எண்ணைப் பார்த்தா ஒண்ணு அதிகமாகுது. அதாவது -4,-3,-2,-1,0, ... அடுத்த எண் +1 (ப்ளஸ் எண்). எல்லாம் ஒன்னு சேத்தா 
(-1) x (-1) = +1 குறை எண்ணை குறை என்னால் பெருக்கினால் மிகை எண் அதாவது  
 (-) x (-) = + 
மைனஸ் x  மைனஸ் = ப்ளஸ்.
நாலாவது விதி ஓ,கே வா?

மூணாவது விதிய இதில இருந்தே வரவழைக்கலாம்  
(-1) x (-1) = +1
(-1) x  (0) = 0
(  ) X  ( ) = ( )
 முதல் எண்களுக்கு, நடு எண்களுக்கு, கடைசி எண்களுக்கும் அடுத்த எண்ணை வரிசை முறையில் நிரப்பினால் 
(-1) x (1) = -1   .மூணாவது விதி (-) x (+) = -யும் ஓகே ஆயிடிச்சா?*******************************************************************************சனி, 4 ஜூன், 2016

ஆரோக்கிய ஆத்திச் சூடி   என்னை தினந்தோறும் பார்க்கும் பலருக்கு  நான் கதை கவிதை கதைகள் கட்டுரைகள்  எழுதுவேன் என்று தெரியாது. வலைப்பூவில் எழுதுகிறேன் என்பதும் தெரியாது. சிலர் மட்டும் என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துள்ளனர். வலைப்பூவை வாசிக்கவும் செய்கின்றனர். அவர்கள் சற்று அளவுக்கதிகமாகவே என்னை மதிப்பிடுவது உண்டு..(குறைவாக மதிப்பிடுவோர்தான் மெஜாரிட்டி)
   விழாக்கள், பயிற்சிகள் . கருத்தரங்குகள்,கூட்டங்களில் எப்போதாவது கவிதை என்ற பெயரில் எதையாவது எடுத்து விடுவதுண்டு. ஒரு ஆண்டில் சுதந்திர தின விழாவில் கவிதை படித்தால் அடுத்த ஆண்டும்  அதேபோல்செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். 
  அப்படி செய்யாவிட்டால்  நீங்கள் கவிதை படிப்பீர்கள்  என்று நினைத்தேன். சாதாரணமாக பேசி விட்டீர்களே என்பார் ஒருவர். அவர்களுக்கு கவிஞர் என்றால்  எப்போதும் வைரமுத்து போல் கவிதை சொல்ல வேண்டும். நாமே ஏதோ கவிதை என்று எதையாவது கிறுக்குவோம். திடீரென்று தனியாகப் பாடு என்றால் தமிழ்த்தாய் வாழ்த்தையே  சரியாகப் பாடுவோமா என்பது சந்தேகம்தான். அதற்கு ஒரு மன நிலை தேவை. நினைத்தபோது   எல்லோராலும் கவிதை எழுத முடியாது  என்பதை விளக்க முடியாது.  
   இப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஆசிரியர்களுக்கு  உடல் நலம் சுகாதாரம் உணவு முறை பற்றிய பயிற்சி நடைபெற்றது.. என்னை அறிந்த நண்பர்களும் கலந்து  கொண்டனர். நானும் எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அப்போது என் இஷ்டத்துக்கு சொன்னதுதான் இந்த உடல்நல ஆத்தி சூடிஆனால்ஒன்று. எப்படி மொக்கையாய் இருந்தாலும்  பாராட்டுவார்கள்.   

ஆரோக்கிய  ஆத்திச் சூடி 

 1. அன்றாடம் உடற்பயிற்சி செய்
 2. ஆசைப் பட்டதெல்லாம்  உண்ணாதே
 3. இலைக்கறி  அதிகம் கொள்
 4. ஈரழுந்தப் பல்தேய்
 5. உப்பு அதிகம் வேண்டாம்
 6. ஊளைச் சதை குறை
 7. எண்ணெய்ப் பண்டம் தவிர்
 8. ஏழைபோல் உண்
 9. ஐம்பது நெருங்கினால் இதயம் கவனி
 10. ஒழுக்கம் பேண்
 11. ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா
 12. ஒளவை வயதாயினும்  இளமையாய் நினை
 13. எஃகு போல் மன உறுதி கொள் 
                             ------------   டி.என்.முரளிதரன்-    ----------

இன்னமும் கொஞ்சம் எழுதியதாக நினைவு . இப்போது நினைவில்  இல்லை

***************************************************************************


வியாழன், 2 ஜூன், 2016

விகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்      விகடனில் 10 செகண்ட் கதைகள் என்ற தலைப்பில் வெளியாகின்றன. நானும் ஒரு சில கதைகளை அனுப்பினேன் பிரசுரம் ஆகவில்லை . விகானில் வெளியாகும் பல 10 செகண்ட்  கதைகள் எனது கதையை விட மோசமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. சரி விகடன் வெளியிடா விட்டால்  என்ன? நமது வலைப்பூ எதற்கு இருக்கிறது. எப்படி எழுதினாலும் சகித்துக் கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் கவலை எதற்கு?

    சிலகதைகள் ஜோக்குகள் ஒரு குறிப்பிட்ட  குறுகிய காலத்திற்கே பொருந்தும். இதில் உள்ள இரண்டு கதைகள் அப்படிப்பட்டவைதான். விசாரணை, இறுதி சுற்று படங்கள் வெளியானபோது எழுதப் பட்டவை. அந்த நேரத்தில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்னும் காலம் கடக்கு முன் வெளியிட்டுவிட்டேன். 

விசாரணை
                              (10 செகண்ட் கதை ) 
வீட்டுக்கு தெரியாமல்  விசாரணை படம் பார்த்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின.  பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன்  "அப்பா" என்றான்  

*************************************************************************

இறுதிச் சுற்று 

"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது" என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி  108 வது இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினாள் 90  வயது சுந்தரி பாட்டி 
*************************************************************************************
ஜீவகாருண்யம் 
 
"தம்பி! , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து காலை வை" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன், "ஐயா!எறும்பு கடித்து நான் சாக மாட்டேன்" என்றான்
"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே!"என்றார் பெரியவர் கவலையுடன் 

*****************************************************************************************


புதன், 1 ஜூன், 2016

முற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா?

   
   வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர்  ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பதிவு எழுதி வரும் நண்பர் வருண் . அதிரடியாக கருத்துகளை முன்வைத்து 
விவாதிப்பவர். சமீபத்தில் நரிக்குறவர் எஸ் டி பட்டியலில் சேர்த்தது பற்றி ஒரு பதிவு (நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா?) எழுதி  இருந்தேன்.அவர்  அந்தப் பதிவில் தெரிவித்த கருத்து  ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் வேறு இனத்தின்  பெயரைச் சொல்லி சாதி சான்று பெற்று சலுகைகள் அனுபவத்து வருவது நடக்கிறது என்று  சுட்டிக்காட்டி இருந்தார்.  இத்தவறை பலரும் செய்துவருவது உண்மைதான். 
அந்தக் கருத்தே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது . 

   இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுக்க முழுக்க தன் இனத்தின் பெயரை வேறு இனமாகக் குறிப்பிடுவது . உதாரணமாக தான் எந்த இனமாக இருந்தாலும் தனக்கு தொடர்பு இல்லாத சலுகை கிடைக்கத் தக்க இனத்தை  குறிப்பிடுவது. இன்னொன்று தங்கள் இனத்தின் பெயர்ஓற்றுமை உள்ள  சலுகை இனத்தை குறிப்பிடுவது. முன்னதை விட இது அதிக அளவில் சாத்தியமானது   உதாரணத்திற்கு ரெட்டியார்,செட்டியார் ,நாயுடு இன்னும் பிற. ரெட்டியார்    இனம் முற்பட்ட இனம் . ஆனால் கஞ்சம் ரெட்டி என்ற இனம் பிற்படுத்தப் பட்டோர்  பட்டியலில் உள்ளது. செட்டியார் இனத்திலும் பல முற்பட்ட இனத்தவர் பட்டியலில் உள்ளது.  நாயுடு இனமும் இரண்டு பிரிவுகளில் உள்ளது . இது போன்ற பிரிவில்  இருப்பவர் சலுகைக்காக மற்ற பிரிவை சொல்லி தங்கள் செல்வாக்கை வைத்து சான்று பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.என் நண்பர் ஒருவர்  . நாங்கள் முறபட்ட இனத்தை சேர்ந்தவர்கள். என்ன செய்வது சலுகைக்காக மாத்தி வாங்கறோம் என்பார்.  இன்னும் ஒருசிலர் உண்மையாகவே தனக்கான உண்மையான சான்று பெற்றாலும் தங்கள் முற்பட்ட இனத்தவர்தான் சலுகைக்காக மாற்று சான்று பெற்றிருக்கிறோம் என்று தன் இனத்தையே தாழ்த்திக் கொள்வதும்  உண்டு.
  இட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது 
இது நாள்வரை முற்பட்ட இனத்தவர்களில் நான் அறிந்தது  பிராமணர், ஒரு சில முதலியார், ரெட்டியார்,நாயுடு மட்டுமே .
சரி! எவ்வளவுதான்  முற்பட்ட இனத்தவர் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 79 வகை முறபட்ட இனத்தவர் பட்டியலில்  கிடைக்கப் பெற்றேன். இவர்களில் பிராமணர் தவிர பிறருக்கு பி.சி. சான்று பெற வாய்ப்பு உள்ளது. எனக்குத்  தெரிந்து முற்பட்ட இனத்தை  சேர்ந்த பலர் BC என்றே சான்று பெற்றுள்ளனர்.
யாருக்கெல்லாம் இப்படி சான்று பெற வாய்ப்பு இருக்கிறது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் ஒரு சிலர்  மட்டுமே வேறு இனப் பெயரைக் காட்டி சான்று பெற முடியாது என்று நினைக்கிறேன்.
இதுதான் முற்பட்ட இனத்தவர் பட்டியல்.
1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
 1. ஆங்கிலோ இந்தியர் (511)
 2. ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
 3. லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
 4. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
 5. ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
 6. முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
 7. தாவூத் (608)
 8. கட்ஸு (சைத்)(609)
 9. மீர் (610)
 10. மைமன் (சைத்) (611)
 11. நவாப் (612)
 12. (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
 13. 501 செட்டியார் (701)
 14. அச்சு வெள்ளாளர் (702)
 15. ஆதி சைவர் (703)
 16. ஆற்காடு முதலியார் (704)
 17. ஆரியர் (705)
 18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
 19. ஆற்காட்டு வெள்ளாளர் (707)
 20. அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
 21. ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
 22. பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
 23. பேரி செட்டியார் (711)
 24. போகநாட்டு ரெட்டியார் (712)
 25. பிராமணர் (713)
 26. சோழபுரம் செட்டியார் (714)
 27. தேவதிகர் (715)
 28. எழுத்தச்சர் (716)
 29. ஞானியர் (717)
 30. ஜைனர் (718)
 31. கடையத்தார் (719)
 32. கதுப்பத்தான் (720)
 33. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
 34. கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
 35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
 36. காசுக்கார ஆச்சாரி (724)
 37. காயல் செட்டி (725)
 38. கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
 39. கொண்டியர் (727)
 40. கொங்குச் செட்டியார் (728)
 41. கொங்கு நாயக்கர் (729)
 42. கொங்கு ரெட்டியார் (730)
 43. கொந்தல வெள்ளாளர் (731)
 44. கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
 45. கோட்டைப்புரச் செட்டியார் (733)
 46. கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
 47. குக வாணியர் (735)
 48. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
 49. மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
 50. மொட்டை வெள்ளாளர் (738)
 51. மூசிக பலிஜகுலம் (739)
 52. நாடன் (நாட்டார்) (740)
 53. நாயர் (மேனன், நம்பியார்) (741)
 54. நாங்குடி வெள்ளாளர் (742)
 55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
 56. ஒருகுண்ட ரெட்டி (744)
 57. இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
 58. பணிக்கர் (746)
 59. பத்தான் (பட்டானி), கான் (747)
 60. ராஜபீரி (748)
 61. ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
 62. ராவுத்த நாயுடு (750)
 63. சைவச் செட்டியார் (751)
 64. சைவ ஓதுவார் (752)
 65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
 66. சைவ சிவாச்சாரியார் (754)
 67. சைவ வெள்ளாளர் (755)
 68. சானியர் (756)
 69. க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
 70. திருவெள்ளறைச் செட்டியார் (758)
 71. திய்யர் (759)
 72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
 73. உலகமாபுரம் செட்டியார் (761)
 74. வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
 75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)
 76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
 77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
 78. வாரியர் (மலையாளம்) (766)
 79. சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

எத்தனை சாதிகள்! சாதிகளின் பட்டியல் பார்க்கும்போது தலை சுற்றுகிறது .SC,ST,BC,MBC இனங்களையும் பட்டியலிடலாம் என்று நினைத்தேன். இடம் போதாது என்று கைவிட்டேன்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான் 
ஆனால் 

சாதிகள் உள்ளதடி பாப்பா-குல 
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம் 
நீதி உயர்ந்த மதி கல்வி -இந்
நிலையை மாற்றவில்லை பாப்பா 
என்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது 

********************************************************