என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

இந்தப் புதிருக்கு இப்படித்தான் விடை கண்டுபிடிக்கணும்



கடந்த பெட்டிக்கடை பதிவில் ஒரு புதிர் ஒன்று வெளியிட்டிருந்தேன்.
பொதுவாக புதிர் கணக்குகளுக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கும். அதை பெட்டிக்கடைப் பகுதியின் ஒரு பகுதியாக வெளியிட்டதாலோ என்னவோ பதிவைப் படித்தும்  நிறையப் பேர் ஆர்வம் காட்டவில்லை . இதனை தனிப் பதிவாக போட்டால் மிக சிறிய பதிவாகி விடும் என்பதால் பெட்டிக்கடையிலேயே இணைத்து விட்டேன். 
இதோ புதிர்க் கணக்கும் விடையும் 

    4  கோவில்கள் அருகருகே உள்ளது .  ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார். கோவிலுக்கும் செல்லும்போது கொஞ்சம் தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். அவரும் அதனைப் போல் இன்னொரு மடங்கு பூக்களை வாங்கி செல்கிறார். உள்ளே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம்  என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார். முந்தைய கோவிலில் எவ்வளவு பூ வைத்தாரோ அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. அவ்வாறே 3 வது நான்காவது கோவில்களிலும் செய்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைக்கப் படும் பூக்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இருக்க வேண்டும். மீதமுள்ள பூக்கள் இரண்டு மடங்காக்க்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு  வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எந்த தாமரைப் பூவையும் முழுதாகத் தான் வைக்க வேண்டும் பிய்க்கக் கூடாது 


இதற்கான சரியான விடையை ஆர் ஜகந்நாதன் என்பவரும்  பிரபல பதிவர் ஜெயதேவ் தாசும் சரியாக தெரிவித்திருந்தனர். ஜகந்நாதன் அவர்கள் ஒய்வு பெற்ற பொறியாளர் என்று அவரது  profile பக்கம் கூறுகிறது 

அவர் விடையை மட்டும் சரியாக கூறி இருந்தார் 
To first temple initially he takes 15 lotus flowers. He doubles it as instructed and now enters first temple with 30 flowers. Leaves 16 at the feet of the deity. Balance 14 flowers doubled as 28 before entering second temple. Leaves 16 and comes out with 12 flowers. At the third temple he enters with 2x12, 24 flowers. Keeping 16 there comes out with 8 flowers. Doubles it to 16 for the fourth temple.

ஜெயதேவும் பொறியாளர் தான் 
ஜெயதேவ் விடையை மட்டுமல்லாது  விளக்கமாக அல்ஜீப்ராவைப் பயன்படுத்தி விடை காணும் முறையை விளக்கி இருந்தார். இதற்கு பல விடைகள் உண்டு என்பதையும் கூறிவிட்டார் 

                                             விடை:
எடுத்து சென்ற பூக்கள் 15 வைத்த பூக்கள் 16
நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் அவரே கூறி விட்டதால் எனது வேலை எளிதாகிவிட்டது . அதை  அப்படியே இங்கே வெளியிடுகிறேன் 

விளக்கம் வேண்டுபவர் மட்டும் தொடரலாம் .கொஞ்சம் எட்டாம் வகுப்பு அல்ஜீப்ராவை நினைவுபடுத்திக் கொண்டு தொடருங்கள் 

4 கோவில்கள் அருகருகே உள்ளது . ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார்.

முதல் கோவிலுக்கு செல்லும்போது x தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். எனவே அவர் 2x பூக்களை வாங்கி செல்கிறார். முதல் கோவிலில் y பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார்.

தற்போது அவர் கையில் உள்ள பூக்களின் எண்ணிக்கை : 2x-y

அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார்.

போய் 2 X (2x-y)= 4x-2y பூக்களை வாங்கி வருகிறார்.

முந்தைய கோவிலில் y அளவு பூ வைத்தார் அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. 

கொண்டு போனது - இரண்டாவது கோவிலில் வைத்தது போக மீதம்:
                  (4x-2y)- y 
   அதாவது =4x-3y

3 வது கோவிலுக்கு செல்லும்போது கையில் உள்ள பூக்கள் : 4x-3y

அதை இரட்டிப்பாக்கினால் 2 X (4x-3y)=8x -6y

3 வது கோவிலுக்கும் y பூக்கள் போக மீதி: 8x -6y-y =8x -7y

நான்காவது கோவில் அவ்வாறே செய்தால்:

கையில் உள்ள பூக்கள் : 8x -7y
அதை இரட்டிப்பாக்கினால் 2 X (8x -7y)
                                                         =16x - 14y
நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எனவே 16x - 14y என்பது வைக்கவேண்டிய எண்ணிக்கை y க்கு சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மீதியின்றி திரும்ப முடியும்.

16x - 14y =y
அல்லது,
16x-15y=0
16x=15y
x=(15/16)y
இதில் x-ம், y-ம் முழு நம்பர்களாக இருக்க வேண்டும். y-க்கு 1,2, 3 என போட்டுப் பார்த்தால் 16 வரும்போது தான் இந்த கண்டிஷன் நிறைவேறுகிறது. அப்போது x=15. அதே போல y = 32 என்னும் போது x=30. எனவே 15-ன் மடங்காக 30, 45, 60 .............என்ற எண்ணிக்கையில் அவர் பூக்களை கொண்டு சென்றால் இந்த கணக்கின் கண்டிஷன் எல்லாம் நிறைவேறும்படி இருக்கும். எனவே விடை ஒன்றல்ல, எண்ணிக்கையில் அடங்காத பல விடைகள்!!
சுருக்கமாக சொன்னால் குறைந்தபட்சம்  15 பூக்கள் கொண்டு செல்ல வேண்டும். 16 பூக்கள் ஒவ்வொரு கோவிலிலும் வைக்க வேண்டும் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்

Congrats for both Jayadevdas and Jaganathan

கொசுறு: ஜெயதேவ் தாஸ் விவாதங்களுக்கு புகழ் பெற்றவர். சைவ உணவுக்கு  ஆதரவாக இவரது விவாதங்கள் சுவையானவை.வௌவால் வருண், ஜெயதேவ் விவாதங்களில் பொறி பறக்கும். இவர்களில் வருண் மட்டுமே அவ்வப்போது எழுதி வருகிறார். ஜெயதேவ் மீண்டும் தொடங்கி இருக்கிறார். .வவ்வால் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. மூவரும் முன்பு போல் எழுதி வலை உலகை சுறுசுறுப்பாக்க வேண்டும்
********************************
படித்து விட்டீர்களா? 
 மதுமொழிகள் 

முந்தைய பெட்டிக்கடை பதிவுகள் 
 பெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் வ...


சனி, 29 ஆகஸ்ட், 2015

பெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?


பெட்டிக்கடை -10

ஒரு குட்டிப் புதிர்
ஏற்கனவே நீங்கள் கேள்விப் பட்ட புதிர்தான்.ஆனால் கொஞ்சம் மாற்றம் உண்டு
   4  கோவில்கள் அருகருகே உள்ளது .  ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார். கோவிலுக்கும் செல்லும்போது கொஞ்சம் தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். அவரும் அதனைப் போல் இன்னொரு மடங்கு பூக்களை வாங்கி செல்கிறார். உள்ளே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம்  என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார். முந்தைய கோவிலில் எவ்வளவு பூ வைத்தாரோ அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. அவ்வாறே 3 வது நான்காவது கோவில்களிலும் செய்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைக்கப் படும் பூக்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இருக்க வேண்டும். மீதமுள்ள பூக்கள் இரண்டு மடங்காக்க்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு  வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எந்த தாமரைப் பூவையும் முழுதாகத் தான் வைக்க வேண்டும் பிய்க்கக் கூடாது .
உங்கள் வீட்டுப் பெரியவர்கள் இந்த புதிரை மூன்று கோவிலை வைத்து உங்களிடம் சொல்லி இருப்பார்கள். என்னிடமும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் நான்காக ஆக்கி விட்டேன். 
விடை திங்கள் அன்று வெளியிடப்படும் 

ஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூறி உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்.

ஜெயதேவ்தாசும் சரியான வழிமுறையில் விடையை கணக்கிட்டு மிக சரியாக  கூறி விட்டார். அவருக்கும் பாராட்டுக்கள் . அவரது பின்னூட்டத்தையும் தற்காலிகமாக மறைத்திருக்கிறேன்.

இருவரின் பின்னூட்டத்தையும் பின்னர் வெளியிடுவேன்.


*********************************************************************

வடிவேலு பார்த்திபன் காம்பினேஷன்  காமெடிகள் பிரசித்தமானவை .குண்டக்க மண்டக்க வென்று கேள்விகள் கேட்டு வடிவேலுவை திணற அடிப்பது நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும்
நம்ம கற்பனையில் ஒரு சின்ன டயலாக்
பார்த்திபன் : ஹலோ எங்க போற?
வடிவேலு:  ( மனதுக்குள் அடடா இவன் கிட்ட மாட்டிகிட்டமே.உண்மை
                        சொல்றதா போய் சொல்றதா ? உண்மையே சொல்லிடுவோம் )                            முடி வெட்ட சலூனுக்கு  போறேன்
பார்த்திபன் : யாருக்கு முடி வெட்ட போற. கையில கத்திரிக்கோல்
                           இல்லையே
வடிவேலு :  ஆஹா ஆரம்பிச்சிட்டானே!,  சாரி! முடி வெட்டிக்க போறேன்'

பார்த்திபன்:  என்னது! முடி வெட்டிக்க போறயா? நீயே வெட்டிக்கறதா 
                             இருந்தா   சலூனுக்கு ஏன் போற.  இங்கயே வெட்டிக்க  
                            வேண்டியதுதானே?

வடிவேலு:  இதை எப்படித்தான்பா சொல்றது அவ்வ்வ்வ்

*******************************************************************************
அரசியலும் நாவடக்கமும்  

கடந்த வாரத்தில் அலுவலகத்துக்கு போகும்போது  வழியில் ஒரு திடீர் ட்ராபிக் அங்கே நாற்சந்தியில் சாவு மேளம் ஒலிக்கும் சத்தம் கேட்க ஏதோ இறுதி ஊர்வலம்  போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். நிழற்குடை அருகே பிணம் ஒன்றை உடல் பாடையில் வைத்திருக்க அருகே நான்கைந்து பேர் அதிரடியாக பறை ஒலித்துக் கொண்டிருக்க இது என்ன நட்ட நடுவில் இப்படி என்று எண்ணிக் கொண்டே  இடத்தை கடந்து சென்று  விட்டேன்  சட்டென்று பொறி தட்டி திரும்பிப் பார்த்தேன். டி.வி எஸ். 50 இல் வந்த ஒருவர் அதன் அருகே வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டு விட்டு தன காலில் இருந்த செருப்ப எடுத்து பட் பட்டென்று கோபத்துடன் அடித்து விட்டு சென்றபோதுதான்   தெரிந்தது. அது ஈ வி. கே.எஸ். சின் உருவக பொம்மை என்பது  பக்கத்தில்  போஸ்டரில் ஈ.வி.கே.எஸசுக்கு கண்டனம் போஸ்டர் ஓட்டப் பட்டிருந்தது. அருகே சில போலீசார் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஈ.வி.கே.எஸ ஏதோ சர்ச்சைக்குரியதை சொல்லி இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அன்று செய்தித் தாளோ தொலைக்காட்சியில் செய்தியோ பார்க்காததால் அவர் என்ன சொன்னார் என்பது அப்போது தெரியவில்லை. பிறகு அறிந்தேன். யூ ட்யூபிலும் பார்த்தேன்.
      மோடி  ஜெயலலிதா சந்திப்பை ஆபாசமாகப் பேசியதன் விளைவுதான் அது. அவர் பேசியது   கட்சிக்கோ தனி மனிதனுக்கும் இழுக்கைத் தான் தேடித் தரும். ஒரு மூத்த அரசியல் வாதி இது போல் பேசுவது வேதனைக்குரியது. அரசியல் வாதிகள் ஆபாசமாகவும் கட்டுப் பாடின்றியும் கீழ்த் தரமாகவும்  பேசுவதும் புதிதல்ல. இவ்வாறு பேசுவதில் எந்தக் கட்சியினரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் இது தொடர்ந்து வருவது எந்த அளவுக்கு அரசியல் வாதிகள் தரம் தாழ்ந்து  வருகிறார்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. அதற்கு எதிர்வினை புரிந்தது இன்னும் மோசம், ஒருவனுக்கு எதிரி அவனது நாக்குதான் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியல் வாதிகளுக்கும் நாவடக்கத்திற்கும் தூரம் அதிகம்தான் போலிருக்கிறது

*****************************************************************************
சுய பீத்தல்
கடந்த குமுதம் இதழில் எனது ஒரு பக்கக் கதை( இணைப்பு: மதுவுக்கு எதிராக போராடாதே!) ஒன்றை பிரசுரமானதை சிலர் அறிந்திருப்பீர்கள். கடந்த முறை எனது கதை வெளிவந்தபோது மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள்தான் தொலைபேசியில் தெரிவித்தார் இந்த முறையும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். குமுதம் திங்கள் காலையில் வந்துவிடும். இவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அனுப்பிய  பத்து நாட்களுக்குள்   கதை பிரசுரமானது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்குதான்  நன்றி கூற வேண்டும்.

  இது தொடர்பாக இன்னொரு அனுபவமும் உண்டு. கடந்த வெள்ளியன்று மின்சார ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். அது அந்த வாரக் குமுதம். அந்தக் இதழில்தான் இந்தக் கதை வந்திருந்தது. எனது கதையை அவர் படிக்கிறாரா மாட்டாரா என்று அறிந்து கொள்ள ஆவலேற்பட்டது. என் ஆவல் அவருக்கு தெரியுமா என்ன? அவர் கடைசி பக்கத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தார். எனது கதையோ 20 பக்கத்தில் உள்ளது.மெதுவாக படித்துக் கொண்டே வந்தார்.அவர் சினிமா செய்திகளையே படிப்பது போல் தோன்றியது. கதைகள் உள்ள பக்கங்களை வேகமாக புரட்டுவதுபோல் தோன்றியது. எனது கதை உள்ள பக்கத்துக்கும் வந்துவிட்டார். மதுவுக்கு எதிராக போராடாதே என்ற தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்ததால் கதையை படித்திருப்பார் என்று நானே அனுமாநித்துக் கொண்டேன், அவர் முகத்தை பார்த்தேன் லேசாக புன்னகைத்துக் கொண்டது போல் தோன்றியது. இப்படியாக என் அல்ப ஆசை நிறைவேறியதாக நினைத்துக் கொண்டேன்.

ஒரு வேண்டுகோள்: இந்தக் கதையை வைத்து  டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என்று நான் கூறுவதாக கொள்ள வேண்டாம். இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே. குமுதத்தில் வெளியானாலும் ஒரு மைனஸ் ஓட்டை பெற்று தந்துவிட்டது இந்தக் கதை .

இது குமுதத்தில் வெளியான இரண்டாவது கதையாகும் முதல் கதை
என்ன செய்யப் போகிறாய்?
*******************************************************************************
எச்சரிக்கை 
நீங்கள் rubik cube solve செய்திருக்கிறீர்களா?

மின்சார ரயிலில் நான் காணும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கை எப்போதும் என்னை வியக்க வைக்கும். பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் எதையவது விற்றுத்தான் பிழைக்கிறார்கள். பிச்சை எடுப்பதில்லை. சீசன் டிக்கட் கவர்  ஊதுவத்தி புத்தகங்கள்,விளையாட்டுப் பொருட்களில் ஏதேனும் வாங்கினால் அவர்களிடம் இருந்துதான் வாங்குவேன். அப்படி 20 ரூபாய்க்கு வாங்கியதுதான் இந்த கியூப். அதனை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வண்ணம் அமையும்படி முயற்சி செய்து தீர்க்க கற்றுக் கொண்டேன். எந்த நிலையில் இருந்தாலும் இப்போது எல்லாப்பக்கங்களிலும் சரியான வண்ணத்தை கொண்டு வர முடிகிறது. இணையம் மூலம் சில எளிய வழிமுறையை அறிந்தேன். கியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். 
உங்கள் கருத்து என்ன?


******************************************************************************
புதுக்கோட்டை  நான்காவது வலைபதிவர் திருவிழா 

11.10.2015 அன்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் வருகையை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைதளத்தில் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.htmlவெளியிட்டுள்ள படிவத்தை உடனடியாக நிரப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட அழைப்பை எதிர்பாராமல், இவ்விழாவில் பங்கேற்று  தமிழ்ப் பதிவுலகை வளப் படுத்துவதில் நமது பங்கையும் அளிப்போம் .

விரிவான பதிவு விரைவில் 


******************************************************************************

முந்தைய பெட்டிக்கடை பதிவுகள் 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நீ என்ன பிடுங்கினாய்?+குமுதம் இதழில்


 உண்மையான பல்சுவைப் பதிவு 

பல்மொழிகள் பத்து 

    1. பிறக்கும்போதும் இருப்பதில்லை இறக்கும்போதும் இருப்பதில்லை      
        பல்

    2. பல் வலிமையானது;  நாக்கு மென்மையானது. ஆனால் பயம் வந்தால் 
      முதலில்   நடுங்குவது பல்

    3. பகைவன் வந்தால் பயப்படாதவனும் பல்வலி வந்தால் பயப்படுவான்

    4. எத்தனை  முயன்றாலும் வெளுப்படையாது  பாழான மனதும்    
         பழுப்பேறிய    பல்லும்

    5 .நாக்கு உதிர்த்த சொல்லும்  வாய் உதிர்த்த பல்லும் மீண்டும் இடம் 
      சேராது.

    6.   நாக்குக்கு பல்லே அணை

    7.   நீ என்ன பிடுங்கினாய் என்று கேட்க முடியாது பல் டாக்டரை

    8.  சூடோ, குளிர்ச்சியோ நாக்கு தாங்கும் அளவுக்கு பல்  தாங்காது 

    9.  பல் 
             கொஞ்சம் காட்டினால் புன்னகை 
             இன்னும் கொஞ்சம் நீட்டினால் இளிப்பு 
             முழுவதும் காட்டினால்தான்  சிரிப்பு 

   10. பல் இருந்தும் சிரிக்கத் தெரியாதவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் 

கொசுறு: பல் ஆண்டு வாழ்க என்றால் உறுதியான பற்களுடன் நீண்ட நாட்கள் வாழ்க என்றும்பொருள் கொள்ளலாம். 



                 பல்(வலி) கவிதை 1

                    பல்லை  எதிரத்து 
                    ஈறு செய்தது சுதந்திரப்  போராட்டம் 
                    வெள்ளையனே வெளியேறு என்றது 
                    பல்லைப் பார்த்து 
                    பல்,  பல்வழியிலும் 
                    ஈறை சேதப்படுத்திப் பார்த்தது 
                    ஆனாலும் வெற்றி  ஈறுக்கே!
                    கடைசியில் 
                    வெளியேறியது பல்! 


                 பல்(வலி) கவிதை 2
                ஈறு போதல்  இடை யுகரம் இய்யாதல் 
                ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் 
                தன்னொற்றி ரட்டல்  முன்னின்ற மெய் திரிதல் 
                இனமிகல்  இனையவும் பல்வலியினார்க் கியல்பே 

            இந்தக் கவிதை புரிகிறதா? 
            அட வேற ஒண்ணும் இல்லீங்க பல்வலி வந்தால் பேசற வார்த்தைய             சரியாய் உச்சரிக்க முடியறதில்லை அப்படீங்கறதை தான் நன்னூல்               செய்யுள்ள  ஒரு சின்ன மாற்றம் செஞ்சி சொல்லி  இருக்கேன்.                                  ஹிஹி  

           இலக்கண, இலக்கியப் புயல் ஜோசப் விஜு மன்னிப்பாராக  


********************************************
குமுதத்தில் என் கதை   24.08.2015  நாளிட்ட  குமுதம் இதழில் மதுவுக்கு எதிராக போராடாதே என்ற  ஒருபக்கக் கதை வெளியாகி உள்ளது. முடிந்தால் படித்துவிட்டு உங்கள்  கருத்துகளைக் கூறவும் . கதையை வெளியிட்ட குமுதம் இதழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி 

படிக்க க்ளிக் செய்யவும் 
மதுவுக்கு எதிராக போராடாதே!


படித்து விட்டீர்களா?







புதன், 12 ஆகஸ்ட், 2015

மதுமொழிகள்




அனைத்தும் என் சொந்த சரக்கே!

மதுமொழி 1
குடிப்பழக்கம்
Beer இல் தொடங்கும்
Tear இல் முடியும்

மதுமொழி 2
நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, தந்தையும் மகனும் ஒன்றாகக் குடிப்பது மகள் அப்பாவுக்கு பீர் வாங்கித் தருவது இவை எல்லாம் மதுவுக்கு சினிமா செய்த  சேவை

மதுமொழி 3
சந்தோஷமாக இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான். துக்கத்தில் இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான்.இந்த பலவீனமே மதுவின் காலடியில் மனிதனை விழ வைக்கிறது

மதுமொழி 4
மகிழ்ச்சிக்காக குடிப்பவனுக்கு தெரியாது-அது
மகிழ்ச்சியையே குடிக்கப் போகிறது என்று

மதுமொழி 5
உடுக்கை இழந்தாலும் ஆங்கே உதவாது
குடிக்கப் பழகியவன் கை

மதுமொழி 6
கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதை விட்டுவிட முடிவு  செய்பவன் கடைசியில் விட்டு விடுகிறான் தன் முடிவை 

மதுமொழி 7
ஆபத்தானது மதவாதம்-அதைவிட
ஆபத்தானது மதுவாதம்

மதுமொழி 8
மதுவுக்கு வினோத குணம் உண்டு
குடிப்பவனையும் தள்ளாட வைக்கிறது
குடும்பத்தையும் தள்ளாட வைக்கிறது

மதுமொழி 9
அளவோடு குடிப்பவன் அளவின்றிக் குடிப்பவனை விட உயர்ந்தவன் அல்ல

மதுமொழி 10
குடிப்பழக்கம் சில நட்புகளால் தூண்டப்பட்டு பல நடப்புகளால் தொடரப்பட்டு இழப்புகளை இலவசமாய்  தருகிறது


*********************************************************************



திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மதுவுக்கு எதிரான போராட்டம் தேவைதானா?


     குமுதம் ( 24.08.2015)இதழில் வெளியான ஒரு பக்கக் கதை 
   டிவியில் சாராயக் கடைகளை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்கள் பற்றிய செய்திகள்  ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது. பரபரப்பான பேட்டிகளும் விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்த போது ரமேஷிடம் இருந்து போன் வந்தது.

"டேய் உனக்குத் தெரியுமா?  கார்த்திக் மதுவுக்கு எதிராக போராடப் போறானாம்.பந்தல் போட்டு சாகும் வரை உண்ணா விரதம் இருக்கப் போகிறானாம். அவன் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டானாம் " அவன் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது
நானும் அதிர்ச்சியுடன் "உண்மைதானா! அவனால் எப்படி மதுவுக்கு எதிராகப் போராட முடியும் இவனுக்கு எதுக்கு  இந்த வீண் வேலை" என்றேன்.
"சொன்னால் கேட்க மாட்டேங்கிறான். நீ வேண்டுமானால் சொல்லிப் பாரேன் " என்றான்
"நான் சொன்னா மட்டும் கேப்பானா?. உனக்கு  ஞாபகம் இருக்கா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒரு பார்ட்டியில் மதுவை அவனுக்கு நாம தானே அறிமுகப் படுத்தினோம். அப்போது ஓடி ஒளிஞ்சான்.  ஆனால் எப்படியோ கொஞ்சம் ஓவராவே   மதுவோடு  ஐக்கியமாட்டான்றது  நமக்கு லேட்டாத் தானே தெரியும்!. மதுவுக்கு முழுசா அடிமையா இல்ல  இருந்தான். நம்மை சட்டைகூட  செய்யலையே. மதுவை அவனால் மறக்க முடியாதே!. அவன் சும்மா சொல்வான் விட்டுடு " என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.
   ஆனால்  அவன் சீரியசாகத் தான் சொல்கிறானாம் . மதுவினால்தான் அவன் அம்மா  முதியோர் இல்லத்திற்கு செல்ல நேர்ந்ததாம். உறவினர்களும் அவனை வெறுத்தது மதுவினால்தானாம். அவன் இன்று தனி மரமாய் இருப்பது மதுவினால்தான்  என்று உறுதியாக சொன்னானாம்
      இவனுக்கென்ன பைத்தியமா?  போலீஸ்காரர்கள் சும்மா விடுவார்களா?
    கார்த்திக்கை பற்றி உங்களிடம் சொல்லியாக வேண்டும். பணக்காரப் பெண்ணை  காதலித்து திருமணம் செய்துகொண்டவன். ஒரு ஆண்டுக்குள்  வாழ்க்கை கசந்துபோனது கார்த்திக்கின் மனைவிக்கு. சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டாள் பிறந்த வீட்டுக்கு. ஆனால் கார்த்திக்கால் அவளை மறக்க முடியவில்லை. அவனுடைய மனைவியும் செல்வாக்கு மிகுந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான  மது என்கிற மதுமிதாவை தன்னோடு சேர்ந்து வாழ வலியுறுத்தி அவர்கள் வீட்டுக்கெதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறானாம் என் நண்பன் கார்த்திக்.
நீங்களே சொல்லுங்கள்!
   மதுவுக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவைதானா?


****************************************************************


படிச்சிட்டீங்களா?

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

குடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து


(  வடிவேலு சினிமாவில அதிக பாக்க முடியலியே . அந்தக் குறைய போக்கறதுக்க ஒரு பழைய ஜோக் ஒன்ன வச்சு  ஒரு  ReMix  .சினிமா காட்சியா கறபனை பண்ணிக்குங்க. சிரிக்கறதுக்காக மட்டுமே.   )

நீண்ட நாட்களுக்குப் பிறகு டீக்கடைக்கு வந்த வடிவேலு  ஒரு டீ சொல்லி விட்டு  பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் 
டீக்கடைக்காரர்"அண்ணே! உங்களை எங்கோ பாத்த மாதிரி இருக்கே. வடிவேலு மாதிரியே இருக்கீங்க"
"அடப் பாவிங்களா அதுக்குள்ள மறந்துட்டீங்களா? வடிவேலு மாதிரி இல்ல. வடிவேலுவேதாண்டா. நான் என்ன செஞ்சேன்னாலும் கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தீங்களேடா இன்னைக்கு  கண்டுக்க மாட்டேங்கறீங்களே. தமிழனுக்கு மறதி அதிகம்தான் . அதுக்காக இப்படியா" 
"அடடே! நீங்களாண்ணே! எங்கண்ணே போயிட்டீங்க! என்ன அதிசயம்! உங்களை மாதிரியே ஒருத்தர் எலி படத்தில நடிச்சிருக்காருண்ணே. தெரியுமான்ணே"
"படுபாவி! அதுவும் நான்தாண்டா. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்"
"அது விவேக் ஜோக்குண்ணே! நீங்க சொன்ன நல்லா இருக்காது."
"என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே!"
"இது... இது... இதானே நீங்க .ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கீங்க." என்று சொல்லி விட்டு  யாருக்கோ போன் பேச ஆரம்பித்தார் 
 "பேசிக்கிட்டே இருக்கியே! தம்பி! டீ இன்னும் வரல" என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்க ஆர்மபித்தார்  வடிவேலு 

"மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு"

    "அட! பரவால்லியே! பேப்பர்ல காலங்காத்தால இப்படி சிரிக்க வச்சிட்டானே. பேப்பர்ல முதல் பக்கத்துல கார்ட்டூன் போடுவான் இப்ப ஜோக்கெல்லாம் போடறானே?"
 "வணக்கம்ணே" குரல் கேட்டு பேப்பரில் இருந்து முகத்தை திருப்பினார் வடிவேலு 
  பழைய நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். "இவனுங்க எப்படி வந்தானுங்க"அவர்களைக் கண்டதும் வடிவேலு கோபத்துடன்  முகத்தை திருப்பிக் கொள்கிறார்.
"டீக்கடைக்காரர் போன் பண்ணாருண்ணே! வந்துட்டோம்"
"இத்தனை நாள் நான் எங்க  இருக்கேன் எப்படி இருக்கேன்னு கூட கண்டுக்கல. போங்க டா போங்க "
"அண்ணே அது காலத்தின் கட்டாயம்"
"தொ பார்ரா வசனம்.....
       
 “டேய்! அண்ணன் இன்னும் கோவத்தில இருக்கார். அன்னிக்கு நாம அடிச்சத மறக்கல போல இருக்கு. (Flash Back:வடிவேலுக்கு உதவியது யார்?) அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்டுடலாம் வாங்க!
  “அண்ணே எங்கள மன்னிச்சுடுங்கண்ணே. ஏதோ கோவத்தில உங்கள அடிச்சிப்பிட்டோம். அத இன்னும் மனசுல வச்சுக்கிட்டு எங்கிட்ட பேசாம இருக்காதீங்கண்ணே! எங்களுக்கு உங்களை விட்டா யாருண்ணே இருக்காங்க!
          “சென்டிமெண்டா டச் பண்ணறாங்களே  சரி! சரி! மன்னிச்சிட்டேன். போய்ட்டு வாங்க!
   “என்னண்ணே எங்கள நம்ப மாட்டேங்கிறீங்க! நாங்க திருந்திட்டோம். இப்ப கூட நல்லது செய்யணும் கிளம்பி போய்ட்டிருக்கோம்.
அப்படி என்னடா பண்ணப்போறீங்க! நல்லதுன்னா உங்களுக்கு என்னன்னே தெரியாதே? 
 “போங்கண்ணே கிண்டல் பண்ணாதீங்க! நம்ம விஜயகாந்த் அண்ணன் கூட சாராயக் கடைகளை மூடச் சொலி போராட்டம் பண்றாரே. நாமளும் ஏதாவது பண்ணனும்ணே."
"நீங்களும் போராட்டம் பண்ணப் போறீங்களா"
"அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுண்ணே! நம்ம ஊர்ல இருக்கற குடிகாரப் பசங்களுக்கு புத்தி சொல்லி திருத்தலாம்னு பாக்கறோம்.
நீங்களே குடிகாரப் பசங்களாச்சே! நீங்க சொல்லி எவனாவது திருந்துவாங்களாடா
அதுக்குத்தான் உங்களையும் கூட்டிக்கிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.  
“நானா? நான் எதுக்குடா?
எங்கள விட நீங்கதான் நல்லா எடுத்து சொல்லி புரிய வைப்பீங்க!நீங்க வித்தியாசமா ஏதாவது பண்ணி பழைய உங்க பெருமையை மீட்கனும்னே அதுதான் எங்க ஆசை.  எவ்வளோ பேர்கிட்ட அடிவாங்கின அனுபவம்  உங்க கிட்ட இருக்கு!
  வடிவேலு யோசித்து நீங்க சொல்றது சரிதான்டா! நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. சினிமாவில்தான் அடிவாங்கியே காலத்தை கழிச்சிட்டேன். நேர்லயாவது நல்ல கருத்த சொல்லி மக்களை நம்ம பக்கம் பாக்க வைப்போம்".
வாங்கண்ணே ஏரியா பக்கம் போவோம். நாளைக்கு தலைப்பு செய்திகள்ல உங்க பேருதான் வரப் போவுது 
"சரி!  வாங்க ஆரம்பிச்சிடுவோம்."
அண்ணே! அதோ பாருங்கண்ணே! ஒரு குடிகாரன் கையில சாராய பாட்டிலோட வர்றான். அவன அப்படியே மடக்குங்க!
 “அடேய்! என்னடா  பண்ணற
 தெரியல? குடிச்சிக்கிட்டுருக்கேன்?
    “ஏன்டா? நீ குடிச்சி குடிச்சி அழிஞ்சி போறயே! நியாயமா? உன் பொண்டாட்டி புள்ளைய நினச்சி பாத்தியா?
 “அவங்களை நினச்சித்தான் நான் குடிக்கிறேன்?
வடிவேலு ,"அவங்களை நினைச்சு ஏன் குடிக்கற"
"அவங்கள சரியா காப்பாத்த முடியலையேன்னு குடிக்கிறேன்" 
"நீ குடிகிறதாலதான் அவங்கள காப்பாத்த முடியல"
"இல்ல!  அவங்கலை சரியா காப்பாத்த முடியலையேன்னுதான்  குடிக்கிறேன்"

இப்படி சொன்னா எல்லாம் நீ கேக்க மாட்ட. அந்த சாராய பாட்டில எங்கிட்டு குடு
நான் குடுக்க மாட்டேன். நீ குடிச்சிடுவ.?
அண்ணன் குடிக்க மாட்டார் குடுடா!, 
      'இந்தாங்கன்னே!

நண்பர்கள் பாட்டிலை வாங்கி வடிவேலுவிடம் கொடுத்தனர்.
        
   வடிவேலு அந்த பாட்டிலை வாங்கி, அண்ணன் இப்ப என்ன செய்யப்போறேன் பாரு. இதுக்குள்ள சாராயம் இருக்கா? அடேய்  குடிகாரா அதோ ஓடுது பாரு பூச்சி அந்த பூச்சிய எடு!
"அது எதுக்குண்ணே!"
 "எடுறா! அதை எடுத்து இந்த பாட்டிலுக்குள்ள போடு.  போட்டுட்டயா? இப்ப என்ன  நடக்குதுன்னு பாரு.
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க 
          
 “அடடே! பூச்சி கொஞ்ச நேரத்தில துடி துடிச்சி செத்துப் போச்சே? அண்ணே! நீங்க கடவுள்னே! உங்க கால்ல உழுந்து சொல்றேன். இப்படி எனக்கு இதுவரை  யாரும் எடுத்து சொன்னதில்லே! எவ்வளோ பெரிய தத்துவத்தை  இவ்வளோ எளிமையா சொல்லீட்டீங்க! உங்கள மறக்கவே மாட்டேன். நான் வரேன் .....”

 “ நில்லுடா... நில்லுடா இவ்வளோ சீக்கிரம் நல்லவனா மாறிட்டானே.  பாருங்கடா பய என் பேச்சை கேட்டு திருந்திட்டான்?

ஆமாண்ணே! நீங்க செஞ்சு காமிச்சதுக்கு என்ன அர்த்தம்? எங்களுக்கு ஒண்ணுமே புரியலயே?

மடப் பசங்களா! இது கூட புரியலையா? உங்களுக்கு எப்படி புரியும் ஜாமீன் கேட்டு மார்க்கெட்டுக்கு போனவங்களாச்சே! சாராயத்தில விழுந்த  பூச்சி துடிதுடிச்சி செத்து போச்சு இல்ல? அந்த மாதிரி குடிச்சா  நீயும் செத்துப்போய்டுவன்னு அர்த்தம்? புரிஞ்சதா இப்பயாவது தெரிஞ்சுக்கோங்க! அய்யாவோட அறிவை?

பிரமாதம்ணே! உங்களை மாதிரி அறிவாளி உலகத்தில யாரும் இல்ல.

“சரி போலாம் வாங்க  ரெண்டு நாள்  கழிச்சி அந்த பய எப்படி இருக்கான்னு பாக்கலாம் .

 இரண்டு நாட்கள் கழித்து வடிவேலுவும் அவர் நண்பர்களும் அந்தக் குடிகாரனின் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அண்ணே! முதன் முதலா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க! உங்களுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கப் போகுது. எங்களை மறந்துடாதீங்கண்ணே.

சரி! சரி! வீட்ல யாரு இருக்கா பாரு?

“என்னண்ணே! அவனோட பொண்டாட்டி கையில தொடப்ப கட்டயோட  வருது?

என்னம்மா? உன் புருஷன் எப்படி இருக்கான்?
“ஹூம் முன்னயே பரவாயில்லங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொஞ்சமா குடிச்சிட்டு வந்தாரு. இப்ப என்னடான்னா நிறைய குடிக்கிறாரு? ஆமாம், நீங்க யாரு?

உன் புருஷன் சொல்லலையா? ரெண்டு நாளைக்கு முன்னாடி சாராயத்துல ஒரு பூச்சிய போட்டு என்ன ஆச்சுங்கறத  காமிச்சி புத்தி சொன்னவன் நான்தான். பய அசந்து போய்ட்டான் இல்லை . சொல்லுங்கடா  தங்கச்சிகிட்ட.?

ஓ! அந்த ஆள் நீதானா? வாய்யா! உனக்காகத்தான் காத்துக்கிட்டுருக்கேன். ஏன்யா இப்போ அதிகமா  குடிக்கிறேன்னு என் புருஷன கேட்டா, 'என்  வயித்தில நிறைய பூச்சி இருக்கு அது சாகறதுக்காகத்தான் நான் குடிக்கிறேன்.  சாராயம் குடிச்சா  வயித்தில இருக்கும் பூச்சியெல்லாம் செத்துபோகும்னு நீதான்  சொன்னயாமே? அதுவும் இல்லாமே ஒரு பூச்சியப் பிடிச்சு போட்டு  வேற காமிச்சயாமே? கொஞ்சமா குடிச்சிக்கிட்டு இருந்தவனை அதிகமா குடிக்க வச்சுட்டயே யா! உன்ன சும்மா விடறனா பாரு. இந்த தொடப்பகட்டைக்கு வேல குடுத்து ரொம்ப நாளாச்சு....  

 வேணாம்மா...... நான் சொன்னது வேற, அவன் புரிஞ்சிக்கிட்டது வேற. டேய் சொல்லுங்கடா?  ஓடிட்டீங்களா?  என்ன அடி வாங்க வச்சுட்டு வழக்கம்போல ஓடிட்டானுங்க? நம்ம வெகுளித்தனத்தால இந்த முறையும் ஏமாந்துட்டமே!அவ்வ்வ்வவ்வ்வ்வ் 

******************************************************************************

என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 



திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா?


தில்லை அகத்து குரோனிக்கல்ஸ்  வலைப் பதிவில் பதிவர் துளசி கீதா அவர்கள்  கல்வி சார்ந்த நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். கல்வியின் மீதான முக்கியத்துவத்தையும்  அவர் சமுதாயத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையையும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது . கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப் பட வேண்டும் என்ற ஆதங்கம் அவரது கட்டுரை முழுதும் காணப்படுகிறது. அவருடை நல்லெண்ணத்திற்கும் சிந்தனைகளுக்கும்  பாராட்டுக்கள் . அவரை சில முறை சந்தித்திருக்கிறேன்.அவரது ஆர்வமும் சுறுசுறுப்பும்  பரந்த அறிவும் என்னை வியக்க வைக்கும்  ஒன்று 
  அறிஞர்களும் கல்வியாளர்களும் மட்டுமே எழுதி வந்த கல்வி பற்றிய கருத்துகளும் விவாதங்களும்  இன்று பொது வெளிக்கு வந்துள்ளது இவை சாத்தியமானதற்கு இணையமும் ஒரு காரணம்.    நம்மைப்போன்ற சாதாரணர்களும் நமது கருத்தையும் வெளிப்படுத்த உதவும் களமாக இணையம் விளங்குகிறது.  பல்வேறு கோணங்களில் விவாதங்கள் முன் வைக்கப் படுகின்றன. இவை நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கொள்ளலாம் . 
      கல்வி தொடர்பான என் சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை  கூற விரும்புகிறேன்.இதில் கூறப்பட்டுள்ளவை எனது சொந்தக் கருத்தே . நான் குறிப்பிடுபவை அனைத்தும் பள்ளிக்கல்வியைப் பற்றியதே . 

    பொதுவாக பலரும் விரும்புவது ஒரே சீரான கல்வி வேண்டும் ஏழைக் கொரு கல்வி பணக்காரர்களுக் கொரு கல்வி  என்ற நிலை இருக்கக் கூடாது ,நாடு முழுவதும் கல்வியில் சமச்சீர் தன்மை வேண்டும் என்பது. 
இவ்வாறு குறிப்பிடுவதில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஒன்று கற்பிக்கும் பாடத்திட்டத்தில் சமச் சீர் தன்மை, பள்ளி வசதிகளில் கிடைக்கும் சமச்சீர் தன்மை. பணக்காரப்  பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் உள்ள அத்தியாவசிய குறைந்த பட்ச வசதிகளாவது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் பாடத் திட்டத்தில் சமச்சீர் தன்மை கொண்டு வருவதில்  சில சிக்கல்கள் உள்ளன 
     அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை விட மெட்ரிக் சற்று கடினம், சி.பி.எஸ்.சி. அதைவிட கடினம். எளிய பாடத்திட்டம் சற்று கடின பாடத் திட்டம், மிக கடினமான பாடத் திட்டம் என்ற பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டதன்  நோக்கம்  மாணவர்களின் கற்றல் திறனுக்கு  ஈடு கொடுக்கும் வகையில் திறமையை மேலும் வளர்ப்பதாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொண்டன. 
      இந்தியாவில் ஏராளமான பாடத் திட்ட முறைகள் பின்பற்றப் படுகின்றன . தமிழ் நாட்டிலும் மாநில அரசு பள்ளி ,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய,மத்திய அரசின் சி,பி எஸ்.சி பள்ளிகள் ,இன்டர்நேஷனல் பள்ளிகள் என பல்வேறு கல்வித் திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இதில் மாநில அரசின் கல்விப் பிரிவுகளாக  அரசு,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்ட முறைகள்  பத்தாம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்தன தற்போது சமச்சீர் கல்வி முறை மூலம், தமிழ்நாடு  மாநில அரசு கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாகி விட்டன. அவை அனைத்தும் +2 வரை ஒரே பாடத் திட்டத்தையே பின்பற்ற  வேண்டும்.
    முழுமையான   சமச்சீர் கல்வி என்பது விவாதத்திற்குரியது .தனியார் பள்ளிகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டால் ஒழிய கல்வியில் சமத்தன்மை பின்பற்றுவது சாத்தியமல்ல. என்னைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு எளிமையான கல்வி பணம் படைத்தவர்களுக்கு கடினமான கல்வி முறை பின்பற்ற வேண்டும் என்று கருதுகிறேன். இதன் பொருள் அரசு பள்ளிகளுக்கு சற்று எளிமையான கல்வி திட்டம். காரணம் வாழ்க்கையே போராட்டமான சூழலில் இருந்து வருபவர்க்கு  ஆதரவு அளிப்பது அரசு பள்ளிக் கூடங்களே .கல்வி திட்டம் கடுமையாக இருந்துவிட்டால் இடைநிற்றல் அதிகமாகி விடும். அதனால்தான் 8 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி வழங்கப் படுகிறது. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கக் கூடாது அதனால்தான் தரம் குறைந்து விட்டது என்று கூறுவோர் உண்டு /இதில்  ஆசிரியர்களும் அடக்கம். நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை உணர முடியும் முன்பெல்லாம் மாணவர்களை பெயில் ஆக்க முடியும். அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டில் தேர்ச்சிக்குரிய  அடைவைப் பெற்றிருப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.அடுத்த ஆண்டு வேறு வழியில்லை என்று பாஸ் செய்து அனுப்பி விடுவார்களே தவிர  கற்றல் நிலையில் முன்னேற்றம் இருக்காது . தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் பள்ளியை  விட்டு நின்று விடுவார்கள். இதைத் தவிர்க்கவே முழுத் தேர்ச்சி அனுமதிக்கப் படுகிறது. அதனால் தேக்கம் செய்வதில்  எந்த பயனும் இல்லை.. எளிமையான பாடத்திட்ட த்திற்கே இந்த நிலை என்றால் கல்வி கடினமாக இருந்தால் எப்படி இருக்கும்?. பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்கே  பெரும்பாடான நிலையில் தரமான கல்வி என்ற பெயரில் கடுமையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளுக்கும் பொருத்தினால் ஒரு தேக்க நிலை உருவாக வாய்ப்பு உண்டு. (கடினமான பாடத் திட்டத்தை தரமான கல்வி என்று பலரும் நம்புகிறார்கள் உண்மையில் கல்வியின் தரம் பாடத்திட்டம் மட்டும்  சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்) 

    சீரான கல்வி திட்டம் செயல் படுத்தப் படும்போது சில சிக்கல்கள்  எழுவது இயல்பானதே. தமிழ் நாட்டில் இப்போது சமச்சீர் கல்வி முறை உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் +2 தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அனைத்து முறை பள்ளிகளுக்கும் ஒரே +2 சிலபஸ்தான்  . ஒரே பொதுத் தேர்வுதான் சி பி. எஸ் சி பள்ளிகளைத் தவிர. இதர பள்ளிகளான மெட்ரிக் ,ஆங்கிலோ இந்தியன்,பள்ளிகளிலும் +2 வுக்கு மட்டும் ஒரே பாடத் திட்டம்தான் பின்பற்றப் பட்டு வருகின்றன.   முன்பு இவை 10 வகுப்பு வரை வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றி வந்தன. தற்போது சில ஆண்டுகளாகத்தான் 10 வகுப்புவரையிலான பாடத் திட்டமும் மாநில கல்வித்திட்ட பள்ளிகளுக்கும் ஒன்றாக உள்ளது. அது மிக எளிமையானது. அது மெட்ரிக் பள்ளிகளுக்கு சாதகமாகப் போய் விட்டது . எளிமையான பாடத் திட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் மதிப்பெண்களை வாரிக் குவித்து விடுகின்றன. இதனால் பாதிக்கப் படுவது அரசு பள்ளி மாணவர்கள்தான். என்றாலும் தனியார் பள்ளிகள் 10 வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை விரும்புவதில்லை. 

       என்னைப் பொருத்தவரை தனியார் பள்ளிகளுக்கு கடுமையான பாடத் திட்டம் வைக்கவேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் தங்கியுள்ள நிலையில் உள்ள  முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும்போது எளிமையாக கல்வி  அவர்களை அச்சுறுத்தாத வகையில் அமைய வேண்டும். படித்த தலைமுறையினரின் பிள்ளைகளோடு ஏழைப் பிள்ளைகள் போட்டியிடுவது எளிதல்ல .  

  பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க  +2 வில் பெறும் மதிப்பெண்களே  அடிப்படை.  +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு  தனியாகவும் தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.  என்பது என் கருத்து. கடினமான சிலபஸில் குறைவான மதிப்பெண்களே பெற முடியும். அதனால் அதை பெற்றோர் விரும்ப மாட்டார்கள் அப்படி செய்தால் பல மெட்ரிக் பள்ளிகள் நிலை சரியத் தொடங்கும். கல்வி வியாபாரத்தை ஓரளவாவது தடுக்கலாம்.
     சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும்  வரை தனியார் பள்ளிகள் 10  வகுப்பு வரை கடினமான சிலபசை பயன்படுத்திவிட்டு +2 வுக்கு எளிதான ஸ்டேட் போர்ட் தேர்வில் மதிப்பெண்கள் பெற வைத்து விடுகின்றன . இப்போது எளிமையாக்கப் பட்ட சமச்சீர் கல்வி அவர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.  10வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை தரமற்றது என்று எதிர்த்த தனியார் பள்ளிகள்,  தொடங்கிய காலத்தில் இருந்தே பொதுவாக இருந்து வரும் +2 பாடத் திட்டத்தை தங்களுக்கென்று தனியாகக் கோரவில்லை.காரணம் இந்த +2 வில்தான் அதிக மதிப்பெண் பெற வைக்க முடியும்.  சி.பி எஸ்.சிக்கு மாறி விடுவோம் என்று பூச்சாண்டி காட்டினவே தவிர  மாறவில்லை.ஏனெனில் சி.பி.எஸ்.சி +2 வில் மதிப்பெண்கள் எடுக்க வைப்பது  கடினம். 

     சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு  மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. புகழ் பெற்ற கல்லூரிகளில் மருத்துவம் பொறியியல் சேர்க்கைக்கு சி.பி.எஸ்.சி யில் பெறும்  மதிப்பெண்கள் போதுமானதாக இருப்பதில்லை. அதீத திறமை வாய்ந்தவர்களே இதில் சாதிக்க முடியும். அதனால் ஸ்டேட் போர்டு +2 வுக்கு மாறி விடுகிறார்கள் இப்படி கல்வி முறையை விருப்பம் போல் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.அவர்கள் பின் தள்ளப் படுகிறார்கள்.

  இன்று அரசு பள்ளிகள் மாணவரின்றி காலியாகக் கிடக்கின்றன. எவ்வளவுதான் இலவச திட்டங்கள்  நடைமுறைப் படுத்தபட்டாலும் ஆங்கில மோகம் காரணமாகவும் சற்று வசதிவாய்ப்புகள் பெருகியதன் காரணமாகவும் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் பெற்றோர்.இதன் காரணமாகத்   அரசு பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியும் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாணவர் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயரத்த இது உதவவில்லை. அரசு பள்ளியில் பயின்றவர்க்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகள்  உயர் அதிகாரிகள் உட்பட  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். நடுத்தர மக்களை அரசு பள்ளிகள் பக்கம் ஈர்க்க இது ஒரு வழியாக அமையும்.

      ஆனால் அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.அப்படியானால் அரசு பள்ளிகளில் குறைகளே இல்லையா என்றால் ஏராளமாக உள்ளது, ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக் குறைவு,உள்கட்டமைப்பு வசதிகள்(தற்போது பல தனியார் பள்ளிகளை விட மேலான நிலையிலேயே உள்ளது)நிர்வாக சிக்கல்கள் கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாமை, வேறு சில நிர்பந்தங்கள்   போன்றவை  அரசு பள்ளிகளுக்கு தடையாக உள்ளன .

    தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப் படுவதாக வந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம் ஆசிரியர் இல்லாத காரணத்தால் பள்ளிகள் மூடப் படுவதில்லை. மாணவர்கள் இல்லாததால்தான் பள்ளிகள் மூடப் படும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை  ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு பள்ளியாவது இருக்கிறது. 

     இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்பில் ( L.K.G , VI) 25% இட ஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர். நலிவடைந்த பிரிவினருக்காக  வழங்க வழி வகை செய்யப் பட்டிருக்கிறது. இதில் மைனாரிட்டி பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு. இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத் தொகையை அரசாங்கமே வழங்க முன் வந்துள்ளது.  இதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கை மேலும் குறைவதற்கானநிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏரளமான தனியார் பள்ளிகளும் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன.  

    கடந்த தலைமுறையில் அரசு பள்ளியில் பயின்று  தற்போது நல்ல நிலையில் உள்ள பெற்றோரின்  மனப்பான்மை காரணமாகவே கல்வி வியாபாரமாகி விட்டது. இந்த அணுகுமுறையே கல்வியை சந்தைப் பொருளாக்கி விட்டது. இன்னும் சிந்திக்கப் படவேண்டியதும் விவாதிக்கப் படவேண்டியதும் பல உள்ளன. நீளம் கருதி   இத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தொடர்கிறேன்.
   கீதா அவர்களின் பதிவில் ஜோதிஜி அவர்கள் கூறியுள்ள கருத்து கவனிக்கத் தக்கது..தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் முறைகள், அவை பின்பற்றும் நடைமுறைகள்,  பற்றி எழுத பல பக்கங்கள் தேவை.
அரசு பள்ளிகளில் செயல் படுத்தப்படும் செயல் வழிக் கற்றல்.படைப்பாற்றல் கல்வி முறை, முழுமை மறு தொடர் மதிபீட்டு முறைகள் பற்றியும் ,நல திட்டங்கள் இவைபற்றி சற்று இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

******************************************************************

சனி, 1 ஆகஸ்ட், 2015

புஷ்பா மாமியின் 'பெண்'மொழிகள்


புஷ்பா மாமி அவ்வப்போது சொன்ன  பொன்மொழிகள் பெண்மொழிகள் 


  • துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்கும் வித்தியாசம் தெரிஞ்ச புருஷன்கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும் 

  • புடவைக் கடையில தன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு  கண்டு பிடிக்க தெரியாத தத்திங்கதான் இந்த ஆம்பளைங்க 

  •  புருஷன்  கொஞ்சி கொஞ்சி பேசினா, அவங்க அப்பா அம்மா ஊர்ல இருந்து வராங்கன்னு அர்த்தம் 

  •  இலட்சம் பேர் கூடி இருக்கிற இடத்தில் கூட  தன்கணவனை அடையாளம் காண இரண்டு நிமிடம் போதும் மனைவிக்கு 

  • ஆம்பளைங்க  ஒண்ணா கூடி உலக விஷயங்களை பேசினா நாட்டு நடப்பும்பாங்க. பொம்பளைங்க ஒண்ணு கூடி ஊர் விஷயத்தை பேசினா ஊர்வம்பும்பாங்க 

  • பொண்டாட்டியோட  ஃபோன் நம்பரைக் கூட காண்டேக்ட்ஸ் பாத்து கண்டுபிடிக்கிற  கணவனை திட்டாம எப்படி  இருக்கமுடியும் 

  • தன் பையன் எந்த கிளாஸ், எந்த செக்ஷன்னு கரெக்டா சொல்ற அப்பாவுக்கு கலைமாமணி பட்டம் கொடுக்கலாம்

  • 18 வயது பெண்ணோட அறிவு , 21 வயது  பையனோட அறிவுக்கு சமம். அதனாலதான் பெண்ணுக்கு திருமணவயது 18 ஆணுக்கு 21

  •  ஞாயிற்றுக் கிழமையும்  ஆடிட்டிங் இருக்குன்னு ஆபீஸ்  போறவனை நம்பக் கூடாது 

  • கல்யாணத்துல பந்தியில இடம் பிடிக்கத் தெரியாத வீட்டுக்காரரோட கல்யாணத்துக்கு  போறது வேஸ்ட் 


*************************************************

பின்குறிப்பு 
ஆண்கள் சண்டைக்கு வரவேண்டாம் ஆண்மொழிகள் விரைவில்