என்னை கவனிப்பவர்கள்

சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா?


தில்லை அகத்து குரோனிக்கல்ஸ்  வலைப் பதிவில் பதிவர் துளசி கீதா அவர்கள்  கல்வி சார்ந்த நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். கல்வியின் மீதான முக்கியத்துவத்தையும்  அவர் சமுதாயத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையையும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது . கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப் பட வேண்டும் என்ற ஆதங்கம் அவரது கட்டுரை முழுதும் காணப்படுகிறது. அவருடை நல்லெண்ணத்திற்கும் சிந்தனைகளுக்கும்  பாராட்டுக்கள் . அவரை சில முறை சந்தித்திருக்கிறேன்.அவரது ஆர்வமும் சுறுசுறுப்பும்  பரந்த அறிவும் என்னை வியக்க வைக்கும்  ஒன்று 
  அறிஞர்களும் கல்வியாளர்களும் மட்டுமே எழுதி வந்த கல்வி பற்றிய கருத்துகளும் விவாதங்களும்  இன்று பொது வெளிக்கு வந்துள்ளது இவை சாத்தியமானதற்கு இணையமும் ஒரு காரணம்.    நம்மைப்போன்ற சாதாரணர்களும் நமது கருத்தையும் வெளிப்படுத்த உதவும் களமாக இணையம் விளங்குகிறது.  பல்வேறு கோணங்களில் விவாதங்கள் முன் வைக்கப் படுகின்றன. இவை நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கொள்ளலாம் . 
      கல்வி தொடர்பான என் சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துகளை  கூற விரும்புகிறேன்.இதில் கூறப்பட்டுள்ளவை எனது சொந்தக் கருத்தே . நான் குறிப்பிடுபவை அனைத்தும் பள்ளிக்கல்வியைப் பற்றியதே . 

    பொதுவாக பலரும் விரும்புவது ஒரே சீரான கல்வி வேண்டும் ஏழைக் கொரு கல்வி பணக்காரர்களுக் கொரு கல்வி  என்ற நிலை இருக்கக் கூடாது ,நாடு முழுவதும் கல்வியில் சமச்சீர் தன்மை வேண்டும் என்பது. 
இவ்வாறு குறிப்பிடுவதில் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் . ஒன்று கற்பிக்கும் பாடத்திட்டத்தில் சமச் சீர் தன்மை, பள்ளி வசதிகளில் கிடைக்கும் சமச்சீர் தன்மை. பணக்காரப்  பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் உள்ள அத்தியாவசிய குறைந்த பட்ச வசதிகளாவது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் பாடத் திட்டத்தில் சமச்சீர் தன்மை கொண்டு வருவதில்  சில சிக்கல்கள் உள்ளன 
     அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை விட மெட்ரிக் சற்று கடினம், சி.பி.எஸ்.சி. அதைவிட கடினம். எளிய பாடத்திட்டம் சற்று கடின பாடத் திட்டம், மிக கடினமான பாடத் திட்டம் என்ற பிரிவுகள் ஏற்படுத்தப் பட்டதன்  நோக்கம்  மாணவர்களின் கற்றல் திறனுக்கு  ஈடு கொடுக்கும் வகையில் திறமையை மேலும் வளர்ப்பதாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் இதில் உள்ள குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி வியாபாரத்தை பெருக்கிக் கொண்டன. 
      இந்தியாவில் ஏராளமான பாடத் திட்ட முறைகள் பின்பற்றப் படுகின்றன . தமிழ் நாட்டிலும் மாநில அரசு பள்ளி ,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய,மத்திய அரசின் சி,பி எஸ்.சி பள்ளிகள் ,இன்டர்நேஷனல் பள்ளிகள் என பல்வேறு கல்வித் திட்டங்கள் நடை முறையில் உள்ளன. இதில் மாநில அரசின் கல்விப் பிரிவுகளாக  அரசு,மெட்ரிக் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்ட முறைகள்  பத்தாம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்தன தற்போது சமச்சீர் கல்வி முறை மூலம், தமிழ்நாடு  மாநில அரசு கல்வி முறைகள் அனைத்தும் ஒன்றாகி விட்டன. அவை அனைத்தும் +2 வரை ஒரே பாடத் திட்டத்தையே பின்பற்ற  வேண்டும்.
    முழுமையான   சமச்சீர் கல்வி என்பது விவாதத்திற்குரியது .தனியார் பள்ளிகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப் பட்டால் ஒழிய கல்வியில் சமத்தன்மை பின்பற்றுவது சாத்தியமல்ல. என்னைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு எளிமையான கல்வி பணம் படைத்தவர்களுக்கு கடினமான கல்வி முறை பின்பற்ற வேண்டும் என்று கருதுகிறேன். இதன் பொருள் அரசு பள்ளிகளுக்கு சற்று எளிமையான கல்வி திட்டம். காரணம் வாழ்க்கையே போராட்டமான சூழலில் இருந்து வருபவர்க்கு  ஆதரவு அளிப்பது அரசு பள்ளிக் கூடங்களே .கல்வி திட்டம் கடுமையாக இருந்துவிட்டால் இடைநிற்றல் அதிகமாகி விடும். அதனால்தான் 8 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி வழங்கப் படுகிறது. அனைவருக்கும் தேர்ச்சி வழங்கக் கூடாது அதனால்தான் தரம் குறைந்து விட்டது என்று கூறுவோர் உண்டு /இதில்  ஆசிரியர்களும் அடக்கம். நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தை உணர முடியும் முன்பெல்லாம் மாணவர்களை பெயில் ஆக்க முடியும். அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த ஆண்டில் தேர்ச்சிக்குரிய  அடைவைப் பெற்றிருப்பார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.அடுத்த ஆண்டு வேறு வழியில்லை என்று பாஸ் செய்து அனுப்பி விடுவார்களே தவிர  கற்றல் நிலையில் முன்னேற்றம் இருக்காது . தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் பள்ளியை  விட்டு நின்று விடுவார்கள். இதைத் தவிர்க்கவே முழுத் தேர்ச்சி அனுமதிக்கப் படுகிறது. அதனால் தேக்கம் செய்வதில்  எந்த பயனும் இல்லை.. எளிமையான பாடத்திட்ட த்திற்கே இந்த நிலை என்றால் கல்வி கடினமாக இருந்தால் எப்படி இருக்கும்?. பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்கே  பெரும்பாடான நிலையில் தரமான கல்வி என்ற பெயரில் கடுமையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளுக்கும் பொருத்தினால் ஒரு தேக்க நிலை உருவாக வாய்ப்பு உண்டு. (கடினமான பாடத் திட்டத்தை தரமான கல்வி என்று பலரும் நம்புகிறார்கள் உண்மையில் கல்வியின் தரம் பாடத்திட்டம் மட்டும்  சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு தனிப் பதிவு எழுத வேண்டும்) 

    சீரான கல்வி திட்டம் செயல் படுத்தப் படும்போது சில சிக்கல்கள்  எழுவது இயல்பானதே. தமிழ் நாட்டில் இப்போது சமச்சீர் கல்வி முறை உள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் +2 தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அனைத்து முறை பள்ளிகளுக்கும் ஒரே +2 சிலபஸ்தான்  . ஒரே பொதுத் தேர்வுதான் சி பி. எஸ் சி பள்ளிகளைத் தவிர. இதர பள்ளிகளான மெட்ரிக் ,ஆங்கிலோ இந்தியன்,பள்ளிகளிலும் +2 வுக்கு மட்டும் ஒரே பாடத் திட்டம்தான் பின்பற்றப் பட்டு வருகின்றன.   முன்பு இவை 10 வகுப்பு வரை வெவ்வேறு பாடத்திட்டங்களை பின்பற்றி வந்தன. தற்போது சில ஆண்டுகளாகத்தான் 10 வகுப்புவரையிலான பாடத் திட்டமும் மாநில கல்வித்திட்ட பள்ளிகளுக்கும் ஒன்றாக உள்ளது. அது மிக எளிமையானது. அது மெட்ரிக் பள்ளிகளுக்கு சாதகமாகப் போய் விட்டது . எளிமையான பாடத் திட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் மதிப்பெண்களை வாரிக் குவித்து விடுகின்றன. இதனால் பாதிக்கப் படுவது அரசு பள்ளி மாணவர்கள்தான். என்றாலும் தனியார் பள்ளிகள் 10 வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை விரும்புவதில்லை. 

       என்னைப் பொருத்தவரை தனியார் பள்ளிகளுக்கு கடுமையான பாடத் திட்டம் வைக்கவேண்டும். அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் தங்கியுள்ள நிலையில் உள்ள  முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும்போது எளிமையாக கல்வி  அவர்களை அச்சுறுத்தாத வகையில் அமைய வேண்டும். படித்த தலைமுறையினரின் பிள்ளைகளோடு ஏழைப் பிள்ளைகள் போட்டியிடுவது எளிதல்ல .  

  பொறியியல் மருத்துவம் முதலியவற்றில் சேர்க்க  +2 வில் பெறும் மதிப்பெண்களே  அடிப்படை.  +2 பாடத் திட்டம் அரசுபள்ளிக்கு  தனியாகவும் தனியார பள்ளிகளுக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.  என்பது என் கருத்து. கடினமான சிலபஸில் குறைவான மதிப்பெண்களே பெற முடியும். அதனால் அதை பெற்றோர் விரும்ப மாட்டார்கள் அப்படி செய்தால் பல மெட்ரிக் பள்ளிகள் நிலை சரியத் தொடங்கும். கல்வி வியாபாரத்தை ஓரளவாவது தடுக்கலாம்.
     சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும்  வரை தனியார் பள்ளிகள் 10  வகுப்பு வரை கடினமான சிலபசை பயன்படுத்திவிட்டு +2 வுக்கு எளிதான ஸ்டேட் போர்ட் தேர்வில் மதிப்பெண்கள் பெற வைத்து விடுகின்றன . இப்போது எளிமையாக்கப் பட்ட சமச்சீர் கல்வி அவர்களுக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.  10வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வியை தரமற்றது என்று எதிர்த்த தனியார் பள்ளிகள்,  தொடங்கிய காலத்தில் இருந்தே பொதுவாக இருந்து வரும் +2 பாடத் திட்டத்தை தங்களுக்கென்று தனியாகக் கோரவில்லை.காரணம் இந்த +2 வில்தான் அதிக மதிப்பெண் பெற வைக்க முடியும்.  சி.பி எஸ்.சிக்கு மாறி விடுவோம் என்று பூச்சாண்டி காட்டினவே தவிர  மாறவில்லை.ஏனெனில் சி.பி.எஸ்.சி +2 வில் மதிப்பெண்கள் எடுக்க வைப்பது  கடினம். 

     சிலர் மதிப்பெண் பெரும் நோக்கத்துக்காகவே 10 வரை சி.பி.எஸ்.சி யில் படித்தவர் +2 வின் போது ஸ்டேட் போர்டுக்கு  மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. புகழ் பெற்ற கல்லூரிகளில் மருத்துவம் பொறியியல் சேர்க்கைக்கு சி.பி.எஸ்.சி யில் பெறும்  மதிப்பெண்கள் போதுமானதாக இருப்பதில்லை. அதீத திறமை வாய்ந்தவர்களே இதில் சாதிக்க முடியும். அதனால் ஸ்டேட் போர்டு +2 வுக்கு மாறி விடுகிறார்கள் இப்படி கல்வி முறையை விருப்பம் போல் மாற்றிக் கொள்ள அனுமதிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது.அவர்கள் பின் தள்ளப் படுகிறார்கள்.

  இன்று அரசு பள்ளிகள் மாணவரின்றி காலியாகக் கிடக்கின்றன. எவ்வளவுதான் இலவச திட்டங்கள்  நடைமுறைப் படுத்தபட்டாலும் ஆங்கில மோகம் காரணமாகவும் சற்று வசதிவாய்ப்புகள் பெருகியதன் காரணமாகவும் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் பெற்றோர்.இதன் காரணமாகத்   அரசு பள்ளிகளில்  ஆங்கில வழிக் கல்வியும் நடை முறைப் படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மாணவர் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயரத்த இது உதவவில்லை. அரசு பள்ளியில் பயின்றவர்க்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகள்  உயர் அதிகாரிகள் உட்பட  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். நடுத்தர மக்களை அரசு பள்ளிகள் பக்கம் ஈர்க்க இது ஒரு வழியாக அமையும்.

      ஆனால் அரசு பள்ளிகளில் தரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யப் படுகிறது.அப்படியானால் அரசு பள்ளிகளில் குறைகளே இல்லையா என்றால் ஏராளமாக உள்ளது, ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக் குறைவு,உள்கட்டமைப்பு வசதிகள்(தற்போது பல தனியார் பள்ளிகளை விட மேலான நிலையிலேயே உள்ளது)நிர்வாக சிக்கல்கள் கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் பணியாற்ற விரும்பாமை, வேறு சில நிர்பந்தங்கள்   போன்றவை  அரசு பள்ளிகளுக்கு தடையாக உள்ளன .

    தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப் படுவதாக வந்த செய்திகளை பத்திரிகைகளில் படித்திருக்கலாம் ஆசிரியர் இல்லாத காரணத்தால் பள்ளிகள் மூடப் படுவதில்லை. மாணவர்கள் இல்லாததால்தான் பள்ளிகள் மூடப் படும் நிலை ஏற்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை  ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு பள்ளியாவது இருக்கிறது. 

     இந்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ்  தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்பில் ( L.K.G , VI) 25% இட ஒதுக்கீடு வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரிவினர். நலிவடைந்த பிரிவினருக்காக  வழங்க வழி வகை செய்யப் பட்டிருக்கிறது. இதில் மைனாரிட்டி பள்ளிகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு. இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கட்டணத் தொகையை அரசாங்கமே வழங்க முன் வந்துள்ளது.  இதனால் அரசு பள்ளிகளில் சேர்க்கை மேலும் குறைவதற்கானநிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏரளமான தனியார் பள்ளிகளும் புற்றீசல் போல் முளைத்து வருகின்றன.  

    கடந்த தலைமுறையில் அரசு பள்ளியில் பயின்று  தற்போது நல்ல நிலையில் உள்ள பெற்றோரின்  மனப்பான்மை காரணமாகவே கல்வி வியாபாரமாகி விட்டது. இந்த அணுகுமுறையே கல்வியை சந்தைப் பொருளாக்கி விட்டது. இன்னும் சிந்திக்கப் படவேண்டியதும் விவாதிக்கப் படவேண்டியதும் பல உள்ளன. நீளம் கருதி   இத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தொடர்கிறேன்.
   கீதா அவர்களின் பதிவில் ஜோதிஜி அவர்கள் கூறியுள்ள கருத்து கவனிக்கத் தக்கது..தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் முறைகள், அவை பின்பற்றும் நடைமுறைகள்,  பற்றி எழுத பல பக்கங்கள் தேவை.
அரசு பள்ளிகளில் செயல் படுத்தப்படும் செயல் வழிக் கற்றல்.படைப்பாற்றல் கல்வி முறை, முழுமை மறு தொடர் மதிபீட்டு முறைகள் பற்றியும் ,நல திட்டங்கள் இவைபற்றி சற்று இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேன்.

******************************************************************