என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2016

அம்மா! தரையினில் புதைந்தாய்! தரணியில் உயர்ந்தாய்!



                                        சாவெனும் வடிவம் கொண்டு
                                               காலனும் வந்து சேர்ந்தான் 
                                       போவென அவனை விரட்டும்
                                              போராட்டம் ஓய்ந்ததாலே
                                        தாவென உந்தன் உயிரை
                                              தட்டியே  பறித்து விட்டான் 
                                       ஓ!வென அலறிய ஒலியால்
                                                 உலகமே அதிர்ந்ததம்மா 

                                        அம்மா என்றழைக்க வைத்தாய்
                                                அச்சமும் கொள்ள வைத்தாய் 
                                        அம்மாஉன் பெயரைச் சொல்ல 
                                                ஆயிரம் திட்டம் செய்தாய்
                                         சும்மா இருந்த சிலரை
                                               சுலபமாய் உயர்த்தி விட்டாய் 
                                         இம்மாநில மக்கள்  மனதில்
                                                இமயமாய் உயர்ந்து நின்றாய்    
        
                                        இன்னலே வாழ்க்கை முழுதும்;
                                             இனிமையோ சிறிதே எனினும்  
                                        மின்னல் போல் ஒளிரும் முகத்தில்  
                                                இடர்களை மறைத்தே வைத்தாய் 
                                        கண்ணிலே கனிவும் உண்டு
                                               கடுமையும்  அதிலே உண்டு
                                        மண்ணிலே நீயும் இன்று 
                                              மகத்தான பெண்ணாய் மறைந்தாய் 
        
                                        நிறைகளால் மட்டும் எங்கள் 
                                               நெஞ்சங்கள்  நிறைந்த தாலே  
                                       குறைகளை சொல்ல நினைத்தும் 
                                                 குரலது எழும்ப  வில்லை
                                       அறையினில் இருந்த போதும்
                                               அனைவரையும் ஆட்டு வித்தாய்
                                       தரையினில் புதைந்தாய் எனினும்
                                              தரணியில் நிலைத்து நின்றாய் 

------------------------------------------------------------------------------------------------------------------

   
   

     


     
     



புதன், 26 அக்டோபர், 2016

திருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ


  பாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே! தனி ஊசல் தத்துவம் வானியல் தொலை நோக்கி போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. வாழும் காலத்தில் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. பழமை வாதிகளிடம்  போராட வேண்டி இருந்து .மத நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் எப்போதும் முரண்பாடு இருந்தே வந்ததுள்ளது அந்த முரண்பாடு கலீலியோவை நிம்மதியாக வாழ விடவில்லை.

   அக்காலத்து வானியல் அறிஞர்களும் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. என்று கூறினர். ஆனால் கோபர் நிகஸ் என்ற வானியல் அறிஞர்  சூரியனை சுற்றித்தான்  கோள்கள் இயங்குகின்றன என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஆனால் அவர் கருத்தை அவரது சமகாலத்தவர்  ஏற்கவில்லை. ஆனால் அவருக்குப் பின் சில அறிஞர்கள் இக்கருத்தின் உண்மையை புரிந்து கொண்டாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்.

   ஆரம்பத்தில் இருந்தே கலீலியோ சூரிய மையக் கொள்கையை நம்பினார் என்றாலும் வெளியே சொல்லவில்லை. பல காலம் தான் கண்டுபிடித்ததை தொலை நோக்கி மூலம்  ஆரய்ச்சி செய்து தக்க சான்றுகள் கிடைத்ததும் பகிரங்கமாக கோபர்நிக்கசை ஆதரிக்கத் தொடங்கினார். கோபர் நிக்கசின் கோட்பாட்டைப் பற்றி இத்தாலி மொழியில் எழுதினார். அப்போதைய பல்கலைக் கழகங்கள் அதனை ஏற்கவில்லை எனினும் அவற்றிற்கு வெளியே பரவலான ஆதரவு கிடைத்தது. கலீலியோவின் புகழ் பரவத் தொடங்கியது .இது அரிஸ்டாட்டில் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ள பேராசிரியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.. 'ஒன்னு கூடிட்டாங்கய்யா  ஒன்னு கூடிட்டாங்க' என்ற வடிவேலு சொல்வதை போல பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி கோபர் நிக்கசின் கொள்கை விவிலியத்துக்கு எதிரானது என்று கூறி தடை செய்யும்படி கத்தோலிக்க திருச்சபையிடம் போட்டுக் கொடுத்தனர்.

    இதனால் வருத்தமுற்ற கலீலியோ சமய குருமார்களிடம் இதைப் பற்றிப் பேச ரோமாபுரி சென்றார். அறிவியல் கோட்பாடுகள் பற்றி நமக்கு சொல்வது விவிலியத்தின் நோக்கமல்ல எனவும் அறிவியலோடு விவிலியம் முரண்படும்போது அதனை உருவகமாகக் கொள்வதே வழக்கம் என்று வாதாடிப் பார்த்தார் . காதில் பஞ்சை வைத்துக் கேட்டால் இசை என்ன? இடியோசையாக இருந்தாலும் எப்படிக் கேட்கும்?  கோபர் நிகஸ் கொள்கை பொய்யானது;  பிழையானது என்று அறிவித்தது திருச்சபை . இக்கோட்பாட்டை ஆதரிக்கக் கூடாது என்று கலீலியோவிற்கு ஆணை இட்டது திருச்சபை . கலீலியோவும் வேறு வழியின்றி  பணிந்து போனார் 

   இந்நிலையில் கலீலியோவின் நெடுநாளைய  நண்பர் ஒருவர் போப்பாண்டவர் ஆனார்.கலீலியோவுக்கு  விதித்த தடை உத்தரவை நீக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும் அரிஸ்டாட்டில், கோபர்நிகஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளைப் பற்றி விவாதம் செய்கிற நூல் ஒன்றை எழுத அனுமதி பெற்றுத் தந்தார் இரண்டு நிபந்தனைகளுடன். ஒன்று இந்த விவாதத்தில் கலீலியோ எந்தப் பக்கமும் சேரக் கூடாது இரண்டாவது உலகம் எப்படி இயங்குகிறது என்பதை மனிதனால் அறிய முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டும்.
    
     ஏதோ இந்த அளவுக்காவது அனுமதி கிடைத்ததே என்று மகிழ்ந்தார் கலீலியோ. Dialogue Concerning the Two Chief world systems" என்ற நூலை எழுதி முடித்தார். திருச்சபையின் தணிக்கைக்கு அனுப்பட்டு ஒரு வழியாக அனுமதிக்கப் பட்டு நூல் வெளியாகியது . இந்நூலுக்கு எதிர்பாராத வகையில் வரவேற்பு கிட்டியது. கோபர்நிக்கசின் கொள்கை உண்மை என்று ஏற்றுக்  கொள்ளத் தக்க வகையில் நூல் அமைந்துள்ளதாக பலரும் கருதினர். கோபர்நிகசின் சூரிய மையக் கொள்கையை நம்பத் தொடங்கினர் மக்கள்.

   இதன் காரணமாக நூல் எழுத அனுமதி தந்த போப்பாண்டவர் நூலை வெளியிட அனுமதி அளித்தமைக்காக வருத்தப் பட்டதோடு. நண்பர் என்றும் பாராமல் நிபந்தனைகளை மீறியதாக கலீலியோவை திருச்சபை மன்றத்தின் முன் நிறுத்தினார் . இம்முறை கலீலியோவுக்கு ஆயுட்கால தடை விதித்து வீட்டுக் காவலில் வைத்தது  திருச்சபை.  இரண்டாம் முறையாக அடங்கிப் போனார் கலீலியோ 

  கலீலியோ விசுவாசமான கத்தோலிக்கராக தன்னை காட்டிக் கொண்டாலும் அறிவியல் மீது அவர் கொண்ட நம்பிக்கையை கைவிடவில்லை. ஆயுள் முழுதும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டாலும் சும்மா இருக்கவில்லை. தன் இரண்டாம் நூலை எழுதி விட்டார் கலீலியோ. அவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவரது நூலின் கையெழுத்துப் பிரதி ஹாலந்திற்கு கடத்திச் செல்லப் பட்டது. இரு புதிய விஞ்ஞானங்கள் (Two New Sciences) என்ற இந்த நூல் நவீன இயற்பியலின் தொடக்கமாக அமைந்தது எனலாம். 
விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் மதங்களுடன் போராட வேண்டி இருந்தது என்பதற்கு கலீலியோவின் வாழ்க்கை ஒரு உதாரணம் . 
 கலீலியோவுக்கு எதிராக திருச்சபை செயல்பட்டது அங்கிருப்பவர்களுக்கே நெடுநாள் உறுத்தலாகவே அமைந்தது. சில நூறாண்டுகள் கடந்த பின் 1992 இல் கலீலியோவை   திருச்சபையால் நடத்தப்பட்ட விதத்திற்காக  வருத்தம்   தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது   

*******************************************************************
கொசுறு : .."..அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்." என்று இப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . அப்படி என்ன கதி என்று நீங்கள் கேட்கலாம். அதைக் கேட்டால் கொஞ்சம் திகைத்துத் தான் போவீர்கள். இதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம் 

*************************************************************************

இதைப் படித்து விட்டீர்களா 







  • பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்? பகுதி 2

  • ஐசக் நியூட்டன்-விஞ்ஞானியா? அரசியல்வாதியா?

  • ******************************

  • சனி, 22 அக்டோபர், 2016

    திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்


    அன்பு அன்பரே!

    வணக்கம்.
        திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக்   கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய். உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?

        பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? . வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள்  காண இயலாதே?  பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும். உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய்.  பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே! 

       நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய். திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே! வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது  கண்டு  வருத்தப் பட்டிருப்பான்.   திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா?  எந்த ஒரு கருத்தாக  இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!

       அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தைகள் காட்டி எங்களை மகிழ்வித்தாயே!  உனது வலைப்பதிவுகளில்  எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும்.   சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் பல வித்தை . உன்க வலைப்பூ காண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே!  இவற்றை எல்லாம் எப்படிக்  கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.

      பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா? பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய  கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க  உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும்  இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர்   ஆயிற்றே. 

      கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு  வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள்.காட்சியளிப்பார்களாம் அது போல ஒளிந்து நின்று ஆட்டம் காட்டுகிறாயோ!
       புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்கு காரணமானவனே!  அந்த திருவிழாவிற்குப் பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல்  ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!

       கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான்., ஆனால் அவை  எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்.. 
          காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னனக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற  ஆணை மறுக்கலாம். ஆனால்  உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச  நீதி மன்றம் சென்று உத்தரவு  பெற்று வருகிறோம்?

                                                                                          அன்புடன் 
                                                                   உந்தன் வரவை எதிர்நோக்கும் 
                                                                               வலைப்பூ நண்பர்கள் 



    வியாழன், 13 அக்டோபர், 2016

    நாய் குணம்! கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை?

                                      

    உங்களுக்கு ஒரு எளிய சவால் 
    இந்தக் கதையை  ஒரு பிரபல எழுத்தாளரின்  கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இருக்கிறேன். இந்தக் கதையின் மூலத்தை எழுதியவர் யார்? கதையின் தலைப்பு என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 

                                      தெருவில் சுற்றித் திரியும் நாய் நான்.
                                      நிறமே அழுக்காம் நீட்டிய பல்லாம்  
                                      சிதைந்த  வாலாம் சீரிலா  உடலாம்
                                      சிதறிய  குப்பைத்  தொட்டியே வீடாம்

                                      எங்கே பிறந்தேன் எப்படி வளர்ந்தேன்
                                      என்பதை நானே இதுவரை அறியேன்                   
                                      கண்டவர்க் கெல்லாம் வாலை ஆட்டியும் 
                                      துண்டு ரொட்டியும் கிடைப்பது பாடாம்

                                      நாய்கள் என்னை நம்ப மறுத்தன
                                      போ! என  என்னைக் கடித்து விரட்டின                                   
                                       கிடைத்ததைத் தின்று பசி மறந்திருந்தேன் 
                                      அடுத்தவர் தயவில்  உயிர் பிழைத்திருந்தேன் 

                                       சுருண்டு படுத்துக் கிடக்கும் வேளையில்
                                       இரண்டு கண்ணும் தெரியாக் குருடன்                                   
                                      கடைத் தெரு அருகில் கண்ணில் பட்டான்
                                      கையை நீட்டிப்   பிச்சை கேட்டான்

                                      ஒரு பெண் தினமும் உதவிட வருவாள்
                                      உணவினைத் தந்தவன்  இருப்பிடம்  சேர்ப்பாள்   
                                     ஒருநாள் உணவின் வாசம் இழுக்க
                                      நெருங்கிச் சென்றேன்  குருடனின் அருகில்

                                      யாரோ அருகில் இருப்பதை உணர்ந்தான்
                                      நாயென அறிந்தும்  உணவைக் கொடுத்தான்

                                      நானும் அவனும் நட்பால் இணைந்தோம்
                                      தினமும் இருவரும் ஒன்றாய்த் திரிந்தோம்                           
                                      உணவு கொடுத்த  அவனே கடவுள்
                                      உணர்வு பொங்க உதவிட நினைத்தேன்

                                      பிச்சை ஏதும் இடாமல்  செல்ல 
                                      நிச்சயம் யாரையும் விடுவது இல்லை                                
                                      பற்றி இழுத்து வருவேன் அருகில்
                                      பயந்து பணத்தைப் போட்டார். தட்டில்

                                      பிச்சைக் காரனை ஏய்த்திட ஒருவன்
                                      அச்சம் இன்றி அருகில் வந்தான்                             
                                      தட்டில் உள்ள பணத்தை எடுத்தான்
                                      எட்டித் தாவிப் பிடித்திட முயன்றேன் 

                                      பாய்ந்து சென்றேன் பற்றிக் கடித்தேன்.
                                      பிய்ந்தது  ஆடை! பின்னரே விட்டேன்!
                                      அவனால் தொல்லை அதன் பின் இல்லை'
                                      அகமே மகிழ்ந்து என்னை அணைத்தான்

                                       உதவிய பெண்ணோ ஒரு நாள் இறக்க
                                       கதறி  அழுதான் கண்ணிலாக் குருடன்  
                                     அப்போ தங்கே வந்த ஒருவன்
                                      ரிப்பன் ஒன்றைக் கயிறாய் தந்தான்

                                      இனிமேல் அதனைக் கட்டி வைப்பாய்
                                      துணையாய்  உனக்கு வழியைக் காட்டும்  
                                      என்றே என்னைச் சுட்டிச் சொன்னான்
                                      நன்றியுடன் நான்  சம்மதம்  கொண்டேன்

                                      என்னுடை வாழ்க்கை மாறிப்போனது
                                      கண்ணிலாக் குருடனின் கைப்பிடி  சேர்ந்தபின்
                                     அவனை அழைத்துச் சென்றிட வேண்டும்
                                      அவன் சொல் கேட்டே நடந்திட வேண்டும்

                                      சுயநலப் பிச்சைக் காரன் அவனோ
                                      கயவனாய் மாறிக் கவலை தந்தான் 
                                      சற்று நகர்ந்தால் எட்டி உதைத்தான்
                                      சுற்றிய கயிறை  இறுக்கிப் பிடித்தான்

                                      கடுமொழி பேசிக் காயப் படுத்தினான்
                                      கொடுமை புரிந்தெனை அடிமை ஆக்கினான் 
                                       கிட்டா தெனக்கு சுதந்திரம் இனிமேல் 
                                      எட்டாதெனக்கு எலும்புத் துண்டுகள்

                                      ஒற்றைக் கயிறு என்னைப் பிணைக்க
                                      சுற்றித் திரிந்த சுதந்திரம் போனது
                                      கயிறின் நுனிவரை மட்டுமே  எல்லை
                                      தாண்டிட நினைத்தால் தருவான் தொல்லை

                                      வெடுக்கெனக் கடித்து  ஓடிட நினைப்பேன்'
                                      தடுத்திடும் என்னை ஏதோ ஒன்று                                   
                                      கொடுமைக் காரன் அவனிடம் இருந்து
                                       விடுதலை கிடைக்க ஏக்கம் கொண்டேன்

                                     படைத்தவன் என்னைக் கைவிடவில்லை
                                     கடைத் தேறிடவே காலம் வந்தது                     
                                     கயிறு தந்த கனவான் வந்தார்
                                     துயரம் கொண்டார்  என் நிலை அறிந்து

                                      சத்தம் இன்றி அறியா வண்ணம்
                                      கத்தரி எடுத்துக் கயிறை அறுத்தார்
                                      விட்டு விடுதலை ஆகிச் சென்றேன்
                                      சிட்டுக் குருவி போலே பறந்தேன்

                                      மண்ணில் புரண்டேன் மழையில் நனைந்தேன்.
                                      கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும்                              
                                      கால் வலி வரும் வரை நடந்து சென்றேன்.
                                      களைப்பே இன்றி நினைத்ததைச் செய்தேன்.

                                      தப்பி நான் சென்றதை அறிந்த குருடன்
                                      எப்படி? என்று கோபம் கொண்டான் 
                                      கூக்குரலிட்டான்! கூவி அழைத்தான் 
                                       கேட்பதற் கென்று  யாரும் இல்லை


                                      உடல் நலம் நலிந்தான் உள்ளம் சோர்ந்தான்
                                      நடத்திடத் துணையிலை;  வீட்டில் கிடந்தான்  
                                      நாட்கள் நகர்ந்தன; நானும் மறந்தேன்
                                      ஆட்கள் சில பேர் குருடன் இன்று

                                      இறப்புக்கு அருகில் இருக்கிறான் என்று 
                                      கூறிச் சென்றது காதில் விழுந்தது
                                      'கண்ணை இழந்தவன் கடுந்துயர் மறந்தேன்
                                      என்ன பிறவிநான்! இப்படி இருந்தேன் 

                                      நன்றி மறத்தல் நாயெனக்கழகா?
                                      பன்றிகள் தானே பண்பாடிழக்கும் "
                                       பரிவு   படர்ந்தது   பாசம்  வென்றது
                                      துரித மாகவே அவனை அடைந்தேன்.

                                      நெருங்கி அவனது காலைத் தொட்டேன்
                                       சுருங்கிக் கிடந்தவன் என்னை அறிந்தான்  
                                     முடங்கிக் கிடந்தவன் மெல்ல  எழுந்தான் 
                                      தடங்கல் இல்லாத் தமிழில் தாக்கினான் 

                                      நாயே! எனைஏன் விட்டுச் சென்றாய்
                                      பேயே! எனக்கேன் பெருந்துயர் தந்தாய் 
                                      உப்பிட் டவனை உதறிய நாயே! 
                                      தப்பிச்  செல்ல முடியாதினிமேல்  

                                      சட்டென என்னை அழுத்திப்  பிடித்தான் 
                                       கெட்டிச் சங்கிலி கொண்டெனைப் பிணைத்தான்
                                       பாத்திரம் நிறைத்த உதவி மறந்து 
                                      ஆத்திரம் தீரும் வரையில் அடித்தான்

                                       கட்டிய சங்கிலி கழுத்தை இறுக்க '
                                       முட்டாளானதை முழுதும்உணர்ந்தேன்  
                                       மனிதன் குணத்தை அறியா மடையன்
                                       புனிதன் என்றே நினத்த மூடன்
                                       அவனா குருடன்? இல்லை! இல்லை! 
                                       எவனோ சொன்னான்  நானே குருடன்




    விடை நாளை:



    சனி, 1 அக்டோபர், 2016

    தற்கொலைக்கு முயன்ற காந்தி


           காந்தி பிறந்த நாளுக்கு யாரவது வருத்தப் படுவார்களா?  இவ்வாண்டு சிலர் ஆதங்கப் பட்டார்கள். அக்டோபர் 2  ஞாயிறன்று வந்து விட்டது, ஒரு நாள் விடுமுறை வீணாகி விட்டதே! என்று.  அந்த அளவில்தான் காந்தி நினைவு கூரப்படுகிறார்.  இளைய தலைமுறையினர் பலர் காந்தியின் மீதான மரியாதை குன்றியவர்களாகவே இருக்கிறார்கள். காந்தியடிகளின் கொள்கைகள் செயல்பாடுகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும் காந்தி இந்தியாவின் அடையாளங்களின் ஒன்று என்பது உண்மை. காந்திக்கு நெருக்கமான நேரு போன்றோர் காந்தியின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்று கூற முடியாது. இருப்பினும்காந்தியின் ஆளுமையை அவர்களால் மீற முடியவில்லை.

       யாராக இருந்தாலும்  தங்களை நல்லவராகவும் வல்லவராகவும் காட்டிக் கொள்ள முயல்வார்கள்  நாம் செய்த தவறுகளை தங்கள் பலவீனங்களை மற்றவர்களிடத்து நிச்சயம் சொல்ல விரும்ப மாட்டோம். ஆதுவும் பிரபலங்களாய் இருப்பவர்கள் சிறு வயதில் இருந்தே தாங்கள் உத்தம புத்திரர்கள் என்று நிறுவவே முற்படுவர். ஆனால் காந்தி தான் செய்த தவறுகளை குறிப்பிட்டுக் காட்ட வெட்கப் படவில்லை. பொய் சொல்வதற்கு தேவையான தைரியத்தை விட உண்மை சொல்வதற்கு அதிக தைரியம் வேண்டும் என்று காந்தி நம்பினார். அந்த மன உறுதி காந்திக்கு இருந்தது தனது "சத்திய சோதனை"யில் அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள்

    " .......... புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும்,   நான் செய்த  வேறு சில    தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை என் விவாகத்திற்கு முன்போ, விவாகமான   உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில்  நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட்டுப் புகையின் வாசனை எங்களுக்குப்  பிரியமாக இருந்ததோ இதற்குக் காரணம் அல்ல எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான  இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம்.  என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.அவர் புகை பிடிப்பதைப்  பார்த்தபோது   நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், எங்களிடம்    காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும்  சிகரெட்டுத்   துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம். ஆனால் சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே? பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். பீடியை வாங்கி எங்கே வைப்பது என்ற பிரச்னை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில்  நாங்கள் பீடி பிடிக்கமுடியாது. சில வாரங்கள் வரையில்   திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.    இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின்  தண்டு, துவாரங்கள் உள்ளது என்றும்,     சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும்     கேள்விப்பட்டோம். அதைத்தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

        இவை போன்றவைகளினாலெல்லாம்     எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல்   செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதி இல்லாமல்     எதையுமே நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத்  தோன்றியது. கடைசியாக வாழ்வே  முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!

         ஆனால், தற்கொலை செய்து   கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம்.     அவ்விதையைத்  தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு  வந்துவிட்டோம். மாலை நேரமே இதற்கு        நல்லவேளை என்றும்  முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்குப் போய் அங்கே  விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம்   செய்து  கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல்        வரவில்லை.   உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை?   சுதந்திர மின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது?      என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள்       இருவருக்குமே  சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக்கொள்ள ராம்ஜி கோயிலுக்குப்போய் தற்கொலை எண்ணத்தையே         விட்டுவிடுவது  என்று முடிவு செய்தோம்.

         தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப்போல,  தற்கொலை செய்து கொண்டு விடுவது  அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அதிலிருந்து,  யாராவது தற்கொலை செய்து கொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்  என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு  நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப்பு கை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக   வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்..

      நான் பெரியவனான      பின்பு,  புகை பிடிக்கவேண்டும் என்று   விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டுமிராண்டித் தனமானது , ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும்         கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலுமே புகை பிடிப்பதில்   இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது எனக்கு விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே  எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது........"

    என்று செல்கிறது அவரது விவரிப்பு . சத்திய சோதனையில் காந்தி விவரிக்கும் பல சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவன. இன்னொரு பதிவில்  பார்ப்போம் 

    ***************************************************
    தொடர்புடைய பதிவுகள் 



    ******************************************************************************************************************


    புதன், 28 செப்டம்பர், 2016

    இதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்?



       நாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல்  சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்தான் பேட்டரி முழுதுமாக தீர்ந்து நம்மை கடுப்பேற்றும். நாம் வேறு யாருடைய சார்ஜரையவது பயன்படுத்தலாம் என்றால் நம்முடைய மாடல்  சார்ஜர் பின்   பொருந்தாமல்  தண்ணி காட்டும். பின் பொருத்தமாக இருந்தாலும் வேறொரு மொபைலின் சார்ஜராக இருந்தால் பயந்து கொண்டே சார்ஜ் செய்வோம். மொபைல் வாங்கும்போதே வேறு கம்பெனியின் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது எச்சரிப்பார்கள்.  சார்ஜர் பற்றி பல்வேறு ஆலோசனைகள் பலரும் தந்தவண்ணம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவற்றில்த பலவாறு தவறு என்று கூறுகிறது www.techrepublic.com/ என்ற வலை தளம்
    பேட்டரி சார்ஜர்கள் பற்றிய 10  தவறான புரிதல்கள் என்னென்ன அவற்றிற்கான விளக்கங்கள் என்ன  எனப் பார்க்கலாமா?  
    (இந்த பத்து கருத்துக்களுக்கும்  நீல கலர்ல  ஒரு கவுண்டர் போட்டிருகேன். அத யாரு கொடுத்துருப்பாங்கன்னு நீங்களே உங்க இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாதீங்க. அதுவும் misconceptionதான் 

    1. பேட்டரிக்கு மெமரி உண்டு 
    உண்மை : நிச்சயமாக இல்லை. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் சார்ஜ் முழுவதுமாக குறைந்தவுடன் மீண்டும் 100% சார்ஜ் செய்தால்தான் முழுமையான பயன் கிட்டும் .உதாரணத்திற்கு 50% மேல் சார்ஜ் ஆகி இருந்து அன்ப்ளக் செய்து விட்டால் அடுத்த முறை சார்ஜ் செய்யும்போது அதனையே 100 % ஆக நினைவில் கொண்டு  அந்த அளவே சார்ஜ் செய்யும் என்று சொல்லப் படுகிறது .சார்ஜ் திறன் குறைந்து விடும் என்றும்கூறப்படுகிறது. இது தவறானது.எப்படி வேண்டுமானால் சார்ஜ் செய்யலாம் எந்த பாதிப்பும் ஏற்படாது

    (பேட்டரிக்கு மெமரி இருந்தா என்ன இல்லன்னா என்ன யாருக்கு இருக்கணுமோ அவங்களுக்கு இல்லையே என்னைக்கு என்னோட பொறந்தா நாள் என்னைக்காவது மெமரில இருந்திருக்கா?) 

    2. நமது மொபைல் பிராண்ட்  அல்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் பேட்டரி பாதிக்கப்படும் 
    உண்மை :இதுவும் தவறான பரப்புரையே. தரமான எந்த சார்ஜராக இருந்தாலும் எந்த பாதிப்பும் வராது.மெதுவாக சார்ஜ் செய்யும் சார்ஜராக  இருந்தாலும் கவலைப் படவேண்டியதில்லை.

    (இதுகூடவா புரியல. இத நெட்டில படிச்சுதான்  தெரிஞ்சுக்கனுமா கம்பெனி காரன் கட்டி விட்ட  கதை மட்டுமில்ல. எவனும் சார்ஜர் ஒசி கேக்கக் கூடாதுன்னு எவனோ கிளப்பி விட்டதுதான்) 

    3.இரவு முழுதும் மறந்து  போய்  சார்ஜரை ஆஃப் செய்யாமல் விட்டுவிட்டால் பேட்டரி கெட்டுப் போகும்

    உண்மை :நிச்சயமாக இல்லை. தற்போதுள்ள பெரும்பாலான  போன்களில் முழுவதுமாக  சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜ் ஆவது தானாகவே  நின்று விடும். அதனால் தெரியாமல் நீண்ட நேரம் சார்ஜில் வைத்திருந்தாலும்  பாதகம் ஏதுமில்லை. 

    (பின்ன வேறெப்படி சொல்வீங்க .சார்ஜர போட்டுட்டு ஆப் பண்ணாம விடறது வழக்கமா நடக்கறது ஆச்சே. அதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பா?) 


    4.சார்ஜ் செய்யும்போது  போன் செய்யக் கூடாது . .

    உண்மை :இதிலும் உண்மை இல்லை . தரமான சார்ஜராக இருந்தால் சார்ஜில் இருக்கும்போதே  பயன்படுத்தலாம் .தவறு ஏதுமில்லை.

    (அப்பவாவது யார் கூடயாவது கடலை போடாம இருக்கட்டுமேன்னு அப்படி சொல்லி இருக்காங்க.  அதுல என்ன தப்பு இருக்கு).


    5.அடிக்கடி போனை ஆஃப்  செய்து வைத்தால் பேட்டரி பாழாகும் 

    உண்மை :இதுவும்  கொஞ்சம் கூட உண்மை இல்லையாம். பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி சார்ஜ் தானாக குறையத்தான் செய்யும், பேட்டரியின் பண்பு அது. உண்மையில் சில சமயங்களில் பேட்டரியை கழட்டி வைத்தல் கூட நல்லது.

    (ஆபீஸ் போனதும் போன் பண்ணா சுவிச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது அப்படின்னுதான் சொல்லுது. பேட்டரி பாழாத்தான் போகட்டுமே )

    6.முதல் முறை பயன்படுத்தும்போது  பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்யவேண்டும். 

    உண்மை :பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.கடையில் போன் வாங்கும்போதும் அப்படித்தான் சொல்வார்கள்.ஆனால் இதில் உண்மையில்லை. பொதுவாக ஸ்மார்ட் பொன் பேட்டரிகள் 40% சார்ஜில் இருந்து 80 % சார்ஜ் வரை சிறப்பாக வேலை செய்யுமாம்
    புதிய போன் வாங்கும்போது அதனுடன் கொடுக்கப் பாடும் பேட்டரி முதன் முதலில் போடும்போது 40% சார்ஜுக்கும் குறைவாக இருந்தால் ஒரவேளை அது பழைய பெட்டரியாக இருக்கக் கூடும் . 

    (எப்பதான் முழுசா சார்ஜ் பண்ணி இருக்கீங்க. சார்ஜ் தீர்ந்தது கூட தெரியாம போன பேசிக்கிட்டு இருக்கறதுதானே வழக்கம்.)


    7.பேட்டரியை பிரீசருக்குள் வைத்து எடுத்தால் மேலும் நீண்ட நாட்கள் பேட்டரி உழைக்கும் .

     உண்மை :இதுவும் தவறுதானாம்.ரேடியோ பேட்டரியை கூட நனைத்து காய வைத்து பயன்படுத்தியது நினைவிருக்கிறது..
    உண்மையில் இவ்வாறு செய்வது இருக்கும் பேட்டரி திறனையும் குறைத்துவிடுமாம். பேட்டரியை பாதுகாப்பாக வைக்க சற்று கற்றோட்டம் இருந்தால் நல்லது .  பிளாஸ்டிக் கவரில் போட்டு சீல் வைப்பதும் தவறாம்

    (இது எங்கிட்ட சொன்ன பொய்தானே! ஒருமுறை எதையோ எடுக்க பிரிஜ்ஜ திறகும்போது  கையில வச்சிருந்த செல்போனை ப்ரிஜ்ஜுக்குள்ள வச்சுட்டு ப்ரிஜ்க்குஜூள்ள வச்சா பேட்டரி உழைக்கும்னு என்கிட்ட  சொன்னத நான் இன்னும் மறக்கல) 

    8.இன்டர்நெட் உபயோகித்தால் பேட்டரி வேகமாக  தீர்ந்துவிடும் 

    உண்மை :அதுவும் உடான்ஸ்தானாம்.  இண்டர்நேட்டுகும்கே அதற்கும்ம் சம்மந்தம்  விளையாடினால் பேட்டரி குறைய வாய்ப்பு உண்டு.  கிரபிக்ஸ் அதக அளவில் பயன்படுத்தப்படும் விளையாட்டுகலக்கு அதிக மின்சாரம் பயன்பாடு அதிகமாம். இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தினால் டேட்டா தான் தீர்ந்து விடும் .

    (இத சொல்லிதானே என் மொபைல்ல நான் பேஸ்புக் வாட்ஸ் அப் யூஸ் பண்றதை  குறைக்கப் பாத்தீங்கள். இப்ப உண்மை தெரிஞ்சு போச்சு இல்லை) 

    9.Wifi-   ப்ளூ டூத் ஜி.பி.எஸ் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும்.

    உண்மை :அப்படி ஏதுமில்லை . இந்த சேவைகள்ன்  செய்ப்பட்டு இருந்தால் பேட்டரி குறையாது. பயன்படுத்தினால் மட்டுமே குறையும்  பேட்டரி நீண்ட நேரம் சார்ஜ் தீராமல் இருக்க வேண்டுமானால் திரையின்  பிரைட்னெஸ் குறைத்து வைத்துக் கொண்டால் பலன் உண்டு.

    (wifi கிடக்கட்டும் Wife in சேவை ஆஃப் பன்னா உங்கள் பேட்டரி என்னாகுதுன்னு பாருங்க.)

    10. சில Task manager ஆப்கள் பேட்டரியை நீண்ட நேரம் உழைக்க செய்யும்.

    உண்மை :இதிலும் உண்மை இல்லை. மொபைலுடன் இன் பில்ட் ஆக உள்ளதே போதுமானது. Third party battery saver செயலிகள் எதுவும் battery திறனை கூட்டுவதில்லை. அவை கைபேசியின் நினைவகத்தை அடைத்தும் கொள்ளவது மட்டுமே மிச்சம். பயன் ஏதுமில்லை என்கிறார்கள்.

    (ஆமா பெருசா உண்மைய கண்டுபிடிச்சிட்டீங்க. இதை ஒரு பதிவுன்னு போடறதுக்கு பதிலா கம்ப்யூட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணி இருந்தா கரண்ட்டாவது மிச்சப் படுத்தி இருக்கலாம்)