என்னை கவனிப்பவர்கள்

சனி, 1 அக்டோபர், 2016

தற்கொலைக்கு முயன்ற காந்தி


       காந்தி பிறந்த நாளுக்கு யாரவது வருத்தப் படுவார்களா?  இவ்வாண்டு சிலர் ஆதங்கப் பட்டார்கள். அக்டோபர் 2  ஞாயிறன்று வந்து விட்டது, ஒரு நாள் விடுமுறை வீணாகி விட்டதே! என்று.  அந்த அளவில்தான் காந்தி நினைவு கூரப்படுகிறார்.  இளைய தலைமுறையினர் பலர் காந்தியின் மீதான மரியாதை குன்றியவர்களாகவே இருக்கிறார்கள். காந்தியடிகளின் கொள்கைகள் செயல்பாடுகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும் காந்தி இந்தியாவின் அடையாளங்களின் ஒன்று என்பது உண்மை. காந்திக்கு நெருக்கமான நேரு போன்றோர் காந்தியின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்று கூற முடியாது. இருப்பினும்காந்தியின் ஆளுமையை அவர்களால் மீற முடியவில்லை.

   யாராக இருந்தாலும்  தங்களை நல்லவராகவும் வல்லவராகவும் காட்டிக் கொள்ள முயல்வார்கள்  நாம் செய்த தவறுகளை தங்கள் பலவீனங்களை மற்றவர்களிடத்து நிச்சயம் சொல்ல விரும்ப மாட்டோம். ஆதுவும் பிரபலங்களாய் இருப்பவர்கள் சிறு வயதில் இருந்தே தாங்கள் உத்தம புத்திரர்கள் என்று நிறுவவே முற்படுவர். ஆனால் காந்தி தான் செய்த தவறுகளை குறிப்பிட்டுக் காட்ட வெட்கப் படவில்லை. பொய் சொல்வதற்கு தேவையான தைரியத்தை விட உண்மை சொல்வதற்கு அதிக தைரியம் வேண்டும் என்று காந்தி நம்பினார். அந்த மன உறுதி காந்திக்கு இருந்தது தனது "சத்திய சோதனை"யில் அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள்

" .......... புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும்,   நான் செய்த  வேறு சில    தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை என் விவாகத்திற்கு முன்போ, விவாகமான   உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில்  நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட்டுப் புகையின் வாசனை எங்களுக்குப்  பிரியமாக இருந்ததோ இதற்குக் காரணம் அல்ல எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான  இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம்.  என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.அவர் புகை பிடிப்பதைப்  பார்த்தபோது   நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், எங்களிடம்    காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும்  சிகரெட்டுத்   துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம். ஆனால் சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே? பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். பீடியை வாங்கி எங்கே வைப்பது என்ற பிரச்னை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில்  நாங்கள் பீடி பிடிக்கமுடியாது. சில வாரங்கள் வரையில்   திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.    இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின்  தண்டு, துவாரங்கள் உள்ளது என்றும்,     சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும்     கேள்விப்பட்டோம். அதைத்தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

    இவை போன்றவைகளினாலெல்லாம்     எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல்   செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதி இல்லாமல்     எதையுமே நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத்  தோன்றியது. கடைசியாக வாழ்வே  முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!

     ஆனால், தற்கொலை செய்து   கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம்.     அவ்விதையைத்  தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு  வந்துவிட்டோம். மாலை நேரமே இதற்கு        நல்லவேளை என்றும்  முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்குப் போய் அங்கே  விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம்   செய்து  கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல்        வரவில்லை.   உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை?   சுதந்திர மின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது?      என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள்       இருவருக்குமே  சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக்கொள்ள ராம்ஜி கோயிலுக்குப்போய் தற்கொலை எண்ணத்தையே         விட்டுவிடுவது  என்று முடிவு செய்தோம்.

     தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப்போல,  தற்கொலை செய்து கொண்டு விடுவது  அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அதிலிருந்து,  யாராவது தற்கொலை செய்து கொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்  என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு  நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப்பு கை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக   வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்..

  நான் பெரியவனான      பின்பு,  புகை பிடிக்கவேண்டும் என்று   விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டுமிராண்டித் தனமானது , ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும்         கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலுமே புகை பிடிப்பதில்   இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது எனக்கு விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே  எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது........"

என்று செல்கிறது அவரது விவரிப்பு . சத்திய சோதனையில் காந்தி விவரிக்கும் பல சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவன. இன்னொரு பதிவில்  பார்ப்போம் 

***************************************************
தொடர்புடைய பதிவுகள் 



******************************************************************************************************************


18 கருத்துகள்:

  1. அட, ஆமாம், காந்தி ஜெயந்தி இந்த வாரம் ஞாயிறில் வந்தது சோகம்தான்! நினைவு கூற என்று சொல்வதை விட நினைவுகூர என்று சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வாரம் ஞாயிறில்// இந்த வருடம் என்று படிக்கவும்!!!

      :)))

      நீக்கு
  2. உண்மையில் அவர் மகாத்மா தான் ,எத்தனைப் பேருக்கு எச்சில் பீடிக் குடித்தேன் என்று சொல்ல துணிச்சல் வரும் :)

    பதிலளிநீக்கு
  3. அறியாத விடயம் அறிந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. காந்தி ஜெயந்திக்கு காந்தி குறித்தான பகிர்வு...
    அருமை.

    பதிலளிநீக்கு
  5. அவரிடம் எனக்குப் பிடித்த குணமே இப்படி எதையும் ஒளிவு மறைவு இன்றிக் கூறுவதுதான் நானும் காந்தி ஜெயந்தி ஸ்பெஷல் பதிவு எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. அருமையான தகவல்
    நினைவில் உருளும் மகாத்தமா காந்தி

    பதிலளிநீக்கு
  7. வரலாற்றில் ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட ஒரு ஆத்மா இந்த மஹாத்மா. தான் சாதிக்க நினைத்தை செத்துவிடுவேன் (உண்ணாவிரதமும் இதில் ஒரு வகை) என்று மிரட்டியே சாதித்த ஒரு மனிதர். இவரைப் பற்றி நிறைய தகவல்களை அருந்ததி ராய் 'Annihilation of caste' நூலின் முகவுரையில் எழுதியிருக்கிறார். தயவு செய்து வாசியுங்கள். நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் போன்ற பலரது தியாகங்களை மழுங்கடித்து மறக்கடித்த பெருமை இந்த மஹாத்மா(?)வுக்கு உண்டு. - Suresh

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருந்ததி ராய் சொல்வது என்ன வேத வாக்கா? நீங்கள் காந்தியை பழிப்பதற்கும் அருந்ததி ராய் பழிப்பதற்கும் வேறுபாடில்லை.1961 இல் பிறந்த அவருக்கு நீங்கள் எந்த அளவுக்கு காந்தியை எந்த அளவுக்கு அறிந்து வைத்து இருக்கிரீர்களோ அந்த அளவுக்குத்தான் அறிந்து வைத்திருப்பார். அருந்ததியின் குற்ற சாட்டுகளுக்கு ராஜ்மோகன் காந்தி விளக்கமளித்திருக்கிறார். யாருடைய பெருமையையும் யாரும் அழித்து விட முடியாது. உண்மையில் Father of nation என்று காந்தியை முதலில்சொ அழைத்தவர்ன்ன சுபாஷ்வநேதாஜி எனபது உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன்ர்.
      "இதோ காந்தியின் மனைவி கஸ்துரிபா வின் மறைவுக்கு ரங்கூன் வானொலி மூலம் நேதாஜி சொன்ன செய்தியில் கீழ்க்கண்டவாறு உள்ளது.

      "...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.
      Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings
      and good wishes".
      இதிலிருந்து பல கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் காந்தியை சுபாஷ் எந்த அளவுக்கு மதித்தார் என்பது புலனாகும்.

      நீக்கு
    2. அருந்ததி ராய் தன்னுடைய சொந்த கருத்தை அப்புத்தகத்தில் சொல்லவில்லை. அத்தனையும் ஆதாரங்களோடு (with reference) விவரித்திருக்கிறார். அம்பேத்கர் காந்தியைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். தேடி வாசியுங்கள் அல்லது கேளுங்கள். அம்பேத்கரையும் அருந்ததியோடு சேர்த்து விடாதீர்கள்.
      தென் ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையரோடு கைகோர்த்து நின்ற கதையை அஷ்வின் தேசாய் ஆராய்ந்து எழுதியுள்ளார். கண்மூடித்தனமான பக்தியோடு எந்த விஷயத்தையும் அணுகாமல் திறந்த மனதோடு ஆராய்ந்தால் போதும். நாடும் நாமும் நலமுடன் இருக்கலாம். இனிமேல் இந்த விவாதத்தை நீட்டிக்க ஆர்வம் இல்லை. இதற்கு எதிர்ப்பதிவு வந்தாலும் பதில் அளித்து என் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. வரலாற்றில் எத்தனையோ பிழைகள். இதுவும் ஓன்று. - Suresh

      நீக்கு
    3. தங்கள் கருத்தை மதிக்கிறேன் நண்பரே!இது போன்ற விஷயங்களில் விவாதங்களினால் மனக் கசப்புகள் தவிர பலன் ஏதும் கிடைப்பதில்லை. நான் கண்மூடித் தனமான பக்தியை ஆதரிப்பவன் அல்ல. அதே சமயத்தில் கண்மூடித்தனமான எதிர்ப்பையும் விரும்புவதில்லை

      நீக்கு
  8. காந்தி பிறந்த நாளுக்கு அவர் பற்றிய ஒரு பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அவரது சத்தியசோதனையைப் படித்துள்ளேன். ஒவ்வொருவருவர் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல். வெளிப்படையாக எழுத அதீத துணிச்சல் தேவை. அதனால்தானே அவர் மகாத்மா. நாமெல்லாம் அல்பாத்மா.

    பதிலளிநீக்கு
  10. please read this

    http://karikaalan.blogspot.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  11. காந்தியின் அரசியலில் எனக்கு நிறையக் கருத்துவேறுபாடுகள் உண்டுதான். ஆனாலும் அவரது மதச்சார்பின்மை இன்றும் தேவைப்படும் சமூகமாகவே நமது வாழ்க்கை அமைந்துவிட்டது. அவ்வகையில் அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே உண்டு - நம் குழந்தைகளுக்கு. நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்.

    சத்திய சோதனையின் சுருக்கமான மொழிபெயர்ப்பொன்று பள்ளிக்காலங்களில் எனக்குப் பரிசளிக்கப்பட்டது.

    ஏனோ அந்தப் புத்தகம் என்னைக் கவரவே இல்லை.

    வாசிக்க வேறெதும் கிடைக்காக காலங்களில் இடைநிரப்பியாக மட்டுமே அதனை வாசிக்க நேர்ந்திருக்கிறது.

    உங்களின் பதிவு நோக்க, மீண்டும் சத்தியசோதனையின் முழுத்தொகுப்பையும் வாசிக்கத் தோன்றுகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895