என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 13 அக்டோபர், 2016

நாய் குணம்! கண்டு பிடியுங்கள் இது யாருடைய கதை?

                                  

உங்களுக்கு ஒரு எளிய சவால் 
இந்தக் கதையை  ஒரு பிரபல எழுத்தாளரின்  கதையை தழுவி கவிதை வடிவில் எழுதி இருக்கிறேன். இந்தக் கதையின் மூலத்தை எழுதியவர் யார்? கதையின் தலைப்பு என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 

                                  தெருவில் சுற்றித் திரியும் நாய் நான்.
                                  நிறமே அழுக்காம் நீட்டிய பல்லாம்  
                                  சிதைந்த  வாலாம் சீரிலா  உடலாம்
                                  சிதறிய  குப்பைத்  தொட்டியே வீடாம்

                                  எங்கே பிறந்தேன் எப்படி வளர்ந்தேன்
                                  என்பதை நானே இதுவரை அறியேன்                   
                                  கண்டவர்க் கெல்லாம் வாலை ஆட்டியும் 
                                  துண்டு ரொட்டியும் கிடைப்பது பாடாம்

                                  நாய்கள் என்னை நம்ப மறுத்தன
                                  போ! என  என்னைக் கடித்து விரட்டின                                   
                                   கிடைத்ததைத் தின்று பசி மறந்திருந்தேன் 
                                  அடுத்தவர் தயவில்  உயிர் பிழைத்திருந்தேன் 

                                   சுருண்டு படுத்துக் கிடக்கும் வேளையில்
                                   இரண்டு கண்ணும் தெரியாக் குருடன்                                   
                                  கடைத் தெரு அருகில் கண்ணில் பட்டான்
                                  கையை நீட்டிப்   பிச்சை கேட்டான்

                                  ஒரு பெண் தினமும் உதவிட வருவாள்
                                  உணவினைத் தந்தவன்  இருப்பிடம்  சேர்ப்பாள்   
                                 ஒருநாள் உணவின் வாசம் இழுக்க
                                  நெருங்கிச் சென்றேன்  குருடனின் அருகில்

                                  யாரோ அருகில் இருப்பதை உணர்ந்தான்
                                  நாயென அறிந்தும்  உணவைக் கொடுத்தான்

                                  நானும் அவனும் நட்பால் இணைந்தோம்
                                  தினமும் இருவரும் ஒன்றாய்த் திரிந்தோம்                           
                                  உணவு கொடுத்த  அவனே கடவுள்
                                  உணர்வு பொங்க உதவிட நினைத்தேன்

                                  பிச்சை ஏதும் இடாமல்  செல்ல 
                                  நிச்சயம் யாரையும் விடுவது இல்லை                                
                                  பற்றி இழுத்து வருவேன் அருகில்
                                  பயந்து பணத்தைப் போட்டார். தட்டில்

                                  பிச்சைக் காரனை ஏய்த்திட ஒருவன்
                                  அச்சம் இன்றி அருகில் வந்தான்                             
                                  தட்டில் உள்ள பணத்தை எடுத்தான்
                                  எட்டித் தாவிப் பிடித்திட முயன்றேன் 

                                  பாய்ந்து சென்றேன் பற்றிக் கடித்தேன்.
                                  பிய்ந்தது  ஆடை! பின்னரே விட்டேன்!
                                  அவனால் தொல்லை அதன் பின் இல்லை'
                                  அகமே மகிழ்ந்து என்னை அணைத்தான்

                                   உதவிய பெண்ணோ ஒரு நாள் இறக்க
                                   கதறி  அழுதான் கண்ணிலாக் குருடன்  
                                 அப்போ தங்கே வந்த ஒருவன்
                                  ரிப்பன் ஒன்றைக் கயிறாய் தந்தான்

                                  இனிமேல் அதனைக் கட்டி வைப்பாய்
                                  துணையாய்  உனக்கு வழியைக் காட்டும்  
                                  என்றே என்னைச் சுட்டிச் சொன்னான்
                                  நன்றியுடன் நான்  சம்மதம்  கொண்டேன்

                                  என்னுடை வாழ்க்கை மாறிப்போனது
                                  கண்ணிலாக் குருடனின் கைப்பிடி  சேர்ந்தபின்
                                 அவனை அழைத்துச் சென்றிட வேண்டும்
                                  அவன் சொல் கேட்டே நடந்திட வேண்டும்

                                  சுயநலப் பிச்சைக் காரன் அவனோ
                                  கயவனாய் மாறிக் கவலை தந்தான் 
                                  சற்று நகர்ந்தால் எட்டி உதைத்தான்
                                  சுற்றிய கயிறை  இறுக்கிப் பிடித்தான்

                                  கடுமொழி பேசிக் காயப் படுத்தினான்
                                  கொடுமை புரிந்தெனை அடிமை ஆக்கினான் 
                                   கிட்டா தெனக்கு சுதந்திரம் இனிமேல் 
                                  எட்டாதெனக்கு எலும்புத் துண்டுகள்

                                  ஒற்றைக் கயிறு என்னைப் பிணைக்க
                                  சுற்றித் திரிந்த சுதந்திரம் போனது
                                  கயிறின் நுனிவரை மட்டுமே  எல்லை
                                  தாண்டிட நினைத்தால் தருவான் தொல்லை

                                  வெடுக்கெனக் கடித்து  ஓடிட நினைப்பேன்'
                                  தடுத்திடும் என்னை ஏதோ ஒன்று                                   
                                  கொடுமைக் காரன் அவனிடம் இருந்து
                                   விடுதலை கிடைக்க ஏக்கம் கொண்டேன்

                                 படைத்தவன் என்னைக் கைவிடவில்லை
                                 கடைத் தேறிடவே காலம் வந்தது                     
                                 கயிறு தந்த கனவான் வந்தார்
                                 துயரம் கொண்டார்  என் நிலை அறிந்து

                                  சத்தம் இன்றி அறியா வண்ணம்
                                  கத்தரி எடுத்துக் கயிறை அறுத்தார்
                                  விட்டு விடுதலை ஆகிச் சென்றேன்
                                  சிட்டுக் குருவி போலே பறந்தேன்

                                  மண்ணில் புரண்டேன் மழையில் நனைந்தேன்.
                                  கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும்                              
                                  கால் வலி வரும் வரை நடந்து சென்றேன்.
                                  களைப்பே இன்றி நினைத்ததைச் செய்தேன்.

                                  தப்பி நான் சென்றதை அறிந்த குருடன்
                                  எப்படி? என்று கோபம் கொண்டான் 
                                  கூக்குரலிட்டான்! கூவி அழைத்தான் 
                                   கேட்பதற் கென்று  யாரும் இல்லை


                                  உடல் நலம் நலிந்தான் உள்ளம் சோர்ந்தான்
                                  நடத்திடத் துணையிலை;  வீட்டில் கிடந்தான்  
                                  நாட்கள் நகர்ந்தன; நானும் மறந்தேன்
                                  ஆட்கள் சில பேர் குருடன் இன்று

                                  இறப்புக்கு அருகில் இருக்கிறான் என்று 
                                  கூறிச் சென்றது காதில் விழுந்தது
                                  'கண்ணை இழந்தவன் கடுந்துயர் மறந்தேன்
                                  என்ன பிறவிநான்! இப்படி இருந்தேன் 

                                  நன்றி மறத்தல் நாயெனக்கழகா?
                                  பன்றிகள் தானே பண்பாடிழக்கும் "
                                   பரிவு   படர்ந்தது   பாசம்  வென்றது
                                  துரித மாகவே அவனை அடைந்தேன்.

                                  நெருங்கி அவனது காலைத் தொட்டேன்
                                   சுருங்கிக் கிடந்தவன் என்னை அறிந்தான்  
                                 முடங்கிக் கிடந்தவன் மெல்ல  எழுந்தான் 
                                  தடங்கல் இல்லாத் தமிழில் தாக்கினான் 

                                  நாயே! எனைஏன் விட்டுச் சென்றாய்
                                  பேயே! எனக்கேன் பெருந்துயர் தந்தாய் 
                                  உப்பிட் டவனை உதறிய நாயே! 
                                  தப்பிச்  செல்ல முடியாதினிமேல்  

                                  சட்டென என்னை அழுத்திப்  பிடித்தான் 
                                   கெட்டிச் சங்கிலி கொண்டெனைப் பிணைத்தான்
                                   பாத்திரம் நிறைத்த உதவி மறந்து 
                                  ஆத்திரம் தீரும் வரையில் அடித்தான்

                                   கட்டிய சங்கிலி கழுத்தை இறுக்க '
                                   முட்டாளானதை முழுதும்உணர்ந்தேன்  
                                   மனிதன் குணத்தை அறியா மடையன்
                                   புனிதன் என்றே நினத்த மூடன்
                                   அவனா குருடன்? இல்லை! இல்லை! 
                                   எவனோ சொன்னான்  நானே குருடன்
விடை நாளை:19 கருத்துகள்:

 1. மூலக்கதையின் பெயரோ எழுதியவரோ எதுவும் அறியேன்.. ஆனால் உங்கள் கவிதை வரிகள் பிரமாதம். அந்த நாய்ப்பிழைப்பு என்ன பிழைப்பு... மனம் நெகிழ்த்தும் பாடம்.

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் எழுதியுள்ள கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அருமையாய் உள்ளன. பாராட்டுகள்.

  அதுவும் அந்தக்கடைசி நான்கு முத்திரை வரிகள் ஜோர் ஜோர் ... வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  [மூலக்கதையின் பெயரோ எழுதியவரோ எதுவும் நானும் அறியேன்..]

  பதிலளிநீக்கு
 3. நிச்சயமாக நீங்கள் எழுதிய கவிதை ஒரிஜினல் கதையை விட நன்றாக இருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் சிந்தனையைத் தூண்டும்படி உள்ளது. அருமை.

  பதிலளிநீக்கு
 5. மிக நீண்ட கவிதை இருப்பினும் விடயங்கள் நிறைய தந்தது முடிவு வரிகள் நச் என்று இருந்தது நன்று
  த.ம.1

  பதிலளிநீக்கு
 6. மூலக்கதை யாருடையதாக இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் கவிதை எனக்கு ரொம்பவே பிடித்தது..... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. உங்களின் கைவண்ணம் மிக அருமை......மதுரைத்தமிழா உங்களுக்கு விடை தெரியும என்று கேட்டு இருந்தால் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள் பொதுவெளியில் கேட்டுள்ளதால் பதில் சொல்லாமல் செல்லுகிறேன்

  பதிலளிநீக்கு
 8. மூலம் எது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் எழுதியிருப்பது மனத்தைத் தொட்டது.

  பதிலளிநீக்கு
 9. மனதை தொட்ட வரிகள் ஐயா
  ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றை இது போல் படித்த நினைவு வருகிறது
  சரியா என்று தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 10. அருமையான கவிதை.
  நன்றி மறக்காத நாய், நன்றி மறந்த மனிதன்.
  நாயின் நிலை கண்டு கனத்து போனது மனது.

  பதிலளிநீக்கு
 11. இது கதையல்ல
  கவிதை என்றீர் - இந்தக்
  கவிதைக்கு உள்ளே
  சிறந்த கதை
  இளையோடி இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஐயா.

  நெடுநாள் கழித்து வருகிறேன். தங்களின் மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும்.

  முதலில் தங்களின் மொழியாக்கம் மிக அருமை. மூலத்தையும் படித்ததால் சொல்கிறேன்.

  தங்களின் தழுவல்,

  திரு. ஆர். கே. நாராயண் அவர்களின்,

  "The Blind Dog"

  என்பதன் தமிழாக்கம்.

  கதையொன்றின் மொழிபெயர்ப்புக் கவிதையாக்கம் இவ்வளவு செம்மையாக அண்மைக்காலங்களில் ( ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்குள் ) எவரும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

  அருமை.

  மிக அருமை.

  வியக்கிறேன்.


  இதுபோன்ற ஆக்கங்கள் தமிழுக்கு அவசியம் தேவை.

  தொடருங்கள்.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. நன்றி விஜூ மிக சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். நிச்சயம் நீங்கள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நம்பினேன். இக்கதை நான் +2 படிக்கும்போது ஆங்கிலதுணைப் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. எம் மனதில் நீங்க இடம் பெற்றது இந்தக் கதை. இதை அப்படியே கதையாக மொழி பெயர்க்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். மூலக் கதை முழு வடிவில் என்னிடம் இல்லை. அதனால் எனக்கு நினைவில் உள்ளவற்றை வைத்து ஆனால் நாய் சொல்வது போல் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கவிதை என்ற பெயரில் தைரியமாக வெளியிட்டு விட்டேன்.கொஞ்சம் அச்சமாகத் தான் இருந்தது.
  இது மூலத்தின் பெருமையை குறைக்காமலாவது இருக்க வேண்டுமே குந்தகம் ஏற்படாதவகையில் அமைந்திருந்தால் அதுவே மகிழ்ச்சி. தங்கள் மனம் திறந்த பாராட்டு(என் தகுதிக்கு அதிகமாக இருந்தாலும்) மகிழ்ச்சி அளிக்கிறது

  பதிலளிநீக்கு
 14. ஆகா.. கதைக் கவிதை! தமிழில் கவிஞர் சிற்பிதான் இதைப் பிரபலப் படுத்தியவர். மூலக்கதையை எழுதியவரை நான் சொல்லலாம்னா நண்பர் விஜூ சொல்லிட்டார் (எனக்குத் தெரியாதென்று இதைவிட எப்படிச் சொல்வது சாமி?) கவிதை ஆக்கம் அருமை! முயற்சியில் புதுமை மூங்கில் காற்று முரளிக்கே உரிமை! தொடருங்கள் த.ம.8

  பதிலளிநீக்கு
 15. இந்தக் கதைக்கேற்ற ஒரு திருக்குறள் சொல்லவா?
  “உதவி வரைத்தன்று உதவி, உதவி
  செயப்பட்டார் சால்பின் வரைத்து”

  பதிலளிநீக்கு
 16. வெகு அருமை முரளி.
  எனக்குத் தெரிந்து கதை ஒன்றை கவிதையாக்கியது நீங்கள் தான்.
  Non-detail எனப்படும் ஆங்கிலத் துணைப்பாடத்தில் படித்தது. (நாம் இருவரும் ஒரே காலத்தில் படித்திருப்போம் என் எண்ணுகிறேன்)
  மூலக்கதை நெகிழ்ச்சி என்றால், முரளியின் கவிதை மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்.

  நாய்க்குணம் பற்றிய,

  குக்கலைப்பிடித்து நாவி…. எனத் தொடங்கும் பாடல் விவேக சிந்தாமணித் தொகுப்பில் உள்ளது. பிரபலமானது. பெரும்பாலோர் அறிந்தது.

  “நாயைக் குளிப்பாட்டி நடுவீடல வைச்சாலும்…..” என மக்களிடையே வழங்கப்படும் பழமொழியின் பொருளுடையது.

  இன்னொரு பாடலொன்று இருக்கிறது. அதிகப் பிரபலமாகாதது. ( என நினைக்கிறேன் )

  “ உணங்கி ஒருகால் முடமாகி ஒருகண் இன்றிச் செவியிழந்து
  வணங்கு நெடுவால் அறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி
  அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வா யோடு கழுத்தேந்திச்
  சுணங்கன் முடுவல் பின்சென்றால் யாரைக் காமன் துயர்செய்யான்?”

  இருகாரணங்களுக்காக இப்பாடலை முக்கியமாகக் கருதினேன்.

  1. இதில் காட்டப்படும் நாயின் சித்திரம். வயது மூத்து நலிந்த பரிதாபமான நாயின் தோற்றத்தைப் புலவன் எவ்வளவு துல்லியமாக நம் கண்முன் கொணர்கிறான்? இதற்குமேல் ஒரு அவலநிலையில் எவராலும் ஒரு நாயைக் காட்ட இயலாது என வாசிப்பில் தோன்றியது.

  2. சுணங்கன் என்பது ஆண்நாயைக் குறிக்கவும் முடுவல் என்பது பெண் நாயைக் குறிக்கவும் ஆன சொற்பிரயோகம்.

  நானறிந்தவரை தமிழில் வேறெவ்விடத்தும் இத்துணைத்துல்லியமாய் நாய்களில் ஆண் பெண் பால்வேறுபாடு காட்டும் சொற்கள் வந்ததாய்த் தெரியவில்லை.இப்பாடலைப் பார்க்கும் முன்பு வரை இச்சொற்களின் வேறுபாட்டை நான் அறிந்ததில்லை.

  இப்படிப்பட்ட நாய்க்கே இந்தப்பாடெனில் மற்றவர்க்கு இவ்வுணர்வு தரும் பாடு ……….? என்ற பாடலின் இலக்கணை சிறப்பெனினும் இவ்விரண்டு விடயங்களுக்காகவே இப்பாடலை நினைவிருத்திப் போனேன்.

  பதிவிற்குச் சற்றும் தொடர்பில்லாத செய்தி என்பதால்தான் முந்தைய பின்னூட்டத்தில் நினைந்தும் சொல்லவில்லை.

  புதிய பதிவேதும் இருக்குமா எனத் தேடி வருமிடத்து, வருகையைப் பதிவு செய்ய இதைப் பகிர்ந்து போகிறேன். அவ்வளவே!

  தொடர்கிறேன்

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. ஆகா...
  விஜூ.அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895