என்னை கவனிப்பவர்கள்

புதன், 28 செப்டம்பர், 2016

இதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்?



   நாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல்  சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்தான் பேட்டரி முழுதுமாக தீர்ந்து நம்மை கடுப்பேற்றும். நாம் வேறு யாருடைய சார்ஜரையவது பயன்படுத்தலாம் என்றால் நம்முடைய மாடல்  சார்ஜர் பின்   பொருந்தாமல்  தண்ணி காட்டும். பின் பொருத்தமாக இருந்தாலும் வேறொரு மொபைலின் சார்ஜராக இருந்தால் பயந்து கொண்டே சார்ஜ் செய்வோம். மொபைல் வாங்கும்போதே வேறு கம்பெனியின் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது எச்சரிப்பார்கள்.  சார்ஜர் பற்றி பல்வேறு ஆலோசனைகள் பலரும் தந்தவண்ணம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அவற்றில்த பலவாறு தவறு என்று கூறுகிறது www.techrepublic.com/ என்ற வலை தளம்
பேட்டரி சார்ஜர்கள் பற்றிய 10  தவறான புரிதல்கள் என்னென்ன அவற்றிற்கான விளக்கங்கள் என்ன  எனப் பார்க்கலாமா?  
(இந்த பத்து கருத்துக்களுக்கும்  நீல கலர்ல  ஒரு கவுண்டர் போட்டிருகேன். அத யாரு கொடுத்துருப்பாங்கன்னு நீங்களே உங்க இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாதீங்க. அதுவும் misconceptionதான் 

  1. பேட்டரிக்கு மெமரி உண்டு 
உண்மை : நிச்சயமாக இல்லை. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றும் சார்ஜ் முழுவதுமாக குறைந்தவுடன் மீண்டும் 100% சார்ஜ் செய்தால்தான் முழுமையான பயன் கிட்டும் .உதாரணத்திற்கு 50% மேல் சார்ஜ் ஆகி இருந்து அன்ப்ளக் செய்து விட்டால் அடுத்த முறை சார்ஜ் செய்யும்போது அதனையே 100 % ஆக நினைவில் கொண்டு  அந்த அளவே சார்ஜ் செய்யும் என்று சொல்லப் படுகிறது .சார்ஜ் திறன் குறைந்து விடும் என்றும்கூறப்படுகிறது. இது தவறானது.எப்படி வேண்டுமானால் சார்ஜ் செய்யலாம் எந்த பாதிப்பும் ஏற்படாது

(பேட்டரிக்கு மெமரி இருந்தா என்ன இல்லன்னா என்ன யாருக்கு இருக்கணுமோ அவங்களுக்கு இல்லையே என்னைக்கு என்னோட பொறந்தா நாள் என்னைக்காவது மெமரில இருந்திருக்கா?) 

2. நமது மொபைல் பிராண்ட்  அல்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் பேட்டரி பாதிக்கப்படும் 
உண்மை :இதுவும் தவறான பரப்புரையே. தரமான எந்த சார்ஜராக இருந்தாலும் எந்த பாதிப்பும் வராது.மெதுவாக சார்ஜ் செய்யும் சார்ஜராக  இருந்தாலும் கவலைப் படவேண்டியதில்லை.

(இதுகூடவா புரியல. இத நெட்டில படிச்சுதான்  தெரிஞ்சுக்கனுமா கம்பெனி காரன் கட்டி விட்ட  கதை மட்டுமில்ல. எவனும் சார்ஜர் ஒசி கேக்கக் கூடாதுன்னு எவனோ கிளப்பி விட்டதுதான்) 

3.இரவு முழுதும் மறந்து  போய்  சார்ஜரை ஆஃப் செய்யாமல் விட்டுவிட்டால் பேட்டரி கெட்டுப் போகும்

உண்மை :நிச்சயமாக இல்லை. தற்போதுள்ள பெரும்பாலான  போன்களில் முழுவதுமாக  சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜ் ஆவது தானாகவே  நின்று விடும். அதனால் தெரியாமல் நீண்ட நேரம் சார்ஜில் வைத்திருந்தாலும்  பாதகம் ஏதுமில்லை. 

(பின்ன வேறெப்படி சொல்வீங்க .சார்ஜர போட்டுட்டு ஆப் பண்ணாம விடறது வழக்கமா நடக்கறது ஆச்சே. அதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பா?) 


4.சார்ஜ் செய்யும்போது  போன் செய்யக் கூடாது . .

உண்மை :இதிலும் உண்மை இல்லை . தரமான சார்ஜராக இருந்தால் சார்ஜில் இருக்கும்போதே  பயன்படுத்தலாம் .தவறு ஏதுமில்லை.

(அப்பவாவது யார் கூடயாவது கடலை போடாம இருக்கட்டுமேன்னு அப்படி சொல்லி இருக்காங்க.  அதுல என்ன தப்பு இருக்கு).


5.அடிக்கடி போனை ஆஃப்  செய்து வைத்தால் பேட்டரி பாழாகும் 

உண்மை :இதுவும்  கொஞ்சம் கூட உண்மை இல்லையாம். பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி சார்ஜ் தானாக குறையத்தான் செய்யும், பேட்டரியின் பண்பு அது. உண்மையில் சில சமயங்களில் பேட்டரியை கழட்டி வைத்தல் கூட நல்லது.

(ஆபீஸ் போனதும் போன் பண்ணா சுவிச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது அப்படின்னுதான் சொல்லுது. பேட்டரி பாழாத்தான் போகட்டுமே )

6.முதல் முறை பயன்படுத்தும்போது  பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்யவேண்டும். 

உண்மை :பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.கடையில் போன் வாங்கும்போதும் அப்படித்தான் சொல்வார்கள்.ஆனால் இதில் உண்மையில்லை. பொதுவாக ஸ்மார்ட் பொன் பேட்டரிகள் 40% சார்ஜில் இருந்து 80 % சார்ஜ் வரை சிறப்பாக வேலை செய்யுமாம்
புதிய போன் வாங்கும்போது அதனுடன் கொடுக்கப் பாடும் பேட்டரி முதன் முதலில் போடும்போது 40% சார்ஜுக்கும் குறைவாக இருந்தால் ஒரவேளை அது பழைய பெட்டரியாக இருக்கக் கூடும் . 

(எப்பதான் முழுசா சார்ஜ் பண்ணி இருக்கீங்க. சார்ஜ் தீர்ந்தது கூட தெரியாம போன பேசிக்கிட்டு இருக்கறதுதானே வழக்கம்.)


7.பேட்டரியை பிரீசருக்குள் வைத்து எடுத்தால் மேலும் நீண்ட நாட்கள் பேட்டரி உழைக்கும் .

 உண்மை :இதுவும் தவறுதானாம்.ரேடியோ பேட்டரியை கூட நனைத்து காய வைத்து பயன்படுத்தியது நினைவிருக்கிறது..
உண்மையில் இவ்வாறு செய்வது இருக்கும் பேட்டரி திறனையும் குறைத்துவிடுமாம். பேட்டரியை பாதுகாப்பாக வைக்க சற்று கற்றோட்டம் இருந்தால் நல்லது .  பிளாஸ்டிக் கவரில் போட்டு சீல் வைப்பதும் தவறாம்

(இது எங்கிட்ட சொன்ன பொய்தானே! ஒருமுறை எதையோ எடுக்க பிரிஜ்ஜ திறகும்போது  கையில வச்சிருந்த செல்போனை ப்ரிஜ்ஜுக்குள்ள வச்சுட்டு ப்ரிஜ்க்குஜூள்ள வச்சா பேட்டரி உழைக்கும்னு என்கிட்ட  சொன்னத நான் இன்னும் மறக்கல) 

8.இன்டர்நெட் உபயோகித்தால் பேட்டரி வேகமாக  தீர்ந்துவிடும் 

உண்மை :அதுவும் உடான்ஸ்தானாம்.  இண்டர்நேட்டுகும்கே அதற்கும்ம் சம்மந்தம்  விளையாடினால் பேட்டரி குறைய வாய்ப்பு உண்டு.  கிரபிக்ஸ் அதக அளவில் பயன்படுத்தப்படும் விளையாட்டுகலக்கு அதிக மின்சாரம் பயன்பாடு அதிகமாம். இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தினால் டேட்டா தான் தீர்ந்து விடும் .

(இத சொல்லிதானே என் மொபைல்ல நான் பேஸ்புக் வாட்ஸ் அப் யூஸ் பண்றதை  குறைக்கப் பாத்தீங்கள். இப்ப உண்மை தெரிஞ்சு போச்சு இல்லை) 

9.Wifi-   ப்ளூ டூத் ஜி.பி.எஸ் சேவைகள் ஆன் செய்யப்பட்டு இருந்தால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும்.

உண்மை :அப்படி ஏதுமில்லை . இந்த சேவைகள்ன்  செய்ப்பட்டு இருந்தால் பேட்டரி குறையாது. பயன்படுத்தினால் மட்டுமே குறையும்  பேட்டரி நீண்ட நேரம் சார்ஜ் தீராமல் இருக்க வேண்டுமானால் திரையின்  பிரைட்னெஸ் குறைத்து வைத்துக் கொண்டால் பலன் உண்டு.

(wifi கிடக்கட்டும் Wife in சேவை ஆஃப் பன்னா உங்கள் பேட்டரி என்னாகுதுன்னு பாருங்க.)

10. சில Task manager ஆப்கள் பேட்டரியை நீண்ட நேரம் உழைக்க செய்யும்.

உண்மை :இதிலும் உண்மை இல்லை. மொபைலுடன் இன் பில்ட் ஆக உள்ளதே போதுமானது. Third party battery saver செயலிகள் எதுவும் battery திறனை கூட்டுவதில்லை. அவை கைபேசியின் நினைவகத்தை அடைத்தும் கொள்ளவது மட்டுமே மிச்சம். பயன் ஏதுமில்லை என்கிறார்கள்.

(ஆமா பெருசா உண்மைய கண்டுபிடிச்சிட்டீங்க. இதை ஒரு பதிவுன்னு போடறதுக்கு பதிலா கம்ப்யூட்டரை கொஞ்ச நேரம் ஆஃப் பண்ணி இருந்தா கரண்ட்டாவது மிச்சப் படுத்தி இருக்கலாம்)



ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இலவசங்கள் தேவையா?


          இலவசங்களுக்கு மக்களை அடிமையாக்குவது தொடர்ந்து கொண்டிருக்கிறது .  இந்த இலவசங்களின் நோக்கம் இல்லாதவர்களுக்கு கொடுப்பதல்ல.  இல்லாதவர்களிடம் எதையாவது தந்து  உள்ளதையும் பிடுங்குவது என்பது உணரப் படாத உண்மை. வியாபார நிறுவனங்களும், அரசியல் சக்திகளும்  இந்த தந்திரங்களை வெற்றிகரமாக கையாள்கிறார்கள். இலவச மாயையில் இருந்து விடுபடுவது எளிதன்று    கவி ஞாயிறு தாராபாரதி அவர்களின் தன்மான உணர்வு பொங்கும் இக் கவிதையை படித்துப் பாருங்கள் நமக்கும் கோபம் வரத்தான் செய்யும் 

                               அன்ன சத்திரம் இனி வேண்டாம்
                               அதனை இழுத்து மூடுங்கள்!
                               இன்னும் அட்சயப் பாத்திரமா?
                               இதனைத் தூக்கி எறியுங்கள்

                               எங்கள் கைகள் எப்போதும்
                               ஏந்துவதற்கே முளைத்தவையா?
                               எங்கள் தோள்கள் எதற்காக
                               இரவல்களுக்கே குனிவதற்கா?

                               உண்ணும் ஒருகை பிடி சோறும்
                               உழைத்துத் தின்ன விரும்புகிறோம்
                               மண்ணில் நாங்கள் தொழில் செய்து
                               மதிப்பாய்  வாழ விருபுகிறோம்

                               பசிக்கு இரந்து தின்பதினும்
                               பட்டினிச் சாவே மரியாதை 
                               நசித்து சாகும் நிலை வரினும்
                               நாங்கள் இனிமேல் கையேந்தோம்

                               ஏற்பது இகழ்ச்சி எனக் கூறும்
                               எங்கள் பிள்ளைப் பாடங்கள்
                               ஏற்பது மகிழ்ச்சி என மாறும்
                                எங்கள் பள்ளிக் கூடங்கள்

                               பிச்சைப் பரம்பரை ஆக்காமல்
                               பிழைக்க ஒரு வழி காட்டுங்கள்
                               உச்சியைத் தேடும் படிக்கட்டு
                               உழைப்பின் அருமையைப் படிக்கட்டும்

                               அரசாங்கத்தின் பிச்சைஎனின்
                               அதற்கு உதவி எனப் பெயரா?
                               பரிசா தருகிற இலவசங்கள்
                               பாமரர் நாட்டின்  அகதிகளா?

                               மக்கள் பதிப்பில் ஏழைகளை
                               மலிவுப்  பதிப்பாய் எண்ணாதீர்
                               மக்கள் மதிப்பில் எங்களையும்
                               மன்னர்களாக வரவிடுங்கள்

                               எங்கள் கால்களில் வலுவில்லை
                               என்பதனால் எழ முடிய வில்லை
                               உங்கள் உயரம்தான் நாங்கள்
                               உட்கார்ந்ததனால் தெரியவில்லை

                               தேனீக்களுக்கு காகிதப் பூ
                               தீனி கொடுக்கத் தேவை இல்லை
                               தேனீக்களுக்கு தோட்டத்தில் 
                               தேவைப்படுவது மரக் கிளைதான் 

                                எந்தப் பங்கும் இனி நீங்கள் 
                                இரக்கப் பட்டுத் தர வேண்டாம் 
                                தந்தையர் நாட்டில் எம் பங்கை 
                                தந்தால் போதும் தாருங்கள் 

                                சலுகையல்ல விரும்புவது 
                                சமமாய் உரிமை எப்பொழுது?
                                உலகம் நமக்குப் பொதுவுடைமை 
                                ஒவ்வொருவருக்கும் சமவுடைமை 

                                அதிகாரங்கள் சுரண்டியதை 
                                அரசியல் கைகள் சுருட்டியதை  
                                 முதலை வாய்கள் விழுங்கியதை 
                                 முதலில் மீட்டு வாருங்கள் 

                                 இலவசங்களையே நம்புகிற 
                                 எச்சில் பிறவிகள் ஆக்காதீர் 
                                 இலக்கை நோக்கி முன்னேறும் 
                                 இலட்சியப் பிறவி ஆக்குங்கள் 



----------------------------------



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஒன்னுமில்ல!


   புதுக்கோட்டை வீதி இலக்கிய இதழில் வெளியிடமுகநூலில்  '  ஒன்னுமில்ல!'  என்ற தலைப்பில் கவிதை  அனுப்புமாறு  ஒரு செய்தியைப் படித்தேன்.  அதன் விவரம் அறிய மீண்டும் தேடினால் கிடைக்கப் பெறவில்லை. எனவே எனது வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன். சகித்துக் கொள்வீர்.

                                 சமையலறைப்  பாத்திரங்களின்
                                 கூடுதல் சத்தமும் .
                                 புலம்பல் என்று தெரியாத முணுமுணுப்புகளும் 
                                 குழந்தைகள் மீதான சம்பந்தமில்லாத கோபமும்
                                 ஏதோ மாற்றம்என்பதை  மெதுவாக உணர்ந்து
                                 என்ன என்று கேட்கும் கணவன்களுக்கு
                                 மனைவிகள் சொல்லும் வார்த்தை
                                 ஒன்னுமில்ல!

                                 அலுவலகத்தில்
                                  உயர் அலுவலரிடம் திட்டு வாங்கிக் கொண்டு
                                  வீட்டில் எரிச்சல் காட்டும் கணவனைப் பார்த்து
                                  மனைவி கேட்டால்
                                  கணவன் சொல்லும் பதில்
                                    ஒன்னுமில்ல!

                                   பள்ளியில் சக மாணவனிடம்
                                   ஏதோ பேசியதற்காக
                                   வீட்டில் சொல்லிவிடுவேன்
                                   என்று மிரட்டும்
                                   ஆசிரியைக்கு பயந்து
                                   பள்ளி செல்ல தயங்கும்
                                   மகளிடம் அம்மா கேட்டால்
                                   கிடைக்கும் பதில்
                                     ஒன்னுமில்ல!

                                   கைபேசியை
                                   நோண்டிக் கொண்டிருக்கும்  மகன்  
                                    திடீரென்று மொட்டை மாடிக்கு ஓடி
                                    பேசுவதைப் பார்த்து அப்படி என்னதான் பேசுகிறாய்
                                    என்று  கேட்டால் கிடைக்கும் பதிலும்
                                      ஒன்னுமில்ல!

                                    ஏதோ உதவி கேட்க
                                    வீட்டுக்கு வந்து
                                     தயங்கி தயங்கி கடைசியில்
                                     ஏதும் கேட்காமலே  புறப்பட
                                     என்ன விஷயம் என்று கேட்பதற்கு
                                     பக்கத்து  வீட்டு நண்பர்சொல்வது
                                      ஒன்னுமில்ல!

                                     பூச்சியம் என்றால்
                                     ஒன்றுமில்லை என்று
                                     படித்த நினைவு இருந்தும்
                                    ஆறாம் வகுப்பில் பூச்சியத்துக்கும்   கீழும்
                                      எண்கள் இருக்கிறதென்று விளக்கி
                                     சந்தேகம் ஏதும்  இருக்கிறதா ஆசிரியர் கேட்க
                                     'அப்ப படிச்சது  தப்பா '
                                     என்று ஐயம்  இருந்தும்
                                      மாணவன் பயத்தில் சொல்வது
                                      ஒன்னுமில்ல!

                                     முற்றும் துறந்தவர்களாயினும்
                                     முழுதும் அனுபவித்தவர்களாயினும்
                                     வாழ்க்கை பற்றி சொல்வது
                                        ஒன்னுமில்ல!

                                      பல சமயங்களில்
                                      மனம் ஆயிரம் நினைத்தாலும்
                                       வாய் சொல்லும் வார்த்தை
                                       ஒன்னுமில்ல!

                                      ஒன்று மட்டும்
                                      கேட்போருக்கும்
                                      சொல்வோருக்கும் 
                                      நிச்சயம் தெரியும்
                                      எல்லா   ஒன்னுமில்ல! களிலும்
                                      ஏதாவது ஒன்று
                                      இருக்கத்தான் செய்யும் என்பது



********************


செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரித்தாயின் கண்டனம்

 
கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 

              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவித்த  ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் தடுத்து வைத்து 
                  போராட்டம் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கச்சிதமாய்  ஒன்றுகூடி தயக்கம் இன்றி 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பா டிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.



*********************************************************************