என்னை கவனிப்பவர்கள்

புனைவுகள்.கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள்.கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

காவிரித்தாயின் கண்டனம்

 
கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 

              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவித்த  ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் தடுத்து வைத்து 
                  போராட்டம் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கச்சிதமாய்  ஒன்றுகூடி தயக்கம் இன்றி 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பா டிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.



*********************************************************************