என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 26 மார்ச், 2012

விபரீத ஆசை!-பதிவுக்குறள் பத்து

     திருக்குறளை விரும்பாத தமிழர் இல்லை. குறள் சொல்லாத கருத்துக்களும் இல்லை.அதன் வடிவத்திலும் பொருளிலும் மயங்காத அறிஞர்கள் இல்லை. காந்தத் தன்மையுடைய குறட் பாக்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருக்குறளை நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. ஆயினும் குறள் வெண்பா வடிவம் என்னைக் கவர்ந்தது. எப்படியாவது குறள் வெண்பா எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அது சரியா என்று தெரியவில்லை. 
        கடந்த சில மாதங்களாக  வலைப்பதிவில்  ஆர்வம் கொண்டு பதிவுகள் செய்து வருவதால் பதிவுலகம் பற்றி பத்து குறள் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். வள்ளுவரும் புலவர்களும் அறிஞர்களும் வாசகர்களும் மன்னிப்பார்களாக
    
  1.     கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
        வாகாய் பதிவுகள் செய் 

  2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
        பதிக தமிழில் பதிவு  


  3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
        தொடர்ந்து பதிவு இடல்

  4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
        பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
         
  5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
        வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

  6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
        நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

  7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
        உன்பதி வும்களவு போம்

   8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
               வலையில் விதைப்பாய் பதிவு 

   9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
               நல்ல பயிற்சிக் களம்   

  10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
        பதிவு பயனுறச் செய். 

***********************************


வெள்ளி, 23 மார்ச், 2012

தெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா?

          
    தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு எனது உகாதி தின வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசும் மக்கள்தான் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். தெலுங்கு  மொழி பேசும் மக்கள்  தமிழ் பேசும் மக்களுடன் இணக்கத்தோடு வாழ்பவர்கள்  (அதற்காக மற்ற மொழி  பேசுபவர்கள் அப்படி இல்லைன்னு சொல்லக் கூடாது.) இதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் தெலுங்கு வருடப் பிறப்பிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.  
    இவர்கள் தமிழர்கள் என்ற உணர்வோடுதான் வாழுகிறார்கள். இவர்களது தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியையே அதிகம் விரும்புகிறார்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் புலமை பெற்றிருக்கிறார்கள். வீட்டில் தெலுங்கு பேசினாலும் நிறையப் பேருக்கு தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. அதுவும் இவர்கள் பேசும் தெலுங்கில் தமிழே அதிகம் இடம் பெறும். பெரும்பாலும் தமிழ் படங்களையே விரும்பிப் பார்ப்பார்கள். பள்ளிகளிலும் தமிழையே முதற் பாடமாக எடுத்துப் படிப்பவர்களாக இருக்கிறார்கள்.இப்போது உள்ள இளந் தலைமுறையினர் தெலுங்கு அதிகமாகப் பேசுவதில்லை. சில குடும்பங்களில் குழந்தைகள் தாயிடம் தெலுங்கு பேசுவார்கள் ஆனால் தந்தையிடம் தமிழ்தான் பேசுவார்கள். இவர்கள் பேசும் தெலுங்கை தெலுங்கு அறியாத தமிழர்களும் புரிந்துகொள்ள முடியும்.
    தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திரப் பகுதிகளில் இருந்து   குடிபெயர்ந்து வந்திருக்கலாம். கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிகமாக தமிழகத்திற்கு வந்திருக்கக்  கூடும். இவர்களுக்கே இது நினைவில் இருக்குமா என்பது ஐயமே!
  இவர்கள் அனைவரும் தங்களை தமிழர்களாகத்தான் நினைக்கிறார்கள். பெரும்பாலும் தமிழின்மீது ஆர்வம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் தெலுங்கைவிட அதிகம் தமிழை நேசிப்பவர்களாக இருப்பதைக் காண முடியும். இங்குள்ள தமிழ் பேசும் மக்களும் இவர்களை வேற்று மொழியினர் என்ற மனோபாவத்துடம் பார்ப்பதில்லை.
        சர்வபள்ளி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆசிரியாக பணியைத் தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்தான். தாய்மொழி தெலுங்காக இருப்பினும் தமிழகத்தில் வாழ்ந்து பெருமை சேர்த்தவர். 
    திரு கா.ம.வேங்கட ராமையா என்பவர் சிறந்த தமிழறிஞர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டபோது கை எழுத்து  சுவடித் துறையின் முதல் தலைவராகப் பணியாற்றியவர். கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ் கலாநிதி, தமிழ் மாமணி முதலிய பட்டங்களைப் பெற்றவர். இவரது தாய் மொழி தெலுங்கு.
     இன்றுவரை தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க. தலைவர் திரு வைகோ. தமிழில் புலமை பெற்றவர் என்பது நமக்குத் தெரியும். அவர் சிறந்த தமிழ் பேச்சாளர் என்பதையும் அறிவோம். இளையராஜா திருவாசகம் சிம்போனி வடிவில் வெளியிட்டபோது தமிழ் இசை பற்றி அவர் ஆற்றிய உரை கட்சி பேதமின்றி அனைவராலும் பாராட்டப்பட்டது. இவரும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
       நமது கேப்டன் விஜயகாந்தும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்தான். இவர்கள் யாவரையும் தமிழினத்துடன் இருந்து பிரித்துவிட முடியாது.
      சுந்தரத் தெலுங்கு வீட்டுக்குள் பேசினாலும் உணர்வால் தமிழர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.          
 எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழின்மீதும் தமிழர் மீதும் பற்றுக்கொண்டவர் அனைவரும் தமிழர்களே.
*************************************************************
  இதையும் படித்தால் மகிழ்வேன்.  
  வெள்ளைத்தாள்    

வியாழன், 22 மார்ச், 2012

வெள்ளைத்தாள்

 ஒரு கைம்பெண்ணின் குரல் 

                  நாங்கள் 
                  எழுதி 
                  அழிக்கப்பட்ட 
                  வெள்ளைத்தாள்கள் 

                  பாதி எழுதி 
                  விடப்பட்ட 
                  கவிதைகள்


                  முழுவதும் 
                  வாசிக்கப்படாத 
                  முழு நாவல்கள் 


                  சேர்க்கப்பட்ட 
                  முகவரியிலிருந்து
                  திருப்பி  அனுப்பப்பட்ட 
                  தபால்கள்


                  புகுந்த வீட்டால் 
                  புறந்தள்ளப்பட்டவர்கள்

                  பிறந்த வீட்டை 
                  இன்னொரு புகுந்த 
                  வீடாய் நினைத்து 
                  மீண்டும் நுழைந்தவர்கள் 

                  இந்தப்
                  பாதிக் கவிதையை 
                  எந்தப் 
                  புத்தகத்துடனாவது 
                  இணைத்துவிட 
                  முயற்சி நடக்கிறது.

                  அக்கறையினாலா?
                  அல்ல! அல்ல!
                  பழைய காகிதத்தை 
                  எவ்வளவு நாள் 
                  பாதுகாப்பது? 


                  இணையத்திலும் 
                  பத்திரிகையிலும் 
                  பழைய 
                  பேப்பர் காரனை
                  தேடிக்
                  கொண்டிருக்கிறார்களாம் 

                  அதுகிடக்கட்டும்!
                  நான் எப்படியும்
                  நன்றி  சொல்லித்தான் 
                  ஆக வேண்டும்! 
                  குப்பை 
                  தொட்டியில்  
                  எறிந்துவிடாமல் இருப்பதற்காக!

************************************************************** 
 

ஞாயிறு, 18 மார்ச், 2012

எனக்கா விருது? நம்ப முடியலயே! நன்றி! நன்றி!



நேற்று  எனது இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? வலைப்பதிவு கமெண்ட்ஸ் பகுதியை பார்த்தபோது இனிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் நண்பர் தண்ணீர்ப்பந்தல் வே.சுப்ரமணியன் எனக்கு Liebster Blog விருது வழங்குகிறேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். ஏற்கனவே சென்னை பித்தன் ஐயா அவர்கள் வலைச்சரத்தில் 2011 இல் கலக்கியவர்கள் என்ற தலைப்பில்  அவரைக் கவர்ந்த 1௦ பதிவர்களை  அறிமுகப்படுத்தினார் அந்தப் பட்டியலில்  நானும் சுப்ரமணியமும் இடம் பெற்றிருந்தோம். நல்ல தரமான பதிவுகளை அளிக்கும் சுப்ரமணியம் Versatile  Blog award ம் பெற்றிக்கிறார். அவர் வழங்கும் Liebster Blog விருதினை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.

   ஜெர்மானிய விருதாகக் கருதப்படும்   இந்த விருதின் தொடக்கம் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை எனினும் பல ஆங்கில பதிவர்களும் இந்த விருதை பெற்றிருப்பதை கண்டேன். விருதைப் பெறுபவர் தன்னைக் கவர்ந்த பதிவர்களுக்கு விருதளிக்கும் தொடர் நிகழ்வாக உலகம் முழுவதும் இவ்விருது வலம் வந்து கொண்டிருக்கிறது.

 விருதின்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் 
1 . விருது வழங்கிய பதிவருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்
2   அந்தப் பதிவரின் ப்ளாக்குக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.
3  Liebster Blog  Logo வை பதிந்து கொள்ளவேண்டும்.
4  பின்னர் மனம் கவர்ந்த பதிவர்களில் ஐந்து பேருக்கு விருதுகள் வழங்கவேண்டும்.
5.இருநூறுக்கும் குறைவான பின் தொடர்  பவர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
6.விருது வழங்கப்பட்ட விவரத்தை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இன்னொரு மரபான எனக்குப் பிடித்த 7 விஷயங்களை சொல்லிவிட்டு விருது பெறுபவர்களின் பயர்களை அறிவிக்கிறேன்.

1 .கவிதைகளை ரசிப்பது, கவிதைகள் எழுத முயற்சிப்பது 
2 .நல்ல நூல்களை படிப்பது
3.கணினி பற்றி அறிந்துகொண்ட சிறு சிறு விஷயங்களை  சோதித்து பார்ப்பது.  
4.கிரிக்கெட் பார்ப்பது
5.காபி குடிப்பது 
6.நல்ல சினிமா 
7.கணிதப் புதிர்கள் 

  கலை ,இலக்கியம் ,சினிமா, நகைச்சுவை, பலவேறு பகுதிகளிலும் கலக்கி வருகிறார்கள். இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்று திணறிப் போனேன்.

  இதோ எனது மனம் கவர்ந்தவர்களில் ஐவரின் ப்ளாக் குகளுக்கு Liebster Blog விருது வழங்கிப் பாராட்டுகிறேன். இதனை பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

 4.பதிவின் பெயர் : சிறுவர் உலகம்பதிவரின் பெயர்:KANCHANA RADHAKRISHNAN
 5   பதிவின் பெயர் : பாசப்பறவைகள் பதிவரின் பெயர்: கோவை ரவி

வித்தியாசமான பதிவுகளை வழங்கியுள்ள இந்த ஐவருக்கும் எனது வாழ்த்துக்கள்  **************************************************************************************************
இதையும் படியுங்க:

சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!



         சச்சின்! அடித்தாய் சதங்கள் நூறு
         மிச்சம் சாதனை உண்டா கூறு
         உச்சம் உயரம் தொட்டாய் இன்று
         உலகம் உன்னை போற்றுது நன்று
         பத்தில்  இருக்கும் ஆறும் நான்கும் 
         பெயரிலும் இருப்பது பொருத்தம் தானே?
         ஓய்வெடு என்று உரைத்தவர் எல்லாம்
         வாய்மூடி இன்று வாழ்த்துச் சொன்னார்
         ஆஸ்தி ரேலிய நாட்டுடன் தானே
         அதிக சதங்கள் அடித்து அசத்தினாய்
         மட்டை உனது அங்கம் போன்றது
         ஓட்டம் உனது குருதியில் கலந்தது.
         ஆறுகள் உன்னை அன்புடன் அழைக்கும்
         நான்குகள் உன்னுடன் நட்புடன் இருக்கும்
         ஒன்றும் இரண்டும் ஒட்டி உறவாடும்
         எதிரணி கூட உன்புகழ் பாடும்
         சதம்நீ அடித்தால் வெற்றி இல்லை
         என்பவர் சொல்லில் உண்மை இல்லை
         ஐம்பத்து நான்கில் கிடைத்தது வெற்றி
         இருபத்து நான்கில் மட்டுமே தோல்வி
         மட்டை ஆட்டம் ஆடுவோர்க் கெல்லாம்
         கட்டை விரலை கேட்காத் துரோணர்
         கிரிக்கெட்  உலகின் கடவுள் ஆனாய் 
         நாளேடு களின் நாயகன் ஆனாய் 
         அணியில் இருப்பது அணிக்கு பலமே
         அடுத்தவர் ஆட்டமும் ரசிப்பதுன் குணமே
         சிறுவர் சிறுமியர் சீறிடும் இளைஞர் 
         வறியவர் வல்லுநர் வாழ்ந்திடும் கலைஞர்
         அனைவரும் போற்றும் நீஒரு அற்புதம் 
         நினைவில் நின்றிடும் உந்தன் நூற்சதம்



*************************************************************************************************************************
இதை படித்தீர்களா?




வியாழன், 15 மார்ச், 2012

இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?

விசித்திர நோயின் பிடியில்
  சிலவற்றைப் பார்க்கும்போதோ அல்லது  படிக்கும்போதோ மனம் பதறுகிறது. நம்மையும் அறியாமல் கலங்குகிறது. சமீபத்தில் வெளியான பிரபாகரனின் இளைய மகன் குண்டடி பட்டு இறந்து கிடக்கும் புகைப்படம்  கண்டு கலங்காத மனமும் இருக்க முடியம்?.
    இறப்பு மட்டுமல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் சிலருடைய வாழ்க்கை கேள்விக்குறிகளாக அமைந்திருப்பதும் இதயத்தை சங்கடப் படுத்துகிறது.
      நம்முடைய ஆசைகள் ஒன்றிரண்டு நிறைவேறாவிட்டாலும் நமக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அன்றாடம் துன்பத்தில் உழன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி எதிர்காலம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உண்டு என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 

   இதோ இந்தப் பெண்களைப் பாருங்கள். இவர்களுடைய சிக்கல் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் முடிதான் இவர்கள் பிரச்சனை. ஹைபர்ட்ரிகோசிஸ் (hypertrichosis)  என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உலகில் மிகவும் அரிதான நோய்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதிலும்  சுமார் 50 பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சொல்கிறது. இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?  
   பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் அனிதா சம்பாஜி என்பவருக்கு ஆறு மகள்கள். இவர் கணவனை இழந்தவர். ஆறு மகள்களில் மூவரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. சவிதா மோனிஷா,சாவித்திரி, என்ற மூவரின் வாழ்க்கையில்தான் விதி விளையாடி வருகிறது. அதிசய மரபணு நோயின் பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருக்கும் மகள்களை பார்த்து நாளும் கண்ணீர் வடிக்கும் அந்தத் தாயின் நிலையை சொல்ல வார்த்தைகள் ஏது?
  இந்த நோய் எப்படி வந்தது? இந்தப் பெண்களுடைய தந்தைக்கு இந்த நோய் இருந்ததாம். அதை மறைத்து அனிதாவுக்கு திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள். திருமணமாகுபோது இவருக்கு வயது 12 திருமணத்தின் போதுதான் மணமகனை முதன் முதலாக பார்த்தாராம். என்ன செய்வது? பெரும்பாலான கிராமப் பெண்களைப்போல் சகித்துக் கொண்டு வாழ்ந்தார். 2007 இல்  கணவனும் இறந்துவிட ஆறு பெண்களுடன் வாழ்க்கை கேள்விக்குறியானது.
   ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னவெனில் ஆறு பெண்களில் மூன்று பெண்களுக்கு இந்த வியாதி இல்லை என்பதே.
      இவர்களைப் பார்த்து ஓநாய் சகோதரிகள் என்று கிண்டலடிப்பார்களாம். சிறுமி சாவித்திரி பள்ளிக்கு போகும்பொழுது. மற்ற மாணவிகள் பக்கத்தில் உட்காராதே என்று துரத்தி விடுவார்களாம்.
   "இவர்களுக்கு திருமணம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்  இருக்கும்வரை எப்படியாவது இவர்களைக் காப்பாற்றுவேன். ஆனால் எனக்குப் பிறகு இவர்கள் வாழ்வு என்னவாகும்" என்று தாய் கண்கலங்கும் போது கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கேட்கத்  தோன்றுகிறது.
       பலவித மருந்துகளும் க்ரீம்களும் பயன்படுத்தியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
         இதற்கு சிகிச்சையே இல்லையா? இருக்கிறது . லேசர் சிகிச்சை ஒன்றே நிரந்தர வழி. ஆனால். ஒருவருக்கு 3.5 லட்சம் செல்வாகுமாகும்.
       அன்றாட உணவுக்கே போராடும் நிலையில் மூவருக்கும் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் எப்படி செலவு செய்ய முடியும்?.
    இவர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்நேஹ் குப்தா என்பவர் இவர்களைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை இவர்களுடைய சிகிச்சைக்கு அளிக்கப் போகிறாராம்.
     எனக்கு ஒன்று புரியவில்லை. குப்தா இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறாரா?  அல்லது  இவர்களை வைத்து பணமும் புகழும் பெற வேண்டுமென்று நினைக்கிறாரா?
      உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும். 10 லட்ச ரூபாய் திரட்ட முடியாத நிதி அல்ல.
     தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மகளிர் அமைப்புகள்,ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அதற்கு மேலாக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அரிதிலும் அரிய நோயால் அவதிப்படும் குடும்பத்திற்கு அரசிடமிருந்து ஏதாவது உதவித் தொகை கிடைக்க வழி இருக்கிறதா?
      கோடிகளில் புரளும் செல்வந்தர்களும் விளயாட்டு வீரர்களும் நடிக நடிகையர்களும்  நிறைந்த பூனே,மும்பை பகுதிகளில் இவர்கள் துயர் தீர்க்க யாருமே முன் வரவில்லையா?  இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா?
       இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.
  தினமலர் இணையதளத்தில் இந்த செய்தியைப் படித்து  விட்டு துபாயில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய தொலைபேசி எண்ணை கமெண்ட் பகுதியில் கேட்டிருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார், தினமலர் திரு சுப்ரமணியத்திற்கு முகவரியை வழங்கியதா என்று தெரியவில்லை.
       முதலில் உதவ முன்வந்த அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
       மற்றவர்களை உதவி செய்யச் சொல்லும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம். நானும் என்னாலியன்ற ஒரு சிறு தொகையை வழங்க  தயாராக இருக்கிறேன்.
      இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவது அவர்களுடைய முகவரியை கண்டு பிடித்து இயற்கையின் சாபத்திற்கு ஆளான அந்தப் பெண்களின் தாயின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தால் நேரடியாக வங்கிக்கு பணத்தை அனுப்ப ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும். எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன.
     அரசாங்கம் செய்யாவிட்டால் என்ன நம்மால் இயன்றதைச் செய்வோம். 
  
*************************************************************   

திங்கள், 12 மார்ச், 2012

ஆங்கிலம்- Funny Language

     எப்படியோ  ஆங்கில மொழி உலகத்தை தன் வசப்படுத்தி விட்டது. சீனர்கள் கூட ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் ஒரு Funny Language  என்று  கூறுகிறார்கள். நாமும் Funny Language  ஆன   ஆங்கிலத்துடன் தமிழை  இணைத்து இன்று தமிழை 'பண்ணி' மொழியாக்கி விட்டோம். ஆங்கிலம் ஒரு Unphonetic Language. எழுத்து ஒலிகளை சேர்த்து வார்த்தைகளை படித்துவிடமுடியாது.  ஆனால் தமிழை எழுத்தொலிகளை இணைத்து வாசித்துவிடமுடியும். put , but  இரண்டையும் ஒரே மாதிரி வாசிக்கக் கூடாது. இலக்கணம் படித்துவிட்டு ஆங்கிலம் பேசிவிட முடியாது. பழக்கம் மற்றும் பயிற்சியின் மூலமே ஆங்கிலம் பேச முடிகிறது.

இதோ ஆங்கிலத்தில் உள்ள சில முரண்பாடுகள்.

Prison , Jail  இரண்டும் ஒரே பொருளுடைய வார்த்தைகள். ஆனால் Prisoner Jailor இரண்டும் எதிர்மறை பொருள்  கொண்டவை.
prisoner  என்றால் சிறையில் இருப்பவர். Jailor என்றால் சிறையில் இருப்பவர்களை கண்காணிப்பவர் 

Shop , Market இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவை.
ஆனால் Shopping , marketing  இரண்டும்   எதிர்பொருள் கொண்டவை.

defeat , failure  இரண்டும் synonyms  
to defeat , to fail  இரண்டும் antonyms 

flammable , inflammable இரண்டும் synonyms ஆனால்  decent , indecent ரெண்டும் opposite words 
Limitation  Delimitation இரண்டும் எதிர் சொற்கள் அல்ல.ஒரே பொருள் கொண்டவை.
perfect . imperfect  இரண்டும் எதிர்சொற்கள், ஆனால் prove improve ரெண்டும் Opposite  words இல்லை. வெவ்வேறான வார்த்தைகள். 

 அதே போல
Course -Discourse 
card -Discard 
fault -default 
 இவை antonyms  அல்ல. வெவ்வேறான வார்த்தைகள்.

apart என்றால் தூர அல்லது தனியாக. ஆனால் ஒரே கட்டடத்தில ஒண்ணா இருக்கிற வீடுகளுக்கு பேர் Apartments 
( ஐயோ, தலைய சுத்து துங்கோ. இத்தோட நிறுத்திக்கலாம். நான் பீட்டர்ல கொஞ்சம் வீக்குங்க.' அப்ப தமிழ்ல?". அப்படின்னு கேக்கறது என் காதில விழுது.. தமிழ்ல ரொம்ப வீக்குங்கோ)
*******************************************************************************************
 இதை படிச்சாச்சா?
என் மனைவிக்கு எதுவும் தெரியாது.
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! 

வியாழன், 8 மார்ச், 2012

என் மனைவிக்கு எதுவும் தெரியாது.

            மகளிர் தின வாழ்த்துக்கள்
                  (இந்தப் பதிவு மகளிருக்கு சமர்ப்பணம்)

   நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும்  பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
   "அய்யா! என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்?பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகயைரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள்  அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ celphone operate பண்ணக்கூட தெரியாது. எவ்வளவுதான்  சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை.அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."

 "உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்குறீர்கள்" பெரியவர் கேட்டார்.
    "நான்,என் மனைவி, ஒரு குழந்தை, மூன்று பேர் இருக்கிறோம்."
   "நல்லது. நாளை உங்கள் மனைவியை இங்கு அழைத்து வாருங்கள்." 

     பெரியவர் சொல்ல,மறு நாள் தன் மனைவியுடன் பெரியவரைக் காண வந்தார்.
    மனைவியின் இடுப்பில் குழந்தையும், கையில் ஒருபை. அந்தப் பையில் ஏதோதோ பொருட்கள் இருந்தன. மூவரும் பெரியவரை வணங்கினர். கணவனை சற்று நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிடம் ஏதோ கேட்டார். பின்னர் பெண்மணியை வெளியே அனுப்பிவிட்டு கணவனை அழைத்தார்.
     "ஐயா,என் மனைவிக்கு அறிவுரை சொன்னீர்களா?கணவன் கேட்டான்.
     பெரியவர் "அது இருக்கட்டும். உன் மனைவி கொண்டு வந்த பையில் என்னவெல்லாம் இருந்தது.உனக்குத் தெரியுமா?
     "எனக்குத் தெரியாது. என் மனைவிக்குத்தான் தெரியும்"
    "உன் குழந்தைக்கு எப்போது உணவு கொடுக்கவேண்டும், எப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும் தெரியுமா?
     "தெரியாது,அது அவளுக்குத்தான் தெரியும்"
  "என்ன உணவு கொடுக்க வேண்டும் என்றாவது தெரியும்?
     "எனக்குத் தெரியாது. அதுவும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.?
   "திடீரென்று உன் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
   "நிச்சயமாகத் தெரியாது. அதெல்லாம் பெண்களுக்குத் தானே நன்றாகத் தெரியும்."
      "குழந்தை அழுதால் உன்னால் அழுகையை நிறுத்த முடியுமா?
   "முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் வரை குழந்தை அழுவதில்லை."

        "குழந்தை  எப்போது  உறங்கும் எப்போது விழிக்கும் என்று உனக்குத் தெர்யுமா?

      "அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்" எரிச்சலுடன் சொன்னான் கணவன்.

       "உனக்குத் தெரியாத இவ்வளவு விஷயங்கள் உன் மனைவி தெரிந்து வைத்திருப்பதை நீயே உன் வாயாலேயே கூறினாய். இவற்றை தெரிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறாயா?"

       கணவன் விழிக்க,

      பெரியவர் சொன்னார் "இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு வா! பின்னர் நீ விரும்புவதையெல்லாம் உன் மனைவி தெரிந்துகொள்ள அருமையான ஆலோசனைகளை நான் கூறுகிறேன்."

       பெரியவர் சொன்னதில் இருந்து ஏதோ புரிந்தது. 
*************************************************************
இதையும்   படியுங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி! யாருக்கு?  


புதன், 7 மார்ச், 2012

தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!



   "ஏம்மா! அறிவிருக்கா உனக்கு?.பால் வாங்க என்ன போகச்சொல்றயே? எக்ஸாம் நாளைக்கு தொடங்குதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அப்பா சும்மாதானே இருக்கார். அவரை அனுப்ப வேண்டியதுதானே. ஃபிசிக்ஸ் ல ரெண்டு சாப்டர் ரிவைஸ் பண்ணைனும். MATHS ல PROBABALITY யில் ஏகப்பட்ட சந்தேகம் இருக்கு.CHEMISTRY ஒரு பாடம் சுத்தமா புரியல. இந்த சமயத்தில நீ வேற வெறுப்பேத்துற.........
     
   "ஹல்லோ, ப்ரியாவா! எக்சாமுக்கு நல்ல PREPARE  பண்ணியிருக்கயா? ஸ்கூல் ல பிரக்டிகல்சுக்கு ஃபுல்  மார்க் போட்டுடுவாங்க இல்ல. நீ ரெண்டு சென்டம் வாங்கிடிவேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டுக்கு வாயேன் குரூப் ஸ்டடி பண்ணா யூஸ்ஃபுல்லா இருக்கும் இல்ல. ஒண் வோர்ட் எல்லாம் உனக்கு ஈசிதானே..... சரி நான் அப்புறமா பேசறேன்.
      
  "ஏம்மா லதா என்ன கட் ஆஃப் வாங்கினா ன்னு உனக்கு தெரியுமா?உனக்கு எங்க தெரிய போகுது?  ரெண்டு சென்டமாவது வாங்கலைன்னா அண்ணா யுனிவெர்சிட்டி வாசல் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியாது. ஜனனி,விஜி,ரகு. இவங்களெல்லாம் விட அதிகமா வாங்கலைன்னா கூட பரவாயில்லை. குறைவா வாங்கிடக் கூடாது. 
      "சரி சரி, டிஃபன்  ரெடி ஆயிடிச்சா? சீக்கிரம் குடு. காலங்காத்தால மூணு மணிக்கு எழுந்தாச்சு. பசி நேரம்.
      "அனு! அனு! கதவை மூடிக்கிட்டு என்ன பண்ற! கதவை திற!
   "அடிப்பாவி மூணு மணிக்கு உன்ன எழுப்பி விட்டா இப்படி தூங்கிக்கிட்டிருக்கயே இது நியாயமா? காலைல  இருந்து அம்மா  நான்பாட்டுக்கு புலம்பிக்கிட்டுருக்கேன். எக்ஸாம் பயம் கொஞ்சம் கூட இல்லையா உனக்கு. சமையல் வேல செஞ்சா நீ படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ண முடியாதுங்கிறதுக்காக உனக்காக தாத்தா பாட்டிய வீட்டு வேலை எல்லாம் செய்யறதுக்காக  எக்ஸாம் முடியற வரைக்கும் இங்க இருக்க சொல்லியிருக்கேன். நீ என்னடான்னா கொஞ்சம்கூட டென்ஷன் இல்லாம ஜாலியா  இருக்க. 
   "எழுந்திருடி. டிபன் சாப்பிட்டுக்கிட்டே படி. அப்புறம் குளிக்க போலாம். நீகைல புக் வச்சிக்கிட்டு படிச்சிகிட்ட இரு. நான் குளிப்பாட்டி விடறேன்.
    "அப்புறம் பாத்ரூம் கதவில ஃப்சிக்ஸ்  ஃ பார்முலா எழுதி ஒட்டி வச்சிருக்கேன். TOILET கதவுல CHEMISTRY  equations  ஒட்டியிருக்கேன். டிரெஸ்ஸிங் டேபிள் ல முக்கியமான மாத்ஸ் FORMULA இருக்கு எல்லாம் பாத்துக்கோ..............

(+2  படிக்கிற ஒரு பொண்ணோட அம்மாவின் டென்ஷன்தான் இது. நீங்க இத படிச்சி டென்ஷன் ஆகாதீங்க.) 
************************************************************
இதையும் படியுங்க! 
மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள் 
ஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012  
      

ஞாயிறு, 4 மார்ச், 2012

மின் வெட்டு(வெட்டிக்) கவிதைகள்

    புதிய தலைமுறை இதழில் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற தலைப்பில் மின்வெட்டைப் பற்றி நகைச்சுவையாக கவிதைகள் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தார்கள். நானும் ஈமெயிலில் கவிதைகள் அனுப்பினேன். ஆனால் எனது கவிதைகள் தேர்ந்டுக்கப்படவில்லை. அதனாலென்ன இருக்கவே இருக்கிறது நமது ப்ளாக். எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும் தெரியாமல்  சில பேரும் போனால் போகிறதென்றும் சில பேரும் பார்ப்பார்கள். அது போதும். ஹி..ஹி.

 
சாப்பிட உட்கார்ந்தேன்!
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை.
கரண்ட் கட்.
****************

மின்சாரம் இல்லாமல்
ஒரு
ஷாக் ட்ரீட்மென்ட்.
மின்வெட்டு.
******************

கல்யாணத்தில்
பந்தியின்போது
கரெக்டாக ஆனது 
கரண்ட் கட்டு.
என் கைக்கு வந்தது
பக்கத்து இலை லட்டு
******************

கைத்தான் ஃபேன்
வாங்குங்க!
டி.வி. யில் 
விளம்பரம்!
அட போங்கப்பா!
இனிமே 
கைதானே  ஃபேன்!
 *******************

அதுக்குள்ள போதுமா? சார் இன்னும் ஒண்ணே
ஒண்ணு.அய்யய்யோ! கரண்ட் கட் ஆயிடுச்சி. 
===================================================
இதையும் படியுங்க!
இது மாணவர்களுக்கு இல்ல. உங்களுக்குத்தான். 

 


வியாழன், 1 மார்ச், 2012

ஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012

     ஞாபகம் வச்சிக்கோங்கன்னு  சொன்னது மாணவர்களுக்காக இல்லை. உங்களுக்காகத்தான். இந்த அட்டவனையை நல்ல பாத்துக்கோங்க. இந்த தேதிகள்ல  உங்க உறவினர்,நண்பர்கள் மகனோ மகளோ  +2 படிச்சிட்டுக்கிட்டுருந்தா அவங்க வீட்டுக்கு தப்பித் தவறிகூட போயிடாதீங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு. அப்படி நீங்க போனா உங்களுக்கு டீ காபி எல்லாம் கிடைக்காது. உங்களுக்கு மறைமுகமா திட்டுதான் கிடைக்கும்.அப்புறம் மார்க்கு குறைஞ்சி போச்சுன்னா அதுக்கு நீங்க காரணமாயிடுவீங்க

08 .03 .2012 லிருந்து +2  தேர்வுகள் தொடங்குகின்றன. இதோ தேர்வு அட்டவணை உங்கள் நினைவிற்காக. நம்பிக்கையோடு தேர்வுக்கு தயாராகுங்கள்.நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள். 
pdf வடிவில் அட்டவணை பார்க்க கீழே கிளிக் செய்யவும்
     +2 தேர்வு அட்டவணை 
  


 
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI 600 006

HIGHER SECONDARY EXAMINATION, MARCH 2012

TIME TABLE

HOURS:       10.00 am to 10.10 am – Reading the question paper

10.10 am to 10.15 am–Filling up particulars in the answer sheet 10.l5 am to 1.15 pm – Duration of the examination





DATE DAY SUBJECT
08-03-2012 THURSDAY LANGUAGE PAPER I  
09-03-2012 FRIDAY LANGUAGE PAPER II  
10-03-2012 SATURDAY
11-03-2012 SUNDAY
12-03-2012 MONDAY ENGLISH PAPER I
13-03-2012 TUESDAY ENGLISH PAPER II
14-03-2012 WEDNESDAY No Exam     
15-03-2012 THURSDAY No Exam     
16-03-2012 FRIDAY

PHYSICS,

ECONOMICS,
PSYCHOLOGY
17-03-2012 SATURDAY
18-03-2012 SUNDAY
19-03-2012 MONDAY

MATHEMATICS

ZOOLOGY
MICRO BIOLOGY
NUTRITION$DIETICS
20-03-2012 TUESDAY
COMMERCE
HOME SCIENCE
GEOGRAPHY
21-03-2012 WEDNESDAY No Exam     
22-03-2012 THURSDAY
  CHEMISTRY
ACCOUNTANCY
SHORT HAND
23-03-2012 FRIDAY Telugu New year day 
24-03-2012 SATURDAY
25-03-2012 SUNDAY
26-03-2012 MONDAY


BIOLOGY

HISTORY
BOTANY
FOUNDATION SCIENCE
BUSINESS MATHS
27-03-2012 TUESDAY No Exam
28-03-2012 WEDNESDAY


COMMUNICATIVE ENGLISH

INDIAN CULTURE
COMPUTER SCIENCE
BIO CHEMISTRY
ADVANCED LANGUAGE
TYPEWRITING
29-03-2012 THURSDAY NO EXAM
30-03-2012 FRIDAY

ALL VOCATIONAL THEORY

POLITICAL SCIENCE
NURSING(GENERAL)
STATISTICS