என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 15 மார்ச், 2012

இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?

விசித்திர நோயின் பிடியில்
  சிலவற்றைப் பார்க்கும்போதோ அல்லது  படிக்கும்போதோ மனம் பதறுகிறது. நம்மையும் அறியாமல் கலங்குகிறது. சமீபத்தில் வெளியான பிரபாகரனின் இளைய மகன் குண்டடி பட்டு இறந்து கிடக்கும் புகைப்படம்  கண்டு கலங்காத மனமும் இருக்க முடியம்?.
    இறப்பு மட்டுமல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் சிலருடைய வாழ்க்கை கேள்விக்குறிகளாக அமைந்திருப்பதும் இதயத்தை சங்கடப் படுத்துகிறது.
      நம்முடைய ஆசைகள் ஒன்றிரண்டு நிறைவேறாவிட்டாலும் நமக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அன்றாடம் துன்பத்தில் உழன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி எதிர்காலம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உண்டு என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 

   இதோ இந்தப் பெண்களைப் பாருங்கள். இவர்களுடைய சிக்கல் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் முடிதான் இவர்கள் பிரச்சனை. ஹைபர்ட்ரிகோசிஸ் (hypertrichosis)  என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உலகில் மிகவும் அரிதான நோய்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதிலும்  சுமார் 50 பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சொல்கிறது. இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?  
   பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் அனிதா சம்பாஜி என்பவருக்கு ஆறு மகள்கள். இவர் கணவனை இழந்தவர். ஆறு மகள்களில் மூவரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. சவிதா மோனிஷா,சாவித்திரி, என்ற மூவரின் வாழ்க்கையில்தான் விதி விளையாடி வருகிறது. அதிசய மரபணு நோயின் பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருக்கும் மகள்களை பார்த்து நாளும் கண்ணீர் வடிக்கும் அந்தத் தாயின் நிலையை சொல்ல வார்த்தைகள் ஏது?
  இந்த நோய் எப்படி வந்தது? இந்தப் பெண்களுடைய தந்தைக்கு இந்த நோய் இருந்ததாம். அதை மறைத்து அனிதாவுக்கு திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள். திருமணமாகுபோது இவருக்கு வயது 12 திருமணத்தின் போதுதான் மணமகனை முதன் முதலாக பார்த்தாராம். என்ன செய்வது? பெரும்பாலான கிராமப் பெண்களைப்போல் சகித்துக் கொண்டு வாழ்ந்தார். 2007 இல்  கணவனும் இறந்துவிட ஆறு பெண்களுடன் வாழ்க்கை கேள்விக்குறியானது.
   ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னவெனில் ஆறு பெண்களில் மூன்று பெண்களுக்கு இந்த வியாதி இல்லை என்பதே.
      இவர்களைப் பார்த்து ஓநாய் சகோதரிகள் என்று கிண்டலடிப்பார்களாம். சிறுமி சாவித்திரி பள்ளிக்கு போகும்பொழுது. மற்ற மாணவிகள் பக்கத்தில் உட்காராதே என்று துரத்தி விடுவார்களாம்.
   "இவர்களுக்கு திருமணம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்  இருக்கும்வரை எப்படியாவது இவர்களைக் காப்பாற்றுவேன். ஆனால் எனக்குப் பிறகு இவர்கள் வாழ்வு என்னவாகும்" என்று தாய் கண்கலங்கும் போது கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கேட்கத்  தோன்றுகிறது.
       பலவித மருந்துகளும் க்ரீம்களும் பயன்படுத்தியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
         இதற்கு சிகிச்சையே இல்லையா? இருக்கிறது . லேசர் சிகிச்சை ஒன்றே நிரந்தர வழி. ஆனால். ஒருவருக்கு 3.5 லட்சம் செல்வாகுமாகும்.
       அன்றாட உணவுக்கே போராடும் நிலையில் மூவருக்கும் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் எப்படி செலவு செய்ய முடியும்?.
    இவர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்நேஹ் குப்தா என்பவர் இவர்களைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை இவர்களுடைய சிகிச்சைக்கு அளிக்கப் போகிறாராம்.
     எனக்கு ஒன்று புரியவில்லை. குப்தா இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறாரா?  அல்லது  இவர்களை வைத்து பணமும் புகழும் பெற வேண்டுமென்று நினைக்கிறாரா?
      உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும். 10 லட்ச ரூபாய் திரட்ட முடியாத நிதி அல்ல.
     தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மகளிர் அமைப்புகள்,ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அதற்கு மேலாக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அரிதிலும் அரிய நோயால் அவதிப்படும் குடும்பத்திற்கு அரசிடமிருந்து ஏதாவது உதவித் தொகை கிடைக்க வழி இருக்கிறதா?
      கோடிகளில் புரளும் செல்வந்தர்களும் விளயாட்டு வீரர்களும் நடிக நடிகையர்களும்  நிறைந்த பூனே,மும்பை பகுதிகளில் இவர்கள் துயர் தீர்க்க யாருமே முன் வரவில்லையா?  இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா?
       இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.
  தினமலர் இணையதளத்தில் இந்த செய்தியைப் படித்து  விட்டு துபாயில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய தொலைபேசி எண்ணை கமெண்ட் பகுதியில் கேட்டிருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார், தினமலர் திரு சுப்ரமணியத்திற்கு முகவரியை வழங்கியதா என்று தெரியவில்லை.
       முதலில் உதவ முன்வந்த அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
       மற்றவர்களை உதவி செய்யச் சொல்லும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம். நானும் என்னாலியன்ற ஒரு சிறு தொகையை வழங்க  தயாராக இருக்கிறேன்.
      இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவது அவர்களுடைய முகவரியை கண்டு பிடித்து இயற்கையின் சாபத்திற்கு ஆளான அந்தப் பெண்களின் தாயின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தால் நேரடியாக வங்கிக்கு பணத்தை அனுப்ப ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும். எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன.
     அரசாங்கம் செய்யாவிட்டால் என்ன நம்மால் இயன்றதைச் செய்வோம். 
  
*************************************************************   

8 கருத்துகள்:

  1. மிகவும் மனதை பாதித்த பதிவு இது. அவர்களின் விலாசம் கிடைத்தால் உங்கள் பதிவில் அப்டேட் செய்யுங்கள். அதன் பிறகு என்னால் முடிந்த உதவிகளை செய்க்கிறேன். உங்களின் நல்ல எண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் சிறு வாய்ப்பாக இதை கருதுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!http://vstamilan.blogspot.com/2012/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பர் சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி. Liebster Blog விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    விருதை பெற்றுக்கொண்டமைக்கான பதிவையும் வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஆண்டவன் படைப்பில் கொடுமை-இதை
    அறிவது அனைவரின் கடமை
    ஈண்டெவர் மறப்பினும் மடமை-இவரை
    இழிவாய் பேசலும் மடமை
    வேண்டியேப் போட்டீர் பதிவே-அவர்
    வேதனை விளங்கிட இதுவே
    தூண்டுமே மக்களை அறிய-நல்
    தொண்டாய்ப் போற்றிட உரிய
    நன்றி!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. இந்த அதிசிய மணிதர்களுக்கு விருது கொடுத்து அவர்களை இந்த சமுதாயத்தின் ஊன்று கோலாக பாவிங்கள் அப்பனாதான் இவர்களுக்கு தாழ்வு மனப்பக்குவம் இல்லாமல் போகும்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895