சாவெனும் வடிவம் கொண்டு
காலனும் வந்து சேர்ந்தான்
போவென அவனை விரட்டும்
போராட்டம் ஓய்ந்ததாலே
தாவென உந்தன் உயிரை
தட்டியே பறித்து விட்டான்
ஓ!வென அலறிய ஒலியால்
உலகமே அதிர்ந்ததம்மா
அம்மா என்றழைக்க வைத்தாய்
அச்சமும் கொள்ள வைத்தாய்
அம்மாஉன் பெயரைச் சொல்ல
ஆயிரம் திட்டம் செய்தாய்
சும்மா இருந்த சிலரை
சுலபமாய் உயர்த்தி விட்டாய்
இம்மாநில மக்கள் மனதில்
இமயமாய் உயர்ந்து நின்றாய்
இன்னலே வாழ்க்கை முழுதும்;
இனிமையோ சிறிதே எனினும்
மின்னல் போல் ஒளிரும் முகத்தில்
இடர்களை மறைத்தே வைத்தாய்
கண்ணிலே கனிவும் உண்டு
கடுமையும் அதிலே உண்டு
மண்ணிலே நீயும் இன்று
மகத்தான பெண்ணாய் மறைந்தாய்
நிறைகளால் மட்டும் எங்கள்
நெஞ்சங்கள் நிறைந்த தாலே
குறைகளை சொல்ல நினைத்தும்
குரலது எழும்ப வில்லை
அறையினில் இருந்த போதும்
அனைவரையும் ஆட்டு வித்தாய்
தரையினில் புதைந்தாய் எனினும்
தரணியில் நிலைத்து நின்றாய்
------------------------------------------------------------------------------------------------------------------