என்னை கவனிப்பவர்கள்

புதன், 25 நவம்பர், 2015

வைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே! -

அடையாறு 

  வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்கும்  நம்மை சில நாள் மழை சின்னாபின்னமாக்கி விட்டது.  நாளிதழ்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாது  சமூக வலை தலைகளிலும் மழை இன்னமும் கதாநாயகனாய் (வில்லனாய்) வலம் வந்து கொண்டிருக்கிறது.  நான் அறிந்து இப்போதுதான் சென்னை அதிக அளவு மழையால் பாதிக்கப் பட்டிருக்கிறது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுத இருக்கிறேன்.


 மழையினால் கிராம மக்கள் நகர மக்கள்  என்ற வித்தியாசமின்றி  பாதிக்கப் பட்டாலும்   நீண்ட கால பாதிப்பு கிராம மக்களுக்கே. குறிப்பாக   மழை வந்தாலும் வராவிட்டாலும் அதிக அளவில்பாதிப்படைவது  விவசாயிகளே. இந்த பாதிப்புகள் வைரமுத்துவின் விதைசோளம்  என்ற மழை பற்றிய கவிதையை எனக்கு  நினவுபடுத்தியது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  இந்தக் கவிதை இடம் பெற்ற கவிதை தொகுப்பு நூலின் தலைப்பு பெய்யெனப் பெய்யும் மழை 

                                         விதைச் சோளம்
                     ஆடி முடிஞ்சிரிச்சு
                      ஆவணியும் கழிஞ்சிரிச்சு
                      சொக்கிகொளம்  கோடாங்கி
                      சொன்ன கெடு முடிஞ்சிருச்சு.

                      காடு காஞ்சிரிச்சு
                      கத்தாழை கருகிடிச்சி
                      எலந்த முள்ளெல்லாம்
                      எலையோட உதிஞ்சிருச்சு
.
                      வெக்க பொறுக்காம
                      றெக்க  வெந்த குருவியெல்லாம்
                      வெண்காடு விட்டு
                      வெகுதூரம் போயிடிச்சி.

                      பொட்டு மழை பெய்யலையே
                      புழுதி அடங்கலையே
                      உச்சி நனையலையே
                      உள்காடு உழுகலையே

                      வெதப்புக்கு  விதியிருக்கோ
                      வெறகாக விதி இருக்கோ
                      கட்டி வெச்ச வெங்கலப்ப
                      கண்ணீர்  வடிச்சிருச்சு

                      காத்துல ஈரமில்ல
                      கள்ளியில பாலுமில்ல
                      எறும்பு குளிச்சேற
                      இரு சொட்டுத் தண்ணியில்ல

                      தெய்வமெல்லாம் கும்பிட்டு
                      தெசைஎல்லாம் தெண்டனிட்டு
                      நீட்டிப் படுக்கையிலே
                      நெத்தியில  ஒத்த மழை

                      துட்டுள்ள ஆள  தேடி
                      சொந்தமெல்லாம் வாரதுபோல்
                      சீமைக்குப் போயிருந்த
                      மேகமெல்லாம் திரும்புதையா!

                      வாருமையா வாருமையா
                      வருண பகவானே!
                      தீருமையா   தீருமையா 
                      தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

                      ஒத்த ஏறு  நான் உழுக
                      தொத்தப்பசு வச்சுரிக்கேன்
                      இன்னும் ஒரு மாட்டுக்கு
                      எவனப் போய் நான் கேட்பேன்.

                      ஊரெல்லாம் தேடி
                      ஏர்மாடு  இல்லாட்டி
                      இருக்கவே இருக்கா என்
                      இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

                      காசு பெருத்தவளே
                      கார வீட்டுக் கருப்பாயி
                      தண்ணிவிட்டு எண்ணயின்னு
                      தாளிக்கத் தெரிஞ்சவளே!

                      சலவைக்குப் போட்டா
                      சாயம் குலையுமின்னு
                      சீல தொவைக்காத
                      சிக்கனத்து மாதரசி

                      கால்மூட்ட வெதச் சோளம்
                      கடனாகத் தந்தவளே
                      கால் மூட்ட கடனுக்கு
                      முழு மூட்ட அளக்கறண்டி 

                      ஊத்துதடி ஊத்துதடி
                      ஊசிமழை ஊத்துதடி
                      சாத்துதடி சாத்துதடி
                      சடசட சடையா சாத்துதடி

                      முந்தா நாள் வந்த மழை
                      மூச்சு முட்டப் பெய்யுதடி
                      தெச ஏதும் தெரியாம
                      தெர  போட்டுக் கொட்டுதடி

                      கூர  ஒழுகுதடி
                      குச்சிவீடு நனையுதடி
                      ஈரம் பரவுதடி
                      ஈரக் கொலை நடுங்குதடி

                      வெள்ளம் சுத்தி நின்னு
                      வீட்ட இழுக்குதடி
                      ஆஸ்தியில சரிபாதி
                      அடிச்சிக்கிட்டுப் போகுதடி 

                      குடிகெடுத்த காத்து வந்து
                      கூர  பிரிக்குதடி
                      மழைத் தண்ணி ஊறி
                      மண்சுவரு சரியுதடி.

                      நாடு நடுங்குதையா
                      நல்லமழை போதுமையா
                      வெத வெதக்க  வேணும்
                      வெயில் கொண்டு வாருமையா.

                      மழையும் வெறிக்க
                      மசமசன்னு வெயிலடிக்க
                      மூலையில வச்சிருந்த
                      மூட்டையைப்  போய் நான் பிரிக்க

                      வெதச் சோளம் நனஞ்சிருச்சே
                      வெட்டியா பூத்திருச்சே
                      மொளைக்காத படிக்கு
                      மொளைகட்டிப் போயிடிச்சே

                      ஏர் புடிக்கும் சாதிக்கு
                      இதேதான் தலையெழுத்தா?
                      விதிமுடிஞ்ச ஆளுக்கே
                      வெவசாயம் எழுதிருக்கா?

                      காஞ்சு கெடக்குதேன்னு
                      கடவுளுக்கு மனு செஞ்சா
                      பேஞ்சுக்  கெடுத் திருச்சே
                      பெருமாளே என்ன  பண்ண?


****************************************************


முந்தைய தானே புயல் கடலூர் பகுதியை புரட்டிப் போட்டது அப்போது நான் எழுதிய கவிதை  நேரம் கிடைக்கும்போது படிச்சுப்பாருங்க 

தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!

ஞாயிறு, 1 நவம்பர், 2015

இன்னொரு விடுதலை எப்போது?


    "வெறுங்கை என்பது மூடத் தனம்  விரல்கள் பத்தும் மூலதனம்"

 பட்டிமன்றங்களிலும் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக்  கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள்  தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்
இவரது கவிதைகள் நம்முள் மறைந்து கிடக்கும்   தமிழுணர்வையும்  சமூக உணர்வையும்  தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை.
புதுக்கவிதை கோலோச்சும் காலத்திலும்   இவரது கவிதைகள் மரபுக் கவிதைகள் கேட்போர் அனைவரையும் கவர்ந்தன.  அடுக்கடுக்கான சந்தங்கள் பொருட்செறிவோடு பின்னப் பட்டிருப்பது இவரது கவிதைகளின் பலநாகத் திகழ்கிறது. கவிதைகளை விரும்பாதவர்களையும்  இவரது பாடல்கள் ஈர்க்கும் என்றல் அது மிகை ஆகாது .
தமிழாசிரியராகப் பணியற்றிய தாரா பாரதி இன்று நம்மிடையே இல்லை. 2000ம் ஆண்டு வரை வாழ்ந்த இவரது கவிதை நூல்கள் நாட்டுடைமை யாக்கப் பட்டுள்ளன
ஏற்கனவே இவரது இரண்டு கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்.
இதோ இதையும் படித்து பாருங்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொள்வீர்கள்

                                   இன்னொரு விடுதலை எப்போது?

                                                      ஒருமைப்பாடு குறைபாடு
                                                       உண்மை போனது சுடுகாடு
                                                       தருமம் போனது வனவாசம்
                                                       தாயே இதுதான் உன்தேசம்

                                                        மாண்புகள் வாழும் திருநாடு
                                                        மன்னர்கள் கையில் திருஒடு
                                                        வீண்புகழ் பேசும் வள நாடு
                                                        விடுதலை  வந்தும் ஒழியாது

                                                        சிறுமைகளுக்கு  செல்லுபடி
                                                        சில்லறைகளுக்கு பல்லக்கு
                                                        பெருமைக் குணங்கள் கல்லறையில்
                                                         பிரிவினைக் குரல்கள் கொடிநிழலில்

                                                         பட்டப் பகலில் வழிப்பறிகள்
                                                         பலர் முன்னிலையில் படுகொலைகள்
                                                         வெட்ட வெளியில் கற்பழிப்பு
                                                         வீதியின் நடுவில் மதுக் கடைகள்

                                                         ஒழுக்கம் யாவும் தரைமட்டம்'
                                                         ஊழல்களுக்குப் பரிவட்டம்
                                                         அழுக்குகளுக்குப் பெரும்பதவி
                                                         அழுகல் சட்டம் அதற்குதவி

                                                         அரசியல் கட்சிகள் விலைபோகும் 
                                                         ஆண்டவன் கட்சிகள் நிலைமாறும் 
                                                          சரிவைநோக்கி நடைபோடும் 
                                                          சாதிக் கட்சிகள் வலையாகும் 

                                                           ஏய்ப்பவன் எல்லாம் கோபுரத்தில் 
                                                           ஏமாந்தவர்கள் ஒர்புரத்தில் 
                                                           மேய்ப்பவன் எல்லாம் புலியாக 
                                                            மேயும் ஆடுகள் பலியாக 

                                                            பத்துப்பேர்க்கு  சோலைவனம் 
                                                            பாதிப் பேர்க்கு  பாலைவனம் 
                                                            எத்திப் பிழைக்கும் மீதிப்பேர்க்கு 
                                                            இந்திய நாடு சொந்த நிலம் 

                                                            ஏனோதானோ மனப்பான்மை 
                                                            எங்கும் இதுதான் பெரும்பான்மை 
                                                            ஆணோ பெண்ணோ என்றாலும் 
                                                            அவரவர் தொழிலில் பொறுப்பின்மை 

                                                             நானோ நீயோ உழைக்காமல் 
                                                             நமது கூரை வழியாக 
                                                             வானோ மண்ணோ வழங்குமென 
                                                             வாசல் திண்ணையில் காத்திருப்போம் 

                                                             பொம்மைகள் தானா பொது மக்கள்? 
                                                             பொய்யர்கள் தானா தலைமக்கள்? 
                                                              நம்மை நாமே சுரண்டுவதா 
                                                              நகமே விரலை விழுங்குவதா?

                                                              சின்னக் கோல்களின் ஏவலுக்கு
                                                              சேவகம் செய்யும் செங்கோல்கள் 
                                                              அன்னைக் கால்களின் விலங்குகளை 
                                                              அகற்றப் போவது யார் கைகள்

                                                                சுதந்திர தேவி நாற்பதிலே 
                                                                சூதாட்டத்தில் பலியாடு  
                                                                இதந்தரும் விடியலை கொண்டுவர 
                                                                இன்னொரு விடுதலை எப்போது?

*************************************************************************** 

தொடர்புடைய பதிவுகள்