என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, July 23, 2013

வெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்

   வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்-இந்த  எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும் அந்தக்  கவிஞரின் பெயர் தாராபாரதி.  

  இந்த வரிகளே இப்படி  என்றால் இந்தக் கவிதை முழுவதும் எப்படி இருக்கும். இந்த வரிகள் அந்தக் கவிதையில் எங்கே புதைந்து கிடக்கும்? அதை அறிந்து கொள்ளும் நெடு நாள் ஆவலில் கன்னிமெரா நூலகம் எனும் புத்தக் காட்டுக்குள் புகுந்தேன்.  அரைமணி  தேடலுக்குப் பின் கிடைத்தது அந்த கவிதை புதையல் .   அது தாராபாரதி  எழுதிய "இது எங்கள் கிழக்கு" என்ற கவிதை நூல். அதில்தான் இந்தக் கவிதை மறைந்து கிடந்தது.  இவரது கவிதை வார்த்தைகளில் புரட்சி ஒலிக்கும். நரம்புகள் முறுக்கேறும். இவர் பாடலின் சந்தங்கள் காந்தமாய் கவர்ந்திழுக்கும். ஆனாலும் அதிகம் ஜொலிக்க முடியாத சூரியனாய் மறைந்து போனதன் காரணம்தான் தெரியவில்லை  இந்தக் கவிஞர் திரைப்பாடல் எழுதி இருந்தால் இன்னொரு அருமையான கவிஞன் கிடைத்திருக்கக் கூடும். 
  யான் பெற்ற கவி இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக இந்தக் கவிதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

வேலைகளல்ல  வேள்விகளே

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 
விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 
இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ 
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 
பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல் 
சுட்டு விரலின் சுகமாய் வானம் 
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 
தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 
வேலை களல்ல வேள்விகளே!
*****************************************************

இதைப் படித்து விட்டீர்களா?
கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி


30 comments:

 1. // தோள்கள் உனது தொழிற்சாலை //

  நீங்கள் பெற்ற இன்பம் நாங்களும் பெற்றோம்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. திகம் ஜொலிக்க முடியாத சூரியனாய் மறைந்து போனதன் காரணம்தான் தெரியவில்லை //
  நீங்க சொன்னதுபோல் திரைப்படப்பாடல்கள் எழுதவில்லையே

  ReplyDelete
 3. நல்ல கவி.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. தாராபாரதி அவர்களின் முழுக்கவிதையையும் தேடிக்கண்டுபிடித்து வெளியிட்டுள்ளதற்கு மிக்க நன்றிகள்.

  //வெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்//

  என்ற இதே வரிகளை என்க்கு ஒருவர் என் பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாகக் கொடுத்திருந்தார்கள். http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

  அதை முதன் முதலாகப் படித்ததும் அன்று நான் அசந்து போனேன்.

  இவர் எழுதியுள்ள எல்லா வரிகளிலும் உயிரோட்டம் உள்ளது.

  உதரணமாக //கட்டை விரலை விடவும் இமயம் குட்டை என்பதை எடுத்து சொல்
  சுட்டு விரலின் சுகமாய் வானம் சுருங்கினதென்று முழக்கிச் செல்//.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. இப்படி ஒரு கவிஞரை தமிழ் சினிமா இழந்தமை துரதிஸ்டவசமானதே.
  கவிஞர் எனக்குப் புதியவரே

  ReplyDelete
 6. வெறுங்கைனா மூலதனம் சரிதான்.. ஆனால் நம்மாளு கண்டவனிடமும் 10 வட்டி, 5 வட்டினு கந்துவட்டிக்கு கடன் வாங்கி வீடக் கட்டுறேன், மகனை படிக்க வைக்கிறேன்னு பெரிய கடனை வச்சுக்கிட்டு, அந்தக்கையோடல வெறுங்கையா இருக்கான். வங்கில கடன் வாங்கினாலாவது திவால் வாங்கி சமாளிக்கலாம்..கந்து வட்டிக்காரன் "திவால்" எல்லாம் கொடுப்பதில்லை!

  ஊருப்பக்கம் போனால் ரியல் எஸ்டேட் பண்ணுறேன், ஃபைனாண்ஸ் பண்னுறேன்னுதான் நம்மாளுக சோம்பேறிகளாகித் திரிகிறாணுக. விவசாயம் பண்ணினவன்கூட நிலத்தை வித்துப்புட்டு ஃபைனாண்ஸ் பண்ணுறான். ஆக மொத்தத்தில் உழைச்சு சாப்பிடுறவனுக்குத்தான் பஞ்சமாப் போச்சு!

  ReplyDelete
 7. மிக நல்ல கவிதை படித்து ரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
  தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை
  தோல்விகள் ஏதும் உனக்கில்லை-இனி
  தொடு வானம்தான் உன் எல்லை//

  தன்னம்பிக்கை சும்மா துள்ளி தோளில் ஏறி உக்காருது இதை படித்த உடனேயே நன்றி....!

  ReplyDelete
 9. நல்லதொரு கவிதைப் பகிர்வு. தட்டி எழுப்பும் வரிகள்.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகப் பதிவு.
  கவிதைத் தேர்வும் அருமை மூங்கில் காற்று.

  ReplyDelete
 11. கட்டை விரலை விடவும் இமயம்
  குட்டை என்பதை எடுத்து சொல்

  என்னவொரு நம்பிக்கை பார்த்தீர்களா,
  இவர் போன்றவர்கள் வெளிச்சத்திற்கு வராதது வருத்தமளிக்கின்றது

  ReplyDelete
 12. அருமையான கவிதை
  முயன்று எடுத்து பதிவாக்கி நாங்கள் அறியத்
  தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 13. இதுபோன்ற கவிதைகளை தினமும் படித்தால் தன்னம்பிக்கை வளரும்.... நன்றி...

  ReplyDelete
 14. நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள். நீங்கள் ரசித்த கவிதையை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 15. //மண்புழு அல்ல மானிடனே - நீ
  மாவலி காட்டு வானிடமே!//

  படித்தவுடனே சிலிர்த்து எழ வைக்கும் சொற்கள்!
  கவிஞரையும் அவரது கவிதையையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 16. அருமையான சொற்கட்டு..
  மிக்க நன்றி தந்ததற்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 17. இத்தனை எழுச்சி மிக்க வரிகளை எழுதியவரா அங்கீகரிக்கப்படாமல் போனார்? என்ன அக்கிரமம். தேடிப்பிடித்து பகிர்ந்ததற்கு நன்றி. அந்த தொகுப்பிலுள்ள மற்றவற்றையும் வெளியிடலாமே... முடிந்தால்!

  ReplyDelete
 18. வணக்கம்
  முரளி(அண்ணா)
  புத்தகம் என்ற மலர்ச்சாலை –தேடி
  புத்தி புகட்டும் கவியை –எம்
  அறிவுக்கு விருந்தாக்கியமைக்கு-நன்றிகள் பல
  அருமயைான கவி வாழ்த்துக்கள் -அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 19. தாராபாரதியின் தன்னம்பிக்கை வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி! வெறும்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்! என்ற வரிகள் அருமை! சிறப்பான கவிஞர் அங்கீகாரம் இல்லாமல் போனது இழப்புதான்! நன்றி!

  ReplyDelete
 20. அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 21. நல்லதொரு கவிதையைப் படித்த திருப்தி...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் எனக்கும்

   Delete
 22. //விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
  வேங்கைப் புலிநீ தூங்குவதா?// அட்டகாசமான வரி

  சிறந்த பகிர்வு சார்

  ReplyDelete
 23. வணக்கம்
  முரளி(அண்ணா)
  மிக மிக சுப்பர்..திருவிளையாடல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 24. அத்தனை வரிகளும் அருமை..பகிர்வுக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 25. தாராபாரதியின் தொடர்பு என் தாருங்கள்
  எனது என் 9789433344
  கரூர் ராசேந்திரன்

  ReplyDelete
 26. வெறுங்கை என்பது மூடத்தனம்-உன்
  விரல்கள் பத்தும் மூலதனம் //
  அருமையான் கவிதை .
  பகிர்வுக்கு நன்றி.
  தாரா பாரதிஅவர்களைப் பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895