என்னை கவனிப்பவர்கள்

எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜூலை, 2013

வெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்

   வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்-இந்த  எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்? உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும் அந்தக்  கவிஞரின் பெயர் தாராபாரதி.  

  இந்த வரிகளே இப்படி  என்றால் இந்தக் கவிதை முழுவதும் எப்படி இருக்கும். இந்த வரிகள் அந்தக் கவிதையில் எங்கே புதைந்து கிடக்கும்? அதை அறிந்து கொள்ளும் நெடு நாள் ஆவலில் கன்னிமெரா நூலகம் எனும் புத்தக் காட்டுக்குள் புகுந்தேன்.  அரைமணி  தேடலுக்குப் பின் கிடைத்தது அந்த கவிதை புதையல் .   அது தாராபாரதி  எழுதிய "இது எங்கள் கிழக்கு" என்ற கவிதை நூல். அதில்தான் இந்தக் கவிதை மறைந்து கிடந்தது.  இவரது கவிதை வார்த்தைகளில் புரட்சி ஒலிக்கும். நரம்புகள் முறுக்கேறும். இவர் பாடலின் சந்தங்கள் காந்தமாய் கவர்ந்திழுக்கும். ஆனாலும் அதிகம் ஜொலிக்க முடியாத சூரியனாய் மறைந்து போனதன் காரணம்தான் தெரியவில்லை  இந்தக் கவிஞர் திரைப்பாடல் எழுதி இருந்தால் இன்னொரு அருமையான கவிஞன் கிடைத்திருக்கக் கூடும். 
  யான் பெற்ற கவி இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக இந்தக் கவிதையை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

வேலைகளல்ல  வேள்விகளே

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 
வேங்கைப் புலிநீ தூங்குவதா?
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 
விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 
எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 
இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்
நீதான் பூமத் தியரேகை-நீ 
போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 
பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 
விரல்கள் பத்தும் மூலதனம் 
கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 
கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்து சொல் 
சுட்டு விரலின் சுகமாய் வானம் 
சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 
தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 
தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 
தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-
துருவங் களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே - நீ
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 
வேலை களல்ல வேள்விகளே!
*****************************************************

இதைப் படித்து விட்டீர்களா?
கவுத்திட்டயே சரோ!- காதல் கடிதம் -போட்டி