என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 18 ஜூன், 2017

தாயிடம் தோற்கும் தந்தைகள்


       பல்வேறு சூழல்களால்  பதிவு எழுத இயலவில்லை.   இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து  மீண்டும் வெளியிட  என்வலைப் பக்கம் வந்தபோது எனக்கு சிறு ஆச்சர்யம். பார்வைகளின் எண்ணிக்கை  7,07,571 ஐ  கடந்திருந்தது . அதிகம் எழுதாத நிலையிலும் மாதத்திற்கு  ஏறக்குறைய 8.000 பக்கப் பார்வைகள் கிடைத்தால் ஆச்சர்யப் படாமல் எப்படி இருக்க முடியும். 
ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இனி அவ்வப்போது சந்திப்போம்.


--------------------------

   தாயை மட்டுமே போற்றி வந்த சமூகம்  சமீப காலமாக  தந்தையைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. நிறைய கட்டுரைகள் கதைகள் திரைப்படங்கள் தந்தையின்  பெருமையைப்  பேசுகின்றன. முரடர்களாக கருதப்பட்ட அப்பாக்கள் இன்று இல்லை. தந்தைகள்  அன்பான அப்பாக்களாக  உருமாறினார்கள்.  தற்போதைய அப்பாக்கள் மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும் தோழமையான அப்பாக்களாக மாறிப்போனார்கள். அதற்கு இடம் கொடுத்த தாய் களுக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.தந்தைக்கு  சிறப்புக்கள் எப்போதும் தாமதமாய்த்தான் கிடைக்கும்.
      . எனது தந்தையைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தந்தையர் தினத்திற்கு நன்றிகள் . 

    என்னுடைய ஹீரோ ரோல் மாடல்  எங்கப்பாதான் என்று  பலரும் தங்கள் தந்தையைப் பற்றி கூறுவார்கள்.  அப்படி எல்லாம் நான் நினைத்ததில்லை. அப்பாவுக்கென்று பெரிதாக குறிக்கோள்கள் ஏதும் இருந்ததில்லை. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் செலுத்தினார். பல வீடுகளில் அம்மாக்களின் அளவுக்கு மீறிய ஆளுமை தந்தையின் தனித்துவத்தை உணர விடாமல்  செய்து விடுகிறது. அப்படித்தான் எனது தந்தையும். எங்களை இதுதான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டதில்லை. எங்களை படி என்று வற்புறுத்தியதில்லை. படிப்புதான் வாழ்க்கை என்று மூளை சலவை செய்ததில்லை. ஒரு நாளும் அடித்ததில்லை; ஏன்? திட்டியது கூட இல்லை. அவர் மிகவும் நல்லவர் என்று பெயர் எடுத்திருக்கிறார் ஆனால் சாமர்த்தியசாலி என்று பெயர் எடுக்கவில்லை . அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. எந்தவித கெட்ட பழக்கமும் அவரிடம் இருந்ததில்லை.. வெற்றிலை கூட போடமாட்டார்.  அவரை ஒரு அப்பாவியாகவே பலரும் பார்த்தனர். இதுவே அவரது பலமாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. நீண்ட நாட்களாக அவரை பற்றி எழுத வேண்டும் நினைத்திருப்பேன்.   அவரது  நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தந்தையர் தினத்துக்கு நன்றிகள் .சொல்லத்தான் வேண்டும்
        எனது தந்தை ஒரு ஆசிரியர். அதுவும் தலைமை ஆசிரியர் என்பதால் நல்ல ஆசிரியருக்கு  உரித்தான் பல குணங்கள் அவரிடம்  இயல்பாகவே இருந்தன. .பிற்காலத்தில் அவை எனக்கும் தொற்றிக் கொண்டன.

   நான் பிறந்த நேரத்தில்  எனது தந்தை பள்ளியில் இருந்தததாகவும் கடுமையான புயல் மழை என்பதால் மாணவர்களை பாதுகாப்புக்காக இரவு முழுவதும் பள்ளியிலேயே தங்க வேண்டி இருந்தது என்றும் அம்மா(குறையாக) சொல்வார்கள். அந்த கிராமத்தில் வாத்தியார் என்றால் அதிக மரியாதை உண்டு. ஊரில் வசதியும் செல்வாக்கும் உள்ள ஒருவர்  இலவசமாகவே தங்கு வதற்கு  இடவசதி செய்து  கொடுத்திருந்தார். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையை ஒரு முனையை தடுத்து வீடாக்கி கொடுத்தார்கள்.வேலையில் சேர்ந்தபோது அந்த வீட்டுக்கு வந்த அப்பா  ஒய்வு பெறும் வரை  அந்த வீட்டில்தான் இருந்தார். எனது அண்ணன் அக்கா ஆகியோர் மருத்தவமனையில் பிறந்தவர்கள். நான் மட்டும் அந்த வீட்டில் பிறந்தவன் என்ற பெருமை எனக்குண்டு. (புயல் காரணமாக மருத்துவமனை செல்ல முடியவில்லையாம். )

  மாலை நேரங்களில் பெரிய  வீட்டுக் குழந்தைகள்  ட்யுஷன் படிக்க வருவார்கள். அம்மா ஆசிரியை இல்லை என்றாலும்  டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் படிப்பேன்.ட்யுஷனுக்கு பணம் ஏதும் தரமாட்டார்கள்.  ஆனால்  தன் வயலில் விளையும் நெல், நிலக்கடலை, போன்றவற்றை அறுவடை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு  கொடுத்து அனுப்புவர் 

  அவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியிலேயே என்னையும் சேர்த்தார். ஆறாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். தந்தையே ஆசிரியராக இருக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கே கிடைக்கும். அது எனக்கும் கிடைத்தது.  என் தந்தைக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உண்டு. அதனை பயன்படுத்திக் கொண்ட இன்னொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்  பணியாற்றிய இடத்தை விட்டு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பள்ளிக்கு ,  மனமொத்த மாறுதல் பெற்றுக்  கொண்டார். அந்தப் பள்ளிக்கு நடந்துதான் செல்லவேண்டும் .பேருந்து வசதியும் கிடையாது. அப்பாவுக்கு சைக்கிள் ஒட்டவும் தெரியாது. எங்கு சென்றாலும் நடந்துதான் செல்வார்.  நடராஜன் என்ற பெயருக்கு ஏற்ப நடராஜா சர்வீசிலேயே காலத்தை  கடைசி வரை கழித்து விட்டார்.

   அப்பா மாணவர்களை அடிக்க மாட்டார், அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் கையைக் குவித்து முதுகில் லேசாக அடிப்பார். சத்தம் மட்டும்  பெரிதாக கேட்கும்; வலிக்காது என்று அவரிடம் படித்தவர்கள் கூறுவார்கள். அப்பாவுக்கு சில விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பாட்மிண்டன்  நன்றாக ஆடுவார்.

   பம்பரம் வாங்கிக் கொடுத்து பம்பரம்  விடுவதற்கு எனக்கு கற்றுத் தந்தார். அதில் சில வித்தைகளையும் செய்து காட்டுவார். வழக்கமாக பம்பரத்தை தரையில் சுற்றவைத்தது விட்டு பின்பு அதை கையில் லாவகமாக எடுப்பார்கள். அனால் அப்பா சாட்டையை வீசி அப்படியே பாமபரத்தை கையிலேயே நேரடியாக பிடித்து சுழலச் செய்வார். அதை பலமுறை செய்து நானும் கற்றுக் கொண்டேன்,
  சர்க்கசில் செய்வது போல மூன்று பந்துகளை மாற்றி மாற்றி கைகளில் தூக்கிப்போட்டு பிடித்துக் காட்டுவார்.நீண்ட குச்சியை விரல்களில் நிற்கவைத்துக் காட்டுவார். அதோடு அதை தூக்கிப் போட்டு அதன் மறுமுனையை அப்படியே விரல்களில் விழாமல் பிடிப்பார். 

    பனை ஓலையில் காற்றாடி செய்து கருவேல முள் கொண்டு வேகமாக சுழலச் செய்வார். பட்டம் செய்து கொடுப்பார். பட்டத்திற்கு சூத்திரம் போடுவது எப்படி என்று சொல்லித் தருவார். பட்டம் விடும்போது நூல் வழியே ஓலைத் துண்டை அனுப்பு வார். அது சுற்றிக்கொண்டே வேகமாக உயரே சென்று பட்டத்தை சென்றடயும். அதை தந்தி என்று சொல்லி மகிழ்விப்பார்.

  விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும்; குடை செய்ய ஆரம்பித்து விடுவார். ஒரு மாதத்துக்கு முன்பே மூங்கில், காகிதம் இவற்றை சேகரித்து வைப்பார். விதம் விதமாக அழகான குடைகள் கடைகளில் கிடைத்தாலும் அவர் கையால் செய்து அதை பயன்படுத்துவதுதான் அவருக்கு பிடிக்கும். இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  இவை எல்லாம் அப்போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பை ஏற்படுத்துகிறது. 

   ஏற்கனவே சொன்னது போல அப்பாவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தாத்தாவின் சொத்தில்( சென்னையின் முக்கியப் பகுதியில் இருந்தது  )  தன் உரிமையை  விட்டுக் கொடுத்தார்.  அதனால் கோபம் அடைந்த  அம்மாவின் வற்புறுத்தலால் சென்னையின் புறநகர் பகுதியில் மனை வாங்கினார். வீடு கட்டி உறவினர் முன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அதை நிறைவேற்ற முனைந்தார் . அண்ணனின் மேல் படிப்புக்காக சென்னைக்கு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.   எப்படியோ கஷ்டப்பட்டு வீடும் கட்டி விட்டார்.  நாங்கள் இங்கே தங்கி இருக்க அப்பா ஊரிலேயே இருந்தார். மாதம் ஒரு முறைதான் வருவார். 

   அப்பாவுக்கு சங்கீத  ஞானமும் கொஞ்சம் உண்டு. ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து விடுவார். "தீராத விளையாட்டுப் பிள்ளை" என்ற பாடல் அப்பாவுக்கு மிகவும் படிக்கும். எங்களை தூங்க வைக்க அந்த பாடலையே பாடுவார் . அப்பாவுக்கு சமைக்கவும் தெரியும். ருசித்து  சாப்பிடவும் செய்வார்.  கதை புத்தகங்களில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. செய்தித்தாளை வைத்துக் கொண்டு நாள் முழுதும் வாசித்துக் கொண்டிருப்பார்.

    அப்பாவுக்கு எப்போதுமே எல்லோரும் நல்லவர்கள்தான் என்றே எண்ணுவார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் நம் மீது தவறு இருக்குமோ என்றுதான் சிந்திப்பார். 

   ஒல்லியான தோற்றம் அவருடையது .அவருக்கு நடையே உடற்பயிற்சியாக இருந்ததால் ப்ரெஷர், சுகர் என்று எதுவும் அவருக்கு வந்ததில்லை.அவரது வாழ்நாளின் இறுதி நாட்களில் மட்டுமே சிறிது சிரமப் பட்டார். அவருக்காக மேற்கத்திய கழிப்பறை அமைத்தோம்.சில நாட்கள் மட்டுமே பயன் பட்டது. 
 ஆனாலும் நடந்தே பல இடங்களுக்கும் சென்ற அவரால் கழிப்பறை செல இயலவில்லை. நான் மெது வாக அழைத்து செல்வேன். என் மகனும் உதவுவான். என் மனைவியும் முகம் சுளிக்காமல் தன் பங்கை செய்தார்.  பணிக்குசெல்லுமுன்  டயபர்  கட்டி விட்டு செல்வேன்.  மாலையில் வந்து  வேறு மாற்றுவேன்.
    ஒரு நாள் காலை அப்பா லேசாக நெஞ்சடைக்கிறது என்று சொல்ல ஒன்றுமில்லை காப்பி சாப்பிடுங்கள் என்று காபியை கொடுக்க, விழுங்க முடியாமல் அவதிப் பட்டார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர் மெல்லப் பிரிந்தது.  அதை மனம் நம்ப மறுத்து சினிமாவில் வருவது போல மார்பில் லேசாக இரு கைகளாலும் வேகமாக தட்டிப் பார்த்தேன். பயன் ஏதுமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து நின்றேன். உடனே அழுகை வரவில்லை. பின்னர் கண்கள் கலங்க ஆரம்பித்தன. ஓ! வென்று கதற நினைத்த நான் அடக்கிக் கொண்டேன்.  கடைசி நேரத்தில் அவரது அருகில் இருந்தமைக்காக லேசான திருப்தியுடன் அடுத்த பணிகளை கவனிக்க சென்றேன்.அவரை பொருத்தவரை நிறைவாகவே வாழ்ந்திருப்பார் என்று நம்புகிறேன். 

   எங்கள் பகுதியில் முதலில் வீடு கட்டியது அப்பாதான். அவர் பணியாற்றிய போது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால் வீடு கட்டியதை பெருமையாகக் கருதினார். 

   இன்று அது பழமையானதாக மாறி விட்டது அதன் பின்னர் கட்டிய பல வீடுகள் இன்று பிளாட்டுகளாக மாறி விட்டது.அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்ட நினைத்துள்ளோம் ஆனால் மனம் வரவில்லை. ஒவ்வொரு கல்லும் என்னை இடிக்காதே என்று சொல்வது போல் எனக்குத் தோன்றியது .. ஆனாலும் வேறு வழியின்றி வீடு இடிக்கும் பணி துவங்கப் பட்டது.  வீடு இடிக்கும் வேலைக்கு வந்தவர்    கடப்பாறையால் ஓங்கி முதல் இடி இடித்தார். கொஞ்சம் மெல்ல இடியுங்க என்றேன். மெதுவா இடிச்சா எப்படி சார் இடிக்க முடியும். நீங்க போங்க சார்! என்றான். மனதை என்னவோ செய்தது. குற்ற உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன். நான் கட்டிய வீட்டை இடிச்சிட்டயேடா  என்று என் தந்தை கேட்பது போல் தோன்றியது.  அன்று  இரவு முழுதும் உறக்கம் வரவில்லை. 
  இப்போது புதியதாக வீடு கட்டும் பணி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தனி வீடு கட்டுவதில் எவ்வவளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிந்தது. இடிக்கப்பட்ட வீட்டின் சில கட்டிடத் துண்டுகள் ஆங்கே கிடக்கின்றன என் மனதைப் போலே. அவை எனது தந்தையை நினைவு படுத்திக் கொண்டிருக்கின்றன. வீடுகள் செங்கல் மணல், சிமென்ட்  ஜல்லிக் கலவைகளால்  மட்டும் கட்டப்படுவதில்லை . அந்தக் கலவையில் கண்ணுக்குத்  தெரியாத  உணர்வுகள் கலந்து கிடக்கின்றன.  

   தாய்களைப் போலவே பெரும்பாலான தந்தைகளும் தனக்காக வாழ்வதில்லை. தாய்களிடம் தோற்றுப் போவதை தந்தைகள் பெரிது படுத்துவதில்லை. இறந்தபின்பு அவரை போற்றுவதை விட, இருக்கும்போது நம்மைத் தாங்கிய தந்தையை கடைசி வரை தாங்குவதே மகன் தந்தைக்காற்றும் உதவியாகக் கொள்வோம். 
நம் பிள்ளைகளும் நம்மை நினைவு கூறும் அளவுக்கு நடந்திருக்கிறோமா?  தெரியாது ! தெரிய பல காலம் ஆகலாம்.  ஏன்? தெரியாமலேகூட போகலாம் .


*******************************