என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

காணாமல் போகும் கிணறுகள்


       வடிவேலு ஒரு படத்தில் தான் தோண்டிய கிணற்றைக் காணோம் என்றும் கண்டுபிடித்துத் தரும்படியும்  போலீசில் புகார் செய்து நம்மை யெல்லாம் சிரிக்க வைப்பார்.
      அந்தக் காமெடியின் நோக்கம் லஞ்சம் பற்றியதாக இருந்தாலும் இந்த நகைச்சுவைக் காட்சியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கிணறுகள் பற்றி சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வரும்.

      சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலான கிணறுகள் காணாமல் போய்விட்டன. காரணம் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டதால் இட நெருக்கடியை சமாளிக்க இப்போதெல்லாம் இருக்கிற கிணற்றை எல்லாம் மூடிவிட்டு அந்த இடத்தை வீணடிக்காமல் கட்டடம் கட்டிவிடுகிறார்கள். கிணற்றுக்கு பதிலாக ஆழ் துளைக் குழாய்கள் அமைத்து விடுகிரார்கள்.

      
      சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இதே நிலைதான்.முன்பு இங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருந்தன. விவசாயத்திற்காக மிகப் பெரிய கிணறுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சென்னையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் நடப்பதில்லை. விவசாய நிலங்களெல்லாம் ப்ளாட்டுகளாக மாறி விட்டபடியால் இந்தக் கிணறுகளும் தூர்க்கப் பட்டு வருகின்றன. அப்படி தூர்க்கப் படாத கிணறுகளை பொது  மக்கள் குப்பை கொட்டியே மூடிவிடுவார்கள். அப்படித்தான் எனக்குத் தெரிந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இருந்த பல கிணறுகள்  குப்பைகளால் நிரப்பப் பட்டுவிட்டன.
      
       அடுத்தடுத்த தலை முறையினருக்கு கிணறு என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. சென்னையிலேயே  பிறந்து வளரும் சில குழந்தைகளுக்கு கிணறு,ராட்டினம்  பற்றி தெரியாததைக் கண்டிருக்கிறேன்.

      
       கிராமங்களிலும் கிணறுகளின் எதிர்காலம் கேள்விக்குறியே. விவசாயத்திற்கும் பல இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நிறையப் பேருக்கு நீச்சல் தெரிந்திருக்கும். சிறுவயதில் இருந்தே கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்வார்கள். நீச்சல் பழக  தரைக் கிணறு மிகவும் வசதியானது. நீர் நிறைந்த  கிணறுகளில் குதித்து விளையாடுவது ஒரு அற்புதமான பொழுது போக்கு.
      இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்குமா? அதைப் பற்றி அவர்கள் கவலைப் படவும் போவதில்லை. மறைந்து கொண்டிருக்கும் கிணறுகளை மியூசியத்தில் கூட வைக்க முடியாது.போட்டோக்களில்தான் பார்க்க முடியும்.  
      "ஐயா! கிணறு காணாம போச்சுயா!" வடிவேலு சொல்வது உண்மைதானே"

                    (காணாமல் போன கிணற்றில் ஒன்று)
    விஞ்ஞான வளர்ச்சியால் மேலும் மேலும்  வசதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்க்கையைத்  தொலைத்துக் கொண்டிருக்கிறோமா?
************************************************************************************************************** 

இதையும் படியுங்க!

ஞாயிறு, 27 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி4



செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி1
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி2 
செல்ல நாயின் இறப்பு!ஒருமாதம் பரபரப்பு!பகுதி3 
ஜூனோ எங்கள் செல்லமே  
**********************************************************************************
பகுதி 4
      வளைந்து நெளிந்து சென்ற பாம்பின் தடம், பரப்பி வைத்த மாவில் தெரிந்தால்  அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்? முன்தினம்   இரவு தரைப்பகுதியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அலமாரிகளின்  கீழ்ப் பகுதியையும்  காலி செய்து வைத்திருந்தோம்.
     அந்த அடையாளம் வந்த பாம்பின் தடமா? அல்லது வெளியே சென்ற பாம்பின் தடமா? என்று அறியாமல் குழம்பினோம். படத்தில் பாருங்கள்! எது தொடக்கம் எது முடிவு என்று அறிய முடிகிறதா? பாம்பு பிடிப்பவரை அழைத்து வீடு முழுவதும் தேடிப்  பார்த்துவிட முடிவு செய்தோம். சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணைக்கு போன் செய்து பாம்பு பிடிப்பவரை வரவழைத்தோம்.
     வந்தவர் பாம்பை கண்ணால் பார்த்தீர்களா  என்று கேட்டார். நாங்கள் பார்க்கவில்லை என்று சொன்னோம். பார்த்திருந்தால் எளிதில் பிடிக்கலாம் என்று சொல்லிவிட்டு தரையில் தெரிந்த பதிவை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கட்டுவிரியன் பாம்புத் தடம் மாதிரி தெரிகிறது என்றார். 

   (ஜூனோ)
       
     எங்கள் செல்ல நாயான ஜூனோ  வீட்டுக்குள் இறந்ததையும் சொன்னோம். எலி, தவளை இருந்தால் அதை பிடிப்பதற்காக பாம்பு வந்திருக்கலாம்.  எலியோ அல்லது தவளையோ வந்த வழியே பாம்பு வந்திருக்கக் கூடும். ஓணான் அணிலோடு விளயாடுவதுபோல பாம்பைப்  பிடிக்க ஜூனோ   முனைந்திருக்கலாம்.அப்போது பாம்பு கடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். அதை உணராத ஜூனோ மெதுவாக விஷம் ஏறி தூங்கும்போதே இறந்திருக்கலாம்.
     பேசிக்கொண்டே முதலில் வீட்டை வெளிப்புறமாக சுற்றி வந்தார். காம்பவுண்ட் ஓரங்களில் பல இடங்களில் பெருச்சாளி பொந்துகள் காணப்பட்டன. இதுபோன்ற இடங்கள் பாம்பு வசிப்பதற்கு மிகவும் வசதியானது. இங்கே பாம்பு நிச்சயமாக இருக்கும் என்றார்.
     வீட்டின் வெளிப்புறத்தில் பாம்பு நடமாட்டம் இருக்கிறதென்பது எங்களுக்கு நன்றாகத்  தெரியும். வீட்டுக்குள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள் என்றோம்.
    பீரோ கட்டில், பெட்டிகள் இவற்றையெல்லாம் நகர்த்திவிட்டு மூலை முடுக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு பாம்பு உள்ளே இல்லை அது வெளியே போயிருக்கும் என்றார்.
   வாசல் மற்றும் தோட்டத்துக் கதவின் கீழ்ப் பகுதியில் சிறிய இடைவெளிகள் இருந்ததை சுட்டிகாட்டி பாம்பு வருவதற்கும் போவதற்கும்   இது போதுமானது என்று பயமுறுத்தியதோடு ஜன்னல்களைப் பார்த்துவிட்டு அதன் வழியாக சில பாம்புகள் ஏறிவரும் என்றும் கிலி ஏற்றினார்.
    பின்னர் உப்பு மிளகு போன்ற சில வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து பல இடங்களில்  தூவிவிட்டார். இந்த வாசனைக்கு எந்த பாம்பும் வராது என்று சொல்லிவிட்டு கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு நடையைக் கட்டினார்.
          அன்று இரவு அவர் சொன்னது போல உப்பு உள்ளிட்ட கலவை  பொருட்களை வாசல்படி ஜன்னல் மற்றும் எந்த இடங்களில் வழியாக பாம்பு நுழைந்திருக்கலாம் என்று நினத்தோமா அங்கெல்லாம் தூவி வைத்தோம், அது மட்டுமல்லாமல் வழக்கம் போல வீட்டிற்குள்ளும் மாவைத் தூவி வைத்தோம்.
     அடுத்த நாள் எந்தத் தடமும் இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றோம்.
      ஆனால் மறுநாளும் எங்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
கீழ்க்கண்டவாறு மீண்டும் தடம் பதிந்திருந்தது.
                              (தொடரும்)
 அடுத்த பகுதிக்கு செல்ல 
பகுதி  5

வியாழன், 24 நவம்பர், 2011

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :நிறைகள்- குறைகள்

       (திரை இசை மும்மூர்த்திகள் )

     
     ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி , மூவருமே  தமிழ்த் திரையிசையின் trend Setter களாகத்   திகழ்ந்தவர்கள் கர்நாடக இசையில் சியாமா சாஸ்திரி,  தியாகராஜர் , முத்துஸ்வாமி தீட்சிதர் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப் படுகிறார்கள். அது போல  திரை இசை மும்மூர்த்திகள்  என்று எம்.எஸ்.வி , இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரையும் கூறலாம். 

   இவர்களைப் பற்றிய ஒரு சிறு அலசல்
  
  ஏ.ஆர்.ரஹ்மான்(A.R.Rehman)
பலங்கள்:

  1. பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியது.
  2. புதுமையான ஒலிக்கோர்வைகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
  3. குறுகிய காலத்தில் இந்தித் திரை  உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 
  4. இன்றுவரை இந்தியத் திரை இசை உலகில் முதல் இடத்தில் இருப்பது
  5. திரை இசை மட்டுமல்லாது ஆல்பங்களின் மூலமும் புகழ் பெற்றது.
  6. ஒரு பாடலை உருவாக்க பல நாட்கள் உழைப்பது
  7. குறைவான படங்களுக்கு மட்டுமே இசை அமைக்க ஒப்புக் கொள்வது
  8. பெரிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே பணி புரிவது.
  9. அனைத்து வகையான புதிய தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பது
  10. உலகின் பல்வேறு இசை வடிவங்களை, இசைக் கருவிகளை fusion களை  திரையிசையில் பரிசோதனை செய்வது.
  11. தனது இசையை நேர்த்தியான  முறையில் மார்கெட்டிங் செய்யும் திறன் பெற்றிருப்பது
  12.  ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைக்கும் தகுதி பெற்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக் கூடிய ஆஸ்கார் விருது பெற்றதோடு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது
  13.  மிகக் குறைவான படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் மற்ற இந்திய இசை அமைப்பாளர்களைவிட அதிக பணமும் அளவிலாத புகழும் சம்பாதித்தது.
  14.  இளமையான ஆக்ரோஷமான ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பது
  15.  அதிகம் பேசாமல் இருப்பது
  16.  மேற்கத்திய  பாணியில் இசை அமைப்பது
  17.  பல புதுபுது பாடகர்களை அறிமுகப்படுத்தியது

 பலவீனங்கள் குறைகள்
1. பெரிய இயக்குநர் தயாரிப்பாளர் படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பது
2.    ஒரு படம் இசை அமைப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது
3.    பாடல் வரிகள் புரிய வண்ணம் இசை அமைப்பது
4.    பாடலையும் தானே எழுதுவது
5.    இளையராஜா போலவே அனைத்துப் படங்களிலும் பாடுவது
6.    மொழி தெரியாப் பாடகர்களையே அதிகமாகப் பயன் படுத்துவது
7.   சாதாரண இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எளிதில் அணுக முடியாத  நிலையில் இருப்பது
8.     இசையில் அதிக இரைச்சல் இருப்பது
9.  நமது நாட்டுப்புறப் பாடல்களையும் மேற்கத்திய பாணியிலேயே இசை அமைப்பது
10.அதிகப் பாடகர்களை பயன்படுத்துவதால் பாடகர்கள் யாவரும் நிலைத்த புகழைப் பெறாமல் இருப்பது
11. மிகக் குறைவான பாடல்களுக்கு இசை அமைப்பது
12. மூத்த இசை அமைப்பாளர்கள் யாரையும் புகழ்ந்து ஒரு வார்த்தை கூட சொல்லாதது
*******************************************************************************************************
இளையராஜா (Ilayaraja)


பலங்கள்
  1. தமிழ்த் திரை இசைக்கு ஒரு புதிய பரிமாணம் தந்தது .
  2. காட்சிக்கான பின்னணி இசையில் முத்திரை பதித்தது.
  3. திரைப் படத்தின் விளம்பர பேனர்களில் இடம் பெற்ற முதல் இசை அமைப்பாளராகத் திகழ்ந்தது.
  4. இன்றளவும்  தீவிர பக்தர்களைப் போன்ற பெருத்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருப்பது.
  5. ஹிந்தி பாடல்களின் தாக்கத்தை தடுத்து நிறுத்தியது.
  6. ஒரு படத்தின் வெற்றிக்கு இசைஅமைப்பாளரின்  பங்கு முக்கியம் என்பதை முதன்முதலில் உணரச் செய்தது .
  7. தனது இசையின் மூலம் சாதாரணப் படங்களையும் வெற்றி படங்களாக்கியது.
  8. முரளி,மோகன்,ராமராஜன் போன்றவர்களையும்  வெற்றி நாயகர்களாய் ஆக்கியது.
  9. இசை அமைப்பாளராக  மட்டுமல்லாது பாடகராகவும் வெற்றிபெற்றது.
  10. அசுர வேகத்தில் இசையமைத்தாலும்  தரமான இசையை வழங்கியது.
  11. நான்கு முறை தேசிய விருது பெற்றது.
  12. புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும் சாதாரண இயக்குனராக இருந்தாலும் குறைவில்லாத தரத்துடன் இசை அமைத்தது.
  13. கிராமியப் பாடல்களுக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
  14. கர்நாடக இசையை சரியான கலவையில் திரை இசையில் பயன் படுத்தியது.
  15. முதன் முதலில் இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ் இசைக்கு  கௌரவம் பெற்றுத் தந்தது.
  16. பணமும் புகழும் சம்பாதித்தது
  17. தமிழ்த் திரை உலகில் முதன்முறையாக தயாரிப்பாளர்கள் இவரது வீட்டு வாசலில் காத்திருந்ததோடு Tittle பாடலை அவரே பாட வேண்டும்  என்று வற்புறுத்தியது.
  18. 900 படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது
  19. நீண்ட காலம் போட்டியின்றி முதல் இடத்தில் இருந்து இசை ராஜாங்கம் நடத்தியது

பலவீனங்கள், குறைகள்

  1. புகழ் பெற்ற இயக்குனர்களையும் சாதரணமாக நடத்தியது.
  2. அதிகப் பாடல்களை தானே பாடுவது.
  3. அதிக வேகத்தில் இசை அமைப்பது.
  4. ஆணவம் பிடித்தவர் என்ற பெயர் எடுத்தது.
  5. வைரமுத்துவை விட்டுப் பிரிந்தது.
  6. தற்போது அதிகமாகப் பேசுவது.
  7. பாரதிராஜா உள்ளிட்ட நெருங்கியவர்களிடமும் கருத்து  வேறுபாடு கொள்வது.
  8. உலகத் தரத்தில் இசை அமைக்கும் தகுதி இருந்தும் அணுகுமுறை காரணமாக உலக அளவில் போதிய அங்கீகாரம் பெறாதது.
  9. சுமுகமற்ற சூழ்நிலை காரணமாக பலமுறை தேசிய விருதுகளை இழந்தது
  10. ஒரு முறை மட்டுமே தமிழில்  தேசிய விருது பெற்றது 
**********************************************************************************************
எம்.எஸ்.வி.
  1. கர்நாடக இசையின் தாக்கத்தில் இருந்த திரை இசையை பாமரரும் விரும்பும் மெல்லிசையாக மாற்றியது,
  2. எம்.ஜி.ஆர். சிவாஜி,போன்ற சாதனையாளர்களின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தது.
  3. கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞனோடு  இணைந்து காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்தது.
  4. நீண்ட காலம் இசை அமைப்பாளராக பணி ஆற்றியது.
  5. பாடல் வரிகள் தெளிவாகப் புரியும் வண்ணம் இசை அமைத்தது.

பலவீனங்கள் குறைகள்
  1. நீண்ட காலம் இசை அமைத்தும் தேசிய விருது பெறாதது.
  2. எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் அதை சரியாகப் பயன்படுத்தாதது .
  3. திறமை இருக்கும் அளவிற்கு அங்கீகாரம் கிடைக்காதது.
  4. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது.
  5. டி.எம்.எஸ், பி.சுசிலா போன்றவர்களை மட்டும் அதிகமாகப் பயன் படுத்தியது      
************************************************************************************************************
பார்க்க:
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம்பரபரப்பு!பகுதி3

புதன், 23 நவம்பர், 2011

Oh! My Heart!

 (An Old Man, Who is counting days, says to his Heart)




           Oh! My heart! You are elder to me.
           You are beating only for me
           You know it is the stareful life
           Just as walking on a knife
           I saw some thing in my closed eyes
           Though a dream it was nice
           In this world I completed my act
           Just now I realize the fact 
           I know it is too late
           Death is nearing my gate
           I have done nothing to you
           I will do something for you
           You are longing for the rest
           Giving you the rest,I think would be the best!

திங்கள், 21 நவம்பர், 2011

உன் சக்தி!


                      இனியவளே!
                 உன் பார்வைகள் 
                 என் மீது பட்டதால் 
                 என் 
                 இதயச் சகாராவில் 
                 இப்போது 
                 இன்ப மழை!

                 உன் உதடுகள் 
                 அசைந்தால் போதும் 
                 பசுபிக் கடல்கூட 
                 எனக்கு 
                 பக்கிங்காம் 
                 கால்வாய்தான்!

                 உன் நினைவுகள் 
                 சிறகுகளாக 
                 இருக்கும்வரை 
                 இமயச் சிகரங்களும் 
                         எனக்கு சின்னமலைதான்!
********************************************************************************************
 
இதையும் படியுங்க!
உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை

ஞாயிறு, 20 நவம்பர், 2011

உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை

               (" ஒ! இதுதான் அந்தக் கேள்வியா? இது தெரியாமையா முழுச்சிக்கிட்டுருந்தேன்?
          தேங்க்ஸ் பிரதர்! எனக்கு எல்லா பதிலும் தெரியும். ஆனா 
கேள்விதான் தெரியாது. கேள்விய பதிலாக்  கேட்டீங்களா?, கொஞ்சம் கன்ஃபூயூஸ் ஆயிடுச்சு.")


உண்மையூர்  பொய்யூர் புதிருக்கு விடை

முதல்ல புதிர ஞாபகப் படுத்திக்குவோம். வடிவேலு உண்மையூர் போகணும்  உண்மையூர் போறதுக்கு ரோடு பிரியர இடத்துல இருக்கிற ரெண்டு பேர்ல ஒருத்தர் கிட்டமட்டும்..ஒரே ஒரு கேள்விய கேட்டு வழிய கண்டுபிடிக்கனும். அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் உண்மையை மட்டும்தான் பேசுவார். இன்னொருவர் பொய் மட்டும்தான் பேசுவார்.

விடை:
கேட்க வேண்டிய அந்த கேள்வி: உங்க ஊருக்கு எப்படிப் போகணும்?

விளக்கம்:
1.            உண்மை மட்டும் பேசறவர்கிட்ட இந்தக் கேள்விய கேட்டா அவருடைய ஊரான உண்மையூர் போறதுக்கான வழியத்தான் காட்டுவார். ஏன்னா அவர் உண்மையைத்தான் சொல்லியிருப்பார்.
2.            ஒருவேளை அவர் பொய் பேசறவர்கிட்ட இந்தக் கேள்விய கேட்டிருந்தா அவரும் உண்மையூருக்கான வழியைத்தான் காட்டுவார்.  அவருடைய ஊர் பொய்யூர்.அவர் பொய் மட்டும்தான் சொல்வார்.  அதனால அவருதான ஊரான பொய்யூருக்கு நிச்சயமா வழி சொல்லமாட்டார். உண்மையூருக்குத்தான் வழி சொல்வாருன்னு உறுதியா சொல்லலாம்.
3.            யாராயிருந்தாலும் இந்தக் கேள்விக்கு பதில் மூலம்       உண்மையூருக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.


    பொன்சந்தர் என்பவர் இந்தப் புதிருக்கு விடையை  தன்னுடைய comment ல சொல்லியிருந்தார். அதுவும் சரியான பதில்தான். அது கொஞ்சம் சுத்தி வளச்சி சொல்றமாதிரி இருக்கு.
    இந்தப் புதிர கொஞ்சம் மாத்தினா அவர் சொல்ற பதில் சரியா இருக்காது. அதாவது வழி சொல்வதற்கு ரெண்டு பேருக்கு பதிலா ஒருத்தர் மட்டும் இருக்கார்னு வச்சுக்குவோம்.அந்த ஒருத்தர் உண்மை பேசுபவரா? பொய் பேசுபவரான்னு  தெரியாது. இந்த சூழ்நிலையில பொன்சந்தர் சொன்னமாதிரி கேள்விய கேட்க வாய்ப்பில்லை. அதனால நான் சொன்ன விடைதான் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்.


ஆமாம் பொன்சந்தர்! உண்மையிலயே நீங்க ரொம்ப கில்லாடிதான். உங்க Blogg ல போஸ்டிங் எதுவும் போடாமலேயே ஏழு மெம்பர்ஸ்? எப்படி தலைவா?
==============================================================================================
செல்ல நாயின் இறப்பு!ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 4 --விரைவில்

சனி, 19 நவம்பர், 2011

பெரிய முள்ளின் புலம்பல் !

             
                         என் சிந்தையில்உள்ளே 
                   வீற்றிருக்கும் 
                   சிறிய முள்ளே!


                   நமக்கு 
                   இடம் கொடுத்தது 
                   என்பதற்காக 
                   எத்தனை நாள் 
                   இந்த 
                   கடிகார எண்களையே
                   சுற்றி வருவது?

                   மனிதனுக்கு 
                   மணிகாட்டுவதும் 
                   சொல்லும்போது  
                   சோர்வின்றி 
                   அவனை 
                   எழுப்புவது மட்டுமா 
                   நம் வாழ்க்கை?


                   உன்னை பலமுறை 
                   சந்தித்து மன்றாடியும் 
                   நீ என்னை 
                   துரத்துவதையே 
                   தொழிலாகக்
                   கொண்டிருக்கிறாய் 


                    மணிக்கு
                    ஒருமுறை மட்டுமே 
                    நாம் இருவரும் 
                    ஒருவராகிப் போனோம் 


                    மணி பன்னிரண்டு 
                    இப்பொழுதாவது 
                    நம் இயக்கத்தை 
                    நிறுத்திக் கொள்வோம்!


                    மனிதன் நம்மை 
                    மறுபடி 
                    இயக்கும் வரையாவது 
                    நாம் 
                    பிரியாமல் 
                    இணைந்திருப்போம்!

 ====================================================================================


புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !



வெள்ளி, 18 நவம்பர், 2011

புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !

    சும்மா ஜாலியா  ஊரை சுத்திட்டுருந்த வடிவேலுக்கு அவங்க அப்பா ஒரு வேலையைக் கொடுக்கிறார்.அவன்கிட்ட ஒரு பெட்டிய கொடுத்து இதைக் கொண்டு போய் உண்மையூர் என்கிற ஊர்ல இருக்க அவர் நண்பர்கிட்ட சரியாய் சேக்கணும்னு சொல்றார். 
   
    சரின்னு சொல்லிட்டு கிளம்பற வடிவேலுக்கு ஒரு சிக்கல். இதோ படத்தில பாக்கறீங்களே அந்த மாதிரி ரெண்டு ரோடு பிரியுது. அதுல ஒரு ரோடு உண்மையூருக்கு போகுது. இன்னொரு ரோடு பொய்யூருக்கு போகுது.
    
    எந்த ரோடு எந்த ஊருக்கு போகுதுன்னு தெரியாது. வழிகாட்டிப் பலகையிலும் எழுதி இருந்தது அழிஞ்சி போச்சு.
    
    அந்த சமயத்தில அங்க ரெண்டு பேர் வராங்க. அவங்கள்ள ஒருத்தர் உண்மைதான் பேசுவார்.இன்னொருத்தர் பொய் மட்டும்தான் பேசுவார்.
ஆனா அந்த ரெண்டு பேர்ல யாரு உண்மை பேசுவாங்க, யார் பொய் பேசுவாங்கன்னு வடிவேலுக்குத் தெரியாது.
    
     வடிவேலு யாரவது ஒருத்தர்கிட்ட மட்டும்தான் உண்மையூருக்கு வழி கேக்கலாம். அதவும் ஒரே ஒரு கேள்விதான் கேக்கணும். 
     
       உதாரணத்துக்கு உண்மையூருக்கு எப்படி போகணும்னு உண்மை பேசுறவர் கிட்ட கேட்ட அவர் சரியான வழியை காட்டுவார்.ஒருவேளை பொய் பேசுறவர் கிட்ட கேட்டா அவர் பொய்யூருக்கான வழியத்தான் காட்டுவார். 
     
      உண்மை பேசரவரா இருந்தாலும் பொய் பேசுறவரா இருந்தாலும்   இரண்டுபேருமே சரியான ஒரே பதிலை சொல்லற மாதிரி ஒரு கேள்வி இருக்கு.
            
     அந்த ஒரு  ஒரு கேள்வி என்னன்னு தெரியாம வடிவேலு முழுச் சிக்கிட்டுருக்கார் . உங்களுக்கு தெரிஞ்சா  ஒரே ஒரு  போன் பண்ணி வேணும்னா சொல்லுங்க 

(இப்படி சிக்கல்ல மாட்டி விட்டுட்டாங்களே!)

===================================================================================

இதையும் படியுங்க!


திங்கள், 14 நவம்பர், 2011

குழந்தைகள் =குறும்புகள்=கரும்புகள்



   குழந்தைகளோட குறும்புகளை இந்த வீடியோவில் பாருங்க.ஏற்கனவே பாத்திருந்தா இன்னொரு தடவை பார்த்து enjoy பண்ணுங்க



குழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்

      இன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில் குழந்தைகளைப் பற்றிய பாடல்கள் மிகும் குறைவு.
    அதிலும் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு கதாநாயகியோ அல்லது கதாநாயகனோ தம் சொந்தக் கதை சோகக் கதைகளையே பாடலில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் அழகையோ அல்லது குறும்புகளையோ வர்ணித்துப் பாடல்கள் மிகமிகக் குறைவு.
     
     அந்த வகையில் சத்தம் போடாதே திரைப்படத்தில் இடம்பெறும் 'அழகு குட்டி செல்லம்'  என்ற பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தது.யுவன் சங்கர் ராஜாவின்  இசையும் ந,முத்துக்குமாரின் பாடல் வரிகளும் சங்கர் மகாதேவனின் குரலும் இணைந்து அற்புதமாக அமைந்திருக்கும்
    
     முழுக்க முழுக்க குழந்தை பற்றியே அமைந்திருக்கும் இந்தப் பாடல் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.
  
நடிகர் பிரிதிவிராஜ் குழந்தைகளுடன் ஆடிப் பாடும் காட்சி நம் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்   

........................................................................................................................................................................

படித்துவிட்டீர்களா?
உண்மை நிகழ்ச்சி
  செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3

ஞாயிறு, 13 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3


     பயம் வந்ததற்குக் காரணம் ஜூனோ பாம்பு கடித்துத்தான் இறந்திருக்கும் என்பதுதான். ஏனென்றால் எங்கள் வீட்டைச் சுற்றி நீண்ட காலமாகவே பாம்புகள் நடமாட்டம் உண்டு. பக்கத்தில் புதர்கள் நிறைந்த காலி மனை இருப்பதால் பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ற இடமாகவே அது  இருக்கிறது. எங்கள் வீட்டிலும்  மரங்கள் செடிகள் உண்டு. எங்கள் வீட்டுக்குள்ளும் ஓரிருமுறை பாம்பு வந்திருக்கிறது. நாங்கள் அதை வெளியே துரத்தியிருக்கிறோம். பெரும்பாலும் அடிப்பதில்லை. பாம்புகள் எங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
    
     ஜூனோ பாம்பால்தான் இறந்திருக்கும் என்று எல்லோரும் அடித்துச் சொன்னார்கள். பாம்பு நாயைக் கடித்ததால்தான் நீங்கள் தப்பித்தீர்கள். உங்களுக்குவந்த ஆபத்தை ஜூனோ ஏற்றுக்கொண்டது என்றும் கூறினர். எங்களுக்கு ஜூனோவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் வருத்தம் மேலும் கூடியது. 

     ஜூனோ இல்லாத வீடு வெறுமையாக காட்சியளித்தது. ஒரு குழந்தையைப் போல  அது செய்த  குறும்புகள் மறக்கமுடியாதவை. ஓராண்டே எங்களுடன் இருந்தபோதும் நீண்ட காலம் எங்களுடன் இருந்ததுபோலவே உணர்ந்தோம். அதன் விளையாட்டுக்கள் பல சமயங்களில் எங்கள் மன அழுத்தத்தை குறைத்தது. 

     ஒருவேளை அன்று ஜூனோவை வீட்டுக்குள் விடாமல் இருந்திருந்தால் அது உயிர் பிழைத்திருக்குமோ. அதன் இறப்புக்கு நாங்களே காரணமாகி  விட்டோமா? சிறிது குற்ற உணர்வும் எங்களுக்கு ஏற்பட்டது.  

     இவ்வாறெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில், ஜூனோவை கடித்துவிட்டு பாம்பு வெளியே போகாமல் உள்ளேயே இருக்கப் போகிறது. நன்றாகப் பாருங்கள் என்று ஒருவர் பீதியைக் கிளப்பிவிட்டுப் போனார்.

     நாங்கள் ஜூனோ இறந்து கிடந்த அறையில் தேடிப் பார்த்தோம். எதுவும் கண்ணில் படவில்லை. பாம்பு நிச்சயமாக வெளியே போயிருக்கும் என்று சொன்னேன். ஆனால் என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை.

      பாம்பு பெரும்பாலும் ராத்திரியில்தான் வெளியே வரும். பகலில் வீட்டுக்குள்ளேயே எங்காவது ஒளிந்திருக்கும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தோம். இரவு நேரம் ஆகிவிட்டதால் பாம்பு பிடிப்பவர்கள் யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் மனைவியின் யோசனை ஒன்றை செயல் படுத்த முடிவு  செய்தோம்.
         
          அந்த யோசனை நாங்கள் படுத்திருக்கும் அறையைத் தவிர மீதி அறைகளில் அரிசி  மாவை பரப்பி வைப்பது. தடயங்கள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா?

        அவ்வாறே செய்தோம். அடுத்த நாள் காலையில் பார்த்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
          அந்தக் காட்சியின் புகைப்படம்தான் இது.
 
இதே போல் இன்னொரு இடத்திலும் இருந்தது.                          
                        (தொடரும்)


சனி, 12 நவம்பர், 2011

நானும் உன் போல்தான்!


      நண்பனே!
    உன் முகத்தில்
    ஏனிந்த சோகம்?

    எனக்குத் தெரியும்!
    நீ
    காதல் வலையில்
    விழுந்திருப்பாய்!

    அவளால்
    உன் சிந்தனைக்கு
    சிறகு  முளைத்திருக்கும்.

    அவள் கண்கள் சொன்னவை
    உன் காகிதத்தில்
    கவிதைகளாய் மலர்ந்திருக்கும்.

    கடற்கரை மணலுக்கும்
    பூங்கா மலர்களுக்கும்  மட்டுமே
    உங்கள் காதல் தெரிந்திருக்கும்.

    அவள்
    விரல்களின் ஸ்பரிசத்தில்
    உலகையே மறந்திருப்பாய் !

    உன்னைப்போல் அதிர்ஷ்டசாலி
    யாரும் இல்லை என்று
    நினைத்திருப்பாய்!



    திடீரென 
    ஒருநாள் 
    ஒருசொட்டுக் கண்ணீருடன் 
    அவள் சொன்ன வார்த்தைகள் 
    உன்னை இடியாகத் 
     தாக்கி இருக்கும் 

    அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு
    அமைதியாய் அழுதிருப்பாய்!
    

    அவள் உதடுகள் 
    உச்சரித்தது
    உன் உள்ளத்தில்
    இன்னமும்  இருக்கும் .

    அவளது  
    கரையான் நினைவுகள் 
    உன் இதயத்தை   

    அரித்திருக்கும்!
    

    துயர அலைகள்
    உன் தூக்கத்தை 
    கெடுத்திருக்கும்!
    
    என்ன சரிதானே?

    ஏனிந்த ஆச்சர்யம்?

    இவையெல்லாம் 

    எனக்கு
    எப்படித் தெரியும் என்றா?

    நண்பனே!
    நானும் உன் போல்தான்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

தமிழ் கம்ப்யூட்டர்


      தமிழில் வெளியாகும் ஒன்றிரண்டு கம்ப்யூட்டர் இதழ்களில் தரத்திலும் உள்ளடக்கத்திலும்  முன்னணியில் உள்ளது தமிழ் கம்ப்யூட்டர். இவ்விதழ்   18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 18  ஆண்டுகளாக ஒரு தமிழில் கம்ப்யூட்டர் தொடர்பாக இதழ் நடத்துவது சாதாரணமான விஷயமன்று. தற்போது கணினிப் பயன்பாடு அதிகரித்துவிட்டாலும் இவ்விதழ் தொடங்கிய காலங்களில் கணினி பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் பல மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். 
     இதையெல்லாம் பார்க்கும்போது லாபத்தை முக்கியமாகக் கொண்டு இவர்கள் இதழ் நடத்தவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து கணினி அறிவை ஆங்கிலம் அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பரப்பி வரும் தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்கு பலத்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
    ஆங்கிலத்தில் ஏராளாமான கணினி இதழ்கள் உள்ளன. ஆனால் தமிழில் எனக்குத் தெரிந்து மூன்றே மூன்றுதான். ஒன்று தமிழ் கம்ப்யூட்டர் மாதம் இருமுறை வருவது: மற்றொன்று கம்ப்யூட்டர் உலகம் மாதம் ஒருமுறை வெளிவருகிறது. இன்னொன்று தினமலர் வாரந்தோறும் இலவச இணைப்பாக வெளியிடும் கம்ப்யூட்டர் மலர்.
     நான் கணினி கற்றுக்கொண்ட தொடக்கத்தில் M.S Office Application களான Word,Excel, Powerpoint  தெரிந்து கொள்வதற்காகவே கணினி இதழ்களை படித்தேன். இவ்விதழ்களில் வெளியடப்படும் கேள்வி-பதில் பகுதிகள் எனக்கு அடிப்படை விஷயங்களை கற்றுத் தந்தன. 
   பின்னர்  இயக்க முறைகள், மென்பொருள்கள் பற்றிய தகவல்கள் பலேறு கணினி மொழிபற்றிய சந்தேகங்கள் கணினியின் பல்வேறு வகையான பயன்பாடுகள், இணையம் சார்ந்த விளக்கங்கள் இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்ப்பட்டது.இவை தொடர்பான கட்டுரைகள் எளிமையான தமிழில் தமிழ் கம்ப்யூட்டரில்  வெளி வந்தன.
      ஆங்கிலத்தில் வெளிவரும் இதழ்களில் கேள்வி பதில் பகுதியைத் தவிர இதர பகுதிகள் பெரும்பாலும், கணினிப் பொருட்களின் விளம்பரங்களாகவும் , review களாகவும் அமைந்திருந்தன. இவ்விதழ்கள்  CD அல்லது DVD க்களை இலவசமாக வழங்கின. ஆனால் இவ்விதழ்களின் விலை மிகவும் அதிகம்.
     ஆங்கில இதழ்களைப்போலவே தமிழ் கம்ப்யூட்டரும் இலவச CDக்களை வழங்க ஆரம்பித்தன. அந்த சமயத்தில் இணைய இணைப்பு அதிகமாக இல்லாததால் அவை மிகவும் உதவியாக இருந்தன. இதை உணர்ந்த தமிழ் கம்ப்யூட்டர் இதழ் CD  வழங்குவதை நிறுத்திவிட்டது.
     நான் தமிழ் கம்ப்யூட்டர் இதழின் வாசகன்.இவ்விதழில் வெளிவந்த  செயற்கை நுண்ணறிவு, அதிகமாக அறியப்படாத Micro Soft Access தொடர், மாயா மென்பொருள்  போன்ற கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தது.
      ச.குப்பன் அ.வெ.செந்தில்குமார், மு.சிவலிங்கம் போன்றவர்களின் கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில் பகுதிகள் இவ்விதழை சிறப்புடையதாக்குகிறது. வாசகர்களையும் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறது.
       இதன் விலையோ இருபது ரூபாய் மட்டுமே!  கிராமப்புற ஏழை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பலரும் தமிழ் கம்ப்யூட்டரால் பயனடைந்து வருகின்றனர்.
             வாழ்க! வளர்க! அதன் பணி.
          

திங்கள், 7 நவம்பர், 2011

கூன்!

                 
ஐந்தில்
வளையாதது
ஐம்பதுக்கு மேல் 
வளையும் 
கூன்!


கடந்த ஆண்டு இதே நாளில்:

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தமிழ் பதிவர்களுக்கு உதவுங்கள்


   தமிழ்ப் பதிவர்கள் ஆங்கிலப் பதிவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று தன்மானத்துடன் முழக்கமிட்ட கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.. 
தமிழ் வலைப்பதிவிற்கு புதியவன் நான். தமிழ் வலைப் பதிவுகளில் இல்லாத விஷயங்களே இல்லை என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன். உள்ளடக்கத்திலும் டெக்னிக்கல் விஷயங்களிலும் நம்மவர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல.
அதிக டிராஃபிக் உடைய வலைப்பூக்களும் தமிழில் உள்ளன. ஆனால் Google Adsense approval  தமிழ் பிளாக்குகளுக்கு கிடைப்பதில்லை. என்பது பல்வேறு வலைப்பூக்களைப் பார்வையிடும்போது  தெரிய வருகிறது.கூகுள்  அட்சென்ஸ் அனுமதிக்கும் 32 மொழிகளில் தமிழ் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியதே!   
அந்த மொழிகளில் உள்ள ஒருசிலவற்றை விட, தமிழில் அதிகமான வலைப்பூக்களும் பார்வையாளர்களும் உள்ளனர் என்றே நினைக்கிறேன்.
மற்ற நாட்டு மக்களைவிட இந்தியர்கள் விளம்பரத்தால் ஈர்க்கப் படுகிறார்கள்  என்பது  அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி  இருந்தும் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளை கூகுள் அங்கீககரிக்காதது துரதிர்ஷ்டமே. மேலும் விளம்பரங்கள் பிராந்திய மொழிகளில்தான் அமையவேண்டும் என்று எந்த பதிவரும் கூறப்போவதில்லை. தமிழ் ப்ளாக்குகளில்  ஆங்கிலத்தில் விளம்பரம் தரலாமே. தமிழில் எழுத வசதிகளைத் தரும் கூகுள் விளம்பர விஷயத்தில் தமிழ் வலைப்  பூக்களுக்கு ஆதரவு அளிக்கும் நாள் எந்த நாளோ?
பெரும்பாலான பதிவர்கள் நல்ல  பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பதிவுகள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாகவே வலைப் பூக்களைப் பயன்படுத்துகின்றனர்.  
TATA போன்ற நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகள் நமக்கு உதவாவிட்டாலும் கேபிள் சங்கர் (cable sankar) உள்ளிட்ட முன்னணிப் பதிவர்கள் இணைந்து வலைப்பதிவர்களுக்கான ஒரு சங்கத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பதிவர்களுக்கு உண்மையிலேயே உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் விளம்பரங்கள் கிடைப்பதற்கான  வாய்ப்புகள் பற்றி ஆலோசனைகள் கொடுக்கவும், ஆட்சென்சில் தமிழைச் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ள இதுபோன்ற அமைப்புகள் உதவும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இதுபோன்ற சங்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
விளம்பரங்கள் கிடைத்து பொருளீட்ட முடியும் என்பது உறுதியானால் மேலும் தரமான பயனுள்ள பல்வேறு வகையான பதிவுகள் நமக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 2
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 1
ஜூனோ! எங்கள் செல்லமே!