என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2011

செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு! பகுதி 2


    
முந்தைய நாள் இரவு 11 மணி வரை விளையாடிக் கொண்டிருந்த ஜூனோ எப்படி இறந்தது? மிகவும் ஆரோக்கியத்துடன்தானே இருந்தது?எங்களால் தாங்க இயலவில்லை. நாங்கள் மூவரும் கலங்கிவிட்டோம்.
      ஒருவேளை ஹார்ட் அட்டாக் வந்திருக்குமோ? பாம்பு கடித்திருக்குமோ? எங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை. உண்மையான காரணம் தெரிந்துகொள்ள போஸ்ட்மார்ட்டம் செய்ய வேப்பேரி கால் நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியுமா என்றெல்லாம் யோசித்தோம்.
     பிறகு காரணம் என்னவாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.அதன் அழகான மேனியை வெட்டிப்பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. ஒருவாறு சமாதானப் படுத்திக்கொண்டு தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தோம்.
     முதலில் நாய் வளர்ப்பதில் எங்களுக்கு அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை. என்மகன் நாய் வளர்க்கவேண்டும் என்று விருப்பப்பட்டான். ஆனால் நாங்கள் மறுத்துவந்தோம். நாங்கள் சுத்த சைவம்: நாய்க்கு  அசைவம் வாங்கிப்போட எங்களால் முடியாது. அதுமட்டுமல்ல: எங்காவது ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் அதை விட்டுச் செல்வதில் பிரச்சனைகள் வரும். மேலும் நாயைப் பராமரிப்பது எளிதல்ல. இது போன்ற காரணங்களால் நாய் வளர்க்கும் ஆசையை மூட்டை கட்டிவைத்திருந்தோம்.  ஆனால்  எதிர்பாரா விதமாக ஒரு மாத குட்டியாக இருந்த ஜூனோவை யாரோ கொடுக்க அதன் அழகில் கவரப்பட்டு வாங்கிக்கொண்டு  வந்துவிட்டோம்.
            அதற்கு டாக்டரின் ஆலோசனைப்படி முறையாக தடுப்பூசிகள் போட்டு வந்தோம். அதற்கென சோப்பு ஷாம்பு உட்பட விதம் விதமாக பல்வேறு பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினோம். ஆனால் சைவ உணவையே கொடுத்தோம். அது எங்களுக்கேற்றவாறு தக்காளி, கோஸ் முதலிய காய்கறிகளை பச்சையாகவே விரும்பி சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வளர்ந்தது.
     ஜூனோவை வீட்டுக்குள் விடாமல் வெளியே  வைத்தே வளர்க்க வேண்டும் என்று நினைத்தோம். அது எங்கள் கட்டுப்பாடுகளை, அப்பாவிபோல் முகத்தைக்காட்டி  தகர்த்துவிட்டது. அது பகலில் சுதந்திரமாக ஹாலில் நடமாடும். ஆனால் சமையல் அறைக்கு மட்டும் அது வராமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இரவில் வெளியேதான் படுத்துக்கொள்ளும்.
            எப்போதாவது மழை நேரங்களில் உள்ளே படுக்க அனுமதிப்போம். அவ்வாறு அந்த மழை நாளன்று ஜூனோ உள்ளே இருந்த போதுதான் அதன் உயிர் பறிபோன சம்வவம் நடந்தது. வெளியே இருந்திருந்தால் ஒருவேளை பிழைத்திருக்குமோ?
   ஒருவழியாக ஜூனோவை கனத்த மனத்துடன் தோட்டத்தில் அடக்கம் செய்துவிட்டு அவ்விடத்தில் ஒரு மலர்க் கொத்தை வைத்தோம். 
   அன்று மாலை டாக்டரை சந்தித்து எங்கள் சந்தேகங்களை கேட்டோம். அவர் ஜூனோவின் Pet Doctor என்பதால் உறுதியாகக் கூறினார். உடல் ரீதியான குறைபாடு காரணமாக இறந்திருக்க வாய்ப்பு இல்லை. விஷத்தை சாப்பிட்டிருக்கக்க வேண்டும் அல்லது பாம்பு போன்ற விஷ ஜந்து ஏதாவது கடித்திருக்கவேண்டும். 
      அப்படியானால் ஜூனோவை  பாம்பு கடித்திருக்குமோ? கடித்த பாம்பு வெளியே போயிருக்குமா? அல்லது உள்ளேயே இருக்குமா? சந்தேகம் எழ மெல்ல பயம் பரவியது.
                                             (தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895