என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

புதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்தது

  

புதுக் கோட்டை வலைப் பதிவர் சந்திப்பு  பற்றி பெரும்பாலோர் எழுதி விட்டனர்.ஏனோ என்னால் உடனடியாக எழுத இயலவில்லை.மிக தாமதமாக எழுதியதற்கு  காரணம் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் மன்னிப்பு மட்டும்  கேட்டுக் கொண்டு சுருக்கமாக விழா பற்றி கூறிவிடுகிறேன்.
  வலைப் பதிவர் திருவிழாவிற்கு புதுக்கோட்டைசெல்லுமுன்   கைபேசியை சில மணி நேரம் அணைத்து விட்டேன். சனிக்கிழமைகளிலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழைப்பது வழக்கமாக இருந்ததன் விளைவே அது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா தமிழ்ப் பதிவுலகை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. நாளொரு போட்டியும் பொழுதொரு அறிவுப்புமாக களைகட்டிக் கொண்டிருந்ததை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது 

    ஒருங்கிணைப்பாளராக  பொறுபேற்றுக் கொண்ட கவிஞர் முத்து நிலவன் பம்பரமாய்  சுழன்றார். அவருக்கு உறுதுணையாக புதுக்கோட்டை பதிவர்களை சாட்டையின்றி சுழல வைத்தார். 
     இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகள் பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாய் அமைந்திருந்தது...பதிவர்கள் ஒருவரை ஒருவர்  சந்தித்து கருத்த்துகளை பரிமாறிக் கொள்வதே பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு வலையுலகில் தமிழை முதன்மை இடத்திற்கு கொண்டு வரப்படவேண்டும் என்ற நோக்கத்தையும் கூடுதலாக கொண்டு அமைந்திருந்தது குறிப்பிட தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.செலவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் துணிந்து செயலில் இறங்கியது முத்துநிலவன் தலைமையிலான புதுக்கோட்டைப் படை. இவர்களோடு இணைந்து  பங்கேற்பாளர் படிவம் வடிவமைத்தது தொடங்கி விழா நேரடி ஒளிபரப்பு செய்வது வரை  திண்டுக்கல் தனபாலனின் பங்கு அசாதாரணமானது என்பது எல்லோரும் அறிந்ததே
       ஏற்கனவே  முந்தைய பதிவர் சந்திப்புகளுக்கு தனி வலைப்பூ தொடங்கி விழா தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன என்றாலும் புதுக்கோட்டை விழா வலைப்பூ ஒரு தனி இடத்தை பெற்றது எனலாம். விழா பற்றிய  பதிவுகள், போட்டிகள் பற்றிய விவரங்கள் , குறிப்புகள் அறிவிப்புகள் என 45 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது/ 
     .
  கடந்த மூன்று வலைப் பதிவர் சந்திப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்ட நான் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , தடை ஏதும் வந்துவிடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேலை அப்படி ஏதும் நடக்கவில்லை 
   சென்னையில் இருந்ததால் அழைப்பிதழை தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநருக்கும் இணை இயக்குநருக்கும் சேர்த்துவிடும்படி முத்துநிலவன் அவர்கள் என்னிடம் கூறி இருந்தார். ( தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் நீச்சல் காரன் மூலம் ஏற்பட தொடர்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். முத்துநிலவன். அதன் விளைவே போட்டி அறிவிப்புகள்) இயக்குநர் அவர்களிடம் விழா அழைப்பிதழை அளித்துவிட்டு  விட்டு வீடு திரும்பி இரவு சிலம்பு எக்ஸ்பிரசில் புறப்பட்டேன்..  
    நீச்சல்காரன்,புலவர் ராமானுஜம், சேட்டைக்காரன் அதே ரயிலில் வருவதாக அறிந்தோம். உடல் சிரமங்களைப் பாராமல் வந்த புலவர் அவர்களின் ஆர்வம் ஆச்சர்யப் பட வைத்தது. பதிவர்களை ஒருங்கிணைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர் அல்லவா?
    அதிகாலை ரயில் புதுக்கோட்டை அடைய  மலர்த்தரு கஸ்தூரி ரங்கனும்,அரும்புகள் மலரட்டும் பாண்டியன் உள்ளிட்ட விழாக் குழுவினர் இன்முகத்துடன் வரவேற்க தேநீர் அருந்திவிட்டு தங்கும் விடுதியை அடைந்தோம். அதே ஹோட்டலில்தான் , மூத்த பதிவர்கள் ரமணி, ,ராய செல்லப்பா , கவியாழி கண்ணதாசன்  ஆகியோரையும் சந்தித்தோம்... சிறிது நேரம் சேட்டைக்காரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க நேரம்போனதே  தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாலகணேஷ் அவர்களும் வந்து சேர குளித்துவிட்டு ஆட்டோவில் விழா அரங்கிற்கு புறப்பட்டோம்.
    சீருடையுடன்   அணிந்த விழாக் குழுவினர் சுறுசுறுப்பாக வலம் வந்து வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர், பெயரைப் பதிவு செய்து  ஒரு அடையாள கைப்பை ஒன்றை அளித்தனர். அதில் பெரு முயற்சியுடன் தயாரிக்கப் பட்ட வலைப் பதிவர் கையேடு , பேனா, குறிப்பு நோட்டு, அடங்கிய  கைப்பை ஒன்றை வழங்கினார்  .
  கவிதை ஓவியக் காட்சியை புலவர் ராமானுஜம் அவர்கள் திறந்து வைத்தார். ஓவியங்களும் கவிதையும்  தங்களில் சிறந்தவர் யார் என்று பட்டிமன்றம்  நடத்திக் கொண்டிருந்தன. அதில் தளிர் சுரேஷ்,சேட்டைக்காரன்  அரசன், என நானறிந்த நண்பர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.
      சிறிது நேரத்தில் தங்கம் மூர்த்தி அவர்கள் கம்பீரமான குரலில் அழகு தமிழில்  தொகுப்புரை வழங்க  விழா தொடங்கியது. முத்து நிலவன் இங்கும் அங்குமாக நிற்க நேரமின்றி பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை கணினி தமிழ் சங்கத்துக்கு வித்திட்ட முதன்மைக் கல்வி அலுவ்லர் அருள் முருகன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் தமிழ்ப்பரிதி , விக்கி பீடியா திட்ட இயக்குனர் ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான உரையாற்றினர்.  இடை இடையே பதிவர் அறிமுகமும் நடை பெற்றுக்  கொண்டிருந்தது. 
    விக்கி பீடியாவில் 200 கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த முனைவர் ஜம்புலிங்கம், அன்பு நண்பர் ஜோதிஜி,கரந்தை ஜெயகுமார்,தமிழ் இளங்கோ ,ஜி.எம்.பி, பழனி கந்தசாமி, குடந்தையூர் சரவணன், துளசி தரன்,நிகழ்காலம் எழில்.அன்பே சிவம் சிவசக்தி, திருப்பதி மகேஷ்,கோவை,ஆவி, அரசன்,சீனு,தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் மதுமதி, கடற்கரை விஜயன், பகவான்ஜிஅசத்தல் பதிவுகளால் கலக்கிக் கொண்டிருக்கும் கூட்டாஞ்சோறு எஸ்.பி.செந்தில் குமார்  உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியது  மகிழ்ச்சி அளித்தது 

   பாண்டியன்,மைதிலி,கஸ்தூரி ரங்கன்,கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் விழா  பணிகளுக்கிடையேயும் நம்மிடையே உரையாடிவிட்டு சென்றனர்.
அம்மாதான் பெஸ்ட் குக் என்று சொன்ன குட்டிப் பதிவரும் மைதிலி -கஸ்தூரி ரங்கன் செல்லப் பெண்ணுமான நிறைமதி  . தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட தன்னாலியன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். இனிமையான குரலில் தமிழ்ப் பாடல்கள் பாடியவரும் கவிஞர் பேச்சாளருமான   மகாசுந்தரின் இனிய மகள் சுபாஷிணி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

கரந்தை ஜெயகுமார் அவர்களின் வித்தகர்கள் நூல் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அதில் இடம் பெற்றுள்ள வித்தகர்கள் கர்னல் கணேசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பங்கு பெற்று பேசியது சிறப்புக்குரியது . நம் பதிவுலக நண்பர் ரூபன் அவர்களின் கவிதை நூலான "ஜன்னலோரத்து நிலா" வெளியிடப் பட்டது. திண்டுக்கல் தனபாலன் நூலைப் பெற்றுக் கொள்ள ரமணி அவர்கள் நூல்பற்றி பேசினார். நூல் வெளியிட்ட இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 மாலையில் எழுத்தாளர்  எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். பதிவர்கள் என்ன  எழுத வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும்  ஆக்க பூர்வமான கருத்துகளையும் கூறினார். உரைக்குப் பின்னர் பதிவர்களின் கேள்விகளுக்கு   பதில் அளித்தார். காலையில் இருந்து மாலை வரை அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது குறிப்பிடத் தக்கது.
  மதிய உணவும் மலையில் வழங்கப்பட்ட குழிப் பணியாரத்தின்  சுவையும் அவை அன்புடன் பரிமாறப் பட்ட விதமும் இதை விட சிறப்பான உணவை உண்ணும் வரை நாவிலும்  நினைவிலும்  இருக்கும்.
இத்தனை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகம் வந்தது என்னவோ உண்மை. அத்தனை நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள்   நடத்தி காட்டியது புதுக்கோட்டை விழாக் குழு.
     போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்  இணையக் கல்விக் கழகத்துடன் இனிது நடத்திய போட்டிகளில் ஒன்றில் என்னை நடுவாராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அக்குறையப் போக்கியது 

   கஸ்தூரி ரங்கன் ரயில் ஏறும் வரை கூடவே இருந்து நேரம் போவதே தெரியாமல் சுவையான தகவல்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு  வழி அனுப்பி வைத்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
பல நாட்கள் திட்டமிட்டு பாடுபட்டு எப்போதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விழாவை வெற்றிகரமாக நடத்திய முத்துநிலவன் தலைமையிலான விழாக் குழுவினருக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிகளில் வென்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 
  விழாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும், பெயர் வெளியில் தெரியாமலும் பங்காற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வலையுலகை சாராத பல்வேறு தரப்பினரையும் தமிழ்ப் பதிவுலகை உற்று நோக்க வைத்த பெருமை இந்த விழாவுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.  

*******************************************************************************

செவ்வாய், 6 அக்டோபர், 2015

நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை அல்லவா?


அக்டோபர் இரண்டு அன்று வெளியிட்ட காந்தி பதிவின் பதிவின் தொடர்ச்சி
முந்தைய பதிவை படிக்காதவர்கள் க்ளிக் செய்க

**************

முந்தைய பதிவின் தொடர்ச்சி
  தவறை ஒப்புக் கொள்வதற்கு காந்தி கட்டாயப் படுத்தியதை கட்சிக்காரர் விரும்பவில்லை எனினும் ஏற்றுக் கொண்டார். .காந்திக்கு தான் கூறிய யோசனை சிறந்தது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரியானபடி இந்த வழக்கை நடத்த முடியுமா என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்கள் முன் எழுந்து நின்று தன கட்சிக் காரரின் கணக்கில் உள்ள தவறை நடுங்கிக் கொண்டே கூறி விட்டார் .நீதி பதிகளில் ஒருவர் "இது மோசடி வேலை அல்லவா? ஸ்ரீ காந்தி என்று கேட்டார். காந்தியின் உள்ளம் கொதித்தது. 'மோசடி வேலை செய்திர்ப்பதாக குற்றம் சாடுவது சகிக்க முடியாதது. இப்படி ஆரம்பத்திலேயே ஒரு நீதி பதி   துவேஷம் கொண்டிருக்கும்போது இவழக்கில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்  காந்தி
பிறகு தைரியமாக நீதிபதியை நோக்கி "நான் கூறுவதை முழுவதும கேட்காமல் இது மோசடி வேலை என்று நீதிபதி அவர்கள் கூறுவது ஆச்சர்யம அளிக்கிறது " என்றார் 
  நீதிபதி கொஞ்சம் சமாதானமாக " அப்படி நான் குற்றம் சாட்டவில்லை
 அது மாதிரி இருக்குமோ என்ற யோசனை தான் ” என்றார்
”அப்படி யோசிப்பது குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும் முழுவதும் கேட்டுவிட்டு பின்னர் காரணம் இருந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்”என்றார் காந்தி
இடையில் குறுக்கிடுவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதி காந்தி தனது விளக்கத்தை தொடர்ந்து அளிக்க அனுமதித்தார்
   நீதிபதி ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை கிளப்பியது நல்லதாயிற்று என்று நினைத்த காந்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு விளக்கினார். கவனமாக கேட்ட  நீதிபதிகள் கணக்கில் ஏற்பட்ட தவறுகள் கவனக்குறைவால் ஏற்பட்டதே அன்றி வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தனர் . தவறு ஒப்புக் கொள்ளப் பட்ட படியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டியதில்லை என எதிர்தரப்பு  வக்கீல் நினைத்தார். நீதிபதிகள் அவரிடம்  சரமாரியாக  கேள்விகள் கேட்டனர் .காந்தியின் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள் கணக்கிலிருந்த தவறை காந்தி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எதிர்தரப்பு வக்கீலை கேட்டார் நீதிபதி. அதற்கு வக்கீல் சொன்ன பதிலால் திருப்தி அடையவில்லை நீதிபதிகள்
"சிறு தவறைத் தவிர வேறெதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை. இந்த சிறு தவறுக்கு வழக்கை நடத்தும்படியும் கட்சிக் காரர்களை செலவு செய்யும்படியும் கட்டாயப் படுத்த கோர்ட்டுவிரும்பவில்லை. எளிதில் சரி செய்யக் கூடிய தவறுக்காக வழக்கு தொடர வேண்டாம் " என்று காந்திக்கு சாதகமாக வழக்கை முடித்தனர் நீதிபதிகள்
கட்சிக்காரர்,மற்றும் பெரிய வக்கீலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்  .
உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழில் நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற நம்பிக்கை காந்திக்கு உண்டாயிற்று

எனினும் அத்தொழிலை சீரழித்து வரும் அடிப்படையான குறைபாடுகளை  போக்கி விட முடியாது என்ற  ஆதங்கமும் கந்தியிடம் இருந்தது. 

     ஒருமுறை காந்தியின் கொள்கையை அறிந்தும் அவரிடம் உண்மையை மறைத்து  விட்டார் அவரது கட்சிக்காரர் ஒருவர்.  இதனை விசாரணையின் போது அறிந்த காந்தி  உடனேயே தன் கட்சிக்காரை கண்டித்த தோடு நீதிபதியிடம் சிறிதும் தயங்காது தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்படி  கேட்டுக் கொண்டார். 
நம்பமுடிகிறதா? எப்படிப்பட்ட மனிதர் காந்தி!
இப்படி யாரேனும் இன்றைய வக்கீல்களில் இருக்கிறார்களா?

நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு சிலரையாவது சுட்டிக் காட்ட முடியும் நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கூட காணமுடியும் .ஏன் நேர்மையான அரசியல்வாதி கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வக்கீல் தொழிலில் அப்படி யாரேனும் இருக்கிறார்களா?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

************************************************************************

காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

     ************************************************************
  

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்


   பள்ளி வயதில் காந்தியைப் பற்றி பெரிய தாக்கம் ஏதும் இருந்ததில்லை. பாடப் புத்தகத்தில் படித்ததெல்லாம். அவர் மீதான பெரிய பிம்பத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காந்தியின் மீதான எதிர்மறை கருத்துக்கள் காநதியைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டின. பொதுவாக காந்தியின்  மீது கூறப்படும்  பல குற்றசாட்டுகள் என் மனதிலும் இருந்தது.  சத்திய சோதனை மற்றும்  காந்தி தொடர்பான கட்டுரைகளை படித்த போது காந்தியைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் தேவை என்பதை மட்டும் உணர முடிகிறது. 
  நேர்மை வாய்மை என்பதெல்லாம் சாத்தியமா? அதுவும் வக்கீல் தொழிலில். தென் ஆப்ரிக்காவில் தன் வக்கீல் தொழிலைப் பற்றி காந்தி தன்   நினைவுகளைக் கூறுவதை  அவர் சொல்வதாகவே கேட்போம்  
 "அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம்   சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது        என் நோக்கத்திற்கும் மாறானது.ஆனால், அவைகளில் உண்மையைக்    கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை         மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது  வக்கீல் தொழிலில் பொய்யை  அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  நான் நடத்திய     வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என்      கையை விட்டுச்செலவு செய்த  பணத்திற்கு அதிகமாக   அந்த வழக்குகளுக்கு நான் பணம்    வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு  அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். 
    வக்கீல்   தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து        நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில்        சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச்      சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர்  அதனால் பயனடையக் கூடும் 
     வக்கீல் தொழில்   பொய்யர்களின் தொழில்  என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய் சொல்லிப் பணத்தையோ,       அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு    இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றிவிடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன் முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என்     எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச்     சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான்       அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம்.      ஆனால், அத்தகைய ஆசையை நான்     எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். 
     ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு     என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த   ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.         என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி     கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன்.   வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட,      அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும்என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை.        கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும்,      என் கட்டணத்திற்கு அதிகமாகவோ,  குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத்      தயார் செய்வோன் என்றோ   என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று      புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக,      எனக்கு ஒரு  பெயர் ஏற்பட்டு என்னிடம்          பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய         கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத  வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு      வக்கீல்களை அமர்த்திக்கொள்ளுவார்கள்   
   ஒரு வழக்கு மிகவும்   கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான     ஒருவருடைய  வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு     வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம்     விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது.  இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச்   சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே  ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய       தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று.  
      இத்தீர்ப்பை,      எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல்    வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில்     என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன்.  நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர்            கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக் கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய        தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை       ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.

  ஆனால், பெரிய வக்கீல்    பின்வருமாறு விவாதித்தார்:  “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால்,   மத்தியஸ்தர்களின் தீர்ப்பு  முழுவதையுமே கோர்ட்டு           ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும்  புதிதாக விசாரிக்கும்படி வழக்கு        அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும்,  முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்?” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார். 
     நான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும்  அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும்       உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒருதவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக்  கோர்ட்டுஅங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?   நாம் தவறை ஏற்றுக்     கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே  ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன   தீங்கு நேர்ந்துவிடும்?” 

  “ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.

“அத்தவறைக் கோர்ட்டு       கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும்       கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றேன், 
  நான்.“ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள்  தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்
தயாராயில்லை” என்று தீர்மானமாகப்      பதில் சொன்னார் பெரிய
வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு    பதில் சொன்னேன்

“நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம்  கட்சிக்காரர் விரும்பினால்,
நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால்          இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.” 

   இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர்  நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக   நன்றாக அறிவார்.
அவர் சொன்னார்: 
 “அப்படியானால் சரி,     வழக்கில் கோர்ட்டில்  நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான்  நம் கதி என்றால் இதில் தோற்றுப்        போனாலும் போகட்டும்.  நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”
    நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம்   நான் எதிர்பார்க்கவில்லை.  பெரிய வக்கீல் என்னை      மீண்டும் எச்சரிக்கை செய்தார். என்  பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில்  எனக்கு வாழ்த்தும் கூறினார்.
கோர்ட்டில் என்ன நடந்தது        
(தொடரும்)  

அடுத்த பகுதி ****************************************************
காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

**********************************