என்னை கவனிப்பவர்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஏப்ரல், 2020

நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்


     
          சரித்திரக் கதை ஆசிரியர்கள்  என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிரியர்களும் இவர்களைப் பின்பற்றியே இவர்களுடைய பாதிப்பில்தான் சரித்திரக் கதைகள் எழுதினார்கள். ஒரு காலத்தில் சரித்திர தொடர்கதை இடம் பெறாத பத்திரிகைகளே இல்லை எனலாம். சரித்திரக் கதையை வித்தியாசமான தனக்கே உரிய பாணியில் முயற்சித்தவர் சுஜாதா. அதைப் போலவே முற்றிலும் மாறான முயற்சியை  மேற்கொண்டவர் ரா.கி.ரங்கராஜன். இவர் பல்வேறு புனைப் பெயர்களில்  தனித்தனி பாணியில் எழுதிக் கலக்கியவர் என்பதை  பகிர்ந்திருந்தார் முகநூல் மற்றும் வலைப்பூ பிரபலம் நண்பர் பால கணேஷ் )
     நான் கிருஷ்ண தேவராயன் என்னும் முதல் சரித்திர நாவலை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார் ரா.கி.ரங்கராஜன். தலைப்பே என்னைக் கவர்ந்துவிட்டது. காரணம் இதுவரை தமிழ் சரித்திர நாவல்கள் படர்க்கையில்தான் எழுதப்பட்டுள்ளன. முதன்முறையாக தன்மையில்,  அதாவது தானே சொல்வது போல சரித்திரக் கதை யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில்  ’நான் கிளாடியஸ்’ என்ற நாவலை ராபர்ட் கிரேவ்ஸ் என்பவர் 1934 லேயே எழுதி விட்டாராம். இது ரோமப் பேரரசர் தானே எழுதுவது போல கூறப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை கமலஹாசன் தனக்கு பிடித்த  புத்தகம் என்றும் தமிழில் சொல்லுங்கள் என்று  கொடுத்ததாக  ரா.கி.ர. கூறுகிறார்.
              ரா.கி.ர முதலில் அதனை மொழிபெயர்த்து எழுத நினைத்தார். பின்னர் அதனை கைவிட்டு அதிகம் அறியப்படாத தமிழகத்தோடு தொடர்புடைய விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற  கிருஷ்ண தேவராயன் தன்வரலாறாக கூறுவது போல எழுதியுள்ளார். ஏகப்பட்ட நூல்களை குறிப்பு நூல்களாக பட்டியலிட்டு அதன் அடிப்படையில் எழுதி இருக்கிறார். சுஜாதா சொன்ன சில ஆலோசனைகளையும் மனதில் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
    (இவர் ஏன் ஆனந்த விகடனில் எழுதினார் என்பது தெரியவில்லை. நியாயமாக குமுதத்தில் தானே எழுதி இருக்க வேண்டும். தகவல் பெட்டகம் பால கணேஷ் கூறக் கடவது)

       சரி கதைக்கு வருவோம். சரித்திரக் கதைகளில் வரும் அடிக்குறிப்புகள் இதில் இல்லை சரித்திரக் கதைகளை தானே சொல்வது  போல் எழுதினால் அதிக கவனம் வேண்டும்.  சொல்லப்படும் காலத்திற்கு பிந்தைய வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கக் கூடாது . இதனை கவனத்தில் கொண்டே எழுதி இருக்கிறார் ரா.கி.ர. சில இடங்களில் சுஜாதா டச் இருப்பதைக் காணமுடிகிறது.
      கதை என்ன? விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்தி  கிருஷ்ணதேவராயரின் மனதை சின்னா தேவி என்ற  பெண் கொள்ளை கொள்கிறாள். விஜயநகர அரச வம்சத்தையே வெறுக்கும் ஒருவன். அவனின் நாடகக் கலை திறமை கொண்ட தங்கைதான் சின்னா தேவி.  முதலில் மன்னன் என்று அறியாத நிலையில் காதலை அங்கீகரிக்கும் அண்ணன் உண்மை அறிந்ததும் தங்கையை அழைத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுகிறான். காதலில்  தவிக்கும் தேவராயன் சின்னா தேவியை தேடிக்கொண்டிருக்கிறான். 
  அரசியல் காரணங்களுக்கக   ஸ்ரீரங்கப்பட்டினத்து இளவரசி திருமலாம்பிகாவை மணந்தாலும் சின்னாதேவியை கிருஷ்ணதேவராயரால் மறக்க இயலவில்லை. காயத்ரி ( இது கற்பனைப் பாத்திரம்)  என்பவளின் உதவியால் சின்னாதேவியை கண்டறிந்துவிட்டாலும்  அவளை மணமுடிக்க இயலவில்லை.   அவள்  கையில் சங்கும் சக்கரமும் பொறிக்கப்பட்டு இறை பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டு தேவதாசி ஆகி விட்டதாகவும் மனிதர்களை காதலிக்கும்  உரிமை இல்லை என்றும் கூறுகிறாள் .     ஆனாலும் காதலியை மறக்க இயலாத ராயர் தன் மன ஒட்டங்களையும் காதல்     தவிப்பையும்  தனது கால வரலாற்று சம்பவங்களின் ஊடே விவரிக்கிறார்

    கிருஷ்ணதேவராயனின்  பிரதான அமைச்சர் அப்பாஜி.  மிகுந்த செல்வாக்கு பெற்றவர். அரச குடும்பத்திர்கு விசுவாசமானவர். அவரது உன்மையான பெயர் திம்மராசு. இவர்தான்   கிருஷ்ணதேவராயருக்கு (அவரது தமையனார் வீர நரசிம்மருக்கும்) உறுதுணையாய் இருக்கிறார். இவர் சொல்வதை மன்னர் தட்டுவதில்லை. இவரது ஆலோசனைப்படிதான்  முடிவுகள் எடுக்கப்பட்டன. கிருஷ்ண தேவராயரை மன்னராக ஆக்கியது இவர்தான்.  அதுவும் எப்படிப்பட்ட சூழ்நிலையில்!  கிருஷ்ணதேவராயரின் தமையனார் வீரநரசிம்மர் தனக்குப் பின் தன் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் தம்பி  கிருஷ்ணதேவராயரின் கண்னைப் பறித்து சிறையில் அடைத்து விடும்படி கூறி விடுகிறார். சரி என்று சொல்லிவிட்டு அவனைக் காப்பற்றி விடுவதோடு  வீரநரசிம்மர் இறந்ததும் கிருஷ்ண தேவராயனை முன்னிருத்தி அரசராக்கி விடுகிறார். அதனால் அப்பாஜி மீது அளவற்ற மதிப்பை கொண்டிருக்கிறார்கள் கிருஷ்ணதேவராயரும் அவரது தாயாரும். பிரச்சனை ஏதும் வரக்கூடாது என்பதற்காக வீரநரசிம்மனின் மகன்களான அச்சுதன் ரங்கன்  இருவரையும் அரண்மணைச் சிறையில் வைத்து விட்டார், 

    ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ண தேவராயர் தன் 6 வயது பாலகன் திருமலைக்கு முடிசூட்ட நினைக்கிறார். அப்பாஜி அதை வேண்டாம் என்று ஆட்சேபிக்கிறார். ஆனாலும் ராயர் உறுதியாக இருக்கிறார். திடீரென இளவரசன்  திருமலை இறந்து விடுகிறார். அந்தப் பழி அப்பாஜி மேல் விழுகிறது. அவர் திருமலையை விஷம் வைத்துக் கொன்று விடுகிறார் என்று வதந்தி நிலவ கிருஷ்ண தேவராயர் கோபம் கொள்கிறார். அப்போது விஜய நகரம் முழுதும் விஷ ஜுரம்( அப்போதைய கொரோனாவோ? ) பரவிக் கொண்டிருந்தது. நிக்கோலஸ் என்ற இத்தாலிய மருத்துவன் விஜயநகரத்தில் மருத்துவ ஆராய்ச்சி செய்து வருகிறான். இளவரசனுக்கு முடிசூட்டு வைபவத்தில்   ஆறுகளில் இருந்து கொண்டு வரப் பட்டு நீண்ட நாளாக வைத்திருந்த புனித தீர்த்ததங்களைக் கொண்டு குளிப்பாட்டுகிறார்கள்.  சரியாக பாதுகாக்கப்படாத இந்த நீரின் காரணமாகத்தான் காய்ச்சல் வந்து இறந்து விடுகிறான் என நிக்கோலஸ் நிரூபிக்கிறான்.  
(இதில் நிக்கோலஸ் சொல்வதாக ஒரு வசனம் இந்த  விஷ  ஜுரத்திற்கு குமரனென்றும் தெரியாது, கிழவனென்றும் தெரியாது .சக்கரவர்த்தி என்றும் தெரியாது. ஆண்டி என்றும் தெரியாது-இப்போது கொரோனாவுக்கும் பொருத்தமாக உள்ளது ஆச்சர்யம்)
இதுவும் ஒருவகை கொரோனா சமுக இடைவெளிதான்

   அதன் பிறகு சமாதானம் அடைந்து அப்பாஜியிடம் மன்னிப்பு கோருகிறார். (ஆனால் சரித்திரம் கூறும் கதை வேறு கடைசியில் சொல்கிறேன்.)

பல்வேரு சம்பவங்களுக்குப் பின் ஆச்சார்ய வெங்கடத்தையா மூலமாக பரிகாரம் செய்யப்பட்டு இறைபணியில் இருந்து விடுவிக்கப் பட்டு  அவளை கிருஷ்ணதேவராயர் திருமணம் செய்து  கொள்வதாக கதை முடியும்

    தன் வரலாறாகச் சொல்வதால் தன்னையே  பெருமைப் படுத்திக் கொண்டு சொல்வது போல எழுது முடியாது என்பதை உணர்ந்து  எழுதி இருக்கிறார் ரா.கி.ரா. கிருஷ்ண தேவராயர் ஒரு அறிஞர்: கவிஞர்: தெலுங்கு, கன்னடம் சமஸ்கிருதம்  அறிந்தவர்: தமிழும் அறிந்திருந்தார். தெலுங்கு  இலக்கியத்தில்  போற்றப்படும்   ஆமுக்த மால்யதா என்ற நூல்  கிருஷ்ண தேவராயரால் எழுதப்பட்டது . இது ஆண்டாள் பாசுரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டது.    தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய இலக்கியமாக  இன்றும் கொண்டாடப் படுகிறது.

    ஏராளமான சுவாரசியமான தன் காலத்து வரலாற்றுத் தகவல்களை கிருஷ்ணதேவராயர்   சகஜமான உரையாடல்கள் மூலம்  நகைச்சுவையுடன் கூறுவது ரா.கி.ர வின் எழுத்துத் திறமைக்கு சான்று. பொதுவாக வரலாற்று நாவல்களில்  பேரரசர்கள் கிண்டலும் கேலியுமாக பேசமாட்டார்கள். ஆனால் இதில் கிருஷ்ணதேவராயர் எப்போது   நக்கல் நையாண்டியுடன் பேசுவது சுவாரசியம் கூட்டுகிறது.
     கிருஷ்ண தேவராயருக்கு   நகைச்சுவை உணர்வு  அதிகம் இருந்திருக்கும் என்பதற்கு சான்று அவரது அவையில் அஷ்ட திக்கஜங்கள் என்ற அறிஞர் பெருமக்கள் அவையை அலங்கரித்தனர் என்பதை நாம் படித்திருப்போம். தெனாலி ராமன் எனும் விகடகவியும் இதில் ஒருவர்.
இதை எப்படி கிருஷ்ணதேவராயர் கூறுகிறார் பாருங்கள்
     அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு அறிஞர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள்  அவர்கள் அனைவரையும் ஒரு சேர நான் பார்த்ததில்லை. நவரத்தினங்கள் என்ற 9 அறிஞர்களை ஆதரித்த சந்திரகுப்தருக்கு இணையாக என்னை சொல்வதில் இவர்களுக்கு என்ன பெருமையோ என்று தன்னையே கிண்டலடித்துக் கொள்வார்
     ஒரு இடத்தில் இந்தக் கவிஞர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை என்பார். வடிவேலுவின் ’பாடித் தொலையும்’ என்பது நம் நினைவுக்கு வரும்
   இன்னோர் இடத்தில் ஓவியன் ஒருவன் கிருஷ்ணதேவராயனை அட்டகாசமான ஓவியமாக வரைந்து  காட்ட, அதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இப்படி ஆஜானுபாகுவாகவா இருக்கிறேன்?. நான் சராசரி பருமன், உயரம் உடையவன்தானே? எனது முகத்தில் அம்மை வடுக்கள் கூட இருக்கிறதே, மிகைப் படுத்திக் காட்டுவதில் கலைஞர்களுக்கு எப்போதுமே மோகம்தான் என்று கிண்டலடிப்பார். வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற  வடிவேலுவின் இம்சை அரசன் 23 ம் புலிகேசி காட்சி இதில் இருந்து உருவாக்கப் பட்டதாக இருக்கலாம்.

திருப்பதி கோவிலில் ராயர்
   ஒரிடத்தில் திருமலாதேவியும் சின்னா தேவியும் ஒருவரை ஒருவர் அக்காஜி என்று அழைத்துக் கொளவார்கள் இதில் யார் அக்காஜி யார் தங்கை ஜி என்று கிண்டல் செய்வார் ராயர்.
 (கிருஷ்ணதேவராயர்- சின்னாதேவி, திருமலாம்பாவோடு காட்சி தரும் சிலைகள் இன்றும்  திருப்பதியில் காணலாம்)

 பல  சுவாரசியமான தகவல்களைத் நிறைந்தது இந்நூல்  
      ராயரின் தாயார் தனயனின் காதலை ஆதரித்தாலும் ஆச்சார்யர் வெங்கட தத்தையாவின் அனுமதி கோருகிறார் .அவர் மறுக்கிறார். நீங்கள் அனுமதிக்காவிட்டால் அவன் சைவனாக மாறிவிடுவான் மதமாற்ற பிளாக்மெயில் செய்ய  அவரும் பயந்து பரிகாரம் கூறுவது சுவாரசியம். 
        கிருஷ்ணதேவராயர் இஸ்லாமியர்களையும் மதித்தார். அவரது படையில் முஸ்லீம்கள் இருந்தனர். அரசரைப் பார்க்க வரும் முஸ்லிம் பெரியவர்கள் தலைகுனிந்து  வணக்கம் செலுத்துவதில் சங்கடப் படுவதை உணர்ந்த ராயர். ஒரு சிம்மாசனம் செய்து அதில் குர்ஆனை வைத்தாராம். அதனால் சங்கடம் இன்றி வணக்கம் செலுத்தினர் (என்னா ஐடியா?)

        பல அதிர்ச்சி தரும் மூடப்பழக்கங்கள் இக்காலத்தில் வழக்கத்தில் இருந்தன.  உடன் கட்டை ஏறுதல் எனபதை அறிந்திருப்போம், ஆனால் இதில் கூறப்படும்  முறை  கொஞ்சம் பயங்கரமானது. ஆழமான குழி தோண்டி இறந்த கணவனை  குழியில் இறக்கி கூடவே மனைவியையும்  உயிருடன் குழியில்  இறக்கி  கொஞ்சம் கொஞ்சமாக  மண்ணைப்போட்டு மூடுவதே அது. 
   
   ஒரு நல்ல வித்தியாசமான சரித்திர நாவல் படித்த அனுபவம் என்றாலும் இதில் குறைகள் இல்லையா என்றால்  இருக்கிறது. தற்கால வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது. சில வரலாற்று உண்மைகளைக் கூறாமல் விட்டது  கற்பனைப் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்பன அவற்றில் சில.
     கிருஷ்ணதேவராயன் தன் மகனைக் கொன்றுவிட்டதாக கோபம் கொண்டு  தான் அதுவரை போற்றி மதித்துவந்த மந்திரி அப்பாஜி என்ற திம்மராசு  மற்றும் அவரது  மகனின்   கண்களைப் பறித்து சிறையில் அடைத்ததாக வரலாறு சொல்கிறது. பின்னர் இதனை தவறென்று உணர்ந்து வருந்தியதாக கூறப்படுகிறது.  ”கிருஷ்ண தேவராயர்”  தெலுங்குப் படத்திலும் இப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் ரா.கி.ர. இதனைக் குறிப்பிடவில்லை 
அப்பாஜி சிறை வைக்கப்பட்ட இடம்
       கிருஷ்ண தேவராயருக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியதற்கு முக்கியக் காரணம் விஜயநகர ஆட்சிதான்   மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அனுமதித்ததும் கிருஷ்ணதேவராயர்தான்.
      இந்நூலும்   சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தின் முற்பகுதி ஒரே வரலாறைத்தான் சொல்லுகின்றன. ஆனால் இருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளதாக  தெரிகிறது. கிருஷ்ண தேவராயரின் தளபதி நாகம நாயக்கர் விஜயநகரத்தின் கீழுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். ஆனால் அவர் கிருஷ்ணதேவராயருக்கு கீழ்ப்படியாது தானே அரசு அமைக்க முற்பட அவரை அடக்க  நாகம நாயக்கரின் மகனான விஸ்வநாத நாயக்கனை அனுப்புகிறார். அவனும் தந்தையை சிறைப்பிடித்து கிருஷ்ணதேவராயர் முன் நிறுத்துகிறார். அவனது வீரத்தையும் விசுவாசத்தையும்  மெச்சி தமிழகப் பகுதியை சில நிபந்தனைகள் விதித்து ஒப்படைத்து விடுகிறார். அதில் இருந்து மதுரையில் நாயக்கர் ஆட்சி  தொடங்கியது. இந்த வம்சத்தில் சிறப்பு பெற்ற்வர் திருமலை நாயக்கர்,  இராணி மங்கம்மாள், இராணி மீனாட்சி இவர்கள் வழிவந்தவர்களே. 

      இது தொடராக வந்தபோதே படித்திருந்தாலும் மீண்டும் படித்து ரசிக்க வாய்ப்பு கொடுத்தது கொரோனா ஊரடங்கு.  மறு வாசிப்பும் சுவாரசியம்தான். 
கொரோனா ஊரடங்கின் ஆரம்பத்தில்  எழுதிய பதிவு சரி பார்த்து இன்றைய இன்று உலக புத்தக தினத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி
---------------------------------------------------------



செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி
      வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
        பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.  லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.
   இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர். 
     கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.
வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.
பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
         மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி 
      டர்பன் நீதி மன்றத்திற்கு தலைப்பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட்.. தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.
    அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வர்ணித்தன . பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது. 
      வழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை பிரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
     பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்
பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார். 
        அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள். இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத், அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெரும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.
பிளவுபட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி. 
  தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!

---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
12. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

திங்கள், 2 அக்டோபர், 2017

மகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்

    மகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே.உண்மை பேசுபவரகளையும் நேர்மையானவர்கையும் இவர் பெரிய காந்தி என்று கிண்டல் செய்வதுதான் வழக்கம். பணம் கொடுத்து வராவிட்டால் காந்தி கணக்கு என்று சொல்வதை அறிவோம். காந்தி மட்டுமல்ல யாருமே விமரசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் உலக வரலாற்றில் காந்திக்கு ஒரு பெருமைக்குரிய இடம் உண்டு என்பதை மறுக்க இயலாது 
அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு . இதோ காந்தி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

  1. மகாத்மா காந்தி 5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.  பாரத ரத்னா போல்   இறப்புக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை என்பதால் காந்திக்கு கிடைக்க வில்லை. பாரத ரத்னாவும் காந்திக்கு வழங்கப் படவில்லை. (இதைப் பற்றி இன்னொரு பதிவில்  விரிவாகப் பார்ப்போம் )
  2. மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.வரிசை  நீளம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் தாண்டிவிட்டதாம். Ganhiji's funeral procession in Delhi. It took a length of 8 km.
  3. பிரிட்டனின்  ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப்  பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து  
  4. காந்தி நடைப் பயணத்தின்  மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம்  என்கிறார்கள்.
  5. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது  ஹிட்லருக்கும்  கடிதம் எழுதி இருக்கிறார் 
  6. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்  ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர் . அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் . 
  7. காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில்  இருக்கும். காரணம் அவரது  ஆரம்ப கால  ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .
  8. இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன 
  9. காந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர்  Passive Resisters Soccer Club
  10. காந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940 லியே  தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை  தமிழில்  தயாரித்தார்  இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட  எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும்  வெளியிட ப் பட்டது 
  11. காந்தியடிகளின் மனதில்  ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது  ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட  வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் . 
  12. காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில்   அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
  13. மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும்  சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று  முதலில்  அழைத்தார்
  14. காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர் 
  15.  காந்தி 1930 இல் டைம்  இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே 
Gandhi as 'Man of the Year 1930' on TIME Cover

*********************


தொடர்புடைய பதிவுகள் 




**********************************

புதன், 26 அக்டோபர், 2016

திருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ


  பாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே! தனி ஊசல் தத்துவம் வானியல் தொலை நோக்கி போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. வாழும் காலத்தில் இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. பழமை வாதிகளிடம்  போராட வேண்டி இருந்து .மத நம்பிக்கையாளர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் எப்போதும் முரண்பாடு இருந்தே வந்ததுள்ளது அந்த முரண்பாடு கலீலியோவை நிம்மதியாக வாழ விடவில்லை.

   அக்காலத்து வானியல் அறிஞர்களும் கோள்கள் பூமியை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. என்று கூறினர். ஆனால் கோபர் நிகஸ் என்ற வானியல் அறிஞர்  சூரியனை சுற்றித்தான்  கோள்கள் இயங்குகின்றன என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். ஆனால் அவர் கருத்தை அவரது சமகாலத்தவர்  ஏற்கவில்லை. ஆனால் அவருக்குப் பின் சில அறிஞர்கள் இக்கருத்தின் உண்மையை புரிந்து கொண்டாலும் கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்.

   ஆரம்பத்தில் இருந்தே கலீலியோ சூரிய மையக் கொள்கையை நம்பினார் என்றாலும் வெளியே சொல்லவில்லை. பல காலம் தான் கண்டுபிடித்ததை தொலை நோக்கி மூலம்  ஆரய்ச்சி செய்து தக்க சான்றுகள் கிடைத்ததும் பகிரங்கமாக கோபர்நிக்கசை ஆதரிக்கத் தொடங்கினார். கோபர் நிக்கசின் கோட்பாட்டைப் பற்றி இத்தாலி மொழியில் எழுதினார். அப்போதைய பல்கலைக் கழகங்கள் அதனை ஏற்கவில்லை எனினும் அவற்றிற்கு வெளியே பரவலான ஆதரவு கிடைத்தது. கலீலியோவின் புகழ் பரவத் தொடங்கியது .இது அரிஸ்டாட்டில் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ள பேராசிரியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.. 'ஒன்னு கூடிட்டாங்கய்யா  ஒன்னு கூடிட்டாங்க' என்ற வடிவேலு சொல்வதை போல பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி கோபர் நிக்கசின் கொள்கை விவிலியத்துக்கு எதிரானது என்று கூறி தடை செய்யும்படி கத்தோலிக்க திருச்சபையிடம் போட்டுக் கொடுத்தனர்.

    இதனால் வருத்தமுற்ற கலீலியோ சமய குருமார்களிடம் இதைப் பற்றிப் பேச ரோமாபுரி சென்றார். அறிவியல் கோட்பாடுகள் பற்றி நமக்கு சொல்வது விவிலியத்தின் நோக்கமல்ல எனவும் அறிவியலோடு விவிலியம் முரண்படும்போது அதனை உருவகமாகக் கொள்வதே வழக்கம் என்று வாதாடிப் பார்த்தார் . காதில் பஞ்சை வைத்துக் கேட்டால் இசை என்ன? இடியோசையாக இருந்தாலும் எப்படிக் கேட்கும்?  கோபர் நிகஸ் கொள்கை பொய்யானது;  பிழையானது என்று அறிவித்தது திருச்சபை . இக்கோட்பாட்டை ஆதரிக்கக் கூடாது என்று கலீலியோவிற்கு ஆணை இட்டது திருச்சபை . கலீலியோவும் வேறு வழியின்றி  பணிந்து போனார் 

   இந்நிலையில் கலீலியோவின் நெடுநாளைய  நண்பர் ஒருவர் போப்பாண்டவர் ஆனார்.கலீலியோவுக்கு  விதித்த தடை உத்தரவை நீக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும் அரிஸ்டாட்டில், கோபர்நிகஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளைப் பற்றி விவாதம் செய்கிற நூல் ஒன்றை எழுத அனுமதி பெற்றுத் தந்தார் இரண்டு நிபந்தனைகளுடன். ஒன்று இந்த விவாதத்தில் கலீலியோ எந்தப் பக்கமும் சேரக் கூடாது இரண்டாவது உலகம் எப்படி இயங்குகிறது என்பதை மனிதனால் அறிய முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டும்.
    
     ஏதோ இந்த அளவுக்காவது அனுமதி கிடைத்ததே என்று மகிழ்ந்தார் கலீலியோ. Dialogue Concerning the Two Chief world systems" என்ற நூலை எழுதி முடித்தார். திருச்சபையின் தணிக்கைக்கு அனுப்பட்டு ஒரு வழியாக அனுமதிக்கப் பட்டு நூல் வெளியாகியது . இந்நூலுக்கு எதிர்பாராத வகையில் வரவேற்பு கிட்டியது. கோபர்நிக்கசின் கொள்கை உண்மை என்று ஏற்றுக்  கொள்ளத் தக்க வகையில் நூல் அமைந்துள்ளதாக பலரும் கருதினர். கோபர்நிகசின் சூரிய மையக் கொள்கையை நம்பத் தொடங்கினர் மக்கள்.

   இதன் காரணமாக நூல் எழுத அனுமதி தந்த போப்பாண்டவர் நூலை வெளியிட அனுமதி அளித்தமைக்காக வருத்தப் பட்டதோடு. நண்பர் என்றும் பாராமல் நிபந்தனைகளை மீறியதாக கலீலியோவை திருச்சபை மன்றத்தின் முன் நிறுத்தினார் . இம்முறை கலீலியோவுக்கு ஆயுட்கால தடை விதித்து வீட்டுக் காவலில் வைத்தது  திருச்சபை.  இரண்டாம் முறையாக அடங்கிப் போனார் கலீலியோ 

  கலீலியோ விசுவாசமான கத்தோலிக்கராக தன்னை காட்டிக் கொண்டாலும் அறிவியல் மீது அவர் கொண்ட நம்பிக்கையை கைவிடவில்லை. ஆயுள் முழுதும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டாலும் சும்மா இருக்கவில்லை. தன் இரண்டாம் நூலை எழுதி விட்டார் கலீலியோ. அவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவரது நூலின் கையெழுத்துப் பிரதி ஹாலந்திற்கு கடத்திச் செல்லப் பட்டது. இரு புதிய விஞ்ஞானங்கள் (Two New Sciences) என்ற இந்த நூல் நவீன இயற்பியலின் தொடக்கமாக அமைந்தது எனலாம். 
விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் மதங்களுடன் போராட வேண்டி இருந்தது என்பதற்கு கலீலியோவின் வாழ்க்கை ஒரு உதாரணம் . 
 கலீலியோவுக்கு எதிராக திருச்சபை செயல்பட்டது அங்கிருப்பவர்களுக்கே நெடுநாள் உறுத்தலாகவே அமைந்தது. சில நூறாண்டுகள் கடந்த பின் 1992 இல் கலீலியோவை   திருச்சபையால் நடத்தப்பட்ட விதத்திற்காக  வருத்தம்   தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது   

*******************************************************************
கொசுறு : .."..அப்படி சொன்னவர்களில் ஒருசிலருக்கு நேர்ந்த கதியை நினைத்தே தங்கள் கருத்தை சொல்லத் தயங்கினர்." என்று இப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . அப்படி என்ன கதி என்று நீங்கள் கேட்கலாம். அதைக் கேட்டால் கொஞ்சம் திகைத்துத் தான் போவீர்கள். இதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம் 

*************************************************************************

இதைப் படித்து விட்டீர்களா 







  • பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்? பகுதி 2

  • ஐசக் நியூட்டன்-விஞ்ஞானியா? அரசியல்வாதியா?

  • ******************************

  • செவ்வாய், 6 அக்டோபர், 2015

    நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை அல்லவா?


    அக்டோபர் இரண்டு அன்று வெளியிட்ட காந்தி பதிவின் பதிவின் தொடர்ச்சி
    முந்தைய பதிவை படிக்காதவர்கள் க்ளிக் செய்க

    **************

    முந்தைய பதிவின் தொடர்ச்சி
      தவறை ஒப்புக் கொள்வதற்கு காந்தி கட்டாயப் படுத்தியதை கட்சிக்காரர் விரும்பவில்லை எனினும் ஏற்றுக் கொண்டார். .காந்திக்கு தான் கூறிய யோசனை சிறந்தது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரியானபடி இந்த வழக்கை நடத்த முடியுமா என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்கள் முன் எழுந்து நின்று தன கட்சிக் காரரின் கணக்கில் உள்ள தவறை நடுங்கிக் கொண்டே கூறி விட்டார் .நீதி பதிகளில் ஒருவர் "இது மோசடி வேலை அல்லவா? ஸ்ரீ காந்தி என்று கேட்டார். காந்தியின் உள்ளம் கொதித்தது. 'மோசடி வேலை செய்திர்ப்பதாக குற்றம் சாடுவது சகிக்க முடியாதது. இப்படி ஆரம்பத்திலேயே ஒரு நீதி பதி   துவேஷம் கொண்டிருக்கும்போது இவழக்கில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்  காந்தி
    பிறகு தைரியமாக நீதிபதியை நோக்கி "நான் கூறுவதை முழுவதும கேட்காமல் இது மோசடி வேலை என்று நீதிபதி அவர்கள் கூறுவது ஆச்சர்யம அளிக்கிறது " என்றார் 
      நீதிபதி கொஞ்சம் சமாதானமாக " அப்படி நான் குற்றம் சாட்டவில்லை
     அது மாதிரி இருக்குமோ என்ற யோசனை தான் ” என்றார்
    ”அப்படி யோசிப்பது குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும் முழுவதும் கேட்டுவிட்டு பின்னர் காரணம் இருந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்”என்றார் காந்தி
    இடையில் குறுக்கிடுவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதி காந்தி தனது விளக்கத்தை தொடர்ந்து அளிக்க அனுமதித்தார்
       நீதிபதி ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை கிளப்பியது நல்லதாயிற்று என்று நினைத்த காந்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு விளக்கினார். கவனமாக கேட்ட  நீதிபதிகள் கணக்கில் ஏற்பட்ட தவறுகள் கவனக்குறைவால் ஏற்பட்டதே அன்றி வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தனர் . தவறு ஒப்புக் கொள்ளப் பட்ட படியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டியதில்லை என எதிர்தரப்பு  வக்கீல் நினைத்தார். நீதிபதிகள் அவரிடம்  சரமாரியாக  கேள்விகள் கேட்டனர் .காந்தியின் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள் கணக்கிலிருந்த தவறை காந்தி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எதிர்தரப்பு வக்கீலை கேட்டார் நீதிபதி. அதற்கு வக்கீல் சொன்ன பதிலால் திருப்தி அடையவில்லை நீதிபதிகள்
    "சிறு தவறைத் தவிர வேறெதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை. இந்த சிறு தவறுக்கு வழக்கை நடத்தும்படியும் கட்சிக் காரர்களை செலவு செய்யும்படியும் கட்டாயப் படுத்த கோர்ட்டுவிரும்பவில்லை. எளிதில் சரி செய்யக் கூடிய தவறுக்காக வழக்கு தொடர வேண்டாம் " என்று காந்திக்கு சாதகமாக வழக்கை முடித்தனர் நீதிபதிகள்
    கட்சிக்காரர்,மற்றும் பெரிய வக்கீலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்  .
    உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழில் நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற நம்பிக்கை காந்திக்கு உண்டாயிற்று

    எனினும் அத்தொழிலை சீரழித்து வரும் அடிப்படையான குறைபாடுகளை  போக்கி விட முடியாது என்ற  ஆதங்கமும் கந்தியிடம் இருந்தது. 

         ஒருமுறை காந்தியின் கொள்கையை அறிந்தும் அவரிடம் உண்மையை மறைத்து  விட்டார் அவரது கட்சிக்காரர் ஒருவர்.  இதனை விசாரணையின் போது அறிந்த காந்தி  உடனேயே தன் கட்சிக்காரை கண்டித்த தோடு நீதிபதியிடம் சிறிதும் தயங்காது தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்படி  கேட்டுக் கொண்டார். 
    நம்பமுடிகிறதா? எப்படிப்பட்ட மனிதர் காந்தி!
    இப்படி யாரேனும் இன்றைய வக்கீல்களில் இருக்கிறார்களா?

    நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு சிலரையாவது சுட்டிக் காட்ட முடியும் நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கூட காணமுடியும் .ஏன் நேர்மையான அரசியல்வாதி கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வக்கீல் தொழிலில் அப்படி யாரேனும் இருக்கிறார்களா?
    உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ************************************************************************

    காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

         ************************************************************
      

    வெள்ளி, 2 அக்டோபர், 2015

    வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்


       பள்ளி வயதில் காந்தியைப் பற்றி பெரிய தாக்கம் ஏதும் இருந்ததில்லை. பாடப் புத்தகத்தில் படித்ததெல்லாம். அவர் மீதான பெரிய பிம்பத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காந்தியின் மீதான எதிர்மறை கருத்துக்கள் காநதியைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டின. பொதுவாக காந்தியின்  மீது கூறப்படும்  பல குற்றசாட்டுகள் என் மனதிலும் இருந்தது.  சத்திய சோதனை மற்றும்  காந்தி தொடர்பான கட்டுரைகளை படித்த போது காந்தியைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் தேவை என்பதை மட்டும் உணர முடிகிறது. 
      நேர்மை வாய்மை என்பதெல்லாம் சாத்தியமா? அதுவும் வக்கீல் தொழிலில். தென் ஆப்ரிக்காவில் தன் வக்கீல் தொழிலைப் பற்றி காந்தி தன்   நினைவுகளைக் கூறுவதை  அவர் சொல்வதாகவே கேட்போம்  
     "அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம்   சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது        என் நோக்கத்திற்கும் மாறானது.ஆனால், அவைகளில் உண்மையைக்    கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை         மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது  வக்கீல் தொழிலில் பொய்யை  அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  நான் நடத்திய     வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என்      கையை விட்டுச்செலவு செய்த  பணத்திற்கு அதிகமாக   அந்த வழக்குகளுக்கு நான் பணம்    வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு  அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். 
        வக்கீல்   தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து        நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில்        சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச்      சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர்  அதனால் பயனடையக் கூடும் 
         வக்கீல் தொழில்   பொய்யர்களின் தொழில்  என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய் சொல்லிப் பணத்தையோ,       அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு    இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றிவிடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன் முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என்     எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச்     சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான்       அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம்.      ஆனால், அத்தகைய ஆசையை நான்     எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். 
         ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு     என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த   ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.         என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி     கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன்.   வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட,      அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும்என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை.        கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும்,      என் கட்டணத்திற்கு அதிகமாகவோ,  குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத்      தயார் செய்வோன் என்றோ   என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று      புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக,      எனக்கு ஒரு  பெயர் ஏற்பட்டு என்னிடம்          பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய         கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத  வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு      வக்கீல்களை அமர்த்திக்கொள்ளுவார்கள்   
       ஒரு வழக்கு மிகவும்   கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான     ஒருவருடைய  வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு     வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம்     விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது.  இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச்   சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே  ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய       தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று.  
          இத்தீர்ப்பை,      எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல்    வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில்     என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன்.  நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர்            கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக் கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய        தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை       ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.

      ஆனால், பெரிய வக்கீல்    பின்வருமாறு விவாதித்தார்:  “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால்,   மத்தியஸ்தர்களின் தீர்ப்பு  முழுவதையுமே கோர்ட்டு           ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும்  புதிதாக விசாரிக்கும்படி வழக்கு        அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும்,  முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்?” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார். 
         நான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும்  அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும்       உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒருதவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக்  கோர்ட்டுஅங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?   நாம் தவறை ஏற்றுக்     கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே  ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன   தீங்கு நேர்ந்துவிடும்?” 

      “ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.

    “அத்தவறைக் கோர்ட்டு       கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும்       கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றேன், 
      நான்.“ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள்  தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்
    தயாராயில்லை” என்று தீர்மானமாகப்      பதில் சொன்னார் பெரிய
    வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு    பதில் சொன்னேன்

    “நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம்  கட்சிக்காரர் விரும்பினால்,
    நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால்          இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.” 

       இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர்  நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக   நன்றாக அறிவார்.
    அவர் சொன்னார்: 
     “அப்படியானால் சரி,     வழக்கில் கோர்ட்டில்  நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான்  நம் கதி என்றால் இதில் தோற்றுப்        போனாலும் போகட்டும்.  நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”
        நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம்   நான் எதிர்பார்க்கவில்லை.  பெரிய வக்கீல் என்னை      மீண்டும் எச்சரிக்கை செய்தார். என்  பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில்  எனக்கு வாழ்த்தும் கூறினார்.
    கோர்ட்டில் என்ன நடந்தது        
    (தொடரும்)  

    அடுத்த பகுதி ****************************************************
    காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

    **********************************

    திங்கள், 6 ஏப்ரல், 2015

    எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்


     ஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து   கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

                  எனக்கு மணமான போது   நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்  நாங்கள் அண்ணன் தம்பிமார்மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம்.  மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு   விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால்   எங்கள் இருவருக்குமஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான்    என் அண்ணனுக்கு பின்னும்     மோசமானதாகவே    இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார்.அவரைப் போல    எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகி யிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது  ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

         நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே  எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம்    எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின்    அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான       பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை.  உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு           பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புக்களில் முறையே  நான்கு ரூபாயும், பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை  நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய  நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில், இந்த உபகாரச் சம்பளம்   எல்லோருக்கும் உரியதன்று.கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும்  சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமேஅது உண்டு.அந்த நாட்களில் நாற்பது முதல் ஐம்பது பேர் வரையில்  கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.

         என் திறமையில்     எனக்குப்         பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப்    பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான்   ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது     நன்னடத்தையை      நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு      சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர்            விட்டு அழுது விடுவேன்.கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் நான் என்று உபாத்தியாயர் கருதினாலோ, என்னால்       சகிக்க முடியாது. ஒரு தடவை அடிபட்டதாக   எனக்கு நினைவிருக்கிறது. அடிபட்டதற்காக நான் வருத்தப் படவில்லை ; நான்     அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக  அழுதேன்.
       முதல் வகுப்பிலோ, இரண்டாம்    வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில்         படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம்     நிகழ்ந்தது. .  எங்கள் தலைமை ஆசிரியர் மீது மாணவர்களுக் கெல்லாம்  அதிகப் பிரியம்.  அதே    சமயத்தில் கட்டுத் திட்டங்களில மிகக் கண்டிப்பானவர்; குறிப்பிட்ட        முறைப்படி காரியங்களைச் செய்பவர்; நன்றாகப் போதிப்பவருங்கூட       அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத்    தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார்.  இந்த    இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை.
           இவை கட்டாயமாக்கப் படுவதற்கு    முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ  இல்லை. ஒன்றிலும்  சேராமல்   நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி      இருந்து விட்டது தவறு என்பதை இப்போது அறிகிறேன். படிப்புக்கும்  தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும்     அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று, பாடத் திட்டத்தில்  மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும்  என்பதை அறிவேன். என்றாலும், தேகப் பயிற்சியில்    கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை   எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு  காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்   கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த         யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும்     பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும்     எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது. 

           தேகாப்பியாச  வகுப்புக்குப் போக      நான் விரும்பாததற்குக் காரணம், என்   தந்தைக்குப் பணிவிடை    செய்யவேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும்,   நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப்    பணிவிடை செய்வேன். இந்தச்         சேவை செய்வதற்குக்    கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என்      தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால்      தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு ஜிமியிடம்   கோரினேன். ஆனால், அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ல மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமைஅன்று   காலையில்  பள்ளிக் கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4  மணிக்குத்          தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும்   பள்ளிக்கூடம் போக வேண்டும். நான் பள்ளிக் கூடம்    போய்ச்    சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம் போய் விட்டார்கள்.  வந்திருந்தோரின்  கணக்கை திரு ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்தபோது நான் வரவில்லை என்று குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக்  கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன்.   நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஓரணாவோ அல்லது  இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச்     சரியாக நினைவில்லை)    அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

         பொய் சொன்னதாக நான்   தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது.   நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே  இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மை யுள்ளவன்  எச்சரிக்கையுடன்  இருப்பவனாகவும்  இருக்க வேண்டியது  முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்துகொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச்  சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டு  விட்டதில் நான் வெற்றி  அடைந்தேன் என்று   இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு  நான்  வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு  என் தந்தையே சொன்னதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப்    போகவேண்டும் என்பதில் இருந்து  விலக்குப் பெற்றேன்...............................



        ************************************************************

    கிட்டத்தட்ட அனைவருமே சரியாகக் கூறி விட்டீர்கள்  வாழ்த்துக்கள் .


    நேரம் இருந்தால் படியுங்கள் 


    வியாழன், 2 அக்டோபர், 2014

    காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்

       

       காந்தி ஒரு அதிசய மனிதர். அவர் பின்பற்றிய வழிமுறை,அவரது கொள்கைகள்,செயல்பாடுகள் இவற்றை ஆதரிப்போரும்  உண்டு . அவற்றை ஏற்றுக் கொள்ளாதவரும் உண்டு. ஏதோ ஒரு விதத்ததில் அதிகம் விவாதிக்கப்படும் மனிதராக இன்று வரை காந்தி விளங்குகிறார்.ஒவ்வொருவருக்கும் காந்தியைப்  பற்றிய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்  இந்தியாவின் அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பதை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வர் . காந்தி போற்றுதலுக்கு உரியவராக விளங்குவதற்கு காரணம் தனது  பலவீனத்தையும் உண்மையாக உரைப்பதற்கு அவர் பெற்றிருந்த துணிவே.  
    மக்களுக்காகப் போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது முக்கியமான இரு சம்பவங்கள்

      ஒன்று தென்னாப்ரிக்காவில் ரயில் பயணத்தில் காந்திக்கு ஏற்பட அவமதிப்பு ( இது அனைவரும் பள்ளிப் பாடத்தில்படித்திருப்போம்) முதலில் அதைப் பார்த்து விடுவோம் 

     பாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் இந்தியாவில் வழக்கறிஞராக சோபிக்க முடியாத காந்தி ஒரு கம்பெனியின் வழக்கு ஒன்றிற்கு உதவுதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு  அனுப்பப் பட்டார். அங்கு டர்பன் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு அவர் அறிமுகப் படுத்தப்பட்டார்.
    அங்கு வந்த மாஜிஸ்ட்ரேட்  தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை வெறித்துப் பார்த்து தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். காந்தியோ மறுத்து விட்டு நீதி மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார்
    இதைப் பற்றி காந்தி 

        "தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு   எழுதினேன்.  கோர்ட்டில்   நான் தலைப்பாகை அணிந்திருந்தது  நியாயமே என்று வாதாடினேன்.   இவ்விஷயத்தைக் குறித்துப்    பத்திரிக்கைகளில்   பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.
    இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே   இச்சம்பவம்  னக்கு   எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது.     சிலர் என்னை ஆதரித்தனர்; மற்றும்சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்” என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்."
     நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசிவரையில்,   என் தலைப்பாகை  என்னிடம் இருந்தது......" என்று கூறுகிறார்

      பின்னர் அங்கிருந்து காந்தி பிரிட்டோரியா செல்ல நேரிட்டது  அப்போதுதான் அப்போதுதான் நாம அனைவரும் அறிந்த  அந்த சம்பவம் நடந்தது

    காந்தி அதைஎவ்வாறு விவரிக்கிறார் என்று பார்ப்போம்

          ".....நான் சென்ற ரெயில்,      இரவு 9 மணிக்கு     நேட்டாலின் தலைநகரான     மாரிட்ஸ்பர்க் போய்ச்சேர்ந்தது.  அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒருரெயில்வே     சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார்.  “வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார்.     ஆனால், வேறு ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார்.      நான்,  கறுப்பு மனிதன்’ என்பதை அறிந்ததும்       அவருக்கு     ஆத்திரம் வந்துவிட்டது.  உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு  அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும்” என்றார்.

         “என்னிடம் முதல் வகுப்பு   டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.

         “அதைப்பற்றி அக்கறையில்லை ;  நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.

         “நான் உமக்குச் சொல்லுகிறேன்.   இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே,   இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.


         “இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்இறங்கிவிட வேண்டும்.     இல்லையானால்  உம்மைக் கீழே தள்ளப்
    போலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.
     

      “அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து  இறங்கமறுக்கிறேன்” என்று சொன்னேன்.

         போலீஸ்காரர் வந்தார்.    கையைப் பிடித்து இழுத்து என்னை  வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது.   போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு,        கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள்     தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன்.     சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்இருந்தன.

         அப்பொழுது குளிர்காலம்.   தென்னாப்பிரிக்காவில்       குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க்       உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக்  கடுமையாக இருந்தது.      என் மேல்  அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில்  விளக்கும் இல்லை.       நடுநிசியில்   ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச        விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.

          என் கடமை என்ன என்பதைக்  குறித்துச்   சிந்திக்கலானேன். என்னுடைய    உரிமைகளுக்காக போராடுவதா,  இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா?   இல்லாவிடில்    அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல்   பிரிட்டோரியாவுக்குப் போய்,    வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா? என் கடமையை நிறை வேற்றாமல்     இந்தியாவுக்கு     ஓடிவிடுவது   என்பது கோழைத்தனமாகும்.  எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ;  நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி  மாத்திரமே அது. சாத்தியமானால்,   இந்த நோயை         அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும் ;   அதைச் செய்வதில்   துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப்  போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.

         எனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்........"

         இப்படியாக அடுத்த வண்டியில் ப்ரிடோரியாவுகுப் போவது என்று முடிவு செய்தார். 

       இந்த சம்பவம் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம் . அவர் பிரிட்டோரியாவை அடையும்   முன்னமே அவரது உறுதியைக் குலைக்கும் வண்ணம் இன்னொரு சம்பவம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை ..

    அப்படி என்னதான் நடந்தது