என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி 

   வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு  திருப்பு முனைகளைக் கொண்டது.  சொல்லுக்கும் செயலுக்கும்  ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை.  ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

     பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். காந்தி லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது  போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர  வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி. 
        இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு  மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி  தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு  பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும்   எங்களை விட அவரால்   தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர்.

   கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார். 
    வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன்   குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு  இது மகிழ்ச்சியைத் தந்தது. 
      பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா  கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி.   பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது.  அப்துல்லா சேத் துக்கு எழுத்ப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித் தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி
     டர்பன் நீதி மன்றத்திற்கு  தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்து சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட். . தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது. 
     அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு  முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல்  தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு  கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு   தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது.  காந்தியை வேண்டாத விருந்தாளி என வருணித்தன . பைத்தியக் காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது.

     வழக்கு தொடர்பாக  அப்துல்லா சேத்  தனக்கு பதிலாக காந்தியை  ப்ரிட்டோரியா செல்லக் கோரினார்.  வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை  கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
   பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற  திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்    பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார்.

அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல  சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள் இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது  முடியும்  என்று சொல்வதற்கில்லை  வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத் அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த  ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெறும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர். 
    பிளவு பட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி.      தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று  கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!


---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்

12 கருத்துகள்:

 1. சரியான நாளில் உங்கள் பதிவு. அடிக்கடி எழுதலாமே.... ஏன் இத்தனை இடைவெளி?

  பதிலளிநீக்கு
 2. தங்களின் பதிவு கண்டு நீண்டநாட்கள் ஆகிவிட்டன ஐயா
  தொடர்ந்து பதிவுகளைத் தாருங்கள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான் இன்று எந்த வழக்கறிஞர்கள் இருதரப்பினரையும் சந்திக்க விடுகின்றார்கள் ?

  பதிலளிநீக்கு
 4. //மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.//

  நல்ல பகிர்வு.  நல்ல பதிவுகளை அடிக்கடி கொடுக்க வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. காந்திஜி பற்றி பல அவதூறுகளைப் பரப்பினால் புகழ்கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்களோ காந்தி ஒரு சத்தியவானென்பது மறு தளிக்க முடியாதது

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு. அறியாத விஷயம்.

  இனியும் தொடர்ந்து எழுந்துங்கள்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895