என்னை கவனிப்பவர்கள்

காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி
      வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
        பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
      பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார்.  லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.
   இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர். 
     கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.
வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.
பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
         மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித்தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி 
      டர்பன் நீதி மன்றத்திற்கு தலைப்பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட்.. தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.
    அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வர்ணித்தன . பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது. 
      வழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை பிரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
     பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்
பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார். 
        அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள். இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத், அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெரும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.
பிளவுபட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி. 
  தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!

---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
12. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

காந்தி செய்தது சரியா? பாவம் கஸ்துரி பாய்

  
        காந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாடம்
     காந்தி இரண்டாவது முறையும் தென்னாப்பரிக்கா சென்று அங்கு இந்தியர் நலனுக்காக போராடினார் எனபது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இந்தியா திரும்ப விரும்பிய காந்தியை அவ்வளவு எளிதில் இந்தியா அனுப்ப விரும்பவில்லை அங்குள்ள மக்கள். காந்தி உறுதியாக இருக்கவே "நாங்கள் விரும்பினால் மீண்டும் நீங்கள் இங்கே வரவேணும் என்று அன்புக் கட்டளையுடன் இந்தியா திரும்ப சம்மதித்தனர். காந்தி தாய்நாட்டுக்கு புறப்பட்டபோது அவருக்கு ஏராளமான வெகுமதிகளை அவருக்கு அளித்தனர் தென்னாப்பரிக்க இந்தியர். அதை காந்தி விவரிப்பில் காண்போம்
     "1899-இல் நான் இந்தியாவுக்குப் புறப்பட்டபோதும் இத்தகைய வெகுமதிகளை எனக்குக் கொடுத்தனர். ஆனால், இத் தடவையிலோ, பிரிவுபசாரம் அளவு கடந்ததாக இருந்தது. வெள்ளி, தங்கச்சாமான்களும் அன்பளிப்பில் அடங்கியிருந்ததோடு, விலை உயர்ந்த வைரச் சாமான்களும் இருந்தன.
        இந்த வெகுமதிகளையெல்லாம் ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவைகளையெல்லாம் வாங்கிக் கொண்ட பிறகு,ஊதியம் பெறாமல் சமூகத்திற்குச் சேவை செய்து வந்திருப்பதாக நான் எண்ணிக் கொள்ளுவது எப்படி?என் கட்சிக்காரர்கள் கொடுத்த சில வெகுமதிகளைத் தவிர மற்றவை யாவும், சமூகத்திற்கு நான் செய்த சேவைக்கு என்றே முற்றும் எனக்கு அளிக்கப்பட்டவைகள் ஆகும். என் கட்சிக் காரர்களும் பொது வேலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, கட்சிக்காரர்கள் வேறு, பொது ஊழியர்கள் வேறு என்று பாகுபாடு செய்துகொள்ளுவதற்கும் இல்லை.

கிடைத்த வெகுமதிகளில் ஒன்று தங்கச் சங்கிலி. அது 52 பவுன் பெறு மானம் உள்ளது. என் மனைவிக்கு என்று அதை அளித்தனர். ஆனால், அதுவும்கூட என்னுடைய பொதுச்சேவைக்கு அளிக்கப்பட்ட வெகுமதியே. ஆகையால் மற்றவைகளிலிருந்து அதை நான் தனியாக பிரித்துவிட முடியாது.

   ஒரு நாள் மாலை, இந்த வெகுமதிகளில் பெரும் பகுதியை எனக்கு அளித்தார்கள். அன்று இரவெல்லாம் என்னால் தூங்கவே முடியவில்லை. என் அறையில் அங்கும் இங்கும் இரவெல்லாம் உலாவினேன்; தீவிரமாகச் சிந்தித்தேன்.ஆனால், ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆயிரக்கணக்கில் மதிப்புள்ள இந்த வெகுமதிகளை வேண்டாம் என்று துறந்து விடுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அவைகளை வைத்துக்கொள்ளுவதோ இன்னும்அதிகக் கஷ்டமாக இருந்தது அவைகளை நான் வைத்துக் கொள்கிறேன் என்றாலும் என் குழந்தைகளின் கருத்து என்ன? என் மனைவியின் விஷயம் என்ன? சேவைக்கு வேண்டிய வாழ்க்கை நடத்த அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். சேவை ஒன்றே அதற்குரிய சன்மானம் என்றும் அவர்களுக்குச் சொல்லி வந்திருக்கிறேன்.

   வீட்டில் என்னிடம் விலை உயர்ந்த நகை எதுவும் இல்லை. எங்கள் வாழ்க்கையையே விரைவாக எளிமை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அப்படியிருக்கத் தங்கக் கடிகாரங்களை நாங்கள் எவ்வாறு வைத்துக் கொள்ள சங்கிலிகளையும் வைரமோதிரங்களையும் நாங்கள் எவ்வாறு அணிந்துகொள்ள முடியும்? மக்கள், நகைகளின் மீது இருக்கும் ஆசையை விட்டுவிட வேண்டும் என்று பல தடவை நான் மக்களுக்கு உபதேசம் செய்தும் இருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் வந்திருக்கும் நகைகளை நான் என்ன செய்வது?
இந்த வெகுமதிகளையெல்லாம் நான் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இவற்றையெல்லாம்ச மூகத்திற்கே சொந்த மானதாக்கி விட வேண்டும். இதற்கு என் மனைவியைச் சம்மதிக்கச் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும் என்பதை அறிவேன். குழந்தை களைப் பொறுத்த வரையில் எந்தவிதமான கஷ்டமும் இராது என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே, அவர்களையே என் வக்கீல்கள் ஆக்கிக் கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
என் யோசனைகளைக் குழந்தைகள் உடனே ஏற்றுக் கொண்டு விட்டனர். “இந்த விலையுயர்ந்த வெகுமதிகள் நமக்குத் தேவை யில்லை. ஆகையால், அவற்றைச் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடவேண்டியதே சரியானது.அவை நமக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால் நாம் அவற்றை எளிதில் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்” என்று குழந்தைகள் கூறினர்.
   நான் ஆனந்தம் அடைந்தேன். “அப்படியானால், உங்கள் தாயாரிடம் இதைக் குறித்து எடுத்துக் கூறி, அவளும் இதற்குச் சம்மதிக்கச் செய்வீர்கள் அல்லவா?” என்று கேட்டேன். “நிச்சயமாகச் செய்வோம். அது எங்கள் வேலை. அம்மாவுக்கு நகைகள் வேண்டியதில்லை. அவைகளை எங்களுக்காக வைத்திருக்க வேண்டும் என்றே அவர் விரும்புவார் அவை எங்களுக்கு தேவை இல்லை என்று நாங்கள் கூறும்போது, அவற்றைக் கொடுத்துவிட அம்மா ஏன் சம்மதிக்க மாட்டார்? என்றும் கூறினார்கள்.
      பேச்சளவில் இது எளிதாகத்தான் இருந்தது. ஆனால், காரியத்திலோ அது அதிகக் கஷ்டமாக இருந்தது. என் மனைவி கூறியதாவது: “இவையெல்லாம் உங்களுக்குத் தேவைப் படாமல் இருக்கலாம் . உங்கள் குழந்தைகளுக்கும் அவை வேண்டாம் என்று இருக்கலாம். அவர்களை நீங்கள் தட்டிக் கொடுத்தால், உங்கள் இஷ்டப்படியெல்லாம் அவர்கள் கூத்தாடுவார்கள்.நகைகளை நான் போட்டுக் கொள்வதை நீங்கள் அனுமதிக்காமலிருப்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். ஆனால், என் மருமகப்பெண்கள் வரும்போது அவர்கள் விஷயம் என்ன?  நிச்சயம் அவர்களுக்கு நகைகள்வேண்டியிருக்கும் நாளை நம் நிலை எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? அதிக அன்போடு அளிக்கப்பட்ட இந்த வெகுமதிகளைத் திருப்பிக் கொடுத்துவிட நான் ஒரு போதும் சம்மதிக்கவே மாட்டேன்.”

   இவ்வாறுஅவள், வாதங்களை சண்டமாருதமாகப் பொழிந்தாள். முடிவில் கண்ணீர் வடித்தும் அவற்றைப் பலப்படுத்தினாள். ஆனால், குழந்தைகளோ உறுதியுடன் இருந்தார்கள். நானும் அசையவில்லை. நான் சாந்தமாகப் பின்வருமாறு கூறினேன்: “குழந்தைகளுக்கு இனிமேல்தான் விவாகம் நடக்க வேண்டும். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே விவாகம் செய்து வைத்துவிட நாம் விரும்பவில்லை. அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் காரியங்களை அவர்களே முடித்துக்கொள்ளுவார்கள். மேலும், நகைப் பித்துப் பிடித்த பெண்களை நம் குமாரர்களுக்கு நாம் மணம் செய்து வைக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம். அவர்களுக்கு நகை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் அவற்றை வாங்கிக் கொடுக்க நான் இருக்கிறேன். அப்பொழுது நீ என்னைக் கேள்.”

    அதற்கு அவள், “உங்களைக் கேட்பதா?இவ்வளவு நாள் பழகியும் உங்களை எனக்குத் தெரியாதா? என் நகைகளைப் பிடுங்கிக் கொண்டீர்கள். அவற்றை நான் போட்டுக்கொண்டு நிம்மதியாக இருக்கவும் நீங்கள் என்னை விடவில்லை. இப்படிப்பட்ட நீங்கள் மருமகள்களுக்கு நகை வேறு செய்து போட்டுவிடப் போகிறீர்களாக்கும்! முடியாது. நகைகளை நான் திருப்பிக் கொடுக்கப்போவதில்லை. மேலும், என்னுடைய கழுத்துச் சரத்தைக் கேட்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றாள்.

“ஆனால், அந்தக் கழுத்துச் சரத்தை, உனக்குக் கொடுத்தது என் சேவைக்காகவா?, உன் சேவைக்காகவா?” என்று நான் கேட்டேன்.

  “உங்கள் சேவைக்காகவே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், நீங்கள் செய்த சேவை, நான் செய்த சேவையே அல்லவா? உங்களுக்காக இரவு பகல் நான் பாடுபட்டு உழைத்திருக்கிறேன். அதெல்லாம் சேவையல்லவா? போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கெல்லாம் உழைத்து, நான் கண்ணீர் வடிக்கச்செய்தீர்கள். அவர்களுக்கெல்லாம் அடிமையாக உழைத்தேனே!” என்றாள், என் மனைவி.
சொல்லம்புகள் என் உள்ளத்தில் தைத்தன. அவற்றுள் சில ஆழப் பதிந்தன. ஆனாலும், நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று நான் உறுதி கொண்டுவிட்டேன். இதற்கு அவளும் முடிவாகச் சம்மதித்துவிடும்படி செய்வதில் எப்படியோ வெற்றி பெற்றேன். 1896, 1901-ஆம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன. ஒரு தருமகர்த்தாப் பத்திரம் தயாரித்தேன். அந்த வெகுமதிகளையெல்லாம் ஒரு பாங்கில் ஒப்படைத்தேன். என் விருப்பப்படியோ, தரும கர்த்தாக்களின் விருப்பபடியோ, இந் நிதியைச் சமூகத்தின் சேவைக்குப் பயன்படுத்துவது என்று ஏற்பாடு செய்தேன்.

    பொதுஜன காரியங்களுக்கு நிதி எனக்குத் தேவைப்பட்டு, ‘இந்தத் தரும நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதே’ என்று நான் எண்ணிய போதெல்லாம், தேவைக்கு வேண்டிய பணத்தை வெளியிலேயே வசூல் செய்துகொள்ள என்னால் முடிந்திருக்கிறது. ஆகையால், அந்த நிதி அப்படியே செலவாகாமல் இருந்தது. அந்த நிதி இன்னும் இருந்து வருகிறது. தேவைப்படும் போது செலவிட்டு வருகிறார்கள். ஒழுங்காக அந்நிதி சேர்ந்து கொண்டும் வருகிறது.
    இவ்வாறு இந்நிதியை உண்டாக்கியதற்காக நான் என்றும் வருந்தியதே இல்லை. சில ஆண்டுகளானதும், அப்படிச் செய்தது தான் புத்திசாலித்தனமானது என்பதை என் மனைவியும் அறிந்து கொண்டாள். எத்தனையோ ஆசைகளிலிருந்து அது எங்களைப் பாதுகாத்தது.
பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த
வெகுமதிகளை   ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய
திடமான அபிப்பிராயம்.


 ***********************************************************

இதைப் படித்ததும் கீழக்கண்ட எண்ணங்கள் என் மனதில் தோன்றின

1.இப்படிக் கூட  ஒரு மனிதர் இருப்பாரா . இவைதான் மனிதரை மகாத்மா ஆக்கியிருக்கிறது 

2.மகாத்மாக்களுக்கு மனைவியாய் இருப்பதைப் போல துன்பம்  வேறில்லை 

3.மாமனிதர்கள் அவர்கள் குடும்பத்திருக்கு உவப்பானவர்களாக இருப்பதில்லை 

4. சலுகைகளோடு  வெகு மானங்களையும்   பொது சொத்தையும் குற்ற உணர்வின்றி அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளை  இதனை ஒரு முறையாவது படிக்க செய்ய  வேண்டும்

--------------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்



1. காந்தியைப் பற்றி சுஜாதா
2.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
3.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
2.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
6 .காந்தி தேசத் தந்தை இல்லையா?

7.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
8. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

சனி, 1 அக்டோபர், 2016

தற்கொலைக்கு முயன்ற காந்தி


       காந்தி பிறந்த நாளுக்கு யாரவது வருத்தப் படுவார்களா?  இவ்வாண்டு சிலர் ஆதங்கப் பட்டார்கள். அக்டோபர் 2  ஞாயிறன்று வந்து விட்டது, ஒரு நாள் விடுமுறை வீணாகி விட்டதே! என்று.  அந்த அளவில்தான் காந்தி நினைவு கூரப்படுகிறார்.  இளைய தலைமுறையினர் பலர் காந்தியின் மீதான மரியாதை குன்றியவர்களாகவே இருக்கிறார்கள். காந்தியடிகளின் கொள்கைகள் செயல்பாடுகள் மீது நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனினும் காந்தி இந்தியாவின் அடையாளங்களின் ஒன்று என்பது உண்மை. காந்திக்கு நெருக்கமான நேரு போன்றோர் காந்தியின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்று கூற முடியாது. இருப்பினும்காந்தியின் ஆளுமையை அவர்களால் மீற முடியவில்லை.

   யாராக இருந்தாலும்  தங்களை நல்லவராகவும் வல்லவராகவும் காட்டிக் கொள்ள முயல்வார்கள்  நாம் செய்த தவறுகளை தங்கள் பலவீனங்களை மற்றவர்களிடத்து நிச்சயம் சொல்ல விரும்ப மாட்டோம். ஆதுவும் பிரபலங்களாய் இருப்பவர்கள் சிறு வயதில் இருந்தே தாங்கள் உத்தம புத்திரர்கள் என்று நிறுவவே முற்படுவர். ஆனால் காந்தி தான் செய்த தவறுகளை குறிப்பிட்டுக் காட்ட வெட்கப் படவில்லை. பொய் சொல்வதற்கு தேவையான தைரியத்தை விட உண்மை சொல்வதற்கு அதிக தைரியம் வேண்டும் என்று காந்தி நம்பினார். அந்த மன உறுதி காந்திக்கு இருந்தது தனது "சத்திய சோதனை"யில் அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள்

" .......... புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும்,   நான் செய்த  வேறு சில    தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை என் விவாகத்திற்கு முன்போ, விவாகமான   உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில்  நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட்டுப் புகையின் வாசனை எங்களுக்குப்  பிரியமாக இருந்ததோ இதற்குக் காரணம் அல்ல எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான  இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம்.  என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.அவர் புகை பிடிப்பதைப்  பார்த்தபோது   நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், எங்களிடம்    காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும்  சிகரெட்டுத்   துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம். ஆனால் சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே? பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். பீடியை வாங்கி எங்கே வைப்பது என்ற பிரச்னை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில்  நாங்கள் பீடி பிடிக்கமுடியாது. சில வாரங்கள் வரையில்   திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம்.    இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின்  தண்டு, துவாரங்கள் உள்ளது என்றும்,     சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும்     கேள்விப்பட்டோம். அதைத்தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.

    இவை போன்றவைகளினாலெல்லாம்     எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல்   செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதி இல்லாமல்     எதையுமே நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத்  தோன்றியது. கடைசியாக வாழ்வே  முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!

     ஆனால், தற்கொலை செய்து   கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம்.     அவ்விதையைத்  தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு  வந்துவிட்டோம். மாலை நேரமே இதற்கு        நல்லவேளை என்றும்  முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்குப் போய் அங்கே  விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம்   செய்து  கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல்        வரவில்லை.   உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை?   சுதந்திர மின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது?      என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள்       இருவருக்குமே  சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக்கொள்ள ராம்ஜி கோயிலுக்குப்போய் தற்கொலை எண்ணத்தையே         விட்டுவிடுவது  என்று முடிவு செய்தோம்.

     தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப்போல,  தற்கொலை செய்து கொண்டு விடுவது  அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அதிலிருந்து,  யாராவது தற்கொலை செய்து கொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்  என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு  நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப்பு கை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக   வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்..

  நான் பெரியவனான      பின்பு,  புகை பிடிக்கவேண்டும் என்று   விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டுமிராண்டித் தனமானது , ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும்         கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலுமே புகை பிடிப்பதில்   இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது எனக்கு விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே  எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது........"

என்று செல்கிறது அவரது விவரிப்பு . சத்திய சோதனையில் காந்தி விவரிக்கும் பல சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவன. இன்னொரு பதிவில்  பார்ப்போம் 

***************************************************
தொடர்புடைய பதிவுகள் 



******************************************************************************************************************


செவ்வாய், 6 அக்டோபர், 2015

நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை அல்லவா?


அக்டோபர் இரண்டு அன்று வெளியிட்ட காந்தி பதிவின் பதிவின் தொடர்ச்சி
முந்தைய பதிவை படிக்காதவர்கள் க்ளிக் செய்க

**************

முந்தைய பதிவின் தொடர்ச்சி
  தவறை ஒப்புக் கொள்வதற்கு காந்தி கட்டாயப் படுத்தியதை கட்சிக்காரர் விரும்பவில்லை எனினும் ஏற்றுக் கொண்டார். .காந்திக்கு தான் கூறிய யோசனை சிறந்தது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரியானபடி இந்த வழக்கை நடத்த முடியுமா என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்கள் முன் எழுந்து நின்று தன கட்சிக் காரரின் கணக்கில் உள்ள தவறை நடுங்கிக் கொண்டே கூறி விட்டார் .நீதி பதிகளில் ஒருவர் "இது மோசடி வேலை அல்லவா? ஸ்ரீ காந்தி என்று கேட்டார். காந்தியின் உள்ளம் கொதித்தது. 'மோசடி வேலை செய்திர்ப்பதாக குற்றம் சாடுவது சகிக்க முடியாதது. இப்படி ஆரம்பத்திலேயே ஒரு நீதி பதி   துவேஷம் கொண்டிருக்கும்போது இவழக்கில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்  காந்தி
பிறகு தைரியமாக நீதிபதியை நோக்கி "நான் கூறுவதை முழுவதும கேட்காமல் இது மோசடி வேலை என்று நீதிபதி அவர்கள் கூறுவது ஆச்சர்யம அளிக்கிறது " என்றார் 
  நீதிபதி கொஞ்சம் சமாதானமாக " அப்படி நான் குற்றம் சாட்டவில்லை
 அது மாதிரி இருக்குமோ என்ற யோசனை தான் ” என்றார்
”அப்படி யோசிப்பது குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும் முழுவதும் கேட்டுவிட்டு பின்னர் காரணம் இருந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்”என்றார் காந்தி
இடையில் குறுக்கிடுவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதி காந்தி தனது விளக்கத்தை தொடர்ந்து அளிக்க அனுமதித்தார்
   நீதிபதி ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை கிளப்பியது நல்லதாயிற்று என்று நினைத்த காந்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு விளக்கினார். கவனமாக கேட்ட  நீதிபதிகள் கணக்கில் ஏற்பட்ட தவறுகள் கவனக்குறைவால் ஏற்பட்டதே அன்றி வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தனர் . தவறு ஒப்புக் கொள்ளப் பட்ட படியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டியதில்லை என எதிர்தரப்பு  வக்கீல் நினைத்தார். நீதிபதிகள் அவரிடம்  சரமாரியாக  கேள்விகள் கேட்டனர் .காந்தியின் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள் கணக்கிலிருந்த தவறை காந்தி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எதிர்தரப்பு வக்கீலை கேட்டார் நீதிபதி. அதற்கு வக்கீல் சொன்ன பதிலால் திருப்தி அடையவில்லை நீதிபதிகள்
"சிறு தவறைத் தவிர வேறெதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை. இந்த சிறு தவறுக்கு வழக்கை நடத்தும்படியும் கட்சிக் காரர்களை செலவு செய்யும்படியும் கட்டாயப் படுத்த கோர்ட்டுவிரும்பவில்லை. எளிதில் சரி செய்யக் கூடிய தவறுக்காக வழக்கு தொடர வேண்டாம் " என்று காந்திக்கு சாதகமாக வழக்கை முடித்தனர் நீதிபதிகள்
கட்சிக்காரர்,மற்றும் பெரிய வக்கீலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்  .
உண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழில் நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற நம்பிக்கை காந்திக்கு உண்டாயிற்று

எனினும் அத்தொழிலை சீரழித்து வரும் அடிப்படையான குறைபாடுகளை  போக்கி விட முடியாது என்ற  ஆதங்கமும் கந்தியிடம் இருந்தது. 

     ஒருமுறை காந்தியின் கொள்கையை அறிந்தும் அவரிடம் உண்மையை மறைத்து  விட்டார் அவரது கட்சிக்காரர் ஒருவர்.  இதனை விசாரணையின் போது அறிந்த காந்தி  உடனேயே தன் கட்சிக்காரை கண்டித்த தோடு நீதிபதியிடம் சிறிதும் தயங்காது தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்படி  கேட்டுக் கொண்டார். 
நம்பமுடிகிறதா? எப்படிப்பட்ட மனிதர் காந்தி!
இப்படி யாரேனும் இன்றைய வக்கீல்களில் இருக்கிறார்களா?

நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒரு சிலரையாவது சுட்டிக் காட்ட முடியும் நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கூட காணமுடியும் .ஏன் நேர்மையான அரசியல்வாதி கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வக்கீல் தொழிலில் அப்படி யாரேனும் இருக்கிறார்களா?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.

************************************************************************

காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

     ************************************************************
  

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்


   பள்ளி வயதில் காந்தியைப் பற்றி பெரிய தாக்கம் ஏதும் இருந்ததில்லை. பாடப் புத்தகத்தில் படித்ததெல்லாம். அவர் மீதான பெரிய பிம்பத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காந்தியின் மீதான எதிர்மறை கருத்துக்கள் காநதியைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டின. பொதுவாக காந்தியின்  மீது கூறப்படும்  பல குற்றசாட்டுகள் என் மனதிலும் இருந்தது.  சத்திய சோதனை மற்றும்  காந்தி தொடர்பான கட்டுரைகளை படித்த போது காந்தியைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் தேவை என்பதை மட்டும் உணர முடிகிறது. 
  நேர்மை வாய்மை என்பதெல்லாம் சாத்தியமா? அதுவும் வக்கீல் தொழிலில். தென் ஆப்ரிக்காவில் தன் வக்கீல் தொழிலைப் பற்றி காந்தி தன்   நினைவுகளைக் கூறுவதை  அவர் சொல்வதாகவே கேட்போம்  
 "அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம்   சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது        என் நோக்கத்திற்கும் மாறானது.ஆனால், அவைகளில் உண்மையைக்    கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை         மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது  வக்கீல் தொழிலில் பொய்யை  அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  நான் நடத்திய     வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என்      கையை விட்டுச்செலவு செய்த  பணத்திற்கு அதிகமாக   அந்த வழக்குகளுக்கு நான் பணம்    வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு  அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர். 
    வக்கீல்   தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து        நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில்        சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச்      சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர்  அதனால் பயனடையக் கூடும் 
     வக்கீல் தொழில்   பொய்யர்களின் தொழில்  என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய் சொல்லிப் பணத்தையோ,       அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு    இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றிவிடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன் முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என்     எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளுக்குச்     சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான்       அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம்.      ஆனால், அத்தகைய ஆசையை நான்     எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். 
     ஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு     என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த   ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.         என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி     கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன்.   வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட,      அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும்என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை.        கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும்,      என் கட்டணத்திற்கு அதிகமாகவோ,  குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத்      தயார் செய்வோன் என்றோ   என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று      புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக,      எனக்கு ஒரு  பெயர் ஏற்பட்டு என்னிடம்          பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய         கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத  வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு      வக்கீல்களை அமர்த்திக்கொள்ளுவார்கள்   
   ஒரு வழக்கு மிகவும்   கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான     ஒருவருடைய  வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு     வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம்     விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது.  இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச்   சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே  ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய       தொகை வரவாக வைக்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று.  
      இத்தீர்ப்பை,      எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல்    வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில்     என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன்.  நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர்            கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக் கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய        தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை       ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.

  ஆனால், பெரிய வக்கீல்    பின்வருமாறு விவாதித்தார்:  “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால்,   மத்தியஸ்தர்களின் தீர்ப்பு  முழுவதையுமே கோர்ட்டு           ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும்  புதிதாக விசாரிக்கும்படி வழக்கு        அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும்,  முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்?” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார். 
     நான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும்  அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும்       உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒருதவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக்  கோர்ட்டுஅங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது?   நாம் தவறை ஏற்றுக்     கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே  ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன   தீங்கு நேர்ந்துவிடும்?” 

  “ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டார், பெரிய வக்கீல்.

“அத்தவறைக் கோர்ட்டு       கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும்       கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றேன், 
  நான்.“ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள்  தயாரா? நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்
தயாராயில்லை” என்று தீர்மானமாகப்      பதில் சொன்னார் பெரிய
வக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு    பதில் சொன்னேன்

“நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம்  கட்சிக்காரர் விரும்பினால்,
நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால்          இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.” 

   இவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர்  நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக   நன்றாக அறிவார்.
அவர் சொன்னார்: 
 “அப்படியானால் சரி,     வழக்கில் கோர்ட்டில்  நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான்  நம் கதி என்றால் இதில் தோற்றுப்        போனாலும் போகட்டும்.  நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”
    நான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம்   நான் எதிர்பார்க்கவில்லை.  பெரிய வக்கீல் என்னை      மீண்டும் எச்சரிக்கை செய்தார். என்  பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில்  எனக்கு வாழ்த்தும் கூறினார்.
கோர்ட்டில் என்ன நடந்தது        
(தொடரும்)  

அடுத்த பகுதி ****************************************************
காந்தி தொடர்பானபிற பதிவுகள் 

**********************************

வெள்ளி, 30 ஜனவரி, 2015

கோட்சேயின் இறுதி நாட்கள்.


இந்தப் பதிவை எழுத தொடங்கும்போது நேரம் மாலை 5.30  மணி  67 ஆண்டுகளுக்கு முன் இதே நேரத்தில் டில்லி பிர்லா மாளிகையில் கோட்சே என்ற மத வெறியனின் துப்பாக்கி  குண்டுகள் மகாத்மாவின் மார்பை துளைத்தன. அகிம்சையின் மனித உருவம் சரிந்தது. உலகத்துக்கு அமைதி வழியை கற்றுத் தந்த அண்ணலின் சகாப்தம் நிறைவுற்றது. குலுங்கியது இந்தியா. கலங்கிக் கண்ணீர் விட்டது உலகம்.

   ஆனால் கலங்காமல் நின்றான் கோட்சே. காந்தியை சுட்டுமுடித்ததும் தப்பிக்க முயலவில்லை. காந்தியைக் கொன்றதில் எனக்கு கொஞ்சமும் குற்ற உணர்வில்லை என்று கூசாமல் நீதி மன்றத்தில் கூறினான். மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் காரணம் காட்டி இந்துக்களுக்கு துரோகம் செய்தவர் காந்தி. பிரிவினையின் போது இந்துக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தீர்க்க சிறிதும் முயலவில்லை மாறாக முஸ்லீம்களுக்கு எந்த துன்பமும் நேரக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார் காந்தி ...  என்றல்லாம் காந்தியின் மீது குற்றசாட்டுகளை சுமத்தி தன் கொடுஞ் செய்கையை நியாயப் படுத்தினான்.
    தீவிர இந்துக்கள் காந்தியின் கொள்கைகளை வெறுத்தனர். என்னதான் முஸ்லீம்களை ஆதரித்தாலும் அவர்களின் முழுமையான ஆதரவும் காந்திக்கு இருந்ததாகத் தெரியவில்லை 
   சிறப்பு நீதி மன்றம் கோட்சேவுக்கும் நாராயண் ஆப்தேவுக்கும் தூக்கு தண்டனை விதித்தது.மேல் முறையீட்டிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது .
சிறையில்  இருந்த கோட்சேவுக்கும் காந்தியின் மகனான ராம்தாஸ் காந்திக்கும் கடித போக்குவரத்து இருந்ததாக கூறப்படுகிறது. மகாத்மாவின் கொள்கைகளை வலியுறுத்தி  ராமதாஸ் கோட்சேவுக்கு கடிதங்கள் எழுதியுள்ளார். கோட்சேவும் தன தன வாதங்கள்  மூலம் காந்தியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
எப்படி இருப்பினும் கோட்சே மற்றும் ஆப்தேயின் தண்டனையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிகிறது. அவர் தனது கோரிக்கையில் காந்தியடிகள் ஒரு போதும் மரண தண்டனையை விரும்பியதில்லை.இருவரையும் தூக்கிலிடுவது அவரது கொள்களைகளுக்கு எதிரானது அவரது கொள்கையை இழிவு படுத்தக் கூடியது. மரண தண்டணையில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என்று வாதாடினார்.
அவர் படேலுக்கு எழுதிய கடித்ததில் "கோட்சேவையும் அவனது கூட்டாளிகளையும் சீர்திருத்த சிறையில் வைத்து திருத்த வேண்டும். தாங்கள் செய்தது மிகத் தவறு என்று உணர செய்ய வேண்டும் ஆர்.எஸ்.எஸ். முறையை பின்பற்றுவதன் மூலம் இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றிவிட முடியாது  என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் . கோட்சேவையும் விநோபாபாவேயும் சந்திக்க செய்து மனமாற்றம் ஏற்படுமாறு செய்யவேண்டும். இதனை ஏற்க இயலாவிடில் கோட்சேயை சிறையில் சென்று பார்க்க அனுமதி தரவேண்டும் அவனது செயல் எவ்வளவு கொடுமையானது என்பதை அவனுக்கு எடுத்துக் கூறி அவரை நல்லவராக மாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் தரவேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்  கோட்சேவுக்கும் இதன் நகலை அனுப்பி இருந்தார். கோட்சே இது குறித்து 03.6.1949 அன்று ராமதாசுக்கு பதில் எழுதி இருந்தான் அதில்
"என்னால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு மனத் துன்பம் ஏற்பட்டு இருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.எங்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக வருந்துகிறேன். ஆனால் மாகாத்மா காந்தியை சுட்டதற்காக நான் எள்ளளவும் வருத்தப் படவில்லை.நாட்டின்  நலனுக்காக நான் செய்தது சரியானது. தூக்கு தண்டனையை மாற்றி குறைந்த தண்டனை விதிப்பதன் மூலம் என் மனதை மாற்றிவிட முடியாது" என்று எழுதி இருந்தான்.
கோட்சேவை சந்திக்க ராமதாஸ் காந்தி அனுமதிக்கப் படவில்லை.அவரது கோரிக்கையும் பரிசீலிக்கப் படவில்லை 
கோட்சேவும் ஆப்தேவும் அமைதியான முறையில் சிறை வாழ்க்கையை கழித்தனர். கோட்சே புத்தகங்கள் படித்தான்.கடைசி நாட்களில் சிறைசகாக்களிடம் தன் செயலுக்கு வருந்துவதாகக் கூறினான் என்று சில கைதிகள் தெரிவித்தனராம்.ஆனால் கோட்சேயின் மன உறுதியை அறிந்தவர்களால் இதனை நம்ப முடியவில்லையாம் .ஆப்தே சிறையில் இந்திய தத்துவம் குறித்த  பத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தான். அதற்கு பகவத் கீதை உட்பட பல்வேறு  நூல்களை படித்து கொண்டிருந்தான் .
   தூக்கு தண்டனை நாளும் நெருங்கியது. மரணம்  குறித்து அச்சமோ கவலையோ கிடையாது என்று கூறி வந்த கோட்சேவுக்கு தூக்கிலிடப்போகின்ற நாளன்று (15.11.1949) முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் குடும்பம் குழந்தைகள் என்று எந்த வழியிலாவது வாழ்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று முன்பு ஏங்கிய ஆப்தே இப்போது முகத்தில் எந்தவித அச்சமும் இல்லாதவனாக காணப்பட்டான். 

      தூக்கு மேடை இருந்த இடம் நோக்கி கோட்சே முதலில் நடந்து சென்றான் அவனது நடையில் தடுமாற்றம் இருந்தது. தன் தடுமாற்றத்தை மறைக்க கோஷம் எழுப்பினான் அவனது குரலில் கம்பீரம் இல்லை பின்னால் தொடர்ந்த நாராயண் ஆப்தேவுக்கோ எந்தவித தடுமாற்றமோ பயமோ கடைசி வரை இல்லை. ஒரே மேடையில் இருவரையும் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்படிருந்தது . இருவரும் காபி அருந்தினர். முகத்தில் துணி மூடப்பட்டு  கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கு மேடை முன் இருவரையும் நிறுத்தினர்.குறிப்பிட்ட நேரம் வந்ததும் மேடை சட்டென்று  இழுக்கப்பட்டது . கயிற்றில் தொங்கினர் இருவரும்.ஒரே துடிப்பில் ஆப்தேயின் உயிர் பிரிந்ததாகத் தோன்றியதாம் ஆனால் கோட்சேவின்  உடலோ 15 நிமிடங்களுக்கு துடித்து பின்பு அடங்கியது .இருவரின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. காந்தியின் மரணம் உலகை உலுக்கியது 

    காந்தியைக் கொன்றதில் அவர்களுக்கு கிடைத்து என்ன? அவர்களது நோக்கம் நிறைவேறி  விட்டது.  .ஆனால் காந்தியின் மீதான வன்மம் அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னும் கோட்சே குடும்பத்தார்க்கு எள்ளளவும் குறையவில்லை என்று கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேவை சந்தித்த பின்  தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் டொமினிக் என்பவர்.
     காந்தி நினைத்திருந்தால் அவரது மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. காந்தி சுடப்பட சில நாட்களுக்கு முன்னதாக பிர்லா மாளிகைக்கருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.  அதற்குப் பின் பிர்லா மாளிகையில் உள்ளே நுழைபவர்களை சோதனை செய்தே அனுப்ப வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். காந்தியோ பிரார்த்தனைக்காக வருபவர்களை சோதனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தார். அது கோட்சே உள்ளே துப்பாக்கியுடன் நுழைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது .

பெர்னாட்ஷா காந்தியின் இறப்பின்போது  விடுத்த இரங்கல் செய்தி  "நல்லவராக இருப்பது அபாயகரமானது  என்று காந்தியின் மரணம் நமக்கு கூறுகிறது.காந்தியைப் பற்றி நினைத்தால் இமயமலைதான்  நினைவுக்கு வருகிறது  என்றார் . உண்மைதான் போலும் 

கோட்சேவுக்கு கோவில் கட்டப் போகிறர்கள் என்ற செய்தியை பத்திரிகைகளில் பார்த்தேன். எல்லோரையும் போல நானும் அதிர்ந்துதான் போனேன். 
பக்தர்களே! குஷ்பூக்களுக்குக் கூட கோவில் கட்டிக் கொள்ளுங்கள் . பாதகமில்லை. தயவு செய்து கோட்சேக்களுக்கு வேண்டாம் 


*********************************************************************************

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி


   மாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட  காந்தி செய்வதறியாது திகைத்து நின்றார். .வெள்ளையர் அல்லாதவர் மீது காட்டப்பட்ட நிறவெறி அவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறத் துவேஷத்தை ஒழிக்க தன்னாலானதை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார். அடுத்த ரயிலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் .அதற்குள் அவரை நேட்டாலில் இருந்து  அனுப்பிய அப்துல்லா சேட் தந்தி மூலம் தகவல் தெரிவிக்க மாரிஸ்பர்க்கில் இருந்த இந்தியர்கள் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வந்தனர் .காந்திக்கு ஆறுதல் கூறினர்.காந்தி சந்தித்த அனுபவம் மிக சாதாரணமான தென்றும் இதைவிட கஷ்டங்களை தாங்கள் அனுபவித்திருப்பதாகவும் கூறினர் ..
அடுத்த நாள் மாலையில் ரயில் வந்தது அதில் ஏறி  சார்லஸ் டவுனுக்க்கு  போய் சேர்ந்தார்.

     அங்கிருந்து கோச் வண்டியில் ஏறி ஜோகனஸ்பர்க்குக்கு செல்ல வேண்டும்.அதற்கான டிக்கெட்டும்  வைத்திருந்தார் காந்தி. கோச் வண்டி ஏஜென்டுக்கும்  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.. கோச் வண்டியின் பொறுப்புகளை பார்த்துக் கொள்ளும் வெள்ளைக் காரருக்கு தலைவர் என்ற படம் உண்டு. அவர் காந்தியைப் பார்த்து இந்தியன்  என்று அறிந்து கொண்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து "உமது டிக்கெட் ரத்தாகி விட்டது வண்டியில் இடமில்லை" என்றார். உண்மையில் வண்டியில் இடமிருந்தது , இந்தியரை கூலி என்று இழிவாகக் கருதுவது ஆங்கிலேயரின் வழக்கம் .

   ஆனால் காந்தியோ விடாமல் வாதாடினார். முந்தைய தின அவமானத்தில் இருந்தே மீளாத நிலையில்   காந்தியின்   உரிமைக்கான போராட்டம்  தொடர்ந்தது. கோச் வண்டியின் தலைவன் எவ்வளோ தவிர்த்துப்  பார்த்தும் காந்தி விடவில்லை. வண்டி ஓட்டுபவருக்கு இருபுறமும் இரு ஆசனங்கள் இருக்கும் அதில் கோச்சின்  தலைவர் அமர்ந்து வருவார். காந்தியை உள்ளே அமரவைக்க அவர் சிறிதும் விரும்பவில்லை . கடைசியாக வேறு வழியின்றி தான்  உள்ளே உட்கார்ந்து  ஓட்டுனரின் பக்கத்து இருக்கையை  காந்திக்கு அளித்தார்., தன்னை  கோச் வண்டியின் உள்ளே  அனுமதிக்kகாமல் வெளியே ஓட்டுபவரின் பக்கத்தில் உட்காரவைப்பதை பெரிய அவமதிப்பாக கருதினார் காந்தி.. மேலும் பிரச்சனை செய்ய விரும்பாமல் மனதுக்குள் பொருமிக்கொண்டே பயணம் செய்தார். 

   சிறிது  நேரத்திற்குப் பிறகு சுருட்டு பிடிக்க விரும்பிய கோச் தலைவன் காந்தி இருந்த இடத்தில் அமர்வதற்கு காந்தியை எழுப்பி கோச் வண்டியின் படிக்கட்டின்மீது ஒரு அழுக்குக்  கோணியை விரித்து அமரச் சொன்னான், ஆனால் காந்தியோ   "உள்ளே அமரவைக்க வேண்டிய என்னை வெளியே உட்கார வைத்தாய்.. சகித்துக் கொண்டேன் இப்போது படிக்கட்டின்மீது அமரச் சொல்கிறாய். நான் அங்கு உட்கார மாட்டேன். வேண்டுமானால் உள்ளே உட்காருகிறேன்" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார்.

    இதைக் கேட்டு கோபமடைந்த தலைவன்  "காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் .  பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றான்..காந்தி கோச் வண்டியின் கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.எலும்பே உடைந்தாலும் பிடியை விடகூடாது நினைத்துக் கொண்டார். ஆனால் தலைவன் தொடர்ந்து அடித்த படியும்  திட்டிக்கொண்டும் இருந்தான். காந்தி  அமைதியாகவே அவனது இம்சைகளை பொறுத்துக்  கொண்டார். இதை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர தடுக்க முயலவில்லை . கோச்சு தலைவன் திடகாத்திரமாய்  இருந்தான், காந்தியோ ஒல்லியாக பலம் குறைந்தவராக இருந்தார்.. ஒரு சிலர் பரிதாபம் கொண்டனர். அவரை விட்டுவிடச் சொன்னார்கள் .. "அவர்மீது தவறு இல்லை . அங்கு உட்காரக் கூடாது என்றால் எங்களுடனாவது அமர்ந்து பயணம் செய்ய அனுமதியுங்கள்" என்று கூறினர்.. ஆனால் அவன் அதை ஏற்று கொள்ளவில்லை. கடும் சொற்களால் காந்தியை தூற்றிக் கொண்டே வந்தான்.கடைசியில் ஓட்டுனரின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த கோச்சின் வேலைக்காரனை படிக்கட்டில்  உட்கார சொல்லி விட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டே காந்தியை முறைத்து கொண்டே வந்தான். நல்லவேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஸ்டாண்டர்டன்  நகரத்தை அடைந்தது வண்டி. அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோகன்ஸ்பர்க்  புறப்பட்டனர். ஆனால் அதில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை.

    பிரிட்டோரியாவை அடைய ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து  மீண்டும் ரயிலில் செல்ல வேண்டும்..ஜோகன்ஸ்பர்க்கில் ஹோட்டலில் தங்கவேண்டி வந்தது.. அப்துல்லா சேட் சொன்ன கடைக்காரரை தேடிப் போகாமல் ஓட்டலில் தங்க முயற்சி செய்தார்.  எந்த  ஹோட்டலிலும் இடம் கொடுக்கவில்லை. .வேறு வழியின்றி முன்னேற்பாட்டின்படி அப்துல் கனி என்பவற்றின் உதவியுடன் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயிலில் பிரிட்டோரியா செல்ல ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்.முதல் வகுப்பில்தான்  பயணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரை  அணுகி முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார். 

அவரோ"உங்கள் உணர்வை மதிக்கிறேன். முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . இடையில் மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கார்டு வற்புறுத்தினால் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடாது..  ரயில்வேயின்மீது வழக்கு ஏதும் தொடர்ந்து விட கூடாது" என்ரூ டிக்கட் கொடுத்தார்.

    ஒப்புக் கொண்ட காந்தி ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரம் கழித்து கார்டு அந்தப் பெட்டிக்கு வந்தார். காந்தியைப் பார்த்ததும் கோபம் கொண்டு மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கூறினார். தான் முதல் வகுப்பு டிக்கட் எடுத்ததைக் காட்டியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை .. அப்போது அந்தப் பெட்டியில்ஒரே ஒரு ஆங்கிலேயர் இருந்தார் .அவர் "அவரை௮ ஏன் தொல்லை செய்கிறீர்கள்.அவர்தான் முதல் வகுப்பு டிக்கட் வைத்திருக்கிறாரே. அவர் என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபனை இல்லை" என்று கார்டைக் கண்டித்தார்.

"ஒரு கறுப்புக் கூலியுடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் எனக்கு என்ன கவலை" சொல்லிக் கொண்டே  போனார் . ஒரு சில நல்ல மனம் படைத்த ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்த காந்தி  அவருக்கு நன்றி கூறினார்.


ஒரு வழியாக பிரிட்டோரியாவை அடைந்தார் காந்தி.அப்போதைக்கு அவரது பயணம் முடிந்தது  என்றாலும் தென்னாப்பிரிக்காவில் . இந்தியர்களின் உரிமைக்கான பயணம் இனிமேல்தான் தொடங்கப் படவேண்டும்  என்பதை அவர் உணர்ந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

ரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி  எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும்  அனுபவங்களுமே  நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை 

இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம் 



 படித்து விட்டீர்களா?