என்னை கவனிப்பவர்கள்

கமலஹாசன் கவிதை

 கமலஹாசன் கவிதை 


காதலின் கழிபொருளாய்
பிறந்த பிள்ளைக்கு 
தாலாட்டு இசைப்பது போல் 
மொய்த்தன ஈக்கூட்டம்

தொப்புள் கொடியறுத்த கசியும் காயமே 
பிள்ளையின் விலாசம் 
தெருவில் வாழ் நாய் ஒன்று
பஞ்சகற்றி காயம் நக்க
பீயள்ளும்  தாயம்மாள்
குப்பை கொட்ட வந்ததனால் 
குழந்தையை கண்டெடுத்தாள்
பெயர்  வைத்து பள்ளி சேர்த்தாள்
உறங்கும் கந்தனுக்கு மாபெரும் கனவுகளை
அவன் சார்பில் கனவுகள் கண்டு வைத்தாள்.  
பேரக் குழந்தையும் கண்ணாரக் கண்டபின்பு 
பறையொலிக்கப் பாடையேறி 
மண்ணோடு கலந்து போனாள். 

தாயிற் சிறந்த கோவிலும் இல்லையாம்!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லையாம்! 

கந்தனின் கோவிலெல்லாம் பீயள்ளும் தாயம்மாள் 
தனைப் பெற்ற  கோவிலொன்று 
முதியோர்கள்  இல்லம் ஒன்றில், 
மேல் நாட்டில் வாழ் மகன்மார்
அன்பாக நிதி உதவ 
மும்மலமும்  கழிந்துபோய்
தன் மலத்தில் கிடக்கும் உண்மை 
தாயம்மாள் மகன் அறிந்தால் 
தேடிப்போய் வணங்கிடுவான் 

அவன் வளர்ந்த கோவிலிலே 
வழி பாட்டு  முறை வேறு 

அளவான குடும்பமென 
முக்கோண சிறையினிலே 
குறிப்பிடும் மனப்பாங்கு 
தாயம்மாள் போன்றவர்க்கு 
எப்போதும் இருந்ததில்லை 

உலகத்து உருண்டை எல்லாம் 
எம் குடும்பம்  எனப் போற்றும் 
பொன் செய்யும் மனதுடையாள் 
எங்கள் பீயள்ளும் தாயம்மாள் 

அவள் மனதாலே தாயானாள் 
கருப்பையால் மலடானாள்
மேல்  நாட்டில் வாழ்கின்ற 
அவ்வீட்டு தம்பி மார்கள் மனதளவில் மலடாகி 
பதினாறும் பெற்று வாழ்ந்தார் 

****************

5 கருத்துகள்:

  1. நானும் விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன், கேட்டேன்.
    மனதை நெகிழ வைத்துவிட்டது கவிதை.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  2. நான் பார்ப்பதில்லை! ஆனால் பதிவின் மூலம் பார்த்த உணர்வைப் பெற வைத்தீர்! முரளி!

    பதிலளிநீக்கு
  3. கமலின் கவிதைக்கு எப்போதுமே நான் ரசிகன். இதுவும் நன்று

    பதிலளிநீக்கு
  4. கமலுக்குள் நல்ல கவிஞன் ..

    குடியிருப்பதை பறை சாற்றும்பதிவு

    பதிலளிநீக்கு
  5. கமல்ஹாசனின் மகத்தான கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி. அவரின் கவிதைத் தொகுப்பு வரும்போது தமிழின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராக கமல்ஹாசனை உலகம் கொண்டாடும் நாள் வெகு விரைவில் வரும்.

    -சித்திரவீதிக்காரன்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895