என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை-விமர்சனம்

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by [ஜோதிஜி, Jothi G, Ganesan, Jothi]
திருப்பூர் என்றதுமே நினைவுக்கு வருவது பனியன் கம்பெனிகள் மட்டுமல்ல நண்பர் ஜோதிஜியும்தான். தேவியர் இல்லம் வலைப்பூ மூலமாக எனக்குஅறிமுகமானவர். அவர் சமூக ஆர்வலரும்கூட என்பதை அவரது பதிவுகள் புலப்படுத்தும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப டிஜிடல் வடிவம் அனைத்திலும் தனது படைப்புகளை நகர்த்தி தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். தற்போதைய ட்ரெண்டான கிண்டிலுக்குள் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது 5 முதலாளிகளின் கதை நேற்று கிண்டிலில் தரவிறக்கம் செய்து படித்தேன். திருப்பூர் ஏராளமான அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தாலும் ஒரு முறைக்குள் கட்டுப்படாத தொழில் நகரமாகவே விளங்குவதாகவே அதனை விவரிக்கிறார். வசதிக்குறைபாடுகள் இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திருப்பூரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன்தான் இன்னமும் பார்க்கிறார்.. முதல் தலைமுறை முதலாளிகளின் மனப்பான்மையை புட்டுப்புட்டு வைக்கிறார்.. அவர்களின் வளர்ச்சி வீழ்ச்சிக்கான காரணங்களை நேர்த்தியாக அலசுகிறார். தொழில் தர்மம்,நாணயம், தொழிலாளர் சட்டங்கள் இவற்றிற்கான மதிப்பின்மையும் ஆங்காங்கே எடுத்துவைக்கிறார். தொழில் வெற்றிக்கான சூத்திரம் என்று எதுவும் இல்லை என்று கூறும் ஜோதிஜி அதனை தக்க வைக்க நேர்மை நாணயம் அவசியம் என்பதை கடைசியாக ஒருமுதலாளியைக் உதாரணமாகக் காட்டி முடிக்கிறார். கிண்டில் போட்டிக்கான இந்நூல் நல்ல வேற்பைப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது.

முதலில் இலவசமாக இருந்தது. இப்போது 59 ரூபாய் செலுத்திப் படிக்க வேண்டும். படித்து முடித்ததும் ரெவ்யூ எழுதலாம் என்று பார்த்தால் You Sorry, you do not yet meet the minimum eligibility requirements to write a review on Amazon. For more information, please reference our Community Guidelines. என்று கூறி விட்டது
அமேசான் ரெவியூ எழுத அனுமதிக்க வில்லை. இவ்வளவு அமேசானில் 1500 மதிப்பிற்கான ட்ரான்சாக்‌ஷன் செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. எப்படியோ வேறொரு அக்கவுண்ட் மூலம் ரெவ்யூ எழுதிவிட்டேன்.வாழ்த்துகள் ஜோதிஜி .

https://www.amazon.in/dp/B07ZXJQH4T/ref=cm_sw_r_tw_dp_U_x_LEf9Db1K9EZN0?fbclid=IwAR188mZ9fA7eAETmjV8NVF9J8VLuQhFI0HBKiv5pdXnGVKoLEO-s0ssGHLI-

புதன், 2 அக்டோபர், 2019

காந்தி மகாத்மாவானது எப்படி ?

      

      தென் ஆப்பிரிக்காவில் இந்தியர் குடியிருந்த பகுதிகளை ஜோகஸ்ன்ஸ்பர்க் நகரசபை கையகப்படுத்திக்  கொண்டது. சொற்ப அளவில் நஷ்டஈடும்  தர சம்மதித்தது . சிலர் நஷ்ட ஈடு பெற சம்மதிக்காது வழக்கு  தொடுத்தனர். காந்திதான் அவர்களுக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். தாராளமாக பணம் செலவழிக்கவும் தயாராக இருந்தனர். காந்தி இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக   பயன்படுத்திக் கொண்டிருந்தால்  ஏராளமாக பணம் சம்பாதித்திருக்கலாம் ஆனால் காந்தி அதனை சற்றும் விரும்பவில்லை . அவர்களிடம் வழக்கு வெற்றி பெற்றால் நீதி மன்றம் என்ன செலவுத் தொகை தீர்ப்பாக சொல்கிறதோ அதனைக் கொடுத்தால் போதும். ஒருவேளை தோற்று விட்டால் ஒரு வழக்கிற்கு 10 பவுன் கட்டணம் கொடுத்துவிடுங்கள் என்கிறார். இந்தக் கட்டணத்தில் ஏழைகளுக்கு வைத்திய சாலையோ  அல்லது வேறு உதவி ஸ்தாபனமோ அமைக்கப் போகிறேன் என்றும் கூறினார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 70 வழக்குகளில் ஒன்று  மட்டுமே தோல்வி அடைந்தது .
      இந்தியர் குடியிருந்த  இடங்களை நகரசபை வாங்கிக்  கொண்டதுமே அவ் விடத்திலிருந்து     இந்தியர் அகற்றப்பட்டு  விடவில்லை. அவர்களை   அப்புறப் படுத்துவதற்கு முன்னால் அவர்களுக்கு ஏற்றதான  புது இடங்களைத் தேட வேண்டியிருந்தது. நகரசபை இதைச் சுலபத்தில் செய்யவில்லை  அதனால்    இந்தியர்கள் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. முன்னால் இருந்ததைவிட   அவர்கள் நிலைமை இப்போது மிகவும் மோசமானதாக இருந்தது அவர்களுடைய சுற்றுப் புறங்களெல்லாம்   முன்னால் இருந்ததைவிட அதிக அசுத்தமாயின. இந்த நிலையில் கறுப்புப் பிளேக் நோய் பரவ ஆரம்பித்தது. இது உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு அபாயமானது 
       ஜோகன்ஸ்பர்க்கில் இருந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய 23 இந்தியர்களுக்கு பிளேக் தொற்றிக் கொண்டது . கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்கள் இந்தியக் குடியிருப்புக்கு திரும்பினர். காந்தியின் நண்பர் மதன்ஜித் இவர்களை பார்த்துப் பதறினார் , மற்றவர்களுக்கும் இந்நோய் பரவிவிடக்கூடாது என்பதற்காக காலியாக இருந்த ஒருவீட்டின் பூட்டை உடைத்து  23 பேரையும் அங்கு கொண்டு சேர்த்தார். உடனடியாக வந்து உதவ வேண்டும் என்று காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார், காந்தி உடனடியாக  சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்.  பூட்டை  உடைத்தது குற்றமாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் காந்திஜி நகர சபைக்கு எந்த சூழ்நிலையில் பூட்டு உடைக்கப்பட்டது  என்பதை விளக்கிக்  கடிதம் எழுதி பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். 
     இருவர் மட்டுமே நோயாளிகளுக்கு உதவ முடிந்த நிலையில்  டாக்டர் வில்லியம் காட்ஃ ப்ரே  என்பவர் உதவிக்கு வந்து சேர்ந்தார். ஆனால் மூன்று பேர் மட்டும் பிளேக் தாக்கிய  23 பேரை கவனிப்பது கடினமாக இருந்தது. உள்ளம் தூய்மையாக இருந்தால் உதவி நிசசயம் கிட்டும் என்று  காந்தி நம்பினார். அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. கல்யாண்தாஸ், மாணிக்கலால், குணவந்தராய் உள்ளிட்ட நான்கு பேர்  பணிவிடை செய்ய முனவந்தனர். அவர்களுக்கு நோய் தொற்றி விடுமோ என்று காந்தி அஞ்சி நோயாளிகளுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பணியை  அளிப்பதை தவிர்த்து சுற்றுப்புறப் பணிகளை அவர்களுக்கு வழங்கினார்.    டாக்டர் காட்ஃபிரே வின் ஆலோசனையுடன்  காந்தி,மதன்ஜித் மூவரும் நோயாளிகளுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர்.  மருந்து கொடுப்பது, அவர்களின் தேவைகளை கவனிப்பது ,படுக்கையை சுத்தமாக வைத்திருப்பது அவர்களை உற்சாகமாக  இருக்குமாறும் பார்த்துக் கொண்டனர். சுயநலமற்ற மனிதர்களின் சேவையால் 23  பே ரும் பிழைத்துக் கொண்டனர்.  
     காலியாக இருந்த வீட்டை எடுத்து கொண்டு நோயாளிகளை கவனித்துக் கொண்டதற்கு காந்திக்கு நன்றி  தெரிவித்து கடிதம் எழுதியது ஜோகன்ஸ்பர்க் நகர சபை .மேலும் பிளேக் நோயால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் விதமாக  ஒரு கிடங்கை  நகரசபை காந்தியிடம் ஒப்படைத்தது. ஆனா அக்கிடங்கோ அசுத்தம் நிறைந்ததாகக்  காணப்பட்டது. காந்தியடிகள்  நண்பர்கள் உதவியுடன்  படுக்கை வசதிகளும் நோயாளிகளை பராமரிக்கும் இடமாக  அதனை கஷ்டப்பட்டு மாற்றி அமைத்தார் .  டாக்டர் காட்ஃபிரேவே இங்கும்  மருத்துவ  சிகிச்சைகளைக்கு உதவினார். நோய்த்தொற்றை தவிர்க்க  நோயாளிகள் மட்டுமல்லாது கவனித்துக் கொள்பவர்களும் கொஞ்சம் பிராந்தி அருந்த பரிந்துரைத்தார். காந்தியடிகள் அதனை விரும்பவில்லை. எனினும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட்டார். நோயாளிகளில் மூன்று பேர் மட்டும் பிராந்தி அருந்த  ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுக்கு டாக்டரின் அனுமதியுடன் மண் சிகிச்சை அளித்தார் காந்தி. அந்த மூவரில் இருவர் பிழைத்துக் கொண்டனர். பிற நோயாளிகள் பலரும் இறந்தது கண்டு காந்தி வருந்தினார்.
   பின்னர் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க காந்தி அப்பணியில் இருந்து  விடுவிக்கப் பட்டார். பிளேக் நோயாளிகளுக்கு பணிவிடை செய்த காலத்தில்  தன்னால் பிறருக்கு  நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் காந்தி  தம்மை சந்திக்க வருபவர்களைத்  தவிர்த்தார். 
     பிளேக் நோயாளிகளுக்கு  சேவை செய்தது மட்டுமல்லாது இதனை  சரியான முறையில் கையாளாத  நகர நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து பத்திரிக்கையில்  கட்டுரைகள் எழுதினார் .    காந்தியின் செல்வாக்கு அதிகரித்தது. தென்  ஆப்பிரிக்காவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் காந்தியின் நேர்மை, சுயநலமின்மை, நெஞ்சுரம், பொது சேவை குணம், தன்னுடைய கொள்கை மாற்றிக் கொள்ளாத தன்மை ஆகியவற்றை   வெளிப்படுத்துவதாக   அமைந்ததைக் காணலாம்.   மெல்ல மெல்ல ஒரு மகாத்மாவை உருவாக்கிய  பெருமை தென் ஆப்பிரிக்காவையே சாரும் . 

---------------------------------------------------------------------------------------



காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்


1.தற்கொலைக்கு முயன்ற காந்தி
2. காந்தியைப் பற்றி சுஜாதா
3.நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை .
4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு...
5.அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது
6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா?சசித...
7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி
8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-
9.காந்தி தேசத் தந்தை இல்லையா?
10.எழுதியது யார்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
11. தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!
12.அதிசய வக்கீல் காந்தி
13.காந்தி செய்தது சரியா? பாவம் கஸ்துரி பாய்

         

புதன், 17 ஏப்ரல், 2019

தேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன?

   
   முந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன்.  டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது  என்ன என்பது இப்பதிவில் விளக்கப் பட்டுள்ளது   இதற்கான பதில்  மூன்றாவது கேள்வியில் உள்ளது.  தேர்தல் பணி செயத அனுபவத்தின் அடிப்படையிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான வலைத் தளத்திலிருந்து  இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு இங்கு அளிக்கப் பட்டுள்ளது.
சில நண்பர்கள் எழுப்பிய ஐயங்களும் அதற்கான பதில்களும்

1.VVPAT இன் பயன் என்ன?.   வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.அதே சமயத்தில் ஏழு வினாடிகள் பீப் சத்தம் கேட்கும். 
2. VVPAT இயந்திரம் இப்போதுதான் பயன் படுத்தப் படுகிறதா? ஏற்கனவே எஙேனும் பயன்படுத்தப் பட்டதா

 2013 இல் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி  2014 மக்களவை தேரதலில்  இந்தியா முழுதும் உள்ள 543   தொகுதிகளில் LucknowGandhinagarBangalore SouthChennai CentralJadavpurRaipurPatna Sahib and Mizoram  ஆகிய 8 தொகுதிகளிலும் சோதனை முயற்சியாக பயன்படுத்தப் பட்டது.


3இந்த VVPAT(Voter Verrifiable Paper Audit Trail அனைத்து பூத்களிலும் வைக்கப்படுமா...? இல்லை குறிப்பிட்ட சில இடங்களிலா...? குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என்றால், என்ன காரணம்...?

இந்தத் தேர்தலில் எல்லா வாக்கு சாவடிகளிலும்  VVPAT இயந்திரம் வைக்கப்படும்.  


.4. அனைத்து வாக்குச் சாவடிகளிலும்  இய்ந்திரத்தின் மூலம் எண்ணப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படுமா?


 இல்லை. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஏதேனும் 5 வாக்குசாவடிகளின் எண்ணிக்கை ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும். சில நாட்களுக்கு முன்பு ஒரு தொகுதிக்கு ஒரு வாக்க் சாவடி மட்டுமே வாக்கு ஒப்புகைச்
 சீட்டு எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும் என தெரிவித்திருந்தது. 50 % சரிபார்க்கப் படவேண்டும் என வழக்கு தொடுக்கப் பட்டது. நீதி மன்றம் ஒவ்வொரு தொகுதியிலும்  5 வாக்கு சாவடிகளுக்கு சரிபார்க்கப் படவேண்டும் எனக் கூறியுள்ளது. வாக்குச் சாவடிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப் படும். 


VVPAT இதன் பயன் நாம் அளித்த வாக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்போது .. தவறாக வந்தால் என்ன செய்வது...? ஏனென்றால் 7 வினாடிகள் தான் ஒளிரும் என்று படத்தில் உள்ளது



 இதற்குத்தான் டெஸ்ட் ஓட்டு பயன்படுகிறது. ஒரு வாக்காளர் தான் வாக்களித்த பின்னர் யாருக்கு வாக்களித்தாரோ அந்த சின்னமும் பெயரும் VVPAT  இயந்திரத்தில் காண்பிக்கப்படும் சீட்டில்  இல்லாமல்,  வேறு  சின்னமும் பெயரும் இடம் பெற்றிருந்தால் உடனடியாக  49     துணை விதி-1 இன் கீழ் வாக்கு சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அதற்கென படிவம் வாக்கு சாவடி அலுவலரிடம் உள்ளது. அதில் உறுதி அளித்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். இயந்திரம் தவறாகத்தான் காட்டியது என்ப்தை உறுதிப்படுத்த அவர் மீண்டும்  வாக்களிக்க அனுமதிக்கப் படுவார். இதற்குத்தான் டெஸ்ட்  ஓட்டு என்று பெயர் ஆனால் அவர் தனியாக வாக்களிக்க முடியாது. 
       இந்தப் புகார்,   வந்திருக்கும் கட்சி ஏஜென்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் முன்னிலையில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்று தெரியும் வகையில் வாக்களிக்க வேண்டும்.(எந்த சின்னத்திற்கும் வாக்களிக்கலாம்)  அவர் வாக்களிக்கும் சின்னத்தை அனைவரும் பார்ப்பார்கள். எல் இ டி விளக்குகள் சரியாக ஒளிர்கிறதா? சரியான சின்னம்   VVPAT இயந்திரத்தில்  காண்பிக்கப் படுகிறதா என  கவனிக்கப் படும். . இயந்திரத்தில் தவறாகக் காண்பித்தால் வாக்குப் பதிவை உடனடியாக நிறுத்தி மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



 VVPAT  இயந்திரத்தில் சரியான விவரங்கள் காண்பித்தால் புகார் பொய்யானதாக கருதப்பட்டு  தவறான தகவல் கூறியதற்காக காவல் துறை வசம் ஒப்படைக்கப் படுவார்,

6. சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாக்கு அதிகமாகி விடுமே என்ன செய்வது?



       இதற்காகத்தான் வாக்கு சாவடி அலுவலர் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் டெஸ்ட் வாக்கு  போட அனுமதிக்கப் படுகிறது.  டெஸ்ட் ஒட்டு  எந்த சின்னத்திற்கு போடப்பட்டது  என்ற விவரங்கள் உட்பட உரிய  படிவத்தில்  17 C ல் பதிவு செய்ய வேண்டும். இவை சீல் வைக்கப் பட்டு அனுப்பப் படும்.  வாக்கு எண்ணிக்கையின் போது  படிவத்தில் உள்ள டெஸ்ட் வாக்குகள் மொத்த பதிவான வாக்குகளில் இருந்து கழிக்கப் படும்.

                 


7. உண்மையாக இவ்வாக்குகள் கழிக்கப் படுகின்றனவா என்பதை எவ்வாறு அறிவது?


    இது மட்டுமல்ல. ஒரு பூத்தின்  வாக்குப் பதிவு  விவரம் அனைத்தும் சரிபார்த்துக் கொள்ள 17 படிவத்தின் நகல் அனைத்து ஏஜெண்டுகளுக்கும் வழங்கப் படும். தரவில்லை எனில் கட்டாயம் கேட்டுப் பெறவேண்டும். ஏனெனில் இப்படிவத்தில் மொத்த பதிவான வாக்குகள், வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப் படும் மூன்று இயந்திரங்களின் ( வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம். ஒப்புகை சீட்டு இயந்திரம்  VVPAT)  இவற்றின் சீரியல் எண்கள் சீல்வைப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட பலவதமான பேப்பர் ஸ்ட்ரிப் சீல் தாள்களின் வரிசை எண்கள் உள்ளிட்ட பல விவரங்கல் இருக்கும். இவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று வாக்கு எண்ணிக்கையின் போது சரிபார்த்துக் கொள்ளலாம் பேப்பர்சீல்களில் ஏஜெண்டுகளின் கையொப்பமும் இருக்கும்

8.  இந்த வாட்ஸ் ஆப் தகவல் உண்மையா?
  // வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின்  சின்னத்தின் பட்டனை அழுத்தும்போது வேறு ஒரு வேட்பாளரின்  சின்னத்தில் உள்ள விளக்கு எரிந்தால் உங்கள் ஒட்டு திருடப் படுவதாக அர்த்தம். அழுத்திய பட்டனில் இருந்து விரலை எடுக்க வேண்டாம் அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களிடம்  காட்டி நிருபித்த  பிறகு  விரலை எடுங்கள். பீ ப் ஒலி வந்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை.//  இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நண்பன் திண்டுக்கன் தனபாலன் அவர்கள் கேட்டிருந்தார்.

  இது உண்மையல்ல.இதை .   தவறாக ஒளிர்ந்தால் டெஸ்ட் வோட் பயன்படுத்தி மீண்டும் வாக்களித்து  நிருபித்து வாக்குப் பதிவை நிறுத்தலாம்.

   பட்டனை அழுதத்திக் கொண்டே இருந்தாலும் பீப் சவுண்டு 7 வினாடிகளுக்கு மேல் நீடிக்காது. நீங்கள் வேண்டுமானால் வாக்குப் பதிவின் போது சோதனை செய்து பாருங்கள்.  ஒரு முறை பட்டனை அழுத்திக் கொண்டே   விடாமல் இருந்தாலும், அது அழுத்தியதுமே  மின்சுற்று தொடங்கி  பூர்த்தி அடைந்து விடும்.அதனால் ஒரு முறை மட்டுமே 7 வினாடிகள் பீப் சவுண்ட் நீடிக்கும். மறுபடியும் விரலை எடுத்தால் மட்டுமே அடுத்த முறை பட்டனை அழுத்த தயாராக இருக்கலாம். ஆனால் மீண்டும் உடனே பட்டனை அழுத்தினால் வாக்கு பதிவு ஆகாது. பீப் சவுண்டுக்குப் பின். வாக்குப் பதிவு அலுவலர் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் மட்டுமே அடுத்த ஒட்டு போடமுடியும். அடுத்த வாக்காளரின் சீட்டைப்பெற்ற பின்னர்தான் பட்டனை அழுத்துவார். அதன்பின்னரே வாக்களிக்க முடியும். 
    வீடுகளில் பார்க்கலாம் காலிங் பெல்லை அழுத்திக்  கொண்டே இருந்தாலும் சில வினாடிகள் ஒலித்து நின்றுவிடும்.  கையை எடுத்து விட்டு மீண்டும் அழுத்த வேண்டும்.

9. ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினால் என்ன ஆகும்/.

   ஒரே நேரத்தில் இரண்டு பட்டனை அழுத்தினாலும் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகும். என்னதான் ஒரே நேரத்தில் பட்டனை அழுத்துகிறோம் என்று நாம் நினைத்தாலும்  எதாவது ஒரு விரல்  fraction of seconds இல் முன்னதாக அழுத்தி விடும். அதன் வோட்டே பதிவாகும்    

----------------------------------------------------

டெண்டர் வோட்டு என்றால் என்ன? 
மாதிரி வாக்குப் பதிவு எப்போது நடை பெறும்.? 
நோட்டா வோட்டு 14%க்கும் அதிகமானால் மறு தேர்தல் வருமா?
இன்று மாலை அடுத்த பதிவில்

முந்தைய பதிவு

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?



தொடர்புடைய பதிவுகள்

******************************************************************

சார்ந்த  பிற பதிவுகள் 

சனி, 13 ஏப்ரல், 2019

பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?


  தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலை தமிழகத்தில் வரும் 18 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 
     ஃபேஸ்புக் டுவிட்டர்  வாட்ஸ் ஆப், யூடியூப் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வேட்பாளர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள் செயல்களால் மீம்சுகள் பஞ்சமில்லாமல் நிறைந்து சுவாரசியம் கூடியுள்ளது.
      வதந்திகள் பொய்த் தகவல்களை கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் முடிந்த அளவு பரப்புகின்றன. இவை எந்த அளவுக்கு கட்சிகளுக்கு  பலனளிக்கும் என்பது தெரியவில்லை.  எவை உண்மை பொய் எனபதை  பற்றிய கவலை இன்றி  ஃபார்வேர்ட் செய்து மகிழ்கிறார்கள்.
     சிலர் பயனுள்ள தகவல்கள் என்று அவர்களை அறியாமலேயே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் சர்க்கார் படத்தை பார்த்த பாதிப்பில்.(நான் இன்னும் சர்க்கார் படம் பார்க்க வில்லை  சில தேர்தல் விதிமுறைகளை அள்ளி விடுகிறார்கள்
     கடந்த வாரங்களில் அடிக்கடி என் கண்ணில் பட்ட தகவல்களில் ஒன்று  வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை எனில்  வாக்குச் சாவடி அதிகாரியிடம் சேலஞ்ச் வோட் (Challenge Vote) என்று கேட்டு வாக்களியுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 


          உண்மையில் இப்படி வாக்களிக்க முடியுமா என்றால் முடியாது என்பதே சரியான பதில்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் நிச்சயம் வாக்களிக்க அனுமதிக்கப்படாது.  அவ்வாறு வாக்களிப்பதற்கான விதிமுறை இதுவரை இல்லை. 
        அப்படியானால் சேலஞ்ச் ஒட்டு என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?

      ஆம்!சேலஞ்ச் வோட் என்று ஒன்று உள்ளது. அது  தவறான வாக்காளர் வாக்களிக்க வரும்போது செய்ய வேண்டிய நடைமுறை . வாக்காளரின் அடையாளத்தை எதிர்த்தல். அதாவது வந்திருப்பவர் தவறான வாக்காளர்  என வேட்பாளரோ அல்லது அவரது அனுமதி பெற்ற ஏஜெண்டோ  எதிர்த்தலைத்தான் சேலஞ்ச் வோட் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 
        வாக்குப் பதிவு நேர்மையாகவும் விதிகளின்படியும் நடைபெறுகிறதா என்பதை அறிய வேட்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதனால் வாக்குப் பதிவு தொடங்கி முடியும் வரை வாக்குப் பதிவை கண்காணிக்க தனக்கான ஏஜெண்டுகளை -தங்கள் நம்பிக்கைக்கு உரிய உள்ளூர்வாசிகளை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வேட்பாளர்கள் நியமனம் செய்கிறார்கள். 
     வாக்குப் பதிவு தொடங்குவது முதல் ,வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீலிடுவது, மாதிரி வாக்குப் பதிவு நடத்துவ்து, வாக்காளர்களின் அடையாளங்களை உறுதிபடுத்துவது வாக்குப்பதிவு நிறைவு செய்து சீலிடுவது இவர்கள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி ஏஜெண்டுகளும் உள்ளே வரும் வாக்காளர்களை அடையாளம் கண்டு உறுதிப் படுத்துவார்கள்.  வருகின்ற வாக்காளர்  உண்மையானவர் இல்லை என நினைத்தால் ஏஜெண்டுகள் ஆட்சேபம் எழுப்பலாம்.  ஆள் மாறாட்டம் செய்பவர் என உறுதிபடத் தெரிந்தால் இவர்  பட்டியலில் உள்ள உண்மையான வாக்களர் அல்ல என சேலஞ்ச் செய்ய முடியும். வாக்குச்சாவடி முதன்மை அலுவலரிடம் முறையாக புகார் தெரிவித்தால் அலுவலர் அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்து  உண்மையக இருக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.      
      அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் உரிய கட்டணம் செலுத்தி 
 ( கட்டணம் 2 ரூபாய்-  இப்போதும் கட்டணம் மாறியதாக தகவல் இல்லை)  எதிர்ப்பை பதிவு செய்யலாம். தக்க ஆதாரங்களுடன் வந்திருப்பவர் உண்மையான வாக்காளர் அல்ல என அவர் நிருபித்தால் வந்திருப்பவர் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். விதிகளின்படி அவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.  எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப் படும். எதிர்ப்புக்கான முறையான ஆதாரம் இல்லையெனில் எதிர்பை ரத்து செய்து வாக்களிக்க அவரை அனுமதிக்கலாம். ஆனால் எதிர்ப்புக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அரசுக் கணக்கில் சேர்க்கப் படும்.   

    நடைமுறையில் ஏஜெண்டுகள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம் என்றாலும் அவற்றை பதிவு செய்வது இல்லை. அனைத்து ஏஜெண்டுகளும் தாங்களாகவே அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். 

இதுதான் சேலஞ்ச் வோட்.   

(வேட்பாளர் தொகுதிப் பக்கம் வரலன்னா மக்கள் மறந்துடுவாங்க . நாமும் வலைப் பக்கம் வரலன்னா நம்மையும் வலை நண்பர்கள் மறந்துவிடுவார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம்ம ப்ளாக் பாஸ்வேர்டே  மறந்து விடும் அபாயம் இருப்பாதால்  நாம இன்னமும் பளக்கர்தான்  என்பதை நினைவு படுத்தவே இந்தப் பதிவு)

நன்றி: தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கம் மற்றும் கையேடுகள்


அடுத்த பதிவில் டெண்டர் ஒட்டு, டெஸ்ட் ஓட்டு, மாதிரி வாக்குப் பதிவு இவற்றைப் பார்க்கலாம்

புதன், 6 மார்ச், 2019

500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்



Image result for 500th blogger post
எனது 500 வது பதிவு .

------------------------------
இந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன  எனது  அனுபவம்  கொஞ்சம் கற்பனை கலந்தது.

 வேலைக்காக காத்திருந்தபோது  இடையே ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது  வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது என காலம் போய்க்கொண்டிருந்தது . ரயில்வே ரெக்ரூட்மெண்ட்., பேங்கிங் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாஃப் செலெக்‌ஷன், டி.என்.பி.எஸ்சி தேர்வுகளில் எதிலாவது தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற அல்ப ஆசை இருந்தது.  சில  புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிப்பதும் உண்டு.  காம்படிஷன் சக்ஸஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது  வாங்குவேன் .

         அதில் ஐ.ஏ,எஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் பெற்றவர்களின் பேட்டி இருக்கும்.  தலைப்பாகை  சிங்குகள் தனது வெற்றிக் கதையைக் கூறுவார்கள். அவர்கள் ஐ.ஐடில்  படித்தவர்களாக இருப்பார்கள். அதைப் படித்தாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தோன்றினாலும் சும்மா எதற்காவது அப்ளை செய்வது   உண்டு
     ரயில்வே ஸ்டேஷன்ல 10000 பணியிடங்கள் 20000 பணியிடங்கள்னுகாலி  போட்டு உசுப்பேத்துவான். அப்ளிகேஷன்ஸ் சேல்ஸ் பயங்கரமா இருக்கும்.ஆனா வேலதான் கிடைக்காது. இப்போது எல்லாம் ஆன் லைன் ஆகிவிட்டது
     அப்போது  ஏர்ஃபோர்ஸ்ல  கிளார்க்  வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று  விளம்பரம் வந்தது  சுபயோக சுப தினத்தில் அப்ளை செய்தாயிற்று. நான் அப்ளை செய்தது வீட்டுக்கு தெரியாது.  வீட்டில் மற்றவர்கள் ஊருக்கு சென்றிருந்தனர். 
      ஒரு நாள் எழுத்துத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். காலையில ஒரு எக்சாம். அதுல பாஸ் பண்ணவங்களுக்கு மத்தியானம் எக்சாம்.நானும் தேர்வு எழுத பேனா பென்சில் ரப்பர் போன்ற ஸ்கேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன்  புறப்பட்டேன். 

     கிழக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் கேம்புக்குள்(Camp) நுழைந்தேன். உள்ளே சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்தது. அங்கு  மஞ்சள் நிறத்தில் குட்டி விமானங்ள் சில இருந்தன. இவை வானத்தில் பறக்கும்போது பார்த்திருக்கிறேன்.

    காலையில்  500 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எளிமையாக இருந்தது.  9 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிந்து விட்டது.   ஒரு மணிக்கு ரிசல்ட் சொல்லி விட்டார்கள். முதல் தேர்வில் செலக்ட் ஆகி இருந்தேன்.  முதல் தேர்வில் செலக்ட் ஆன  கொஞ்சம் பேருக்கு இரண்டு மணிக்கு 2 ஆவது தேர்வு  வைத்தார்கள்.  அதன் ரிசல்டும் உடனே சொல்லி விட்டார்கள். ஆச்சர்யம்! அதிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.  மறு நாள்  மெடிக்கல் டெஸ்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.  கூட  இருந்தவர்கள் உனக்கு கன்ஃபார்மா செலக்ட் ஆயிடும் என்றார்கள். 
சந்தோஷமாக வீட்டுக்கு வந்தேன். 

     என் நண்பன் ஒருவன் மிலிட்டரில இருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் ஊருக்கு வந்திருந்தான்  அவன்கிட்ட விஷயத்தை சொல்லி   ஆலோசனை கேட்டேன். 

”ஏர் ஃபோர்ஸ்லயா சேரப்போற! ரொம்ப கஷ்டமாச்சே . செம பெண்டெடுப்பான். அனேகமா பார்டர்லதான் போஸ்டிங் போடுவான். இருபதுல இருந்து இருபத்தைந்து  வயசுக்குள்ளதான் காஷ்மீருக்கு அனுப்புவான். மத்தவங்களால அந்தக் குளிர தாங்க முடியாது. பயங்கரமா இருக்கும். நீ பயப்படாத. என்ன? சண்டை வந்தா ஃப்ளைட்ல போய் குண்டு போடனும்.அவ்வளவுதான் ”: என்று சொல்லி ஒரு குண்டைப் போட்டான்.

”அடப்பாவி நான் அப்ளை பண்ணி இருக்கறது க்ளெர்க் போஸ்ட்தானே நான் ஏன் அதெல்லாம் செய்யனும் “
“அதெல்லாம் கிடையாது சண்டன்னு வந்துட்டா  எல்லாரையும்தான் அனுப்புவாங்க”
உன்ன எப்பாவாவது சண்டை போட அனுப்பி இருக்காங்களா”
“ம்  எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கல உனக்காவது கிடைக்கட்டும்” என்று வாழ்த்தி பீதி ஏற்றினான்”
மேலும் விடாமல் “ஆமா1  நீ வெஜிடேரியனாச்சே மிலிடரில நான் வெஜ்தானே சாப்பிடனும். சரி பரவாயில்ல போகப்போக சரியாயிடும்.  “

நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நண்பனின் அப்பா அங்கு வந்தார்.  அவர் ரிட்டயர்டும் மிலிட்டர் ஆஃபீசர்.
விஷயத்தை கேட்டு விட்டு கடகடவென சிரித்தார். பயமுறுத்தாத போடா! என்று அவனை அனுப்பி விட்டு , அதெல்லாம் ஒன்னும் இல்ல. தைரியமா போ. ஏர்போர்ஸல  நீ ஜாயின் பண்ற போஸ்டுக்கு  ஏத்த சிவில் ஒர்க்தான்  அல்லாட் பண்ணுவங்க” என்று தைரியம் கொடுத்தார்.அப்புறம் பல சந்தேகங்களைக் கேட்டும் தெளிவு பெறாமல் வீட்டுக்குத் திரும்பினேன். 

       இரவு தூக்கம் வராமல் நெடு நேரம் கழித்துத் தூங்கினேன். தூக்கத்தில் விமானக் கனவுகள் அணிவகுத்தது. கனவில்  நான் ஒற்றை ஆளாக விமானத்தை ஒட்டினேன். மவுண்ட்ரோடில் ஒட்டிக் கொண்டு போனேன். அப்படியே ட்ரைன்  ட்ராக்கில்  ப்ளைட் ஒட்டி சாதனை புரிந்தேன் . அப்படியே கொஞ்சம் முன்னேறி விமானத்தை தாறுமாறாக ஒட்டி குட்டிக் கரனம் அடிக்க வைத்தேன். ”   அப்புறம் விட்டு வாசலில் ஃப்ளைட்டை நிறுத்தியதும் விழிப்பு வந்து விட்டது.

  அடுத்த நாள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றேன்.  கேட் இன்னும் திறக்கவில்லை எனக்கு முன்பாக ஏற்கனவே என்னுடன் தேர்வானவர்கள் வெளியே  வரிசையில்   நின்றிருந்தார்கள்.  

அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் ”மெடிக்கல் டெஸ்ட்ல செலக்ட் ஆயிட்டா அப்புறம் வெளியே விடமாட்டாங்க. அப்பவே வேலைக்கு சேந்திடனும்”. என்றான் ஒருவன்.
   ”இது என்னடா வம்பா போச்சே நாம வந்தது வீட்டுக்குக் கூடத் தெரியாதே ஒரு வேளை செலக்ட் ஆயிட்டா எப்படி தகவல் சொல்றது”என்று பயம் வந்து விட்டது  

அவனே  ” கவலைப் படாதீங்க நீ ரொம்ப ஒல்லியா இருக்கியே! எவ்வளவு வெயிட்? . செலக்ட் ஆறது கஷ்டம்தான் “என்றான்?

    இன்னொருவன்” சில பேர் ஒல்லியாத்தான் இருப்பாங்க  ஆனா போன் வெயிட் இருக்கும் என்றான்.” எதுக்கும் கொஞ்சம் வாழப்பழம் சாப்பிடு வெயிட் கூட காமிக்கும் என்றான்
எனக்கும் அண்டர் வெயிட்டாக இருப்பேன் என்று சந்தேகம் வர  வாழைப்பழம் வாங்கி முக்கிமுக்கி தின்றாலும் மூன்று வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை, அப்போதுதான் பார்த்தேன். குண்டாக இருந்தவர்கள் கூட வாழைப்பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  

     ஒரு வழியாக  மெடிக்கல் டெஸ்ட் தொடங்கியது. என் முறை வந்ததும்  ஒருவன் முதலில்  உயரம் அளவெடுத்தான். பின்னர் எடை எடுத்தான் குறித்துக்கொண்டான்  செஸ்ட் எக்ஸ்பேன்ஷன் பார்த்தான்.   அப்புறம் வேறு ஏதோதோ சோதனை எல்லாம் செய்தார்கள்
பின்னர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் ஏதோ சொன்னான்.
 ஏக் மால் தோ துக்கடா ஏக் காவ் மே ஏக்  கிசான் ரஹ்தா தா என்பதைத்தவிர ஹிந்தியில் வேறு எதுவும் தெரியாது என்ப்தால் அவர்  சொன்னது புரியவில்லை

 வெளியே வந்து   கூட்டணி கிடைக்காத கட்சி தனியா நின்னு எலக்‌ஷன் ரிசல்டுக்காக காத்திருப்பது போல அல்ப ஆசையுடன்  காத்திருந்தேன்.  

மதியம்  தேர்வு செய்யப் பட்டவர் பட்டியலை  ஒட்டினர்.  எதிர்பார்த்தது போல என் பெயர் இல்லை.    இப்போது புரிந்தது ஹிந்தியில் அவர் சொன்னது ”அடுத்த முறையாவது நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கிட்டு வா”  என்பதாகத்தான் இருக்கும் என்று

       நான் வெற்றிகரமான தோல்வியுடன் வெளியேறினேன்.  இப்போது சொல்லுங்கள் நான் ஏர்ஃபோர்ஸ் ரிடர்ன் தானே!

---------------------------------------------------------------------------------------



    விங் கம்மேண்டர் அபிநந்தன் கடந்த வார  பேசு பொருளாக இருந்தார். அவரது வீரத்தால் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தார்.  பாக்கிஸ்தான் அவரை  விடுவித்தது  ஒரு இன்ப அதிர்ச்சிதான். நிர்ப்பந்தமோ அல்லது நல்லெண்ணமோ எந்தக் காரணமாக இருப்பினும் இம்ரானுக்கு நன்றி .
 -------------------------------

இது எனது  500 வது பதிவு.   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே  500 வது பதிவை எழுதிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் முடிந்தது.
இதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 

திங்கள், 11 பிப்ரவரி, 2019

வடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்?



நம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் வடிவேலு. வடிவேலுவை கற்பனைப் பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வந்தேன்.
நடிகர் சிவகுமார் முதல்முறை செல்போனை தட்டி விட்டபோது வடிவேலு இப்படி செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்று கற்பனையை தட்டி விட்டு ட்ராப்டில்  வைத்திருந்தேன். அதை வெளியிடுவதற்குள் அந்த செய்தி அவுட் ஆப் டேட் ஆகி விட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் விரைவிலேயே அந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனையே.

------------------------------------------------------------------------------------



     நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை சந்திக்கின்றனர் அவரது நண்பர்கள்
“அண்ணே! உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. எப்படி  இருக்கீங்க நீங்க இல்லாம எங்களை யாரும் கண்டுக்க மாட்டேங்ககறாங்க:

”என்னமோ இருக்கேண்டா போறபோக்கை பாத்த நம்மள மறந்துடுவாங்க போல இருக்கே!”

”சினிமாவுல நீங்க வரலன்னாலும் மக்கள் உங்கள மறக்கலேன்னே!இன்னிக்கும் மக்கள நீங்கதான் சிரிக்க வச்சுகிட்டிருக்கீங்க , உங்க வசனத்த சொல்லித்தான் மாம்ஸ் போடறாங்களாம்.”

”அது மாம்ஸ் இல்லடா மீம்ஸ்டா!. கழுத விடு எப்படியோ நம்மை ஞாபகம் வச்சுக்கிட்டிருந்தா சரி”

”இப்படியே விடக்கூடாதுண்ணே. பெரிய ஆளுங்கள்ளாம் அடிக்கடி சொட்டர்ல  ஸ்வீட் போடாறங்க நீங்களும் அடிக்கடி போடனும்ணே

”என்னடா சொல்லறீங்க .சொட்டர்ல  ஸ்வீட் போடறாங்களா? ” 
 அவங்களுக்கெல்லாம் வருமானத்துக்கு வழி இல்லாம போயிடுச்சா இது என்னடா கஷ்ட காலம்”

”ஐயோ இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கீங்களேன்னே அதாண்ணே  இண்டர் நெட்ல போடறாங்களே  செல்போன்ல கூட பாக்கறாங்களே?”

 “அடேய் அது  சொட்டர் இல்லடா டுவிட்டர் அதுல கருத்து சொன்னா அதுக்கு பேரு டுவீட் .அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது”
”அட! இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. நீங்க சொல்லாத கருத்தா. சும்மா அப்பப்ப அடிச்சு விடுங்கண்ணே  . ஒல்டு பேமஸ் ஆயிடுவீங்க.

”முடியலடா....அது ஓல்டு பேமஸ் இல்லடா வோர்ல்ட் பேமஸ்
ஏற்கனவே வாயால கெட்டது போதும். அதுல எதயாவது சொல்லி பிரச்சனையில மாட்டிக்க சொல்றியே  நமக்கு எதுக்குடா வம்பு.”

”அட போங்கண்ணேஉங்கள வச்சு நாங்களும்  பேமஸ் ஆகலாம்னு பாத்தா......”
பேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் வர

அண்ணே உங்களை தேடி யாரோ வந்துகிட்டிருக்காங்க.

”வடிவேலு சார்! எப்படி இருக்கீங்க? . நாங்க புதுசா பெரிய துணிக்கடை திறக்கப் போறோம். எங்க குடும்பமே உங்க ரசிகங்க. அதனால கடையை நீங்கதான் திறந்து வைக்கணும்.எங்களுக்கும் விளம்பரமா இருக்கும்.

‘அதெல்லாம் முடியாதுங்க இப்ப நான் வெளிய வர்றதில்ல. நாலு பேர் நாலு கேள்விய கேட்பான். நீங்க யாருன்னுகூட கேப்பான். கடைய திறக்கறது விழாவுக்கு போறதுன்னு ஒரு வேற ஒருத்தர் இருக்காரே அவர கூப்பிடலாமே”

“அவரதான் கூப்பிடலாம்னு நினச்சோம்.ஆனா அவரு   ரொம்ப கோவக்காரரா இருக்காராம் அதுவும் இல்லாம மணிக்கணக்கா பேசுவாராம். அதனால உங்கள கூப்பிடறோம். அதுவும் இல்லாம   நீங்க ரொம்ப நல்லவரு. எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கறோம் நீங்க வந்தா நல்லா இருக்கும்”

வடிவேலு யோசிக்க

நண்பர்கள் ”ஒத்துக்கங்கண்ணே. பணம் தரேன்னு சொல்றாரே நமக்கும் செலவுக்கு ஆகும்.
”எனக்குன்னு சொல்லு. உங்கள ஏண்டா சேத்துக்கறீங்க”.
“எந்த பங்கஷனுக்கு போனாலும் நாலுபேரோட போனாத்தானே பந்தாவா இருக்கும். “

வந்தவரைப் பார்த்து ”சரி உங்களுக்காக ஒத்துக்கறேன்.  என்னைக்குனு சொல்லுங்க நாங்க எல்லாரும் வருவோம் . வண்டி அனுப்புங்க.”

கடைக்காரர் ”ரொம்ப நன்றி சார் பக்காவா ஏற்பாடு பண்ணிடறேன். ஒரே ஒரு ரிக்வொஸ்ட். யாரும் ஃப்ங்ஷன்ல யாரும் செல்ஃபி எடுக்காம பாத்துக்கறோம் அப்படி எதிர்பாராவிதம யாராவது எடுத்தா கண்டுக்கக்கூடாது”
“சே!சே! செல்ஃபி1 குல்ஃபி1 எத வேணாலும் எடுத்துங்க. எனக்கு ஆட்சேபணை இல்ல’
அவர் கிளம்பி சென்றார்.

”நண்பர்களைப் பார்த்து கூட வந்து மானத்த வாங்கக் கூடாது. டீசண்டா நடந்துக்கணும்.  என்ன மாதிரி நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும் ஒகே”

   ஃபங்ஷன் அன்றூ கடை ஓனர் கார் அனுப்ப வடிவேலுவும் அவர் நண்பர்களும் கடை திறப்பு விழாவுக்கு புறப்பட்டனர். கடை வாசலில் கார் நின்றது. விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் ஏராளமாக வந்திருந்தது.
    கார் நிற்கும் இடத்திலிருந்து கடை வாசல் வரை சிவப்புக் கம்பளம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.
கடை முதலாளி கார் கதவை திறந்து வணக்கம் சொல்லி வரவேற்க. வடிவேலுவும் அவர் நண்பர்களும் இறங்கினர்.:
“எல்லாரும் வழி விடுங்க .வடிவேலு சார் வந்திருக்கார் ” என்று கூற
அனைவரும் வடிவேலுவைப் பார்த்ததும் சந்தோஷமாக குரல் கொடுக்க  கம்பீரமாக நடந்து சென்றார் வடிவேலு

திடீரென்று வடிவேலு  பின்னாலிருந்து அழகான ஒரு பெண் செல்போனுடன் ஒடி வந்து செல்ஃபி எடுக்க மூயற்சி செய்தார்.

”அண்ணே! அண்ணே! ஒரு பொண்ணு செல்பி எடுக்க வருதுண்ணே!.”

”வரட்டும்டா. எத்தனை நாள்தான் உங்களோடவேசெல்பி எடுத்துக்கறது”.

அந்தப் பெண் வடிவேலுக்கு அருகில் வந்து செல்போனை இப்படியும் அப்படியும் அட்ஜஸ் செய்து செல்பி எடுக்க தயாராக இருக்க .

“அண்ணே! சும்மா கம்பீரமா   பாருங்கண்ணே!” என்று ஒருவன் சொல்ல

செல்ஃபோனை உற்றுப் பார்த்த  வடிவேலுவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை தெரியவில்லை  திடீரென்று  பெண்ணின் கையில் இருந்த செல்போனை  தட்டி விட்டு வேகமாக திரும்பி கடகட வென ஒடி காரில் ஏறிக்கொண்டார்.

    ஐய்யய்யோ! வடிவேலு கோபித்துக் கொண்டாரே என்று அனைவரும் ஓடிவர,

”வடிவேலு சார்! மன்னிச்சுக்கோங்க .கோவப்படாம தயவு செஞ்சு கடைய திறக்க வாங்க.  இனிமே யாரும் யாரும் செல்பி எடுக்க மாட்டாங்க அந்தப் பெண்ணை  அனுப்பிட்டேன்.என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வடிவேலு வெளியே வந்தார்.

   கடையை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க என்று சொல்லிவிட்டு நணபர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். 

அனவரும் வடிவேலு இப்படி நடந்து கொண்டது ஏன் என ஆச்சர்யம் அடைந்தனர். 
செல்ஃபி எடுத்தா தட்டி விடமாட்டேன்னுதான்னுதானே சொன்னார் இப்ப ஏன் இப்படி செஞ்சார்  என்று காரணம் தெரியாமல் விழித்தார் கடை ஓனர்.

அவர மாதிரியே இவரும் இப்படி பண்ணிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர் வடிவேலுவின் நண்பர்கள்
வழியில்
“அண்ணே என்ன இருந்தாலும் நீங்க பண்னது தப்புண்ணே. . குல்ஃபி மாதிரி இருக்கற பொம்பள புள்ள செல்ஃபி எடுக்க வந்ததை தட்டி விட்டுட்டீங்களேண்ணே. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணே எங்களுக்கு. நாளக்கு டிவில பேப்பர்ல பேஸ் புக்குல கிழி கிழின்னு கிழிக்கப் போறாங்க”

“ அடேய் அதுக்கு காரணம் இருக்குடா”

“காரணம் என்னவா இருந்தாலும் தப்பு தப்புதாண்ணே!”

 ”செல்போனை தட்டிவிடலன்னா எனக்கு அசிங்கமாப் போயிருக்கும்டா.”
  நாளைக்கு பேஸ்புக்கு டுவிட்டர் வாட்சப்புன்னு நாறிப் போயிருக்கும்டா?

”என்னண்ணே சொல்றீங்க”

“ஆமாண்டா . அந்தப் பொண்ணு செல்பி எடுக்க வந்ததா? நானும் போனா போவுது எடுக்கட்டும்னு விட்டுட்டேன். அந்த பொண்ணூ செல் போன இப்படி அப்படி அட்ஜஸ் செஞ்சி  எங்க ரெண்டுபேர் உருவமும் ஃபுல்லா தெரிஞ்சது அப்பதாண்டா கவனிச்சேன். நான் பேண்ட் ஜிப் போடாம இருந்தது தெரிஞசது. நல்ல கேமராபோன் போல இருக்கு மூஞ்சி சரியா தெரியலன்னாலும் ஜிப் போடாதது மட்டும்  பளிச்சுன்னு தெரியுது.  அப்படியே அந்தப் பொண்ணோட  செல்பி எடுத்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு அந்தப் பொண்ணு போட்டாவை நெட்ல ஏத்தி விட்டா ஏன் மானம் என்னடா ஆவறது

இப்ப சொல்லுங்கடா! நான் செல்போனை தட்டிவிட்டது  தப்பா?”


-------------------------------------------------------------------------------------------------------------


அடுத்த பதிவு 500 வது பதிவு


என் கற்பனையில் வடிவேலு நகைச்சுவைகள்




  • புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
  • 2புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
  • வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
  • வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3
  • ஹோட்டலில் வடிவேலு
  • வடிவேலு வாங்கிய கழுதை
  • புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க 
  • 9. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை
  •     10. பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?