என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2015

பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?


எங்கோ போய் கொண்டிருந்த வடிவேலுவை மடக்கி விட்டனர் நிருபர்கள் 
"சார் எங்கே போறீங்க? கொஞ்சம் நில்லுங்க! 
"அடடா! இவனுங்க கிட்ட மாட்டிகிட்டமே. வாயைக் கிளறி நம்ம வாயாலேயே நமக்கு ஆப்பு வச்சுடுவாங்களே !
"எனக்கு பேச நேரம் இல்ல. நான் முக்கியமான வேலையா போய்க்கிட்டிருக்கேன். அப்புறம் வந்து பேட்டி கொடுக்கறேன் " என்று தப்பிக்க முயல, விடாமல் துரத்தி சூழ்ந்து கொண்டு "அப்படி என்ன முக்கியமான வேலை?
"சரி விட மாட்டீங்களே! நான் வெல்ல நிவாரணம் செய்யப் போறேன். என்ன போக விடுங்க/
"என்னது? வெல்ல நிவாரணமா? சார் நீங்க வெல்ல நிவாரணம்னா சொன்னீங்க?
"ஆமாம் வெல்ல நிவாரணம்தான் "
"வடிவேலு சார்! அது வெல்ல நிவாரணம் இல்ல வெள்ள நிவாரணம் .மதுரைக்காரரான உங்களுக்கு 'ள' வரவில்லையே?."

(மனதுக்குள்)ரொம்ப முக்கியம். நம்ம பேசறதுல தப்பு கண்டுபிடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு .விடக்க கூடாது. ஸ்டெடியா நிக்கணும்

"யோவ்! உங்களுக்கு அறிவு இருக்கா?  என்ன கேள்வி கேக்கறீங்க "

இவரும் நம்மை பார்த்து அறிவு இருக்கான்னு கேக்கறாரே என்று திகைத்து நின்றனர் நிருபர்கள்.
வடிவேலு தொடர்ந்தார் "நான் தமிலன்யா. நான் சொன்னது சரிதான் வெல்ல நிவாரணம்தான். இப்ப மழை வந்துச்சு இல்லை? . நம்ம ஊர்க்காரங்க மெட்ராஸ்ல வெல்ல மண்டி வச்சிருந்தாங்க மழையில அவங்க மண்டியில இருந்த வெல்லம் எல்லாம் மழையில கரைஞ்சு போச்சா? பாவம் இப்போ நஷ்டப்பட்டு நடுத் தெருவில நிக்கறாங்களா?. 
அவங்க எனக்கு போன் போட்டு அண்ணே எங்களுக்கு வெல்ல நிவாரணம் வேணும்னு கதறனானுங்க. பாவமா இருந்துச்சா? எல்லோருக்கும் மூட்ட மூட்டயா வெல்லம் வாங்கிக் கொடுத்து திரும்பவும் வியபாரம் செய்ய உதவப் போறேன். அதைத்தான் வெல்ல நிவாரணம்னு சொன்னேன் "
"ஆஹா பிரமாதம் வடிவேலு சார்."
 நல்ல காலம் எப்படியோ சமாளிச்சிட்டோம்
"அப்ப  நான் வரட்டா"
"ஒரே ஒரு முக்கியமான கேள்வி அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போயிடுங்க.?
அடாடா ஒண்ணாம் கிளாஸ்ல   அனா ஆவன்னா வாத்தியார் கேட்டப்பவே திருதிருன்னு முழிச்சமே இவனுங்க என்ன கேக்கப் போறாங்களோ தெரியலையே.
"சரி கேளுங்க?
" சார்! இந்த பீப் சாங் பத்தி சொல்லுங்களேன் .
 (மனதுக்குள்)  நல்ல காலம். நமக்கு தெரிஞ்ச கேள்வியாத்தான் இருக்கு, 

" ஓ! அத கேக்கறீங்களா. தில்லானா மோகனாம்பாள் படத்தில பத்மினி நலம்தானான்னு டான்ஸ் ஆடிகிட்டே கேக்க,   சிவாஜி பீபீனு  ஊதி நலம்தான்னு சொல்லுவாரே அந்தப் பாட்டுதானே. அருமையான பாட்டு சார் அது . அந்த பீபீ கேக்க எவ்வளோ சொகமா இருக்கும்.அந்த மாதிரி சாங் இப்ப எங்க வருது "
"சார் நாங்க அந்த சொல்லல . சி .."
"அட! உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா! நான் சின்ன வயசுல பூச (பூவரச) இலையில பீபீ செஞ்சு ஊதி அதுல  எம்ஜிஆர் சிவாஜி பாட்டு பாடினது. நீங்க என் சின்ன வயசு ஞாபத்தை கிளறி விட்டுட்டீங்க. அந்த பிளாஷ் பேக்க சொல்றேன் கேளுங்க "
கண்ணை மூடிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். 
"எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு தடவ இப்படித்தான் பூவரச மரத்துக்கு கீழ நின்னு  பீப்பி செஞ்சு ஊதிக்கிட்டிருந்தேன். அப்போ என் செல்லம் திவ்யா அங்க வந்து எனக்கும் பீபீ வேணும்னு அடம் பிடிச்சா. நானும் என்கிட்டே இருந்த பீபீய  குடுத்தேன்.அவ சேசே இது எச்சி . எனக்கு புதுசா வேணும்னு  சொன்னா . அப்ப நான் பக்கத்தில  இருந்த  பூவரச மரத்தில ஏறி ஒரு இலைய பறிச்சு அதை அழகா சுருட்டி சுருட்டி  பீபீ செஞ்சு கொடுத்தேன். அவ அதை ஆசையா வாங்கி வாயில வச்சு ஊதி பாத்தா. பீ பீ சத்தம் வரவே இல்ல வெறும் காத்துதான் வந்தது. சீ சீ இது நல்லாவே இல்ல. வேற செஞ்சு குடுன்னு கேட்டா , நான் திரும்பவும் மரம் ஏறி இல பறிச்சு பீபீ  செஞ்சு குடுத்தேன்.  அதுவும் சரியில்லன்னு தூக்கி எறிஞ்சுட்டா. இப்படி அவ கேக்க நான் மரத்தில இருக்க எல்லா இலையும் பறிச்சு பீப்பி செஞ்சு குடுத்துப் பாத்துட்டேன். மரத்துல இருந்த அத்தனை இலையும் காலியாகிடுச்சு.   வெறும் கிளை மட்டும்தான் இருந்து.  சரி வேற மரத்தில  பூவரச மரத்தில  இருந்து பிப்பீ செஞ்சு கொடுக்கலாம்னு நினைச்சேன். சுத்து  முத்தும் பாத்தேன் ஒரு மரம் கூட இல்லை.ஊஹூம். நானும் அந்த மரம் மாதிரி நின்னேன் சார். உனக்கு பீபீ செய்யவே தெரியலன்னு என்ன கெட்ட வர்த்தையில திட்டிட்டா சார் என் திவ்யா . அது யாரும் கேட்டுடக் கூடாதேங்கறதுக்காக நான் கையில் இருந்த பீப்பியை ஊதினேன். அதை யாரோ மறஞ்சிருந்து எங்களுக்கு  தெரியாம கேட்டுட்டு உங்க கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.

  அதுக்குள்ள மரத்துக்கு சொந்தக்காரன் வந்துட்டான். பிப்பீ செஞ்சு கொடுத்த எனக்கு பேப்பே காட்டிட்டு போயிட்டா சார் என் திவ்யா. 
மரத்துக்கு சொந்தகாரன் கோபத்துடன் "டேய்! இந்த மரத்தோட நிழல்லதானே மாடு கட்டுவேன். நிழல் கொடுக்கற மரத்தோட இலையெல்லாம் பறிச்சி இப்படி மொட்டையாக்கிட்டயேடான்னு சொல்லி என்ன அந்த மரத்திலேயே கட்டிப்போட்டுட்டு போய்ட்டான் சார். கட்டிப்போட்டுட்டு போய்ட்டான். அப்ப கீழே இருந்த பீபீயை எடுத்து நான் ஒரு சாங் பாடினேன், அது  எங்கயோ இருந்த திவ்யாவுக்கு தெரிஞ்சிதோ இல்லையோ . உங்களுக்கு தெரிஞ்சுடுச்சே சார். இத்தனை  நாளா நான் தூக்கி வச்சுக்கிட்டிருந்த பாரத்தை இன்னக்கு இறக்கி வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நிருபர் சார்! ரொம்ப நன்றி  என்று கண்களை திறக்க ..
நிருபர்கள் இடத்தை விட்டு எப்போதோ போய்விட்டிருந்தனர்.
ஏன் ஓடிட்டானுங்க? காரணம் தெரியாமல் விழித்தார் வடிவேலு.


*************************************************************************

குறிப்பு : மேற்கண்ட பதிவு முற்றிலும் கற்பனையே. சிரிப்பதற்காக மட்டுமே.

மேலும் சில வடிவேலு நகைச்சுவை பதிவுகளை படிக்க விருப்பமா?
என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 


20 கருத்துகள்:

 1. தமிழகமே பீப் சாங் பத்தி பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் பீபீ சாங் பற்றி பேசி வடிவேல் மூலமாக சிரிக்க வைத்துவிட்டீர்கள். அருமை நண்பரே!
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. வெல்ல நிவாரணம்......... நீங்க அருமை.....

  பதிலளிநீக்கு
 3. மூங்கில் காற்றில் வந்த பீப் பாட்டு...அடடா முரளி சார்...ஊதிட்டீங்க

  பதிலளிநீக்கு
 4. அருமை! வாய் விட்டு சிரித்தேன்! பதிவு நன்று!

  பதிலளிநீக்கு
 5. பீப்பீயை நன்றாக ஊதி இருக்கின்றீர்கள் நண்பரே
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  அண்ணா

  தமிழகம் எங்கும் பீப் பாடல் பற்றிய கருத்து விமர்ச்சிக்கும் போது.. வடிவேலை விட்டு சிரிக்க வைத்து விட்டீங்கள் அண்ணா அற்புதம்... த.ம6
  எனது பக்கம் வாருங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. அட்டகாசமான கற்பனை சார்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 8. நல்ல கற்பனையும் காமெடியும் தங்களுக்கே உரித்தான நடையில் சிறப்பாக உள்ளது

  பதிலளிநீக்கு
 9. திவ்யாவுக்கு பீப்பீ செய்த வடிவேலு கதை ரசிக்க வைத்தது சார்...

  பதிலளிநீக்கு
 10. முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. மாற்று சிந்தனை மிக அருமை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 12. ஹஹஹஹ மிக மிக அருமை ரசித்துச் சிரித்தோம் நண்பரே!

  பதிலளிநீக்கு
 13. திவ்யா இப்படியே பல பேரிடம் கேட்டதால், அந்த ஏரியாவில் உள்ள மரங்கள் எல்லாம் மொட்டை என்று கேள்விபட்டேனே ,உண்மையா :)

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895