என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பீப் சாங் ஜோக்ஸ்


  பீப் சாங் பற்றி எழுதாவிட்டால் வலைப்பதிவர் என்று எப்படி சொல்லிக் கொள்வது? ஆனால்  பீப் சாங்  புகழ்   இகழ் சிம்பு அனிருத் பற்றி அக்கு வேறு ஆணிவேராக அலசி விட்டனர். இத்தனை வாங்கிக் கட்டிக் கொண்டபின்னாவது திருந்துவார்களா? பார்ப்போம். 
இந்த விவாகரத்தில மக்கள் ரொம்ப டென்ஷன் ஆகிட்டதால கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கட்டுமேன்னு பீப் சாங் பற்றி வடிவேலுன்னு ஒரு நகைச்சுவை பதிவு போட்டேன்.  அதன் தொடர்ச்சியாக இந்த நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்து விட்டு பீப் பாடல் விவகாரத்தை மூட்டை கட்டிவிடலாம் என எண்ணுகிறேன். நான் சொன்னாலும் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது. அதான் நம்ம கேப்டன் வந்துட்டாரே! 
பீப் சாங் ஜோக்ஸ்
இந்த நகைச்சுவை முழுக்க முழுக்க கற்பனையே .சிரித்து விட்டு மறந்து விடவும்.

*************************************************************************

மேடையில நம்ம தலைவர புகழ்ந்து பேசினதாத்தானே சொல்றீங்க!அப்ப ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டாங்க

நான் புகழ்ந்து பேசறப்ப எவனோ பீப் சவுண்ட் குடுத்துட்டான். நான் திட்டினதா நினைச்சுட்டார் தலைவர்.


  
  உங்க வீட்டில இருந்து அடிக்கடி பீப் சத்தம்   
  கேக்குதே ஏன் ?

நான் கண்ட படி திட்டும்போது வெளிய கேக்காம இருக்கறதுக்காக எங்க வீட்டுக்காரர்தான் பீப் சவுண்ட் குடுப்பார்.






டைரக்டர் சார்! இந்த பாட்டு   பீப் சாங்குன்னு சொல்றீங்களே பிரச்சனை வராதா?

நிச்சயம் வராது பாட்டு முழுசும்  பீப் சவுண்டு குடுத்துடுங்க  லிரிக்சே கிடையாதே! 




அந்த பிரபல பாப் பாடகர் ஏன் கோபமா இருக்கார்?

மேடையில  அவரை பீப் பாடகர்னு அறிமுகப் படுத்திட்டாங்களாம் 







ஏன்யா நைட் ட்யூட்டி  போக மாட்டேங்கறே?


ரோந்து போகும்போது விசில் ஊதினா 
பீப் சாங்கா பாடறேன்னு அடிக்க வராங்களே 





*********************************************************************************

படித்து விட்டீர்களா?

பீப் சாங் பற்றி வடிவேலு 


வெள்ளி, 25 டிசம்பர், 2015

பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன?


எங்கோ போய் கொண்டிருந்த வடிவேலுவை மடக்கி விட்டனர் நிருபர்கள் 
"சார் எங்கே போறீங்க? கொஞ்சம் நில்லுங்க! 
"அடடா! இவனுங்க கிட்ட மாட்டிகிட்டமே. வாயைக் கிளறி நம்ம வாயாலேயே நமக்கு ஆப்பு வச்சுடுவாங்களே !
"எனக்கு பேச நேரம் இல்ல. நான் முக்கியமான வேலையா போய்க்கிட்டிருக்கேன். அப்புறம் வந்து பேட்டி கொடுக்கறேன் " என்று தப்பிக்க முயல, விடாமல் துரத்தி சூழ்ந்து கொண்டு "அப்படி என்ன முக்கியமான வேலை?
"சரி விட மாட்டீங்களே! நான் வெல்ல நிவாரணம் செய்யப் போறேன். என்ன போக விடுங்க/
"என்னது? வெல்ல நிவாரணமா? சார் நீங்க வெல்ல நிவாரணம்னா சொன்னீங்க?
"ஆமாம் வெல்ல நிவாரணம்தான் "
"வடிவேலு சார்! அது வெல்ல நிவாரணம் இல்ல வெள்ள நிவாரணம் .மதுரைக்காரரான உங்களுக்கு 'ள' வரவில்லையே?."

(மனதுக்குள்)ரொம்ப முக்கியம். நம்ம பேசறதுல தப்பு கண்டுபிடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு .விடக்க கூடாது. ஸ்டெடியா நிக்கணும்

"யோவ்! உங்களுக்கு அறிவு இருக்கா?  என்ன கேள்வி கேக்கறீங்க "

இவரும் நம்மை பார்த்து அறிவு இருக்கான்னு கேக்கறாரே என்று திகைத்து நின்றனர் நிருபர்கள்.
வடிவேலு தொடர்ந்தார் "நான் தமிலன்யா. நான் சொன்னது சரிதான் வெல்ல நிவாரணம்தான். இப்ப மழை வந்துச்சு இல்லை? . நம்ம ஊர்க்காரங்க மெட்ராஸ்ல வெல்ல மண்டி வச்சிருந்தாங்க மழையில அவங்க மண்டியில இருந்த வெல்லம் எல்லாம் மழையில கரைஞ்சு போச்சா? பாவம் இப்போ நஷ்டப்பட்டு நடுத் தெருவில நிக்கறாங்களா?. 
அவங்க எனக்கு போன் போட்டு அண்ணே எங்களுக்கு வெல்ல நிவாரணம் வேணும்னு கதறனானுங்க. பாவமா இருந்துச்சா? எல்லோருக்கும் மூட்ட மூட்டயா வெல்லம் வாங்கிக் கொடுத்து திரும்பவும் வியபாரம் செய்ய உதவப் போறேன். அதைத்தான் வெல்ல நிவாரணம்னு சொன்னேன் "
"ஆஹா பிரமாதம் வடிவேலு சார்."
 நல்ல காலம் எப்படியோ சமாளிச்சிட்டோம்
"அப்ப  நான் வரட்டா"
"ஒரே ஒரு முக்கியமான கேள்வி அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போயிடுங்க.?
அடாடா ஒண்ணாம் கிளாஸ்ல   அனா ஆவன்னா வாத்தியார் கேட்டப்பவே திருதிருன்னு முழிச்சமே இவனுங்க என்ன கேக்கப் போறாங்களோ தெரியலையே.
"சரி கேளுங்க?
" சார்! இந்த பீப் சாங் பத்தி சொல்லுங்களேன் .
 (மனதுக்குள்)  நல்ல காலம். நமக்கு தெரிஞ்ச கேள்வியாத்தான் இருக்கு, 

" ஓ! அத கேக்கறீங்களா. தில்லானா மோகனாம்பாள் படத்தில பத்மினி நலம்தானான்னு டான்ஸ் ஆடிகிட்டே கேக்க,   சிவாஜி பீபீனு  ஊதி நலம்தான்னு சொல்லுவாரே அந்தப் பாட்டுதானே. அருமையான பாட்டு சார் அது . அந்த பீபீ கேக்க எவ்வளோ சொகமா இருக்கும்.அந்த மாதிரி சாங் இப்ப எங்க வருது "
"சார் நாங்க அந்த சொல்லல . சி .."
"அட! உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா! நான் சின்ன வயசுல பூச (பூவரச) இலையில பீபீ செஞ்சு ஊதி அதுல  எம்ஜிஆர் சிவாஜி பாட்டு பாடினது. நீங்க என் சின்ன வயசு ஞாபத்தை கிளறி விட்டுட்டீங்க. அந்த பிளாஷ் பேக்க சொல்றேன் கேளுங்க "
கண்ணை மூடிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். 
"எனக்கு பத்து வயசு இருக்கும். ஒரு தடவ இப்படித்தான் பூவரச மரத்துக்கு கீழ நின்னு  பீப்பி செஞ்சு ஊதிக்கிட்டிருந்தேன். அப்போ என் செல்லம் திவ்யா அங்க வந்து எனக்கும் பீபீ வேணும்னு அடம் பிடிச்சா. நானும் என்கிட்டே இருந்த பீபீய  குடுத்தேன்.அவ சேசே இது எச்சி . எனக்கு புதுசா வேணும்னு  சொன்னா . அப்ப நான் பக்கத்தில  இருந்த  பூவரச மரத்தில ஏறி ஒரு இலைய பறிச்சு அதை அழகா சுருட்டி சுருட்டி  பீபீ செஞ்சு கொடுத்தேன். அவ அதை ஆசையா வாங்கி வாயில வச்சு ஊதி பாத்தா. பீ பீ சத்தம் வரவே இல்ல வெறும் காத்துதான் வந்தது. சீ சீ இது நல்லாவே இல்ல. வேற செஞ்சு குடுன்னு கேட்டா , நான் திரும்பவும் மரம் ஏறி இல பறிச்சு பீபீ  செஞ்சு குடுத்தேன்.  அதுவும் சரியில்லன்னு தூக்கி எறிஞ்சுட்டா. இப்படி அவ கேக்க நான் மரத்தில இருக்க எல்லா இலையும் பறிச்சு பீப்பி செஞ்சு குடுத்துப் பாத்துட்டேன். மரத்துல இருந்த அத்தனை இலையும் காலியாகிடுச்சு.   வெறும் கிளை மட்டும்தான் இருந்து.  சரி வேற மரத்தில  பூவரச மரத்தில  இருந்து பிப்பீ செஞ்சு கொடுக்கலாம்னு நினைச்சேன். சுத்து  முத்தும் பாத்தேன் ஒரு மரம் கூட இல்லை.ஊஹூம். நானும் அந்த மரம் மாதிரி நின்னேன் சார். உனக்கு பீபீ செய்யவே தெரியலன்னு என்ன கெட்ட வர்த்தையில திட்டிட்டா சார் என் திவ்யா . அது யாரும் கேட்டுடக் கூடாதேங்கறதுக்காக நான் கையில் இருந்த பீப்பியை ஊதினேன். அதை யாரோ மறஞ்சிருந்து எங்களுக்கு  தெரியாம கேட்டுட்டு உங்க கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு.

  அதுக்குள்ள மரத்துக்கு சொந்தக்காரன் வந்துட்டான். பிப்பீ செஞ்சு கொடுத்த எனக்கு பேப்பே காட்டிட்டு போயிட்டா சார் என் திவ்யா. 
மரத்துக்கு சொந்தகாரன் கோபத்துடன் "டேய்! இந்த மரத்தோட நிழல்லதானே மாடு கட்டுவேன். நிழல் கொடுக்கற மரத்தோட இலையெல்லாம் பறிச்சி இப்படி மொட்டையாக்கிட்டயேடான்னு சொல்லி என்ன அந்த மரத்திலேயே கட்டிப்போட்டுட்டு போய்ட்டான் சார். கட்டிப்போட்டுட்டு போய்ட்டான். அப்ப கீழே இருந்த பீபீயை எடுத்து நான் ஒரு சாங் பாடினேன், அது  எங்கயோ இருந்த திவ்யாவுக்கு தெரிஞ்சிதோ இல்லையோ . உங்களுக்கு தெரிஞ்சுடுச்சே சார். இத்தனை  நாளா நான் தூக்கி வச்சுக்கிட்டிருந்த பாரத்தை இன்னக்கு இறக்கி வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நிருபர் சார்! ரொம்ப நன்றி  என்று கண்களை திறக்க ..
நிருபர்கள் இடத்தை விட்டு எப்போதோ போய்விட்டிருந்தனர்.
ஏன் ஓடிட்டானுங்க? காரணம் தெரியாமல் விழித்தார் வடிவேலு.


*************************************************************************

குறிப்பு : மேற்கண்ட பதிவு முற்றிலும் கற்பனையே. சிரிப்பதற்காக மட்டுமே.

மேலும் சில வடிவேலு நகைச்சுவை பதிவுகளை படிக்க விருப்பமா?
என் கற்பனையில் வடிவேலு எப்படின்னு பாருங்க 


சனி, 12 டிசம்பர், 2015

மழை விடுமுறையால் மாணவர் படிப்பு பாழாய்ப் போனதா?


மழை காரணமாக பள்ளிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு விடுமுறை தேவையா? மாணவர் படிப்பு பாழாகிறதே. அரையாண்டு தேர்வுகள் தள்ளிப் போகிறதே . இழந்த பாடத்தை ஈடுகட்டுவது எப்படி என்று கவலைப் படத் தொடங்கி விட்டனர் சிலர்  இத்தனை நாட்கள் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர் பலர் விடுமுறை என்றால் மாணவர்களுக்கு  மகிழ்ச்சிதானே (சில ஆசிரியர்களுக்கும்தான்)   குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றது போன்ற உணர்வை காண முடிந்தது. 
அது கிடக்கட்டும்! விடுமுறையால்  படிப்பு பாதிப்பா? இதோ  இந்த மாணவன் சொல்வதைக் கேட்போம் 

ஒரு மாணவனின் குரல்

                                                     மழை விடுமுறை
                                                     மாணவர்கள் படிப்பு பாதிப்பாம்!
                                                     புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
                                                     மழை கற்றுக் கொடுக்காததையா
                                                     ஆசிரியர் கற்றுக் கொடுத்து விடப் போகிறார்?
.
                                                     ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
                                                     மிதத்தல் விதிகளையும்
                                                     அறிவியல் ஆசிரியரை விட
                                                     நன்றாகவே  சொல்லித் தந்தது மழை!
.
                                                     ஆற்றங்கரை, 
                                                     நாகரீகங்களை வளர்த்த
                                                     வரலாற்றை பாடத்தில் படித்தோம்.
                                                     நாகரீகம் 
                                                     ஆற்றங்கரைகளை   அழித்த வரலாறு
                                                     மழை தானே சொல்லியது

                                                     கொள்ளளவும்,  செ.மீ, .டிஎம் சி கணிதப் பாடத்தை
                                                     கச்சிதமாக கற்பித்துக் காட்டியது மழைதானே!

                                                     ஒண்டிக்கொள்ள இடமின்றி தவித்தபோது
                                                     நிவாரணம் செய்ய வந்தோரால் 
                                                     அரசியலும் கொஞ்சம் அறிய முடிந்ததே!

                                                     வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவிய போது 
                                                     புவியியல் பாடமும் புரிந்து போனது

                                                     எந்த பள்ளிப்பாடத்தினாலும் 
                                                     அறிய முடியாத 
                                                     நல்லமனம் படைத்தோரை 
                                                     மழைதான் அடையாளம் காட்டியது! .

                                                     இத்தனை பாடங்கள் போதாதா?
                                                     இன்னொரு முறை சொல்லாதீர்!  
                                                     மழை விடுமுறையால் 
                                                     படிப்பு பாழாய்ப் போனதென்று!

                                                          *************************


                                           ஒரு பாமரனின் மழை நாட்கள்
(மைதிலி கஸ்தூரி ரங்கனின் ஒரு பதிவுக்கு நான் இட்ட கருத்தின் சிறு நீட்சி)                                                                                                       மழை
                                                           முதல் நாள் மகிழ்ச்சி
                                                           இரண்டாம் நாள் இனிமை
                                                           மூன்றாம் நாள் முணுமுணுப்பு.
                                                           நான்காம் நாள் நடுக்கம்
                                                           ஐந்தாம் நாள் அச்சம்
                                                           ஆறாம் நாள் ( மழை நின்றாலும்)   அவதி
                                                           ஏழாம் நாள் (நிவாரணத்திற்காக) ஏக்கம்
                                                           எட்டாம் நாள் எதிர்பார்ப்பு
                                                           ஒன்பதாம் நாள் ஓய்வு
                                                           பத்தாம் நாள் .....
                                                           போங்கப்பா பொலம்பிகிட்டே  
                                                            இருக்க   முடியுமா?
                                                           பொழைப்பை பாக்க வேணாமா?

                                                ======================================

செவ்வாய், 8 டிசம்பர், 2015

எச்சரிக்கை: வெள்ளம் நுழைந்த வீட்டுக்குள் செல்லுமுன்பு



விழிப்புணர்வு பதிவு: முகநூல் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த எச்சரிக்கை குறிப்புகளை கொஞ்சம் சேர்த்து பகிர்ந்திருக்கிறேன்.
மழை வெள்ளம் நுழைந்து விட்டதால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இப்போது திரும்பும் சூழல் உள்ளது அவ்வாறு மீண்டும்  புகுவதற்கு முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்:

1 மெயின் சுவிச் வெளியில் இருந்தால் முதலில் அதனை ஆஃப் செய்து விடு ஒரு டார்ச்சுடன் உள்ளே நுழையவும்
2. எரி வாயு வாசனை ஏதும் வருகிறதா என்று கவனிக்கவும் 
3. கதவுகள், ஜன்னல்களைத் திறந்து முடிந்த அளவு இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதியுங்கள்.
4.  நுழைந்த உடனேயே மின்சாரம் இருந்தாலும் உடனடியாக விளக்குகளை / மின் விசிறியை இயக்க வேண்டாம். மின்கசிவு இருக்கக் கூடும். 
 5. முதலில் ஆண்கள் நுழைந்து ஓரளவு சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பெண்களை அழைக்கவும். அடுத்து முதியவர்கள்; கடைசியாகக்  குழந்தைகள்.
 6.  மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன்பாக வீடு முழுதும் ஒரு  முறை எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு எலக்ட்ரிஷியன் கொண்டு செய்வது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் போதிய பாதுகாப்புடன்  (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) மேற்கொள்ளவும்.
7. கையில் டெஸ்டர் வைத்துக் கொண்டு சுவர்களை சோதித்துக்   கொள்ளுங்கள் 
8 . அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனையில்   தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள்; அறிவுறுத்தல்களின்படி தடுப்பூசிகள் தேவையென்றால் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.
9. தண்ணீரை காய்ச்சியே பயன்படுத்துங்கள் 10. மளிகைப் பொருட்கள் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப்   பயன்படுத்துங்கள். இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப்  பயன்படுத்த வேண்டாம். ஃப்ரிஜ்ஜிலேயே விட்டு விட்டுப் போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுத்தான் .   போயிருக்கும்.
11.  முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால்,        காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால்,அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம். 
12.முடிந்தால் பொருட்கள் வீடுகள் வாகனங்கள் மூழ்கிய நிலையில்  புகைப்படம்  எடுத்து வைத்திருங்கள் 
13.குடும்ப அட்டை, காப்புறுதி ஆவணங்கள்,சான்றிதழ்கள், ஆதார் அட்டை,டிரைவிங் லைசென்ஸ் வீட்டு பத்திரங்கள்  போன்ற முக்கிய      ஆவணங்கள்  நல்ல நிலையில் உள்ளதை உறுதிப் படுத்திக்        கொள்ளுங்கள்  
14. நல்ல நிலையில் இருந்தாலும் எச்சரிகையுடன் சிறிது காய வைத்து 
     எடுத்து வையுங்கள் 
15.மேல் நிலைத் தொட்டிகளை சுத்தம்செய்த பின்னர் பயன்படுத்துங்கள் 
16. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். பதற்றத்தை தவிர்த்து விடுங்கள் 
17. உங்கள் உறவினர்கள் நண்பர்களை  தொடர்பு கொண்டு அவர்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் முடிந்தவரை செய்ய முயற்சியுங்கள் 
18. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இந்த அளவுக்குக் காப்பாற்றிய வர்களுக்கும் சிறு உதவி புரிந்தவர்ளாயினும், நலம் விசாரித்தவர்    களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் 
19. இந்தப் பேரிடரில் உங்களைக் கைவிடாதிருந்த துணிவும்,நம்பிக்கையும் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு இருக்க வேண்டும்  என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு இடரையும் சமாளித்து   வெல்லும் அறிவும், திறனும் உங்களுக்கு உண்டு என்று அறிந்து அமைதி கொள்ளுங்கள்.
20.  உங்களை விட பாதிக்கப் பட்டோர் ஆயிரக் கணக்கானோர் உள்ளனர் முடிந்தால் அவர்களுக்கு இயன்ற அளவுக்கு எந்த வகையிலேனும் உதவுங்கள். 

சேதமுற்ற மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான இலவச ஆலோசனைகளும் உதவிகளும் செய்ய

 சட்ட பஞ்சாயத்து என்றஅமைப்பு செயல்படுகிறது. தேவைப் படின் அவர்கள்  உதவியை நாடலாம் .

தொடர்பு எண் ; 7667100100
முகநூல் முகவரி: https://www.facebook.com/sattapanchayath



#myDIV { background-color:lightblue; transform:translateX(50px); }