நடிகை புஷ்பாஸ்ரீ கையெழுத்தில் "உங்கள் சித்திரவதை தாங்க முடிய வில்லை என்னை விட்டு விடுங்கள்" என்ற துண்டு சீட்டை நடிகை வீட்டு வேலைக்காரி இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தாள்.
நான்கு நாட்களாக புஷ்பாம்மாவைக் காணவில்லை என்றும் தெரிவித்தாள்.
" வீட்டில யாரெல்லாம் இருக்காங்க" விசாரித்தார் மோகன்
"புஷ்பாம்மாவும் அவங்க புருஷன் ரவிவர்மன் மட்டும்தான்."
"அவர் என்ன பண்றார்"
"உருப்படியா ஒண்ணும் இல்லீங்க . கத்தையா கத்தையா பேப்பர் வச்சுக்கிட்டு படம் வரஞ்சிகிட்டு இருப்பார்". .
அவன் கொடுமைக்காரனா?
"அப்படி ஒன்னும் இல்ல. ஐயா! அடிக்கடி ரெண்டும் பெரும் சண்டை போடற சத்தம் கேக்கும். அப்புறம் ஒண்ணாயிடுவாங்க .
"இப்ப வீட்டில இருக்காரா?"
"ரூமுக்குள்லையே இருக்கார் எவ்வளவோ கூப்பிட்டுப் பார்த்தும் வெளியே வர மாட்டேங்கறார்".
இன்ஸ்பெக்டர் புஷ்பாஸ்ரீ வீட்டுக்கு புறப்பட்டார்.
" ரவி வர்மன் கதவை திறங்க . போலீஸ் வந்திருக்கோம்" என்றார் .
ரவி வர்மன் கதவை திறந்தான் . அறை முழுவதும் அலங்கோலமாக கிடந்தது பேப்பர்கள் சிதறிக் கிடந்தன .
"உங்க மனைவி புஷ்பாஸ்ரீயை காணோம்னு இவங்க சொல்றாங்க . எங்க போனாங்க "
"தெரியல சார். எங்கயாவது ஷூட்டிங் போயிருப்பாங்க ! நானும் அவங்க எங்க போனாங்கன்னு தெரியாம கவலை பட்டுகிடிருக்கேன்."
உங்க கிட்ட சொல்லலையா ".
"எப்பவும் சொல்லிட்டுதான் போவாங்க .ஆனா இப்ப சொல்லல . எம் மேல என்ன கோவமோ தெரியல செல்போனையும் சுவிச் ஆஃப் பண்ணி வச்சுட்டாங்க. எப்படியும் வந்துடுவாங்க சார்".
"நீங்க அவங்களை சித்திர வதை பண்றதா எழுதி வச்சுருக்காங்களே ! உண்மைய சொல்லுங்க அவங்களை என்ன பண்ணீங்க"
" ஐயோ!அவங்க சம்மதம் இல்லாம என் விரல் கூட அவங்க மேல படாது சார்"
வீட்டை சுற்றி பார்த்தார் . இந்த மாதிரி ஆளுங்க கிறுக்குப் பயலுங்களா இருப்பாங்க. அப்பாவி மாதிரி இருந்தாலும் ஏதாவது ஒரு வேகத்தில கொலை பண்ணனாலும் பண்ணிடுவாங்க என்று நினைத்துக் கொண்டு எதற்கும் இவனை ஸ்டேஷனில் விசாரிக்கலாம் என்று அழைத்து வந்து விட்டார். லாக் அப்பில் ஒரு நாள் முழுக்க வைத்து விசாரித்தும் பயனில்லை. உளறிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தானே தவிர உருப்படியாக ஒன்றும் சொல்லவில்லை . என்ன செய்வது என்று தெரியாமல் .இன்ஸ்பெக்டர் யோசித்துக் கொண்டிருக்க வாசலில் கார்! புஷ்பாஸ்ரீ உள்ளே ஓடி வந்தாள்
இன்ஸ்பெக்டர் சார் அவரை விட்டுடுங்க அவர் அப்பாவி.
"என்னம்மா இப்படியா அவர் சித்திரவதை தாங்க முடியலன்னு எழுதி வச்சுட்டு சொல்லாம கொள்ளாமயா போறது ? தேவையில்லாம எங்கள டென்ஷன் ஆக்கிட்டீங்களே.பிரஸ்சுக்கு நியூஸ் போச்சுன்னா என்னாகும் ஏன் அப்படி எழுதி வச்சீங்க?
.
.
"சொல்லிட்டுதான் போனேன் அவர் குடிச்சி இருந்ததால் மறந்து இருப்பார்.. சார், அவருக்கு பிரபல ஒவியரா ஆகணும்னு ஆசை. பேர் என்னமோ ரவி வர்மா .ஆனா சுமாராத்தான் வரைவார். என்னை போஸ் கொடுக்கச் சொல்லி விதம் விதமா வரைவார். ஷூட்டிங் போகாத நேரத்தில இவரை காதலிச்ச பாவத்துக்காக இவர் வரையறதுக்கு மணிக்கணக்கா சகிச்சிக்கிட்டு போஸ் கொடுப்பேன்"
"அதுக்கு போய் சித்திரவதைன்னு எழுதி வச்சது ரொம்ப ஓவர் இல்லையா ?"
ஒரு பேப்பரை புஷ்பாஸ்ரீ எடுத்துக் காட்டி , "என்னப் பார்த்து வரஞ்ச ஓவியத்தை பாருங்க." என்றாள்
அதில் 20 வயது புஷ்பாஸ்ரீ 50 வயது தோற்றத்தில் இருந்தாள்.
"என் படத்தை இப்படி கன்றாவியா வரஞ்சுட்டு 'சித்திரம் பேசுதடி'ன்னு தலைப்பு வேற. எனக்கு எப்படி இருக்கும்? கோவத்தில என்னை "சித்திர"வதை செய்யாதீங்கன்னு பொயட்டிக்கா எழுதி வச்சேன்.. இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது " என்று வெட்கத்துடன் சொல்ல
தலையில் அடித்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர் மோகன்
**************************************************************
ஏதோ என்னாலான சித்திர வதை.