என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo

   
 வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர்.  அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.  அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
       
       திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும்  தயங்கியதில்லை. அவர் புகழுக்கும்  விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று

       #MeToo tag  மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால்  தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo.  தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.  

     இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை.  நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர்.  . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே  தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும்  #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.

     ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)

       இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை  வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது.  ..  மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால்,  ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே

        வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது.  பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
   #MeToo  வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை  பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள்  பழைய காதலை முகநூலில்  பகிர்ந்தார்கள்.  அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை  பகிர்ந்ததாகத் தெரியவில்லை.  முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.

 ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை   அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின்  மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?)  வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால்  அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும்  தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால்  தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும்  தைரியமாக சொல்கின்றனர்..

 #MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு.  பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப்  பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து  வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால்  தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு   10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.

     பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும்.  ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.  


செவ்வாய், 2 அக்டோபர், 2018

அதிசய வக்கீல் காந்தி

        
      
உலகத்திற்கே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி 

   வக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு  திருப்பு முனைகளைக் கொண்டது.  சொல்லுக்கும் செயலுக்கும்  ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.
பள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை.  ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

     பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். காந்தி லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது  போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர  வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி. 
        இந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு  மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி  தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு  பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த்தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும்   எங்களை விட அவரால்   தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர்.

   கோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார். 
    வேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன்   குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு  இது மகிழ்ச்சியைத் தந்தது. 
      பாரிஸ்டராக அல்ல. அப்துல்லா  கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி.   பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார். 
மிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது.  அப்துல்லா சேத் துக்கு எழுத்ப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித் தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி
     டர்பன் நீதி மன்றத்திற்கு  தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்து சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட். . தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது. 
     அங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு  முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல்  தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு  கிடைத்திருந்தாது
     இதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்கு   தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது.  காந்தியை வேண்டாத விருந்தாளி என வருணித்தன . பைத்தியக் காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது.

     வழக்கு தொடர்பாக  அப்துல்லா சேத்  தனக்கு பதிலாக காந்தியை  ப்ரிட்டோரியா செல்லக் கோரினார்.  வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை  கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -
   பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற  திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்    பிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார்.

அப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல  சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள் இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது  முடியும்  என்று சொல்வதற்கில்லை  வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத் அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த  ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெறும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர். 
    பிளவு பட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி.      தான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று  கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே!


---------------------


காந்தியைப் பற்றிய பிற பதிவுகள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அந்நியன் வருவானா? தண்டனை தருவானா?

                     


                        கணினி விசைப் பலகை-மேல் 
                             என் கண்ணீர் விழுந்திடுதே 
                         கவிதை எழுதுமுன்னே  -என் 
                             கைகள் நடுங்கிடுதே

                        நெஞ்சு  கொதிக்கிறதே-பாவிகளை
                             நிழலும் வெறுக்கிறதே 
                        பஞ்சு  மனங்கள் எல்லாம்-இன்று 
                            பதறித் துடிக்கிறதே!  

                         ஆசிஃபா மலர்மொட்டை

                                 அழித்த பாவிகளே! 
                         காஷ்மீர் கோவிலிலே ஒரு 
                                கொடுரம் நிகழ்த்திவிட்டீர் 

                           மதம்தான் காரணமா -பிடித்த

                                 மதம்தான் காரணமா ?
                            மனிதம் மறந்துவிட்டீர் -சொந்த 
                                    மதத்தை அவமதித்தீர்  

                         பச்சிளங் குழந்தையினை-படு 
                                 நாசம் செய்து விட்டீர்
                          இச்சை தீர்ப்பதற்கு - நீங்கள் 
                                 இழி செயல்  செய்தீரே

                            வாரித் தூற்றுதற்கு 
                                    வார்த்தைகள்  போதவில்லை 
                           காரித் துப்புதற்கு -  வாய்
                                   எச்சில் போதவில்லை                      


                        அகிம்சை விரும்பி;நான்-இன்று
                            இம்சை விரும்பினேன் 
                        அந்நியன்  தேடுகின்றேன்- ஒரு 
                            அதிரடி நாடுகின்றேன்.

                        அப்படிஒருவன் இருந்தால்-இந்த
                            அநியாயம் கண்டபின்னே
                        இப்படி  தண்டனைகள் -இன்று
                            தந்துதான் செல்வானோ!

                        கண்ணைப்  பிடுங்கிடிவான்- அவன் 
                            காட்சி பறித்திடுவான்
                        புண்ணாய் ஆக்கிடுவன் -அவனை 
                            பொத்தல் செய்து வைப்பான்

                        காமக்  கொடுஞ்செயல்கள் - பல
                            புரிந்த   பாவிகளைப்
                        சாமப் பொழுதுக்குள் --கொடும்
                            சாவறிய வைத்திடுவான்.

                        பாம்புகள் நடுவேதான் -அவனை 
                             படுக்கவே வைத்திடுவான் 
                        சாம்பல் ஆகும்வரை  -அவனை
                            எரித்துப் பொசுக்கிடுவான் 

                       நாக்கைப் பிடுங்கித்தான் -அவனை 
                            நடுங்க வைத்திருப்பான் 
                       காக்கையை அழைத்து -அதை
                            வீசி எறிந்திருப்பான்
  
                       உடலில்  ஆடையுருவி-அவனை 
                            உறுமீன் இரையாக 
                       கடலில் வீசிடுவான் -அவன்
                            கால்களை கட்டிவைத்து
  
                       காலில் செருப்பகற்றி -அவனை
                           கடும்பகல் வெயிலிலே
                       பாலையின் நடுவேதான்-தனியாய் 
                           பரிதவிக்க விட்டிடுவான் 

                       சுட்ட நீரைத்தான் -எடுத்து 
                           முகத்தில் வீசிடுவான் 
                       கட்டி நெருப்பெடுத்து-அவன் 
                           கையில் தைத்திடுவான்  

                       உறுப்பை  அறுத்திடுவான் -அவன் 
                            உடலை சிதைத்திடுவான்
                       வெறுப்பை  காட்டிடுவான் -இன்னும்
                            வேறுபல  செய்திடுவான்

 
                   அந்நியா  வருவாயா?  -கடுந்

                              தண்டனை தருவாயா  
                       புண்ணியம் உனக்கே தான்- உடனே  
                                புறப்பட்டு  வருவாயே!   

                    

  

ஞாயிறு, 25 மார்ச், 2018

சீதை ராமனை மன்னித்தாளா?

 

    எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் தன் வலைப் பக்கத்திற்காக    ஒரு சீதை ராமனை மன்னித்தாளா?  தலைப்பில்  கதை எழுதக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன். அக்கதை அவர் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.   இன்று ஸ்ரீராம நவமி என்பதாலும் கூடுதலாக ஒரு பதிவாக இருக்கட்டும்  என்ற வகையிலும் என் வலைப் பக்கத்தில்  வெளியிடுகிறேன். ஸ்ரீராம் மன்னிப்பாராக!


சீதை ராமனை மன்னித்தாளா ?

      பட்டாபிஷேகம் முடிந்தது.அயோத்தி ஆனந்தத்தில் மூழ்கிக் திளைத்துக் கொண்டிருந்தது. .முடிசூட்டிகொண்ட ஸ்ரீராமபிரானுக்கு  பக்கத்தில்  சீதா பிராட்டியும்  அயோத்தி அரியணையில்  அமர்ந்த காட்சியைக் கண்ட அயோத்தி மக்கள் பரவச நிலையில் கிடந்தனர்  குறையிலா அழகு கொண்ட இருவரும் எவ்வளவு பொருத்தம் என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். தேவர்களைப் போல கண்ணை இமைக்காத சக்தி இருக்கக் கூடாதா என்று ஏங்கினர்..'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் விண்ணை நிறைத்தது.  சீதாப்பிராட்டியின் சௌந்தர  ரூபம் விவாகத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. அட! அந்த ராவணன் மயங்கியதில் தவறு ஏதுமில்லை என்றே பேசிக் கொண்டனர்.
   ரிஷிகள், ஆன்றோர் சான்றோர் சக தேசத்து மன்னர்கள்  வந்து  வாழ்த்திக் கொண்டிருந்தனர்.  அனைவரும்  மனமின்றிக்  கலைந்து சென்றனர் 
       அடுத்த நாள்  காலை அரண்மனை  நந்தவனத்தில்   வாயு மைந்தன்  மண்டியிட்டுக் கண்மூடி  நேற்றைய பட்டாபிஷேகக் காட்சியை  கண்ணாரக் கண்டு கொண்டிருந்தான். அவனது திருவாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தது .எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா என்று மனம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது 

"ஆஞ்ச நேயா!" குரல் கேட்டு கண் திறந்தான் ஹனுமான்
எதிரே லட்சுமணன் நின்று கொண்டிருந்தான்.

" தாங்களா  என்னை அழைத்தீர்கள்?. தங்கள் திருமுகத்தில் ஏதோ குழப்பம் உள்ளதாக தெரிகிறதே. "

"ஆம் மாருதி. மனம் சஞ்சலமாக உள்ளது. என் சஞ்சலம் நீக்க இருவரால் மட்டுமே முடியும். ஒருவர்  சீதாப் பிராட்டியார். இன்னொருவர் நீ  சீதம்மையிடம் கேட்க என் தன்மானம் இடம் தரவில்லை .அப்படிக் கேட்பது எனது அண்ணாவுக்கு அவப் பெயராகி விடுமோ என்றும் அஞ்சினேன். அதனால் சொல்லின் செல்வனே! உன்னிடம் வந்தேன். "

    "என் நெஞ்சில் குடியிருக்கும் எம்பெருமானின் சாயலை ஒத்தவரே!தங்களின் ஐயத்தை நான் எப்படித் தீர்க்க முடியும். நான் சாதாரண ராமதாசன் தானே! என்னால் செய்ய முடிந்தது ஏதேனும் இருப்பின் ஆணையிட்டு சொல்லுங்கள் என் சிரம் கொடுத்தேனும் செய்ய சித்தமாய் இருக்கிறேன் "

       நேற்று பட்டாபிஷேகம் முடிந்ததும் நான்  மாறுவேடமிட்டு நகர்வலம் வந்தேன்.எங்கு நோக்கினும் மக்களின் பேச்சு சீதா,ராமரைப் பற்றியே இருந்தது.ராமபிரானின் மாண்பை  விட  என் அன்னைக்கு நிகரான  சீதாப் பிராட்டியின் பெருமை  பற்றியே இரவு  முழுவதும் பேசித்தீர்த்தனர்  அப்போது  ஒரு  பெண்மணி சொன்னதுதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது...."
     சற்று நிறுத்திய  லட்சுமணனை உற்று நோக்கிய ஆஞ்சநேயன், குறுக்கீடு ஏதும்  செய்யவில்லை.
       
    லட்சுமணன் தொடர்ந்தான்  "சொக்கத் தங்கமாகிய ஜானகியை தீக்குளிக்க வைத்து விட்டாரே தசரத மைந்தன்..எப்படிக் கோபம் கொள்ளாமல் சீதை ராமனை மன்னித்தாள் என்றார். ராமனின் செயல் அவ்வளவு எளிதில் மன்னிக்கக் கூடியதா? என்று அந்தப் பெண்மணி கேட்ட கேள்விதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது.

      யுத்தம் முடிந்து இராவணன் வீழ்ந்தான்.     அப்போது நீ, நான் எல்லோரும் அருகில் தானே  இருந்தோம். அசோக வனத்தில்  இருந்து  ஆவலோடு வந்த சீதா தேவியின் முகத்தைக் கூடப்பாராமல்   ராமன் சிந்திய  மொழிகள் எனக்கே கோபத்தை ஏற்படுத்தியது.  தன்னை நிருபிக்க என்னை அழைத்து விறகு கொண்டு வந்து தீமூட்ட ஆணையிட்டார் பிராட்டி. ஆனால்  அண்ணனோ கிஞ்சித்தும்  கருணை காட்டவில்லை. நான் மூட்டிய தீ அந்தக்  பதிவிரதையை ஒன்றும் செய்யவில்லை. ராமன் சீதையை ஏற்றுக் கொண்டு சொன்னது உனக்கு  இருக்கிறதா ?"
"நன்றாக நினைவுக்கிறது ஐயனே! நான் பரிட்சை வைத்தது எனக்காக அல்ல உன் புனிதத்தை உலகறியச் செய்யவே " என்றாரே கோதண்டராமன். சீதாப் பிராட்டியும் மகிழ்ச்சியோடு  ஒன்று  சேர்ந்ததை இப்பூவுலகமே அறியுமே!"

    "ஆம்!. ஆஞ்சநேயா! நானும் அண்ணன் மீது கொண்ட கோபத்தை மறந்து சமாதானம் ஆனேன்.ஆனால்  இப்போது அயோத்திப் பெண்மணி ஒருத்தி பேசியதைக் கேட்டதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பேரமைதி தவழும் பிரகாசமான  சீதாப் பிராட்டியின் முகம் அகத்தில் உள்ள கோபத்தை வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். உண்மையில் என்அண்ணன்  ராமனை சீதா தேவியார் மன்னித்திருப்பாரா? நீதான்கூற வேண்டும்"
   .
  "ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் அன்பிற்குரிய சகோதரரே! தாங்கள் அனைத்தும் உணர்ந்தவர். தங்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய அளவுக்கு என்னிடம் ஞானம் ஏதுமில்லை. ராமநாமம் தவிர வேறேதும் அறியாத  மூடன் நான். என்றாலும் சொல்கிறேன்.

   "இராவணன் கடத்திச் சென்ற சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கை சென்றேன்.அழகான அசோக வனத்தில் அவரைக் கண்டேன்.
. நானே தங்களை ராமனிடம் சேர்த்து விடுகிறேன். என் தோளில் அமருங்கள் என்றேன். அது என் ராமனுக்குப் பெருமை சேர்க்காது என்றார்
 அப்போது இராவணன் சொன்னதை என்னிடம் சொன்னார் ஜானகிதேவி 

    ."மாருதி! அந்த பாதகன் இராவணன் என்ன சொன்னான் தெரியுமா. அவன் மிகவும் நல்லவனாம். அவன் நல்லவனாக இருப்பதால்தால் என் சம்மதம் கேட்டு என்னை உரிமையாக்கிக் கொள்ள தன் நிலை இறங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறானாம். ராமன் வந்து உன்னை மீட்டுச் செல்ல வாய்ப்பே இல்லை . என்னைக் கொன்ற பிறகே அது நடக்கும். அகில உலகத்தில் என்னை வெற்றி கொள்ள யாராலும் இயலாது என்று உனக்குத் தெரியாதா .மூடப் பெண்ணே! அப்படியே அவன் என்னை வென்று உன்னை மீட்டாலும் உன்னை மனமார ஏற்றுக் கொள்வான் என்றா நினைக்கிறாய்? .அன்னியர் தேசத்தில் கண்காணாது இருந்த உன்னை ஏற்றுக் கொள்ளும் உயர் குணம் எந்த மானிடனுக்கும்  இருக்காது. நீ வேண்டுமானால் பார்!." என்று சொன்னதை என்னிடம் சொன்னார்.
 ஆனால்  ஜானகியைக் கண்ட சந்தோஷத்தில் இது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.ஸ்ரீதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியின் கணையாழியை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியில்   இச் செய்தியை நான் ஸ்ரீ ராமபிரானிடம் தெரிவிக்கவில்லை .

      யுத்தம்  முடிந்து ராமச்சந்திர மூர்த்தி   சீதையை சந்தித்தபோது நெருப்பு வாத்தைகளை வீச,   தாங்களோ தீ மூட்டினீர் . அப்போது சீதாப் பிராட்டியார் என்னை பார்த்தார் . அந்தப் பார்வை என்னைக் கலங்க வைத்தது. ராவணன் சொன்னதை உன் இஷ்ட தெய்வம்   உண்மையாக்கி விட்டாரே! இதை நீ சொல்லவில்லையா     என்பது போல் இருந்தது. என் நாயகனுக்கு நான் எப்படி அறிவுரை சொல்ல முடியும். ஆனால் தீங்கு ஏதும் விளையாது என்று மட்டும் நம்பினேன். அப்படியே நடந்தது.ஆயினும்  இப்போது தங்களுக்கு  ஏற்பட்ட சந்தேகம் எனக்கு அப்போதே ஏற்பட்டது 

   ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை சீதையிடம் கோரினேன் . " தாயே! தங்களின் பொருள் பொதிந்த பார்வை என்னை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராம பிரான் தங்களை சோதனைக்குள்ளாக்கியதை நானும் விரும்பவில்லை. மகா பதிவிரதையான தங்களின் கோபம் என் ஸ்ரீ ராமனை பாதித்துவிடக் கூடாது எனவே தாங்கள் என் இதய ராமனை மன்னித்தீரா என்பதை தெளிவிக்க வேண்டுகிறேன்" .

  அப்போது அவர் கூறினார்  "எல்லோரையும் மன்னிக்கும் தயாளகுணம் கொண்ட அவதார புருஷன் அல்லவா என் ஸ்ரீராமன். தன்னை வனவாசம் செய்யும் சூழ்நிலையை உருவக்கிய தசரதனை  மன்னித்தவர் அவர். பரதனுக்கு முடி சூட்ட விரும்பி ராமனைக்காட்டுக்கு அனுப்ப தசரதனை நிர்பந்தித்தத கைகேயியும் மன்னிக்கத் தயங்கவில்லை என் ராமன். அவளுக்கு துர்போதனை செய்த மந்தரையையும் சங்கடமின்றி  க்ஷமித்தவன் கோசல ராமன். அகலிகைக்கு  சாப விமோசனம்  தந்தவன் என் ராமன் . அவரது  தயாள குணமும் கருணையும் அன்பும்  பூலோகப் பிரசித்தி பெற்றவைதானே! எனக்கு பாதுப்பாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தை கொண்டு இவ்விடம் விட்டு செல்லலாகாது   என்று ஆணையை, என் நிந்தனையை பொறுக்காது வேறு வழியின்றி மீறி    என்னைத்   தனியாக விட்டுச் சென்ற லட்சுமணனையும் ராமன் மன்னித்தார்.  ஆனால் என் பிராண நாதர்  மன்னிக்கப்படும்  சூழ்நிலை ஏற்கனவே ஒரு முறை  உருவாகி விட்டதே.!

"பிராட்டியே என்ன சொல்கிறீர்கள்?

  "மாவீரன் வாலியை மறைந்து  நின்று கொன்றார் என்று நீ தானே சொன்னாய்.  யுத்த தர்மத்திர்கு எதிராக ராமன் நடந்து கொண்டதால் வாலியின் மன்னிப்பு ஸ்ரீ ராமனுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இப்பொது என் கோபமும் வருத்தம் காரணமாக  இன்னொரு  பாவமும்   என்   ராமனை சூழ விடுவேனா? அது மட்டுமல்ல பகவான்
 ஸ்ரீராமனையே மன்னிக்கும் பேறு   கிட்டியது என்  பாக்கியம் அல்லவா? வேறு யாருக்கு இது வாய்க்கும்." என்று சீதாப் பிராட்டி சொன்னதை லட்சுமணனுக்கு கூறிய ஹனுமான் 

    "ஐயனே! ஐயம் வேண்டாம்! மேற்சொன்ன காரணங்களால்தால் "சீதை ராமனை மன்னித்தாள்"  என அமைதி கொள்வீர்!. 

  லட்சுமணன் சஞ்சலம் நீங்கி."அஞ்சனை மைந்தனே! நற்சொல் கூறினாய். என் தாய்க்கு நிகரான சீதா தேவியின் கோபம் அகத்துள் இருந்துவிடக் கூடாது என்றே அஞ்சினேன்.இப்போது தெளிந்தேன். ஜானகி தேவியாரின் நெஞ்சில் கோபம் இல்லை.  இனி ஸ்ரீராமனுக்கு அபவாதம் ஏற்படாது என நிம்மதி  கொள்வேன் " என்று உருகினான் 

"கருணா மூர்த்தியை தமையனாகக் கொண்டவனே! சீதாதேவி தாயார் ராமனை மன்னித்து விட்டார். ஆனால் ..."

"என்ன ஆனால்...." பதறினான் லட்சுமணன் 

"மன்னிப்பு கிடைக்க வேண்டியவர் இன்னொருவரும் உண்டு.""
"யார் அது? உனது சொல்லின் அர்த்தம் விளங்க வில்லையே. யார் அந்த அபாக்கிய சாலி? யார்,  யாரால் மன்னிக்கப் படவேண்டும் "

"ஸ்ரீராமன் தண்டகாருண்யம்  செல்லும்போது தாங்களும்  சீதா தேவியும் பிடிவாதமாகக் கூட சென்றீர்கள்.அதற்கு தாங்கள் அனுமதி பெற்றீர்களா"

"ஏன் இந்த சந்தேகம்? என் தந்தையிடமும்  ஸ்ரீராமனிடமும் அனுமதி பெற்றுத்தானே சென்றேன்!

"யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவரிடம் பெற்றாயா? அவர் எண்ணத்தை அறிந்தாயா? நீங்கள் தண்டகாருண்யம் சென்றீர்கள் ஆனால் 14 ஆண்டுகாலம்  தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? அதற்கு தங்களுக்கு  உரிமை இருக்கிறதா?

"மாருதி நீ என்ன சொல்கிறாய்....."
"நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்கள்  சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு உங்களுக்கு  கிடைத்ததா என்று எண்ணிப் பார்த்தீர்களா?  தெரிந்து வருவீர் ஐயனே!"
 என்று சொல்லி விட்டு மீண்டும் கண்ணை மூடி ராமநாமம்  ஜபிக்கத் தொடங்க 

லட்சுமணன் திகைத்து நின்றான்.


********************************************************************************
புதன், 21 மார்ச், 2018

புதிர் விடை+சுவாரசிய நிகழ்வு

ஜான் வான் நியூமேன்
John von Neumann

முந்தைய பதவில் புதிர் ஒன்றைக் கூறி இருந்தேன்.
அந்தப் புதிரைக் காண க்ளிக் செய்க
வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!

அதன் சரியான விடையை முதலில் கணித்தவர் நண்பரும் பதிவருமான ஊமைக் கனவுகள்  வலைப்பூ எழுதும்  ஜோசப்  விஜூ அவர்கள் .தரமான இலக்கிய நுட்பம் வாய்ந்த பதிவுகளை எழுதும் மிக சிலரில் அவரும் ஒருவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களை கரைத்து குடித்தவராக இருக்கிறார். ஆங்கில ஆசிரியரான அவர் தமிழ்ப் புலமை வியப்பை ஏற்படுத்தக் கூடியது. கணிதத்திலும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் என்பது இந்தப் புதிரின் விடையைக் கணித்ததன் மூலம் தெரிய வருகிறது முதலில் விடையை மட்டும் சொன்னபோது உத்தேசமாக சொல்லி இருப்பார் என்றே நினைத்தேன். ஆனால் அடுத்த பின்னூட்டத்தில் விளக்கத்தையும் தந்து அசத்தி விட்டார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள். 
திண்டுக்கல் தனபாலனும் ,பெயரிலி ஒருவரும் விடையை கணித்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்

விடை : 
காதலனும் காதலியும் 20 கி.மீ சாலையில்  10  கி.மீ வேகத்தில் புறப்பட்டால் சரியாக ஒரு மணிநேரத்தில் 10 கி.மீ  இல் சந்திப்பார்ககள். புறா அதிக வேகம் என்பதால்  இவர்களை பலமுறை தொட்டுத் தொட்டு திரும்புகிறது., எப்படி இருப்பினும் ஒரு மணிநேரத்தில் சந்தித்து விடுவதால் புறாவும் ஒரு மணி நேரம் மட்டுமே பறக்கும். அதன் வேகமும்   மணிக்கு 15 கி.மீ .  எனவே  புறா பல முறை இப்படியும் அப்படியும்  பறந்தாலும்   மொத்த தூரம் 15 கிமீ .


ஒருவர்  இந்த புதிரைத்தான் ஜான் வான் நியூமேன் (John von Neumann) என்ற கணித அறிஞரிடம் ஒரு பார்ட்டியில்  கேட்டார். அவரும் சிறிது சிந்தித்து   சரியான விடையைக் கூறி விட்டார் .  கேட்டவர் ஏமாற்றமடைந்தார்  "நீங்கள்  அறிஞர் இதற்கான சுருக்கு வழியை அறிந்து சரியான விடையைக் கூறி விட்டீர்கள். பாருங்கள் பலரும் இதனை அறியாது . புறா பறக்கும் தூரத்தை முடிவிலாத் தொடரி (Infinite Series ) முறையில் முயற்சி செய்தனர் என்றனர்

வான் நியு மென்  ஆச்சர்யம் அடைந்து  என்னது! சுருக்கு வழி உள்ளதா? . நீங்கள் கூறிய Infinite Series   மூலம்தான் நான் விடையைக் கூறினேன் என்றார். அந்த சுருக்கு வழி என்ன என்று கேட்டாராம் ஜான் வான் நியூமேன் எப்படி?

ஆசிரியர்கள் கணிதப் பாடம் கற்றுக் கொடுக்கும்போது சுவாரசியம் ஏற்படுத்த வேண்டும். கொஞ்சம் சிந்திக்க தூண்ட வேண்டும்.எண்களைக் கொண்டு அச்சுறுத்தாமல் அறிஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை (கற்பனை கலந்து கூட) சொல்லி ஆர்வம் ஏற்படுத்தினால் சிந்திக்கும் திறன் வளரும்.  ஐ.ஐ டி , நீட் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்.
--------------------------------------------------------------------------------------

Value added Information-ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் -மற்றவர்கள் தப்பித்து சென்று விடலாம்
அது என்ன infinite series? கணித முறைப்படி புறா எத்தனை முறை பறக்க வேண்டும் என்று கணக்கிடுவது  கடினமானது ஒன்று.கிட்டத் தட்ட

முதல் தடவை  பறந்து சென்று  எதிர் பக்கம் சைக்கிளைத் தொடும் தூரத்தை d1 என்று வைத்துக் கொள்வோம்  .மொத்தம் 20 கிமீ
புறாவின் வேகம் மணிக்கு 15 கிமீ
சைக்கிள் வேகம் மணிக்கு  10 கிமீ

வேகம் x காலம் =தூரம்
15 x T1 = d1
10 x  T1 =20 - d1
---------------------   ( இரண்டு சமன்பாடுகளையும் கூட்டுக)
25 T1 =  20
   T1  = 20/25 =4/5

d1 = 15 x 4/5 =12 k.m

4/5 மணி நேரத்தில் சைக்கிள் செல்லும் தூரம் =10 x 4/5 = 8 km

சைக்கிள்கள் ஒன்றை ஒன்று நோக்கி  8 கிமீ  பயணம் செய்தால் மொத்தம் 20 கிமீ இல் 16 கடக்கப் பட்டிருக்கும் மிச்சம் உள்ள தூரம் 4 கிமீ  மட்டுமே .
2 வது சுற்றில்   புறா செல்லும் தூரம் d2 எனக் கொள்வோம்

இப்போது சமன் பாடுகளை இப்படி அமைக்கலாம்


15 x T2 = d2
10 x  T2 =4- d2
----------------------
25 T2 =  4
   T2  = 4/25 =4/25

d2 = 15 x 4/25 =12/5 k.m

இதே போல சமன்பாடுகளை பயன்படுத்தி
d3= 12/25
d4=12/125
d5 =12/625
d6 =12/3125
..............
...............
..............

புறா பறக்கும் மொத்த தூரம் = d1+d2+d3+d4+d5+d6 ...........(முடிவிலாத் தொடர்)
=12 + 12/5 + 12/25 + 12/125 + 12/625 + 12/3125
=12 +2.4 +0.48+ 0.096 +0 .0192 + 0.00384+0.000768
= 14.999808= தோராயாமாக 15
இந்த முறையில்தான் ஜான் வான் நியூமேன் பதில் அளித்திருக்கிறார். ஆனால் இதனை மிக விரைவாக மனதுக்குள்ளேயே செய்து முடித்ததுதான் அவரின் சிறப்பு 

  புறாவின் வேகப் படி  உண்மையில் இரண்டு சைக்க்கிள்களும் சந்திக்கும் அதே நேரத்தில் புறா சந்திக்க முடியாது எங்காவது  ஓரிடத்தில் வேகம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால்தான் இது சாத்தியம். ஏனெனில் இரண்டு சைக்கிள்களும் ஒரே வேகத்தில் செல்வதால் கடைசி நிலையில் ஒரு வினாடியில் இரண்டும் சந்திக்க இருப்பதாக வைத்துக் கொண்டால் அதே நேரத்தில் சந்தித்துவிடும் ஆனால் புறாவின் வேகம் 1 வினாடிக்கு சைக்கிளின் வேகத்தை விட அதிகம் . எனவே சந்திக்கும்போது அது கடந்த தூரம் 15 கிமீ  விட கணக்கிட முடியாத அளவில் மிகக்குறைவாக இருக்கும்.

-----------------

நற்செய்தி : அடுத்த பதிவு  புதிர்ப் பதிவு அல்ல! 
  

ஞாயிறு, 18 மார்ச், 2018

வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!


 ஹலோ! என்னை ஞாபகம் இருக்கா  நீ------------------------------ ண்ட இடைவெளிக்குப்  பிறகு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

அட நம்ம அரசியல்வாதிகள்தான்  உங்கள குழப்பணுமா என்ன?  நானும்  ஒரு புதிர் போட்டு உங்களை குழப்பலாம்னு நினைக்கிறேன்.

        ஒரு 20 கி.மீ  சாலையில ஒரு முனையில் காதலனும்  இன்னொரு முனையில் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க  சைக்கிள்ள ஒரே நேரத்தில கிளம்பறாங்க! ரெண்டு பெரும்  சரியா  10 கிமீ வேகத்திலதான்  சைக்கிள் ஒட்டாறாங்க.  காதலி வளக்கிற புறாவும் சைக்கிள் ஹான்டில் பார்ல கூடவே கிளம்ப ரெடியா இருக்கு. ரெடி ஸ்டார்ட்டுன்னு ரெண்டு பேரும் அவங்க அவங்க இருந்த இடத்தில இருந்து கிளம்ப புறாவால சும்மா ஒக்கார முடியல. அது 15  கி.மீ வேகத்தில பறக்க ஆரம்பிச்சு வேகமா போய் காதலன் சைக்கிள்ள ஒக்காந்துட்டு உடனே திரும்பி அதே வேகத்தில் காதலி சைக்கிள தொட்டுட்டு திரும்பவும் காதலனை நோக்கி அதே வேகத்தில பறக்குது,. இப்படியே ரெண்டு பேரும் மீட் பண்றவரை பறந்துகிட்டே இருக்கு புறா . ஒருவழியா மீட் பண்ணிடறாங்க .  புறா அப்பாடான்னு பெருமூச்சு விடுது. மீட் பண்ணதும்  அவங்க ரெண்டும் பேரும் பேசிக்கிட்டிருக்க  சும்மா இருக்க போரடிக்கவே  நாம எவ்வளோ தூரம் பறந்திருப்போம்னு புறா கணக்கு போட்டு பாக்குது.அதனால் கண்டு பிடிக்க  முடியல நீங்கள் சொல்லுங்களேன் புறா மொத்தமா எவ்வளவு தூரம் பறந்திருக்கும்?(கணக்கு புரியம்படி இல்லன்னா மட்டும் கேக்கணும்.மத்த குறுக்கு கேள்வில்லாம் கேக்கப் படாது )

இந்த கணக்கதான் ஒரு கணித மேதை கிட்ட ஒருத்தர் சொன்னாராம் ?
அந்தக் கணித மேதை  யாரு அவர் சரியா விடை  சொன்னாரான்னு அடுத்த பதிவில பாக்கலாம் 

விடை அறிய கிளிக் செய்க 

புதிருக்கான விடை