என்னை கவனிப்பவர்கள்

சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2018

சிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்

        

சென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும்  வாட்ஸ் ஆப் மூலம்  முந்தைய தினம் மாலை  தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி  பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது..  பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது.  அதற்குள் சிறிய  மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.
புறந்தள்ளிவிட்டு கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம், பெரியமேடு  புரசைவாக்கம்  ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித் திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.     


ஆச்சர்யம்! அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும் வரத் தொடங்கி விட்டன.  வாட்டர் பாட்டில்கள் அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள்  மெழுகு வர்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள் பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர்.


மிகக் குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர் கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை  வாங்கி அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி  ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த வேகம் அசாதரணமானது.  நிச்சயம் எண்ணிப் பார்க்காதது . எப்படி சாத்தியமாகப்  போகிறது என்று நினைத்தது சாத்தியமானது.
 இதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப் பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக  ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில் பெறப்பட்டுள்ளன
  
     இது தொடக்கக் கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

     இவை அனைத்தும்  கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும்? எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்

திங்கள், 16 ஜனவரி, 2012

நானும் போனேன்! புத்தகக் கண்காட்சி 2012



     சென்னையிலே இருந்துகொண்டு புத்தகக் கண்காட்சிக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? 14.01.2012  அன்று நானும் போயிருந்தேன். தென் சென்னை பகுதியிலிருந்து புத்தகக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இரு சக்கர வாகனம்,மின்சார ரயில்,பேருந்து என்று பயணம் செய்து கண்காட்சி நடக்கும் இடத்தை அடைய வேண்டி இருந்தது. 
     நல்ல கூட்டம் வந்திருந்தது. திறந்த வெளி அரங்க மேடையில் லேனா தமிழ்வாணனின் மகன் பேசிக் கொண்டிருந்தார்.தமிழ் வாணனின் பேத்தியை (இரண்டு வயது இருக்கும்) வேறு வாழ்த்துக்கூற அழைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். குழந்தை பேச மறுத்தால் பிறகு வேறு முயற்சி செய்யலாம் என்று கூறினார். நல்ல காலம் குழந்தை அழகாகப் பேசியது. (பார்வையாளர்கள் தப்பித்தார்கள்.). வாரிசுகளை முன்னிலைப் படுத்துவதில் எந்தப் பிரபலங்களும் விதிவலக்கல்ல.

   சற்று அருகில் சென்று பார்த்தபோது, அட! நம்ம T. ராஜேந்தர். பக்கத்தில் அவ்வை நடராஜன். அவர்களுடைய  பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தாலும் நேரமாகி விட்டதால் உள்ளே நுழைந்தேன். புத்தக வாசனை மூக்கைத் துளைத்தது. எந்தப் புத்தகங்களை வாங்குவது என்று தெரியாமல் பல கடைகளை பார்த்துக்கொண்டே சென்று ஒரு சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஒரு சுற்று வந்தபின் பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.
       கடை எண் 334 டிஸ்கவரி புக் பேலஸ் இல் நமது கேபிள் சங்கர் வாசகர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு நண்பர் கேபிள் ஐ சமீப காலமாக கலாய்த் துக்கொண்டு வரும் (http://spoofking.blogspot.com)சாம் ஆண்டெர்சன் பற்றி அவரிடமே கேட்டுக்கொண்டிருந்தார். நானும் என்னை பிளாக்கர் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்பினேன். என்றாலும் எனது தன்மானம் தடுத்தது. காரணம்;  Face Book இல் எனது நண்பராய் இருந்த கேபிள் என்னை  friend list  இல் இருந்து எடுத்து விட்டார்.          (நண்பர்களின்  எண்ணிக்கை  5000 த்திற்கும் மேல் போய் விட்டதால் யாரோ ஒருவர் நண்பர்களில் சிலரை தூக்கி விடுங்கள் என்று கூற நண்பர்கள் லிஸ்ட்டில் நான் காணாமல் போனேன்.)  
         அதை விடுவோம். மூன்று மணிநேரம் கடந்து விட்ட நிலையில் 
ஜவஹர்லால் நேரு எழுதிய GLIMPSES OF WORLD HISTORY, சேத்தன் பகத் எழுதிய ONE NIGHT @ THE CALL CENTER, கே.என். ஸ்ரீநிவாஸ் எழுதிய 'கண்டு  பிடித்தது  எப்படி?' விகடன் பிரசுரத்தின் 'அச்ச ரேகை தீர்வு ரேகை', கீதா பிரஸ்ஸின் 'அத்யாத்ம ராமாயணம்' உள்ளிட்ட புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
 (அப்பாடா! புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவைப் போட்டுவிட்டேன். )

***********************************************************************************************
இதையும் படிச்சி பாருங்க! கருத்து சொல்லுங்க 


நானும் நானும்  
தானே! உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே!
ஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை!
யாரோ பார்க்கிறார்கள்!