என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 10 மே, 2022

குமுதத்தில் கதை-வாத்தியாரை அடித்தவன்

  


வாத்தியாரை அடித்தவன்

(ஒரு பக்கக் கதை)

                                                                ……டி.என்.முரளிதரன்….

              பள்ளியின்  எச்.எம் ரூமில்   ஆசிரியர்கள் அனைவரும் குழுமி இருந்தனர். அதில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம்சார்நம்ம முத்துசாமி சாரை, அந்தப் பையன் அடிக்க வந்திருக்கான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர்னு இந்த வீடியோதான் வைரலா போயிக்கிட்டிருக்கு.. அவனை சஸ்பெண்ட் பண்ணனும் சார். ரெகார்ட் நோட் ஏன் எழுதலன்னு கேட்ட து தப்பாரிசல்ட் குறைஞ்சா மட்டும் நம்மளைக் கேள்வி மேல கேள்வி கேக்கறாங்க இல்ல. எவனோ ஒரு வாத்தியார் தப்பு செஞ்சா எல்லாருமே அப்படித்தான்னு பரப்பறாங்க இல்ல. இப்படியே விட்டா  சொல்லிக்கொடுக்கற  டீச்சருக்கு என்ன பாதுகாப்பு?” என்று கோபாவேசமாகப் பேச மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

    அப்போது  முத்துசாமி சாரும் உள்ளே வர,

    “நீங்க சொல்றதும் சரிதான். முத்துசாமி சார்! நீங்க ஒரு புகார் எழுதிக் கொடுங்க, சி.. கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். சிவியர் பனிஷ்மெண்ட் கொடுத்தாத்தான் ரவுடிப் பசங்க திருந்துவாங்கஎன்றார் எச்.எம்.
       “
வேணாம்  சார்! என்றார் முத்துசாமி

    ”ஏன்? சாதிப் பிரச்சனையாகிடும்னு பயப்படறீங்களா?”

    “இல்ல சார். நான் சின்ன வயசுல  வீட்டுப்பாடம் எழுதலன்னு வாத்தியார் என்ன நல்லா திட்டிட்டார். அதனால நான் அவர் மேல கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டேன். இருந்தாலும் அவர் என்னை மன்னிச்சி ஸ்கூல்ல சேத்துக்கிட்டார்.. ஒரளவுக்கு படிச்சு இன்னைக்கு  நல்ல நிலைமையில இருக்கேன். அவர் மன்னிக்கலன்னா ஸ்கூல விட்டு நின்னுருப்பேன். அந்த நிலை அந்தப் பையனுக்கு வராம இருக்கணும்னு  விரும்பறேன். இதோட விட்டுடலாம் சார்.”

என்ற முத்துசாமி சாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

செவ்வாய், 3 மே, 2022

இஸ்லாமியப் பண்டிகைகள் ஏன் குறிப்பிட்ட நாளில் வருவதில்லை?

 இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.

இஸ்லாமியப் பண்டிகைகள் ஓவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதிகளில் வருவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் . கடந்த வருடம் May 13 அன்று ரமலான் கொண்டாடப் பட்டது. இவ்வாண்டு மே 3.அன்று ரமலான். 1996 இல் ஜனவரியில் கூட ரம்லான் வந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை நிலவின் சுழற்சி அடிப்படையில் ஆண்டு கணக்கிடப் படுவதுதான். பூமி சூரியனை சுற்றும் உண்மையை முதலில் மனிதன் அறிந்திருக்கவில்லை. ஆனால் நிலவு பூமியை சுற்றி வருவது அதற்கு முன்னர் அறியப்பட்ட உண்மை. அதன் அடிப்படையில் இஸ்லாமிய காலண்டர் கணக்கிடப்படுகிறது. நிலவு பூமியை ஒரு முறை (360 டிகிரி) சுற்ற 27.3 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பூமியின் நகர்வு காரணமாக மீண்டும் அதே தோற்ற நிலையினை அடைய 29.5(Side real period) நாட்கள் ஆகின்றன. அதனால்தான் பவுர்ணமியோ அமாவாசையோ ஒவ்வொரு 29.5(Synodic Period) நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. இது லூனார் மந்த் என்று அழைக்கப் படுகிறது. ஆங்கிலக் காலண்டரை விட ஏறக்குறைய 11 நாட்கள் குறைவு. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்வதால். .எனவே ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியப் பண்டிகைகள் முந்தைய வருடத்தைவிட 10 அல்லது 11 நாட்கள் முன்னதாக வருவதைக் காணலாம்.
மனிதர்கள் நிலவின் சுழற்சியை தங்களுடன் பிணைத்துக் கொண்டனர். ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று வாழ்த்துவது உண்டு. 80வயது நிறைந்தவர்கள் மட்டுமே ஆயிரம் பிறையைக் கண்டிருக்க முடியும். பிறை என்பது மூன்றாம் பிறையைத்தான் குறிக்கும். பொதுவாக அமாவாசை(New Moon) தான் முதற்பிறை , அடுத்த நாள் இரண்டாம் பிறை இதுவும் கண்ணில் படாது. மூன்றாவது நாள்தான் பிறை தென்படும். 29.5 நாள் சுழற்சியால் சில நாட்களில் பிறை தென்படாது. அதாவது இருட்டுவதற்கு முன்பே மேற்கில் மறைந்துவிடும், அதனால்தான் பிறை உறுதியாக தென்படக் கூடிய நாளுக்கு அடுத்த நாள் ரமலான் கொண்டாடப் படுகிறது
அமாவாசைக்கு முந்தைய நாட்களை வளர்பிறை என்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களை தேய்பிறை என்பதும் நமக்குத் தெரிந்ததே பொதுவாக நல்ல காரியங்களுக்கான நாள் குறிப்பவர்கள் வளர்பிறையை தேர்ந்தெடுப்பார்கள். மூன்றாம் பிறையைப் பார்ப்பது சந்திர தரிசனம் என்று அழைக்கப் படுகிறது. இது அரை மணி நேரம்தான் கண்ணில் படும். மூன்றாம் பிறையைப்பார்த்தால் ஞாபக சக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். உண்மையில் நினைவாற்றல் இருந்தால்தான் மூன்றாம் பிறையை தவறவிடாமல் பார்க்க முடியும்
மூன்றாம் பிறையைப் பார்ப்பதற்கு அமாவாசைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாளை நினைவில் வைத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தவறவிட்டால் பார்க்க முடியாது. நான்காம் பிறை எந்த முயற்சியும் இன்றி சட்டென்று கண்ணுக்குத் தெரியும் . அப்போதுதான் நேற்று பார்க்க மறந்துவிட்டோம் என்பது ஞாபகம் வரும்.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்கக் கூடாது .பிறையோடு தொடர்பு உடையதால் நிச்சயம் அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டு

மீண்டும் இனிய ரமலான் வாழ்த்துகள்

-----டி.என்.முரளிதரன்