என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

23மார்ச்2015 முதல் ஆபாசத்திற்கு ஆப்பு கூகுள் முடிவு

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு முன்பைவிட அதிகரித்திருக்கிறது  தமிழில் பல்லாயிரக்கணக்கான இணைய தளங்கள் இணைய சேவைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தமிழில் தேடும் வசதிகளும் மேபடுத்தப் பட்டுள்ளன. இணையத் தமிழ் பயன்பாட்டை நல்ல விதமாக பயன்படுத்துபவர்களை விட ஆபாசம் பாலியல் தூண்டல் போன்றவற்றிற்கே அதிகம் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சமும் கூகுளில் தமிழில்தேடுதல் மேற்கொள்ளும்போது ஏற்படுகிறது.இந்த கூகுளில் தமிழில் தட்டச்சு செய்து தேடுதல் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். அம்மா அப்பா,தங்கை அத்தை என்று உறவுமுறையை தப்பித் தவறிக் கூட தட்டச்சு செய்துவிடக் கூடாது  அவ்வளவுதான் ஏராளமான தமிழின் ஆபாச தளங்களை பட்டியலிட்டுக் காட்டிவிடும். தமிழ் எழுத்தாளர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடும்.இவை கூகுளின் Content Policy க்கு எதிரானது என்றாலும் தடுக்க இயலவில்லை. இவற்றை தடை செய்ய அல்லது கட்டுக்குள் கொண்டு வர முடிவதில்லை. கூகுள் பல்வேறு மொழிகளில் வலைப்பதிவுகளை அனுமதிப்பதால் ஒவ்வொன்றின் உள்ளடக்கத்தையும் தணிக்கை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது . புகார் கொடுக்கப்பட்டால் வலைப்பதிவுகள் கூகுளால் நீக்கப் பட்டுவந்தன . எத்தனை முறை நீக்கினாலும் அதனை விட வேகமாக புதியவை முளைத்து விடுகின்றன. கூகுள் அவ்வப்போது எச்சரிக்கை செய்து  கொண்டுதான் இருக்கிறது.
    இரண்டு மூன்று  நாட்களுக்கு முன் ஒரு பதிவை போஸ்ட் செய்வதற்காக ப்ளாக்கரில் நுழையும் போது கூகுள் டேஷ் போர்டில் கீழ்க்கண்டவாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்ததை காணமுடிந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


இம்முறை 23 மார்ச் 2015 முதல்  ப்ளாக்கில் வெளிப்படையாக பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை  கட்டாயம் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளது கூகுள். ஆனால் நிர்வாணப் படங்கள்  கலையுணர்வு கல்வி,ஆவணப் படங்கள் , அறிவியல் விளக்கங்கள் போன்றவற்றிற்காக மட்டும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது. மார்ச் 23 க்குப் பிறகு என்ன நடக்கும்?. ஏற்கனவே பழைய பிளாக்கர் வலைப் பதிவுகளில் ஆபாசப் படங்களோ வீடியோக்களாக இருந்தால் உங்கள் வலைப் பதிவு ப்ரைவேட்டாக மாற்றப்படும். அதாவது இவ்வலைப் பதிவுகளை அதன் உரிமையாளர் மட்டுமே காணமுடியும்.மற்ற வலைப்பதிவுகளை காண்பது போல அனைவரும் காணமுடியாது . மார்ச் 23 க்கு முன்னதாக் ப்ளாக் தொடங்கியவர்கள் கூகுளின் இந்தக் கொள்கைக்கு மாறாக உள்ள ஆபாச படங்களையும் வீடியோக்களையும் நீங்களே நீக்கி விடுங்கள் அல்லது  உங்கள் வலைப்பதிவை  யாரும் பார்க்க முடியாத படி ப்ரைவேட்டாக மாற்றிவிடுங்கள் என்று எச்சரித்துள்ளது. உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே ஏற்கனவே கூகுள் விதிமுறைகள் வகுத்துள்ளன . அவற்றை அறிய விரும்பினால் இங்கே செல்லவும் நீங்கள் காணும் பிளாக்கர் வலைப்பூவின் உள்ளடக்கம் ஆபாசம், பாலியல் தூண்டல் வன்முறை முதலியவற்றை கொண்டதாக அமைந்து நீக்கவோ தடை செய்யவேண்டியது என்று நீங்கள் கருதினால்
https://support.google.com/blogger/answer/76314 என்ற இணைப்பிற்கு சென்று அங்கு ஆட்சேபத்துக்குரிய வலைப்பூவின் முகவரியை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூகுள் கூறியுள்ளது 


இவை ப்ளாக்கர் வலைப்பூகளுக்கு மட்டுமே பொருந்தும்.Wordpress போன்றவற்றிற்கு பொருந்தாது 

என்னதான் சட்டங்களும் விதிமுறைளும் வகுத்தாலும் ஓரளவிற்கே இவற்றை தடை செய்ய முடியும். தனி மனிதன் திருந்தினால் மட்டுமே இவை முழுமையாக சாத்தியப்படும்.
ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றாவது ஒருநாள் விடியாமலா போகும்?


****************************************************************  


புதன், 25 பிப்ரவரி, 2015

சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்


இம்முறை தங்கவேலு பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான செட்டில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல்ஸ் நடந்து  முடிந்து  சில  நாட்களாகி விட்டன. ஆனாலும் சர்ச்சைகள் இன்னும் முடிந்த பாடில்லை. ஸ்பூர்த்தி என்னும் குட்டிப் பெண் பட்டம் வென்றார். அடுத்த சில நாட்களில் யார் இந்நிகழ்ச்சி பற்றி பேசினாலும்அவருக்கு கொடுத்திருக்க வேண்டும்/இவருக்கு கொடுத்தது சரியில்லை.விஜய் டிவி ஏற்கனவே முடிவு செய்து விட்டது என்று விவாதம் செய்வதை பார்க்க முடிந்தது.
   யார் வென்றிருந்தாலும் சர்ச்சை இருக்கவே செய்யும். ஜெசிக்கா வென்றிருந்தால் ஈழத் தமிழர் என்பது சாதகமாகப் போய் விட்டது என்பர். ஹரிப்ரியாவுக்கு கிடைத்திருந்தால் அவர் ஒரு இசை வாரிசு.நடுவர்களின் சிபாரிசு காரணம் என்று சொல்லக் கூடும். ஸ்ரீஷாவுக்கு கிடைத்தால் wild card சுற்றில் தேர்ந்தெடுத்ததே பட்டம் கொடுப்பதற்காக என்றும்  சொல்ல முடியும். பரத் வெற்றி பெற்றிருந்தால் அவர் அப்படி ஒன்றும் சிறப்பாகப் பாடவில்லை  என்று சிலருக்கு தோன்றக் கூடும். அதே போல அனுஷ்யாவுக்கும் இன்னொரு  காரணம்  கூற  முடியும் .
   ஸ்பூர்த்தி வயதுக்கு மீறிய இசை அறிவு நிரம்பியவர் என்பது  அவர் முதல் ஆடிஷனில் பாடிய முதல் பாடலின்போதே தெரிந்து விட்டது. நடுவர்கள் தொடர்ந்து அவருக்கு சாக்லேட் ஷவர் அளித்து வந்தனர் . கடினமான ஸ்வர வரிசைகளை  நினைவில் வைத்துப் பாடியது  அறியாத மொழியின் பாடல்களை மனப்பாடமாக பாடியது அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியது.
   இந்த சீசன் தொடக்கத்தில் ஒரு தொய்வு இருந்தாலும் wild card சுற்றுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பை உருவாக்க முனைந்து அதில் வெற்றியும் பெற்று விட்டது விஜய் டிவி.
    இது போன்ற பிரம்மாண்டமான போட்டிகள் நடத்தப்படுவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள்,அரசு விதிமுறைகள் உள்ளதா என்பது தெரியவில்லை
 இறுதிப் போட்டி என்பது என்ன? இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அன்று பங்கேற்பாளர் வெளிக்காட்டும் திறமைதானே வெற்றியை நிர்ணயிக்க வேண்டும். அப்படி அல்லாமல் பைனல்சுக்கு முன்பாகவே ஓட்டளிப்பு தொடங்கி விட்டது.  நியாயமாக என்ன செய்யவேண்டும்? இறுதிப் போட்டியில் எல்லோரும் பாடி முடித்தபின்தான் வாக்களிப்பு தொடங்கவேண்டும். இறுதிப் போட்டியில் பாடப் படும் பாடலைக் கேட்டபின்பு அல்லவா யார் நன்றாக பாடுகிறார் என்று முடிவு செய்ய முடியும்? முந்தைய சுற்றுக்களில் வெளிப்படுத்திய திறமைகளை வைத்தே முதலிடம் வழங்கமுடியும் என்றால் இறுதிப் போட்டி  எதற்கு? வெறும் பரிசளிப்பு  விழா மட்டும் நடத்தினால் போதுமே  என்றெல்லாம் கேட்கக் கூடாது.  காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். வியாபாரம்,விளம்பரம் லாபம்.  விஜய் டிவி என்ன சேவை செய்யவா சேனல் நடத்துகிறது?
   வழக்கத்திற்கு மாறாக  இம்முறை ஆறு பேரை இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுத்தது  விஜய் டிவி.  ஸ்பூர்த்தி பரத்,ஸ்ரீஷா,ஹரிப் ப்ரியா, அனுஷா, ஜெசிக்கா ( இந்த ஜெசிகாதான் ஆரம்பத்தில் தமிழ் தெரியாது என்று சொன்னபோது சித்ராவை கோபப் பட வைத்தவர்) ஆகிய அறுவருமே அற்புதமாகப் பாடினர்.
   நான் அறிந்தவரை இறுதிப் போட்டியை விட Wild card சுற்று அருமையாக இருந்தது. அந்த சுற்றில் உண்மையான போட்டியைக் காணமுடிந்தது அனைவருமே மிக அற்புதமாகப் பாடினர். அசாத்திய திறமை ஒவ்வொருவரிடத்தும் இருந்தது.
   குறிப்பாக அனுஷ்யா பாடிய பறை பற்றிய பாடல் பார்த்த ஒவ்வொருவரையும் கலங்க அடித்தது. (சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  கே.வி.மகாதேவன்,எம்.எஸ்.வி. இளையாராஜா , ஏ.ஆர் ரகுமான் இந்த நான்கு இசை அமைப்பாளர்களின் பாடல்களுக்கு மட்டுமே அசாதரணமான வரவேற்பு கிடைக்கும். பாடுபவர்கள்  இவர்களுடைய பாடல்களையே தேர்ந்தெடுப்பார்கள்.அதையும் மீறி வித்யாசாகர் இசை அமைத்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை தேர்வு செய்த கொடுத்த அனுஷ்யாவின் தந்தைக்கு நன்றி சொல்லலாம். ) இந்த உணர்வு ஜெசிக்கா இறுதிப் போட்டியில் பாடியபோது கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.ஜெசிக்கா ஏற்கனவே ஒரு முறை இதே பாடலை பாடியுள்ளார்.   

   இரண்டாவது இடம் பெற்ற ஜெசிகா தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை தமிழ் நாட்டில் உள்ள ஒரு சேவை அமைப்புக்கும் ஈழத் தமிழர் நல நிதிக்கும் வழங்குவதாக அறிவித்தார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.
       பழைய எபிசோடுகளில் செந்தில்நாதன் என்ற மாற்றுத் திறனாளியை அவ்வப்போது பாட வைத்து விளம்பரம் தேடிக் கொண்டது நினைவிருக்கலாம். ஆனால் அந்த சிறுவனை விஜய டிவி மறந்தே விட்டது. ஆயினும் டி.எல்.மகராஜன் ஒருமுறை நினைவு கூர்ந்தார். பைனல்ஸில் செந்தில்நாதனை   பாடவைத்து ஏதேனும் நிதி வழங்கி இருக்கலாம்.

    எந்த டிவியாக இருந்தாலும் மக்களுக்கு  சேவை செய்யும் நோக்கமோ திறமைகளை வளர்க்கும் நோக்கமோ இருக்கப் போவதில்லை. பிறருடைய திறமை நமக்கு எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றே அவர்கள் எண்ணம் இருக்கும்.
   ஓட்டுப் போடவைத்து நம்மை முட்டாளாக்குகிறது  என்ற குற்றசாட்டு பரவலானது.  ஓட்டு எண்ணிக்கையில் ஒட்டுப் போட்டவர்களே நம்பகத் தன்மை கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஓட்டுகளைப் போட வாய்ப்பளிப்பது எப்படி நல்ல முறையாகும். நடுவர்களின் கருத்தைக் கொண்டு சூப்பர் சிங்கர் பட்டம் வழங்கலாம் ஆனால் அது வியாபாரத்தை பாதிக்குமே.  ஆனால் விஜய் டிவி இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. உண்மையில் இதுபோன்ற சர்ச்சைகள் விஜய் டிவிக்கு விளம்பரமாகவே அமைந்து விடுகிறது.
     மற்ற சானல்களை விட விஜய் டி.வி  தான் உருவாக்கும் கலைஞர்களை கைவிடுவதில்லை.சூப்பர் சிங்கரில் டாப் 20 இல் உள்ளவர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை.சமயம் கிடைக்குபோதேல்லாம் அவர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி விடுகிறது.

   பெரும்பாலும் தமிழ்த் திரை இசையில்  மலையாளிகளின்  ஆதிக்கமே அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. நம்மவர்களை விட அவர்களுக்கு இசை மீதான அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் என்றே கருதுகிறேன்.  தெலுங்கு அடுத்த நிலையில் இருப்பதாக படுகிறது. இம்முறை கன்னடத்துக் குட்டிப் பெண்ணுக்கு அடித்தது அதிர்ஷ்டம்  அடித்து விட்டது தமிழ் நாட்டில் சிறப்பாகப் பாடும் குழந்தைகள் இல்லையா? தமிழகத்தில் செல்லக் குரல்களுக்கான தேடலில் பெரும்பாலும் ஏன் தமிழ் அறியாதவர்களே முதலிடம் பெறுகிறார்கள்.? இது திட்டமிடப்பட்டே நடத்தப் படுகிறதா? என்ற கேள்வி நிறையப் பேர் மனதில் உண்டு. தமிழிலும் அற்புதமாகப் பாடும் குழந்தைகள் உண்டு என்பதில் ஐயமில்லை.
   தமிழ்நாட்டவரின் நடுத்தர வர்க்க மனோபாவம் திறமை உள்ளவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கிறேன். படிப்பா பாட்டா என்றால் படிப்பு என்றுதான் முடிவு எடுப்பார்கள் நம்மவர்கள். இசையை முழுநேர  தொழிலாகக் கொள்ள பெற்றோர் விரும்ப மாட்டார்கள். முறையான தொடர் பயிற்சிகளில் ஈடுபடுவோர்  மிகக் குறைவு. ரிஸ்க் எடுக்க விரும்புவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை தமிழ்நாட்டில் . இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பயிலும்  பள்ளிகள் இதற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். எந்தக் கடின முயற்சியும் பயிற்சியும் இன்றி  இயல்பான திறமையின் மூலம் மட்டுமே வைத்து பரிசு பெற விரும்புவார்கள்  திறமையை பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் வைத்துக் கொள் என்றுதான் வழி நடத்தப் படுவார்கள்.

     அவர்கள் நிலையிலும் தவறு இல்லை. ஒரு எழுத்தாளர் எப்படி முழு நேர எழுத்துத்  தொழிலை வைத்து பிழைப்பதில் சிக்கல்கள்  உள்ளனவோ அதைப் போலவே பாட்டின் மூலம் வாழ்க்கை நடத்துவதும் கடினமே. அதனால்தான் தமிழர்கள் ரசிப்பதோடு போதும் என்று நினைக்கிறார்கள் போலும்.   பாடுபவர்களில்  தமிழர்கள் அதிகம் இல்லையே என்ற குறை இருந்தாலும் இசை அமைப்பாளர்களில் தமிழர்களே பல ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம் 
   எனக்கு பல நாட்களாக ஒரு எண்ணம் உண்டு. டி.ராஜேந்தர் போன்றவர்களின் பாடல்கள் பாடப் படுவதில்லையே என்று. ஆனால்  ராஜேந்தர் ஒரு முறை  நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் . குழந்தைகள் அவரது  சூப்பர் ஹிட் பாடல்களை பாடினர். பாவம் அவரே தனது பாடல்களின் பெருமையை தானே சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார். நடுவர்கள் அவரது திறமையை அவ்வளவாக பாராட்டிப் பேசியதாக நினைவு இல்லை. அடுத்தடுத்த சீசன்களில் அதிகம் அறியப்படாத நல்ல பாடல்களை தந்த இசை அமைப்பாளர்களின் பாடலும் இடம் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.

     இந் நிகழ்ச்சியால் பலன் பெற்றவர்கள் என்று பார்த்தால் தற்போது அதிக வாய்ப்பின்றி இருக்கும் சீனியர் பாடகர்களே  என்று சொல்லலாம். வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று சொல்லப்படும் ஆனந்த் வைத்தியநாதனை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பு நான் அறிந்ததில்லை . பங்கேற்பாளர்களும் நடுவர்களும் அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  இந்நிகழ்ச்சி மூலம் அதிக பலன் பெற்றவர் அவர்தான் என்று என்று சொல்லலாம். ஒவ்வொருவர் பாடும்போதும் பாடுபவரின் குரல் தன்மைக்கு விளக்கம் அளிக்கிறார். நமக்கு ஒன்றும் புரிவதில்லை என்றாலும் அவர் குரல் பயிற்சிக்காக ஏதோ செய்கிறார்  என்பது மட்டும் தெரிகிறது. குழந்தைகள் ஆரம்பக் கட்டங்களில் பாடியதை விட  இறுதிக் கட்டங்களில்  நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர் முடிகிறது.
   வாய்ஸ் எக்ஸ்பர்ட் இந்த வார்த்தை விஜய் டிவியால் உருவாக்கப் பட்டது என்று நினைக்கிறேன். உண்மையில் இது போல குரல் வளப் பயிற்சி அளிப்பவர்கள் வேறு யாரேனும் உள்ளனாரா என்று கூகுளாரைக் கேட்க அவர் வைத்யநாதனை மட்டுமே காட்டுகிறார். (தேடுதலில் நமக்கு பயிற்சி போதவில்லையோ?)
   சினிமா பாடல்களில் இவ்வளவு  நுணுக்கங்கள் இருக்கிறதா என்பதை அறியவைத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றால் மிகையாகாது. மா.க.பா , பிரியங்கா , தொகுப்பாளர்களும் தங்கள் பங்குக்கு நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டினர்.
 என்றாலும் காமெடி என்ற பெயரில் மனோ போன்றவர்களின் கோமாளித் தனங்கள் தொடக்கத்தில் சுவாரசியமாக இருந்தாலும் போகப் போகப் எரிச்சலையே உண்டாக்கியது ( ஒரு முறை அவர் பெண்வேடம் போட்டுக் கொண்டு வந்தது படு கோமாளித்தனம்)
     அதே போல இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் உடைகள் விஷயத்தில்  கவனம் கொள்ள வேண்டும். பெற்றோர் நடுவர்களை  நகைச்சுவை என்ற பெயரில்  ஆடவைத்தல் தவிர்த்தால் நல்லது . இவை அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எனது ஆலோசனைகள்.
    அதை விட இன்னொரு ஆலோசனை  அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்க வேண்டுமெனில்  கொஞ்ச மாதங்களுக்காவது அதை தள்ளிப் போடவேண்டும் விஜய் டிவி.


*************************************************************************
  

திங்கள், 16 பிப்ரவரி, 2015

வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க


   உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி விட்டது .நேற்று இந்தியா பாக்கிஸ்தான் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.விராத் கோலி, சுரேஷ் ரைனாவின் அதிரடியில் ஸ்கோர் 300 ஐ எட்டியது என்றாலும்  320ஐ தாண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் சடசடவென்று 8 விக்கெட்  வீழ்ந்துவிட்டது .
பாகிஸ்தானின் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் வழக்கம் போல் சொதப்பினர். அனுபவமில்லா வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சாஹித் அஃப்ரிடி மிஸ்பா இருவரும் மட்டுமே எனக்கு தெரிந்த வீரர்களாக இருந்தனர். அஃப்ரிடி தாத்தா இன்னும் இரண்டு மூன்று உலகக் கோப்பைகள் ஆடுவார் போலிருக்கிறது . ஏழடி உயரம் உள்ள முகமது இர்பான் அசுர வேகத்தில் பந்து வீசினாலும் வாசிம் அக்ரம் போல இந்திய வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை , பீல்டிங்கில் இந்தியாவை விட பின் தங்கியே உள்ளனர்.
பவுலிங்கில் இந்தியா வீக் என்றாலும் அதிக ஸ்கோர் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி
அது கிடக்கட்டும். மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது லைவாக ஸ்கோர் அறிய இணையத்தில் ஏராளமான வழி முறைகள் உள்ளன. உங்கள் வலைப் பதிவிலேயே லைவாக ஸ்கோர் தெரிவிக்கும்  விட்ஜெட் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? .உங்கள் பதிவுகளை படிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள்  நடந்து  கொண்டிருக்கும் மேட்ச்சின் Ball by ball  லைவ் ஸ்கோர் அறிய இலவச விட்ஜெட்கள் கிடைக்கின்றன.
இணைக்கும் வழிமுறை யை கூறுகின்றேன். விரும்பினால் இணைத்துக் கொள்ளுங்கள் www.cricwaves.com என்ற இணைய தளம் விதம் விதமான விட்ஜெட்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை இணைக்கும் முறை  கீழே தந்திருக்கிறேன்
கீழ்க் கண்ட நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்
<script type="text/javascript"> app="www.cricwaves.com"; mo="f1_kzd"; nt="flash"; mats =""; tor =""; Width='302px'; Height='252px'; wi ="w"; co ="flash"; ad="1"; </script><script type="text/javascript" src="http://www.cricwaves.com/cricket/widgets/script/scoreWidgets.js"></script>
 1. உங்கள் வலைப்பூவின் பிளாக்கர் கணக்கில் நுழைந்து
Lay Out ஐ க்ளிக் செய்து   Add a Gadget சொடுக்கவும்

2. தொடர்ந்து படத்தில் உள்ளவாறு HTML/JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்


3.காப்பி செய்த நிரலை படத்தில் உள்ளபடி பேஸ்ட் செய்யவும்


4. சேவ் கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது  விட்ஜெட் வலது புறத்தில் உள்ளது போல் தோற்றமளிக்கும் நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அதில் உடனுக்குடன் தெரிவதைப் பார்க்கலாம்.
இதேபோல  உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிக் கணக்கையும் காட்டும் விட்ஜெட் உள்ளது வேண்டுமெனில் அதனையும் இணைத்துக் கொள்ளலாம்


*****************************************************************

நன்றி www.cricwaves.com

சனி, 14 பிப்ரவரி, 2015

காதலுக்கு கண் உண்டா? தீர்ப்பு சொல்லுங்கள் உருக்கமான காதல் கதைஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை 

காதலுக்கு கண் உண்டா

"நான் உன்னை காதலிக்கிறேன் "என்றான் அவன் 

அவள்"உனக்கு கண் உண்டா? மடையனே! எனக்கு கண் இல்லை" 

"  காதலுக்கு இல்லை. ஆமாம்  நீதான் என் காதல்"

"உளறாதே! இந்த உலகத்தில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக ஆண்களைக் கண்டாலே! சாரி எனக்கு கண்தான்  தெரியாதே நான் எப்படிக் காண முடியும் ஆண்களை நினைத்தாலே பிடிப்பதில்லை அனைவரும்   ஏமாற்றுக் காரர்கள். போய்விடு "

   "நான் அப்படிப் பட்டவன் அல்ல உன்னை உளப் பூர்வமாக காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உன்னை என் உள்ளங்கைகளில் தாங்குவேன். உன் நகங்களில் கூட அழுக்கு சேர விடமாட்டேன்.உன் தலை முடி உதிர்ந்தால் கூட என் இதயம் பலமாக அதிரும். என் உதிரம் கொதிக்கும்.என்னை நம்பு "

" நான் பணக்காரி என்பதால்தானே இந்த காதல் வசனம் பேசுகிறாய். கண் இல்லாவிட்டாலும் நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அழகும் எனக்கிருக்கும் ஏராளமான சொத்தும்தானே இந்தக் காதலை உருவாக்கி இருக்கிறது. அதனை அபகரித்துக் கொண்டு ஆட்டம் போடத்தானே இந்த காதல் நாடகம். சொத்தையும் அனுபவித்துக் கொள்ளலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்   எனக்கு என்ன தெரியவா போகிறது என்றல்லவா திட்டம் போடுகிறாய். தியாகி என்ற பட்டமும் கிடைக்கும் வசதிகளும் கிடைக்கும் அதுதானே உன் நோக்கம் "

    "ஏனிப்படி கோபத்துடன் பேசுகிறாய். உன் அழகான முகத்திற்கு கோபம் பொருந்தவில்லை .என் காதலைக் கொச்சைப் படுத்தாதே . உனக்காக என்ன செய்தால் என் காதலை நம்புவாய்" 
  
   "ஒன்றும் செய்ய வேண்டாம்.பாவம் நீ! பார்வை இல்லாதவளை திருமணம் செய்து என்ன சுகம் காணப் போகிறாய்.எனது சொத்து முழுமையும் செலவு செய்தாவது பார்வை பெற முயல்வேன். ஒருவேளை பார்வை கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன் வா ! அப்போது முடிவு சொல்கிறேன்.

"நான் உனக்காக காத்திருப்பேன். எனக்கு காலம் ஒரு பொருட்டல்ல. பார்வை கிடைக்கட்டும். அப்போது நான் உன்முன் வந்து நிற்கிறேன்"...

நாட்கள்


 அவள் மனதில் சமீப காலங்களில்  இப்படித் தோன்றுகிறது 
"ரொம்பவும் புண்படுத்தி  அனுப்பி விட்டோமோ அவன் இப்போதெல்லாம் வருவதில்லை. போலிருக்கிறதே! அவன் வந்தால் கூட ஒரு வாசமும் சேர்ந்தல்லவா வரும். அல்லது வந்தும் என்னை தொல்லை செய்ய  விரும்பாமல்  என்று வாய் திறக்காம் போய்விடுகிறானோ.எவ்வளோ பேர் போகிறார்கள் வருகிறார்கள் அவன் காலடி ஓசை என் காதுகளுக்கு நன்றாக தெரியுமே! நான்தான் அவனை விரட்டி விட்டேனே அவனை ஏன் எதிர் பார்க்க வேண்டும். இந்த பாழாய்ப் போன மனது . ஒருவேளை நானும் அவனை காதலிக்கிறேனோ?

     "சரி! போகட்டும் இன்னும் சில நாள்தானே! கண் பார்வைக்கான ஆபரேஷன் ஏற்பாடுகள் முடிந்துவிட்டது .கவலைப் படவேண்டாம் எப்படியாவது கண்பார்வை வர வைக்க வேண்டியது என் பொறுப்பு டாக்டர் ஒப்புக் கொண்டார் . நான் இந்த உலகத்தைபார்ப்பது உறுதி என்றல்லவா சொல்லி இருக்கிறார் .
............................ ...........

   "இதோ அனைத்தும் நல்ல படியாக முடிந்தது . என் கண்கள் திறக்கப் போகின்றன. இருட்டை மட்டுமே உணர்ந்திருந்த நான் வெளிச்சத்தை பார்க்கப் போகிறேன்.......... ஆ! பார்த்து  விட்டேன் உலகத்தை. இந்த மகிழ்ச்சியை யாரிடம் சொல்வது?அவனுக்கு சொல்லி அனுப்பலாமா? அவன் வருவானா?  நிச்சயம் வருவான் .  அவன் காதல் உண்மையாயின் வருவான்.....அவன் முகம் எப்படி இருக்கும்? என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானா? அள்ளியெடுத்து அணைத்துக் கொள்வானா?.....................

    அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக  சொன்னார்கள். வரச் சொன்னாள் "ஒரு வேளை அவனாக இருக்குமோ?" அவனாக இருக்வேண்டும் என்று ஆசைப் பட்டாள். 

     வந்தவன் பார்வையில்லாத ஒருவன். ஏமாற்றமடைந்தாள் . ஒருவேளை உதவிகேட்டு வந்திருப்பான் போலிருக்கிறது " என்று எண்ணியவாறே 

"யார் நீ " என்றாள்

    "என்னைத் தெரியவில்லையா! நீ மனதில் நினைத்தாய் அல்லவா நான் வந்து விட்டேன்.உன் காதலுக்காக தவம் கிடந்தவன் நான்தான் . பார்வை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்கிறேன் என்றாயே! அன்பே! இப்போதாவது உன் சம்மதத்தை சொல்வாயா? 

  " என்ன? நீதான் என்னை காதலித்தவனா? உருகி உருகி பேசியவன் நீதானா? ஏன் பொய் சொன்னாய்?

     உனக்கு கண் தெரியாது என்பதை மறைத்து விட்டாயே. உன் காதலை  என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையற்றவனோடு காலம் முழுதும் நான் வாழ முடியாது.எனக்கு பார்வை இப்போது இருக்கிறது.நீ காதலித்தாய் என்பதற்காக இன்னொரு முறை குருட்டு வாழ்க்கை ஏன் வாழ வேண்டும் . என்னை மன்னித்து விடு தயவு செய்து போ! ......... ................ .............
ஏன் இன்னும் நிற்கிறாய் ..
"ஒரு நிமிடம் உன்னை பார்த்துவிட்டுப் போகிறேன் 
"நீ என்னைப் பார்க்க முடியாதே !"

" ஆமாம் ஆனால் நான்  என்னைப் பார்க்க முடியும் . இதோ  என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னில் இருந்து என்னைப் பார்க்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? .......
        நான் வருகிறேன். வாழ்க வளமுடன் .. என் கண்களை நன்றாக கவைத்துக்கொள் " சொல்லி விட்டு மெதுவாக ஸ்டிக்கை ஊன்றி நடந்தான் 

    அவள் குழப்பத்துடன் அருகில் இருந்தவர்களிடம் கேட்டாள் "அவன் என்ன சொல்லிவிட்டுப் போகிறான். ஒன்றும் புரியவில்லையே!" 

அவர்கள்  சொன்னார்கள் "அவன்தான் உனக்கு கண்தானம் செய்தவன்"

                                             ****************
அவனைப் பொறுத்தவரை காதலுக்கு கண்ணில்லை 
அவளைப்பொருத்தவரை காதலுக்குக் கண் உண்டு .
உங்கள் தீர்ப்பு என்ன?
நீங்கள் யார் பக்கம்?

*********************************************************************************
இடையில் ஒரு வார்த்தை ஓடுகிறதே அது எதற்கு என்று புரிகிறதா?

************************************************************************************************** 
முந்தைய குட்டிக் கதைகள் 
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பிரபல விஞ்ஞானிகளின் வில்லத்தனங்கள்? பகுதி 2


  நியூட்டன் ப்ளாம்ஸ்டீட் டை படுத்திய பாட்டை படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
அதன்  தொடர்ச்சியே இந்தப் பதிவு.நியூட்டனை இழிவு படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ எழுதப் பட்டது அல்ல
நியூட்டன் இல்லாமல் அறிவியலை நினைத்துப் பார்க்க முடியாது . முக்கிய துறைகள் அனைத்திலும் அவரது கோட்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. அவர் எழுதிய நூல் அறிவியல் உலகில் ஒரு  புரட்சியை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்களை மெய்ப்பிக்க பிற விஞ்ஞானிகளின் தரவுகளும் அவருக்கு தேவைப்பட்டன.

    அறிவு மிகுந்தவரான நியூட்டன் இனிமை மிக்கவராக இருக்கவில்லை. மற்ற விஞ்ஞானிகளுடன் எப்போதும் காரசாரமாக மோதிக் கொண்டிருந்தார்.அவர் ராயல் சொசைடியில் உறுப்பினராக இருந்த போதே அப்போது அதன்  முக்கிய பொறுப்பின் இருந்த  விஞ்ஞானி ராபர்ட் ஹூக்குடன்( இவரும் சிறந்த விஞ்ஞானி  Micrographia என்ற , இவரது நூல் புகழ் பெற்றது . செல் என்ற வாத்தையை உருவாக்கியவர் இவரே. புவி ஈர்ப்பு தொடர்பான ஆய்வுகளும் கோள்களையும் ஆராய்ந்தவர்) மோதல் தொடங்கி விட்டது. சாதாரன மனிதரில் தொடங்கி பேரறிஞர்கள் வரை பொறாமையின் பிடியில் சிக்காதவர் யாரும் இல்லை என்றுஆதான் வரலாறு தெரிவிக்கிறது. அப்படித்தான்  ராபர்ட் ஹூக் நியூட்டன் மீது பொறாமை கொண்டதாக தெரிகிறது. நியூட்டனுக்கும் ஹூக்குக்கும் கருத்து மோதல் ஆரம்பித்தது. ஒளி பற்றி இருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறினர். ஒளி துகள்களால் ஆனது என்றார் நியூட்டன். அது தவறு ஒளி அலைகளாக பயணிக்கிறது  என்றார் ஹூக் . நியூட்டனின் சோதனைகளையும் முடிவுகளையும் கடுமையாக எதிர்த்தார் . மற்ற விஞ்ஞானிகளையும் தூண்டிவிட முனைந்தார். கடுமையான கோபம் கொண்டார் நியூட்டன். ஹூக்கின் எதிர்ப்புகளை புறக்கணித்து விட்டு   Theory of Light and Colours”என்ற கட்டுரையை  ராயல் சொசைடி பத்திரிகையில் பிரசுரித்து விட்டார்.  இருவரும் தங்களுக்கென்று ஆதரவாளர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் நியூட்டனின் கையே மேலோங்கியது. ராயல் சொசைடியை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டினார் நியூட்டன். சமாதனம் செய்யப்பட்டார் நியூட்டன் .ஆனாலும் இவர்களுக்கிடையே சுமுகமான உறவு ஏற்படவே இல்லை.,கைகலப்பில் ஈடுபடாத குறைதான்.

   1676இல் ஹூக் நியூட்டன் தனது  Micrographia ல் என்ற நூலில் இருந்து ஒளி பற்றிய கருத்துக்களை கருத்து திருட்டு செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ஹூக்கின் தரவுகளை  தனது நூலில் குறிப்பிட முதலில் விரும்பினாலும் தொடர்ந்த ஹூக்கின் தொல்லை காரணமாக Principia மூன்றாவது பதிப்பில் அவற்றை மறைக்க முடிவு செய்தார். நியூட்டனின் நண்பர் எட்மன்ட் ஹாலீ சமாதானம் செய்தார். அரை மனதுடன் ஹூக்கின் தரவுகளை சுட்டிக் காட்டினார் என்று கூறப் படுகிறது. நியூட்டனுடனான மோதலில் வெல்ல முடியாத ஹூக் மனம் தளர்ந்து போனார். 1703 இல் ஹூக் இறந்து போக அதே ஆண்டில் ராயல் சொசைடி யின் தலைவர் ஆனார் நியூட்டன். அவர் இறந்தபின்னும் அவர் மீதான வன்மம் குறையவில்லை நியூட்டனுக்கு . தலைவரானதும் அவர் செய்த முதல் காரியம் ராயல் சொசைடி இல் மாட்டி வைக்கப் பட்டிருந்த அவரது ஒரே  உருவப் படத்தை (Portrait) அகற்றியதுதான். ( நம்ம ஊர் அரசியல் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல . இங்க்லீஷ் காரன் இங்க்லீஷ்காரன்தான்  காரன்தான் எல்லாத்துக்கும் முன்னோடியா இருக்கானே!) அகற்றியதோடு விடவில்லையாம்.  அதனை  எரியும் நெருப்பில் வீசி எறிந்து விட்டு வைன் குடித்துக் கொண்டே மகிழ்ச்சியோடு   ஹூக் படம் எரியும் காட்சியை ரசித்தாராம்.  நியூட்டனின் ஆதரவாளர்கள் ஹூக்கின் படம்   யதேச்சையாகத்தான் காணாமல் போனது  நியூட்டன் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஹூக்குக்கு முன்னரும் பினரும் வந்தவர்களின் படங்கள் இருக்க இது மட்டும் எப்படிக் காணாமல் போகும் என்று ஒரு கோஷ்டியினர் நியூட்டன் மீது குற்றம் சுமத்தினர். ஆனால்  இதுவரை அந்த உருவப் படம் கிடைக்க வில்லை. அவர் இறந்தபின்அவரது சம காலத்தவர்களான ஆப்ரே மற்றும் வாலர் இருவரின் ஹூக் பற்றிய வடிவ அமைப்பின் வர்ணனையை வைத்து ரீட்டா கீர் என்பவர் பிற்காலத்தில் வரைந்த ஓவியமே கீழே உள்ளது .

13 Portrait of Robert Hooke.JPG

    ராபர்ட் ஹூக்கோடு நின்று விட்டதா நியூட்டனின் மோதல் குணம் என்றால் இல்லை.ஹைஜன்ஸ், லேப்னைஸ் என்று தொடர்ந்தது. (ராபர் ட் ஹூக் மோதலில் ஈடுபட்ட இன்னொரு ஆசாமி லெபனைஸ்)
ஜெர்மனியை சேர்ந்த  காட்ஃப்ரைட் வில்ஹெம் லெபனைஸ் என்ற கணிதமேதையுடன்  கொண்ட மோதல் பிரபலமானது. அப்படி என்ன இருவருக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு?

   கணக்கில் கால்குலஸ்  (நுண் கணிதம் )என்று உண்டு.கணக்கு பாடத்தை விரும்புபவர்களைக் கூட கலங்க வைக்கும் கணக்குப் பிரிவுதான் கால்குலஸ். அதை யார் முதலில் கண்டுபிடித்தது என்பதில்தான் இருவருக்கும் சண்டை
      அற்ப லிங்கா கதைக்கே எனது உனது என்று முட்டிக் கொண்டார்கள் என்றால் கணக்கில் புரட்சியை ஏற்படுத்திய கால்குலசை கண்டுபிடித்த உரிமையை விட்டுக் கொடுப்பார்களா என்ன? கச்சைகட்டிக்கொண்டு கோதாவில் இறங்காத குறையாக சண்டை போட்டுக் கொண்டார்கள்.   கால்குலசை 1675 இல் கண்டறிந்த போதும் 1684 இல்தான் இவரது நூல்  வெளியிடப்பட்டது. 

   நியூட்டனும் நுண் கணிதம் பற்றி தனது நூலில் தெரிவித்துள்ளார் . நியூட்டனின் நூல் லெபனிசின் நூலுக்குப் பிறகே வெளியானது. முன்னதாகவே இதைப் பற்றிய குறிப்புகளை நான் வைத்திருந்தேன். அதை அபகரித்துக் கொண்டார் லெபனைஸ் என்று குற்றம் சாட்டினார் நியூட்டன். 1672 இல் லண்டனுக்கு வந்திருந்தார் லெபனைஸ். அப்போது நியூட்டனின் கால்குலஸ் பற்றிய தகவல்களை  சேகரித்து சென்றிருக்கலாம்  என்கிறார்கள்  நியூட்டனின் ஆதரவாளர்கள்
\   லண்டன் விஜயத்தின்போது நியூட்டனைப் பற்றி கேள்வி பட்டிருந்தாலும் அவரை சந்திக்கவில்லை. அவரது வெளியீடுகள் எதனையும் படிக்கவும் இல்லை.உண்மையில் நியூட்டனின் கால்குலஸ் குறிப்புகள் நூல் அச்சமயம் வெளியிடப் படவில்லை. பல ஆண்டுகள் கழித்தே நியூட்டனின் நூல் வெளியிடப் பட்டது . இரு பக்கத்திலும் சூடான விவாதங்கள் ஆதரித்தும் எதிர்த்தும் எழுந்தன.  

      பத்திரிகைகளில் பல்வேறு தரப்பினர்  நியூட்டனுக்கு ஆதரவாக  எழுதினர். இதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால் இக்கட்டுரைகள் அனைத்தும் நியூட்டனால் எழுதப்பட்டு அவரது நண்பர்கள் பெயரில் வெளியிடப் பட்டது. நியூட்டன், லெபனைஸ் மீது கருத்து திருட்டு(Plagiarsim)  குற்றம் சாட்டினார் .   பூசல்கள் வளர்ந்தன. தனது கண்டுபிடிப்பின்மீது நம்பிக்கை கொண்ட லெபனைஸ் இந்தப் பூசலுக்கான தீர்வு காண ராயல் சொசைடியிடமே முறையிட்டார். 
     இது முட்டாள் தனமான முடிவாக கருதப் பட்டது . எதிரியிடமே நீதி வழங்கக் கோரினால் என்ன நடக்கும்? நியூட்டன்தானே அதன் தலைவர்? நேர்மையாக நடந்துகொள்வது போல நடுநிலையான ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். குழு உறுப்பினர்கள் அனைவருமே  நியூட்டனின் ஆதரவாளர்கள். விசாரணைக் குழு டம்மியாக உட்கார்ந்திருக்க விசரணை அறிக்கை அனைத்தையும் தானே எழுதி ராயல் சொசைடியின் பெயரில் வெளியிட்டு தான் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல அரசியல் வாதியும்கூட என்பதை நிரூபித்தார் நியூட்டன். அந்த அறிக்கை லெபனைஸ் கருத்துக் களவு செய்தார்(plagiarism) உறுதியாக உரைத்தது. லெபனிஸ் மனமுடைந்து போனார். அதோடு நியூட்டன்  திருப்தி அடைந்தாரா என்றால் இல்லை. ராயல் சொசைட்டியின் ஏட்டில் விசாரணை அறிக்கை பற்றிய கட்டுரை ஒன்றை  பெயர் குறிப்பிடாமல் தானே எழுதினாராம்.
இதெல்லாம் விடுங்கள்! 1716 இல் லெபனைஸ் இறந்தபோது நியூட்டன் சொன்னவை என்ன தெரியுமா?
"லெபனைசின் இதயத்தை நொறுக்கியதில் நான் அளவிலா மன நிறைவு பெற்றேன்"என்றாராம் 
(என்னா வில்லத்தனம்!)
கணிதத்திற்கு அருஞ்சேவை செய்த  லெபனைஸ் ராயல் சொசைட்டியின் ஆயுட்கால உறுப்பினராக   இருந்தாலும் அவர் இறப்பின்போது அதன் சார்பாக இரங்கல் செய்தி கூட ஏதும் வெளியிடப்படவில்லை.

 பிற்காலத்தில் நியூட்டன்  லெபனைஸ் இருவருமே யாரும் யாருடைய கண்டுபிடிப்பையும் அபகரிக்கவில்லை என ஏற்றுக் கொள்ளப்பட்டது இருவரது முறைகளிலும் ஒற்றுமைகள் இருந்தாலும் வேறுபாடுகள் அதிகம் இருந்தன. கால்குலஸ் குறியீடுகள் அமைப்பில் லெபனிஸ் அமைத்த முறையே இன்றும் பின்பற்றப் படுகிறது. தற்போது இருவருமே கால்குலசை  கண்டுபிடித்ததாக குறிப்பிடப் படுகிறது 

     1900 இல் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்  மற்றும் கவுடரட் என்பவர் லெபனிஸ் பற்றி எழுதிய  நூல்கள் லெபனிஸ்  மீதான ஆங்கிலேயர்களின் எண்ணத்தை மாற்றி அமைத்தது.

பல அரிய கண்டுபிடிப்புகளை அளித்த விஞ்ஞானிகள் எல்லாம் மேதைகள்தான். ஆனால் அவர்கள் நற்பண்புகள் உள்ளவர்களாக இருந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சரித்திரம் கூறுகிறது.

***************************************************************************

அடுத்த விஞ்ஞான வில்லன் யார்?   விரைவில் .

சனி, 7 பிப்ரவரி, 2015

எப்படி கதை எழுதுவது?சுஜாதா+ரா.கி.ரா டிப்ஸ்      வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோருடைய கதைகளும் பிரசுரத்திற்கு ஏற்கப் படுவதில்லை. கதை எழுதி அனுப்பி சோர்ந்து போய் ஒரு கட்டத்தில் எழுதுவதையே விட்டு விடுவார்கள். ஒரு சிலர்க்கு எப்படியோ வாய்ப்பு கிடைக்கிறது.  தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். 

    ஆனால் இப்போது அந்த நிலை இல்லை நாம் எழுதியதை நாமே வலைப் பூக்கள்,முகநூலில் வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. பல பேர் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் நட்புக்காக நாம் எப்படி எழுதினாலும் சிலர் நமது படைப்புகளை வாசிக்க  வருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நன்றாக  எழுதினால் மட்டுமே வாசிப்பவர்களின் தொடர்  வருகையை உறுதிப் படுத்த முடியும் என்ற நிலை  உருவாகி விடுகிறது .

   கதை கட்டுரை எதுவாக இருப்பினும் ஒரு சுவாரசியம் எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி இருந்தால் மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். நகைச்சுவை,சுவாரசியமான எழுத்து நடை, நல்ல உள்ளடக்கம், வித்தியாசமான சிந்தனை போன்றவை நம்மை பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். ஆரம்பத்தில் சுமாராக எழுத ஆரம்பித்த ஒரு சிலர்  பிறகு தொடர்ந்து கிடைக்கும்  அனுபவத்தைக் கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்தன் மூலம் அதிக வாசகர்களை பெறுகிறார்கள்.
எழுதத் தொடங்கு பவர்களுக்கு ஒரு பயிற்சி இருந்தால் எப்படி இருக்கும் . பல காலம் தானே கற்று அறிய வேண்டியவற்றை  பயிற்சியின் மூலம் எளிதில் பெற முடியும். கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவு வகையில்    பிரபல எழுத்தாளர் ராகி ரங்கராஜன் குமுதத்தில் எழுதிய  'எப்படிக் கதை எழுதுவது' என்று தொடர்   புத்தகமாகவும் வெளி வந்துள்ளது . கதை எழுத முயல்வோர்க்கு ஏராளமான ஆலோசனைகளை அந்நூலில் வாரி வழங்கியுள்ளார் ராகி ரங்கராஜன். ஏகப்பட்ட  உதாரணங்கள் மூலம் கதை எழுதும் கலையை விளக்கியுள்ளார். ஒருஎ.க.எ. என்ற  பயிற்சி பள்ளியும் நடத்தி வந்ததாகவும் அதில் கிட்டத்தட்ட 2000 பேர் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.அவர்களில் தற்போதைய சிலபிரபலங்களும் உண்டாம்.
    அந்நூலில் பிரபல எழுத்தாளர்கள் பலர் கதை எழுதுவதற்கு வழங்கிய  டிப்ஸ் கள் இடம் பெற்றிருக்கின்றன.    இன்றைக்கும் நிறையப் பேரின் மனம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கும் அமரர் சுஜாதாவும் கதை எழுதுவோருக்கு அந்நூலில் வழங்கியுள்ள டிப்ஸ் இதோ?
இவை பத்திரிகையில் எழுதி அனுப்புவோருக்கும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்வோருக்கும் , ஏன்  வலையில் எழுதுவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 

 1. பத்திரிகைகளுக்கு ஏற்ற வகையில் எழுதுங்கள். கணையாழிக்கு எழுதுபவற்றை ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு அனுப்பாதீர்கள் 
 2. தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். பாம்பே ரங்காச்சாரி வீதி இரவு எழு மணிக்கு இருள் என்று எழுதாதீர்கள்.பம்பாயில் ரங்காச்சாரி தெருவும் இல்லை,இரவு ஏழு மணிக்கு இருளும் இல்லை என்று ஒரு கோஷ்டி கடிதம் எழுதக் காத்திருக்கும் 
 3. அந்தரத்தில் எழுதாதீர்கள் .உங்கள்  கதை கருத்தட்டாங்குடியிலோ மதராஸ் 78 லோ  எங்காவது ஓரிடத்தில் நிகழட்டும் . அதற்கு கால்கள் வேண்டும் ஜியாகரபி வேண்டும். மிக சுலபம் உங்கள்  ஊர் உங்கள் வீதி ( விவகாரமான சம்பவங்களை உங்கள் ஊரில் நடந்தது என்று எழுதி பெருமாள் முருகன்  மாதிரி மாட்டிக் கொள்ளாதீர்கள்  என்று இப்போது இருந்தால் சொல்லி இருப்பாரோ/)
 4. சொந்தக் கதையை எழுதாதீர்கள் . மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள் .  இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதுங்கள் கேஸ் போட்டால் உண்மைசம்பவம் அல்ல என்று தப்பிக்கலாம்
 5. பெரிய பெரிய வாக்கியங்கள் வேண்டாம்.உமிழ் நீரை தொண்டைக் குழியில் இருந்து உருட்டி திரட்டி உதடுகளின் அருகே கொண்டு வந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான் என்று சொல்வதை விட துப்பினான் என்பது மேல். 
 6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள் . அவன் இவன் போன்ற வார்த்தைகள் விதி விலக்கு 
 7. 'அவன் மணத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்' என்றெல்லாம் எழுதாதீர்கள்.
 8. தெரிந்தவர்கள் உறவுக் காரர்களின் பெயர்களை கதை மாந்தர்களுக்கு வைக்காதீர்கள் .டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள் .
 9. வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியாகக் குறைத்து அதே கதையை சொல்ல முடியுமா என்று பாருங்கள். 
 10. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள் . அதற்கு முதல் தேவை நிறையப் படிக்க வேண்டும் 
 11. எழுதுவதை நிறுத்தாதீர்கள் .சளைக்காதீர்கள் .ஒரு நாள் தெரியாத் தனமாக போட்டு விடுவார்கள் எல்லோரிடமும் நல்ல கதை இருக்கிறது குட் லக்
ரா.கி.ரா சொல்லும் சில டிப்ஸ்
 1. கதைகளில் ஏகப் பட்ட பாத்திரங்களை படைக்காதீர்கள். அவர் யார் இவர் யார் என்பதை புரிந்து கொள்ள முன் பக்கத்தை புரட்ட வேண்டும் 
 2. கதையை சட்டென்று ஆரம்பித்து விடுங்கள். பொறுமையை சோதிக்கும் வர்ணனைகளை தவிர்க்கவும்.
 3. சென்னைத் தமிழோ கரிசல் காட்டு தமிழோ வட்டார மொழியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள் 
 4. நல்லவன் பல்டியடித்து வில்லனாக மாறுவது அசட்டுப் பெண் புத்திசாலியாவது போன்ற கேரக்டர்கள் வேண்டாம் 
 5. ஒரு குறிப்பிட கட்டத்தை தாண்டி விவரமாக எழுதாமல் கிடுகிடுவென்று கதையை கொண்டு செல்லாதீர்கள் 
 6. படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும் .
 7. ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கதையை இன்னொரு பத்திரிகைக்கு உடனே அனுப்பாதீர்கள் 
 8. கதையை எழுதி முடித்த பின் பலமுறை மீண்டும் படியுங்கள்.
 9. ஒருபோதும் காப்பி அடிக்காதீர்கள்.
 10. தொடர்ந்து எழுதுங்கள் 
இவற்றில் தற்கால சூழலுக்கு எது பொருந்துகிறதோ அவரை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமானது .இவை ஆலோசனைகளே தவிர அத்தனையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்புகள் ஓரளவிற்கு உதவுமே தவிரயையே வெற்றியைத் தந்து விடாது. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு எழுதவில்லை.அவர்கள் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டு குறிப்புகள் தந்திருக்கிறார்கள்.மற்றவர்களை படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செய்யும் முயற்சி வெற்றியக் கொடுக்கும் .

அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு 
************************************************************************
கொசுறு:  இதை யார் எழுதி இருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் 

எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்

******************************************************************************************
சுஜாதா தொடர்பான இதர பதிவுகள் 

                


நாளை: விஞ்ஞானி நியூட்டனின்  வில்லத் தனம் பகுதி 2


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஐசக் நியூட்டன்-விஞ்ஞானியா? அரசியல்வாதியா?


      தலைப்பை பார்த்ததும் இது என்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி என்று கேட்பீர்கள். இதை முழுதும் படித்து விட்டு அப்புறம் சொல்லுங்கள் .
எட்டாம் வகுப்பில்  இருந்து கல்லூரி வரை நம்மை டார்ச்சர் செய்த விஞ்ஞானி யார் என்று கேட்டால் அவர் நியூட்டன் ஆகத்தான் இருக்கும்.
 ஆப்பிள் மரத்தில் இருந்து விழுந்தாலும் விழுந்தது . எடுத்து தின்று விட்டு போகாமல் ஏன் விழுந்தது எதற்கு விழுந்தது என்று தன்னைத் தானே கேட்டு(இந்தக் கதையே புருடாவாம்) புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்று நம் வாத்தியார்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கும்போது "நீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க" ஒரு கேள்விய கேட்டு "எடுத்துகிட்டு ஓடி இருப்பீங்கன்னு"  சொல்லி  சிரித்து (இவர் மட்டும் என்ன பண்ணி இருப்பாராம்? ) நம்மை முட்டாளாக்கியது எல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். நியூட்டன் அவர்பாட்டுக்கு    முதல் விதி இரண்டாவது விதி மூன்றாவது விதி என்று ஏதோதோ சொல்லிவிட்டு போய் விட்டார் நாமோ தலைவிதியே என்று அவற்றைப்  படித்துவிட்டு  ஏறக்கட்டியபின்  இப்போது எதற்கு அவரைப் பற்றி என்றுதானே  கேட்கிறீர்கள். அவர் நமக்குத்தான் புரியாத விதிகள் எல்லாம் சொல்லி தொல்லை கொடுத்தார் என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் சக விஞ்ஞானிகளையும் விட்டு வைக்க வில்லையாம் .

  மனிதர் விஞ்ஞானியாய் இருந்தாலும், நம்மூர் அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பாலிடிக்ஸ் செய்வதில் கில்லாடியாக இருந்திருக்கிறார் . ஆரம்பத்தில அமைதியாக இருந்தாலும் போகப் போக சுப்ரமணிய சுவாமி ரேஞ்சுக்கு  தனக்கு வேண்டாதவர்களுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைக்கும் அளவுக்கு  போய் விட்டாராம்.

      லண்டன் ராயல் சொசைடியின்  தலைவராக கிட்டத்தட்ட 24 வருடங்கள் முடிசூடா மன்னராக  இருந்திருக்கிறார். வேறு யாரும் இவ்வளவு நாள் அந்தப் பதவியில் இருந்ததில்லை. அவ்வளவு நாள் நீடிக்க வேண்டுமெனில் அறிவு மட்டும் போதுமானது அல்ல. அரசியல் வாதிகளுக்கே உரித்தான தந்திரங்களும் சூழ்ச்சிகளும் அவசியமல்லவா. அத்தனையும் கரைத்துக் குடித்தவராக இருந்தார்  சர் ஐசக் நியூட்டன் .   அவர் அறிவியல் உலகத்தை ஒரு கலக்கு கலக்கிய  Principia Mathematica என்ற நூலை  எழுதியவர் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் . அறிவாளிகள் எப்போது மற்ற அறிவாளிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?. சண்டையும் சச்சரவும் அரசியவாதிகளுக்ககும் இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல. அறிவியல் அறிஞர்களுக்கும்கூட  சொந்தம்தான். 

   ராயல் சொசைடியில் ஒரு வானியல் அறிஞர் இருந்தார் அவர் பெயர் ஜான் ப்ளாம்ஸ்டீட்(John Flamsteed,).   இவர் நட்சத்திரம் கோள்கள் இவற்றைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர். முதலில் இருவரும் அண்ணாமலை   ரஜினி, சரத்பாபு போல நண்பர்களாகத்தான் இருந்தனர். இந்தா எடுத்துக்கோ என்று நியூட்டன் கேட்கும்போதெல்லாம் அவரது அறிவியல் கொள்கைகளை நிரூபிக்க  தேவைப்படுகின்ற  தரவுகளை எல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில நியூட்டனோட டார்ச்சர் அதிக மாகி விட்டது. நீ சேகரிச்சு வச்சிருக்கிற எல்லா தகவல்களையும் என்கிட்டே குடுனுன்னு நச்சரிக்க ஆராம்பித்திருக்கிறார். ப்ளாம்ஸ்ஸ்டீட் என்னுடைய தகவல்கள் முழுமையானது அல்ல இன்னும் சில உறுதிப்படுத்தபட வேண்டும் அதனால் தர முடியாது என்றார். 

      அதே ராயல் சொசைடி யில் இன்னொரு வானியல் அறிஞர் இருந்தார். அவர்தான் எட்மண்ட் ஹாலி (இவர் ஒரு வால் நட்சத்திரத்தை கண்டறிந்தார்.அதனால் அதற்கு ஹாலி வால் நட்சத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டது).ஹாலிக்கும் ப்ளாம்ஸ் ஸ்டீடுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட லடாய் . எதிரிக்கு எதிரி நண்பன்தானே. ஹாலியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ப்ளாம்ஸ் ஸ்டீடுக்கு நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார் .ப்ளாம்ஸ் ஸ்டீட் உடைய  ஆராய்ச்சி தகவல்களை கிரீன்விச் வானியல் மையத்தில் சீல் வைத்து வைக்கப் பட்டிருந்தன.

      ராயல் சொசைட்டி தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி வானியல் மையத்தின்  நிர்வாகத்துக்குள்  தன்னை எப்படியோ நுழைத்துக் கொண்டு ப்ளாம்ஸ்ஸ்டீடின் தகவல்களை வெளியிட நெருக்குதல் கொடுத்தார். ஹாலியும் நியூட்டனும் சேர்ந்து  அரசியல் ஆட்டம் ஆடி அவசரமாக திருத்தம் செய்யப்பட்ட மற்றும் திருத்தம் செய்யப் படாத  ப்ளாம்ஸ் ஸ்டீடின் வானியல் தரவுகளை அவசர அவசரமாக வெளியிட முயற்சி செய்தனர். திருட்டு வி.சி.டி வெளியிடுகிற மாதிர் அவர் எழுதினதை அவருக்கே தெரியாம Pirated Notes ஐ வெளிட்டனர் . டென் மார்க்கின் இளவரசர் ஜார்ஜ் "அறிவாளிகள் நல்லது தானே செய்வாங்கன்னு நம்பி நூலை வெளியிட ஆகும் செலவை ஏற்றுக்கொண்டு வெளியிடப் பட்டும் விட்டது. தகவல் அறிந்த ப்ளாம்ஸ் ஸ்டீட் துடித்துப்  போய் அவசர அவசரமாக நீதிமன்றம் சென்று  நூல் வெளியீட்டுக்கு தடை வாங்கினார். இருந்தும் தடைக்கு முன்னதாகவே 400பிரதிகள் வெளியிடப் பட்டுவிட 300 ஐக் கைப்பற்றி விட்டார். என்றாலும் 100  என்ன ஆயிற்றோ தெரியவில்லை .

   இந்த போட்டியில் அப்போதைக்கு ப்ளாம்ஸ் ஸ்டீட் வெற்றி பெற்றுவிட்டாலும் பழிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் நியூட்டன். பின்னாளில் வெளியான தனது நூலில் ப்ளாம்ஸ் ஸ்டீடின் தரவுகளை பயன்படுத்தி இருந்தாலும் அதை திட்டமிட்டு மறைத்து விட்டு தனது  நூலை வெளியிட்டு பழி தீர்த்துக் கொண்டார்

      நியூட்டனிடம் படாதபாடு பட்ட ப்ளாம்ஸ் ஸ்டீட் 1719 இல்  இறந்து விட்டார் . என்றாலும் அவர் இறக்கும் வரை அவரது விண்மீன்கள் பற்றிய ஆய்வகள் பற்றிய குறிப்புகள வெளியிட முடியவில்லை. பின்னர் 1725 இல்   Historia Coelestis Britannica என்ற நூல் அவருடைய மனைவி மார்கரெட்டால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 3000 விண்மீன்களைப் பற்றிய துல்லியமான அவரது குறிப்புகள் அதுவரை வேறு எந்த வானியல் அறிஞராலும் கண்டறியப்படாதவை .

  இப்போது சொல்லுங்கள் பதிவின் தலைப்பு  பொருத்தமானதுதானே

      டேவிட் கிளார்க்  ஸ்டீபன் (தந்தை மகன்) கிளார்க் என்ற இருவரும்  இணைந்து எழுதிய Newton's Tyranny என்ற தங்களது புத்தகத்தில் ப்ளாம்ஸ் ஸ்டீட்டை நியூட்டன் படுத்திய  பாட்டை விளக்குகிறார்கள் .  கோபம், வஞ்சகம்,சூழ்ச்சி, பொறாமை,குணம் கொண்டவராக நியூட்டன் சித்தரிக்கப் படுகிறார்.
       நியூட்டன்தான் இறக்கும்(இருக்கும்) வரை பல ஜால்ராக்களுடன் செல்வாக்குடையவராக இருந்திருக்கிறார்.
      அற்புத விஞ்ஞானியான நியூட்டனின் இந்த குணாதிசியங்கள்  நமக்கு சற்று அதிர்ச்சி ஏற்படுத்தக்  கூடியவை .  ப்ளாம்ஸ் ஸ்டீட் மட்டுமல்ல இன்னும் பலருடன் நான்தான் முந்தி என்ற ரீதியில் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
       அவர்களில் காட்ஃப்ரைட் வில்ஹெம் லெபனைஸ்   என்ற  புகழ் பெற்ற கணித மேதையுடன் ஏற்பட்ட அறிவுச் சண்டை  சட்டையை பிடித்துக் கொள்ளாத குறையாக இருந்தது. சண்டையில் நியூட்டன் ஜெயித்து விட்டார்.  என்றாலும்  லெபனைஸ் மீதான வன்மம் அவருக்கு சிறிதும் குறையவில்லை . சிறிது காலத்திற்கு லெபனைஸ்  இறந்தபோது  நியூட்டன் சொன்னது  என்ன தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்?

     தெரிந்து  கொள்ள  தயவு செய்து அடுத்த பதிவு வரை காத்திருக்க முடியுமா?
 அப்படி எதற்குத்தான் இரண்டு பேரும் குடுமிப் பிடி சண்டை போட்டார்கள்? சுவாரசியமான அந்த மோதலை இதே பதிவில் விவரிக்கலாம் என்றுதான் நினைத்தேன் இந்தப் பதிவு ஏற்கனவே நீளமாகி விட்டதால்  அடுத்த பதிவில் தொடர்கிறேன்
(தொடரும்) 

அடுத்த பகுதியை படிக்க 

********************************************************************************
படித்து விட்டீர்களா?