என்னை கவனிப்பவர்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

எப்படி கதை எழுதுவது?சுஜாதா+ரா.கி.ரா டிப்ஸ்      வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோருடைய கதைகளும் பிரசுரத்திற்கு ஏற்கப் படுவதில்லை. கதை எழுதி அனுப்பி சோர்ந்து போய் ஒரு கட்டத்தில் எழுதுவதையே விட்டு விடுவார்கள். ஒரு சிலர்க்கு எப்படியோ வாய்ப்பு கிடைக்கிறது.  தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். 

    ஆனால் இப்போது அந்த நிலை இல்லை நாம் எழுதியதை நாமே வலைப் பூக்கள்,முகநூலில் வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. பல பேர் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் நட்புக்காக நாம் எப்படி எழுதினாலும் சிலர் நமது படைப்புகளை வாசிக்க  வருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நன்றாக  எழுதினால் மட்டுமே வாசிப்பவர்களின் தொடர்  வருகையை உறுதிப் படுத்த முடியும் என்ற நிலை  உருவாகி விடுகிறது .

   கதை கட்டுரை எதுவாக இருப்பினும் ஒரு சுவாரசியம் எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி இருந்தால் மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். நகைச்சுவை,சுவாரசியமான எழுத்து நடை, நல்ல உள்ளடக்கம், வித்தியாசமான சிந்தனை போன்றவை நம்மை பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். ஆரம்பத்தில் சுமாராக எழுத ஆரம்பித்த ஒரு சிலர்  பிறகு தொடர்ந்து கிடைக்கும்  அனுபவத்தைக் கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்தன் மூலம் அதிக வாசகர்களை பெறுகிறார்கள்.
எழுதத் தொடங்கு பவர்களுக்கு ஒரு பயிற்சி இருந்தால் எப்படி இருக்கும் . பல காலம் தானே கற்று அறிய வேண்டியவற்றை  பயிற்சியின் மூலம் எளிதில் பெற முடியும். கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவு வகையில்    பிரபல எழுத்தாளர் ராகி ரங்கராஜன் குமுதத்தில் எழுதிய  'எப்படிக் கதை எழுதுவது' என்று தொடர்   புத்தகமாகவும் வெளி வந்துள்ளது . கதை எழுத முயல்வோர்க்கு ஏராளமான ஆலோசனைகளை அந்நூலில் வாரி வழங்கியுள்ளார் ராகி ரங்கராஜன். ஏகப்பட்ட  உதாரணங்கள் மூலம் கதை எழுதும் கலையை விளக்கியுள்ளார். ஒருஎ.க.எ. என்ற  பயிற்சி பள்ளியும் நடத்தி வந்ததாகவும் அதில் கிட்டத்தட்ட 2000 பேர் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.அவர்களில் தற்போதைய சிலபிரபலங்களும் உண்டாம்.
    அந்நூலில் பிரபல எழுத்தாளர்கள் பலர் கதை எழுதுவதற்கு வழங்கிய  டிப்ஸ் கள் இடம் பெற்றிருக்கின்றன.    இன்றைக்கும் நிறையப் பேரின் மனம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கும் அமரர் சுஜாதாவும் கதை எழுதுவோருக்கு அந்நூலில் வழங்கியுள்ள டிப்ஸ் இதோ?
இவை பத்திரிகையில் எழுதி அனுப்புவோருக்கும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்வோருக்கும் , ஏன்  வலையில் எழுதுவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 

 1. பத்திரிகைகளுக்கு ஏற்ற வகையில் எழுதுங்கள். கணையாழிக்கு எழுதுபவற்றை ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு அனுப்பாதீர்கள் 
 2. தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். பாம்பே ரங்காச்சாரி வீதி இரவு எழு மணிக்கு இருள் என்று எழுதாதீர்கள்.பம்பாயில் ரங்காச்சாரி தெருவும் இல்லை,இரவு ஏழு மணிக்கு இருளும் இல்லை என்று ஒரு கோஷ்டி கடிதம் எழுதக் காத்திருக்கும் 
 3. அந்தரத்தில் எழுதாதீர்கள் .உங்கள்  கதை கருத்தட்டாங்குடியிலோ மதராஸ் 78 லோ  எங்காவது ஓரிடத்தில் நிகழட்டும் . அதற்கு கால்கள் வேண்டும் ஜியாகரபி வேண்டும். மிக சுலபம் உங்கள்  ஊர் உங்கள் வீதி ( விவகாரமான சம்பவங்களை உங்கள் ஊரில் நடந்தது என்று எழுதி பெருமாள் முருகன்  மாதிரி மாட்டிக் கொள்ளாதீர்கள்  என்று இப்போது இருந்தால் சொல்லி இருப்பாரோ/)
 4. சொந்தக் கதையை எழுதாதீர்கள் . மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள் .  இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதுங்கள் கேஸ் போட்டால் உண்மைசம்பவம் அல்ல என்று தப்பிக்கலாம்
 5. பெரிய பெரிய வாக்கியங்கள் வேண்டாம்.உமிழ் நீரை தொண்டைக் குழியில் இருந்து உருட்டி திரட்டி உதடுகளின் அருகே கொண்டு வந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான் என்று சொல்வதை விட துப்பினான் என்பது மேல். 
 6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள் . அவன் இவன் போன்ற வார்த்தைகள் விதி விலக்கு 
 7. 'அவன் மணத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்' என்றெல்லாம் எழுதாதீர்கள்.
 8. தெரிந்தவர்கள் உறவுக் காரர்களின் பெயர்களை கதை மாந்தர்களுக்கு வைக்காதீர்கள் .டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள் .
 9. வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியாகக் குறைத்து அதே கதையை சொல்ல முடியுமா என்று பாருங்கள். 
 10. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள் . அதற்கு முதல் தேவை நிறையப் படிக்க வேண்டும் 
 11. எழுதுவதை நிறுத்தாதீர்கள் .சளைக்காதீர்கள் .ஒரு நாள் தெரியாத் தனமாக போட்டு விடுவார்கள் எல்லோரிடமும் நல்ல கதை இருக்கிறது குட் லக்
ரா.கி.ரா சொல்லும் சில டிப்ஸ்
 1. கதைகளில் ஏகப் பட்ட பாத்திரங்களை படைக்காதீர்கள். அவர் யார் இவர் யார் என்பதை புரிந்து கொள்ள முன் பக்கத்தை புரட்ட வேண்டும் 
 2. கதையை சட்டென்று ஆரம்பித்து விடுங்கள். பொறுமையை சோதிக்கும் வர்ணனைகளை தவிர்க்கவும்.
 3. சென்னைத் தமிழோ கரிசல் காட்டு தமிழோ வட்டார மொழியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள் 
 4. நல்லவன் பல்டியடித்து வில்லனாக மாறுவது அசட்டுப் பெண் புத்திசாலியாவது போன்ற கேரக்டர்கள் வேண்டாம் 
 5. ஒரு குறிப்பிட கட்டத்தை தாண்டி விவரமாக எழுதாமல் கிடுகிடுவென்று கதையை கொண்டு செல்லாதீர்கள் 
 6. படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும் .
 7. ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கதையை இன்னொரு பத்திரிகைக்கு உடனே அனுப்பாதீர்கள் 
 8. கதையை எழுதி முடித்த பின் பலமுறை மீண்டும் படியுங்கள்.
 9. ஒருபோதும் காப்பி அடிக்காதீர்கள்.
 10. தொடர்ந்து எழுதுங்கள் 
இவற்றில் தற்கால சூழலுக்கு எது பொருந்துகிறதோ அவரை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமானது .இவை ஆலோசனைகளே தவிர அத்தனையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்புகள் ஓரளவிற்கு உதவுமே தவிரயையே வெற்றியைத் தந்து விடாது. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு எழுதவில்லை.அவர்கள் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டு குறிப்புகள் தந்திருக்கிறார்கள்.மற்றவர்களை படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செய்யும் முயற்சி வெற்றியக் கொடுக்கும் .

அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு 
************************************************************************
கொசுறு:  இதை யார் எழுதி இருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் 

எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்

******************************************************************************************
சுஜாதா தொடர்பான இதர பதிவுகள் 

                


நாளை: விஞ்ஞானி நியூட்டனின்  வில்லத் தனம் பகுதி 2


26 கருத்துகள்:

 1. //கொசுறு: இதை யார் எழுதி இருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்//

  சுஜாதாவேதான்!

  பதிலளிநீக்கு
 2. எழுதுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகமான 'டிப்ஸ்'தான்.

  பதிலளிநீக்கு
 3. கதை எழுதுவதில் உள்ள சிரமங்களை அனுபவித்தவன் நான். எனது முதல் சிறுகதை குங்குமம் இதழில் வெளியானது. தொடர்ந்து பாக்யா, இதயம் என்று பல இதழ்களில் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து நண்பர்களின் ஆதரவுடன் வாழ்வில் வெற்றி என்ற தலைப்பில் சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டேன். தாங்கள் கூறியுள்ள பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. இருப்பினும் ஒவ்வொருவரும் எழுதும்போது எதிர்கொள்ளும் சூழல் மாறி அமையும். அந்நிலையில் அவர்களாகவே பக்குவப்பட்டு எழுதுவர் என்பது என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் நண்பரே... என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றியுடன். கில்லர்ஜி
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 5. நல்ல அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி. சுஜாதான் எழுதியிருப்பார்.

  பதிலளிநீக்கு
 6. எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சுஜாதா எப்போதும் சொல்லும், இங்கு சொல்லாமல் விட்ட ஒரு டிப்ஸ் ; 'கதையை முதல் பாராவின் முதல் வரியில் ஆரம்பித்துவிடுங்கள்.'

  பதிலளிநீக்கு
 7. ///படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும்///
  எழுத்தாளரின் வெற்றி இதில்தானே ஐயா அடங்கியிருக்கிறது
  அருமையான யோசனைகள்
  ///அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு ////
  ஆகா
  தங்களுக்கா எழுத வரவில்லை
  தம +1

  பதிலளிநீக்கு
 8. #வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியாகக் குறைத்து அதே கதையை சொல்ல முடியுமா என்று பாருங்கள். #
  இது ரொம்ப முக்கியம் ...ஒவ்வொரு வரியையும் ரசித்து நான் எழுதிய என் ஆறு பக்க முதல் சிறுகதையின் ,கருவைக் கலைக்காமல் ஒண்ணரை பக்கத்திற்குள் சுருக்கி, பாடத்தைக் கற்றுத் தந்தது ஆனந்த விகடன் ! சுருக்கமாய் சொல்வது
  சுவாரசியத்தைக் கூட்டும் ,அதன்படி ,இன்றும் குட்டி குட்டி பதிவுகளை ஜோக்காளி தளத்தில் நான் தொடர்வது நீங்களும் அறிந்ததுதானே :)
  த ம 7

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  முரளி அண்ணா
  யாவருக்கும் பயன் பெறும் பதிவு... நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க?!.

  இத நாங்க சொல்லணும். நீங்க சொல்லப்படாது.

  விடை அதே சுஜாதாதான்

  பதிலளிநீக்கு
 11. பெருமாள் முருகன் ஒரு வரலாற்று நாயகனாகவே ஆகி விட்டார் போலிருக்கிறது. அவதைப் பற்றி எங்காவது ஒரு மூலையிலாவது சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும்.

  பதிலளிநீக்கு
 12. சிந்திக்க வைக்க மிகவும் சிந்திக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 13. எல்லா டிப்ஸ்சும் இந்த காலத்துக்கும் ஏத்தமாதிரி தான் இருக்கு!!! ரொம்ப முக்கியம் ""தொடர்ந்து எழுதுங்க:(( சோம்பல் :))
  **அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு ** நான் சொல்லல தன்னடக்கத்தில் அண்ணன் மட்டையா மடங்குவாப்ள னு:))

  பதிலளிநீக்கு
 14. என்போன்ற அறைகுறை கதை எழுதுபவர்களுக்கு அத்தியாவசியமான பாடம் . நன்றி அண்ணே . என்னதான் தம் கட்டி இழுத்து சுருக்கு சுருக்கென்று சுருக்கினாலும் 8 பக்கத்தைத்தொட்டுவிடுகிறது .

  //தங்களை மேம்படுத்திக்கொலைதான் மூலம் அதிக வாசகர்களை பெறுகிறார்கள். // இந்த வரியில் ஏதேனும் உள்குத்தோ , இரட்டை அர்த்தமோ இருக்கிறதா ணா ? ;-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் ஒன்றும் இல்லை . தட்டச்சு பிழைதான் நேற்று பதிவு போட்டு விட்டு சென்று விட்டேன்.பிழை திருத்தம் செய்யவில்லை .மன்னிக்கவும் . யாரும் சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டார்களே! . நீங்களாவது சொன்னதற்கு நன்றி மெக்னேஷ்

   நீக்கு
 15. நல்ல பதிவு..புத்திமதி.
  பயனடையட்டும் பலர்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 16. இரண்டுமே வாசித்திருக்கின்றோம். இப்போது மீண்டும் வாசித்தோம். தங்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் எத்தனை முறை வாசித்தாலும், இவை மிகவும் உபயோகமான டிப்ஸ். நீங்கள் சொல்லியிருப்பதும் அப்படியே.

  ஒரு டிப்ஸ் அதை திரு அமுதவன் அவர்கள் சொல்லிவிட்டார்.

  நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் - சுஜாதா. அந்த வரிகள் அப்படித்தான் சொல்கின்றன...

  பதிலளிநீக்கு
 17. புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டும் நான் வாங்கவில்ல்லை. படித்தால் குழம்பி விடுவோமோ என்று பயம். ஆனால் முன்பு கொஞ்சம் பிட் பிட்டாகப் படித்திருக்கிறேன். நீங்கள் எடுத்துப் போட்டிருக்கும் டிப்ஸ்கள் நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் பயனுள்ள பதிவு....
  ரெபரன்ஸ் மெடீரியல் எனவே மீண்டும் மீண்டும் வருவேன்..
  நன்றி
  தம + (தேவையா என்ன?)

  பதிலளிநீக்கு
 19. முதலில் கொசுறுக்கு விடை.. சுஜாதா இல்லை என்பதுதானே?
  சுஜாதாவின் ஜனரஞ்சக நடையில் ஒரு மயக்கமருந்து இருக்கும்.
  மேஜைமேல் விரிந்திருந்த செய்தித்தாளில் ஒருவன் செத்துக் கிடந்தான்...என்றது புதுமையான போக்கு..
  அவளைப் பார்த்ததும் காதலிக்கலாமா? கற்பழிக்கலாமா? -என்றது அநியாய ஈர்ப்பு.
  இடையிடையே ஆழ்வார் பாசுரங்கள், ஈன்ஸ்டின் தியரி.. அப்புறம் அவரது “மாஸ்டர் பீஸ்“ என்று நான் நினைக்கும் “என் இனிய இயந்திரா” வின்ன ரோபோ நாய்க்குட்டி யான “ஜீனோ“ அடுத்து அதிபுத்திசாலி கணேஷ்- பெண்களிடம் வழியும் வசந்த் என எத்தனை கவனமாகப் பாத்திரங்களை விளக்கியிருப்பார் மத்தியமர் கதைகளும், “நகரம்“எனும் அவரது சிறுகதையும் என் மனசை விட்டு என்றும் நீங்கா. அவரது நகைச்சுவை கலந்த அறிவுஜீவித்தனமான நடைதான் இன்றும் விற்பனையில் சாதனைபடைக்கக காரணம் என்று நினைக்கிறேன் முரளி. ஆனாலும்...
  ஆபாசத்தை ஜனரஞ்சகப் படுத்தியதில் அவர் பங்கை மறுக்கமுடியாது. ஓவர். அந்த மெக்சிகோ நாட்டு சலவைக்காரி கதை ஆபாசத்தின் உச்சம் (அது என்ன என்ன என்று சஸ்பென்ஸ்?) நீங்களும் என்னைவிட சுஜாதாப்ரியராக இருப்பீர்கள் போல.. கதைப்பிரியர்கள் அவரைக் கடந்து 70களில் வந்திருக்கவே முடியாது என்பதே உண்மை. மேலாண்மை பொன்னுச்சாமி “சிறுகதையின் உள்விவகாரம்“ என்றொரு புத்தகம் படித்துப்பாருங்கள்.. இன்னும் எதார்த்தமாக இருக்கும். நன்றி முரளி. (உங்கள் ரசனைதான் எழுத வைத்திருக்கிறது என்னும் ரகசியத்தைக் கண்டுகொண்டேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! பள்ளி வயதிலேயே சுஜாதாவின் சில தொடர்கதைகளை படித்த நினைவு இருக்கிறது . பின்னர் அவ்வப்போது நூலகங்களில் தேடித் பிடித்து படித்ததுண்டு.பல அப்போது எனக்கு சுத்தமாக ப் புரியவில்லை. நீங்கள் சொல்வது போல சுவாரசியம்தன் அவரது பலம்..ஆரம்ப கட்ட வாசிப்பு அனுபவத்தை தூண்டியவர் அவர் என்பதில் ஐயமில்லை.
   நீங்கள் சொன்னதைப் போலவே எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணனும் " வணிகப் பத்திரிகையில் அவரும் ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள்." என்று விமர்சித்திருக்கிறார் .அவரது சுஜாதா பற்றிய கட்டுரை ஒன்றை அவரது அனுமதியுடன் வெளியிட்டிருந்தேன். உங்களது கருத்தை ஒத்திருக்கும் அதனை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் .சுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்

   நீக்கு
  2. மேலாண்மை பொன்னுசாமியின் ஒரு சிர்கதையை விகடனில் படித்ததாக ஞாபகம். உள் விவகாரத்தை தேடிப் படிக்கிறேன் நன்றி ஐயா

   நீக்கு
 20. நல்ல குறிப்புகள்.... கதை எழுதுபவர்களுக்கு பயன்படும்!

  பதிலளிநீக்கு
 21. எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். இதோ இணைப்பு:
  https://yarlpavanan.wordpress.com/2015/02/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895