என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, July 28, 2013

சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

  தற்போது  சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ கேட்கவே வேண்டாம். புத்தகக் கண்காட்சியின்போது ஆர்வத்தின் காராணமாக வாங்கி வைத்த நாவல்கள் இன்னமும் படிக்கப் படாமல் (படிக்கமுடியாமல்) அலமாரியில் உறங்குவதாக  பலரும் சொல்கின்றனர். ஆனாலும் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
  ஒரு சிறு கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை சுஜாதா இப்படிக் கூறுகிறார். தற்போது எழுதுபவர்கள் அதை கருத்தில் கொள்ளலாம்.

   "எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்து மதிப்பாக கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்புக் கொள்வது கடினம்.அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதை சுருக்கம். நான்கு வரிகளுக்கு கீழ் இருந்தால் கவிதையாக சொல்லிவிடலாம்.சில நேரங்களில் சில கட்டுரைகளை கூட சிறுகதையாகக் கருதலாம். 

   கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள்.ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும்.யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டுகாலத்தையோ  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கருப்போ சிவப்போ,ஏழையோ, பணக்காரனோ, வயதானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ, தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளாகவோ எந்த கதாபாத்திரமும் தடை இல்லை.மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம்.கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்க சிரிக்க சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

    இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தானுண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது கதையல்ல. பஸ் டிக்கெட்.. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவலங்களையும் கடக்கின்றன. 

   ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம்; ஏன் ஒரு வருடம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பி சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்சனை அல்ல.கதையின் பெயர்கள்,இடம் பொருள்,ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம், அதில் படித்த ஒரு கருத்தோ வரியோ நிச்சயம்  நினைவிருக்கும். அப்படி இல்லை என்றால் அந்தக் கதை உங்களைப் பொருத்தவரை தோல்விதான்.

    இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும். ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது

   நல்ல கதைகளை அலசிய ஹெல்மெட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்கு சில அடையாளங்களை சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவீதம் நடந்து முடிந்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதாவது சிறுகதையின் முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரும்பாலான கதைகள்  ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக் காட்டி முடிகின்றன அல்லது கேள்விக் குறியில்.

     மொத்தத்தில் சிறுகதை என்பது அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்."

   சுஜாதாவின் வரையறைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

    ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். எப்போதோ படித்ததாக இருந்தாலும் இப்போதும் மனதில் அவ்வப்போது நினைக்கத் தோன்றுபவை சிறந்த சிறுகதைகள் 
அதன் படி என் மனதில் நிற்கும் சில சிறுகதைகள் 

1. காளையர் கோவில் ரதம் 
இது பள்ளியில் Non Detailed புத்தகத்தில் படித்தது. இதை எழுதியவர் ஜெகசிற்பியனா? கோ.வி.மணிசேகரனா? என்று நினைவில் இல்லை.
2. The Blind Dog- R.K.Narayan.  இது ஆங்கில Non detail இல் படித்தது.
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்- இதுவும் Non detailed
4. மாஞ்சு- சுஜாதா - குமுதத்தில் படித்தது என்று நினைக்கிறேன்
5. வெறுங்கையே மீண்டுபோனான்.- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. விகடனில் படித்தது
  இந்த கதையை மூத்த பதிவர் சென்னை பித்தன்  பதிவாக வெளியிட்டிருந்தார். நானும் இதை அவருடைய வலைப்பக்கத்தில்தான் சமீபத்தில் படித்தேன். 
 7. யாரோ பார்க்கிறார்கள். -எப்போதோ படித்ததை(எங்கு படித்தது என்பது நினைவில் இல்லை) என் விருப்பத்திற்கேற்ப  மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
(மேற்குறிப்பிட்டவை எல்லாம் பழைய எழுத்தாளர்கள் எழுதியவை.)

   இது போல சில சிறுகதைகள் உங்களையும் கவர்ந்திருக்கலாம். முடிந்தால் அவற்றை கருத்தில் தெரிவிக்கவும்.

******************************************************************************************

படித்து  விட்டீர்களா?
கணினி! நீ ஒரு டிஜிடல் ரஜினி !
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

30 comments:

 1. ஒரே வட்டத்தில் இருக்க எப்போதும் விரும்புவதில்லை T.N.MURALIDHARAN அவர்களே... நன்றி... பாராட்டுக்கள்...!

  ReplyDelete
 2. pirayojanamaana pakirvu ..

  nantri!

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு.... சிறுகதைகளை கிறுக்கும் எங்களைப் போன்றோர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்...
  அருமை... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. ஆம் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

   Delete
 4. சிறுகதைக்கான இலக்கணம் என்று சுஜாதா சொன்ன சில விஷயங்களை இங்கே பகிர்ந்தமை நன்று......

  ReplyDelete
 5. அண்ணா பதிவு அருமை வாழ்த்துக்கள்..

  என்னோட சொய்ஸ்

  //கம்ப்யூட்டரே கதை சொல்லு// என்ற ஒரு சிறுகதை தொகுப்பை சொல்லலாம்.. அதில் பல முயற்சிகளை கையாண்டிருப்பார் சுஜாதா..

  மிக நுட்பமாக கதை சொல்ல பட்டு நம்மை ஏமாற்றி இருக்கும்.. உட்கார்ந்து யோசிக்கும் போது தான் மிச்ச சொச்சம் புரிய வரும்..

  நாவல்கள் தவிர்த்து சிறுகதை தொகுப்புக்கள் மிக குறைந்தளவே வாசித்து இருக்கிறேன்..

  உங்க பதிவை வாசித்தவுடன் டக்குனு வந்த கதைகள் இவை தான்

  1. மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல.. (கதைக்கு முடிவு இருக்காது, கிட்டத்தட்ட ஒரு வட்டம் போல சுற்றி கொண்டே இருக்கும். ஆனால் லாவகமாக நூல் வைத்து மாற்றி இருப்ப்பார் சுஜா.. )

  2. ஒரு கதையில் இரண்டு கதைகள் (அவ்ளோ பெருசா சூப்பர்னு சொல்ல முடியல ஆனால் 2 கதைகள் லாவகமா சந்திக்கும்)

  மிஸ் பண்ணி இருந்தால் கட்டாயம் வாங்கி வாசியுங்கள்..

  உங்க பதிவை வாசித்தவுடன் டக்குனு வந்த கதைகள் இவை தான்..

  புக் link - http://www.udumalai.com/?prd=&page=products&id=2993

  ReplyDelete
  Replies
  1. //மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல.. // நான் பலமுறை படித்து வியந்து மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் ஹாரி

   Delete
 6. சுஜாதா சொல்வதில் பெரும்பாலும் சத்தியமான உண்மைகள்

  ReplyDelete
 7. சுஜாதா என்றென்றும் சுஜாதாதான். சுஜாதாவின் கணேஷ் வசந்த் தொடர் கதைக்காகவே, சாவி, குங்குமம் என்று பல வார இதழ்களை வாங்கிச் சேர்த்துவைத்து, பின்னர் பைண்டு செய்து புத்தகமாக மாற்றிய நினைவுகள் மனதில் வலம் வருகின்றன அய்யா.
  தாங்கள் கூறியவாறு கணினியுடன் எனது அனுபவம் பற்றிய கட்டுரையினை தயார் செய்துவிட்டேன் அய்யா. இரண்டொரு நாளில் பதிவிடுகின்றேன். நன்றி

  ReplyDelete
 8. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை.//உண்மைதான்

  ReplyDelete
 9. மறந்து போன சுஜாதா கதைகளும் உண்டு. மறக்காத மற்ற எழுத்தாளர்களின் கதையும் உண்டு.

  நிறையச் சொல்ல முடியாவிட்டாலும், அனுராதா ரமணனின் ஒரு சிறுகதை சொல்லலாம். சாகக் கிடக்கும் கணவன் மனைவியை தன் மகனிடம் உடனே ஓடி, தன்னுடைய நிலையைச் சொல்லும்படிச் சொல்வது. மகன்கள் ஏற்கெனவே தாயை 'இனி தொந்தரவு வேண்டாம்' என்று எச்சரிக்கைச் செய்துச் சென்றிருபார்கள். தான் இறக்கப் போகிறோம் என்பதும், மகன்களின் பாசமின்மையும் தெரியாத கணவனுக்கு அதை அப்போதும் தெரிவிக்காமல் மனைவி கையறு நிலையில், அவன் சொல்வதை உடனே நிறைவேற்றுவது போல வெளியே வந்து தாங்க முடியாத வேதனையுடன் அவன் சாகக் காத்திருப்பாள்.

  ReplyDelete
 10. நல்ல பதிவு.
  நானும் சுஜாதா அவர்கள் சொன்னது போல
  தான் எழுத நினைக்கிறேன். ஆனால்....????

  பகிர்விற்கு நன்றி மூங்கில் காற்று.

  ReplyDelete
 11. படித்த பத்து வரி கவிதைகள் கூட பலசமயம் பல ஆண்டுகள் நம் நினைவிலேயே நிற்கும்.

  ReplyDelete
 12. எனக்கு தெரிந்தவரையிலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள்தான் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சமூகத்தில் அடிதட்டில் வாழும் மக்களைப் பற்றி, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அவலங்களை உணர்வுபூர்வமாக எழுத்தில் வடிப்பதில் அவருக்கு நிகர் தமிழில் வேறு யாரும் இல்லை என்றே கருதுகிறேன். சுஜாதா மாதிரி வார்த்தை ஜாலங்கள் எல்லாம் இருக்காது. ஆனால் கதாபாத்திரங்களை அப்படியே எவ்வித பூச்சும் இல்லாமல் நம் கண் முன்னே நிருத்துவார். ஜெயகாந்தன் சிறுகதைகள் என்று கூகுளில் தட்டினாலே அவருடைய பல சிறுகதைகள் இணையத்தில் கிடைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. ஜெயகாந்தன் சிறப்பாக எழுதக் கூடியவரே

   Delete
 13. சிறுகதை குறித்த சுஜாதாவின் கருத்துக்களை பதிவாக்கி தந்தமைக்கு நன்றி! எனக்கும் சுஜாதா போல எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு! முயற்சிக்கிறேன் நல்ல சிறுகதைகளை தர! நன்றி!

  ReplyDelete
 14. கதைகள் எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த பதிவு !

  ReplyDelete
 15. வணக்கம்
  முரளி(அண்ணா)

  வலைப்பூவில் எழுதும் படைப்பாளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான பதிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 16. கதை எழுதுபவர்களுக்கு தேவை..

  ReplyDelete
 17. Replies
  1. நீங்கள் பகிர்ந்த சிறுகதையை குறிப்பிட்டிருக்கிறேன். கவனித்தீர்களா?. அந்த சிறுகதை படித்தவுடன் எனக்கு பிடித்துப் போனது.

   Delete
 18. நாம் உணர்வதை எல்லாம் சிறுகதையாக வடித்துவிடலாம்... ஆனால் படிக்கும் வாசகரிடத்தில் ஒரு சின்ன அதிர்வையாவது ஏற்படுத்தினால்தான் அந்த எழுத்துக்கான வெற்றி! வாசகரின் ரசனைகள் மாறுபடலாம். காலத்திற்கு ஏற்ப கதையின் வேகம் இருக்கும். மிக பழைய கால சிறுகதைகளில் வர்ணனைகளே பாதி இருக்கும்... நிறைய திருப்பம் இருக்காது.. ஆனால் ஜெயகாந்தன் அப்போதே அத்தனை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாரே என்று வியந்ததுண்டு!  ReplyDelete
  Replies
  1. ஜெயகாந்தனின் வேறு சில கதைகளும் எனக்கு பிடிக்கும். இன்னும் பல உண்டு.
   கருத்திற்கு நன்றி

   Delete
 19. காளையார் கோவில் ரதம் -எழுதியவர் கண்ணதாசன்.

  ReplyDelete
 20. என்ன முரளி!!! சுஜாதாமேல் கன்னா பின்னானு அபிமானம் வச்சிருக்கீங்க!!! :)

  சிறுகதைனா தி ஜானகிராமன் அவர்கள்தான் #1 எழுத்தாளர். சுஜாதா எல்லாம் கத்துக்குட்டிதான். என்ன ஜானகி ராமன் எல்லாம் சுஜாதாபோல இதுதான் விதி, இப்படித்தான் எழுதனும்னு அறிவுரையெல்லாம் வழங்கமாட்டார். அவர் பாட்டுக்கு சிறுகதையை எழுதிட்டு போயிட்டே இருப்பாரு. என்னைப்பொறுத்தவரையில் சுஜாதாவின் இந்த "இலக்கணத்தை" முயல்வதற்கு.. இதுபோல் தொடுப்புகளை வாசிக்கலாம்!

  http://jerz.setonhill.edu/writing/creative1/shortstory/

  Contents

  Get Started: Emergency Tips
  Write a Catchy First Paragraph
  Develop Your Characters
  Choose a Point of View
  Write Meaningful Dialogue
  Use Setting and Context
  Set up the Plot
  Create Conflict and Tension
  Build to a Crisis or a Climax
  Deliver a Resolution

  ReplyDelete
 21. //ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை.
  //
  நல்ல கதைக்கான மிகச்சரியான இலக்கணம்
  //ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது
  //

  உண்மை தான்

  என் நினைவில் உள்ள சிறுகதைகள் :

  1.தமிழருவி மணியன் அவர்கள் எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவின் போது "மாதா கோவில் மணியோசை" என்றொரு கதை சொல்லி இருந்தார், மூன்று வருடம் ஆயிற்று,இன்னும் நினைவில் இருக்கிறது அந்த கதை ...
  2.சுஜாதா வின் "அரிசி" சிறுகதை மற்றும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் உள்ள கதைகள்
  3.எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்

  ...சில கதைகளின் தலைப்புகள் நினைவில் இல்லை, கதை மற்றும் நினைவில் இருக்கிறது.

  நல்ல பகிர்வு சார் :)

  ReplyDelete
 22. ஒரு சிறந்த எழுத்தாளனின் அனுபவக் குறிப்பு இது நிட்சயம்
  பலருக்கும் பயன் தரும் .கதையோ கவிதையோ எழுதும் போது
  பொழுதுபோக்காக எண்ணிக்கைகளைப் பெருக்கிச் செல்வோர்கள்
  இந்த வாசகத்தை அவசியம் படிக்க வேண்டும் .உணர்வுகளோடு
  ஒன்றிப் போகாத எக்கருத்தும் காலப் போக்கில் வாசகர்களின் மனதில்
  நிலைப்பது கடினமே .வாழ்த்துக்கள் சிறப்பான தகவல் ஒன்றினைப்
  பகிர்ந்துள்ளீர்கள் .தேடல் மேலும் தொடரட்டும் சகோதரரே .

  ReplyDelete
 23. எனது தளத்தில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். இதோ இணைப்பு:
  https://yarlpavanan.wordpress.com/2015/02/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895