என்னை கவனிப்பவர்கள்

சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 பிப்ரவரி, 2015

எப்படி கதை எழுதுவது?சுஜாதா+ரா.கி.ரா டிப்ஸ்



      வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோருடைய கதைகளும் பிரசுரத்திற்கு ஏற்கப் படுவதில்லை. கதை எழுதி அனுப்பி சோர்ந்து போய் ஒரு கட்டத்தில் எழுதுவதையே விட்டு விடுவார்கள். ஒரு சிலர்க்கு எப்படியோ வாய்ப்பு கிடைக்கிறது.  தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். 

    ஆனால் இப்போது அந்த நிலை இல்லை நாம் எழுதியதை நாமே வலைப் பூக்கள்,முகநூலில் வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. பல பேர் படிக்கிறார்கள். ஆரம்பத்தில் நட்புக்காக நாம் எப்படி எழுதினாலும் சிலர் நமது படைப்புகளை வாசிக்க  வருவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் நன்றாக  எழுதினால் மட்டுமே வாசிப்பவர்களின் தொடர்  வருகையை உறுதிப் படுத்த முடியும் என்ற நிலை  உருவாகி விடுகிறது .

   கதை கட்டுரை எதுவாக இருப்பினும் ஒரு சுவாரசியம் எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி இருந்தால் மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். நகைச்சுவை,சுவாரசியமான எழுத்து நடை, நல்ல உள்ளடக்கம், வித்தியாசமான சிந்தனை போன்றவை நம்மை பிறரிடம் இருந்து தனித்துக் காட்டும். ஆரம்பத்தில் சுமாராக எழுத ஆரம்பித்த ஒரு சிலர்  பிறகு தொடர்ந்து கிடைக்கும்  அனுபவத்தைக் கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்தன் மூலம் அதிக வாசகர்களை பெறுகிறார்கள்.
எழுதத் தொடங்கு பவர்களுக்கு ஒரு பயிற்சி இருந்தால் எப்படி இருக்கும் . பல காலம் தானே கற்று அறிய வேண்டியவற்றை  பயிற்சியின் மூலம் எளிதில் பெற முடியும். கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவு வகையில்    பிரபல எழுத்தாளர் ராகி ரங்கராஜன் குமுதத்தில் எழுதிய  'எப்படிக் கதை எழுதுவது' என்று தொடர்   புத்தகமாகவும் வெளி வந்துள்ளது . கதை எழுத முயல்வோர்க்கு ஏராளமான ஆலோசனைகளை அந்நூலில் வாரி வழங்கியுள்ளார் ராகி ரங்கராஜன். ஏகப்பட்ட  உதாரணங்கள் மூலம் கதை எழுதும் கலையை விளக்கியுள்ளார். ஒருஎ.க.எ. என்ற  பயிற்சி பள்ளியும் நடத்தி வந்ததாகவும் அதில் கிட்டத்தட்ட 2000 பேர் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.அவர்களில் தற்போதைய சிலபிரபலங்களும் உண்டாம்.
    அந்நூலில் பிரபல எழுத்தாளர்கள் பலர் கதை எழுதுவதற்கு வழங்கிய  டிப்ஸ் கள் இடம் பெற்றிருக்கின்றன.    இன்றைக்கும் நிறையப் பேரின் மனம் கவர்ந்த எழுத்தாளராக விளங்கும் அமரர் சுஜாதாவும் கதை எழுதுவோருக்கு அந்நூலில் வழங்கியுள்ள டிப்ஸ் இதோ?
இவை பத்திரிகையில் எழுதி அனுப்புவோருக்கும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்வோருக்கும் , ஏன்  வலையில் எழுதுவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 

  1. பத்திரிகைகளுக்கு ஏற்ற வகையில் எழுதுங்கள். கணையாழிக்கு எழுதுபவற்றை ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு அனுப்பாதீர்கள் 
  2. தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். பாம்பே ரங்காச்சாரி வீதி இரவு எழு மணிக்கு இருள் என்று எழுதாதீர்கள்.பம்பாயில் ரங்காச்சாரி தெருவும் இல்லை,இரவு ஏழு மணிக்கு இருளும் இல்லை என்று ஒரு கோஷ்டி கடிதம் எழுதக் காத்திருக்கும் 
  3. அந்தரத்தில் எழுதாதீர்கள் .உங்கள்  கதை கருத்தட்டாங்குடியிலோ மதராஸ் 78 லோ  எங்காவது ஓரிடத்தில் நிகழட்டும் . அதற்கு கால்கள் வேண்டும் ஜியாகரபி வேண்டும். மிக சுலபம் உங்கள்  ஊர் உங்கள் வீதி ( விவகாரமான சம்பவங்களை உங்கள் ஊரில் நடந்தது என்று எழுதி பெருமாள் முருகன்  மாதிரி மாட்டிக் கொள்ளாதீர்கள்  என்று இப்போது இருந்தால் சொல்லி இருப்பாரோ/)
  4. சொந்தக் கதையை எழுதாதீர்கள் . மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள் .  இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதுங்கள் கேஸ் போட்டால் உண்மைசம்பவம் அல்ல என்று தப்பிக்கலாம்
  5. பெரிய பெரிய வாக்கியங்கள் வேண்டாம்.உமிழ் நீரை தொண்டைக் குழியில் இருந்து உருட்டி திரட்டி உதடுகளின் அருகே கொண்டு வந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான் என்று சொல்வதை விட துப்பினான் என்பது மேல். 
  6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள் . அவன் இவன் போன்ற வார்த்தைகள் விதி விலக்கு 
  7. 'அவன் மணத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்' என்றெல்லாம் எழுதாதீர்கள்.
  8. தெரிந்தவர்கள் உறவுக் காரர்களின் பெயர்களை கதை மாந்தர்களுக்கு வைக்காதீர்கள் .டெலிபோன் டைரக்டரியையோ செய்தித் தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள் .
  9. வளவளவென்று எழுதாதீர்கள் . முதலில் எழுதியதை பாதியாகக் குறைத்து அதே கதையை சொல்ல முடியுமா என்று பாருங்கள். 
  10. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள் . அதற்கு முதல் தேவை நிறையப் படிக்க வேண்டும் 
  11. எழுதுவதை நிறுத்தாதீர்கள் .சளைக்காதீர்கள் .ஒரு நாள் தெரியாத் தனமாக போட்டு விடுவார்கள் எல்லோரிடமும் நல்ல கதை இருக்கிறது குட் லக்
ரா.கி.ரா சொல்லும் சில டிப்ஸ்
  1. கதைகளில் ஏகப் பட்ட பாத்திரங்களை படைக்காதீர்கள். அவர் யார் இவர் யார் என்பதை புரிந்து கொள்ள முன் பக்கத்தை புரட்ட வேண்டும் 
  2. கதையை சட்டென்று ஆரம்பித்து விடுங்கள். பொறுமையை சோதிக்கும் வர்ணனைகளை தவிர்க்கவும்.
  3. சென்னைத் தமிழோ கரிசல் காட்டு தமிழோ வட்டார மொழியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள் 
  4. நல்லவன் பல்டியடித்து வில்லனாக மாறுவது அசட்டுப் பெண் புத்திசாலியாவது போன்ற கேரக்டர்கள் வேண்டாம் 
  5. ஒரு குறிப்பிட கட்டத்தை தாண்டி விவரமாக எழுதாமல் கிடுகிடுவென்று கதையை கொண்டு செல்லாதீர்கள் 
  6. படிக்கிறவர் ஒரு பாத்திரத்தை ஒன்று நேசிக்க வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும் .
  7. ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய கதையை இன்னொரு பத்திரிகைக்கு உடனே அனுப்பாதீர்கள் 
  8. கதையை எழுதி முடித்த பின் பலமுறை மீண்டும் படியுங்கள்.
  9. ஒருபோதும் காப்பி அடிக்காதீர்கள்.
  10. தொடர்ந்து எழுதுங்கள் 
இவற்றில் தற்கால சூழலுக்கு எது பொருந்துகிறதோ அவரை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமானது .இவை ஆலோசனைகளே தவிர அத்தனையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறிப்புகள் ஓரளவிற்கு உதவுமே தவிரயையே வெற்றியைத் தந்து விடாது. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் இவற்றை எல்லாம் மனதில் கொண்டு எழுதவில்லை.அவர்கள் கதைகளுக்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டு குறிப்புகள் தந்திருக்கிறார்கள்.மற்றவர்களை படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செய்யும் முயற்சி வெற்றியக் கொடுக்கும் .

அட! நமக்குத்தான் எழுத வரவில்லை நீங்களாவது நன்றாக எழுதுங்க என்பதற்குத்தான் இந்தப் பதிவு 
************************************************************************
கொசுறு:  இதை யார் எழுதி இருப்பார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் 

எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்

******************************************************************************************
சுஜாதா தொடர்பான இதர பதிவுகள் 

                


நாளை: விஞ்ஞானி நியூட்டனின்  வில்லத் தனம் பகுதி 2


செவ்வாய், 28 அக்டோபர், 2014

சுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்


   (நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல இன்றைய தொழில் நுட்ப உலகில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இணையத்தோடு தொடர்பில்லை என்றால் அவர் முந்தைய தலைமுறையினராகவே அடையாளம் காணப்படுவார். அதனால்தான் எந்தத் துறை பிரபலங்களாக இருந்தாலும் முகநூல், டுவிட்டர், வலைப்பூக்கள் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். குறிப்பாக எழுத்தாளர்கள் இதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றனர். ஏற்கனவே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறார்கள். பல இணைய வாசகர்களையும் பெற்றிருக்கிறார்கள். 

  அப்படி சமீபத்தில் இணையத்தில் ஒரு வலைப் பதிவை துவக்கி இரண்டு மாதங்களாக எழுதி வருபவர் எஸ். சங்கரநாராயணன் அவர்கள். இலக்கிய உலகப் பிரபலம்   தரமான எழுத்துக்கு சொந்தக்காரர். அவரது வலைப்பதிவிற்கு பெயர் ஞானக் கோமாளிசில நாட்களுக்கு முன்பு அவரது வலைப் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. அவர் வலை உலகிற்கு புதியவர் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கதைகள் கட்டுரைகள் இலக்கிய விமர்சனங்கள் என்று இரண்டு மாதங்களில் ஏராளமான பதிவுகளை செய்திருக்கிறார். அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது பதிவுகள் விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். அவரது பதிவில் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரக் கூடிய சுஜாதா- பத்திரிக்கைப் பேராளுமை என்ற கட்டுரையைப் படித்தேன்.  அவரது அனுமதி பெற்று அந்தக் கட்டுரையை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.


எஸ்.சங்கரநாராயணன் 


பத்திரிக்கைப் பேராளுமை-சுஜாதா 


     ஆணாதிக்க சமுதாய அதீத தந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக் கொண்ட ராஜபாட்டையில் வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறு பெயர் சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரசியமே எழுத்தின் தாரக மந்திரம் அவருக்கு. சுவாரசியமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்கு ரெண்டாம் பட்சம்தான் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர், அவரை 'எழுத்துலகின் சிலுக்கு' என்று குறிப்பிட்டார் 

   புனைக் கதைகளில் அவர் எழுதிக் காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரை சொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதாராக நட்பு பேணுகிறவராக எளிமையானவராக இருந்தார். விளம்பரங்களில் சினிமாக்களில் கொஞ்சூண்டு ஆபாசம் நல்லது என்பார்கள். திட்டுவான் என்றாலும் மனசில் நிக்குமே, என்கிற வியாபார தந்திரம். அதைத்தான் 'சுஜாதா காலம்' என்கிற பத்திரிகைப் பேராளுமை நிறுவி அடங்கியிருக்கிறது. பூகம்பம் பற்றி எழுதும்போது கூட அவரால் 'கட்டில் கெட்ட காரியம் பண்ணினாப் போல ஆடியது ' என்றுதான் எழுத முடிந்தது.

   ஒரு கதையில் ஆம்பளைங்க செய்யிற அத்தனை காரியத்தையும் பெண்ணால் செய்ய முடியுமா? என் அவர் கேட்டார்.ஆணைப் போல பெண்ணால் உயரத்துக்கு ஸ்விங் என்று ஒண்ணுக்கடிக்க முடியுமா என கேட்டார். அதன் பேர் நகைச்சுவை?. பிற்பாடு ஒரு திரைப்படத்தில் அவர் எழுதிய வசனமாகவும் அது இடம் பிடித்தது. சுய அங்கீகாரம்!

  வணிகப் பத்திரிகையில் அவரும் ஓவியர் ஜெயராஜும் கொட்டமடித்தார்கள். பெண்களை பனியனுடன் வரைந்து அதில் 'மில்கி வே' என்று வாராவாரம் புதிய வார்த்தைகளாக எழுதி மகிழ்ந்தார் ஜெ. கதையில் இல்லாதவர்கள் எல்லாம் ஜெயின் கற்பனையில் முளைத்தன.கதையில் வரும் பெண் பனியன் போடாவிட்டாலும் ஜெ, அணிவித்தார்.             


    மொழியில் சுறுசுறுப்பு விறுவிறுப்பு வேகம் கூட்டிக் காட்டிய நடை கூட அதே சமயத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் என என எழுதிவந்த,பிற்பாடு சிவப்பு விளக்குக் கதைகள் தொடர்ந்து தந்த புஷ்பா தங்கதுரை எழுதிக் காட்டிக் கொண்டிருந்த நடைதான் . பரவலாய் சுஜாதாவுக்கு கிடைத்த அங்கீகாரம், சாவி போன்றவர்கள் சுஜாதாவை உயர்த்திய உற்சாகம்-சுஜாதாவின் சலவைக் குறிப்பைக் கூட வெளியிடுவீர்களா -என்ற கேள்வி கேட்டபோது சாவி சலவைக் குறிப்பை வாங்கி வெளியிட்டார். எழுத்துக்கு சன்மானம் என்று பரபரக்காத,விரட்டி விரட்டி கேட்காத எழுத்தாளர்களைத் தமிழ்ப் பத்திரிகைக்கு ரொம்பப் பிடித்தது. அவை அவரை உயர்த்திப் பிடித்தது.

             மர்மக் கதை என்ற பெயரில் அவர் கொண்டு வந்த கணேஷ் வசந்த், அதில் வசந்தின்  குறும்பு என்ற பெயரிலான ஆபாச வசனங்கள்,"பொண்ணு சூப்பர் பாஸ். நின்னு விளையாடலாம் " எல்லாம் இளைஞர்கள் ரகசியமாய்ப் படித்து சிரித்து மகிழ்ந்து பொது சந்திப்பில் பரிமாறி உற்சாகப் படுத்திக் கொண்டார்கள் 
  
   அவர் எழுதிய மர்மக் கதைகள் ஆங்கிலத்தில் பரவலாகஅறியப்பட்டதின் தாக்கங்களே. சில சமயம் அதே மொழிப்பாடுகளைக் கூட சுஜாதா கையாள முயன்றார். 'எனார்மஸ் பிரஸ்ட்' என்பதை தமிழில் ஏராளமான மார்பு என்று இளைஞர்களை புல்லரிக்க வைத்தார்..சோப்பில் சாவியை பதித்து மாற்று சாவி செய்யும் உத்தியை ஆங்கிலத்திலேயே நான் வாசித்திருக்கிறேன்.

          நச் என்ற சிறுகதைகளால் தந்தாதால் சுஜாதா கவனம் பெற்றார். அவை பெரும்பாலும் மையப்புள்ளி விலகிய கதைகளே.ஒரு விபத்தை சொல்லி, மற்றொருபுறம் ஒரு பெண் கணவனுக்கு காத்திருப்பதாக சொல்லிக் கொண்டே வருவார். விபத்தானவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவான் ஒருவன். கடைசி திருப்பமாய் அந்தக் காப்பாற்றப் போனவனின் மனைவிதான் காத்திருக்கிறாள் , என்று முத்தாய்ப்பு வைப்பார் சுஜாதா. திருப்பம்; அது அவருக்கு முக்கியம் .வித்து ஒரு மன பாதிப்பை நிகழ்த்தவில்லை.  

  மும்பை இட நெருக்கடி பற்றி ஒரு கதை . தெருவில் ஒருவன் விபத்தாகிக்  கிடப்பான். அவன் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒருவன் ஓடோடிப் போனால் அவனுக்கு முன்பே வாடைக்கு வேறு ஒருவன் முந்திக் கொண்டிருப்பான். பெரும்பாலான கதைகளில் இப்படி உணர்வு வீர்யமான கட்டங்களை கதைப் போக்கின் சுவாரசியத்துக்கு  விட்டுக் கொடுத்தார் சுஜாதா. வாழ்க்கைக்கு சிறிதும் நியாயம் செய்யாத கதைகள்.


    முதல் மனைவி சாகக் கிடக்கும் கணவன் அருகில் பணி விடை செய்கிறாள்.இரண்டாம் மனைவி கிட்டவே வரவில்லை. கண் திறந்த கணவன் முதல் கேள்வியாய் இரண்டாம் மனைவி எங்கே என்று கேள்வி கேட்பான் 

              பெரும்பாலான எழுத்தில் சுஜாதா யார் என்று வரையறுத்தாக வேண்டும். சுஜாதாவின் எழுத்து இளைஞர்களை குறிவைத்து வெற்றிகரமாக இயங்கியது.விவரப் பதிவுகளுடனான நடையே அப்போது புதிது. அதில் சில வேளை கருத்துப் பிழை வரும். ஏழாவது மாடியில் இருந்து 180 கி.மீ வேகத்தில் விழுந்து செத்துப் போனான் என அவர் எழுதினால் ஒரு வாசகர் புவி ஈர்ப்பு விசைப்படி கீழே வரவர வேகம் அதிகரிக்குமே சீரான வேகம் என்று பெப்படி சொல்வீர்கள் என்று கேட்க நேர்ந்தது. சில சமயம் அதையும் அவர் கிண்டல் போல மாமா சித்தப்பா எல்லோருக்கும் போஸ்ட் கார்டு வாங்கிக் கொடுத்து எழுதிப் போட்டி விடுகிறார்கள் என் எகிறியது உண்டு.

    நடையில் புதுமை இறங்கினான் என ஒவொரு எழுத்தாக தனி வரியாக எழுதிக் காட்டியதும் அப்போது 'ஜான் அப்டைக்' ஆங்கிலக் கவிதைகளில் செய்ததுதான் .இலை உதிர்கிறது என்பதில் உ  தி  ர்  கி  ற  து  என எழுதிக் காட்டும்போது தள்ளாட்டம் கண்ணில் உணர முடிகிறது. எப்போதும் மூலத்தின் வீர்யம் அதிகம்தான் 

   தில்லியில் கஸ்தூரி ரங்கனுடன் பரிச்சயம் நெருங்கி கணையாழியில் பத்திகள் எழுத வந்தது தற்செயல் என்றாலும் அதில் புதுசு புதுசாய் எழுத சுஜாதா உற்சாகம் காட்டினார். பத்தி வகைமையே அப்போது அரிதான காரியம்.பத்தி எழுத சுவாரசியமான நடையும் அதைவிட சுவாரசியமான விஷயமும் வேண்டும்.அவரால் முடிந்து. பிற்பாடு பெருஞ் சுற்றிதழ்களும் அவரை பத்தி எழுத வைத்தன.ஒருகட்டத்தில் புனைக் கதை எழுத்தாளர் தளர்வுறும்போது பத்தி எழுத்து அபாரமாய் கை கொடுக்கும்.

   சுஜாதா பத்திகளில் நவீன இலக்கியம்,மரபிலக்கியம் ,சங்க இலக்கியம்,சமகால விஷயம், விஞ்ஞான விஷயம் என்று அடுக்குகளை மாற்றி ஒரே பக்கத்தில் கொடுத்து அந்தப்  பகுதியை செறிவூட்டினார். சிறந்த கவிஞர்கள் என அவர் வணிக இதழ்களில் அடையாளம் காட்டியவர்களின் கவிதைகளை சுஜாதா இல்லை என்றால் அவர்கை இதழ்கள் கண்டு கொண்டிருக்காது. வணிக இதழ்களில் நல்லிலக்கிய அறிமுகம் என்று அவர் மனதாரச் செய்தார் என்றுதான் தோன்றுகிறது. இந்தியா டுடே கூட ஒரு சிறப்பு மலருக்கு அவரிடம் இருந்துதான்  தற்காலக் கவிதை என்ற தலைப்பில் கட்டுரை எழுதக் கேட்டது.

  அந்த ரசனையில் பாசாங்கு கிடையாது. வெண்பாப் போட்டி ஹைக்கூ கவிதைப் போட்டி என்று அவர் ஊக்குவித்தார்.பரிசிளித்தார்.அவர் ஊக்குவித்த இலக்கிய அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகள்,அவர்களும்  எழுத்து சுவாரசியக் காரர்கள் என்று குறிப்பிடத் தக்கது.

   வணிகப் பத்திரிக்கைகள்  ஓரளவுக்கு தரமான இலக்கிய முயற்சிகளுக்கு பழகிக் கொண்டிருக்கின்றன.மூஞ்சி சப்பையாய் கைகால் நெளிசலாய் இருந்தாலும் அந்த ஓவியங்களை வெளியிட மக்களும் சரி என்று பழகிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கதை என்று இலக்கிய முகம் காட்ட  இப்படி அடையாளங்கள். இதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. போற்றுதலுக்குரியது. அது அவரால்முடிந்தது. அதை அவர் வாய்ப்பை நழுவ விடாமல் செய்தார்.

   நாடகங்களில் பிழியப் பிழிய அழுக குலுங்க குலுங்கச் சிரிப்பு என்றில்லாமல், மாமி கதைகளாகவும் இல்லாமல் சுவாரசியம் விலகாத குடும்பக் கதைகளை, சராசரி மனித வியாகூலங்கலை நம்பிக்கைகளைப் பிரதிபலித்தார். பூரணம் விஸ்வநாதன் சுஜாதாவுக்கு கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்தான். தனி முத்திரை பதித்தன அந்த நாடகங்கள் சினிமாவிலும் அவரை சினிமாவின் போக்கோடு இயக்கினார்கள்.தன அடையாளம் இன்றி அவருக்கிருந்த சுவாரசியப் போக்கு,அலட்சிய பாவனை, கொண்டாடும் நகைச்சுவை என்று வேண்டியதைப் பெற்றுக் கொண்டார்கள். சினிமாவில் அவர் தேவைப் பட்டார். சினிமா இளைஞர்களுக்கான ஊடகம் அங்கே அவர் இல்லாமல் எப்படி?

     பிற்காலங்களில் அவர் விஞ்ஞானக் கதைகள் எழுத ஆரம்பித்தார்.அது சுஜாதா என்பதால் அதற்கும் இங்கே அங்கீகாரம் கிடைத்தது. வேறு எழுத்தாளர்க்கு இது  நிகழ்ந்தேயிராது. யாரும் முயற்சி செய்து தோற்றிருக்கலாம். தேர்தல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வர அவரது பங்களிப்பு சிறப்பானது என் இரங்கல் செய்தில் தமிழக முதலர் நினைவு கூர்ந்தார். தவிரவும் விஞ்ஞானக் கலைச் சொல் அகராதி அவர் முனைந்து கொண்டு வந்ததை சொல்லியாக வேண்டும். தமிழில் தட்டச்சு செய்து கணினியில் நேரடியாகக் கதைகள்  எழுத ஆரம்பித்த எழுத்தாளர் சுஜாதா தான் . முதல் இணைய தளப் பத்திரிக்கை 'மின்னம்பலம்' த்வங்கியது வரலாறு குறித்துக் கொள்ளவேண்டிய செய்தி.

   சதா வாசிப்பு ருசிகொண்ட மனிதராக இருந்தார் சுஜாதா.இலக்கியப் போக்கு என்று பொத்தாம்பொது கருத்துக்களை  நகைச்சுவை சாயம் பூசி அவர் எழுதினாலும்,எந்த எழுத்தாளரையும் விரல் சுட்டினாற்போல் சாடியது இல்லை. பத்திரிகைக் காரர்கள் கேட்கும்போதெல்லாம் சிறுகதை,தொடர்கள் என்று வாரி வழங்கிக் கொண்டே இருந்தார். சுஜாதா. அவர் எழுதினால் பத்திரிக்கை விற்பனை கிடுகிடுவென உயரந்தது.கல்கி சாண்டில்யனுக்குப் பிறகு அந்தப் பெருமை சுஜாதாவுக்குத்தான் கிடைத்தது.

    நமது மண்ணின் மரபுப் படியே அவர் வயது முதிர, பழைய இலக்கியங்களிலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டினார்.புறநானூறு பொழிப்புரை தந்தார்.வைணவ இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்.

  தமிழ் எழுத்து நடையில் சுஜாதா வேகத்தையும் குறியையும் தந்து விட்டுப் போயிருக்கிறார். அவரது ஆளுமை அழியாது என்றுதான் படுகிறது.காலாகாலத்துக்கும் இளைய தலைமுறையாளர்கள், தங்களை இளமையாக  உணர்கிறவர்கள் அவரைக்  கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்

*********************************************************************************

நன்றி : எழுத்தாளர்:எஸ். சங்கர நாராயணன்அவர்கள் 
       இணைப்பு:          ஞானக் கோமாளி இணையதளம் சென்றால் அவரது படைப்புகளைப் காணலாம் (படிக்கலாம்)

******************************************************************************

கொசுறு: சுஜாதா எழுதிய முதல் நாவல் நைலான் கயிறு இந்த வாரத்தில் இருந்து மீண்டும் குமுதத்தில் வெளிவர இருக்கிறது.
                

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?

  தற்போது  சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ கேட்கவே வேண்டாம். புத்தகக் கண்காட்சியின்போது ஆர்வத்தின் காராணமாக வாங்கி வைத்த நாவல்கள் இன்னமும் படிக்கப் படாமல் (படிக்கமுடியாமல்) அலமாரியில் உறங்குவதாக  பலரும் சொல்கின்றனர். ஆனாலும் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
  ஒரு சிறு கதை எப்படி இருக்கவேண்டும் என்பதை சுஜாதா இப்படிக் கூறுகிறார். தற்போது எழுதுபவர்கள் அதை கருத்தில் கொள்ளலாம்.

   "எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்ட கதை. நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக விவரிக்கப்பட்ட கதை. சிறிதாக என்றால் சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லலாம் என்று குத்து மதிப்பாக கொள்ளலாம். நூறு பக்கம் இருந்தால் அதை சிறுகதை என்று ஒப்புக் கொள்வது கடினம்.அதே போல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதை சுருக்கம். நான்கு வரிகளுக்கு கீழ் இருந்தால் கவிதையாக சொல்லிவிடலாம்.சில நேரங்களில் சில கட்டுரைகளை கூட சிறுகதையாகக் கருதலாம். 

   கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள்.ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும்.யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம். நூற்றாண்டுகாலத்தையோ  சில நிமிஷங்களையோ சொல்லலாம். கருப்போ சிவப்போ,ஏழையோ, பணக்காரனோ, வயதானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ, தர்மகர்த்தாக்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளாகவோ எந்த கதாபாத்திரமும் தடை இல்லை.மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம்.கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்க சிரிக்க சொல்லலாம். கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

    இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதையில் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பொது அம்சம்தானுண்டு. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய்விட்டால் அது கதையல்ல. பஸ் டிக்கெட்.. ஒரு வாரம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதை. நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவலங்களையும் கடக்கின்றன. 

   ஒரு கதை உங்களை பாதித்திருந்தால் ஒரு மாதம்; ஏன் ஒரு வருடம் விட்டுக் கூட அதை நீங்கள் திருப்பி சொல்ல முடியும். இது உங்கள் ஞாபகப் பிரச்சனை அல்ல.கதையின் பெயர்கள்,இடம் பொருள்,ஏற்பாடெல்லாம் ஞாபகம் இராது. ஆனால் கதையின் அடிநாதம், அதில் படித்த ஒரு கருத்தோ வரியோ நிச்சயம்  நினைவிருக்கும். அப்படி இல்லை என்றால் அந்தக் கதை உங்களைப் பொருத்தவரை தோல்விதான்.

    இதே விதிதான் கவிதைக்கும். இதேதான் நாவலுக்கும். ஒரு வாசகன் தனக்கு பிடித்தமான எழுத்தாளனை நண்பனைப் போல தேர்ந்தெடுக்கிறான். காரணம் அந்த எழுத்தாளன் எழுதுவது அவனுக்குப் புரிகிறது

   நல்ல கதைகளை அலசிய ஹெல்மெட் பான் ஹைம் என்பவர் அவற்றுக்கு சில அடையாளங்களை சொல்லியிருக்கிறார். சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்துக்கு முன் கதையின் தொண்ணூறு சதவீதம் நடந்து முடிந்திருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதாவது சிறுகதையின் முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரும்பாலான கதைகள்  ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக் காட்டி முடிகின்றன அல்லது கேள்விக் குறியில்.

     மொத்தத்தில் சிறுகதை என்பது அற்புத கணத்தை நிரந்தரமாக்கும் ரசவாதம்."

   சுஜாதாவின் வரையறைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

    ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். எப்போதோ படித்ததாக இருந்தாலும் இப்போதும் மனதில் அவ்வப்போது நினைக்கத் தோன்றுபவை சிறந்த சிறுகதைகள் 
அதன் படி என் மனதில் நிற்கும் சில சிறுகதைகள் 

1. காளையர் கோவில் ரதம் 
இது பள்ளியில் Non Detailed புத்தகத்தில் படித்தது. இதை எழுதியவர் ஜெகசிற்பியனா? கோ.வி.மணிசேகரனா? என்று நினைவில் இல்லை.
2. The Blind Dog- R.K.Narayan.  இது ஆங்கில Non detail இல் படித்தது.
3. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்- இதுவும் Non detailed
4. மாஞ்சு- சுஜாதா - குமுதத்தில் படித்தது என்று நினைக்கிறேன்
5. வெறுங்கையே மீண்டுபோனான்.- எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. விகடனில் படித்தது
  இந்த கதையை மூத்த பதிவர் சென்னை பித்தன்  பதிவாக வெளியிட்டிருந்தார். நானும் இதை அவருடைய வலைப்பக்கத்தில்தான் சமீபத்தில் படித்தேன். 
 7. யாரோ பார்க்கிறார்கள். -எப்போதோ படித்ததை(எங்கு படித்தது என்பது நினைவில் இல்லை) என் விருப்பத்திற்கேற்ப  மாற்றி பதிவிட்டிருக்கிறேன்.
(மேற்குறிப்பிட்டவை எல்லாம் பழைய எழுத்தாளர்கள் எழுதியவை.)

   இது போல சில சிறுகதைகள் உங்களையும் கவர்ந்திருக்கலாம். முடிந்தால் அவற்றை கருத்தில் தெரிவிக்கவும்.

******************************************************************************************

படித்து  விட்டீர்களா?
கணினி! நீ ஒரு டிஜிடல் ரஜினி !
என்னை கவுத்திட்டயே சரோசா!-காதல் கடிதம் போட்டி
எனது முதல் கணினி அனுபவம் 
மீண்டும் திருவிளையாடல்

ஞாயிறு, 2 ஜூன், 2013

குடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின் பேட்டி

     வாழும்போது பரபரப்பாக பேசப்படுபவர் பலர்.  அவர்களில் இறந்து பின்னரும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் சிலர். அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. நேற்றே இணையத்தில் பரபரப்பு தொடங்க ஆரம்பித்தது விட்டது.  முகநூலில் கசிந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு  ஜெயமோகனுக்கு சுஜாதாவின் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை , வருண் "சுட்டி'க்காட்டினார்.  முக நூலில் அந்த  செய்தி சுஜாதா ரசிகர்களிடையே  கலக்கத்தை  உண்டாக்கியது. இந்த செய்தியை கேள்விப் பட்ட அவரது ரசிகர் ஒருவர்,உறவினராகவும் இருக்கக் கூடும் அவர் தவித்த தவிப்பு நமக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. சுஜாதாவின் மனைவியின் பேட்டி தினகரனில் இன்று வெளியாக  இருப்பதையும் அந்த பேட்டி சுஜாதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கப் போகிறது அதை தடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில்  ஜெயமோகனிடம் வேண்டுகோள் விடுத்தார் ரசிகர் ஒருவர்.  ஜெயமோகனுக்கு அந்த செய்தி ஆச்சர்யம் அளிக்கவில்லை.  நான் அப்போதே சொன்னேன் அவரை ஒரு முறை அவர் வீட்டில் பார்த்தேன். நாமம் போட்டுக் கொண்டிருந்தார். அதை சொன்னபோது யாரும் நம்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்திருந்தார். 
அப்படி  திருமதி சுஜாதா பேட்டியில் என்னதான் சொல்லி இருந்தார்? 
தினகரனில் அந்த பேட்டியைப் பார்த்ததும் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது உண்மைதான்,
  ஏற்கனவே ஒரு முறை பேட்டியில் ஒரு முறை சுஜாதாவின் மனைவி தன கணவரைப் பற்றி அதிகம் எங்களுடன்கூட பேசமாட்டார் எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார் என்று சொல்லி இருப்பதாக ஞாபகம். 
   "அவர் எப்போதும் தனி உலகில் சஞ்சரிப்பார் என்றும் மனைவி குழந்தைகள் என்று நினைவு அவருக்கு இருந்ததில்லை என்றும், குடும்பத்தை தாண்டி பெண்கள் வெளியே வரக் கூடாது என்று நினைப்பவர்  என்றும்  "இந்தக் காலமா இருந்தா நான் அவரை விட்டு பிரிஞ்சி இருப்பேன்" என்றும் பலவித விஷயங்களை சொல்லி அதிர வைத்தார். அந்த பேட்டியில் ஒரு இடத்தில் கூட சுஜாதாவைப் பற்றி நிறைவாகச் சொல்லவில்லை திருமதி சுஜாதா. ஆயிரம் கதைகள் எழுதியும் அன்பைக் காட்டத் தெரியாதவராகவே வாழ்ந்தார் என்று அவர் கூறி இருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் இறப்புக்குப் பின்தான் தான் மகிழ்ச்சியோடு இருப்பது போல தெரிவிப்பதாக அமைந்துள்ளது. எந்தப் பிரபலத்தின் மனைவியும் இவ்வளவு குறைகளை கணவர் மீது அதுவும் இறந்தபின்னர் சொன்னதாக கேள்விப் பட்டதில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் இருந்து இதற்கு மறுப்பு வெளியாகலாம்.

  ஆனால் இப்போது நன்கு படித்த அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று  அவர் சிந்திக்க இயலாதவராக இதைக் கூறி  இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.   அறியாமையிலோ ஆற்றாமையினாலோ சொன்ன விஷயங்களை  இப்படி வெளியிடுவது  சரிதானா? என்று கேட்கிறார் முகநூலில் தன் கவலையை வெளியிட்ட அந்த வெளிநாட்டு  ரசிகர். இது தொடர்பாக திருமதி சுஜாதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசி இருக்கிறார்.அப்போது திருமதி சுஜாதா"எந்த பத்திரிகை என்ன  பேட்டின்னு கூட விசாரிக்காம சும்மா பேசிக்கொண்டிருந்தேன் கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" என்றாராம்  
    எந்த மனைவியுமே தன் கணவனை விட்டு பிரிந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் அல்லது இவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நம் வாழ்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும்  என்ற எண்ணம்  எப்போதாவது ஒரு முறையாவது  ஒரு பெண்ணுக்கு தோன்றக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.
     அதை இப்போது வெளிபடுத்தப் பட்டுள்ளதால் சுஜாதாவின் பிம்பம் இதனால் சிதையக் கூடும் என்று அவரது தீவிர ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். படைப்பையும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கும் நமது வழக்கமே இதற்கு  காரணம். என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் புகழ் இதனால் குறைந்துவிடாது என்றே தோன்றுகிறது. புகழ் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இது அவரது திறமைக்கோ, படைப்புகளின் புகழுக்கோ பெரிய குறைபாட்டை  ஏற்படுத்தி விடாது..

   எழுத்துகளில் நவீனம் காட்டுபவர்கள் வாழ்க்கையிலும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நாத்திகராகவோ அல்லது ஆத்திகராகவோ தன்னை காட்டிக் கொண்டதில்லை என்றாலும்  அவர் ஆழ்வார் பாசுரங்களின் மீது  காட்டிய ஆர்வம் அவரை ஆத்திகராகவே உணரச் செய்தது.
    குறிஞ்சி மலர் என்ற புகழ் பெற்ற நாவலை ( நான் படித்ததில்லை கேள்விப்பட்டதோடு சரி) எழுதிய நா.பார்த்த சாரதியின் மீது சில ஆண்டுகளுக்கு முன்  அவர்மீது குற்றசாட்டு எழும்பியது. அவர்கள் வீட்டில் கருவேப்பிலை செடி இருந்ததாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வந்து கருவேப்பிலை பறித்து செல்வார்களாம். அடிக்கடி இது போல் தொந்தரவு செய்ததால் கோபம கொண்ட நா.பா. கொதிக்கும் வெந்நீரை கொண்டு வந்து கருவேப்பிலை செடியின் மீது கொட்டி விட்டாராம். இந்த செய்தி குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன். மென்மையான பாத்திரங்களை படைத்த நா.பா அப்படி செய்திருபபார் என்பதை வாசகர்களால் நம்ப முடியவில்லை. பின்னர் அவருடைய வாரிசுகள் இதே செய்தி தவறு என்று மறுப்பு தெரிவித்ததாக நினைவு.
  அதே நிலைதான் இப்போது சுஜாதாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது.

    பணமும் புகழும் சம்பாதித்த சுஜாதாவின் நிலையே இது என்றால் தன் குடும்பத்தைக் கூட காக்க முடியாத சூழலில் இருந்த பாரதியின் நிலை எப்படி இருந்திருக்கும். செல்லம்மாவின்  மனமும் உண்மையில் பாரதியை வெறுத்திருக்குமோ/ 

   புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,   கூட தன் மனைவிக்கு சுதந்திரம் தரவில்லை என்று எங்கேயோ படித்த ஞாபகம். பள்ளி வயதில் படித்ததால் சரியாக நினைவில் இல்லை. உண்மையா என்றும் தெரியவில்லை.
    
   இது பிரபலங்களுக்கு  மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு பாடம். பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின்  எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.

*******************************************************************************************

வியாழன், 10 ஜனவரி, 2013

சுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா?

   வலையுலகிற்கு வாரித் தரும் வள்ளல் சுஜாதா. அவர் எழுதியதை யாராவது ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.  நான் அவரது அனைத்து நூல்களையும் படித்தவன் அல்ல.என்றாலும் படித்ததை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறேன்.
  அவர் கவிதையில் ஆர்வம் உடையவர் என்பது தெரிந்ததே!அவருடைய எழுத்துலக வாழ்க்கையின் பிற்பகுதியில் திருக்குறள் சங்க இலக்கியங்கள்,ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்பதும் சுஜாதா ரசிகர்கள் அறிந்ததுதான் .

 ஔவையார் (ஆத்திச் சூடி பாடிய  வேறு ஒருவராம்) பாடிய புறநானூற்றுப் பாடலையும் அதை சுஜாதா எளிமையான கவிதையாக மாற்றித் தந்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம். 

  அரசன்  அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெறச் செண்டிருந்தபோது அரசன் காலம் தாழ்த்த காவல் காரனைப் பார்த்து கோபத்துடன் பாடியதாக அமைந்துள்ளது பாட்டு.

                   ஒரிஜினல் புறநானூற்றுப் பாடல்

                   வாயிலோயே!வாயிலோயே!
                   வல்லியோர் செவிமுதல் வழங்குமொழி விந்தித்தாம் 
                   உள்ளிய பூ முடிக்கும் உரனடை உள்ளத்து 
                   வரிசைக்கு வருத்தும் இப்பரிசில் வாழ்க்கை 
                   பரிசிலர்க்கு அடையா வாயிலாயே 
                   கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி 
                   தன் அறியலன் கொள்?என்னறியலன் கொள்?
                   அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
                   வறந்தலை உலகமும் அன்றே அதனால் 
                   காலினெம் கலனே சுருக்கினெம் கலப்பை 
                   மரங்  கொல்  தச்சன் கைவல் சிறார் அர்
                   மழுவுடைக் காட்டகத்து அற்றே 
                   எத்திசைச் செலினும்  அத்திசைச் சோறே!

 இதை சுஜாதா எளிமைப் படுத்தி அளித்தது இதோ

                   காவல்காரனே!காவல்காரனே
                   பரிசு  கேட்டு வந்திருப்பதை
                   வள்ளல்கள் காதில் சொல்லி
                   விரும்பியதை அடைய முடியாத
                   வாசலின் காவல் காரனே!
                   நெடுமான் அஞ்சிக்கு தன்னைத் தெரியாதா?
                   இல்லை என்னைத் தெரியாதா?
                   அறிவும் புகழும் உள்ளவர்களை 
                   இந்த உலகம் சாகவிடாது 
                   அதனால் வாத்தியங்களையும் பெட்டிகளையும் 
                   எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம் 
                   தொழில் தெரிந்த தச்சனின் பிள்ளை
                   காட்டுக்குள் சென்றால் மரமா கிடைக்காது?
                   எந்த திசையில் சென்றாலும்
                   எமக்குச் சோறு கிடைக்கும்.?

  கவிஞர்களின்  நிலை அன்றைக்கும் அப்படித்தான் போல் இருக்கிறது. கவிஞர்களை அலட்சியப் படுத்துவதில் அரசனும் விதி விலக்கல்ல. புலவருக்காக வெண்சாமரம் வீசியதெல்லாம் மிகைப் படுத்தப் பட்டதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்தக் கவிதை ஏற்படுத்துகிறது.

 இதைப் படித்ததும் பாரதியும் ,கவிஞர் விக்ரமாதித்யனும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனார்கள்.

இதுபோன்று  சங்கப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கும் பணியை 'வேர்களைத் தேடி' வலைப்பூவில் முனைவர் குணசீலன் அவர்கள் அளித்து வருவது பாராட்டுக்குரியது.
**************************************************************************************

புதன், 21 நவம்பர், 2012

கலைஞரைப் புகழ்ந்த சுஜாதா!

சுஜாதா இப்படி சொல்கிறார்
  "தமிழ்ப் புத்தாண்டை அடுத்து டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை நூலின் வெளியீட்டு விழா மேடையில் பல அறிஞர்கள் பேசினார்கள்.ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்ட விழா. மறைமுகமான அரசியல் குறிப்புக்கள் பலவற்றால் பேச்சாளர்கள் பார்வையாளர்களைப் பரவசப்  படுத்தினார்கள் 

  கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே. இதில் யார் தகுதிக்காகாப் புகழ்கிறார்கள் யார் பதவிக்காக என்று பதம் பிரிக்கும் ஆற்றல் கலைஞருக்கு  குறள் படிப்பதால் நிச்சயம் இருக்கும். 

   கலைஞர் தெய்வம் இறைவன் பற்றிய தன் சொந்தக் கருத்துக்களுக்கு சாமார்த்தியமாக உரை எழுதி இருக்கிறார்.கடவுள் வாழ்த்து வழிபாடு ஆகிறது. தெய்வம் நம்மைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் ஆகிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும் 
 என்ற குறளுக்கு "கடவுளே! என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் " என்ற உரை வியப்பும் திகைப்பும் தருகிறது.

   திருக் குறளை ஒழுங்காகப் படித்து அதற்கு மிக நுட்பமான, சில சமயம் நம்மை பிரமிக்க வைக்கும் விளக்கங்கள் சொல்லக் கூடிய ஒருவர் இந்த மாநில முதல்வராக வருவது நம் அதிர்ஷ்டமே. நிச்சயம் குறளை கலைஞர் தனக்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோமாக!

குறளில்  எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்
என்ற குறளில் மேனஜ்மென்ட்டின் சாராம்சமே இருக்கிறது.பொருட்பால் முழுவதிலும் ஒருநல்லாட்சிக்கு உண்டான அத்தனை வழி முறைகளும் உள்ளன.
   வள்ளுவர்  தெய்வத்தை நம்பினாரா மறுபிறவியை நம்பினாரா, அவர் ஜைனரா,பெண்களை இழிவாகப் பேசினாரா போன்ற கல்லூரி வளாக ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்கு அதில் கிடக்கும் அத்தனை ரத்தினங்களையும் பரீட்சை பண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.
அதற்கான நீண்ட ஆயுள் பெறவும் திருக்குறளில் மருந்து உள்ளது.
அற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து! "
என்று முடித்துள்ளார். 
   இந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும்  சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.
பதிவின் நீளம்  கருதி அதை நான் சேர்க்கவில்லை.
அநேகமாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டது 1996 ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

(சுஜாதாவின் 'நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில்' இருந்து)
*************************************************************************************
இதைப் படித்தீர்களா 

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தியைப் பற்றி சுஜாதா


    இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர்  சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அல்லது புரிய வைக்கத் தவறி விட்டோம். அது எவ்வளவு அவசியமானது  என்பதை காலம் கடந்து உணரப் போகிறோம்.

  நவீன யுகத்தில் காந்தியின் கொள்கைகள் ஒத்துவருமா? இதோ எழுத்துலக  மன்னன்  சுஜாதா மகாத்மா காந்தியின் கிராமப் பொருளாதாரம் பற்றி என்ன கூறுகிறார் என்பதை   அவர் வார்த்தைகளிலேயே பார்க்கலாம். "
  சுஜாதா கூறுகிறார் "காந்தியின் கிராமப் பொருளாதாரம் இன்றைய உலகில் சாத்தியமா? யோசிப்போம்.
    காந்தி கிராமங்கள்  தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று  சொன்னார். கூடுமானவரை ஒரு கிராமத்துக்குத் தேவையான பொருள்கள் கிராமத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே பயன் படுத்த முடியும் என்று நம்பினார். அதற்காக ஏற்படும்  விஞ்ஞானத் தடைகளை நீக்க வேண்டும் என்றார். நகரத்தை சாராமல் கிராமம் இருக்க முடியுமா? அதுவும் இன்றைய நாளில் நகரத்தின் தாக்கம் கிராமத்துக்கு பல திசைகளிலிருந்து வருகிறது. விஞ்ஞான  வளர்ச்சி காரணமாக நகரத்தின் நுகர்வோர் கலாசாரம் கிராமத்துக்கு வந்து விடுகிறது. கிராமத்தின் பணம் நகரத்தில் செலவழிக்கப் படுகிறது.............
   கிராமத்தில் ஆரம்பத்தில் ஊறு காய்க்கு  மட்டும் இருந்த  சாஷே க்கள் இப்போது எல்லாப் பொருட்களுக்கும் வந்து கிராமத்திலும் இடம் பிடித்துவிட்டன.  இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பெரிய கண்டு  பிடிப்பு இந்த சாஷே தந்திரம்.ஊடகங்களும் தொழில் நுட்பமும் சேர்ந்து திட்டமிட்டு பணம் பிடுங்கும் தந்திரம். அதனால் காந்திஜி சொன்ன தன்னிறைவு வராமல் நகரத்தின் சார்பு அதிகமாகி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை  இழந்துவிடும் அபாயம் மிக உண்மையானது.

   இப்போதே டிவி சினிமா பாதிப்பால் கிராமத்து கலை வடிவங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.இந்தக் கலைகள் டிவி மூலம் புத்துயிர் பெறுகின்றன என்று நானும் ஆரம்பத்தில் நம்பினேன். சிந்தித்தால் அது நிகழ வில்லை என்பது தெளிவாகிறது...........

   குடியரசு தினவிழாவில் காட்டப்படும் கிராமிய நடனகள் சேட்டுப்  பெண்களும் ஐ .ஏ .எஸ்  மனைவிமார்களும் கொரியோகிராபி செய்தவை
நாட்டுபுறப் பாடல்கள் களையெடுப்பிலும் தாலாட்டிலும் பாடப்படாமல் அவை பாம்குரோவில் ரூம் போட்டு பாடப்படுகின்றன.இவ்வாறான கலாசாரத் தாக்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு கொடுக்கும் விலை.
இத்தனையும் மீறி கிராமங்கள் தங்கள் அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா?

      எத்தனையோ தாக்கங்களை சமாளித்தவை நம் இந்திய கிராமங்கள்.
1819இல் கிழக்கிந்தியக் கம்பனியின் ரகசிய கமிட்டி இவ்வாறு அறிவிக்கிறது ".....சிக்கலில்லாத சாதாரணமான இந்த முனிசிபல்  பஞ்சாயத்து அரசாங்கங்களில் பழங்கால முதலே மக்கள் வசித்து வருகிறார்கள். ராஜ்ஜியங்கள் சிதைக்கப் படுவதையோ பங்கு போட்டுக் கொள்ளப் படுவதையோ பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. கிராமத்துக்கு ஹானி ஒன்றும் ஏற்படாதவரை கிராமம் எந்த ராச்சியத்தில் சேர்க்கப் பட்டாலும் எந்த மன்னனுக்கு கட்டுப் பட்டிருக்க நேர்ந்தாலும் அவர்கள் கவலை கொள்வதில்லை. கிராமத்தின் பொருளாதார அமைப்பு கலையாமல் நிற்கிறது."

   காந்திஜி அகிம்சையை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தையும் பலாத்காரத்தை ஆதாரமாகக் கொண்ட இயந்திரப் பொருளாதாரத்தையும் ஒப்பிட்டு முன்னதே ஏற்றது என்று சொன்னார்.

    இத்தனை நூற்றாண்டுகளாக குலையாமல் பல்வேறு தாக்கங்களை சமாளித்த இந்த கிராமத்து முழுமையான பொருளாதாரம்.இப்போது மிகச் சுலபமாக கலைக்கப் படுகிறது.இந்த தாமதமான காலக் கட்டத்தில் இதை எதிர்ப்பதில் பயனில்லை,

   காந்தி பரிந்துரைக்கும் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் ஆடம்பரமின்மை,அகிம்சை, உழைப்பில் புனிதத் தன்மை, ஓய்வு  பற்றி மயக்கம்,மானுட கௌரவம். இவைகளைத்தான் வலியுறுத்தினார். அதை இன்றைய[புதிய சூழ்நிலையில் நிச்சயம் கொண்டுவர முடியும். பொருளாதார வியாபார தாக்கங்களை அரவணைத்துக் கொண்டு அவைகளின் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிராமத்தின் ஆதார அடையாளங்களை இழக்காமல் காந்தியின் புதிய சர்வோதயத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான்  நம்புகிறேன்.
எப்படி? ஆடம்பரமின்மை நவீனப் பொருட்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆடம்பரப் பொருட்கள் வேண்டாம்.செருப்பு  இருக்கட்டும் ஸ்னீக்கர் வேண்டாம். சாஷே வேண்டாம்..ஆனால் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வேண்டும் அதன் மூலம் பிற்பட்ட பள்ளிகளிலும் மிகச் சிறந்த கல்வியைக் கொண்டு வர முடியும்.

   காந்தியின் அகிம்சை தழுவிய பொருளாதாரத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். இயந்திரம் முதாளித்துவத்தின் கையாளாக இருக்கிறது.மனித உழைப்பை வெளியே விரட்டிவிட்டு சிலருடைய கையில் அதிகாரமும் செல்வமும் குவியும்படி செய்கிறது என்று காந்தி கருதினார். அன்னியப் படையெடுப்பால் நாட்டுப் புறங்கள் அதிக பயப்பட வேண்டியதில்ல. நகரப் பிரதேசங்களே படையெடுப்புக்கு இலக்காகின்றன. ரத்தம் தோய்ந்த மேல் நாட்டு வழி நமக்கு ஏற்றதன்று. அந்த வழியில் மேலை நாட்டினருக்கே அலுப்பு தட்டியாயிற்று. இதைத்தான் காந்தி அகிம்சை கலந்த பொருளாதாரம் என்கிறார். வன்முறைக்கு வழி வகுக்காத வழிமுறை.

   "கிராமங்களில் அதிகம் ஒய்வு கூடாது என்றார் காந்தி.உழைக்காமல் உணவுப் பொருட்களையும் பிற தேவைகளையும் செப்பிடு வித்தைக்காரன் போல ஒரு மந்திர சக்தியால் சிருஷ்டித்து விட முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நான் அதைப் பற்றி அஞ்சி நடுங்குகின்றேன்". என்கிறார் காந்தி.
கிராமத்தில் உழைப்புக்கு மதிப்பும் வாய்ப்பும் கொடுக்கும் அளவுக்கு இயந்திர மயமாக்கம் இருந்தால் போதும்.அமெரிக்கா போல ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரே ஒருவர் அறுவடை செய்யும் மாடல் நமக்கு ஏற்றதில்லை.நமக்கு ஆள் பற்றாக் குறை இல்லை.  வாய்ப்புக் குறைவினால்ல்தான் கிராமத்தவர் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். காந்தி உடல் உழைப்பை பவித்ரமாகக் கருதினார்.நம் உடல்களாகிய உயிருள்ள இயந்திரங்களை துருப்பிடிக்க வைத்துவிட்டு உயிரற்ற இயந்திரங்களை ஏற்படுத்த முயல்கிறோம்.என்று வருத்தப் பட்டார்.அவர் எல்லா இயந்திரங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை கைராட்டினம் கூட அபூர்வ மதிப்புள்ள ஓர் இயந்திரம்தான் என்கிறார்.

  இயந்திரம் என்ற கணிப்பில் காந்திஜி கணிப்பொறியை வரவேற்றிருப்பார்.காரணம் அவர் விரும்பும் மானுட கௌர்வம் கணிப்பொறிகள் வரவால் நமக்குக் கிடைக்கும். இன்றைய அறிவியல் உலகம் செல்லும் திசையில் கிராமங்களை நவீனப்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
  அதை எதிர்க்காமல் பயன் படுத்திக்கொண்டு காந்தியின் அடிப்படை அம்சங்களை மறக்காமல் கிராமங்களை அமைக்க கணிப்பொறிகளும் செய்தித் தொடர்பு சாதனங்களும் உதவ வேண்டும்"

  சுஜாதாவின் இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய "நூற்றாண்டின் இறுதியில்  சில சிந்தனைகள்" என்ற நூலில் படித்தது. கொஞ்சம் பெரிய கட்டுரையை கருத்தும் வார்த்தைகளும் சிதையாமல் சுருக்கித் தந்திருக்கிறேன்  என்று நினைக்கிறேன்

***********************************************************
இதைப் படித்திருக்கிறீர்களா 



புதன், 22 ஆகஸ்ட், 2012

சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்


தமிழின் மிகச் சிறந்த, இன்றும் இளைஞர்களின் மனம் கவர்ந்த விஞ்ஞான எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார்
      "முன்னேற்ற நாடுகளில் இப்போது சுற்றுச் சூழல் பற்றி கவனம் அதிகமாயிருக்கிறது. ஓசோன் ஓட்டை அதிகமாகி விட்டது; அடுத்த நூற்றாண்டில் மூச்சுத் திணறி  சாகப் போகிறோம்; கழிவுப்பொருட்களை நதியில் கலக்கக் கூடாது;பிளாஸ்டிக் அலுமினிய விரயங்கள் செய்யக் கூடாது;ஆஸ்பத்திரிக் குப்பைகளை எரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகின்றன. இவை எல்லாம் பச்சைப் பொய்கள்.இவற்றைப் புரிந்து கொள்வோம்.

பொய் 1. பழைய பேப்பர் அலுமினியக் குப்பைகளை திரும்பப் பயன்படுத்துவதே சிறந்தது.

விளக்கம்: உண்மைதான். ஆனால் அது அலுமினியத்துக்குத்தான் முற்றும் பொருந்தும். பழைய பேப்பரை நியூஸ் ப்ரிண்டாக அல்லது அட்டைப் பெட்டியாக மாற்றலாம்  ஆனால் அவற்றை வெளுக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள கழிவுப் பொருட்கள் மூலக் காகித உற்பத்தியில் உள்ள கழிவுப்பொருட்களைவிட அதிகம்.காகிதத்தை திரும்பப் பெறுவதால் மரங்களை வெட்டுவதை நிறுத்துகிறோம் என்பதும் தவறு. காகித உற்பத்திக்காக மரங்கள் நட்டு வெட்டப் படுகிறது .தேவை குறைந்து விட்டால் மரம நடுவதும் குறைந்து விடும்.

பொய் 2: பிளாஸ்டிக் எப்போதுமே கெடுதல் தருவன. அது சுற்று சூழலுக்கு எதிரி அது லேசில் மக்காது.அதில் உள்ள விஷப் பொருட்கள் நிலத்தடி நீரில் கலந்துவிடும்.பிளாஸ்டிக் நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கும் மண்ணோடு மண்ணாக மாறாது

விளக்கம்: பிளாஸ்டிக் மண்ணுடன் கரையாமல் மாறாமல் இருப்பதே பத்திரம். .அதே போல பேப்பரும் ஆண்டுக் கணக்கில் அழிவதில்லை.
ஒரு பேப்பர் குப்பையும் பாலிஸ்டைரின் குப்பையும் ஒப்பிடும்போது பின்னதை உற்பத்தி செய்ய ஆறில் ஒரு பாகம் மூலப் பொருட்களும் 12 இல் ஒரு பாகம் நீராவியும் மின்சாரமும்தான் தேவைப் படுகிறது. விலையும் பாதிதான்.அதில் ஓசோன் ஓட்டையை  உண்டாக்கக் கூடிய சி.எஃப்.சி யும் (  CFC ன்னா குளோரோ புளோரோ கார்பன்தானே?)   பயன் படுத்தப் படுவதில்லை.

  எல்லா பிளாஸ்டிக்குகளுமே கெட்டதல்ல உதாரணமாக பால் பாக்கெட்டுக் பிளாஸ்டிக் உறைகள் செய்ய கண்ணாடி குப்பிகளுக்கு ஆகும் மின் செலவை விட பாதியளவே தேவைப் படுகிறது.மறைமுகமாக பிளாஸ்டிக்கினால்  சுற்று சூழல் பாதிப்பு குறைவு.

பொய் 3. நாம் அதிகமாக குப்பை போடுகிறோம் குப்பையை பள்ளங்களில் நிரப்பக் கூடாது..

விளக்கம்: குப்பை அதிகம் என்பது சரிதான் ஆனால் Land Fills. என்ற குப்பையை சேகரித்து  ஊருக்கு வெளியே தாழ்வுப் பகுதிகளை நிரப்பும் முறையை சரியாகப் பிரயோகித்தால் ஆயிரம் வருஷங்களுக்கு உண்டான குப்பையை ஒரு சில நிரப்பலில் போடலாம் என்கிறார்கள் இதில்  எரிப்பதிலோ மாற்றுவதிலோ உள்ள செலவை விட குறைந்த செலவே ஆகும். எனவே குப்பை அதிகமில்லை .அதைக் கொட்டும் முறைதான் சரி இல்லை

பொய் 4 . பூச்சிக் கொல்லி மருந்துகள் அபாயமானவை.அவை ஆரோக்கியத்தை பாதிக்கிறது .

விளக்கம்: கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சி சாலையில் பரிசோதித்துப் பார்த்தபோது சில முடிவுகள் வேடிக்கையாக இருந்தன .தாவரங்கள் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும்  ரசாயனங்களின் அளவு செயற்கை பூச்சிக் கொல்லிகள் படிந்த அளவை விட அதிகம். டையாக்சின் போன்ற வேதிப் பொருள்களை தாவரங்களே  உற்பத்தி செய்து கொள்கின்றன. செயற்கை பூச்சி கொல்லி அபாயத்தை பற்றி தவறான தகவல்கள் பரவுவதால் மக்கள் பயந்து போய் பழங்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அதனால் கேன்சர் வரக கூடிய அபாயம்தான் அதிகரித்திருக்கிறது .இது போல் ஜனத்தொகை அதிகம் என்பதும் அமிலமழை நம் காடுகளை அழிக்கின்றன என்பதும் பச்சைப் பச்சைப் பொய்களே!"

   (சுஜாதா ரசிகர்கள் எல்லாம் கோவமா பாக்காதீங்க. இதெல்லாம் எப்ப சொன்னார்னு  கேக்கறீங்களா? இப்படில்லாம் மிரட்டினீங்கன்னா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. நான் அழுதுடுவேன். அது வந்து அமெரிக்க தூதரகத்தின் செய்தி நிறுவனம் SCIENCE UPDATES என்ற அறிவியல் இதழில் மேலே சொன்னததான்  "பச்சைப் பொய்கள்" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் சொல்லி இருந்துதாம். அதைத்தான் நம் சுஜாதா சார்  "இந்த நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்" (திருமகள் நிலையம் பதிப்பகம்) என்ற புத்தகத்தில் ஓசோன் ஓட்டை என்ற  தலைப்பில் சுட்டிக்காட்டி சொல்லி இருந்தாரு.   அதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். ஹிஹிஹிஹி . அநியாமா இந்த பச்ச புள்ள மேல கோவத்தை காட்டாதீங்க! )

உங்க குப்பைய எல்லாம், சாரி! கோவத்த எல்லாம் கம்மென்ட் பாக்ஸ்ல கொட்டுங்க
******************************************************************

நாளை: ஆவலுடன் அந்தரங்கம்
*******
இதைப்  படித்து விட்டீர்களா?
நான் கழுதை!