என்னை கவனிப்பவர்கள்

பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூன், 2014

பத்துக் கேள்விகள்! வெத்துபதில்கள்!

   
   
   மதுரைத் தமிழன் தொடங்கி வைத்த தொடர் பதிவு விளையாட்டு சுவாரசியமாக சென்றுகொண்டிருபதை அறிய முடிகிறது . என்னையும் பதில் சொல்ல அழைத்திருந்தார். நேற்றுதான் பார்த்தேன். மதுரைத் தமிழன் முத்துநிலவன் இருவரின் பதில்களைத் தவிர மற்றவர்கள் எழுதியதை இன்னும் படிக்கவில்லை. காரணம் அவர்கள் சொன்ன பதில்களின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காக . நாளை மற்றவர்களின் பதில்களையும் படித்து விடுவேன். 

      பதில் சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. பாஸ் மார்க் வாங்கற அளவுக்கு ஈசியா கேள்வியை செட் பண்ண மாதிரி தெரிந்தாலும் உண்மையில் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் கேள்விகளுக்கு பதில் சொல்றது நம்மையும் ஒருத்தர் பேட்டி எடுத்தது மாதிரி  சந்தோஷமாத்தான் இருக்கு.  மதுரைத் தமிழனுக்கு நன்றி 

1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
  
   மற்றவர்களுக்கு சொல்லாமல் மனதுக்குள் மட்டும். ஏன்னா நூறு வயசு ஆனதுக்கு அப்புறமும் போகாம இன்னமும் உசுரை வாங்கரானேன்னு  நினைப்பாங்களே


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

    எப்படி பேசினாலும் நம்மையே  குற்றவாளியாக மாற்றிக் காட்டும் பெண்களின் புத்திசாலித்தனத்தை .


3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?


   நரசிம்மராவிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்வி. அவர் இல்லை என்பதால் கேள்வியை மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கிறேன். 


4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


    கரண்ட் பில் குறையும் என்று திருப்திப் பட்டுக் கொள்வேன்.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


 என் தந்தை என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்வேன்.( அவர் என்ன சொன்னாருன்னுதானே கேக்கறீங்க அவர்தான் ஒன்னும் சொல்லலையே  )


6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்? 


விவசாயிகள் பிரச்சனையை . அவர்கள் பிரச்சனை தீரவில்லை என்றால் நமக்கு பூவா பிரச்சனையாகி விடுமே.
   
    

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


என்னை எதிரியாக நினைப்பவரிடம். அவர் ஆலோசனையை கேட்டு அதன் படி நடக்காமல் இருக்கலாம் அல்லவா. 


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?


  சிரிப்பேன்.ரசிப்பேன்.பின்னர் ஏன் அப்படி சொன்னார் என்று யோசிப்பேன்.


9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?( வாழ்வின் நிறைவுப் பகுதியில் இருப்பவர்களாகக் கொள்க) 

   வருத்தமாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டுக்கு வந்தால் காபி கிடைக்காதே என்று. (நகைச்சுவையை எதிர்பார்த்து கேட்கப் பட்டதாக கொண்டதால் இந்த பதில்) 

உண்மையான பதில் :மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். தேவைகளை எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளப் பழகுங்கள். கணிசமான சேமிப்பை கையிருப்பை வைத்துக் கொள்ளுங்கள். 



10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


     யாரையாவது (பேச்சுத்) துணைக்கு  அழைப்பேன். புத்தகம் படிப்பேன். இருக்கவே இருக்கிறது இணையம் துணையாக.

*******************************************************************

இதுவரை இந்த 10 கேள்வி பதில் தொடர்பதிவில் சிக்காதவர்கள் யாராக இருந்தாலும்  தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்.



ஞாயிறு, 2 ஜூன், 2013

குடும்ப சிந்தனை இல்லாதவர் சுஜாதா-திருமதி சுஜாதாவின் பேட்டி

     வாழும்போது பரபரப்பாக பேசப்படுபவர் பலர்.  அவர்களில் இறந்து பின்னரும் பரபரப்பாக பேசப்படுபவர்கள் சிலர். அந்த வரிசையில் இடம் பிடித்துவிட்டார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. நேற்றே இணையத்தில் பரபரப்பு தொடங்க ஆரம்பித்தது விட்டது.  முகநூலில் கசிந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு  ஜெயமோகனுக்கு சுஜாதாவின் ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை , வருண் "சுட்டி'க்காட்டினார்.  முக நூலில் அந்த  செய்தி சுஜாதா ரசிகர்களிடையே  கலக்கத்தை  உண்டாக்கியது. இந்த செய்தியை கேள்விப் பட்ட அவரது ரசிகர் ஒருவர்,உறவினராகவும் இருக்கக் கூடும் அவர் தவித்த தவிப்பு நமக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. சுஜாதாவின் மனைவியின் பேட்டி தினகரனில் இன்று வெளியாக  இருப்பதையும் அந்த பேட்டி சுஜாதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கப் போகிறது அதை தடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில்  ஜெயமோகனிடம் வேண்டுகோள் விடுத்தார் ரசிகர் ஒருவர்.  ஜெயமோகனுக்கு அந்த செய்தி ஆச்சர்யம் அளிக்கவில்லை.  நான் அப்போதே சொன்னேன் அவரை ஒரு முறை அவர் வீட்டில் பார்த்தேன். நாமம் போட்டுக் கொண்டிருந்தார். அதை சொன்னபோது யாரும் நம்பவில்லை என்ற ரீதியில் பதிலளித்திருந்தார். 
அப்படி  திருமதி சுஜாதா பேட்டியில் என்னதான் சொல்லி இருந்தார்? 
தினகரனில் அந்த பேட்டியைப் பார்த்ததும் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது உண்மைதான்,
  ஏற்கனவே ஒரு முறை பேட்டியில் ஒரு முறை சுஜாதாவின் மனைவி தன கணவரைப் பற்றி அதிகம் எங்களுடன்கூட பேசமாட்டார் எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார் என்று சொல்லி இருப்பதாக ஞாபகம். 
   "அவர் எப்போதும் தனி உலகில் சஞ்சரிப்பார் என்றும் மனைவி குழந்தைகள் என்று நினைவு அவருக்கு இருந்ததில்லை என்றும், குடும்பத்தை தாண்டி பெண்கள் வெளியே வரக் கூடாது என்று நினைப்பவர்  என்றும்  "இந்தக் காலமா இருந்தா நான் அவரை விட்டு பிரிஞ்சி இருப்பேன்" என்றும் பலவித விஷயங்களை சொல்லி அதிர வைத்தார். அந்த பேட்டியில் ஒரு இடத்தில் கூட சுஜாதாவைப் பற்றி நிறைவாகச் சொல்லவில்லை திருமதி சுஜாதா. ஆயிரம் கதைகள் எழுதியும் அன்பைக் காட்டத் தெரியாதவராகவே வாழ்ந்தார் என்று அவர் கூறி இருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அவர் இறப்புக்குப் பின்தான் தான் மகிழ்ச்சியோடு இருப்பது போல தெரிவிப்பதாக அமைந்துள்ளது. எந்தப் பிரபலத்தின் மனைவியும் இவ்வளவு குறைகளை கணவர் மீது அதுவும் இறந்தபின்னர் சொன்னதாக கேள்விப் பட்டதில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் இருந்து இதற்கு மறுப்பு வெளியாகலாம்.

  ஆனால் இப்போது நன்கு படித்த அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று  அவர் சிந்திக்க இயலாதவராக இதைக் கூறி  இருப்பார் என்பதை நம்ப முடியவில்லை.   அறியாமையிலோ ஆற்றாமையினாலோ சொன்ன விஷயங்களை  இப்படி வெளியிடுவது  சரிதானா? என்று கேட்கிறார் முகநூலில் தன் கவலையை வெளியிட்ட அந்த வெளிநாட்டு  ரசிகர். இது தொடர்பாக திருமதி சுஜாதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  பேசி இருக்கிறார்.அப்போது திருமதி சுஜாதா"எந்த பத்திரிகை என்ன  பேட்டின்னு கூட விசாரிக்காம சும்மா பேசிக்கொண்டிருந்தேன் கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" என்றாராம்  
    எந்த மனைவியுமே தன் கணவனை விட்டு பிரிந்து விட்டால் கூட நன்றாக இருக்கும் அல்லது இவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் நம் வாழ்வு இன்னும் நன்றாக இருந்திருக்கும்  என்ற எண்ணம்  எப்போதாவது ஒரு முறையாவது  ஒரு பெண்ணுக்கு தோன்றக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கும்.
     அதை இப்போது வெளிபடுத்தப் பட்டுள்ளதால் சுஜாதாவின் பிம்பம் இதனால் சிதையக் கூடும் என்று அவரது தீவிர ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். படைப்பையும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்துப் பார்க்கும் நமது வழக்கமே இதற்கு  காரணம். என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் புகழ் இதனால் குறைந்துவிடாது என்றே தோன்றுகிறது. புகழ் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இது அவரது திறமைக்கோ, படைப்புகளின் புகழுக்கோ பெரிய குறைபாட்டை  ஏற்படுத்தி விடாது..

   எழுத்துகளில் நவீனம் காட்டுபவர்கள் வாழ்க்கையிலும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நாத்திகராகவோ அல்லது ஆத்திகராகவோ தன்னை காட்டிக் கொண்டதில்லை என்றாலும்  அவர் ஆழ்வார் பாசுரங்களின் மீது  காட்டிய ஆர்வம் அவரை ஆத்திகராகவே உணரச் செய்தது.
    குறிஞ்சி மலர் என்ற புகழ் பெற்ற நாவலை ( நான் படித்ததில்லை கேள்விப்பட்டதோடு சரி) எழுதிய நா.பார்த்த சாரதியின் மீது சில ஆண்டுகளுக்கு முன்  அவர்மீது குற்றசாட்டு எழும்பியது. அவர்கள் வீட்டில் கருவேப்பிலை செடி இருந்ததாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வந்து கருவேப்பிலை பறித்து செல்வார்களாம். அடிக்கடி இது போல் தொந்தரவு செய்ததால் கோபம கொண்ட நா.பா. கொதிக்கும் வெந்நீரை கொண்டு வந்து கருவேப்பிலை செடியின் மீது கொட்டி விட்டாராம். இந்த செய்தி குமுதத்தில் வந்தது என்று நினைக்கிறேன். மென்மையான பாத்திரங்களை படைத்த நா.பா அப்படி செய்திருபபார் என்பதை வாசகர்களால் நம்ப முடியவில்லை. பின்னர் அவருடைய வாரிசுகள் இதே செய்தி தவறு என்று மறுப்பு தெரிவித்ததாக நினைவு.
  அதே நிலைதான் இப்போது சுஜாதாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது.

    பணமும் புகழும் சம்பாதித்த சுஜாதாவின் நிலையே இது என்றால் தன் குடும்பத்தைக் கூட காக்க முடியாத சூழலில் இருந்த பாரதியின் நிலை எப்படி இருந்திருக்கும். செல்லம்மாவின்  மனமும் உண்மையில் பாரதியை வெறுத்திருக்குமோ/ 

   புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,   கூட தன் மனைவிக்கு சுதந்திரம் தரவில்லை என்று எங்கேயோ படித்த ஞாபகம். பள்ளி வயதில் படித்ததால் சரியாக நினைவில் இல்லை. உண்மையா என்றும் தெரியவில்லை.
    
   இது பிரபலங்களுக்கு  மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு பாடம். பணமும் புகழும் சம்பாதித்து லட்சக்கணக்கான வாசகர்களின் ஆதர்ச எழுத்தாளராக வலம்வந்த சுஜாதாவே மனைவியிடம் நல்ல பெயர் முடியாதபோது வெட்டியாக முகநூலிலும் வலைப்பூவிலும் ட்வீட்டுகளிலும் காலத்தைக் கரைத்துக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களின்  எதிர்காலம் என்ன? கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கிவிட்டுத்தான் சென்றுவிட்டது இந்த பேட்டி.

*******************************************************************************************