என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 9 மார்ச், 2017

பிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-



   கடந்த வாரம் குமுதத்தில்(08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. முகநூலில் அந்த தகவலை மட்டும் 
பகிர்ந்திருந்தேன். கதையை வெளியிட வில்லை.ஒரு வாரம் ஆகி விட்ட படியால் அக் கதையை வலைப் பதிவில் பதிவிடுகிறேன். குறுகிய காலத்தில் பரிசீலித்து வெளியிட்ட குமுதம் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி..இதுவரை  மூன்று கதை குமுதத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது

இக்கதைக்கு நான் வைத்த தலைப்பு பிரேக்கிங் நியூஸ். ஆனால் குமுதத்தில் யமுனா என்று  மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அந்த இதழ் பெண்கள் சிறப்பிதழ் என்பதால் பெண்களின் பெயர்கள் மூன்று ஒரு பக்கக் கதைகளுக்கும் வைக்கப் பட்டிருந்தன.

       பிரேக்கிங் நியூஸ்
                                          (ஒரு பக்கக் கதை )

             எல்லா பரபரப்பும் அடங்கியும்   பிரேக்கிங்  நியூஸ்  ஃபோபியா ராஜியை விட்ட பாடில்லை...  பள்ளியில் இருந்து திரும்பிய மகள் யமுனாவைக் கூட கவனிக்காமல் மீண்டும் மீண்டும் செய்திச் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சே!  உருப்படியாக ஒன்றும் இல்லை.
   “என்னம்மா இப்படி பண்றியேம்மாபசிக்குது ஏதாவது குடும்மாஎன்றாள் யமுனா .
   “ஒரு அஞ்சு நிமிஷம் இருடி. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வருதான்னு பாத்துட்டுப் போறேன். அதுக்கு முன்னாடி சமயக்கட்டுல  ஜூஸ் பிழிஞ்சு வச்சுருக்கேன் எடுத்துக் குடிஎன்று தலையைத் திருப்பாமல் கூறினாள் ராஜி.
   “அம்மா! கொஞ்ச நாளா  உனக்கு என்னமோ ஆயிடிச்சிஎன்று சொல்லிக் கொண்டே ஜூசைக் எடுத்துக் கொண்டு வந்து  சோபாவில் ராஜியின்   பக்கத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்கினாள் யமுனா
 அதற்குள் விளம்பர இடைவேளை வர இதோ பாருடி உனக்கு நான் மேகி செஞ்சு கொண்டு வரேன். அதுவரைக்கும்  ஜூஸ் குடிச்சிக்கிட்டே  டிவி  பாத்துக் கிட்டு இரு. ஏதாவது பிரேக்கிங் நியூஸ் வந்தா உடனே என்னை கூப்பிடு . சரியா
என்று சொல்லி விட்டு வேகமாக சமையலறை  சென்றாள்.  
   ஒரு சில நிமிடங்களிலேயே யமுனாவின் குரல் ஒலித்தது அம்மா ஒரு பிரேக்கிங் நியூஸ். சீக்கிரம் வா!"
என்ன? என்ன? கையில் கரண்டியுடன் டிவியைப் பார்த்துக் கொண்டே ஓடிவந்தாள் ராஜி..
அம்மா! ஓடிவராதே! கீழே பாத்து வா!என்று கத்த  ராஜி கீழே பார்த்தாள்.ஜூஸ் டம்பளர் கீழே விழுந்து  சுக்கு நூறாக உடைந்திருந்தது .
அடியே! உன்ன... என்று கரண்டியை தூக்கி வீச யமுனா நகர்ந்து கொள்ள கரண்டி டிவியை நோக்கி பறந்து கொண்ருந்தது யமுனா சிரித்துக் கொண்டே கலாய்த்தாள் 
" அம்மா! இன்னொரு பிரேக்கிங் நியூஸ்"