செப் 22 அதிசய நாள் ( முந்தைய பதிவப் படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இந்தப் தொடர்ந்தால் தலை சுற்றாமல் இருக்கும்) பதிவிற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி. வழக்கம்போல் வவ்வால் அவர்களும் சில மாற்றுக் கருத்துக்களை முன் வைத்து பின்னூட்டமிட்டிருக்கிறார். எதையும் யாரும் அறியாத கோணத்தில் ஆய்வு செய்யும் வல்லமை படைத்தவரான வௌவால் பல தகவல்களை கூறி இருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள். எதிர்பாரா அலுவலக வேலைகாரணமாக மூன்று நாட்களாக வலைப் பக்கம் வர முடியவில்லை. என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த, நான் புரிந்துகொண்டவாறு விளக்கம் கொடுத்திருக்கிறேன். பின்னூட்டத்திலேயே அதற்கு பதில் அளிக்கலாம் என்று இருந்தேன். சில படங்களையும் இணைக்க வேண்டி இருந்தாதால் தனி பதிவாகவே போட்டு விட்டேன். இதையும் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வவ்வால்:சன் டயல் பற்றி சொல்லும் போது குச்சியை உதாரணம் காட்டி சின்னதாக ஒரு
பின்னூட்டம் போட்டேன் ,நீங்கள் செயல்முறையில் செய்துப்பார்த்து பதிவாக
போட்டதற்கு பாராட்டுக்கள்!
என் கருத்து: உங்கள் பாரட்டுக்கு நன்றி வவ்வாலிடம் பாராட்டு பெறுவது எளிதாஎன்ன?
வவ்வால்: உங்க முயற்சி சரி தான்,ஆனால் இவ்வளவு மொத்தமான பொருளை வச்சு
செய்யக்கூடாது, இப்படி செய்தால் சூரியன் உச்சியில் வரும் போது கூட நிழல்
விழலாம்.
சூரிய ஒளியின் கோணத்திற்கும், பூமிக்கும் ,சூரியனுக்கும்
உள்ள தூரம், சூரியனின் அளவு இவற்றுடன் ஒப்பிட்டு சரியான முறையில் காலிபரேட்
செய்து குச்சியின் நீளம்,தடிமன் கொண்டு செய்தால் நிழல் விழுவதை பெருமளவு
கோண அளவில் தவிர்த்துவிடலாம். சென்னைப்போன்ற பகுதிக்கு சுமார் இரண்டு இஞ்ச்
உயரம், ஒரு பென்சில் அளவு(குறைவான தடிமன் இன்னும் நல்லது) கொண்டு
முயற்சித்தால் நிழல் உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாமல் செய்து விடலாம்.
குறிப்பிட்ட ஒரு நாளுக்கு மட்டுமில்லை, பலநாட்களுக்கு சாத்தியமுண்டு.
என் கருத்து: கடந்த ஆண்டு இதே நாள் ஒரு ரெனால்ட்ஸ் பேனாவை வைத்து இந்த சோதனையை செய்தேன்.அப்பொழுதும் கிட்டத்தத்ட்ட இதே போல்தான் நிழல் அமைந்திருந்தது. அப்படித்தான் இருக்கும் என்பதையும் அறிந்தே இருந்தேன்.எளிதில் நிற்க வைப்பதற்காக குழயைப் பயன்படுத்தினேன் . இன்னும் சொல்லப் போனால் தடிமனான பொருளை பயன்படுத்தினால் நிழலின் அளவு சற்றுக் குறைவாக இருப்பது போலவே தோன்றும்.நிற்கவைக்கப்படும் பொருள் வளைந்து காணப்பட்டாலோ அடிபரப்பு சற்றுசாய்வாக வெட்டப் பட்டிருந்தாலோ செங்குத்தாக நிற்காது. அதனால் நிழல் விழும்.முடிந்த வரை அவ்வாறில்லமால் பார்த்துக் கொண்டேன். 100% துல்லியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு இவற்றை கவனத்தில் கொண்டே செய்தேன்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிழல் விழாத நிலை (அதாவது பொருளின் மீதே விழும் நிலை- பொருள் செங்குத்தாக இருப்பதாக வைத்துக் கொள்ளப்படும்போது) பல நாட்களுக்கு சாத்தியமில்லை.சில நாட்களுக்கு மட்டுமே உண்டு. அந்த சில நாட்களிலும் நிழல் விழத்தான் செய்யும். ஆனால் நிழலுக்கும் பொருளுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியை விட சற்றே குறைவாக இருப்பதால் நிழல் கண்களுக்கு தெரியாது.
வவ்வால்: இந்தியாவுக்கு மார்ச் -21 தான் Equinox . செப்டம்பர் 22
தென்கோளார்த்தத்தின் Equinox ,ஆஸ்திரேலியா,நியுசிலாந்து பகுதிகளில்
சமநாள்,இரவு இருக்கும்.நேற்று சென்னையின் பகல் நேரம் 12 மணி ஏழுநிமிடங்கள்
என் கருத்து:: மிகத் துல்லியமாக பன்னிரண்டு மணிநேரம் பகல் பன்னிரண்டு மணிநேரமாக அமைவது அரிது. சம இரவு பகல் பெரும்பாலும் செப்டம்பர் 21 ஐ ஒட்டியே இருக்கிறது. இன்று நேர இரவுபகல் நேர வித்தியாசம் நேற்றை விட இன்னமும் சற்று குறைவாக இருக்கக் கூடும்
வவ்வால் சிலர் சொல்வது போல ஈக்கவடேரியல் ரீஜனில் மட்டும் சூரியன் உச்சியில் வரும்
என்பது சரியானது அல்ல, நீங்களும் அதனை நம்புகிறீர்களா என தெரியவில்லை.
டிகிரி வடக்கு (கடகரேகை) - 23.5 டிகிரி தெற்கு(மகரரேகை) இடைப்பட்ட
பகுதியில் எல்லா இடத்திற்கும் சில குறிப்பிட்ட காலத்தில் சூரியன்
மிகச்சரியாக உச்சி நிலையில் சஞ்சரிக்கும்..
என் கருத்து:: என் கருத்தும் இதுவே, இதை நானும் சொல்லி இருக்கிறன். சென்னையைப் பொறுத்தவரை செப் 22 அன்று சூரியன் நேர செங்குத்தாக சஞ்சரிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டவே நிழலைப் படம் பிடித்துக் காட்டினேன். சென்னையில் பொருத்தவரை கிட்டத்தட்ட ஆகஸ்டு இறுதி அல்லது செப்டம்பர் துவக்கத்தில் நேர் செங்குத்தாக்க அமையும் நாளில் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இதைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் செல்போனிலாவது படம் பிடித்திருப்பேன்.
அதாவது 23.5 கடக ரேகை 23. 5 மகர ரேகை மொத்தம் 47 டிகிரியைக் கடக்க 365(rounded) நாட்களை எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டால் ஒருடிகிரியைக் கடக்க 365/47 =.7.7 நாட்கள் ஆகும். சென்னை 13 டிகிரி வட அட்சத்தில் இருப்பதால் june 21 இல் கடக ரேகையில் பிரகாசிக்கும் சூரியன் 23.5 லிருந்து 13 டிகிரி வரை அதாவது 10.5 டிகிரிகளை கடக்க 80நாட்கள் ஆகும் . அதாவது செப்டம்பர் துவக்கத்தில் சூரியன் செங்குத்தாக பவனி வரலாம். துல்லியமான கணக்கீட்டை தர முயற்சிக்கிறேன்.
வவ்வால்: #////மேல் முனை பூமியை நோக்கி இருக்காது.இப்போது கீழ் முனை பூமியை நோக்கி இருக்கும். // மணி
சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6
மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே
சாய்ந்திருக்கும்.//
இப்படி சொல்லி இருப்பது எதனை ஒப்பிட்டு ,
நீங்கள் பூமியை ,பூமியின் அச்சுடனே ஒப்பிட்டு அதுவே அதனைப்பார்த்து
சாய்ந்திருப்பது போல சொல்லி இருக்கிறீர்கள். சூரியனை நோக்கி ,பூமியின் அச்சினை ஒப்பிட்டுத்தான் சொல்லவேண்டும்.
என்கருத்து: நீங்கள் சொல்வது சரி சூரியனை என்றுதான் இருக்கவேண்டும். தவறுதலாக "பூமியை" என்றிருக்கிறது. சூரியனை என்று திருத்தம் செய்து விட்டேன். நன்றி
வவ்வால்:ஆனால்
பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும்
சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும்
சொல்கிறார்கள், அப்படி இருக்கும் எனில் இப்போது அளிக்கும் விளக்கங்கள்
அனைத்துமே தவறாகிவிடும், சரியான விளக்கம் வேறு ஆக இருக்க வேண்டும் ,எளிதில்
புரிய வைக்க இப்படியே விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்
மணி சுற்றுவது போல் பூமி சுற்றினால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் 6
மாதங்களுக்குப் பிறகும் அதன் வடமுனை எப்போதும் பூமியை நோக்கியே
சாய்ந்திருக்கும்.//
என்கருத்து: இப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன். நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.அச்சின் இரண்டு முனைகளும் எப்படி வெளிப்புறம் பார்த்து இருக்கமுடியும். இதை விளக்க படங்கள் ஏதேனும் உண்டா?
நான் கம்பியில் கோர்த்த மணிபோல என்று குறிப்பிட்டது கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு. ஆனால் கம்பியை அச்சாகக் கொண்டு சுற்ற இயலாதவாறு இருக்க வேண்டும் இந்தப் படத்தில் பாருங்கள் பூமி சுழலும் அச்சின் வடதுருவ முனை சூரியனை நோக்கி இருப்பதை காணலாம். ஆனால் பூமி இவ்வாறு சுற்றவில்லை
வவ்வால்// ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி சாய்ந்திருக்கும் வடதுருவம் 6
மாதங்களுக்குப் பின் சூரியனை சுற்றி எதிர் பக்கம் வரும்போது அதன் வடதுருவம்
சரியான விட்டு விலகி இருக்கும், //
பெரும்பாலும் கால நிலை மாற்றம் இப்படித்தான் உருவாகிறது என்பதற்காக சொல்லப்படுகிறது, உண்மையில் அது சரியான விளக்கமும் அல்ல.
கால நிலைமாற்றம் ஏற்படக்காரணம் நீள்வட்டப்பாதையும், பூமியின் சுழற்சியில்
உள்ள அலைவும் காரணம், மேலும் பிளேன் ஆப் ரோட்டேஷனில் ஏற்படும் மாற்றமும்
இருக்கிறது, இந்த பிளேன் ஆப் ரோட்டஷனில் உள்ள மாற்றத்தினை இதுவரையில்
யாரும் பெரிதாக ஆய்வு செய்யவில்லை ,அல்லது இணையத்தில் இல்லை, இதன்
அடிப்படையில் நானே ஒரு தியரி வச்சிருக்கேன் , நேரம் கிடைத்தால் பதிவு
போடுகிறேன்.
என்கருத்து : நீங்கள் சொல்வது சரியானதாகத் தெரியவில்லை. நாசாவின் தளத்தில் கூட காலநிலை மாற்றம் ஏற்பட பூமியின் சாய்வச்சே காரணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அது சரியானதாகவும் தோன்றுகிறது.Plane of rotationஐ என்று குறிப்பிட்டீர்களா அல்லது ப்ளேன் plane of revolution குறிப்பிட்டிருப்பீர்களா? எதுவாக இருப்பினும் பெரிய அளவில் plane மாறுபாடு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆய்வாளர்கள் அறிஞர்கள் யாருக்கும் இது தொடர்பாக ஐயமோ அல்லது அதை கருத்தில் கொள்ளாமலோ இருந்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு கணக்கீடுகளும் இதன் அடிப்படையில்தான் செய்யப் பட்டிருக்கின்றன. வெற்றி பெற்ற பல வானியல் சோதனைகள் தோல்வியில்முடிந்திருக்கக் கூடும்.
http://spaceplace.nasa.gov/seasons/
வவ்வால்: பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி
இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம்
வந்துவிடுமே, அப்புறம் எப்படி நிரந்தமாக குளிர்,கோடைகாலம் உருவாகிறது.
ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மீண்டும் சூரியனை பார்க்க
ஆரம்பித்துவிடும்,எனவே நிரந்தரமாக எந்த துருவமும் சூரியனை விட்டு விலகியே
நிற்காது.
என்கருத்து: நீங்கள் இப்படி சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு 24 மணிநேரத்திற்குள் விலகி பின்னர் நோக்கியும் இருக்க சாத்தியமில்லை. சூரியன் பூமி சுற்றுப்பாதையை ஒரு plane ஆக வைத்துக் கொண்டால் அதனோடு. பூமியின் சுழற்சி அச்சு ஏற்படுத்தும் கோணம் ஒரே அளவாகவே இருக்கும். அச்சின் ஒரு முனை சூரியனை விட்டு விலகவோ நோக்கியோ இருக்க கிட்டத்தட்ட பாதி நாட்கள் தேவைப்படும்
நீங்கள் சொல்லும் கருத்து ஆனால்
"பூமியின் சாய்வு அச்சு அதன் சுற்றுவட்டப்பாதையின் எந்த நிலையிலும்
சூரியனுக்கு வெளிப்புறமாக அவுட்டர் ஸ்பேஸ் பார்த்து தான் இருக்கும் எனவும்
சொல்கிறார்கள்" என்ற கருத்துக்கும் எதிராகவேஅல்லவா இருக்கிறது.
வவ்வால்:உண்மையில் பூமி செங்குத்தான அச்சில் சுழன்றாலும் கால நிலை மாற்றம்
ஏற்படும். மேற் சொன்ன காரணங்களே போதுமானவை. மேலும் கூடுதல் காரணங்கள்
பூமியின் வளிமண்டலம், வளிமண்டலத்தின் சுழற்சி, பூமியின் நிலம்,நீர் பரவல்
ஆகும். வடகோளார்த்தத்தில் அதிக நிலப்பரப்பும், தென்கோளார்த்தத்தில் அதிக
நீர்பரப்பும் என உள்ளதால், பூமி சூடாவதில் ஒரு மாற்றம் உண்டாகிறது, கூடவே
வளிமண்டல சுழற்சி, இதனால் கொரியாலிஸ் எபெக்ட், எல்நினோ,லாநினோ, தாழ்வழுத்த/
உயர் அழுத்தம் ஆகியன என எல்லாம் சேர்ந்து மழைப்பொழிவுகள் ஏற்படுகிறது.
என்கருத்து: இதை எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை.பூமி செங்குத்தான அச்சில் சுழல்வதாகக் கொண்டால் சூரிய ஒளி பூமியின் மீது எந்தக் காலத்திலும் நில நடுக்கோட்டுப் பகுதியின் மீது செங்குத்தாகவும் மற்ற இடங்களில் சாய்வாகவும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூரிய ஒளி எப்போதும் ஒரே மாதிரியாகவே விழும்.
நீர்நிலைகள், காற்றழுத்தம் போன்றவை வானிலையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடியவைதான். என்றாலும் அந்தப் பகுதியில் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஆண்டு முழுதும் நடைபெறும்.
கால மாற்றத்திற்கு சூரியனின் நீள்வட்டப் பாதையும் ஒரு காரணமே என்று கூறி இருக்கிறீர்கள்.
என்கருத்து: அதுவும் சரியல்ல. பூமியின் சுற்றுப் பாதை நீள்வட்டம் என்றாலும் அதன் (eccentricity 1/60) . கிட்டத்தட்ட வட்டமாகவே காட்சி அளிக்கும். இந்த நீள் வட்டத்தில் மேஜர் ஆக்சிஸ் மைனர் ஆக்சிஸ் வித்தியாசம் மிகக் குறைவு. எனவே உயரத்தில் இருந்து காண முடிந்தால் கிட்டத் தட்ட வட்டமாகவே தோன்றும். மேலும் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள குறைந்த பட்ச தூரமும் அதிக பட்ச தூரத்திற்கும் உள்ள வித்தியாசம் 3% மட்டுமே. எனவே தூரம் காலநிலை மாறுபாட்டிற்கு காரணமல்ல என்று கூறப்படுகிறது. மேலும் சூரியனுக்கு மிக அருகில் பூமி நெருங்கும் காலம் ஜனவரியில்தான். அப்படிப் பார்த்தால் நில நடுக்கோட்டுப் பகுதியில் கூட ஜனவரி மாதம் கோடைக் காலம் அல்ல.
வவ்வால்:
சென்னையிலேயே
வருடம் 365 நாளும் உச்சி வெயில் (நன்பகல்- 11.30-12)க்கு நிழலே விழாமல் படம்
எடுக்கலாம்,மகர- கடக ரேகைக்கு இடைப்பட்ட இடங்கள் மேலும் அதன் அருகில் உள்ள
இடங்களில் எல்லாம் சாத்தியம்., அதுக்கு சரியா காலிபரேட் செய்யனும்,
எகிப்திய தொழில்நுட்பம் சுமார் 3800 ஆண்டுகளுக்கு முன்னரே
செய்துக்காட்டிடுச்சு, நானும் அதன் அடிப்படையில் நிழல் விழாத படம் எடுத்து
வச்சிருக்கேன் ,இன்னிக்கோ ,நாளைக்கோ பதிவா போடுறேன்,அப்போவாச்சும்
நம்புறிங்களானு பார்ப்போம்.
என்கருத்து: நம்புகிறேன்.இது சாத்தியமே என்பதே எனது கருத்தும். சூரிய ஒளியின் கோணத்திலேயே பொருள் பூமியோடு இணைத்திருக்கும் அமைப்பில் இருந்தால் நிழல் அந்தப் பொருளின் மீதே விழும். பூமியில் விழாது. எல்லா நேரத்திலுமே இதை செய்ய முடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் செங்குத்தான பொருளின் நிழல் பற்றியே பேசப் பட்டுள்ளது. காலையில் பார்த்திருந்தால் ஒரு படம் பிடித்திருப்பேன்.
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
வௌவால் சார் உங்கள் கருத்துகளை படங்களுடன் தனி பதிவாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
அடுத்த பதிவு அறிவியல் பதிவு அல்ல **********************************************************************************
முந்தைய பதிவு
இன்று செப் 22 அதிசய நாள்