என்னை கவனிப்பவர்கள்

பெட்டிக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெட்டிக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2016

பெட்டிக்கடை-சரவணா ஸ்டோர்விளம்பரம் +தேர்தலில் தப்பிய வடிவேலு +கண்ணதாசனா?வாலியா?


பெட்டிக் கடை 10
சந்திப் பிழை 
தமிழில் சந்திப் பிழையின்றி  எழுதுவது  அரிதாக உள்ளது. சில சொற்களில் பிழை இருப்பது தெரியாமலேயே சரியானது என்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று வாழ்த்துக்கள் . பெரும்பாலோர் வாழ்த்துக்கள்  என்றே எழுதுகின்றனர். நானும் அப்படித்தான் எழுதி வந்தேன். சிலர் சுட்டிக்காட்டிய பின் நான் மாற்றிக் கொண்டேன். வாழ்த்துகள் என்பதுதான் சரியாம். இருந்தாலும் சில சமயங்களில் என்னையும் அறியாமல் வாழ்த்துக்கள் என்றே எழுதிவிடுகிறேன். முன்னணிப் பத்தரிகைகள் கூட சந்திப் பிழைகளை கண்டு கொள்வதில்லை சில வேண்டுமென்றே அப்படி எழுதப் படுவதாகவும் சொல்கிறார்கள். 
சந்திப் பிழைகளை  புரிந்து கொள்ள சில உதாரணங்களை குமுதத்தில் படித்தேன். இப்படி சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு  புரியாமல் போக வாய்ப்பு இல்லை.




மேலே இருக்கறது படிச்சது.  நம்ம சொந்த சரக்கையும் சேக்கணும் இல்ல.
 நம்ம பதிவோட தலைப்பையே (பெட்டிக்கடை ) எடுத்துக்கிட்டேன் . 


நீங்களும் பின்னூட்டத்தில இதைபோல  பின்னலாம் 

**********************************************************************

தொலைக்காட்சிகளில் சரவணா ஸ்டார் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் (மகன்) முன்னனி நடிகைகளுடன் விளம்பரத்தில் நடித்தது  தேர்தல் பரபரப்புக்கு இடையிலும் இணையத்தில் கவனம் பெற்றது . ஒரு சாரார் அவரது உருவத்தையும் நிறத்தையும்  கிண்டலடித்தனர். சிகப்பழகிகளுக்கு இடையில் ஒரு மாடலாக வந்து நின்றதை நகைப்புக்குரியதாக கருதி, கல்லாவுல ஒக்கராம இவருக்கு எதுக்கு இந்த வேலை' என்று இணையக் கலாய்ப்புக்கு ஆளானார் . ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும்  பேசினர். சிவப்பாக இருப்பவர்கள்தான் திரையில் தோன்றுவதற்கு தகுதியானவர்கள் என்ற மன நிலை இன்னும் மாறவில்லை. சூர்யா ஆர்யாதான் விளம்பரங்களில் நடிக்க வேண்டுமா என்ன? நிறம் குறைந்தவர்கள்   விளம்பரங்களில் தோன்றக் கூடாதா என்ன?     சரவணா ஸ்டோர்ஸின் பலம்  ஏழைமக்களும் நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் பொருட்களை விற்பதுதான்

      சரவணா ஸ்டோர்ஸில் எனக்கு பிடித்தது (பிடிக்காத விஷயங்களும் உண்டு) அங்கு போகும் போதெல்லாம் வீணை, வயலின், கீபோர்டில் வாசிக்கப்பட்ட திரைப் பாடல்கள் இதமாக ஒலிக்கும். ரசித்துக் கொண்டே இருக்கலாம். (வீட்டு அம்மணி பொருள் வேட்டையில இருக்கும்போது நாம் சும்மாத்தானே இருக்கப் போறோம் )
  சரவணா ஸ்டோர்ஸில் இன்னொரு கவர்ந்த அம்சம் பில் போடுபவர்கள் . நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு சென்றாலும் அதி வேகமாக பில் போடுவார்கள்.   பார் கோடிங்  ரீடர் வேலை  செய்ய வில்லை என்றாலும் கணினி விசைப்பலகையில் அவர்கள் அடிக்கும் வேகம் இருகிறதேஅபாரம்
 மற்ற  நகரங்களில் சரவணா போல் அனைத்துப் பொருட்களும் விற்கும் கடைகள் இருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல் 

*********************************************************************************

வடிவேலு இந்த தேர்தலில் பிரச்சார வலையில் சிக்கிக் கொள்ளவில்லை. தப்பித்துக் கொண்டார். நல்ல முடிவுதான். தொலைக் காட்சியில் நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடிகர் சங்கம் நடத்தியது, பழம் பெரும் நடிக நடிகையர்கள்முதல் இன்றைய நடிகர்கள் வரை கலந்து கொண்டனர். இப்போதெல்லாம் சினிமா நடிக நடிகையர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு முன்பு போல வரவேற்பு இருப்பதில்லை.  என்றாலும் வடிவேலு தோன்றிய விளம்பரம் லேசான ஆர்வத்தை உண்டாக்கியது. ,சரோஜா, சாரதாதேவி, லதா,வாணிஸ்ரீ, சச்சு. எம்.என்.ராஜம் சாரதா,விஜயகுமாரி போன்ற கொடிகட்டிப் பரந்த பழம் பெரும் நடிகைகள்  கொண்டனர். ஒரு சிலரைத் தவிர பலரை சட்டென்று அடையாளம் கண்டறிய முடியவில்லை. தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் . 
வடிவேலு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். ஒவ்வொரு நடிகையரின் பெயர் சொல்லி அவர்களின் பாடல்களைப் பாடிக்காட்டி அவர் கமென்ட் அடித்தது அட்டகாசம். அப்போது அந்த நடிகைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை யாரோ சொல்லிக் கொடுத்து அதை அப்படியே  நடிக்கும். நடிகரல்ல வடிவேலு என்பதை நிருபித்து விட்டார். 
*****************************************************************************


தொலைக் காட்சியில்  காலையில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகும். உயர்ந்த மனிதன் படத்தில் இருந்து  நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பழைய பாட்டு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பள்ளி வயதில் பழைய பாடல்கள் என்றால் பிடிக்காது. அதன் அருமை அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாகாத்தான் இருக்கிறது. இந்தப் பாடல் ஒளி பரப்பாகும்போதெல்லாம் அந்தப் பாடல் முடியும் வரை வேறு சேனலுக்கு மாற மனம் வராது. பி.சுசீலாவில் குரலில் வாணிஸ்ரீ யின் நடிப்பும் பாடல் வரிகளும் நம்மை எப்போதும் கட்டிப் போடும் சக்தி படைத்தவை. பாடல்  தலைவனைப் பிரிந்த தலைவியின் . உள்ளத்தை  அப்படியே  படம் பிடித்துக் காட்டியது.  பி. சுசீலா இவருக்கு மட்டும்  எப்படி தேன் சுவைக்  குரல்!. பேசும் போது தெலுங்கு வாசம் மணக்கப் பேசும் சுசீலா பாடும்போது மட்டும் சுத்தமான உச்சரிப்புடன் பாடுவது உண்மையில் பிரமிப்புதான். முதலில் இந்தப் பாடலை கேட்டபோது எழுதியது  கண்ணதாசன் என்று நினைத்தேன், பெரும்பாலும் சிவாஜி பாடல்களுக்கு அவர்தானே எழுதிக் கொண்டிருந்தார்.. ஏதோ ஒரு ஐயம் வந்து தேடிப்  பார்க்க இந்த பாடல் எழுதியது வாலியாம்.  இதை எழுதிய வாலி ஒரு பெண்ணாகவே மாறி எழுதி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், இது போன்ற பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரை பாராட்ட வார்த்தைகள் இல்லை

இதோ அந்தப் பாடல்

பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்

கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

*************************************************************************************

வெட்டி ப்ளாக்கர் குழுமம் சிறுகதைப் போட்டி
வெட்டி  ப்ளாக்கர் பெயரில்தான் வெட்டியே தவிர உண்மையில் படைப்பாளிகளை  ஊக்கு விக்கும் பணியை செய்து வருகிறது, வெட்டி பிளாக்கர் முக நூல் பக்கத்தில் வலைப்பூ எழுதுபவர்கள் தங்கள் பதிவுகளின் இணைப்பை அனுமதித்து  ஊக்குவிக்கிறது. இதன் மூலம் படைப்புகள் நிறையப் பேரை சென்றடைகிறது.வெட்டி ப்ளாக்கர்ஸ் கடந்த 2014 இல் ஒரு சிறுகதையைப் போட்டியை நடத்தியது. வார இதழ்களில் கூட சிறுகதைகள் வெளியாவது   குறைந்துள்ளது. சிறுகதைகளே பல பக்கங்கள் இருந்த நிலை மாறி  நான்கைந்து பக்க்கங்களாகி ,ஒருபக்கக் கதைகளாகி. ஒரு நிமிடமாககக் குறைந்து 10 செகண்ட் கதைகளாகி விட்டது.  இந்நிலையில் சிறுகதை படைப்பாளர்களுக்கு புத்துணர்வு  ஏற்படும் வகையில் இந்த ஆண்டு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளது

பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 
கதைக் களம் : தந்தை பற்றி அமைய வேண்டும் 


விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.

7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும்.

********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு
 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும். 

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது 

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது. 

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் 


*****************************************************************************

முந்தைய பெட்டிக்கடை சரக்குகள்



பெட்டிக்கடை9-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?


*****************************************************************************************************




சனி, 29 ஆகஸ்ட், 2015

பெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?


பெட்டிக்கடை -10

ஒரு குட்டிப் புதிர்
ஏற்கனவே நீங்கள் கேள்விப் பட்ட புதிர்தான்.ஆனால் கொஞ்சம் மாற்றம் உண்டு
   4  கோவில்கள் அருகருகே உள்ளது .  ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார். கோவிலுக்கும் செல்லும்போது கொஞ்சம் தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். அவரும் அதனைப் போல் இன்னொரு மடங்கு பூக்களை வாங்கி செல்கிறார். உள்ளே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம்  என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார். முந்தைய கோவிலில் எவ்வளவு பூ வைத்தாரோ அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. அவ்வாறே 3 வது நான்காவது கோவில்களிலும் செய்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைக்கப் படும் பூக்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இருக்க வேண்டும். மீதமுள்ள பூக்கள் இரண்டு மடங்காக்க்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு  வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எந்த தாமரைப் பூவையும் முழுதாகத் தான் வைக்க வேண்டும் பிய்க்கக் கூடாது .
உங்கள் வீட்டுப் பெரியவர்கள் இந்த புதிரை மூன்று கோவிலை வைத்து உங்களிடம் சொல்லி இருப்பார்கள். என்னிடமும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் நான்காக ஆக்கி விட்டேன். 
விடை திங்கள் அன்று வெளியிடப்படும் 

ஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூறி உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்.

ஜெயதேவ்தாசும் சரியான வழிமுறையில் விடையை கணக்கிட்டு மிக சரியாக  கூறி விட்டார். அவருக்கும் பாராட்டுக்கள் . அவரது பின்னூட்டத்தையும் தற்காலிகமாக மறைத்திருக்கிறேன்.

இருவரின் பின்னூட்டத்தையும் பின்னர் வெளியிடுவேன்.


*********************************************************************

வடிவேலு பார்த்திபன் காம்பினேஷன்  காமெடிகள் பிரசித்தமானவை .குண்டக்க மண்டக்க வென்று கேள்விகள் கேட்டு வடிவேலுவை திணற அடிப்பது நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும்
நம்ம கற்பனையில் ஒரு சின்ன டயலாக்
பார்த்திபன் : ஹலோ எங்க போற?
வடிவேலு:  ( மனதுக்குள் அடடா இவன் கிட்ட மாட்டிகிட்டமே.உண்மை
                        சொல்றதா போய் சொல்றதா ? உண்மையே சொல்லிடுவோம் )                            முடி வெட்ட சலூனுக்கு  போறேன்
பார்த்திபன் : யாருக்கு முடி வெட்ட போற. கையில கத்திரிக்கோல்
                           இல்லையே
வடிவேலு :  ஆஹா ஆரம்பிச்சிட்டானே!,  சாரி! முடி வெட்டிக்க போறேன்'

பார்த்திபன்:  என்னது! முடி வெட்டிக்க போறயா? நீயே வெட்டிக்கறதா 
                             இருந்தா   சலூனுக்கு ஏன் போற.  இங்கயே வெட்டிக்க  
                            வேண்டியதுதானே?

வடிவேலு:  இதை எப்படித்தான்பா சொல்றது அவ்வ்வ்வ்

*******************************************************************************
அரசியலும் நாவடக்கமும்  

கடந்த வாரத்தில் அலுவலகத்துக்கு போகும்போது  வழியில் ஒரு திடீர் ட்ராபிக் அங்கே நாற்சந்தியில் சாவு மேளம் ஒலிக்கும் சத்தம் கேட்க ஏதோ இறுதி ஊர்வலம்  போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். நிழற்குடை அருகே பிணம் ஒன்றை உடல் பாடையில் வைத்திருக்க அருகே நான்கைந்து பேர் அதிரடியாக பறை ஒலித்துக் கொண்டிருக்க இது என்ன நட்ட நடுவில் இப்படி என்று எண்ணிக் கொண்டே  இடத்தை கடந்து சென்று  விட்டேன்  சட்டென்று பொறி தட்டி திரும்பிப் பார்த்தேன். டி.வி எஸ். 50 இல் வந்த ஒருவர் அதன் அருகே வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டு விட்டு தன காலில் இருந்த செருப்ப எடுத்து பட் பட்டென்று கோபத்துடன் அடித்து விட்டு சென்றபோதுதான்   தெரிந்தது. அது ஈ வி. கே.எஸ். சின் உருவக பொம்மை என்பது  பக்கத்தில்  போஸ்டரில் ஈ.வி.கே.எஸசுக்கு கண்டனம் போஸ்டர் ஓட்டப் பட்டிருந்தது. அருகே சில போலீசார் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஈ.வி.கே.எஸ ஏதோ சர்ச்சைக்குரியதை சொல்லி இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. அன்று செய்தித் தாளோ தொலைக்காட்சியில் செய்தியோ பார்க்காததால் அவர் என்ன சொன்னார் என்பது அப்போது தெரியவில்லை. பிறகு அறிந்தேன். யூ ட்யூபிலும் பார்த்தேன்.
      மோடி  ஜெயலலிதா சந்திப்பை ஆபாசமாகப் பேசியதன் விளைவுதான் அது. அவர் பேசியது   கட்சிக்கோ தனி மனிதனுக்கும் இழுக்கைத் தான் தேடித் தரும். ஒரு மூத்த அரசியல் வாதி இது போல் பேசுவது வேதனைக்குரியது. அரசியல் வாதிகள் ஆபாசமாகவும் கட்டுப் பாடின்றியும் கீழ்த் தரமாகவும்  பேசுவதும் புதிதல்ல. இவ்வாறு பேசுவதில் எந்தக் கட்சியினரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் இது தொடர்ந்து வருவது எந்த அளவுக்கு அரசியல் வாதிகள் தரம் தாழ்ந்து  வருகிறார்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. அதற்கு எதிர்வினை புரிந்தது இன்னும் மோசம், ஒருவனுக்கு எதிரி அவனது நாக்குதான் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியல் வாதிகளுக்கும் நாவடக்கத்திற்கும் தூரம் அதிகம்தான் போலிருக்கிறது

*****************************************************************************
சுய பீத்தல்
கடந்த குமுதம் இதழில் எனது ஒரு பக்கக் கதை( இணைப்பு: மதுவுக்கு எதிராக போராடாதே!) ஒன்றை பிரசுரமானதை சிலர் அறிந்திருப்பீர்கள். கடந்த முறை எனது கதை வெளிவந்தபோது மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள்தான் தொலைபேசியில் தெரிவித்தார் இந்த முறையும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். குமுதம் திங்கள் காலையில் வந்துவிடும். இவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அனுப்பிய  பத்து நாட்களுக்குள்   கதை பிரசுரமானது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்குதான்  நன்றி கூற வேண்டும்.

  இது தொடர்பாக இன்னொரு அனுபவமும் உண்டு. கடந்த வெள்ளியன்று மின்சார ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். அது அந்த வாரக் குமுதம். அந்தக் இதழில்தான் இந்தக் கதை வந்திருந்தது. எனது கதையை அவர் படிக்கிறாரா மாட்டாரா என்று அறிந்து கொள்ள ஆவலேற்பட்டது. என் ஆவல் அவருக்கு தெரியுமா என்ன? அவர் கடைசி பக்கத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தார். எனது கதையோ 20 பக்கத்தில் உள்ளது.மெதுவாக படித்துக் கொண்டே வந்தார்.அவர் சினிமா செய்திகளையே படிப்பது போல் தோன்றியது. கதைகள் உள்ள பக்கங்களை வேகமாக புரட்டுவதுபோல் தோன்றியது. எனது கதை உள்ள பக்கத்துக்கும் வந்துவிட்டார். மதுவுக்கு எதிராக போராடாதே என்ற தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்ததால் கதையை படித்திருப்பார் என்று நானே அனுமாநித்துக் கொண்டேன், அவர் முகத்தை பார்த்தேன் லேசாக புன்னகைத்துக் கொண்டது போல் தோன்றியது. இப்படியாக என் அல்ப ஆசை நிறைவேறியதாக நினைத்துக் கொண்டேன்.

ஒரு வேண்டுகோள்: இந்தக் கதையை வைத்து  டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என்று நான் கூறுவதாக கொள்ள வேண்டாம். இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே. குமுதத்தில் வெளியானாலும் ஒரு மைனஸ் ஓட்டை பெற்று தந்துவிட்டது இந்தக் கதை .

இது குமுதத்தில் வெளியான இரண்டாவது கதையாகும் முதல் கதை
என்ன செய்யப் போகிறாய்?
*******************************************************************************
எச்சரிக்கை 
நீங்கள் rubik cube solve செய்திருக்கிறீர்களா?

மின்சார ரயிலில் நான் காணும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கை எப்போதும் என்னை வியக்க வைக்கும். பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் எதையவது விற்றுத்தான் பிழைக்கிறார்கள். பிச்சை எடுப்பதில்லை. சீசன் டிக்கட் கவர்  ஊதுவத்தி புத்தகங்கள்,விளையாட்டுப் பொருட்களில் ஏதேனும் வாங்கினால் அவர்களிடம் இருந்துதான் வாங்குவேன். அப்படி 20 ரூபாய்க்கு வாங்கியதுதான் இந்த கியூப். அதனை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வண்ணம் அமையும்படி முயற்சி செய்து தீர்க்க கற்றுக் கொண்டேன். எந்த நிலையில் இருந்தாலும் இப்போது எல்லாப்பக்கங்களிலும் சரியான வண்ணத்தை கொண்டு வர முடிகிறது. இணையம் மூலம் சில எளிய வழிமுறையை அறிந்தேன். கியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். 
உங்கள் கருத்து என்ன?


******************************************************************************
புதுக்கோட்டை  நான்காவது வலைபதிவர் திருவிழா 

11.10.2015 அன்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் வருகையை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைதளத்தில் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.htmlவெளியிட்டுள்ள படிவத்தை உடனடியாக நிரப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட அழைப்பை எதிர்பாராமல், இவ்விழாவில் பங்கேற்று  தமிழ்ப் பதிவுலகை வளப் படுத்துவதில் நமது பங்கையும் அளிப்போம் .

விரிவான பதிவு விரைவில் 


******************************************************************************

முந்தைய பெட்டிக்கடை பதிவுகள் 

சனி, 11 ஜூலை, 2015

பெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்

பொய்யாய் பழங்கதையாய் போன நட்பு 

பெட்டிக்கடை திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி மாதம் ஒருமுறையாவது திறக்கவேண்டும் 
இளையராஜா எனும் புதிர்
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியை தன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் பாடல் எழுத அழைத்திருந்தாராம் பிரகாஷ்ராஜ். கார்க்கியும் ஒப்புக் கொள்ள படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா, கார்க்கி பாடல் எழுத சம்மதிக்கவில்லை. அதேபோல ருத்ரம்மாதேவி படத்திலும் கார்க்கி பாடல் எழுத மற்றவர்கள்  விரும்பினாலும் இளையராஜா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்  "அப்பாவின்மீதான  ராஜா சாரின் கோபம் அடுத்த தலைமுறை வரையும் இருக்கிறது" என்று கார்க்கி வருத்தப்படுள்ளதாக செய்தி படித்தேன்
சமீபத்தில் உடல் நலமின்றி இருந்த மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வநாதனை  மருத்துவமனையில் சென்று பார்த்து நல விசாரித்ததோடு தன் வீட்டில் இருந்து உணவு எடுத்து சென்று ஊட்டி விட்ட செய்தியையும் படித்தேன் . இளையராஜா ஒரு புதிர்தான்

இதோ
Enthiran Robo   என்ற ராஜா ரசிகரின் ஆதங்கம் 

நான் இளையராஜா அவர்களின் பாடல்களை தீவிரமாக ரசிப்பவன். அவர் இசை ஒன்றுதான் மனதை கவர்ந்து என்னை மெய்மறக்க செய்வது. என்னதான் மனகசப்புகள், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மன்னித்து மறந்து ஒப்புரவாககூடிய குணமுடைய மனிதனே அன்போடுகூடிய சிறந்த மனிதன் எனபடுவான், ஒரு நல்ல மனிதனுக்கு அழகும் கூட. 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இதுவரை ஒப்புரவாகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். இதில், இமாலய புகழ்பெற்ற திரு. இளைய ராஜா அவர்களின் இந்த வைராக்கியம், கடின உள்ளம், இந்த குணம் நல்லதல்ல என்றுதான் தோன்றுகிறது. திரு. இளைய ராஜா அவர்களின் மனைவி இறந்தபோது திரு.வைரமுத்து அவர்களும் அவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த போதும், திரு. இளையராஜா அவர்கள் அவரை கண்டுகொள்ளாதது போல் இருந்ததையும் வீடியோ வில் பார்க்க முடிந்தது. சகோதரி ஜீவா, நான் எப்போது இளையராஜா வீட்டுக்கு சென்றாலும் அவருடைய கரங்களால் உணவு பரிமாறி எனக்கு உணவளித்து உபசரித்ததை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று பழைய நினைவுகளை இரங்கல் செய்தியோடு பகிர்ந்திருந்தார். ஏன்.., வைரமுத்து அவ்வளவு தீண்டதகாதவரா..? தவறு செய்திருந்தாலும் மன்னிக்க பட கூடாதவரா..? அப்படிஎன்றால், 87 க்கு முன்பு பத்து/பனிரெண்டு ஆண்டுகள் எப்படி அவரோடு மிகவும் நட்போடு இருந்தார்?. அப்படியே, வைரமுத்து தவறு செய்திருந்தாலும், இளையராஜா தானே சென்று அவரிடம் பரிவாக பேசி ஒப்புரவாகி இருந்தால், புடமிடப்பட்ட தங்கம் போன்ற சிறந்த மனிதனாக காணபட்டிருப்பாரே திரு.இளையராஜா அவர்கள்.. ரமணரை கும்பிட்டாலும், ஏதோ ஒரு தாயை தெய்வம் போன்று கும்பிட்டாலும், அல்லது ஏதோ கல்லை கடவுள் என்று கும்பிட்டாலும், அவைகள் எல்லாவற்றையும் விட மேலானது, தவறுகளை மன்னித்து, பகைவனிடமும் அன்பு செலுத்தி, ஒப்புரவாகி, மனதின் வைராக்கியம் என்ற கடின கற்பாறையை  அகற்றி மென்மையான பஞ்சுபோன்ற இதயத்தை வைத்திருந்தால் அதுவே சிறந்தது. ஒருவேளை, இன்று மரித்தாலும் குற்றவுணர்வு அகன்று, குறை இல்லாத நிறைவான சாந்தியோடு மறுமையில் பிரவேசிக்க ஏதுவாய் இருக்குமே.... இது ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை .. பிடிவாதம் என்பது மனிதனை சமாதானமற்ற/நிம்மதியற்ற நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு கொடிய நோய்... மனதில் அன்பை விதைத்து அன்பில் நிலைத்திருங்கள்.. அதில் எல்லா நன்மைகளும் அடங்கியுள்ளன..
ராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும்  உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது  என்பதை அவர் உணர்வாரா?
***************************************************************************************
நண்பர் வைத்த குட்டு 
 என்னுடன் பணிபுரியும் நண்பர் சரவணன் என்னுடைய வலைப்பூவை பார்த்து விட்டு "கவிதை எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு கவிஞர் பல்லவனை தெரியுமா. புகழ் பெற்றவர்தான்" என்றார்
"இல்லை" என்றேன்
"திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர்" என்றார்
ம ஹூம் 
"ஹைக்கூ பாணியில் கவிதை எழுதுபவர். நீங்கள் கவிஞராக இருந்தும்  அவரைத் தெரியவில்லையா" என்று ஒரு குட்டு வைத்தார். உடனே இணையத்தில் தேடினேன். பல்லவன் என்னும் கவிதை வல்லவன் கிடைத்தார் 
சாம்பிளுக்கு ஒரு கவிதையும்  கிடைத்தது

மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு

அசந்து போனேன் . எனது இணையத் தமிழ் என்ற  கவிதையில் இருபது வரிகளில் சொன்னதை இரண்டு வரிகளில் நறுக்கியிருந்தார் . எனக்கு நானே குட்டிக் கொண்டேன்


நமது எங்கள் ப்ளாக் ஸ்ரீராமும் அவரது கவிதை ஒன்றை பகிர்ந்திருந்ததை இப்போதுதான் அறிந்தேன் 
என்ன செய்து கிழித்தாய்?
 நாள் தோறும் கேட்கும்
 நாட்காட்டி 
இவரைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுத இருக்கிறேன்.

****************************************************************************
புள்ளி விவரங்களை நம்பலாமா 

புள்ளி விவரங்களை வைத்துதான் திட்டங்கள் தீட்டப் படுகின்றன. ஏதோ சில புள்ளி விவரங்களை கொண்டுதான் திட்டக் கமிஷன் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார்.   இதில் இருந்தே புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் முறையான புள்ளியியல் அறிவியல் முறைப்படியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

"ஒரு காலை பனிக்கட்டியிலும் மற்றொரு  காலை நெருப்பிலும் வைத்தால் நலமாக இருப்பதாகக் கூறுவதுதான் புள்ளியியல்" என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது .

************************************************************************
பல்பு வாங்கினேன் 


தர்மம் தலைகாக்கும் என்பது இதுதானோ? 
புஷ்பா மாமியின் புலம்பல்கள் பதிவில் ஹெல்மட் பற்றி எழுதி இருந்தேன். அதில் ஏதோ புதிதாக சிந்திப்பதாக  நினைத்து  ஒரு ஹெல்மட் படத்தைப் போட்டு  தர்மம் தலைகாக்கும் என்று எழுதி இருந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் போட்டோ ஷாப்பில் கஷ்டப்பட்டு ஹெல்மட்டின் பெயரை பிராண்ட் பெயர் ஆங்கிலத்தில்( Dharmam)  தர்மம் என்று இருப்பது போல் அமைத்தேன் .ஒருவரையும் அது கவராமல் போக பல்பு வாங்கினேன் .

திடீர்னு ஹெல்மெட் கட்டாயம்னு சொல்லீட்டீங்க .ரொம்ப டிமான்ட் கிடைக்கவே இல்லை அதான். 
இந்த பக்கெட் எல்லாம் கூட ஐ.எஸ்.ஐ தான் சார் 
*******************************************************************************
வேதனை:-வாட்ஸ் அப் வக்கிரங்கள் 
மூன்று வயது  சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை . தவறு செய்ததோடு அல்லாமல் அதைக் கொண்டாடி வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரவ செய்த வீர தீர செயலை  நினைத்து புல்லரிக்கிறது.  இந்த இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் சிக்கிக் கொள்ளப் போகிறதோ என்ற தவிப்பும் உண்டானது..டாஸ்மாக்கின் டாஸ்க் இதுதான் போலிருக்கிறது .
 இது போதாதென்று எல்லா விதத்திலும்  ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஹோட்டலுக்கு  சென்று மது அருந்தி நிருபித்துள்ளனர் சில மாணவிகள் 
பெற்றோர்தான் விழித்து கொள்ள வேண்டும் . அரசும் சிந்திக்க வேண்டிய தருணம் இது
*********************************************************************************

தாத்தா சொல்லை தட்டாதே !

நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி - காந்தி

==============================================================




சனி, 15 மார்ச், 2014

பெட்டிக்கடை-சூப்பர் சிங்கர் ஜூனியர்+சாவித்திரி+தினமணியில் பொருட்பிழை


குட்டிப் புலம்பல்

  பிடுங்குவதற்காகவே ஏகப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்டதால்  வலைப்பக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வர இயலவில்லை. இக்காலத்தில் தமிழ் வலையுலகம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைக்க நெஞ்சு பொறுக்கமுடியாமல் மீண்டும் வந்து விட்டேன் .

 எந்த நேரத்தில் நான் ரொம்ப நல்லவன் என்ற பதிவை எழுதினேனோ தெரியவில்லை. பணியில் சில மாற்றங்கள்.அருகில் இருந்தும் அரை அடி சுவற்றுக்கு அப்பால் எனக்கு அதிர்ச்சி அளிக்கப் போகும் செய்தி தயாராவதை அறியாதவனாக இருந்தேன்.யாருக்கோ நன்மை செய்ய பாதிப்பு எனக்கு. நல்லவனாய் எப்போதும் இருத்தல் நல்லதல்ல என்பதை இது உணர்த்தினாலும் வேறு வழியில்லை. கொஞ்சம் சீறி இருக்கவேண்டும். ஆனால் முடியவில்லை. மறுப்பு சொல்லாமல் எதையும் செய்வது நமக்கே எதிராக அமைந்து விடுகிறது. முகஸ்துதிகளும்  சமாதானங்களும்  என் வாயை அடைத்து வைத்திருந்ததது என்ன செய்வது?

எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நன்றாகவே நடந்தது.

சரி விட்டுத் தள்ளுவோம்!

******************************************************************************
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3
ஹீ மேன்! I am the master of the universe என்று கத்தியபடி  கற்பனையில் மிதந்து கொண்டே  கேட்டை திறப்பான் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும் அந்த சிறுவன். அவன் அம்மா தலையில் தட்டி அண்ணாச்சி  கடைக்கு   கால் கிலோ கருப்பு புளி மஞ்சத்தூள்வாங்கிட்டு வா என்று பை கொடுத்து அனுப்புவார். அவனும் போகும்போது
 "கால் கிலோ கருப்பு புளி மன்சாத் தூளுடா! கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுடா! என்று பாடிக்  கொண்டே கடைக்காரரிடம் கேட்க என்ன  டா வா என்பது போல் பார்க்க டாவுக்கு பதிலாக அண்ணா என்று சொல்லி விடு

 " கால் கிலோ கருப்பு புளி மஞ்சாத் தூளுணா" என்று பாடுவான் பொருட்கள் வாங்கிக் கொண்டதும் மீண்டும் டா போட்டு பாட ஹேய் என்று விரட்டுவார். இப்படிப் பட்ட பசங்க உங்க வீட்டில இருந்தா இங்க அனுப்பி விடுங்க என்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 க்கு விஜய் டிவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். என்ன ஒரு ரசனையான விளம்பரம்.குழந்தைகள் மட்டுமல்ல நம்மையும் ஈர்த்து விடுகிறது விளம்பரம்.
  விளம்பரத்தின் மூலம் மக்களைக் கவர்வது ஒரு கலை. நல்ல கற்பனை வளமும் படைப்பாற்றல் உள்ளவர்களே நல்ல விளம்பரங்களை உருவாக்குகிறார்கள். அவ்விளம்பரங்கள் நம்மையும அறியாமல் நம் மனதில் இடம் பிடித்து விடுகின்றன அந்த தந்திரத்தில்தான் நாம் ஏமாந்தும் விடுகிறோம்.

இதோ அந்த விளம்பரம்


*********************************************************************************
 நடிகையர் திலகம் சாவித்திரி
சிலருடைய முகங்களில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடிக் கொண்டிருக்கும். இதை நாம் அன்றாடம் சந்திக்கும் சிலரிடத்தும் காணமுடியும். தொலைக் காட்சியில் நடிகையர் திலகம் சாவித்ரியைப் பார்க்கும் போதேல்லாம் மகிழ்ச்சியாக (ஆடிப் பாடும் காட்சி என்றாலும்) அவர் முகத்தில் மோனோலிசா ஓவியத்தில் தெரிவது போல மெல்லிய சோகம் படர்ந்திருப்பதுபோல் எனக்கு தோன்றும். ( நடிகை  சோனியா அகர்வாலின் முகமும் அப்படியே)

சமீபத்தில் காட்சிப்பிழை திரை என்ற இணைய  இதழில் சாவித்திரி பற்றிய  கட்டுரை ஒன்று படித்தேன்.  ராஜநாயகம் என்பவர் எழுதிய இக்கட்டுரை சாவித்ரியின் திரையுலக வாழ்க்கையை சுருக்கமாக உருக்கமாக எடுத்துரைக்கிறது.
சாவித்திரி தன் 16 வயதில் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில்  இருந்திருக்கிறார்.ஜெமினி தன்32 வயதில் மூன்றாவது மனைவியாக சாவித்ரியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் ரகசிய வாழ்க்கையே வாழ வேண்டி இருந்தாதாம். முதல் மனைவியான பாப்ஜி கண்டுகொள்ளாமல் இருந்தாலும்  இன்னொரு மனைவி புஷ்பவல்லி (இவரைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை) கடும் குரோதம் கொண்டதாக தெரிகிறது. சாவித்திரி மீது காரேற்றும் அளவுக்கு சென்றதாக சொல்லப் படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ? 
ஜெமினி சாவித்திரி திருமணம்  4 ஆண்டுகள் வரை ரகசியமாகே இருந்ததாம். இந்த நெருக்கடியான காலக் கட்டத்திலும் நடிப்புத் திறன் இம்மியளவும் குறையவில்லை; பிரமிக்கிற வைக்கிற நேர்த்தியான நடிப்பு என்று ஸ்லாகித்துக் கொண்டு  போகும் இந்த கட்டுரையைப்  படிக்கும்போது இரக்கமும் பரிதாபமும் கலந்த உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை .புகழ் பெற்ற நடிகைகள் பலரின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக இருப்பது இன்று வரை தொடர்வது வேதனைதான். சாவித்ரியின்  வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவரும் ஒரு காரணம் என்ற போதிலும் ஏனோ ஜெமினி கணேசன் மீது  எரிச்சலும் கோபமும்  ஏற்பட்டது. 
தொடர்ந்து முழுமையாகப் படிக்க விரும்புவர்கள் இந்த இணைப்பிற்கு செல்லலாம் 

நடிகையர் திலகம் சாவித்திரி

நன்றி: காட்சிப்பிழை

  *********************************************************************************
வெட்டி வேலை

 என் பேரில்  எத்தனை பேர் இணையத்தில இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக  கூகுள் பண்ணிப் பார்த்ததில் ஏகப்பட்ட முரளிதரன்கள் கணினித் திரையில் காட்சி தந்து என் தலையில் குட்டிவிட்டு சென்றார்கள் . அவர்களில்  ட்விட்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு  முரளிதரன் இந்த முரளிதரனை கவர்ந்துவிட்டார். தன்னை இளையராஜாவின்  இசை வெறியன் என்று  சொல்லிக் கொள்ளும் அந்த முரளிதரனுடைய டுவீட் பக்கத்தில் 9000 மேற்பட்ட டிவீட்டுகள் கொட்டிக் கிடக்கிறது. இன்னமும் பேச்சிலர் சந்தோஷப் பட்டுக் கொள்ளும் (நியாயம்தானே?) இவரது டுவீட்டுகள் என்னை ஈர்த்தன. நாமும் டுவீட்டலாமோ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டன. சுவாரசியமாக கீச்சுவது ஒரு கலை.  முரளிதரனின் சில டுவீட்டுகளை பார்க்கலாம் 
  1. ஜென்ட்ஸ் டாய்லெட்ல அணித்தா ஐ லவ் யூ ன்னு கிறுக்கி வைக்காறானுங்க. அனிதா ஏண்டா அங்க வரப் போறா?
  2.  காதல் வாய்த்தவன் அதிர்ஷ்டசாலி.சாப்பிட்டதுக்கு பில்லு கட்டும் காதலி வாய்த்தவன் பாக்கியசாலி 
    1. தயவுசெஞ்சு புகையிலை பொருட்கள் உபயோகப் படுத்தறதை நிறுத்தி தொலைங்கடா இந்த முகேஷ் தம்பி தொல்லை தாங்க முடியல 
    2. கொலைசெஞ்ச பாடிய மறைச்சு வைக்க சரியான இடம் கூகுள் சர்ச் ரிசல்ட்ல ரெண்டாவது பக்கம்தான் யாரும் எட்டி பாக்க மாட்டாங்க 
    3. உசுரைவிட மசுருதான் பெருசுன்னு நினைக்கறவந்தான் ஹெல்மட் போடாம போறான் 
    4. அமெரிக்கா கூட போட்டி போடறதை வலது பக்கம் வண்டி ஒட்டித்தான் நம்மாளுங்க நிருபிக்கறாங்க
    5. பேச்சிலர் அவஸ்தைகள்: துவைக்க தேவைப்படாத துணி எங்க கிடைக்கும்?
    6. மனிதனால சையனைட் விஷத்தைக் கூட சாப்பிட முடியும் ஆனா ஒரு தடவைதான்.
    7. தூங்குவதற்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம். எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி முழிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?
    8. கூட்டினாலும் பெருக்கினாலும் ஒண்ணேதான் வருது-குப்பை 
    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

    நன்றி: முரளிதரன் இணைப்பு :https://twitter.com/thoppi_az

    ***************************************************

    பொருட் பிழையா?




      மேலே உள்ள படத்தில் தினமணியில் வெளியான செய்தித் தலைப்பை படித்துப் பாருங்கள். உண்மையில் அந்த வாக்கியம் சரிதானா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. 

    மனைவியோடு சேர்ந்து நண்பர்களையும் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் என்று பொருள்படுவது போன்றும் எனக்கு தோன்றுகிறது.    "நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்" என்று இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழாசிரியர்களும், புலமை உள்ளவர்களும்  இன்னமும் தெளிவாக  சொல்லமுடியும்  தினமலர் பத்திரிகையிலும் இது போன்ற சொற்றொடர் பிழைகளை பார்த்திருக்கிறேன். இவற்றை சரிபார்க்க தமிழ் படித்தவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் என்ன?
    உங்கள் கருத்து என்ன?
    ********************************************************************************
    மனதை தொட்ட கவிதை 

                             அறியா மந்திரம் 

                       புயலைப் போல 
                          மேல் மூச்சு வாங்கி 
                          புகை நுகர்ந்து செவி கிழிக்கும் 
                          பம்பை சத்தம் சூழ 
                          கற்பூர சுவாலையை நாவுக்குள் அடக்கி 
                          பரிதாப மொழியால் சப்தித்து 
                          ஆக்ரோஷமாய் காட்சி அளித்து
                          சுத்துபட்ட எட்டு கிராம சனங்களும் 
                          கன்னம் தொட்டு சேவித்து நிற்க 
                          ஊருக்கெல்லாம் குறி சொல்லும் 
                          கோடி வீட்டு சாமிக்கு 
                          ஏனோ தெரியவில்லை 
                          போலியோவால் முடங்கிய 
                          தன் மகளின் கால்களை 
                          சரி பண்ணும் வித்தை மட்டும் 
                                 *****************************
    கொசுறு :   1. இதை எழுதியவர் லட்சுமணன் என்பவர் 
                          2. இக்கவிதை வீடு திரும்பல் என்ற கவிதைத் 
                             தொகுப்பில்  இடம் பெற்றுள்ளது 
                          3. இப்போது இவர் உயிருடன் இல்லை
                          4. ஹீமோ பீலியாவால் 25 வயதிலேயே மரணமுற்ற  
                             லட்சுமனன் பிரபல பதிவர் மோகன் குமாரின் நெருங்கிய 
                              நண்பர்
                          5. லட்சுமணனின் நினைவாகவே தனது  வலைப்பூவிற்கு 
                             வீடு  திரும்பல் என்று பெயர் வைத்ததோடு 
                             ஒவ்வோராண்டும்  நற்பணிகளை செய்து வருகிறார் 
                         6. இக் கவிதை சுஜதாவின் பாராட்டையும் பெற்றிருக்கிறது 

    ********************************************************************************

    ஞாயிறு, 10 நவம்பர், 2013

    பெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்


    பெட்டிக்கடை 5


    இன்று திரைப்படத் துறையில் பல இளம் இசை அமைப்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டி வருவதை காண முடிகிறது. ஏ.ஆர்.ரகுமான்  தன் முதல் படத்திற்கு இசை அமைக்கும்போது அவரது வயது 25. ஆனால் யுவன் சங்கர் ராஜா ஜி.வி பிரகாஷ் போன்றோர் அதை விட இளைய வயதில் இசை அமைக்கும் வாய்ப்பு பெற்றதோடு தங்கள் திறமையையும் நிரூபித்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம்  இசைப் பின்னணி இருந்தது. ஆனால் இசைப் பின்புலம் ஏதுமின்றி, கேள்விஞானம், நிறைய ஆர்வம், இடைவிடாத் தேடல்,தொழில்நுட்ப அறிவு இவற்றைப் பயன்படுத்தியும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர் சிலர். முதலில்  உதவியாளராகப் பணிபுரிந்து தெரிந்து கொள்ளவேண்டியவற்றை இணையம் என்னும் துரோணாச்சாரியார் மூலம் ஏகலைவர்களாக கற்றுக் கொண்டு விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு ஒரு களமாக அமைந்திருக்கிறது. முக நூல் வலைப பூக்கள் ,யூ ட்யூப் முதலியவற்றில் இவர்கள் திறமையை பார்க்க முடிகிறது.  பல சமயங்களில் இவர்களின் திறமை  குடும்பத்தினருக்குக் கூட தாமதமாகத்தான் தெரிய வருகிறது.

     அவர்களில் ஒருவர் கெளதம் .ஒரு புதிய மெட்டை உருவாக்கி  பின்னிசை சேர்த்து  வரிகளற்ற பாடலாக கணினியிலேயே உருவாக்கி பதிவு செய்திருக்கிறார்.  இதற்கு பாடல் எழுதி விட்டால் ஒரு திரைப்படப் பாடல் கிடைத்து விடும். இதை கேட்டு உங்கள் கருத்தை கூறலாம்.  பாடல் வரிகள் தந்தாலும் வரவேற்க தயாராக இருக்கிறார் கெளதம்.  சிறந்த இசை அமைப்பாளராக வளர வாழ்த்துவோம்.


    இன்னும்சில படைப்புகளை கேட்க
    https://soundcloud.com/gautham
                                          

    இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்

    கணித மேதை ராமானுஜத்திற்குப் பிறகு கணிதத்தில் உலக அளவில் புகழ் பெற்றவராத் திகழ்ந்தவர் சகுந்தலா தேவி. மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப் படும் இவரது கணித ஆற்றல் அபாரமானது. கடின கணக்கீடுகளை மின்னல் வேகத்தில் சொல்லி அசத்தியவர். எண்கள் இவரிடம் கை கட்டி சேவகம் செய்தன. கணினியை விட வேகமாக செயல்பட்ட இவரது திறமை கண்டு உலகம் வியந்தது. அப்படி என்னதான் இவரது கணித திறமை என்று கேட்கிறார்களா?

    உதாரணத்திற்கு ஒன்று. 
     நீங்கள் கணிதத்தில் வர்க்க மூலம் பற்றி அறிந்திருக்கக் கூடும். 5 இன் வர்க்கம் 5 x 5 = 25  25 இன் வர்க்க மூலம் 5 இதை 2 ம்  படி மூலம்  என்றும்  கூறலாம்.4 x 4 x 4  = 64. 64 இன் மூன்றாம் படி மூம் 4 .
    இவரை  சோதிக்க டெக்சாசில் உள்ள தெற்கு மெத்தேடிஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் 201 இலக்கங்கள் கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதற்கு 23ம் படி மூலத்தை கணக்கிடும்படி கூறினர். சரியாக 50 வினாடிகளில் 546,372,891 என்று சரியான விடை கூறி அசத்தினாராம். இதை சரி பார்க்க  Univac 1101 என்ற கணினி பயன்படுத்தப் பட்டது. இதை கணினி கணக்கிட ஒரு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டு விடை சரியானது என்று உறுதிப் படுத்தியது. இதற்கான கணக்கீட்டு நிரல்களில் 13000 கட்டளைகள் பயன்படுத்தப் பட்டதாம் .
    இத்தகைய இந்திய மனித கம்யூட்டரை கௌரவிக்கும் வண்ணம் கூகிள் சகுந்தலா தேவியின் பிறந்த நாளான நவம்பர் 4 அன்றுஅவரது படத்தையும் google என்பதை டிஜிட்டல் எண்கள்
     வடிவத்தில் தேடல் பேட்டியின் மேல் லோகோவாக அமைத்தது.
    இவை Doodles என்று அழைக்கப் படுகின்றன.
    (எச்சரிக்கை: பின்னர் இவரைப் பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கலாம்.)

    இதே போல் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சார் சிவி ராமனுக்கும் நவம்பர் 7 அன்று  கூகுள் சிறப்பு Doodle உருவாக்கி பெருமை சேர்த்தது .

    google-doodle-cv-raman.jpg



      மனைவியை இப்படியுமா பழி வாங்குவாங்க ?

     மனைவியை பழிவாங்கனும்னா நீங்க என்ன செய்வீங்க?உங்களால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொல்றீங்க! அப்படித்தானே! இந்த சின்ன வீடியோ வை பாருங்க(முக  நூலில் கிடைச்சது) இதை தயவு செய்து ட்ரை பண்ணி பாக்காதீங்க பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல.





     மாநகராட்சியின் சுராட்சிறுசுறுப்பு 
        என்னதான்  டெங்கு காய்ச்சல் சென்னையில் இல்லை என்று மாநகராட்சி சொன்னாலும் ஆங்காங்கே டெங்குவின் தாக்குதல் இருக்கத்தான் செய்கிறது. எங்கள் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு  தொடர்ந்து ஒரு வாரமாக காய்ச்சல். சந்தேகம் வந்து டெஸ்ட் செய்ததில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது. ப்ளேட்லேட்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு நான்கைந்து நாட்கள் சிகிச்சை பெற்றதும் சரியானது. உடனே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க உடனே ஒரு படை கொசுஎதிர்ப்பு ஆயுதங்களுடன் முற்றுகை இட்டது. சரசரவென வீட்டை சுற்றி மருந்து அடித்தனர். . கிணற்றில் மருந்து தெளித்தனர். சுற்றி கொட்டாங்குச்சி பிளாஸ்டிக், டயர் இன்ன பிறவற்றில் நீர்தேங்கி இருக்கிறதா என்று பார்த்து அவற்றை கசிழ்த்துப் போட்டு சுத்தப் படுத்தி விட்டு சென்றனர். கழிவு நீர்க் கால்வாயில் கொசு மருந்து அடித்தனர். கொசு புகை வண்டி வந்து அப்பகுதியி புகையால் நனைத்து விட்டு சென்றது. சுகாதாரத் துறையில் ஆட்கள் வந்து யாருக்கு எப்படி எங்கிருந்து டெங்கு வந்தது என்று விசாரித்து குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். மாநகராட்சியின் பல்வேறு பணியாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்தடுத்த  நாட்களில் தொடர்ந்து  பலர் கார்ப்பரேஷனில் இருந்து வந்து இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டுச்  சென்றனர். மாநகராட்சியின் துரித நடவடிக்கைகள் ஆச்சர்யப் படுத்தியது.  சென்னை மாநகராட்சி தன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது

    பொது மக்களும் தங்கள் பங்குக்கு சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டும். வீடு சுத்தமாக வைத்துக் கொண்டால்  மட்டும் போதாது. தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.




    பஞ்ச் கவிதை 
                                                 ஆதங்கம் 
                               
                                        சே!
                                        இந்த  அலைபேசி சேவை
                                        ரொம்ப மோசம்.
                                        பக்கத்து  அறையில் இருக்கும்
                                        மனைவியுடன் கூட
                                        பேச முடியவில்லை!
     

    *********************************************************************************
    முந்தைய பெட்டிகடை பதிவுகள்
    பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
    பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும் 


     ************************************************************************************************