என்னை கவனிப்பவர்கள்

சனி, 11 ஜூலை, 2015

பெட்டிக்கடை -இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்

பொய்யாய் பழங்கதையாய் போன நட்பு 

பெட்டிக்கடை திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி மாதம் ஒருமுறையாவது திறக்கவேண்டும் 
இளையராஜா எனும் புதிர்
வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியை தன் உன் சமையல் அறையில் என்ற படத்தில் பாடல் எழுத அழைத்திருந்தாராம் பிரகாஷ்ராஜ். கார்க்கியும் ஒப்புக் கொள்ள படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா, கார்க்கி பாடல் எழுத சம்மதிக்கவில்லை. அதேபோல ருத்ரம்மாதேவி படத்திலும் கார்க்கி பாடல் எழுத மற்றவர்கள்  விரும்பினாலும் இளையராஜா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்  "அப்பாவின்மீதான  ராஜா சாரின் கோபம் அடுத்த தலைமுறை வரையும் இருக்கிறது" என்று கார்க்கி வருத்தப்படுள்ளதாக செய்தி படித்தேன்
சமீபத்தில் உடல் நலமின்றி இருந்த மெல்லிசை மன்னர் எம். எஸ் விஸ்வநாதனை  மருத்துவமனையில் சென்று பார்த்து நல விசாரித்ததோடு தன் வீட்டில் இருந்து உணவு எடுத்து சென்று ஊட்டி விட்ட செய்தியையும் படித்தேன் . இளையராஜா ஒரு புதிர்தான்

இதோ
Enthiran Robo   என்ற ராஜா ரசிகரின் ஆதங்கம் 

நான் இளையராஜா அவர்களின் பாடல்களை தீவிரமாக ரசிப்பவன். அவர் இசை ஒன்றுதான் மனதை கவர்ந்து என்னை மெய்மறக்க செய்வது. என்னதான் மனகசப்புகள், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் மன்னித்து மறந்து ஒப்புரவாககூடிய குணமுடைய மனிதனே அன்போடுகூடிய சிறந்த மனிதன் எனபடுவான், ஒரு நல்ல மனிதனுக்கு அழகும் கூட. 1987-ல் இந்த இணை பிரிந்த பிறகு, இதுவரை ஒப்புரவாகவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம். இதில், இமாலய புகழ்பெற்ற திரு. இளைய ராஜா அவர்களின் இந்த வைராக்கியம், கடின உள்ளம், இந்த குணம் நல்லதல்ல என்றுதான் தோன்றுகிறது. திரு. இளைய ராஜா அவர்களின் மனைவி இறந்தபோது திரு.வைரமுத்து அவர்களும் அவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்த போதும், திரு. இளையராஜா அவர்கள் அவரை கண்டுகொள்ளாதது போல் இருந்ததையும் வீடியோ வில் பார்க்க முடிந்தது. சகோதரி ஜீவா, நான் எப்போது இளையராஜா வீட்டுக்கு சென்றாலும் அவருடைய கரங்களால் உணவு பரிமாறி எனக்கு உணவளித்து உபசரித்ததை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று பழைய நினைவுகளை இரங்கல் செய்தியோடு பகிர்ந்திருந்தார். ஏன்.., வைரமுத்து அவ்வளவு தீண்டதகாதவரா..? தவறு செய்திருந்தாலும் மன்னிக்க பட கூடாதவரா..? அப்படிஎன்றால், 87 க்கு முன்பு பத்து/பனிரெண்டு ஆண்டுகள் எப்படி அவரோடு மிகவும் நட்போடு இருந்தார்?. அப்படியே, வைரமுத்து தவறு செய்திருந்தாலும், இளையராஜா தானே சென்று அவரிடம் பரிவாக பேசி ஒப்புரவாகி இருந்தால், புடமிடப்பட்ட தங்கம் போன்ற சிறந்த மனிதனாக காணபட்டிருப்பாரே திரு.இளையராஜா அவர்கள்.. ரமணரை கும்பிட்டாலும், ஏதோ ஒரு தாயை தெய்வம் போன்று கும்பிட்டாலும், அல்லது ஏதோ கல்லை கடவுள் என்று கும்பிட்டாலும், அவைகள் எல்லாவற்றையும் விட மேலானது, தவறுகளை மன்னித்து, பகைவனிடமும் அன்பு செலுத்தி, ஒப்புரவாகி, மனதின் வைராக்கியம் என்ற கடின கற்பாறையை  அகற்றி மென்மையான பஞ்சுபோன்ற இதயத்தை வைத்திருந்தால் அதுவே சிறந்தது. ஒருவேளை, இன்று மரித்தாலும் குற்றவுணர்வு அகன்று, குறை இல்லாத நிறைவான சாந்தியோடு மறுமையில் பிரவேசிக்க ஏதுவாய் இருக்குமே.... இது ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை .. பிடிவாதம் என்பது மனிதனை சமாதானமற்ற/நிம்மதியற்ற நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு கொடிய நோய்... மனதில் அன்பை விதைத்து அன்பில் நிலைத்திருங்கள்.. அதில் எல்லா நன்மைகளும் அடங்கியுள்ளன..
ராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும்  உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது  என்பதை அவர் உணர்வாரா?
***************************************************************************************
நண்பர் வைத்த குட்டு 
 என்னுடன் பணிபுரியும் நண்பர் சரவணன் என்னுடைய வலைப்பூவை பார்த்து விட்டு "கவிதை எல்லாம் எழுதுகிறீர்களே உங்களுக்கு கவிஞர் பல்லவனை தெரியுமா. புகழ் பெற்றவர்தான்" என்றார்
"இல்லை" என்றேன்
"திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர்" என்றார்
ம ஹூம் 
"ஹைக்கூ பாணியில் கவிதை எழுதுபவர். நீங்கள் கவிஞராக இருந்தும்  அவரைத் தெரியவில்லையா" என்று ஒரு குட்டு வைத்தார். உடனே இணையத்தில் தேடினேன். பல்லவன் என்னும் கவிதை வல்லவன் கிடைத்தார் 
சாம்பிளுக்கு ஒரு கவிதையும்  கிடைத்தது

மம்மி என்றது குழந்தை
அம்மா என்றது மாடு

அசந்து போனேன் . எனது இணையத் தமிழ் என்ற  கவிதையில் இருபது வரிகளில் சொன்னதை இரண்டு வரிகளில் நறுக்கியிருந்தார் . எனக்கு நானே குட்டிக் கொண்டேன்


நமது எங்கள் ப்ளாக் ஸ்ரீராமும் அவரது கவிதை ஒன்றை பகிர்ந்திருந்ததை இப்போதுதான் அறிந்தேன் 
என்ன செய்து கிழித்தாய்?
 நாள் தோறும் கேட்கும்
 நாட்காட்டி 
இவரைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் எழுத இருக்கிறேன்.

****************************************************************************
புள்ளி விவரங்களை நம்பலாமா 

புள்ளி விவரங்களை வைத்துதான் திட்டங்கள் தீட்டப் படுகின்றன. ஏதோ சில புள்ளி விவரங்களை கொண்டுதான் திட்டக் கமிஷன் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார்.   இதில் இருந்தே புள்ளி விவரங்களின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இத்தனைக்கும் புள்ளி விவரங்களை ஆராய்ந்து கணக்கிடும் முறையான புள்ளியியல் அறிவியல் முறைப்படியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

"ஒரு காலை பனிக்கட்டியிலும் மற்றொரு  காலை நெருப்பிலும் வைத்தால் நலமாக இருப்பதாகக் கூறுவதுதான் புள்ளியியல்" என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது .

************************************************************************
பல்பு வாங்கினேன் 


தர்மம் தலைகாக்கும் என்பது இதுதானோ? 
புஷ்பா மாமியின் புலம்பல்கள் பதிவில் ஹெல்மட் பற்றி எழுதி இருந்தேன். அதில் ஏதோ புதிதாக சிந்திப்பதாக  நினைத்து  ஒரு ஹெல்மட் படத்தைப் போட்டு  தர்மம் தலைகாக்கும் என்று எழுதி இருந்தேன். எனக்குத் தெரிந்த அளவில் போட்டோ ஷாப்பில் கஷ்டப்பட்டு ஹெல்மட்டின் பெயரை பிராண்ட் பெயர் ஆங்கிலத்தில்( Dharmam)  தர்மம் என்று இருப்பது போல் அமைத்தேன் .ஒருவரையும் அது கவராமல் போக பல்பு வாங்கினேன் .

திடீர்னு ஹெல்மெட் கட்டாயம்னு சொல்லீட்டீங்க .ரொம்ப டிமான்ட் கிடைக்கவே இல்லை அதான். 
இந்த பக்கெட் எல்லாம் கூட ஐ.எஸ்.ஐ தான் சார் 
*******************************************************************************
வேதனை:-வாட்ஸ் அப் வக்கிரங்கள் 
மூன்று வயது  சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை . தவறு செய்ததோடு அல்லாமல் அதைக் கொண்டாடி வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பரவ செய்த வீர தீர செயலை  நினைத்து புல்லரிக்கிறது.  இந்த இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் சிக்கிக் கொள்ளப் போகிறதோ என்ற தவிப்பும் உண்டானது..டாஸ்மாக்கின் டாஸ்க் இதுதான் போலிருக்கிறது .
 இது போதாதென்று எல்லா விதத்திலும்  ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பள்ளிக்கு கட் அடித்து விட்டு ஹோட்டலுக்கு  சென்று மது அருந்தி நிருபித்துள்ளனர் சில மாணவிகள் 
பெற்றோர்தான் விழித்து கொள்ள வேண்டும் . அரசும் சிந்திக்க வேண்டிய தருணம் இது
*********************************************************************************

தாத்தா சொல்லை தட்டாதே !

நமக்கு ஆங்கிலேயர்கள் இல்லாத ஆங்கிலேய ஆட்சி வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குப் புலி வேண்டாம். ஆனால் புலியின் இயல்பு வேண்டியிருக்கிறது... இதுவல்ல நான் விரும்பும் தன்னாட்சி - காந்தி

==============================================================
30 கருத்துகள்:

 1. ரசித்தேன். எல்லாத் தகவல்களும் சுவாரஸயம். நான் எப்போது அந்தக் கவிதையைப் பகிர்ந்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே
   என்ற பதிவில் 15.02.2012 அன்று பகிர்ந்திருக்கிறீர்கள் முதல் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. ஓ.... நன்றி.

  நான் முதலில் வந்தபோது தமிழ்மணம் சப்மிட் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே இப்போது வாக்களிக்கிறேன்!

  இளையராஜா - வைரமுத்து சம்பவத்தில் எனக்கும் இளையராஜா மேல் அந்த வருத்தமுண்டு. இந்த விஷயம் மட்டுமல்ல, நிறைய விஷயங்களில் இளையராஜா பேசுவது நெருடலாய் இருக்கும். என்ன செய்வது? அவர் பாடல்கள் ஈர்க்கின்றனவே... அதை மட்டும் ரசித்து விட்டுச் சென்று விட வேண்டியதுதான்!

  :)))

  பதிலளிநீக்கு
 3. அப்படி என்ன பிரச்சனையோ இருவருக்கும்... நட்பு உண்மை என்றால் என்றாவது ஒரு நாள் சேர்வார்கள்...

  இரண்டு கவிதைகளும் பிரமாதம்...

  பதிலளிநீக்கு
 4. ///மம்மி என்றது குழந்தை
  அம்மா என்றது மாடு///
  அசந்து போகச் செய்யும் வரிகள்தான் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 5. இளையராஜா சிந்திக்க. நறுக் கவிதை. புள்ளி விவரம் பேருக்காகவே. தலைக்கவச யோசனை அருமை. வாட்ஸ் அப் வக்கிரம் பெற்றோர் கவனத்திற்கு. தாத்தா சொல் சரி.

  பதிலளிநீக்கு
 6. பெட்டிக்கடை சரக்கு எல்லாம் அருமை

  பதிலளிநீக்கு
 7. ஹைக்கூ சூப்பர்! ஆஹா! அந்த ஹெல்மெட் மேட்டர் நல்லாதானே இருக்கு!!! யாரும் பாக்கலையா:((( துரை செல்வராஜ் அய்யாவும் இந்த வாட்ஸ் அப் தகவலை பற்றி ரொம்ப ஆதங்கப்பட்டு பதிவுபோட்டிருகிறார் அண்ணா! பொட்டிகடைய காணோமேனு பார்த்தேன். இனி யாவாரம் சுறுசுறுப்பாகட்டும்:)

  பதிலளிநீக்கு
 8. கவிதைகள் அருமை.

  பெட்டிக்கடையில் வந்த விஷயங்கள் நன்று.

  வாட்ஸ் அப் வக்கிரங்கள் - நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயன தவிர்ப்போம்.

  பதிலளிநீக்கு
 9. நீண்டநாள் கழித்து கடை திறந்தாலும் கடையின் சரக்குகள் கெட்டுப்போகவில்லை! அருமை! இளையராஜா- வைர முத்து அப்படி என்ன பிரிவினையோ தெரியவில்லையே! பல்லவன் எனக்கும் புதியவர் வலையில் எழுதுகின்றாரா? நானும் சென்று பார்க்க வேண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 10. சிறுவனை மது அருந்தச் செய்யும் அந்த வீடியோவைப் பார்த்தேன்.... இரண்டோ மூன்றோ இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.........மது அருந்த வைப்பது மட்டுமல்ல, அவனைக் குடிக்கவைத்துவிட்டு "ஊறுகாய் நக்கிக்கடா...... ஊறுகாய் நக்கிக்கடா" என்று அந்தப் பச்சிளம் பாலகனை வலியுறுத்துகிறான் ஒருத்தன். இவன்களுக்கெல்லாம் என்ன தண்டனைக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. மன்னிக்க முடியாத தவறாக இருக்கும்... அவர்கள் இருவருக்குமே உண்மை தெரியும்.த.ம-6

  பதிலளிநீக்கு
 12. இருவருக்கும் உள்ள பிணக்கும் அதன் தாக்கமும் இருவருக்கும் தெரியாதா.?நாம் நடுநிலை வகிப்பதே நல்லது. பெட்டிக்கடைச் செய்திகள் சுவையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. இரண்டு பிரபலங்களின் ஊடலைத் தீர்க்க பாரதி ராஜா அவர்களும் முயன்றார் ,நடக்கவில்லை ,அப்படியென்ன மன வருத்தமோ யாரறிவார் :)
  பெட்டிக் கடையா இது ?சூப்பர் மார்க்கெட் :)

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  முரளி அண்ணா

  ஒவ்வொன்றையும் பற்றியும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 15. எல்லாத் தகவல்களும் சுவை...
  ராஜாவின் கோபம் கார்க்கி வரை போவது நியாமில்லை... ஏன் இந்தப் பிடிவாதம்... ராஜா சார் மாறணும்...
  குடி... இப்போதைக்கு மாணவர்களைப் பிடித்திருக்கிறது... மாநில அரசின் மகத்தான சாதனை அல்லவா இது...

  பதிலளிநீக்கு
 16. இளையராஜா யாரோடும் சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டிய நிலையில் இல்லை வைரமுத்துவை தாண்டி அடுத்த தலைமுறையில் பலர் வந்தாச்சு மதன் கார்க்கி இன்னும் வளர வேண்டும் அவரின் வியாபார உலகு வேறு!

  பதிலளிநீக்கு
 17. இளையராஜா என்பவரின் திறமைகளை மட்டும் எடுத்துக் கொண்டால் அவர் ஒரு மேதை. ஆனால் அவர் வாழ்வில் நடந்த உருவான ஏற்றத்தாழ்வுகளை உள்ளே வைத்துக் கொண்டு இன்னமும் புழுங்கிக் கொண்டிருக்கின்றாரோ என்று தான் நினைக்க வேண்டியதாக உள்ளது. மறப்போம். மன்னிப்போம் என்பது அவருக்கு பிடிக்காத வார்த்தை போல.

  பதிலளிநீக்கு
 18. அனைத்தும் பெட்டிக்கடை தகவல்களாக தந்த விதம் சிறப்பு. தகுந்த தலைப்பு.

  பதிலளிநீக்கு
 19. மதன் கார்க்கியின் அந்தப் பேட்டியை படித்த போது இளையராஜா மீது கொஞ்சம் வருத்தம்தான் வந்தது... ஆன்மிகம் ஒருவரை அமைதிப்படுத்தும் ..சாந்தப்படுத்தும்..என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ராஜா ஆன்மீகத்தில் இறங்கிய பிறகுதான் அவர் போக்கில், பேச்சில்,இசையில் நிறைய மாற்றம் வந்தது. எவ்வளவோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியில் கர்வத்தைத் துறந்து இறக்கி வந்து எல்லோருக்கும் சமமான மரியாதையை அளித்தார்கள்.. இளையராஜா மட்டும் புரியாத புதிர்..

  பதிலளிநீக்கு
 20. வணக்கம்,
  அனைத்து தகவல்களும் அருமை,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. நண்பரே,

  இரா இன்னும் இசை அமைப்பதாகச் சொல்கிறார்கள். சில பெயரில்லாத படங்களுக்கு அவர் இசை அமைப்பதாகக் கேள்வி. அவரது ரசிகர்களே அவர் இப்போது இசை அமைக்கும் பாடல்களைக் கேட்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அடுத்த தலைமுறை ஆனாலும் வைரமுத்து இன்னும் பாடல்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்.

  இவர்கள் இருவரும் இனிமேலும் எதற்காக இணைய வேண்டும்? ஆடிய ஆட்டமெல்லாம் போதும் என்றே பலர் நினைக்கிறார்கள். தமிழ் திரையுலகம் இந்த இரா பாரா வைரா இவர்களை விட்டு எப்போதோ வெகு தூரம் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 22. \\ராஜாவின் செயல்களை நியாயப் படுத்த முனைந்தாலும் உண்மையான ராஜா ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் உணர்வாரா?
  \\ இது பற்றி இளையராஜா ஒரு போதும் பேசுவதேயில்லை. பாராதிராஜவாலும் சமாதானப் படுத்தி இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. என்ன நடந்தது என்பது கடவுளுக்கும், அந்த இருவருக்குமே வெளிச்சம்.

  \\திட்டக் கமிஷன் அலுவலர் அலுவாலியா நகரங்களில் 32 ரூபாய்க்கு மேல் சம்மதிப்பவர்களும் கிராமப் புறங்களில் 26 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று அபத்தமான வரையறையை அறிவித்தார்.

  \\ சரியான புள்ளி ராஜாவா இருப்பான் போலிருக்கே!! இந்தப் பணத்தை குடுத்து வாழ்க்கையை நடுத்துடான்னு சொல்லணும், அப்போ புரிஞ்சிப்பான்.

  \\மூன்று வயது சிறுவனுக்கு பீர் கொடுத்து அருந்தச் செய்து அட்டகாசம் செய்த இளைஞர்களை நினைத்த போது எழுந்த கோபத்துக்கு அளவே இல்லை .
  \\

  நாட்டு மக்களும் இதே மாதிரி குழந்தைகள் தான், மன்னன் அவர்களை கண்ணும் கருத்துமாய் காக்க வேண்டும். ஆனால், மாறி மாறி கொள்ளையடித்து சாகடிக்கிறார்கள். சாராயக் கொள்ளை பெரும் கொள்ளை.

  பதிலளிநீக்கு
 23. ராஜாவுக்கு எழுதப்பட்ட கடிதம் மிக மிக நேர்த்தியான கடிதம். உண்மைதானே. ராஜாவுக்கு ஏன் மன்னிப்பு என்பது மனிதனை உயர்த்தும் செயல் என்பது தெரியவில்லை அதுவும் இத்தனை ஆன்மீகம் பேசும் மனிதர்...அப்போ அவர் இன்னும் பற்றுள்ளவர்தான் என்பது நிரூபணம் ஆகின்றது..பற்றற்றவருக்குத்தான் விருப்பு வெறுப்பு இருக்காது ...மறப்போம் மன்னிப்போம் ஷமா ஹி சத்ய ஹை என்றும் அவர் அந்த ஆன்மீக புத்தகங்களில் வாசித்திருப்பார் அதுவும் ரமணரின் போதனைகளிலில்..........ம்ம்ம்ம் அப்போது அவரது அகந்தை இன்னும் விலகவில்லை என்றாகின்றது......முரண்பாடுகள்...

  பீர்....ஹும் டாஸ்மாக், மதுபானங்கள் கடைகள் மூடப்பட வேண்டும் எனும் புரட்ச்சி வெடிக்கும் நாள் நெருங்குகின்றது ஆனால் நம் அரசிற்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லையே....அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு ம்யூசிக்கல் சேர் தான். தமிழ்நாட்டின் சாதனை, மக்களுக்கு வேதனை...

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895