நன்றி: விக்கிபிடியா, இணைய தளங்கள், யூடியூப் பேட்டிகள்
பக்கங்கள்
- முகப்பு
- பாலகுமாரன் கவிதைகள்
- தமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை
- TAMILNADU 7TH PAY COMMISSION FIXATION STATMENT
- TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்
- கணினிக் குறிப்புகள்
- என்னைப் பற்றி
- கவிதைகள்
- புதிர் விடை
- என் கற்பனையில் வடிவேலு
- புரோகிதரே போதும் கவிதை எழுதியவர்
- Rajyasaba Election : Model Voting and counting
- எனது பதிவுகளின் பட்டியல்
- கமலஹாசன் கவிதை
- எண்ணங்கள்
என்னை கவனிப்பவர்கள்
ஞாயிறு, 9 மே, 2021
நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்
திங்கள், 19 ஏப்ரல், 2021
விவேக்-இறப்பின் போதும் நன்மை செய்த ஒரே மனிதர்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அதனை மெய்ப்பித்து விட்டார் நடிகர் விவேக். பேர் சொல்வதையும் தாண்டி மக்களை நன்மை செய்ய வைத்ததுதான் மிகப் பெரிய சாதனை.
எத்தனையோ பேர் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதை தொலைக்காட்சியில் காணமுடிந்தது .நேரிலும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த மாலைகளோடு வந்தவர்களைவிட மரக்கன்றுகளோடு வந்தவர்கள்தான் அதிகம். நேற்று சில ஆயிரக்கணக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும். இன்னும் நடவும் செய்வார்கள். எந்த அளவுக்கு அவர் மரம் வளர்க்கும் சிந்தனையை வளர்த்திருக்கிறார் என்பது உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனக்குத் தெரிந்து யாருடைய இறப்பின்போதாவது அஞ்சலி செலுத்துவது கூட நற்செயலாக இருந்ததாக நான் அறிந்ததில்லை.
எத்தனையோ மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஆளுமைகள் மண்ணில் இருந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் மறைவுக்கு மக்கள் கண்ணீர்விட்டு கலங்கி இருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நின்று தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள். பாடகர் SPB அவர்களின் மறைவின்போது கோடிக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இவ்வளவு அன்பு தன் தந்தையின்மீது வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் எங்களுக்குத் தெரிகிறது என்றார் எஸ்பிபியின் மகன். .
அது போலவே விவேக்கின் அருமையும் அவர் இறப்பின்போது வெளிப்பட்டிருக்கிறது.
தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு. விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வந்தார். நடிகர்கள் சொல்லியா மக்கள் கேட்கப் போகிறார்கள் இவருக்கு எதற்கு விளம்பர மோகம் என்றுதான் பலரும் நினைத்திருக்கக் கூடும் . நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் அவரது இறப்பிற்குப் பின்தான் தெரிகிறது அவர் சொல்வதையும் மக்கள் கேட்கத் தயாராக இருந்தார்கள் என்பது. கையில் மரக்கன்றுகளோடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது உருக்கமான நிகழ்வு. அவர் உயிரோடிருந்திருந்தால் தடுப்பூசி விழிப்புணர்வு நிச்சயம் இன்னும் பலரை சேர்ந்திருக்கும் போலிருக்கிறது.
எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் அவனது புகழுக்கு ஒரு உச்சம் உண்டு. அதனைத் தொட்டபின் புகழ் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கும். இது இயற்கை நியதி அந்தத் தலைமுறை மட்டுமே அவரைக் கொண்டாடும். அடுத்த தலைமுறையினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. அப்படி மக்கள் மனதில் நிலைபெற வேண்டுமெனில், ஊருக்காக நாட்டுக்காக, சமுதாயத்திற்கு ஏதாவது செய்தால் தவிர நிலைத்திருக்க முடியாது.. அதனைத்தான் விவேக் செய்தார். மறைந்த அப்துல் கலாம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று இலட்சக்கணக்கான மரங்களை நட்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அப்துல் கலாம் போன்ற அறிஞர்களுக்கே விவேக்கின் நகைச்சுவை பிடித்திருக்கிறது என்றால் நம்மைப் போன்ரவர்களுக்கு பிடிக்காமலா போகும்?. . பொதுவாக கதாநாயகனுக்கு உரிய தோற்றப் பொலிவு கொண்டவர்கள் நகைச்சுவை நடிகனாக மிளிர்வது அரிது. பெரும்பாலான புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களாக உருவம் தோற்றம் நிறம் இவற்றை பகடி செய்து நகைச்சுவைக் காட்சிகள் அமைந்திருப்பது பழைய திரைப்படங்களிலில் இருந்து இன்று வரை தொடரும் ஒன்றுதான். ஆனால் இந்த விதியை தகர்த்தெறிந்தவர் விவேக்.தனக்கென்று ஒரு நகைச்சுவைப் பாணியை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் மனம் கவர்ந்தார். முன்பெல்லாம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலான வீட்டு வேலைக்காரர் பாத்திரங்களாகவே இருக்கும். நாகேஷ் மனோரமா உள்ளிட்ட லெஜெண்ட்களுக்கும் இதே நிலைதான். கோவை சரளாவுக்கு கிடைக்கும் பாத்திரங்கள் இப்போதும் அப்படித்தான். இவர் மட்டும்தான் அது போன்ற பாத்திரங்களில் நடிக்கவில்லை என நினைக்கிறேன்.
நடிகர்களில் பொது அறிவு அதிகம் உடைய மிகச் சிலரில் இவரும் ஒருவர். . தனது நகைச்சுவையில் ஆங்காங்கே பொதுத் தகவல்களை அள்ளித் தெளிப்பார்
சில நேரங்களில் இவரது நகைச்சுவையை ரசிக்க கொஞ்சம் முன்னறிவு தேவைப்படும்.
ஒரு படத்தில் ஜோதிகாவைப்பார்த்து இப்பவும் ரெண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடற பழக்கம் இருக்கா என்பார். (ஜோதிகா அப்போது இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இதுபோல் சாப்பிடுவார். )
திருமலை படத்தில் (a + b)2 = a2 + 2ab +b2 என்று ஒரு ஆட்டோக்காரர் இந்த ஃபார்முலாவை சொல்வது போல காட்சி அமைத்திருப்பார். அப்போதே நான் நினைத்தேன் இவர் வித்தியாசமானவர் என்று.
இன்னொரு படத்தில் மும்தாஜிடம் காதலைச் சொல்ல கேரளாவைப் பற்றி செய்திக்ளை அடுக்குவார்.
இனி எண்ட ஸ்டேட் கேரளா
எண்ட சிஎம் ஈகே நாயனார்
எண்ட நடனம் கதகளி. எண்ட நாதம் செண்டை என்று நகைச்சுவையாக சொல்வது சிரிக்காதவரையும் சிரிக்க வைக்கும். சிரிப்பாக இருந்தாலும் சொன்னது கேரளா பற்றிய தகவல் ஒரு பாடம் போலிருக்கும்
அந்நியன் படத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து மாதிரி நடக்கறதப் பாரு என்பார்.
இவருக்கு வாசிக்கும் வழக்கம் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.நாட்டு நடப்புகளை அப்டேட் செய்து நகைச்சுவையில் இணைப்பது இவருக்கே உரித்தானது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
இந்த வசனங்கள் பலராலும் இன்று பயன்படுத்தப்படுகிறது.
ட்ராபிக் போலீஸை வைத்து இவர் செய்த காமெடிகள் நினைத்து நினைத்து சிரிக்கக் கூடியவை
பிரபல ஹீரோக்கள் இவரைத் தவிர்க்கவே செய்வார்கள் இவரது புத்திசாலித்தனமும் அறிவும் சங்கடம் ஏற்படுத்தும். மற்ற நகைச்சுவை நடிகர்கள் போல இவரை ஹீரோக்கள் கையாள்வது கடினம். ஹீரோக்களின் நண்பனாக வந்தாலும் ஹீரோவை கலாய்க்கும் நகைச்சுவை நடிகர் இவரே. (இவருக்குப் பின் சந்தானம்).
நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பிலும் தன் திறமையை நிருபித்தவர் விவேக்.
ஆனால் இத்தனையும் தாண்டி அவரது சமூக சிந்தனையும் மரம் நடுதல் என்ற செயல்பாடும்தான் சினிமாவை விரும்பாதவரையும் அவரை விரும்பவைத்தது. இவரை முன்வைத்து தமது பிரபல்யத்தை பயன்படுத்தி நாமும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மேலும் சிலராவது முன்வந்தால் இது விவேக்கிற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக அமையும்.
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்
புதன், 7 ஏப்ரல், 2021
மறக்கமுடியாத பத்திரிகையாளர் கோசல்ராம்
பத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட்டு நான் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
நான் 2011 இன் இறுதியில் வலைப்பூக்களில் எழுதத் தொடங்கினேன். வலைப்பூக்கள் உச்சத்தைத் தொட்டு கொஞ்சம் மங்கத் தொடங்கிய காலம். ஆனாலும் அதற்கென்று தனி இடம் இருந்தது. ஓரளவுக்கு வலைப்பதிவர்களுக்கு அறிமுகமானவனாக இருந்தேன்.
கதைகள், கவிதகள், கட்டுரைகள் என்று மனதில் தோன்றியவற்றையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். ஒரு பழைய பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் சற்று வித்தியாசமான சிறு கதை ஒன்றை எழுதி பதிவிட்டுவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். திடீரென்று ஒரு ஃபோன் கால். ,”நான் பிரியா கல்யாண ராமன். பேசுகிறேன். என்னைத் தெரியுமா? என்றார்
”குமுதம் ஆசிரியரும் எழுத்தாளருமான உங்களைத் தெரியாதவர்கள் யார் சார் இருக்க முடியும்” என்றேன்.
”உங்கள் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள கதையைப் படித்தேன். நன்றாக இருக்கிறது. அது நீங்கள் எழுதியதுதானா? ”என்று கேட்டார்.
”ஆம்” என்றேன்.
குமுதத்தில் வெளியிட சம்மதமா என்று கேட்க
கரும்பு தின்னக் கூலிவேண்டுமா என்ன? மகிழ்ச்சியுடன் சம்மதம் சொன்னேன்/
உங்கள் பக்கத்தில் இருந்து அதனை இப்போது நீக்கி விட்டு எனக்கு அனுப்புங்கள் என்றார்.
நான் உடனடியாக அதனை நீக்கி விட்டு குமுதத்திற்கு அனுப்பினேன். 3 வாரங்களில் என் சிறுகதை வெளியாகிவிட்டது. முதன்முதல் எனது கதை குமுதத்தில் வெளியானது கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதன் பின்னர் அவ்வப்போது குமுதத்தில் எனது கதைகள் பிரசுரமாகின்றன
வலைப்பூக்களை பத்திரிகைகள் கவனித்து வருகின்றன என்பதை அப்போதுதான் நான் அறிந்து கொண்டேன். அப்போதுஅவர் தெரிவித்த இன்னொரு செய்தி எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போது குமுதத்தில் திரு கோசல்ராம் பாணியாற்றி வந்தார்.
வலைப்பூவில் நான் புதிர்ப் பதிவுகள் எழுதுவேன். புதிர்களை அப்படியே கூறாமல் வடிவேலுவை பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகளாக எழுதிவந்தேன். அக்கதைகள் அனைத்தும் கோசல்ராம் அவர்கள் விரும்பிப் படித்துப் பாராட்டுகிறார் என்று பிரியா கல்யாணராமன் தெரிவித்தார்.
அவரிடம் தொடர்புகொண்டு புதிர்களை அடிப்படையாக வைத்து இதே போல நகைச்சுவை தொடர் எழுத டிஸ்கஸ் செய்யுங்கள் என்றார். அப்போது வடிவேலுவின் ஆதிக்கம் குறைந்து சந்தானம் பிரபலமாகத் தொடங்கினார். அதனால் சந்தானத்தை பாத்திரமாகக் கொண்டு எழுதுங்கள் என்றார்.
அப்போதைய சூழலில் எதிர்பாரா அலுவலக பிரச்சனைகள் காரணமாக என்னால் அதில் கவனம் செலுத்த இயலவில்லை.
பின்னர் கோசல்ராம் அவர்கள் ஒரு நாள் ஃபோன் செய்தார்.தான் தற்போது குமுதத்தில் இல்லை என்றும்.’ ”நமது அடையாளம்” என்ற பத்திரிகையை தொடங்கி இருப்பதாகவும். அதில் முன்பு நகைச்சுவைத் தொடர் எழுதும்படி கூறினார். .
அப்புசாமி சீதாப்பாட்டிபோன்ற கேரக்டர்களை உருவாக்கி வேறு பாணியில் எழுதி அனுப்புங்கள் என்றார். சரி என்றேன்
”நமது அடையாளம்” அரசியல் புலனாய்வுப் பத்திரிகை என்பதை அறிந்தேன். அரசு பணியில் இருப்பவர்கள் அதில் எழுதலாமா என்ற ஐயம் ஏற்பட யோசித்துக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையும் ஏதோ காரணத்தால் நின்று போனது. பின்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தேன்.
இன்று பத்திரிகையில் அவரைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன் ஸ்டாலின் அவர்கள், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.அவரது சிறப்புகளை. பலரும் புகழ்ந்துள்ளனர். அவரா என்னிடம் சர்வ சாதரணமாக பேசினார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
பத்திரிகையாளர்களில் சிலர் மட்டுமே சாதாரணர்களையும் கவனித்து அவர்களின் திறமையை அங்கீகரிப்பவர்கள் பிரியா கல்யாணராமன், கோசல்ராம் போன்ற சிலரே. என்னையும் மதித்து அங்கீகாரம் தந்த கோசல்ராம் அவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. அவருக்கு வயதும் ஒன்றும் அதிகமில்லை 49 தான். இந்த மரணம் எதிர்பாராத ஒன்று. அன்னாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------
திங்கள், 5 ஏப்ரல், 2021
ஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது?
அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3
16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்திரத்தில வேற சின்னமோ இருந்தா என்ன பண்றது?
இதற்குத்தான் டெஸ்ட்ஓட்டு பயன்படுகிறது. ஒரு வாக்காளர் தான் வாக்களிக்கும்போது சரியான சின்னத்தில் லைட் ஒளிராமல் போனாலொ அல்லது யாருக்கு வாக்களித்தாரோ அந்த சின்னமும் பெயரும் VVPAT இயந்திரத்தில் காண்பிக்கப்படும் சீட்டில் இல்லாமல், வேறு சின்னமும் பெயரும் இடம் பெற்றிருந்தால் உடனடியாக 49 துணை விதி-1 இன் கீழ் வாக்கு சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அதற்கென படிவம் வாக்கு சாவடி அலுவலரிடம் உள்ளது. அதில் உறுதி அளித்து கையொப்பமிட்டு அளிக்க வேண்டும். இயந்திரம் தவறாகத்தான் காட்டியது என்பதை உறுதிப்படுத்த அவர் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப் படுவார். இதற்குத்தான் டெஸ்ட் ஓட்டு என்று பெயர் ஆனால் அவர் ரகசியமாக வாக்களிக்க முடியாது.
இந்தப் புகார், வந்திருக்கும் கட்சி ஏஜென்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் முன்னிலையில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்று தெரியும் வகையில் வாக்களிக்க வேண்டும்.(எந்த சின்னத்திற்கும் வாக்களிக்கலாம்) அவர் வாக்களிக்கும் சின்னத்தை அனைவரும் பார்ப்பார்கள். எல் இ டி விளக்குகள் சரியாக ஒளிர்கிறதா? சரியான சின்னம் VVPAT இயந்திரத்தில் காண்பிக்கப் படுகிறதா என அனைவராலும் கவனிக்கப்படும். . இயந்திரத்தில் தவறாகக் காண்பித்தால் வாக்குப் பதிவை உடனடியாக நிறுத்தி மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
VVPAT இயந்திரத்தில் சரியான விவரங்கள் காண்பித்தால் புகார் பொய்யானதாக கருதப்பட்டு தவறான தகவல் கூறியதற்காக காவல் துறை வசம் ஒப்படைக்கப் படுவார்
16 a) சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு, வாக்கு அதிகமாகி விடுமே என்ன செய்வது?
இதற்காகத்தான் வாக்கு சாவடி அலுவலர் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் டெஸ்ட் வாக்கு போட அனுமதிக்கப் படுகிறது. டெஸ்ட் ஒட்டு எந்த சின்னத்திற்கு போடப்பட்டது என்ற விவரங்கள் உட்பட உரிய படிவத்தில் 17 C ல் பதிவு செய்ய வேண்டும். இவை சீல் வைக்கப் பட்டு அனுப்பப் படும். வாக்கு எண்ணிக்கையின் போது படிவத்தில் உள்ள டெஸ்ட் வாக்குகள் மொத்த பதிவான வாக்குகளில் இருந்து கழிக்கப் படும்.
17.சாலஞ்ச் ஓட்டுன்னா என்ன?
கீழ்க்கண்ட இணைப்பில் விரிவாக உள்ளது
பட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா?.
18 வாக்குப் பதிவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஓட்டிங் மெஷின் சரியா ஒர்க் பண்ணுதான்னு வேட்பாளர்கள் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?
வாக்குப்பதிவுக்கு முதல் நாளே எல்லா வாக்குச் சாவடிகளுக்கும் பாதுகாப்புடன் அந்தந்த பூத்களுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், படிவங்கள், இதர பொருட்கள் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்று ஏற்கனவே பயிற்சியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அவற்றை பலமுறை இணைத்துப் பார்த்து இயக்கிப் பார்த்து சரியாக இருக்கிறதா என்பதை அலுவலர் உறுதிப் படுத்திக் கொள்வார்.
காலையில் வாக்குப் பதிவு இயந்திரம், கண்ட்ரோல் இயந்திரம், VVPAT எனப்படும் நாம் போட்ட வோட்டை காதிகத்தில் 7 வினாடிகள் காண்பிக்கும் இயந்திரம், இவற்றை தயாராக வைத்திருப்பார்.
வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வேட்பாளர்களால்
அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள்
கடிதத்துடன் வந்ததும் அவர்கள் ஏற்கனவே உள்ள பட்டியலின்படி சரிபார்த்து அனுமதிக்கப்படுவார்கள்.
அத்தனை ஏஜெண்டுகள் முன்பாகவும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி ஒவ்வொருவருக்கும்
பதிவான ஓட்டுகளின் எண்ணிகையையும் VVPAT இயந்திரத்தில் விழும் ஸ்லிப்பலையும்
எண்ணிப் பார்த்து சரியாக உள்ளது எனபதை நிரூபித்துக் காட்ட வேண்டும்
முன்னதாக இயந்திரத்தில் ஓட்டுகள்
ஏதும் பதிவாகவில்லை என்பதையும் ரிசல்ட் பட்டனை அழுத்தி யாருக்கும் வாக்குப் பதிவாகவில்லை என்பதையும்
காண்பிக்க வேண்டும். பின்னர் வந்திருக்கும் ஏஜெண்டுகள் உட்பட குறைந்த பட்சம் 50 ஒட்டுகளை அவர்கள் விரும்பும் சின்னத்தில்
பதிவு செய்யச் செய்து குறித்துக் கொள்ள வேண்டும். பதிவான
ஓட்டுகளின் எண்ணிக்கையை கண்ட்ரோல் யூனிட் காட்டிக் கொண்டே இருக்கும். மாதிரி வாக்குப் பதிவு செய்வோர் ஒவ்வொரு
முறை பதிவு செய்யும்போதும் சின்னத்துக்குரிய லைட் எரிகிறது என்ப்தையும் விவிபேட்
இயந்திரத்தில் பதிவான வாக்கு சரியாக காண்பிக்கிறதா என்ப்தையும் உறுதிப்படுத்திக்
கொள்ள வேண்டும். ஒருவர் ஒட்டுப் போட்டு முடித்ததும்
கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்தினால்தான் அடுத்த ஓட்டு பதிய முடியும்.
ஒருவர் ஓட்டு பட்டனன் அழித்தியதும் 7 வினாடிகள் பீப் சவுண்ட் கேட்கும். அவரே
மீண்டும் பட்டனை அழுத்தினாலும் ஒட்டு பதிவாகாது. கண்ட்ரோலிங் இயந்திரத்தை
இயக்குபவர் அனுமதித்தால் மட்டுமே முடியும். குறைந்தபட்சம் 50 ஓட்டுகள்
முடிந்ததும் CLOSE பட்டனை அழுத்தி மாதிரி
வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும். பிறகு பட்டன்களை அழுத்தும்படி கூறி வாக்குகள்
பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் ரிசல்பட்டன் மூலம் ஒவ்வொருவரும்
பதிவு செய்த வாக்கு எண்ணிக்கையை ஏஜெண்டுகள் சரிபார்த்துக் கொள்ளும்படி கூற
வேண்டும். தேவை எனில் மீண்டும் அனைத்தையும் Clear
பட்டன் மூலம் அழித்து விட்டு இன்னொரு மாதிரி வாக்குப் பதிவை நடத்திக் காண்பிக்கும்படி கூறலாம்...
பின்னர் ஏஜெண்டுகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிக்கப்பெற்றுள்ள
சீரியல் எண்களைக் காட்டி குறித்துக் கொள்ளும்படி அனுமதிக்க வேண்டும். பின்னர் பேப்பர் சீல் எனப்படும் சீரியல் எண்கள் உள்ள காதிகப் பட்டைகளின்
பின்புறம் அலுவலர் மற்றும் அனைத்து ஏஜெண்டுகளின் கையொப்பம் பெறவேண்டும். இவ்வாறு
பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்திலும் பேப்பர் சீலைப் பொருத்தி அரக்கு வைத்து
சீலிடவேண்டும். ஏஜெண்டுகளூம் தங்கள் முத்திரைகளை அதில் பதிக்கலாம்.
வாக்குப்பதிவு தொடக்கத்திலும் முடிவிலும் கையொப்பமிட்ட உறுதிமொழிப் படிவம் பெறப்படும்
வாக்குப்பதிவு தொடங்கியதும் பதிவான வாக்குகளின் எண்ணிகை மட்டும் காட்டிக் கொண்டே
இருக்கும். ஒரு வாக்காளரின் பெயரை அலுவலர் உரக்கப் படிக்கும்போது ஏஜெண்டுகளும்
குறித்துக் கொளவார்கள். பதிவான வாக்குகளின் எண்ணிகையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.
இயந்திரம் மற்றும் சீல் விவரங்கள் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அனைத்தும் 17
C படிவத்தில் அனைத்து ஏஜெடுகளுக்கும் அலுவலரின் கயொப்பத்துடன் வழங்கப்படும். இவற்றை வாக்குப் எண்ணிக்கையின்போது எடுத்துச் சென்று சரிபார்த்துக்
கொள்வார்கள். எஜெண்டுகள் கையொப்பம் இயந்திரங்களின்
சீரியல் எண் பேப்பர் சீலின் வரிசை எண் எக்காரணத்தைக் கொண்டும் பேப்பர் சீல் வாக்கு
எண்ணிக்கை வரை கிழிந்திருக்கக் கூடாது, வாக்கு எண்ணுவத்ற்கு எடுக்கும்போது பேப்பர்
சீல் சேதம் அடைந்திருந்தால் வாக்கு எண்ணிக்கையை ஆட்சேபிக்கலாம்.
19. எல்லா பூத்லயும் நாம போடற ஒட்டு சரியா பதிவாச்சாங்கறதை உறுதிபடுத்தற VVPAT இயந்திரங்கள் வைப்பாங்களா?
ஆம் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இயந்திரம் VVPAT வைக்கப்படும்
20. மெஷின் காட்டற எண்ணிக்கையையும் இயந்திரம் பிரிண்ட் செய்த ஸ்லிப்களையும் எண்ணி சரிபாப்பாங்களா?
ஒரு தொகுதிக்கு 5 பூத்கள் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மெஷின் எண்ணிக்கை VVPAT சீட்டுகளின் எண்ணிக்கையுடன் சரிபார்க்கப் படும், கடந்த தேர்தலிலும் இதுபோலவே தொகுதிக்கு 5 பூத்களின் VVPAT சீட்டுகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டன. அனைத்திலும் இரண்டுமே சரியாகவே இருந்தது
21 சிலர் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை எடுத்துவந்து ஓட்டு எப்படிப் போடறதுங்கறதை டெமொ காட்டறதா சொல்றாங்களே! அவங்களுக்கு எப்படி மெஷின் கிடைச்சது?
கிடைக்க வாய்ப்பில்லை. கட்சிகளுக்கு அளிக்க அனுமதி கிடையாது. வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம் தேர்தல் பணியாளர்கள்/ அலுவலர்கள் மூலமே பொதுமக்களுக்கு அளிக்கப்படும்.
ஒரு தொகுதிக்கும் பயிற்சிக்காகவும் பொது இடங்களில் செயல் முறை விளக்கம் காண்பிப்பதற்கும் குறிப்பிட்ட அளவிலான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் /பிரதிநிதிகளின் முன்னிலையில் அளிக்கப்பட்டு தேர்தல் கமிஷனால் அனுமதிக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை பொறிக்கப்பட்ட சீரியல் எண் உள்ளிட்ட விவரங்கள் அவர்களுக்கு அளிக்கப்படும். தேர்தலுக்கு முன்னதாக சீல் வைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிடும். அப்படி ஏதேனும் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டறிந்தால் தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------
தகவல்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் கையேடுகள். அறிவிப்புகளின் படி எழுதப்பட்டது
உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது?
அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2