எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள்
இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோ ஒன்பது பேர் போட்டியில் கலந்து கொள்ள தொடக்கக் கோட்டுக்கருகே தயாராக இருக்கின்றனர். கலந்து கொள்பவர்களின் முகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி தெரிகிறது. போட்டி தொடங்குவதற்கான விசில் ஒலிக்கப்பட உடனே ஓட ஆரம்பிக்கின்றனர். பார்ப்போர் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். உற்சாக வார்த்தைகளை உரக்கக் கூவுகின்றனர். ஒருவரை ஒருவர் முந்த முயல்கின்றனர். அடடா! என்ன இது? ஓடிக்கொண்டிருந்த ஒருவன் கீழே விழுந்து விட்டானே! ஐயோ! அவனால் எழுந்திருக்க முடியவில்லையே! ரத்தம் வேறு வருவது போல் தெரிகிறதே! அவன் அழ ஆரம்பித்து விட்டானே! அவனது அழுகுரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனரே! முன்னால் ஓடிக்கொண்டிருந்த மற்ற எட்டுபேரும் அந்த அழுகுரல் கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார்கள். தங்களில் ஒருவன் கீழே விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் கண்டு அவர்கள் முகத்தில் அதிர்ச்சி தொற்றிக் கொள்ள அவனை நோக்கி ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிக்கின்றனர். விழுந்த சிறுவன் எழுந்திருக்க முயறசி செய்கிறான். பாவம்! முடியவில்லையே! அவனருகில் வந்து விட்டாள் போட்டியில் கலந்து கொண்ட அந்தப் பெண்.
என்ன நடக்கப் போகிறது அங்கே! பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த சிறுவனின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருக்க அவனை தோளின் மீது கையைப் போட்டு லேசாக அணைத்து தூக்கி நிறுத்துகிறார். ஆஹா! அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல் கூறுகிறாரே. என்ன ஆச்சர்யம் மற்றவர்களும் அவனருகே வந்து அன்புடன் விசாரிக்கின்றனரே! ஒன்றும் புரியாமல் பார்வையாளர்கள் அந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
என்ன இது கண்முன்னே ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறதே! அந்த எட்டு பேரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் பையனையும் சேர்த்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பிக்கின்றனர். இதோ ஓன்பது பேரும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டை தொடுகின்றன்றார்களே! அவர்களை விட்டுவிட்டு பார்வையாளர்களைப் பார்க்கிறேன். யாருக்கு பரிசு கிடைக்கப் போகிறது? ஆவலுடன் எட்டிப் பார்க்கின்றனர் அவர்கள். ஒன்பது பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறார்கள் . தங்க மெடல்கள் வழங்குகிறார்கள்.. அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர். எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அத்தனை பேரின் கண்ணீர்த்துளிகளிலும் அந்தக் காட்சி எதிரொளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதில் பரவசப்படவோ கண்ணீர் விடவோ என்ன இருக்கிறது என்கிறீர்களா? அவசர்ப்பாடாதீர்கள்.கொஞ்சம் இருங்கள்
நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த வர்ணனை சியோட்டில் நடந்த ஊனமுற்றோர்களுக்கான ஓட்டப் பந்தயம் பற்றியது.
இப்போது சொல்லுங்கள் என்கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணீர் உங்கள் கண்களிலும் வழிந்து கொண்டிருக்கிறதா? மனிதம் போற்றுபவர் அல்லவா நீங்கள்? கட்டாயம் கண்ணீர் வரத்தான் செய்யும்.
************************
குறிப்பு: எப்போதோ படித்த செய்தியை வைத்து இந்த பதிவை புனைந்திருக்கிறேன்.முந்தைய அறிவியல் பதிவுகளை படித்து அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
*********************************************************************************
இதைப் படிச்சிட்டீங்களா?
எ.பா.ப.கு. க. விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-
எ.பா.ப.கு. க. விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-