சனிக்கிழமை காலையில் 11 மணிக்கு மாடிப்படியில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக வரும் பழைய பேப்பர்காரர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
"போனவாரம் தான் போட்டுட்டனே! இப்ப ஒண்ணும் இல்லையே!" என்றேன்
"அது இல்லை சார் . சைக்கிள் பஞ்சராயிடிச்சு இந்த பேப்பரெல்லாம் இங்க வச்சுட்டுப் போறேன். வந்து எடுத்துக்கறேன். என்று சொல்லி விட்டுப் போனவர் உடனே திரும்பி வந்தார் .
" சைக்கிள் கடை இன்னும் திறக்கல சார். அதுக்குள்ள இதெல்லாம் கொஞ்ச அடுக்கி வச்சுக்கறேன். டீ குடிச்சிட்டு வரலாம்னு பாத்தா டீக்கடையும் என்னவோ தொறக்கலியே என்று பேப்பரை அடுக்க ஆரம்பித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
"சார், இன்னைக்கு பேப்பர்தானே படிக்கிறீங்க"அதுல என்னங்க சந்தேகம் இன்னைக்கு பேப்பர்தான்"
சார் நாளைக்கு ஜனவரி நாலு இல்ல . ஏதோ நடக்கபோவுதாமே அதைப் பத்தி ஏதாவது போட்டிருக்கா?
எதை சொல்றீங்க? அப்படி எதுவும் போடலீங்க
"இல்லையே! அந்த மாமி சொன்னாங்களே! ஜனவரி நாலாந்தேதி பூமிக்கு என்னவோ ஆவப் போவுதாம் . அன்னைக்கு 5 நிமிஷத்துக்கு பூமிக்கு இசுக்குற சக்தி குறைஞ்சு போயிடுமாம். பொருளோட எடை எல்லாம் குறைஞ்சு போயிடுமாம் . மொதக்கிறமாதிரி ஆயிடுமாமே. அவங்கள் வூட்டு மாமா பாஸ் புக்கை பாத்து சொன்னாராம்."
"என்னது பாஸ்புக்கா?""அதான் சார்! கம்ப்யூடர்ல பசங்கெல்லாம் பொழுதன்னைக்கும் பாத்துகினு இருக்குதுங்களே .."
"ஓ! ஃபேஸ் புக்கை சொல்றீங்களா. நீங்க சொன்னதை நானும் கேள்விப்பட்டேன் வெறும் வதந்தி .அப்படியெல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை. அமெரிக்காவில நாசா பேர்ல எவனோ அந்த செய்திய பரப்பி வுட்டுட்டான். ஆனா தமிழ்ல அந்த ந்யூஸ் கண்ணில படலேயே ..நாசா வில் இருந்து அதுக்கு மறுப்பு சொல்லிட்டான்.
"அப்ப அந்த மாதிரி எது வும் நடக்காதா?"
"ஏன் அது நடக்கனும்னு எதிர்பார்க்கறீங்களா?"
" ஹிஹி இல்ல சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர் பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல. ஒரு அமவுண்டு தேத்தலாம்னு பாத்தேன். அப்பா எல்லாம் டுபாக்கூர்தானா?
(இதைப் பற்றிய ஒரு கேள்வி உங்களுக்கு பதிவின் இறுதியில இருக்கு.)
"எந்த வசதியும் இல்லாத காலத்திலேயே வதந்தி வேகமா பரவிடும். இப்ப போன் இன்டர்நெட் இருக்கே.ஒரு செகண்டல உலகம் முழுசும் பரவிடுதே .
ஜனவரி 4 வாகில எடை எல்லாம் குறையாது. ஆனா அன்னைக்கு முக்கியமான விசேஷம் ஒண்ணு இருக்கு
"இன்னா சார் அது "
"ஜனவரி 4 அன்னைக்கு மத்த நாளை விட சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரம் குறைவா இருக்கும். அதாவது கொஞ்சம் சூரியன் கிட்ட நெருங்கும்."
"அது எப்படி சார்?பன்னண்டு மணிக்குக் கூட வெயில் ஒரைக்கலயே. இது குளிர் காலம் இல்ல. குளிர் காலத்தில சூரியன் தூரமாத்தானே இருக்கணும் . வெயில் காலத்தில்தானே சூரியன் கிட்ட இருக்கும்."
"அது தப்பு. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரத்துக்கும் வெயில் காலம் மழைக் காலம் குளிர் காலம் இதுக்கும் சம்பந்தம் இல்ல."
" நீ சொல்றது ஒண்ணும் புரியலேயே சார்."
"பூமி கொஞ்சம் சாஞ்சமாதிரி (23.5 டிகிரி ) தன்ன தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்தி வருது . ஆதனால சூரியனோட கதிர்கள் பூமிமேல எப்போதும் செங்குத்தா விழறதில்லை . செங்குத்தா விழுந்தா வெப்பம் அதிகமா இருக்கும் சாய்வா விழுந்தா குறைவா இருக்கும்.இதான் காலங்கள் வர்றதுக்கு காரணம் "
" நானும் எட்டாங்க்ளாஸ் வர படிச்சவன்தான் . கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. நான் இன்னா கேக்கறன்னா நெருப்பு பக்கத்துல நின்னாதானே சூடா இருக்கும் தூரமா போய் நின்னா சூடு குறையும்தானே . அதானே உண்மை. நீ என்னாடான்னா எல்லாம் ஒண்ணுனு சொல்றியே எப்படி?"
" பயங்கரமாத்தான் கேக்கறீங்க. சரி ஒரு உதாரணம் சொல்றேன். நூறு மீட்டர் தூரத்தில ஒரு வைக்கோல் போர் எரியுதுன்னு வச்சுக்குவோம். நீங்க சரியா 100 மீட்டர் தள்ளி நிக்கறீங்க. கொஞ்சம் சூடு தெரியுதுன்னு வச்சுக்குவோம். 3 மீட்டர் முன்னால போங்க . இப்போ உங்களுக்கு முன்ன இருந்ததை விட சூடு அதிகமா தெரியுமா?
" அது எப்படிசார் தெரியும் மூணு மீட்டர்னா கிட்டத்தட்ட 10 அடிதானே இருக்கும் . அதுல ஒண்ணும் வித்தியாசம் தெரியாதே! "
இந்த நேரத்தில வெளியில் வந்த எங்க வீட்டம்மாவைப் பார்த்து " சனி ஞாயிறுல இந்த பக்கம் போம்போது நான் பாப்பேன். சார் இந்த நேரத்தில டீ குடிச்சிகுனுதானே பேப்பர் படிப்பாரு"
"என்ன பேப்பர்காரரே பக்கத்து இலைக்கு பாயசமா? அவருக்கு என்ன வேலை ஜாலியா உங்ககூட அரட்டை அடிச்சிகிட்டு இருக்கார். டீ போட்டு தொலைக்கிறேன்""நீ சொல்லு சார் அம்மா எப்பவும் தமாசா பேசும் "
நான் சிரித்துக் கொண்டே தொடர்ந்தேன்
" மூணு மீட்டர் முன்னாடி போன வித்தியாசம் எதுவும் தெரியாதுன்னு சொன்ன இல்லையா? அதான் அதேதான் . ஜனவரி 4 ந்தேதி வாக்கில சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கிற தூரம் கிட்டத்தட்ட 91400000 மைலு. இதுதான் ஒரு வருஷத்தில குறஞ்ச பட்ச தூரம். அதிக பட்சமா ஜூலை மாசம் 5 தேதி வாக்கில 94500000 மைல் தூரத்தில சூரியன் இருக்கும். 3 % மட்டும்தான் அதிகமா இருக்கு அதனால தூரத்தினால வித்தியாசம் எதுவும் உணர முடியாது.....
பேப்பரை அடுக்கி வைக்கும் வேலை முடிந்து விட்டதால் அதற்கு மேல் பொறுமை இல்லதாதால் இடைமறித்தார்
"சார்!. இது போறும்.நல்லா வெலாவாரியா த்தான் சொல்லி இருக்க. பேப்பர் பொறுக்கிற பசங்க நம்ம கூட தன் இருப்பானுங்க அவங்க கிட்ட பொழுதுபோகலேன்னா இத்தை எல்லாம் சொல்வேன். கொஞ்சம் இட்டுகட்டி சொல்வனா ,பசங்க ஆன்னு பாப்பங்க. சார் டீ இன்னும் வரலியே! ரொம்ப நேரம்ஆயிடிச்சு போல இருக்கே.
அதற்குள் டீ கொண்டு வர,
"ஒனக்கும் சேத்து டீ வந்துட்ச்சி , குட்சிட்டு கேட்டை மூடிகினு போ"
டீ டம்ப்ளரை கையில் வாங்கிக் கொண்டு சிரித்தார்
"எதுக்கு சிரிக்கிறீங்க"
"சார் நீங்களும் நம்ம லாங்க்வேஜ் கத்துக்குனீங்க" என்றான்
*****************************************************************************
உங்களுக்கு ஒரு டெஸ்ட்
கொசுறு:ஹிஹி ஆமாம் சார். அந்த நேரத்தில ஒரு ரவுண்டு அடிச்சா குறைவான எடை போட்டு நிறைய பழைய பேப்பர் பிளாஸ்டிக் இரும்பெல்லாம் வாங்கலாம். ஒரு நாள் மட்டும்தானே அப்படி இருக்கும் அடுத்த நாள் அதெல்லாம் எடை கூடிடும் இல்ல.
கேள்வி : உண்மையில் பேப்பர்காரர் சொன்னதுபோல அன்றைக்கு கொஞ்ச நேரம் ஈர்ப்பு விசை குறைந்து பொருட்கள் எடை இழக்கும் நிலை ஏற்பட்டால் குறைவான எடையில் அதிக அளவு பேப்பரை வாங்க முடியுமா?அவர் ஆசை நிறைவேறி இருக்குமா?
ஒரு வேளை இதுக்கான விடை உங்களுக்கு தெரியாம இருந்து தெரிஞ்சிக்க விரும்பினா இங்க க்ளிக் செஞ்சு பாருங்க
விடை **************************************************************************
இந்த நிகழ்வு பற்றி அறிவியல் எழுத்தாளர் என் ராமதுரை அவர்கள் WWW.ARIVIYAL.IN இல் விரிவாக எழுதி இருக்கிறார்
*************************************************************
தொடர்புடைய பதிவுகள்
- செப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக்கங்கள்
- **************************
- எச்சரிக்கை: பூமி சூரியன் சுற்றுப் பாதை பற்றிய இன்னொரு பதிவும் எழுதப்
- போறேன். அது எப்பன்னு கேக்கறீங்களா? சொல்லமாட்டேன். சொன்னா
- அன்னைக்கு எஸ்கேப் ஆயிடுவீங்களே!