என்னை கவனிப்பவர்கள்

சூப்பர் சிங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூப்பர் சிங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 பிப்ரவரி, 2015

சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் விடாத சர்ச்சைகள்


இம்முறை தங்கவேலு பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான செட்டில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல்ஸ் நடந்து  முடிந்து  சில  நாட்களாகி விட்டன. ஆனாலும் சர்ச்சைகள் இன்னும் முடிந்த பாடில்லை. ஸ்பூர்த்தி என்னும் குட்டிப் பெண் பட்டம் வென்றார். அடுத்த சில நாட்களில் யார் இந்நிகழ்ச்சி பற்றி பேசினாலும்அவருக்கு கொடுத்திருக்க வேண்டும்/இவருக்கு கொடுத்தது சரியில்லை.விஜய் டிவி ஏற்கனவே முடிவு செய்து விட்டது என்று விவாதம் செய்வதை பார்க்க முடிந்தது.
   யார் வென்றிருந்தாலும் சர்ச்சை இருக்கவே செய்யும். ஜெசிக்கா வென்றிருந்தால் ஈழத் தமிழர் என்பது சாதகமாகப் போய் விட்டது என்பர். ஹரிப்ரியாவுக்கு கிடைத்திருந்தால் அவர் ஒரு இசை வாரிசு.நடுவர்களின் சிபாரிசு காரணம் என்று சொல்லக் கூடும். ஸ்ரீஷாவுக்கு கிடைத்தால் wild card சுற்றில் தேர்ந்தெடுத்ததே பட்டம் கொடுப்பதற்காக என்றும்  சொல்ல முடியும். பரத் வெற்றி பெற்றிருந்தால் அவர் அப்படி ஒன்றும் சிறப்பாகப் பாடவில்லை  என்று சிலருக்கு தோன்றக் கூடும். அதே போல அனுஷ்யாவுக்கும் இன்னொரு  காரணம்  கூற  முடியும் .
   ஸ்பூர்த்தி வயதுக்கு மீறிய இசை அறிவு நிரம்பியவர் என்பது  அவர் முதல் ஆடிஷனில் பாடிய முதல் பாடலின்போதே தெரிந்து விட்டது. நடுவர்கள் தொடர்ந்து அவருக்கு சாக்லேட் ஷவர் அளித்து வந்தனர் . கடினமான ஸ்வர வரிசைகளை  நினைவில் வைத்துப் பாடியது  அறியாத மொழியின் பாடல்களை மனப்பாடமாக பாடியது அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியது.
   இந்த சீசன் தொடக்கத்தில் ஒரு தொய்வு இருந்தாலும் wild card சுற்றுக்குப் பிறகு ஒரு விறுவிறுப்பை உருவாக்க முனைந்து அதில் வெற்றியும் பெற்று விட்டது விஜய் டிவி.
    இது போன்ற பிரம்மாண்டமான போட்டிகள் நடத்தப்படுவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள்,அரசு விதிமுறைகள் உள்ளதா என்பது தெரியவில்லை
 இறுதிப் போட்டி என்பது என்ன? இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அன்று பங்கேற்பாளர் வெளிக்காட்டும் திறமைதானே வெற்றியை நிர்ணயிக்க வேண்டும். அப்படி அல்லாமல் பைனல்சுக்கு முன்பாகவே ஓட்டளிப்பு தொடங்கி விட்டது.  நியாயமாக என்ன செய்யவேண்டும்? இறுதிப் போட்டியில் எல்லோரும் பாடி முடித்தபின்தான் வாக்களிப்பு தொடங்கவேண்டும். இறுதிப் போட்டியில் பாடப் படும் பாடலைக் கேட்டபின்பு அல்லவா யார் நன்றாக பாடுகிறார் என்று முடிவு செய்ய முடியும்? முந்தைய சுற்றுக்களில் வெளிப்படுத்திய திறமைகளை வைத்தே முதலிடம் வழங்கமுடியும் என்றால் இறுதிப் போட்டி  எதற்கு? வெறும் பரிசளிப்பு  விழா மட்டும் நடத்தினால் போதுமே  என்றெல்லாம் கேட்கக் கூடாது.  காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். வியாபாரம்,விளம்பரம் லாபம்.  விஜய் டிவி என்ன சேவை செய்யவா சேனல் நடத்துகிறது?
   வழக்கத்திற்கு மாறாக  இம்முறை ஆறு பேரை இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுத்தது  விஜய் டிவி.  ஸ்பூர்த்தி பரத்,ஸ்ரீஷா,ஹரிப் ப்ரியா, அனுஷா, ஜெசிக்கா ( இந்த ஜெசிகாதான் ஆரம்பத்தில் தமிழ் தெரியாது என்று சொன்னபோது சித்ராவை கோபப் பட வைத்தவர்) ஆகிய அறுவருமே அற்புதமாகப் பாடினர்.
   நான் அறிந்தவரை இறுதிப் போட்டியை விட Wild card சுற்று அருமையாக இருந்தது. அந்த சுற்றில் உண்மையான போட்டியைக் காணமுடிந்தது அனைவருமே மிக அற்புதமாகப் பாடினர். அசாத்திய திறமை ஒவ்வொருவரிடத்தும் இருந்தது.
   குறிப்பாக அனுஷ்யா பாடிய பறை பற்றிய பாடல் பார்த்த ஒவ்வொருவரையும் கலங்க அடித்தது. (சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  கே.வி.மகாதேவன்,எம்.எஸ்.வி. இளையாராஜா , ஏ.ஆர் ரகுமான் இந்த நான்கு இசை அமைப்பாளர்களின் பாடல்களுக்கு மட்டுமே அசாதரணமான வரவேற்பு கிடைக்கும். பாடுபவர்கள்  இவர்களுடைய பாடல்களையே தேர்ந்தெடுப்பார்கள்.அதையும் மீறி வித்யாசாகர் இசை அமைத்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இந்தப் பாடலை தேர்வு செய்த கொடுத்த அனுஷ்யாவின் தந்தைக்கு நன்றி சொல்லலாம். ) இந்த உணர்வு ஜெசிக்கா இறுதிப் போட்டியில் பாடியபோது கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது.ஜெசிக்கா ஏற்கனவே ஒரு முறை இதே பாடலை பாடியுள்ளார்.   

   இரண்டாவது இடம் பெற்ற ஜெசிகா தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை தமிழ் நாட்டில் உள்ள ஒரு சேவை அமைப்புக்கும் ஈழத் தமிழர் நல நிதிக்கும் வழங்குவதாக அறிவித்தார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.
       பழைய எபிசோடுகளில் செந்தில்நாதன் என்ற மாற்றுத் திறனாளியை அவ்வப்போது பாட வைத்து விளம்பரம் தேடிக் கொண்டது நினைவிருக்கலாம். ஆனால் அந்த சிறுவனை விஜய டிவி மறந்தே விட்டது. ஆயினும் டி.எல்.மகராஜன் ஒருமுறை நினைவு கூர்ந்தார். பைனல்ஸில் செந்தில்நாதனை   பாடவைத்து ஏதேனும் நிதி வழங்கி இருக்கலாம்.

    எந்த டிவியாக இருந்தாலும் மக்களுக்கு  சேவை செய்யும் நோக்கமோ திறமைகளை வளர்க்கும் நோக்கமோ இருக்கப் போவதில்லை. பிறருடைய திறமை நமக்கு எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றே அவர்கள் எண்ணம் இருக்கும்.
   ஓட்டுப் போடவைத்து நம்மை முட்டாளாக்குகிறது  என்ற குற்றசாட்டு பரவலானது.  ஓட்டு எண்ணிக்கையில் ஒட்டுப் போட்டவர்களே நம்பகத் தன்மை கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஓட்டுகளைப் போட வாய்ப்பளிப்பது எப்படி நல்ல முறையாகும். நடுவர்களின் கருத்தைக் கொண்டு சூப்பர் சிங்கர் பட்டம் வழங்கலாம் ஆனால் அது வியாபாரத்தை பாதிக்குமே.  ஆனால் விஜய் டிவி இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. உண்மையில் இதுபோன்ற சர்ச்சைகள் விஜய் டிவிக்கு விளம்பரமாகவே அமைந்து விடுகிறது.
     மற்ற சானல்களை விட விஜய் டி.வி  தான் உருவாக்கும் கலைஞர்களை கைவிடுவதில்லை.சூப்பர் சிங்கரில் டாப் 20 இல் உள்ளவர்களை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள தவறுவதில்லை.சமயம் கிடைக்குபோதேல்லாம் அவர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி விடுகிறது.

   பெரும்பாலும் தமிழ்த் திரை இசையில்  மலையாளிகளின்  ஆதிக்கமே அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. நம்மவர்களை விட அவர்களுக்கு இசை மீதான அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் என்றே கருதுகிறேன்.  தெலுங்கு அடுத்த நிலையில் இருப்பதாக படுகிறது. இம்முறை கன்னடத்துக் குட்டிப் பெண்ணுக்கு அடித்தது அதிர்ஷ்டம்  அடித்து விட்டது தமிழ் நாட்டில் சிறப்பாகப் பாடும் குழந்தைகள் இல்லையா? தமிழகத்தில் செல்லக் குரல்களுக்கான தேடலில் பெரும்பாலும் ஏன் தமிழ் அறியாதவர்களே முதலிடம் பெறுகிறார்கள்.? இது திட்டமிடப்பட்டே நடத்தப் படுகிறதா? என்ற கேள்வி நிறையப் பேர் மனதில் உண்டு. தமிழிலும் அற்புதமாகப் பாடும் குழந்தைகள் உண்டு என்பதில் ஐயமில்லை.
   தமிழ்நாட்டவரின் நடுத்தர வர்க்க மனோபாவம் திறமை உள்ளவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கிறேன். படிப்பா பாட்டா என்றால் படிப்பு என்றுதான் முடிவு எடுப்பார்கள் நம்மவர்கள். இசையை முழுநேர  தொழிலாகக் கொள்ள பெற்றோர் விரும்ப மாட்டார்கள். முறையான தொடர் பயிற்சிகளில் ஈடுபடுவோர்  மிகக் குறைவு. ரிஸ்க் எடுக்க விரும்புவதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை தமிழ்நாட்டில் . இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பயிலும்  பள்ளிகள் இதற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். எந்தக் கடின முயற்சியும் பயிற்சியும் இன்றி  இயல்பான திறமையின் மூலம் மட்டுமே வைத்து பரிசு பெற விரும்புவார்கள்  திறமையை பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் வைத்துக் கொள் என்றுதான் வழி நடத்தப் படுவார்கள்.

     அவர்கள் நிலையிலும் தவறு இல்லை. ஒரு எழுத்தாளர் எப்படி முழு நேர எழுத்துத்  தொழிலை வைத்து பிழைப்பதில் சிக்கல்கள்  உள்ளனவோ அதைப் போலவே பாட்டின் மூலம் வாழ்க்கை நடத்துவதும் கடினமே. அதனால்தான் தமிழர்கள் ரசிப்பதோடு போதும் என்று நினைக்கிறார்கள் போலும்.   பாடுபவர்களில்  தமிழர்கள் அதிகம் இல்லையே என்ற குறை இருந்தாலும் இசை அமைப்பாளர்களில் தமிழர்களே பல ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம் 
   எனக்கு பல நாட்களாக ஒரு எண்ணம் உண்டு. டி.ராஜேந்தர் போன்றவர்களின் பாடல்கள் பாடப் படுவதில்லையே என்று. ஆனால்  ராஜேந்தர் ஒரு முறை  நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் . குழந்தைகள் அவரது  சூப்பர் ஹிட் பாடல்களை பாடினர். பாவம் அவரே தனது பாடல்களின் பெருமையை தானே சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார். நடுவர்கள் அவரது திறமையை அவ்வளவாக பாராட்டிப் பேசியதாக நினைவு இல்லை. அடுத்தடுத்த சீசன்களில் அதிகம் அறியப்படாத நல்ல பாடல்களை தந்த இசை அமைப்பாளர்களின் பாடலும் இடம் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.

     இந் நிகழ்ச்சியால் பலன் பெற்றவர்கள் என்று பார்த்தால் தற்போது அதிக வாய்ப்பின்றி இருக்கும் சீனியர் பாடகர்களே  என்று சொல்லலாம். வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று சொல்லப்படும் ஆனந்த் வைத்தியநாதனை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன்பு நான் அறிந்ததில்லை . பங்கேற்பாளர்களும் நடுவர்களும் அவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  இந்நிகழ்ச்சி மூலம் அதிக பலன் பெற்றவர் அவர்தான் என்று என்று சொல்லலாம். ஒவ்வொருவர் பாடும்போதும் பாடுபவரின் குரல் தன்மைக்கு விளக்கம் அளிக்கிறார். நமக்கு ஒன்றும் புரிவதில்லை என்றாலும் அவர் குரல் பயிற்சிக்காக ஏதோ செய்கிறார்  என்பது மட்டும் தெரிகிறது. குழந்தைகள் ஆரம்பக் கட்டங்களில் பாடியதை விட  இறுதிக் கட்டங்களில்  நல்ல முன்னேற்றம் இருப்பதை உணர் முடிகிறது.
   வாய்ஸ் எக்ஸ்பர்ட் இந்த வார்த்தை விஜய் டிவியால் உருவாக்கப் பட்டது என்று நினைக்கிறேன். உண்மையில் இது போல குரல் வளப் பயிற்சி அளிப்பவர்கள் வேறு யாரேனும் உள்ளனாரா என்று கூகுளாரைக் கேட்க அவர் வைத்யநாதனை மட்டுமே காட்டுகிறார். (தேடுதலில் நமக்கு பயிற்சி போதவில்லையோ?)
   சினிமா பாடல்களில் இவ்வளவு  நுணுக்கங்கள் இருக்கிறதா என்பதை அறியவைத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றால் மிகையாகாது. மா.க.பா , பிரியங்கா , தொகுப்பாளர்களும் தங்கள் பங்குக்கு நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்டினர்.
 என்றாலும் காமெடி என்ற பெயரில் மனோ போன்றவர்களின் கோமாளித் தனங்கள் தொடக்கத்தில் சுவாரசியமாக இருந்தாலும் போகப் போகப் எரிச்சலையே உண்டாக்கியது ( ஒரு முறை அவர் பெண்வேடம் போட்டுக் கொண்டு வந்தது படு கோமாளித்தனம்)
     அதே போல இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் உடைகள் விஷயத்தில்  கவனம் கொள்ள வேண்டும். பெற்றோர் நடுவர்களை  நகைச்சுவை என்ற பெயரில்  ஆடவைத்தல் தவிர்த்தால் நல்லது . இவை அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எனது ஆலோசனைகள்.
    அதை விட இன்னொரு ஆலோசனை  அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்க வேண்டுமெனில்  கொஞ்ச மாதங்களுக்காவது அதை தள்ளிப் போடவேண்டும் விஜய் டிவி.


*************************************************************************
  

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்

  விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிறைவுற்று இப்போது சூப்பர் சிங்கர் 4 தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் இருந்த சுவாரசியம் இருக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.. இரண்டாவது கட்டத் தேர்வில் பலர் விரைவாக நிரகரிக்கப்பட்டனர்.சென்ற சீசனில் கலந்து கொண்டவர்கள் சொல்லி வைத்தாற்போல் உடனே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சிலர் நன்றாகப் பாடியதாக எனக்குத் தோன்றியது ஆனாலும் நிராகரிக்கப் பட்டனர்.  புஷ்பவனம் குப்புசாமி, மஹதி சௌம்யா, டி.எல்.மகராஜன் போன்றவர்களோடு பழைய சூப்பர் சிங்கர்களும்  நடுவர்களாக இருந்தனர். இதில் புஷ்பவனம் குப்புசாமி ஸ்ரேஷ்டைகளை குறைத்துக் கொண்டால் நல்லது.
  ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. கலந்துகொண்டு பாடியவர்களில் பலரும் பாடலைப் பாடும்போது கட்டாயம் கையை காலை முகத்தை அசைத்து பாடவேண்டுவது கட்டாயம் போல் பாடினர்.அப்போதுதான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? 

   அதற்கு காரணம் முந்தைய சீசன்களில் இது போல் உடலசைவுகளுடன் பாடுபவர்களை மனோ போன்ற  நடுவர்கள் ஊக்கப் படுத்தியதுதான் காரணாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சற்றும் பொருத்தமில்லை என்று தெரிந்தும். முந்தைய சீசன்களில் இது குறைவாகவே இருந்தது.  பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை கலந்துகொள்பவர்கள் உணர்ந்தால் நல்லது. இவர்களை ஆட வைப்பது இவர்களின் ஆடைகளை தேர்ந்தெடுப்பது  போன்றவற்றை விஜய்டிவி தான் முடிவு செய்கிறது போலும். கடந்த சூப்பர் சிங்கர் ஜுனியரில் சில எபிசோடுகளில் கவர்ச்சியாகத் தோன்றும் வகையில் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு கூட சிறுமிகளை பாடவைத்தனர். அது எனக்கு சற்று நெருடலாக தெரிந்தது. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இந்த முறை அதை எல்லாம் தவிர்ப்பார்களா என்று பார்ப்போம்.
 அது போகட்டும்! நான் சொல்ல வந்தது சூப்பர் சிங்கரின் ஏற்படுத்திய  சில விளைவுகள். முன்பெல்லாம் சினிமா பாடலதானே என்ற ஒரு அலட்சியம் இருந்தது. அதனுள் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை நான்  அதிகமாக அறிந்து வைத்திருக்க வில்லை. இந்கழ்ச்சியைப் பார்த்தபிறகுதான் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை நடுவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள முடிந்தது. சுருதி தாளம் பாவம், சங்கதிகள் பற்றி பல விஷயங்களை ஓரளவிற்கு அறிவதற்கு இந்நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும்  இசைக் கருவிகளோடும் இணைந்து பாடுதல் பிற பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் இவையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பல பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், பாடல்களின் ராகங்கள்,பல்வேறு இசை வடிவங்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி உதவி புரிந்தது. 

   மேலும் பல பாடகர்களின் அனுபவங்கள் பாடல் உருவான நிகழ்வுகள்  சுவையைத் தந்தது. என்னைப் போன்றவர்கள்  ரசிக்கத் தவறிய பிரபலமாகாத நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது.சில பாடல்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாகவே இன்னும்  புகழ் பெற்றது. வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். 
   இப்படி பல நல்ல விளைவுகள் இருந்தாலும் இதன் மூலம் பெற்ற துளி  இசை அறிவு நமக்கு நிறைய தெரிந்துவிட்டது போல பிரமையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை  கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல்  ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான  அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள்? பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே! மாற்றிக் கொள்வேன்.
 
   எப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும்  வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்த  சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.

*************************************************************************************
முந்தைய  பதிவுகள்
இது சாதாரண காதல் இல்லீங்க!
இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை