என்னை கவனிப்பவர்கள்

நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2013

கமலஹாசன் பங்கேற்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!

 
    நான் சாதாரணமானவன் அல்ல சகலகலா  வல்லவன், உலக அறிவு நிரம்பப் பெற்றவன் என்பதை நிருபிக்க  தன் வாழ்க்கை முழுவதும் முயற்சி செய்பவர்கள் உண்டு. அத்தகையவர்களில் ஒருவர்தான் கமலஹாசன் என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. பல துறைகளின் ஈடுபாடுதான் அவரது மிகப் பெரிய பலம்.அதுவே சில சமயங்களில் அவரது பலவீனமாகவும் இருக்கிறது.
   நீங்களும்  வெல்லலாம் ஒரு கோடி  நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு 50 லட்சம் வென்றதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அல்லது படித்திருப்பீர்கள். எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி நம்மை ஏமாற்றவில்லை .
  திட்டமிட்டு 50 லட்சம் கொடுத்து விளம்பரத்திற்காக கமலை பயன்படுத்தி தனது TRP ரேட்டை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் விஜய் டிவி வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். 
   HIV யால் பாதிக்கப் பட்ட சிறுவர்களுக்காக உதவும் பெற்றால்தான் பிள்ளையா அமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக செய்த பிரச்சாரத்தை நினைவு கூர்ந்து இதில் வெல்லப் போகும் பணத்தில் பாதி இதற்கும் இன்னொரு பாதி புற்று நோயாளிகளுக்கு உதவும் அமைப்பான கேன்கேர் அமைப்புக்கும் தரப் போவதாக சொன்னார்.
   பெரும்பாலான பிரபலங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் பணத்தை நற்பணிகளுக்காக நன்கொடையாகக் கொடுத்தாலும் கமல் கொடுத்ததில் ஒரு உண்மையான அக்கறை இருப்பததாகவே தோன்றியது. பாதிக்கப்பட்ட  பிள்ளைகளுடன் பேசியது பற்றி சொன்னது என் கண்களை கொஞ்சம் ஈரமாக்கியது. இன்றும்  எழும்பூர் மருத்துவமனையில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் வைக்கப் பட்டுள்ள கமலஹாசனின் விளம்பரத்தை காண முடியும்.

  கௌதமி புற்று நோயால் அவதிப் பட்டவர் என்பது நிறையபேருக்கு தெரிந்திருக்கக் கூடும். அத்தகைய சூழ்நிலையில்  கமல்ஹாசன்  அவருக்கு ஆதரவாக இருந்து நோயை வெல்ல உதவியதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கௌதமி. சமுதாயம் ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளாத பல விஷயங்களை கமல் துணிந்து செய்திருக்கிறார். COMPANIONSHIP வாழ்க்கையை நம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அது நல்லதா கெட்டதா என்று விவாதங்கள் தொடர்ந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சிறப்பாக இணைந்து வாழமுடியும் என்பதை இருவரும் நிருபித்திருக்கிரார்கள் என்பதை மறுப்பதிற்கில்லை. 
   நிகழ்ச்சியில் கமலஹாசன் பேசும்போதெல்லாம் அவரை முகத்தில் பெருமிதமும் காதலும் பொங்க கௌதமி பார்ப்பதும்  அவ்வப்போது ஆதரவாக ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதும் இயல்பாகவும் அவர்களுடைய அன்பின் ஆழத்தையும்  வெளிப்படுத்தியது.
    புத்திசாலித்தனம்,சமயோசித நகைச்சுவை,அரிய தகவல்கள்,உற்சாகம் பொங்கும் கலாட்டாக்கள்  கட்டிப்பிடிவைத்தியம்,முத்தங்கள் நெகிழ வைக்கும் நிகழ்வுகள் என மூன்று நாட்கள் நேரம் போவதே தெரியாமல் போனது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி 
  ஒவ்வொரு கேள்விக்கும் கமல் அளித்த விரிவான பதிலை பார்க்கும்போது இக் கேள்வியெல்லாம் அவர்தான் உருவாக்கினாரா  என்ற ஐயம்  எதுவும் எழவில்லை.அவரேதான் தயாரித்தார்  உறுதியாக நம்ப முடிந்தது.

  பக்கிங்காம் கால்வாய் போக்குவரத்துக்கு பயனபடுத்தப்பட்டது என்று கமல் சொன்ன தகவல் வியப்பாகத்தான் இருந்தது. சாப்டற பொருள் முன்னாடி அதுல் வந்துகிட்டு இருந்தது இப்ப சாப்பிட்டதுக்கு அப்புறம் வர்ற பொருள்தான் வந்துக்கிட்டு இருக்குன்னு  தன இயல்பான நகைச்சுவையுடன் சொல்லி சிரிக்க வைத்தார்.
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் புகழ்ந்து தள்ளும் நபர்கள் பாலசந்தர், நாகேஷ்,சிவாஜி, போன்றவர்கள் கமலின் புகழ்ச்சிக்கு இம்முறையும் தப்பவில்லை.

   பாரதியார்  திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் சிங்கத்தின் பிடரியை உலுக்கிக் கொஞ்சியபோது உங்கள் மன நிலை எப்படி இருந்தது என்று பாரதியின் மனைவி செல்லம்மாவை கேட்டார்களாம். அவர்கள் கண்ணைமூடிக் கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டார்களாம் "அந்த சிங்கத்துக்காவது புத்தியைக் கொடு" என்று சொன்னதாக கமல் சொன்னது சுவாரசியம்.

   சின்னத்  திரை பிரப\லங்கள் தேவதர்ஷனி படவா கோபி உள்ளிட்டவர்கள் கமலஹாசனுடன் பேசியும், பரவசமடைந்தும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டனர். சின்னத் திரை நடிகை பத்மப் ப்ரியா  பேசியது கொஞ்சம் ஓவராகத் தான் இருந்தது. 
   கமலுடைய தேடுதல் வேட்கை நம்மை ஆச்சர்யப் பட வைக்கிறது. கமலஹாசனின் கனவுப் படமான மருத நாயகம் பற்றியும் கமல் சில தகவல்களை சொன்னார்.  மருதநாயகம் என்று ஒருவர் இருந்தார் என்பது நிறையப் பேருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் என்றும் அவரை அடக்க ஆன செலவு சதாம் உசேனுக்காக அமெரிக்கா செய்த செலவுகளுக்கு ஈடானது என்ற தகவல் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாம் படித்த  வரலாறு நமக்கு பல உண்மைகளை தெரிவிக்க மறந்து விட்டதா?அல்லது மறைத்து விட்டதா? 

    மருதநாயகம்  அவரது கனவு திட்டமாகவே இருக்கிறது. முடிந்தால்  பப்ளிக் ஃபண்டிங் மூலம், எடுக்க முயற்சி செய்வேன் என்றார். வெளி நாடுகளில் இந்த முறை யில் படம் எடுக்கிறார்களாம் .DTH க்கு அடுத்து இந்த முயற்சிதான் போலிருக்கிறது. அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் தயார்.

   கவிதை சொல்லுங்கள் என்றதும் தயாராகக் காத்திருக்கும் முதல் ரேங்க்  மாணவன்போல ஆர்வத்துடன் கையை அசைத்து ஏற்ற இறக்கத்துடன்  உனர்ச்சியுடன் கவிதை சொல்ல ஆரம்பித்தார். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வாழ்பவர்களுக்கு சாட்டையடியாக தாயம்மாளை நாயகியாக்கி அவர் சொன்ன கவிதை ஒரிரு நிமிடம் நம்மை கட்டிப்போட்டது. அவர் வாசித்த கவிதை வரிகள் அவரது  மதிப்பு கூட்டும் வரிகளாக அமைந்திருந்தது. என்ன மனுஷன்யா இவன் என்று பாரதிராஜா போல நம்மையும் வியக்க வைத்தது.
(அவரது  கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும்  இங்கு கிளிக் செய்யவும்)

   அவர் சொன்ன இனொரு விஷயமும் அட! என்று சொல்ல வைத்தது.
நிறைய  மொழிகளில் ஒரு பொருளின் பெயர் அது தயாரிக்கபயன்படும்  மூலப் பொருளின் முதல் எழுத்தை கொண்டு தொடங்குகிறது
உதாரணத்திற்கு எண்ணெயின் முதல் எழுத்து அது தயாரிக்க பயன்படுத்தப் படும் எள் என்ற வார்த்தையின் முதலெழுத்து.
olive-oil
தெலுங்கில் சொல்ல முடிமா என்று ப்ரகாஷ்ராஜ் கேட்க, தெலுங்கு அறிந்த கெளதமியை பார்க்க அவர் விழிக்க கமலே சட்டென்று
நூலு-நூன
நூலு என்றால் எள். நூன என்றால் எண்ணெய் என்று சொல்லி அசத்தினார்.
   சும்மா  இருந்தபோது முடிவெட்டிக் கொள்ள கற்றுக்கொண்டது, டான்ஸ் கற்றுக் கொண்டது என்று இடைவெளியின்றி இந்தா எடுத்துக் கொள் என்று சுவாரசியங்களை அள்ளி வீசினார்.

   ஐம்பது  லட்சம் வென்றதும்  நேரம் முடிந்துவிட்டதால் ஒரு கோடிக்கான கேள்வி கேட்கப் படவில்லை. ஐம்பது லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கப் பட்டது. இங்கு கிடைக்காவிட்டால் பரவாயில்லை மீதி ஐம்பது இலட்சத்தை இந்த நல்ல விஷயத்திற்கு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தது வித்தியாசமாக இருந்தது. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(அவரது  நிகழ்ச்சியில் சொன்ன கவிதை படிக்கவும் அதன் காணொளி பார்க்கவும் விரும்பினால்  இங்கு கிளிக் செய்யவும்.)  

காதலின் கழிபொருளாய்
பிறந்த பிள்ளைக்கு 
தாலாட்டு இசைப்பது போல் 
மொய்த்தன ஈக்கூட்டம்

தொப்புள் கொடியறுத்த கசியும் காயமே 
பிள்ளையின் விலாசம் 
தெருவில் வாழ் நாய் ஒன்று

          
          (தொடர்ந்து படிக்க )

************************************************************** 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்

  விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிறைவுற்று இப்போது சூப்பர் சிங்கர் 4 தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் இருந்த சுவாரசியம் இருக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.. இரண்டாவது கட்டத் தேர்வில் பலர் விரைவாக நிரகரிக்கப்பட்டனர்.சென்ற சீசனில் கலந்து கொண்டவர்கள் சொல்லி வைத்தாற்போல் உடனே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சிலர் நன்றாகப் பாடியதாக எனக்குத் தோன்றியது ஆனாலும் நிராகரிக்கப் பட்டனர்.  புஷ்பவனம் குப்புசாமி, மஹதி சௌம்யா, டி.எல்.மகராஜன் போன்றவர்களோடு பழைய சூப்பர் சிங்கர்களும்  நடுவர்களாக இருந்தனர். இதில் புஷ்பவனம் குப்புசாமி ஸ்ரேஷ்டைகளை குறைத்துக் கொண்டால் நல்லது.
  ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. கலந்துகொண்டு பாடியவர்களில் பலரும் பாடலைப் பாடும்போது கட்டாயம் கையை காலை முகத்தை அசைத்து பாடவேண்டுவது கட்டாயம் போல் பாடினர்.அப்போதுதான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? 

   அதற்கு காரணம் முந்தைய சீசன்களில் இது போல் உடலசைவுகளுடன் பாடுபவர்களை மனோ போன்ற  நடுவர்கள் ஊக்கப் படுத்தியதுதான் காரணாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சற்றும் பொருத்தமில்லை என்று தெரிந்தும். முந்தைய சீசன்களில் இது குறைவாகவே இருந்தது.  பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை கலந்துகொள்பவர்கள் உணர்ந்தால் நல்லது. இவர்களை ஆட வைப்பது இவர்களின் ஆடைகளை தேர்ந்தெடுப்பது  போன்றவற்றை விஜய்டிவி தான் முடிவு செய்கிறது போலும். கடந்த சூப்பர் சிங்கர் ஜுனியரில் சில எபிசோடுகளில் கவர்ச்சியாகத் தோன்றும் வகையில் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு கூட சிறுமிகளை பாடவைத்தனர். அது எனக்கு சற்று நெருடலாக தெரிந்தது. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இந்த முறை அதை எல்லாம் தவிர்ப்பார்களா என்று பார்ப்போம்.
 அது போகட்டும்! நான் சொல்ல வந்தது சூப்பர் சிங்கரின் ஏற்படுத்திய  சில விளைவுகள். முன்பெல்லாம் சினிமா பாடலதானே என்ற ஒரு அலட்சியம் இருந்தது. அதனுள் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை நான்  அதிகமாக அறிந்து வைத்திருக்க வில்லை. இந்கழ்ச்சியைப் பார்த்தபிறகுதான் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை நடுவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள முடிந்தது. சுருதி தாளம் பாவம், சங்கதிகள் பற்றி பல விஷயங்களை ஓரளவிற்கு அறிவதற்கு இந்நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும்  இசைக் கருவிகளோடும் இணைந்து பாடுதல் பிற பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் இவையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பல பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், பாடல்களின் ராகங்கள்,பல்வேறு இசை வடிவங்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி உதவி புரிந்தது. 

   மேலும் பல பாடகர்களின் அனுபவங்கள் பாடல் உருவான நிகழ்வுகள்  சுவையைத் தந்தது. என்னைப் போன்றவர்கள்  ரசிக்கத் தவறிய பிரபலமாகாத நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது.சில பாடல்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாகவே இன்னும்  புகழ் பெற்றது. வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். 
   இப்படி பல நல்ல விளைவுகள் இருந்தாலும் இதன் மூலம் பெற்ற துளி  இசை அறிவு நமக்கு நிறைய தெரிந்துவிட்டது போல பிரமையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை  கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல்  ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான  அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள்? பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே! மாற்றிக் கொள்வேன்.
 
   எப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும்  வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்த  சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.

*************************************************************************************
முந்தைய  பதிவுகள்
இது சாதாரண காதல் இல்லீங்க!
இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை

சனி, 14 ஏப்ரல், 2012

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்தவை

   தொலைக் காட்சியில் தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு பல சிறப்பு  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.அவற்றை நான் முழுமையாக பார்க்காவிட்டாலும் பார்த்ததில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  ஜெயா டிவியில் ஒளி பரப்பான பட்டிமன்றம் இந்தியாவின் எதிர் காலம் உழவனின் கழனியிலா? உள்ளங்கை கணினியிலா? பட்டிமன்ற நடுவர் அனைவருக்கும் பரிச்சியமான பேராசிரியர் கு,ஞானசம்பந்தன் அவர்கள் நடுவராக அமர்ந்து சொன்ன தீர்ப்பு அருமை. தீர்ப்பு எதிபார்த்ததுதான் என்றாலும் அவர் சொன்ன விளக்கம் பொருத்தமானது. மனிதன் கண்டுபிடித்த கருவிதானே கணினி அது மனிதனுக்கு மட்டும்தான் உதவும். உணவு உற்பத்திக்கு கழனிதானே தேவை, கணினி இல்லாமல் உயிர்கள் வாழமுடியும். கழனி இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது. கழனியில் உற்பத்தி செய்யும் பொருளை காக்காய்,குருவி,புறா,அணில் போன்ற பறவைகள் விலங்குகள் உண்டு மகிழும். அதனால் இந்தியாவின் எதிர் காலம் கழனியில்தான் என்று தீர்ப்பளித்ததோடு, உங்கள் கைகளில் கணினி தவழட்டும் ஆனால் கால் கழனியில் இருக்கட்டும் என்று முத்தாய்ப்புடன் முடித்தது சிறப்பு.
**********************************************************************************************************
வேலாயுதம் படத்தில் ஒரு காமெடி சீன் ஒரு புடவைக் கடையில் ஒருபுடவை எடுத்து இழுத்து புரட்டி பார்த்து இந்தப் புடவைதான் வேணும் என்று கடைக்காரனிடம்  சொல்ல அத அந்த அம்மாதான் சொல்லணும் என்று சொல்ல அப்போதுதான் தெரிந்தது அவர்கள் கையில் வைத்திருந்த புடவை ஒரு பெண் கட்டியிருந்த புடவை என்று தெரிய அந்தப் பெண் கோபத்துடன் முறைக்க நல்ல நகைச்சுவை கலாட்டா.
**********************************************************************************************************
 விஜய் டிவியில் ஒளி பரப்பான எங்கேயும் எப்போதும் திரைப்படம்.ஏற்கனவே பலராலும் பாரட்டப்பட்ட படம் என்பதால் முதன் முறையாக முழுவதும் பார்த்தேன். கடைசி வரை நன்றாக இருந்தாது விபத்தை அடிப்படையாகக் கொண்ட இறுதிக்காட்சிகள் கண்கள் கலங்க வைத்தன. 
     அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு பாடல் காட்சி.  அனன்யா தனக்கு உதவி செய்த சரவ்வின் பெயரைக்கூட தெரிந்து கொள்ளவில்லை.
   மிக எச்சரிக்கையுடன் இருந்தும் காதல் வசப்படுவதை தடுக்க இயலாது போக சரவ்வை நினைத்து பாடும் "உன் பேரே தெரியாது" என்ற பாடல் மிகவும் அருமை. சமீப காலங்களில் வெளிவந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடத்த பாடல் இதுதான். இசை யார்?பாடலாசிரியர் யார்? பாடியவர் யார் என்பதை வலையில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். நா.முத்துக்குமார் ஒரு பெண்ணாகவே மாறி பாடல் எழுதியிருப்பாரோ என்று எண்ணுமளவுக்கு மிகச் சிறப்பாக இலக்கிய நயத்துடன் எளிய வார்த்தைகளுடன் எழுதியிருப்பது பாரட்டத்தக்கது. பாடிய மதுஸ்ரீ யின் குரல் தேனினும்  இனிமை. "சொல்லி விட்டால் உதடு ஒட்டும் , எழுதிவிட்டால் தேனும் சொட்டும்" என்ற வரிகளைப் பாடும்போது உண்மையாகவே தேன் சொட்டுவது போல் உணர்வை ஏற்படுத்தியது. அற்புதமான மெட்டுப் போட்ட இசை அமைப்பாளர் சத்யாவிற்கு பாராட்டுக்கள்.
இந்தப்பாட்டை வரிகளைப் படித்துக்கொண்டே கேட்டுப் பாருங்கள் 


படம் : எங்கேயும் எப்போதும்
இசை : சத்யா
பாடியவர் : மதுஸ்ரீ
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்

எங்கேயும் எப்போதும் - உன் பேரே தெரியாது பாடல் வரிகள்


உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது
அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வாராது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்


ஹோ சூடான பேரும் அது தான்
சொன்ன உடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்று பேரும்  அது தான்
கேட்ட உடன் நெஞ்சம் குளிரும்
நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை
மிரள வைக்கும் மிருகம் இல்லை 
ஒளி வட்டம் தெரிந்தாலும்
அது பட்ட பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...


பெரிதான பேரும் அது தான்
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடை இல்லையே
சிறிதான பேரும்  அது தான்
சட்டென்று முடிந்தே போகும்
எப்படி சொல்வேன் நானும் மொழி இல்லையே
சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பேர் தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்ல வா...


உன் பேரே தெரியாது
உன்னை கூப்பிட முடியாது
நான்  உனக்கொரு பேர் வைத்தேன்
உனக்கே தெரியாது
அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன் 

********************************************************************************************