என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 3 மே, 2022

இஸ்லாமியப் பண்டிகைகள் ஏன் குறிப்பிட்ட நாளில் வருவதில்லை?

 இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.

இஸ்லாமியப் பண்டிகைகள் ஓவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேதிகளில் வருவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் . கடந்த வருடம் May 13 அன்று ரமலான் கொண்டாடப் பட்டது. இவ்வாண்டு மே 3.அன்று ரமலான். 1996 இல் ஜனவரியில் கூட ரம்லான் வந்திருக்கிறது. காரணம் வேறொன்றுமில்லை நிலவின் சுழற்சி அடிப்படையில் ஆண்டு கணக்கிடப் படுவதுதான். பூமி சூரியனை சுற்றும் உண்மையை முதலில் மனிதன் அறிந்திருக்கவில்லை. ஆனால் நிலவு பூமியை சுற்றி வருவது அதற்கு முன்னர் அறியப்பட்ட உண்மை. அதன் அடிப்படையில் இஸ்லாமிய காலண்டர் கணக்கிடப்படுகிறது. நிலவு பூமியை ஒரு முறை (360 டிகிரி) சுற்ற 27.3 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பூமியின் நகர்வு காரணமாக மீண்டும் அதே தோற்ற நிலையினை அடைய 29.5(Side real period) நாட்கள் ஆகின்றன. அதனால்தான் பவுர்ணமியோ அமாவாசையோ ஒவ்வொரு 29.5(Synodic Period) நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. இது லூனார் மந்த் என்று அழைக்கப் படுகிறது. ஆங்கிலக் காலண்டரை விட ஏறக்குறைய 11 நாட்கள் குறைவு. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்வதால். .எனவே ஒவ்வொரு வருடமும் இஸ்லாமியப் பண்டிகைகள் முந்தைய வருடத்தைவிட 10 அல்லது 11 நாட்கள் முன்னதாக வருவதைக் காணலாம்.
மனிதர்கள் நிலவின் சுழற்சியை தங்களுடன் பிணைத்துக் கொண்டனர். ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று வாழ்த்துவது உண்டு. 80வயது நிறைந்தவர்கள் மட்டுமே ஆயிரம் பிறையைக் கண்டிருக்க முடியும். பிறை என்பது மூன்றாம் பிறையைத்தான் குறிக்கும். பொதுவாக அமாவாசை(New Moon) தான் முதற்பிறை , அடுத்த நாள் இரண்டாம் பிறை இதுவும் கண்ணில் படாது. மூன்றாவது நாள்தான் பிறை தென்படும். 29.5 நாள் சுழற்சியால் சில நாட்களில் பிறை தென்படாது. அதாவது இருட்டுவதற்கு முன்பே மேற்கில் மறைந்துவிடும், அதனால்தான் பிறை உறுதியாக தென்படக் கூடிய நாளுக்கு அடுத்த நாள் ரமலான் கொண்டாடப் படுகிறது
அமாவாசைக்கு முந்தைய நாட்களை வளர்பிறை என்றும் அமாவாசைக்கு அடுத்து வரும் நாட்களை தேய்பிறை என்பதும் நமக்குத் தெரிந்ததே பொதுவாக நல்ல காரியங்களுக்கான நாள் குறிப்பவர்கள் வளர்பிறையை தேர்ந்தெடுப்பார்கள். மூன்றாம் பிறையைப் பார்ப்பது சந்திர தரிசனம் என்று அழைக்கப் படுகிறது. இது அரை மணி நேரம்தான் கண்ணில் படும். மூன்றாம் பிறையைப்பார்த்தால் ஞாபக சக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். உண்மையில் நினைவாற்றல் இருந்தால்தான் மூன்றாம் பிறையை தவறவிடாமல் பார்க்க முடியும்
மூன்றாம் பிறையைப் பார்ப்பதற்கு அமாவாசைக்கு அடுத்த நாளுக்கு அடுத்த நாளை நினைவில் வைத்திருந்து பார்க்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தவறவிட்டால் பார்க்க முடியாது. நான்காம் பிறை எந்த முயற்சியும் இன்றி சட்டென்று கண்ணுக்குத் தெரியும் . அப்போதுதான் நேற்று பார்க்க மறந்துவிட்டோம் என்பது ஞாபகம் வரும்.
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்கக் கூடாது .பிறையோடு தொடர்பு உடையதால் நிச்சயம் அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் சம்பந்தம் உண்டு

மீண்டும் இனிய ரமலான் வாழ்த்துகள்

-----டி.என்.முரளிதரன்

6 கருத்துகள்:

  1. விளக்கம் அருமை... (முடித்ததும்) இனிய ரமலான் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு படுவார்கள் என்ற பழமொழி இருக்கிறதே, அதைப் பற்றியும் எழுதக்கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் நான்காம் பிறையைப் பார்த்தால்தான் அப்படியா!! பார்க்காமலேயே...

      கீதா

      நீக்கு
    2. நான்காம் பிறை தானாகவே கண்ணில் பட்டுவிடும்.

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895