வைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.
திரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும் தயங்கியதில்லை. அவர் புகழுக்கும் விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று
#MeToo tag மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால் தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo. தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்மயின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை. நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர். . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும் #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.
ஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)
இதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது. .. மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால், ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க?’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை!
ஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே
வைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது. பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது
.
#MeToo வில் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவத்தை பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள் பழைய காதலை முகநூலில் பகிர்ந்தார்கள். அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை பகிர்ந்ததாகத் தெரியவில்லை. முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.
ஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின் மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை?) வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால் தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும் தைரியமாக சொல்கின்றனர்..
#MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு. பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப் பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால் தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு 10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.
பொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.