உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஊட்டினார் என்ற செய்தியைப் எனது பெட்டிக் கடைப் பதிவில் பகிர்ந்திருந்தேன். அதற்குள் எம்.எஸ். வியின் மரணச் செய்தி வரும் என்று எதிர் பார்க்கவில்லை.
"ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்
அப்போ யார் அழுதா அவனுக்கென்ன காரியம் முடிப்பான்"
என்று எம். எஸ். வி யின் பாடல் உண்டு. ஆம் காலதேவன் கணக்கை முடித்தான்.
எம்.ஜி.ஆர். என்.டி.ஆர், . டி.எம்.எஸ்,எஸ்.பி.பி என்று மூன்று எழுத்து சுருக்கம் வைத்திருப்பவர்களுக்கு சிறப்புகள் பல உண்டு. இவர்களெல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள். அந்த வரிசையில் எம்.எஸ்.வி யையும் சொல்லலாம்.
எம். எ.ஸ். வி பற்றி எழுதும் அளவுக்கு இசை அறிவு பெறாதவன் நான். ஆனால் ஒன்று மட்டும் சொல்ள முடியும். எந்த இசை சாதாரண மக்களையும் ஈர்க்கிறதோ அந்த இசையே சிறந்த இசை. எம். எஸ். வியின் இசை அப்படிப் பட்டது. ஆனால் அவரது இசை பாமரர்களை மட்டுமல்ல மேதைகளையும் ஆச்சர்யப் படவைத்தது.
பழைய பாடல்கள் என்றாலே எம்.எஸ். வி இசை யாகத் தான் இருக்கும் என்று நம்புவன் நான்.இந்த மேதையின் ஹார்மோனியத்தில் பிறந்த மெட்டுக்கள் இன்னமும் நம் காதோரம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இவரது கைவிரலில் இருந்து விளைந்து கவிதை ஆடை அணிந்து நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் ஆயிரம் ஆயிரம். பொதுவாக பெரும்பாலான இசை அமைப்பாளர்களின் குரல்வளம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இவரது குரலும் அதற்கு விதி விலக்காக அமையவில்லை என்றாலும் அவரது குரலில் ஒருகவர்ச்சி உண்டு. ஆனால் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்றைப் பெற்றிருக்கின்றன.
பல்வேறு தரப்பினர் எம்.எஸ்.வி க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இளையராஜா தனது இரங்கல் செய்தியில்
"எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களை யெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்"
என்று குறிப்பிட்டிருந்தார் .
அவர் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை .மெல்லிசையைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி.வி யின் தாக்கம் இல்லாமல் இசை அமைப்பது கடினம் என்று பல இசை அமைப்பாளர்களும் கூறி இருப்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் இசை பாடல் வரிகளுக்கும் கதைக்கும் துணைபுரியும் விதத்தில்தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மேதைமை வெளிப்படவேண்டும் என்று அவர் விரும்பியதில்லை
எம்.எஸ். வி. யின் காலத்தில் பெரும்பாலும் இது எம்.ஜிஆர் பாடல்; இது சிவாஜி பாடல்; இது கண்ணதாசன் பாடல் , இது டி.எம்.எஸ் என்று பாடல்கள் அடையாளம் காணப்படும். ஆனால் இவர்களுடையை பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம் எஸ்.வியாகத்தான் இருப்பார். இவர் இசை அமைத்த பாடல்களின் பெருமை நடிகர்,பாடகர், பாடலாசிரியர் எல்லோருக்கும் பரவலாக போய்ச் சேர்ந்தது. ஆனால் எம். எஸ்.வி அதை பொருட்படுத்தியதும் இல்லை; வெளிப்படுத்தியதும் இல்லை. தற்போது பெரும்பாலும் பாடல்களுக்குரிய பெருமை அனைத்தும் இசை அமைப்பாளர்களுக்கே கிடைத்து வருவது குறிப்பிடத் தக்கது .
இப்போதைய இசை அமைப்பாளர்களைப் போல பாடகர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எம்.எஸ்.விக்கு குறைவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கறேன். கதைக்கும் பாடல் வரிகளுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தாரே தவிர தனது இசையை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பியதில்லை. இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும் அற்புதமான இசையை தர எம். எஸ்.வி யைத் தவிர வேறு யாருக்கு சாத்தியமாகும்?
இந்த சாதனையாளருக்கு ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்படாதது அந்த விருதுக்குத் தான் அவமானமே தவிர வேறில்லை. அள்ளித் தெளிக்கப்படும் பத்ம விருதுகள் கூட இவருக்கு வழங்கப் படாதது வருத்தத்திற்குரியது,
வைரமுத்து இரங்கல் செய்தியில் சொன்னார், "இனிமேல் இவருக்கு பத்ம விருது ஏதும் வழங்கி அவரை இழிவு படுத்தாதீர்கள். முடிந்தால் பாரத ரத்னா விருது வழங்குங்கள் என்றார்"
இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால் எம்.ஜிஆர், சிவாஜி பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.
இந்நாள் முதல்வர் முதல் முன்னாள் முதல்வர்கள் வரை பலரிடம் பணியாற்றி இருந்தும் அதனை இவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதில்லை . யாரும் இவருக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர முனையவில்லை. டி.எம்.எஸ்.கூட தன்னுடைய பாடல்களால் எம்.ஜிஆர், சிவாஜி பெருமை பெற்றார்கள். ஆனால் யாரும் எனக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய செய்தியை படித்திருக்கிறேன். ஆனால் எம். எஸ். வி ஒரு போதும் அப்படி சொன்னதாகத் தெரியவில்லை.
எம்.எஸ். வி யின் இசையமைத்த படங்களில் அவரது பெயர் டைட்டிலில் காட்டப்படும்போது தொடர்ந்து இசை உதவி ஜோசப் கிருஷ்ணா என்ற பெயர் காட்டப் படுவதைப் பார்த்திருக்கலாம் . அதிக தொழில் நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் தரமான பாடல்களை பதிவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி. மெட்டு என்பது இசை அமைப்பாரால் உருவாக்கப்பாட்டலும் அது பாடலாக்குவதற்கு கூட்டு முயற்சி தேவை. இசைக் கோர்வைகளை பொருத்தமாக அமைத்து தனித்தனியாக பாடப்படும் பல்லவி சரணங்களை தாள லயம் கெடாமல் இணைப்பது அப்போதைய தொழில் நுட்பத்துக்கு சவாலான செயல். இவற்றில் துணை புரிந்த தனது இசைக் குழுவில் உள்ளவரின் பெயரையும் கூட போடுமாறு பணித்த பெருந்தன்மை எம்.எஸ்.விக்கே உரித்தானது.
பொதுவாக வயதான கலைஞர்கள் தற்போதைய நிலையை குறை கூறுவது வழக்கம். இப்போதெல்லாம் என்ன இசை அமைக்கிறார்கள். ஒரே சத்தம் பாடல் வரிகள் புரியவில்லை. என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் எம். எஸ். வி தன் காலத்தக்கு பிந்தைய இசை அமைப்பாளர்களையும் மனமார பாராட்டவே செய்தார் மற்ற இசை அமைப்பாளர்களையும் மதித்தார்
இப்படி எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த எம்.எஸ். வி என்ற இசைப் பறவை நம்மை விட்டு பிரிந்து பறந்து சென்றுவிட்டது. ஆனால் அது விட்டு சென்ற இசை பேச்சிலும் மூச்சிலும் எப்போதும் கலந்திருக்கும் . எக்காலத்தும் நிலைத்திருக்கும்
**************************
கொசுறு
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
ஒரு பாடல் எம்.எஸ்.வி இசை அமைத்த பாடல்தானா என்பதை அறிந்து கொள்ள நான் சில அம்சங்களை கவனிப்பேன்.நிறையப் பாடல்களில் சரணத்தின் கடைசி வரி இரண்டு தடவை பாடப்படுவதைக் காணலாம்'. இரண்டாவது முறை சற்று மெதுவாக பாடப்படும் வரிகள் சரணத்தின் கருத்தை இன்னொரு தடவை மனதில் பதிய வைத்து நம் மனதை அள்ளிச் செல்லும். இந்த உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும்.
உதாரணமாக
தரை மேல் பிறக்க வைத்தான், அதிசய ராகம், போன்ற பாடல்கள் புல்லங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட தனிப்பாடல்களின் சரணங்களிலும் இந்த முத்திரையைக் காணலாம்.ஆனால் அது எந்தப் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அங்குதான் இதனைப் பயன்படுத்தி இருப்பார்.
பாடகர்களாக விரும்புவர்களுக்கும் இசை அமைப்பாளராக விரும்புவர்களுக்கும் இவரது இசை ஒரு பாடம்.



